September 29, 2010

நன்றி!நன்றி!!

சென்ற ஆண்டு இதே நாள் ஏதோ ஒரு ஆர்வத்தில் தொடங்கபட்ட வலைப்பூ.'வலைப்பூ சம்பாதிக்கும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்டதா' என்ற ஒரு கேள்விக்கு இல்லை என்று பதில் அளித்திருந்தேன்.உண்மை என்னவென்றால் சம்பாதித்து இருக்கின்றேன் என்பதே.

நல்ல அருமையான நட்புக்களை,அன்புள்ளங்களை,உண்மையான கரிசனத்துடன் அறிவுரையும்,சந்தேகநிவர்த்தி செய்யும் பாங்குள்ளங்களையும் நிறையவே சம்பாதித்து இருக்கின்றேன் என்று இந்த நேரத்தில் பெருமிதத்துடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

74 பதிவுகள்,124 பாலோவர்ஸ்,2632 பின்னூட்டங்கள்(இதில் என்னுடைய பதில் பின்னூட்டங்களும் அடங்கும்.பிரித்தறியத்தெரியவில்லை)229565 ஹிட்டுகள் அனைத்தும் நான் பெற்ற சந்தோஷங்கள்.

நிறைய பேர் பின்னூட்டம் இடாவிட்டாலும் தவறாது வந்து ஓட்டளித்து பதிவிட்ட சில மணித்துளிகளுக்குள் மோஸ்ட் பாபுலர் பதிவாக்கி விடுகின்றனர் என்பது மகிழ்ச்சிகரமான விஷயம்.

எனது பதிவுகள் படித்து ஓட்டளித்து,பின்னூட்டும் அன்புள்ளங்கள்,என் வலைப்பூவை பின் தொடரும் அன்புள்ளங்கள்,உற்சாக ஊக்கம் கொடுத்து மேலும் எழுதத்தூண்டும் பின்னூட்டங்கள்,தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டி திருத்திக்கொள்ள உதவும் நட்புள்ளங்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் என் அன்பான நன்றிகளை சமர்ப்பிக்கின்றேன்.

தொடர்ந்து என் ஆக்கங்களுக்கு ஊக்கம் கொடுக்குமாறு விரும்பி,கேட்டுக்கொள்கின்றேன்.நன்றி!

September 20, 2010

டியூஷன் கொள்ளைகள்





தனியார் பள்ளிகளில் பீஸ் அதிகமாக வாங்குகின்றனர் என்று சென்னையில் அவ்வப்பொழுது ஆர்ப்பாட்டம் நடந்து நடந்து அடங்கும்.உச்சகட்டமாக போய் பள்ளி வளாகத்தினுள் நுழைந்து பொருட்களை சேதம் செய்யும் கொடூரமும் நடந்தேறி இருக்கின்றது.குறிப்பிட்ட பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர்கள் தங்களுக்குள் ஒரு அசோசியேஷன் உருவாக்கி பள்ளிகளுக்கு எதிராக கொடி பிடிக்கும் சம்பவங்களும் நடந்தேறி வருகின்றது.

டியூஷன் செண்டர் நடத்தி சைலண்டாக கொள்ளை அடிக்கும்,ஒரே பாய்ச்சலில் லட்சாதிபதியாக உயரே போக நினைக்கும் டியூஷன் செண்டர் நிறுவனங்களை இந்த பெற்றோர்கள் கண்டு கொள்வதே இல்லை.

தங்கள் பிள்ளைகளை டியூஷன் செண்டரில் சேர்த்து விட்டு ,பணத்தை அப்படியே தயங்காமல் கொட்டிக்கொடுத்து விட்டு கண்டிப்பாக 98 சதவிகிதம் மதிப்பெண்கள் கிடைத்துவிடும் என்று பெற்றோர்கள் கனவில் மிதந்து விடுகின்றனர்.அவர்களும் 98 % மதிப்பெண்கள் எடுக்க வைக்கின்றோம் என்று உறுதியாக கூறி நம்ப வைத்து விடுகின்றனர்.

