வெளி நாட்டில் இருந்து வருடத்திற்கு ஒரு முறை விடுமுறையில் வரும் ஒரு உறவினர் வழக்கம் போல் ரெகுலர் செக் அப் சென்றுள்ளார்.பிரஷர் சுகர் கொலஸ்ட்ரால் என்று எதுவும் இல்லாதவர்.ஸ்டெத்தை வைத்து மட்டும் பரிசோதித்து விட்டு ஆஞ்சியோ கிராம் உடனே பண்ணி ஆக வேண்டும் என்று மருத்துவர் வற்புறுத்தினார்.குழந்தைகளுக்கு பேய்,பூச்சாண்டி என்று பயம் காட்டுவது போல் வாய்க்குள் நுழைய முடியாத பெயர்களைகூறி கதிகலங்க வைத்து விட்டார்.வழமையான செக் அப் சென்றவருக்கோ அதிர்ச்சி.எந்த பிரச்சினையும் இல்லாமல் எந்த வித பரிசோதனையும் முறைப்படி செய்யாமல் எடுத்த எடுப்பில் ஆஞ்சியோ செய்ய வேண்டும் என்றால் அதிர்ச்சி வராமல் என்ன செய்யும்.
ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு இருதயத்தில் உள்ள தசைகளின் பாதிப்பைப் பொருத்து, மீண்டும் நெஞ்சுவலி வந்தாலும், பாதிக்கப்பட்டவரின் வயதைப்பொருத்தும் ,உடல் நிலையைப்பொருத்தும் ஆஞ்சியோகிராம் செய்து, அதில் அடைப்பு உண்டா என்று கண்டறிந்து சிகிச்சை செய்வார்கள். இ சி ஜி ,டிரட்மில் ,எக்கோ என்று பல்வேறு பரிசோதனைகளுக்கே பின்னரே ஆஞ்சியோ செய்வதை கேள்விப்பட்டுள்ளோம்.
மருத்துவரிடம் இதனை கேட்டபொழுது “நீங்கள் பாரினுக்கு செல்கின்றீர்கள்.இதெல்லாம் தற்காப்புக்குத்தான்.மற்ற ஹாஸ்பிடலை விட 30%குறைவாகவே கட்டணம் பெறுகிறோம்.இந்த சலுகை இன்னும் ஓரிரு வாரங்களுக்கு மட்டுமே.ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பி விடுவோம்.நாளையே அட்மிட் ஆகி விடுங்கள்.” என்று வார்த்தை ஜாலம் செய்துள்ளார்.
எடுத்த எடுப்பிலேயே ஆஞ்சியோ என்பவர் அடுத்து ஆஞ்சியோபிளாஸ்டி (Angioplasty),பைபாஸ் (CABG) லெவலுக்கு இழுத்து சென்று விடுவாரோ என்று பயந்து போய் ”வீட்டில் கன்சல்ட் பண்ணி விட்டு வருகிறேன்”என்று தப்பித்தோம் பிழைத்தோம் என்று என்று ஓடி வந்து விட்டார்.
அதன் பிறகு எப்படி நிம்மதியாக வெளிநாடு செல்ல இயலும்.வேறொரு மருத்துவரை பார்த்து முறையாக பரிசோதனை செய்து பார்த்த பொழுது அந்த மருத்துவர் முதலாம் மருத்துவர் ஆஞ்சியோ பண்ண சொன்னதை கூறி சிரித்தாராம்.
பிறகுதான் கேள்விப்படுகிறோம்.முதலாம் மருத்துவர் சமீபத்தில்தான் புதிதாக நவீன வசதிகளுடன் ஒரு மருத்துவ மனை எகப்பட்ட லோனை வாங்கி கட்டி முடித்து இருக்கிறார் என்று.
இப்படி பட்ட மருத்துவர்கள் எண்ணற்றவர்கள் உண்டு என்பதுதான் உண்மை.வருத்தமூட்டும் இப்படி நிகழ்வுகளுக்குகிடையில் இப்படியும் ஒரு மருத்துவர்.
சுமார் நான்காண்டுகளுக்கு முன்னர் காய்ச்சல் ஏதும் இல்லாமலேயே குளிர் திடுமென்று எனக்கு ஏற்பட்டு விட்டது.குளிர் என்றால் தாங்க இயலாத குளிர்.உடனே ஒரு மருத்துவரிடம் சென்றோம்.பிரஷர் பார்த்த பொழுது 80/120 இருக்க வேண்டியது 160/250 காண்பித்தது.மருத்துவர் அதிர்ந்து போய் விட்டார்.நம்ப இயலாமல் மீண்டும் மீண்டும் பிரஷர் செக் செய்து பார்த்தவருக்கு முகமே மாறி விட்டது.உடனே இ சி ஜி எடுத்துப்பார்த்ததில் அது நார்மலாகவே இருந்தது.உடனடியாக ஒரு இஞ்செக்ஷன் போட்டு ஒரு அரைமணி நேரம் தூங்க வைத்து மீண்டும் பிரசர் செக் செய்த பொழுது சற்றே குறைந்து இருந்தது.
வீட்டில் போய் நன்கு ரெஸ்ட் எடுக்கும் படி கூறி விட்டு என் கணவரை தனியாக அழைத்து இரவு முழுதும் சற்று கண்காணியுங்கள்.ஏதாவது சிறு மாற்றம் ஏற்பட்டாலும் உடனே இசபெல் ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்று விடுங்கள் என்றிருக்கிறாராம்.
மறுநாள் காலையில் மீண்டும் பிரஷர் செக் செய்ததில் நார்மல்.இதனையே ஒரு உறவினரான இன்னொரு மருத்துவரிடன் பிரிதொரு நாள் சொல்லிக்காட்டிய பொழுது “இதையே வேறொரு டாக்டரிடம் சென்றிருந்தால் அந்நேரம் உன்னை ஐ சி யூ வில் படுக்க வைத்து ஆயிரத்தெட்டு பரிசோதனை செய்து ஒப்பன் ஹார்ட் சர்ஜரி வரை போய் இழுத்து விட்டு இருந்திருப்பார்கள் என்று கூறி சிரிக்கின்றார்.
Tweet |