1.குறுகிய மிக சிறிய சந்துகள்,முட்டு சந்துகள் இங்கு ஏராளம்.சில சமயம் உள்ளூர்க்கார்களுக்கே வழி தெரியாமல் போவதும் உண்டு.
2.மாலை நேரங்களில் " வாடா ...வாடா" தெருவில் குரல் கேட்டால் யாரையோ யாரோ அழைக்கின்றார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.அரிசிமாவினால் செய்யப்பட்ட ஒரு சுவையான பதார்த்தத்தைத்தான் கூவி விற்பனை செய்கின்றனர்.
3.வெளி நாடு,வெளியூர்களில் எத்தனைதான் உயர்ந்த பதவி வகித்தாலும்,ஹை டெக்காக வாழ்ந்தாலும் இந்த ஊர் ஆண்கள் ஊர் வந்தால் உள்ளூர்களில் பேண்ட் அணிவதில்லை.வெள்ளை நிற லுங்கிகளையே அணிவார்கள்.இதனை 'சாரம்'என்று அழைப்பார்கள்.பேண்ட் அணிந்து ஆண்கள் வலம் வந்தால் அவர்கள் வெளியூர் வாசிகளாகத்தான் இருப்பார்கள்.
4.தேங்காய் அதிகம் விளையும் இந்த ஊரில் கேரளத்தினரைப்போல் தேங்காய் உபயோகித்து தான் அதிகம் சமைக்கின்றனர்.அநேக சமையல்களில் தேங்காய் உபயோகம் அதிகளவில் இருக்கும்.
5.ஏனைய ஊர்களில் இருந்து வித்தியாசமாக இந்த ஊரில் மட்டும்தான் திருமணம் முடிந்தும் பெண் கணவன் வீட்டிற்கு செல்லாமல் தாய் வீட்டிலேயே இருப்பாள்.
6.திருமணத்திற்கு மகன்களை வைத்து இருப்பவர்கள் பெண் வீட்டிற்கு பெண் கேட்டு அனுப்புவதை கவுரவக்குறைச்சலாக கருதுவார்கள்.பெண் வீட்டினர்தான் மாப்பிள்ளை கேட்டு செல்ல வேண்டும்.
7.இங்கு உள்ள ஆட்டோக்களில் மூன்று பக்கமும் திரை கட்டி அதனுள்ளேயே பெண்கள் ஆட்டோவில் பயணிப்பது வழக்கத்தில்; உள்ளது.
8.பெரும்பாலான குடும்பங்கள் தொழில் நிமித்தம் படிப்பு நிமித்தம் வெளியூர்,வெளிநாடுகளில் புலம் பெயர்ந்தாலும் வீட்டு விஷேஷங்கள் அனைத்து உள்ளூரிலேயே நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.அவ்வாறு இருந்தால் தான் ஊருக்கும் ,நமக்கும் உள்ள தொடர்பு விட்டுப்போகாமல் இருக்கும் என்று கருதுகின்றனர்.
9.இவ்வாறாக அடிக்கடி வந்து செல்வதால் புலம் பெயர்ந்தவர்களின் வீடுகள் பிறருக்கு வாடகைக்கு விடப்படாமல் ஆள் வைத்து பராமரித்து வருகின்றனர்.
10. உள்ளூர்க்காரகள் அனைவருக்கும் சொந்தமாக வீடு வைத்து இருப்பார்கள்.வாடகை வீடு என்ற பேச்சுக்கே இடமில்லை.
11.தடுக்கி விழுந்தால் நைட் டிபன் கடைகள் ஏராளம்..ஏராளம்..இரவாகி விட்டாலே முக்கிய வீதிகளில் பரோட்டா சிலோன் பரோட்டா,முட்டை பரோட்டா,வீச்சு பரோட்டா,கொத்துபரோட்டா,முர்தபா சால்னா என்று கமகமக்கும்.கொத்துபரோட்டா கொத்தும் சப்தம் சுருதி தவறாமல் காதில் ஒலிக்கும்.ஆனால் பகலில் நிறைவான மதிய சாப்பாடு என்றால் அலையத்தான் வேண்டி இருக்கும்.
12.காலையில் ஐந்தரை மணிக்கே டீக்கடைகளில் இருவித இனிப்பு பண்டம் சுடும் மணம் நாசியை துளைக்கும்.உருண்டை வடிவில் செய்யப்பட்ட ஒருவித போண்டா.இதனை இனிப்பு போண்டா என்று அழைப்பார்கள்.சுப்ஹ் தொழுது விட்டு வருபவர்கள் இந்த இனிப்பு போண்டாவை ஒரு கை பார்த்து விட்டு டீ குடிப்பது வாடிக்கை.
13.ஊரினை சுற்றிலும் கடல் பகுதி.அதனை சுற்றிலும் குட்டி குட்டி தீவுகள் ஏராளம்.மோட்டார் படகில் ஏறிச்சென்று ரிஸ்கான பிக்னிக்கை அனுபவிப்பதில் இவ்வூர் மற்றும் இவ்வூரைச்சுற்றி சுற்றி இருக்கும் மக்களுக்கும் கொண்டாட்டம்தான்.விபரீதங்கள் நிகழ்ந்திருந்தாலும் இந்த ரிஸ்கான பிக்னிக்கில் ஈடு படுவது குறைய வில்லை.
14.உள்ளூரிலேயே நல்ல ஹாஸ்பிடல்.கடைகள் சூப்பர் மார்க்கெட்டுகள் இருந்தாலும் பக்கத்து ஊரான ராமனாதபுரம் சென்றே சிகிச்சை பெறவும்,ஷாப்பிங் செல்லவும் விரும்புவார்கள்.இதனை ஒரு பொழுதுபோக்காக இவ்வூர் மக்கள் எடுத்துக்கொள்கின்றனர்.
15.ஒரு டீயின் விலை ஒரே ரூபாய்க்கு விற்கும்
அதிசயமும் இவ்வூரில் உள்ளது.
16.பிக்னிக்,கேளிக்கைகளில் இவ்வூர் மக்களுக்கு அலாதி பிரியம்.திருமணமானாலும் சரி.குழந்தை பெற்றாலும் சரி,பாசானலும் சரி,வேலை கிடத்தாலும் சரி.புரமோஷன் வந்தாலும் சரி ,வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்தாலும் சரி சம்பந்தப்பட்டவர்களிடம்
பிக்னிக் பணம் என்று நண்பர்கள்,உறவினர்கள் வட்டாரம் ஒரு தொகையை கறந்து விடுவார்கள்.
17.அரிசிமாவினால் செய்யப்பட்ட ஒரு பணியாரம் இந்த ஊரில் பிரபலம்.இதனை வீடுகளில் செய்து விற்பனை செய்வார்கள்.இதற்கென்றே ஒரு தெருவே உண்டு.அந்த தெருவைச்சேரந்த்வீடுகளில்தான் அனேகமாக இந்த பணியாரம் சுட்டு விற்பனை செய்வார்கள்.அந்த தெருவின் பெயர் பணியக்காரத்தெரு.