ஏஸி கிளாஸ் ரூம்,ப்ரொஜெக்டர் மூலம் பாடங்களை கற்பித்தல் என்று ஹை டெக்காக வலம் வந்து பெற்றோரை கவர்ந்து இழுத்து விடுகின்றனர்.இதில் டீபார்ட்டியுடன் கூடிய பேரண்ட்ஸ் டீச்சர் மீட்டிங்,சாதுர்யமான பேச்சு,நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகள் இத்யாதி..இத்யாதி..

ஒரு சப்ஜெக்டுக்கு 5000 ரூபாய் முதல் 7000 ரூபாய் வரை வருடாந்திர கட்டணம்.வாரத்தில் மூன்றே நாள் ,ஒரே ஒரு மணி நேர வகுப்பு.ஒரு மாணவன் நாண்கு சப்ஜெக்டுகள் வரை டியூஷன் படிக்கின்றான்.ஒரு வகுப்புக்கு மூன்று முதல் நாண்கு பேட்ச்.ஒரு பேட்சில் சுமார் 60 முதல் 70 மாணவர்கள்.(ஸ்கூலில் உள்ள வகுப்பறையில் கூட இத்தனை மாணவர்கள் இருக்க மாட்டார்கள்)கலெக்ஷன் எவ்வளவு ஆகும் என்று நீங்களே கணக்குப்போட்டு பார்த்துக்கொள்ளுங்கள்.

நட்சத்திர அந்தஸ்த்துடன் ஆர்ப்பாட்டமாக ஆரம்பிக்கும் டியூஷன் வகுப்புகள் மூன்று மாணவர்கள் அமரும் இருக்கையில் நாண்கு மாணவர்களை அமர வைத்து பாடம் சொல்லிக்கொடுக்க விழைகின்றனர்.

டியூஷன் செண்டர் ஆசிரியர்களிடம் டெஸ்டில் பெறும் மதிப்பெண்களைப்பார்த்த பெற்றோர்கள் "என்ன சார் எதிர்பார்த்த மார்க் வரவில்லையே?" என்று பெற்றோர் ஆதங்கத்துடன் கேள்வி கேட்கும் பொழுது தயவு தாட்சண்யமின்றி"வேறு டியூஷன் பாருங்கள்:வீட்டிலேயே இருந்து படிக்கச்சொல்லுங்கள்"என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டென பதில் வரும்.அப்பொழுது அவர்கள் வருடாந்திர பீஸ் முழுவதையும் வாங்கி இருப்பார்கள்.

இன்னொரு காமெடி என்னவென்றால் பள்ளியில் இருந்து படிப்பதால் ஒரு பிரயோஜனமும் இல்லை.நாங்கள் கொடுக்கும் பயிற்சிதான் என்று மார்தட்டிகொள்வதும்,அதனை கேட்கும் பெற்றோர்கள் புளங்காங்கிதபடுவதும்தான் கொடுமை

புயல் வேகத்தில் பாடங்களை அக்டோபர் மாதத்திற்குள் நடத்தி முடிப்பது டியூஷன் செண்டர் நடத்துபவர்களுக்கு கை வந்த கலை.

அக்டோபர் மாதத்திற்கு அப்புறம்தான் இவர்களின் தகிடுதத்தம் வெளிப்படுகின்றது.பாடங்கள் எல்லாம் நடத்தி முடித்தாகி விட்டது இனி டெஸ்ட் மட்டும்தான் என்று வாரத்தில் ஒரு நாள்,பத்து நாட்களுக்கு ஒரு நாள் என்ற கணக்கில் டியூஷன் இருக்கும்.

இந்த சமயம் ஹோம் டியூஷன் எடுக்க வசதிவாய்ப்பான வீடுகள் நோக்கி படை எடுத்து விடுவார்கள்.ஒரு மணி நேரத்திற்கு கட்டணம் 400 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை.மாலை ஐந்து மணிக்கு சென்று பத்து மணிக்கு திரும்பினால் 2000 முதல் 2500 வரை சம்பாதித்து விடுகின்றனர்.

டிஸ்கி:இவர்களுக்கு மத்தியில் டியூஷன் சொல்லித்தருவதை ஒரு வழிப்பாடாக,ஒரு தவமாக மாணவர்களின் முன்னேற்றத்தை மட்டுமே கருத்தில் கொண்டு,டியூஷன் செண்டர் வைத்திருக்கும்,பல பல கலெக்டர்கள்,பொறியாளர்கள்,மருத்துவர்கள்,கல்வியாளர்கள்,தொழிலதிபர்கள் போன்றோர் உருவாக காரணியாக இருந்து,மாணவர்களின் அட்சய பாத்திரமாக விளங்கும் சென்னையின் பிரபல டியூஷன் ஆசிரியர் ஒருவரைப்பற்றி அவரது சம்மதத்தை பெற்ற பின் மற்றுமொரு இடுகையில் பார்ப்போம்.

September 13, 2010

அஞ்சறைப்பெட்டி - 3

புதியதாக திறந்து இருக்கும் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் உள்ளே நுழையும் பொழுதே செக்யூரிடி கைப்பைகளை திறந்து சோதித்து அனுப்புவதைப்பார்த்து அந்த பிருமாண்டமான மாலுக்கும்,சின்னத்தனமான செயலுக்கும் சற்று கூட பொருத்தமில்லாமல் இருந்தது."என்னப்பா..இது சரவணா ஸ்டோர் ரேஞ்சில்.."என்ற முணுமுணுப்பு எனக்கு பின்னால் இருந்து ஒலித்தது.மேலே புட் கோர்ட் சென்றால் இரண்டு பீஸ் பிராஸ்டட் சிக்கன் 135 என்றனர்.அதே கடையினுடைய மற்றுமொரு பிராஞ்ச்இன்னொரு பெரிய மாலில் உள்ளது.அங்கு அதே பிராஸ்டட் சிக்கன் இரண்டு பீஸ் 85 ரூபாய்தான்.இரண்டு பீஸ் சிக்கனில் மட்டும் 50 ரூபாய் அதிகம் வைத்து விற்பனை செய்கின்றனர்.கட்டணத்தைக்கட்டி கார்ட் ரீசார்ஜ் பண்ணி விடுவதால் மக்கள்ஸ் வேறு வழி இல்லாமல் வாங்கி சாப்பிட்டுவிட்டே செல்கின்றனர்.



பின்னணி பாடகி ஸ்வர்ணலதா இளம் வயதில் மரணம் அடைந்து விட்டார்.இனிய குரலால் கட்டிப்போட்ட அவரது மறைவு ரசிகர்களுக்கு பெரிய இழப்புதான்.அவரது ஆன்மா சாந்தியடையவும்,அவரது குடும்பத்தினருக்கு பொறுமையும் ,அமைதியும் கிடைக்கவும் வேண்டிக்கொள்கின்றேன்.



பிரார்த்தனா டிரைவ் இன் தியேட்டருக்கு நீண்ட இடை வேலைக்குபிறகு சென்றிருந்தேன்.சாதரணமாக படம் பார்ப்பதென்றால் எனக்கு எட்டிக்காய்.பிள்ளைகளின் வற்புறுத்தலுக்காக சென்று கொசு கடித்து வெந்து,நொந்து திரும்பினேன்.(இனி தியேட்டர் பக்கம் போவேன்...?)டிரைவ் இன் தியேட்டர் செல்பவர்கள் இனி கண்டிப்பாக மஸ்கிடோ பேட்,ஒடோமஸ்,டார்டாய்ஸ் எல்லாம் எடுத்துட்டுப்போங்க.மறந்திடாமல் வீட்டிலேயே மஸ்கிடோ பேட்டை சார்ஜ் பண்ணிக்கோங்க.டார்டாய்ஸை கொளுத்த வத்திப்பெட்டியும் எடுத்துட்டு போக மறந்துடாதீங்க மக்கா.



ஏடிஎம்மில் கொள்ளை அடிப்பது அதிகரித்து வருகின்றது.சம்பளம் வாங்கும் காவலாளியும் கூலாக தூங்கி விட்டதாக வாக்குமூலம் கொடுத்து இருக்கின்றார்.வங்கிகளும் காவல்துறையும் இன்னும் விழிப்புடன் செயல் பட்டு தொடர்கதையாகாமல் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்(என்னா ஈஸியா நோகாம சம்பாதிக்கப்பார்க்கறாங்கப்பா..)

"காலையில் எழுந்ததும் தினத்தந்தி காப்பி குடிப்பது அதன் பிந்தி"இது தினத்தந்தி தினசரியின் வாசகம்.ஆனால் முதல் பக்கத்திலேயே 'கடன் வாங்குங்க.நாங்கள் இருகிறோம்.' 'வட்டிவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது.' இப்படி வாசங்கள் எரிச்சலூட்டுகின்றது. காலையிலே முதல் பக்கத்தில் வந்து மக்களை கடனாளியாக ஆக்கப்பார்க்கின்றது.(அதனாலே நான் இப்போதெல்லாம் நான் முதல்லேயே முதல் பக்கத்தை மட்டும் விட்டுட்டு அடுத்தடுத்த பக்கங்களைத்தான் தந்தி பேப்பரில் பார்க்கிறேனாக்கும்)



"வீட்டுக்கொரு மரம் வைப்போம்"இது தமிழக அரசின் தாரக மந்திரம்.கூட ஒரு படி மேலே போய் நான் வீட்டுக்கு வெளியிலும் வைத்தேன்.அதை இப்ப அகற்றிவிட்டு கேட்டை பெரிது பண்ண கார்ப்பரேஷனுக்கு அழைய வேண்டியதாக உள்ளது.நம்ம தேவையை நிறைவேற்ற முடியாமல் இழுத்தடிகின்றனர்.இன்னும் நாலே அடி தள்ளி மரத்தை வைத்துவிடுகின்றோம் என்று சொன்னாலும் எடுபடவில்லை.நல்லதுக்கு காலமில்லேங்கறது நிஜம்தான் போலும்.

September 9, 2010

ஈத் முபாரக்!


அனைவருக்கும் இதயம் கனிந்த ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்!

அழகுற வளர்த்திட்டு
அன்பையும் பண்பையும்
பாங்குற கற்பித்த அன்னையரே
ஈத் முபாரக்!

குடும்பம் செழித்திட
மெழுகாய் பனியாய்
உருகி உழைத்த தந்தையரே
ஈத் முபாரக்!

குலம் செழிக்க வளம் பெருக்க
வந்துதித்த கண்மணிகாள் என்றென்றும்
வளத்துடனும் நலத்துடனும்
வாழ்வாங்கு வாழ்க!
செல்வங்களே உங்களுக்கு என்னினிய
ஈத் முபாரக்!

தம்பிக்கு கொடுங்க
எனக்கு போதுமென
தள்ளி நின்று பூரித்து நிற்கும்
அண்ணன்மாரே
ஈத் முபாரக்!

கண்கள் கலங்கி
தவித்த வேளை
பரிவுடன் முந்தானைகொண்டு
துடைத்துவிட்ட அக்காமாரே
ஈத் முபாரக்!

அவளுக்கு மட்டும்
அதிகம் எதுக்கு
அதையும் எனக்கே எப்பவும் கொடுங்க
அடம் பிடிக்கும் தங்கையரே
ஈத் முபாரக்!

தக்பீர் முழங்கும்
சப்தத்துடனே
சங்கையாய் வந்து இன்முகத்துடன்
வாழ்த்து சொல்லும் மாமாமாரே
ஈத் முபாரக்!

பாசத்துடனே பரிவு காட்டி
கதை பல சொல்லி
பாங்குற ஊட்டி உணவை அளித்த பாட்டிமாரே
ஈத் முபாரக்!

எம் கூச்சல் கேட்டு எரிச்சலை விட்டு
ஏசாதிருந்து ஏற்புடன் நடந்து
ஏற்றம் புரிய
துணை நின்ற தாத்தாமாரே
ஈத் முபாரக்!


கல்விக்கண் திறக்க
பாங்காய் கற்பித்து
படிப்பைத்தந்த ஆசிரியரே
ஈத் முபாரக்!

வாழ்விலும்,தாழ்விலும்
ஒன்றுபோல் தோள் தந்து
உதவிட்ட தோழர்களே
ஈத் முபாரக்!

பொழுதை போக்குவதற்கு
கணினி முன்னமர்ந்து
கிறுக்கியதை அருமையென
சிலாகித்து உவந்து
தவறாது தட்டிக்கொடுத்து
ஓட்டளித்து பின்னூட்டும்
வலையுலக நட்புக்களே
உங்கள் அனைவருக்கும்
என் நெஞ்சார்ந்த
ஈத் முபாரக்!

September 7, 2010

ஸ்நேகிதச்சமையல்

மேனகாவின் கேரட் ஹல்வா.
பிரியாணி செய்யும் பொழுதெல்லாம் இப்பொழுது இதுதான் இனிப்புக்கு செய்வேன்.அந்தளவு எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்தமான ஐட்டம்.
பாயிஷாவின் தயிர் பச்சடி.
பிரியாணி,நெய்சாதம் போன்றவற்றுக்கு ஏற்றவை.கூடவே கிரீம் சிறிது சேர்த்தால் டேஸ்ட் தூக்கும்.
சுஸ்ரீயின் கத்தரிக்காய் மசாலா.
இதுவும் பிரியாணிக்கு ஜோடி.பிளைன் சாதத்திற்கு ஏற்றது
மனோ அக்காவின் சிக்கன் 65.
எங்கள் வீட்டினருக்கு மட்டுமின்றி அனைவர் வீட்டிலும் விரும்பி சமைப்பவை.இதுவும் பிரியாணிக்கு சைட் டிஷ் ஆக வைத்தால் நன்றாக இருக்கும்.
இது ஜலிலாவின் குறிப்பு.கிட்டதட்ட நாங்கள் செய்வதைப்போல் இருந்தது.அளவுகளில்தான் சிறிது வித்தியாசம்.இன்னும் மற்ற சகோதரிகள் அவரவர் வீடுகளில் தயாரிக்கும் நோன்புக்கஞ்சி குறிப்பைக்கொடுத்தால் வித்தியாசாமான முறையில் செய்து பார்க்கலாம்.

மேனகாவுடையது.சூப்பர் சுவை.மாவை சற்று கெட்டியாக வைத்து அடை போல் செய்தேன்.கூடவே சிறிது மைதாமாவும் கலந்து.இரண்டு நாளானாலும் கெடவில்லை.

அம்முமதுவின் மெதுவடை வழக்கம் போல் இல்லாமல் ஜவ்வரிசி சேர்த்து அரைத்து வித்தியாசமாக இருந்த்து.

கீரை போண்டா
ஜலீலாவின் கீரை போண்டா.சத்துமிகு மொறு,மொறு போண்டா.
ஜலீலாவின் கேரட் ஜூஸ்.சுலபான அருமையான,சத்தான ஜூஸ்.தினமும் என் பிள்ளகள் பள்ளி சென்று வந்ததுமே பிரிட்ஜ்ஜில் இந்த ஜூஸ் இருகின்றதா என்று திறந்து பார்ப்பார்கள்.

மகியின் குறிப்பு.தயிரின் புளிப்புடன் சுவையாக இருந்தது.கூடவே சிறு தேங்காய்துண்டுகள் கடிபட வித்தியாசமான போண்டா.

September 6, 2010

நட்புச்சமையல்

பல பதிவுலக நட்புக்கள் படத்துடன் சமையல் குறிப்பை வெளியிட்டு உள்ளனர்.சமையல் என்பது பெண்களுக்கு சுலபமானதாக ஆனாலும் அதனை படம் எடுப்பதில் உள்ள ரிஸ்க் எனக்குத்தான் தெரியும்.ஒரு பிரபல வலைதளத்திற்கு சமையல் குறிப்பு செய்கின்றேன் என்று கொதிக்கும் குழம்புக்குள் சோனி சைபர்ஷாட் கேமராவை பலிகொடுத்த வலி எனக்குத்தான் தெரியும்.பின்னூட்டம் ஒன்றே மட்டும் பலனாக கொண்டு சமையல் குறிப்பை தங்களது பிளாக்கில் வெளியிடும் சில நட்புகளுக்கு இப்பொழுது பிரபல பத்திரிகைகள் அவர்களது ஆக்கங்களை வெளியிட அழைப்பு கொடுத்து இருப்பது மகிழ்வுக்குறிய விஷயம்.

பதிவுலக நட்புகளை ஊக்குவிக்கும் நிமித்தமாக அவர்கள் சமையல் குறிப்பில் இருந்து பார்த்து சமைத்த உணவுவகைகளை சில பகுதிகளாக பதிவிட விரும்புகின்றேன்.

முதல் பகுதியாக நோன்புகாலத்திற்கு ஏற்ற சமையல்களை செய்துள்ளதை படமெடுத்து வெளியிட்டுள்ளேன்.சகோதரிகளுக்கு என் வாழ்த்துக்களும்,நன்றியும்.குறிப்பு இடம் பெறாத சகோதரிகள் நிறைய பேர் இருந்தாலும் தொடர்ந்து அவர்களது சமையலை செய்து வெளியிடுவேன்.

செட்டிநாடு பெப்பர் சிக்கன்
கீதா ஆச்சலின் குறிப்பு.சுள் என்ற காரத்துடன் மணமும் சுவையும் மிக்க சிக்கன்



கணவா பிரட்டல்
தங்கச்சி பூஸ் சமையலில் சைலண்டா பிலாக்கில் வலம் வந்தாலும் அசைவ உணவுவகைகள் சமைப்பதில் கில்லாடி.அருமையான கணவா பிரட்டால் எனக்கு கற்றுத்தந்து விட்டார்.இடியாப்பத்துடன் சேர்த்து சாப்பிட சுவையோ சுவை.அதிரா தேங்க்ஸ் அதிரா.(எஞ்சியது கொஞ்சமே கொஞ்சம்.அதனை வைத்து படம் எடுத்தேன்)

9.மசால் வடை
மனோ அக்காவின் மசால் வடை.வழக்கம் போல் இல்லாமல் கூட அரை டீஸ்பூன் பெருங்காயம் சேர்க்க சொல்லி இருக்கின்றார்.கூடவே மணமும்,பருப்புக்கான வாய்வுத்தொல்லையில் இருந்து நிவாரணமும் கிடைத்தது இம்முறையில் செய்ததனால்.



ஜவ்வரிசிகடல்பாசி
ஜலீலாவின் ஜவ்வரிசி கடல் பாசி.எங்கள் வீட்டில் நிகழ்ந்த ஒரு இஃப்தாரில் பேப்பர் கப்புகளில் இட்டு,மேலே நட்ஸ்ஸால் அலங்கரித்து வைத்தேன்.குளுமையான சுவை.


முட்டை பப்ஸ்
ஹர்ஷினியின் குறிப்பு.இதன் ஸ்பெஷாலிட்டி என்ன வென்றால் குறிப்பில் உள்ளபடி பப்ஸ் பேஸ்ட்ரி ஷீட் உபயோகிக்கவில்லை.பரோட்டாவுக்கு பிசைந்த எஞ்சிய மாவில் செய்தேன்.அருமையாக இருந்தது.

ரோஸ்மில்க்
எங்கள் வீட்டில் இஃப்தாருக்கு தவறாது இடம் பெறும் கூல் ட்ரிங்.ஊறிய சப்ஜாவிதையுடன் குளுமையான பானம் ஜலீலாவின் குறிப்பு.எனது செய்முறை பிரகாரம் கூடவே எஞ்சிய மில்க் ஸ்வீட் இருந்தால் அதனை மிக்சியில் அரைத்தும்,பாதாம் முந்திரி விழுதும் சேர்த்து செய்தால் ரிச் ஆக இருக்கும்.


ரமலான் நோன்புக்கஞ்சி
பொதுவாக இஸ்லாமிய சமையலில் காயல்க்காரர்கள் முதல் வரிசையில் இருப்பார்கள்.அதற்கு சான்று தங்கை பாயிஷா.அருமையான கஞ்சி.பாயிஷா இதற்கு ஜோடியாக காயல்வாடா குறிப்பை நோன்பு முடிவதற்குள் போடுங்கள்.


மாசி சம்பல் வதக்கல்.
தோழி ஆசியாவின் சூப்பர் மாசி சம்பல்.தக்காளி சேர்க்காமல் செய்தேன்.அவர் குறிப்பையும்,அவர் எடுத்துஇருந்த மாசி சம்பலின் படத்தினையும் பார்த்துமே உடனே செய்ய தூண்டி விட்டது.அடிக்கடி எங்கள் வீட்டில் இந்த சம்பல் இடம் பெறும்.


பஜ்ஜி
ஆசியா குறிப்புடன் சிறிது கார்ன் மாவு சேர்த்து செய்தேன்.மெத்தென்று,சுவையான பஜ்ஜி