January 23, 2013

வீடு வாங்கலாமா?
பிளாட்(plot) வாங்கலாமா?ஃபிளாட்(flat) வாங்கலாமா?தனிவீடு வாங்கலமா?அடுக்கு மாடி வீடு வாங்கலாமா?நிலம்,கட்டிடங்களின் விலை இப்படி விண்ணை எட்டிக்கொண்டே போகிறதே.குறையுமா இல்லை இன்னும் அதிகரிக்குமா?தனிவீடாயின் வில்லங்கம் வந்து விடுமா?பில்டர் நினைத்த படி கட்டி முடித்து தருவார்களா?வீடு வாங்க நினைப்பவர்களின் மனதில் எழும் பல கேள்விகளில் இந்தக்கேள்விகள் முக்கியமானது.

ரெகுலர் இன்கம் வேண்டுமென்றால் ஃப்ளாட்டிலும், நீண்டகால முதலீடுக்கு பிளாட்டிலும் முதலீடு செய்வதே சிறப்பானதாகும்.

எப்பொழுதுமே நம் நாட்டில் ஐ டி துறையைச்சார்ந்தே  நிலங்களின்,அடுக்கு மாடி குடி இருப்புகளின் வளர்ச்சியும் ,வீழ்ச்சியும் இருக்கும்.மற்ற துறைகளை விட ஐ டி துறையினருக்கு வருமானம் அதிகம்.வருமானவரித்தொல்லைகளில் இருந்து விடுதலை பெற அதிகளவு நிலமாகவோ,அடுக்குமாடி குடியிருப்புகளாகவோ வாங்குகின்றனர். சம்பாதிக்க ஆரம்பித்த உடனேயே ஒரு வீட்டுக்கு சொந்தக்காரர் ஆகி விடுகின்றனர்.

இப்பொழுது உள்ள விலை வாசியில் நடுத்தர வர்க்கத்தினர்  அவரவர் தகுதிக்கு எற்றார் போல் அடுக்குமாடி குடி இருப்புகளையே வாங்க விரும்புகின்றனர்.கால் கிரவுண்ட் வாங்கக்கூடிய விலையில் முழுதாக ஒரு வீட்டையே வாங்கி குடி புகுந்து விடலாம்.

புறநகர்ப்பகுதிகளில் நிலங்கள் வாங்கி முதலீடு செய்தால் அது ஆக்கிரமிக்கப்படும் அபாயமும் உள்ளது. பிறகு ஆக்கிரமிப்பாளர்களைக் காலி செய்ய கோர்ட் கேஸ் போன்ற அலைச்சல்,காலி செய்ய பணம் ,வாங்கிய நிலத்தை அவ்வபொழுது சென்று கண்காணிக்கும் சிரமம்,டென்ஷன் என்று ஏகப்பட்ட பிரச்சினைகளுக்கு பயந்து  ஃப்ளாட்டுக்களில் செய்யும் முதலீடு அதிக சிக்கலில்லாதது அதுவே சிறந்ததாக கருதுகின்றனர்.இன்னொரு பிளஸ் பாயிண்ட் என்னவென்றால் கையிலே காசு வாயிலே தோசை என்பது போல் முதலீடு செய்த சில மாதங்களில் வாடகை மூலம் வருமானமும் வரும்,ஃபிளாட்டின் மதிப்பும் (Appreciation ) உயர்ந்து கொண்டே செல்லும் என்று கணக்கு போடுபவர்கள் அதிகம்.

சொந்த வீடு அனைவரின் கனவாக,இலட்சியமாக உள்ளது.ரிசர்வ் வங்கி வீட்டுக்கடன் வட்டியை குறைத்ததுமே பலரும் வீடு வாங்க நினைகின்றனர்.தங்கள் சேமிப்பில் முழு தொகையை வைத்து வீடு வாங்குவோரை விட,அதிகளவு வங்கி கடன் பெற்று வாங்குபவர்களே அதிகம்.பில்டர்களும் 20% சொந்த பணம் போதும்.மீதி 80% நாங்களே ஏற்பாடு செய்து தருகின்றோம் என்று சுண்டி இழுக்கின்றனர்.

வீடு வாங்குபவர்கள் தங்களுடைய பட்ஜெட்டுக்கு தகுந்தவாறு,தரமான திருப்திகரமான வீடுகளை வாங்க நினைப்பவர்கள் முதலில் நல்லதொரு பில்டரை தேர்வு செய்வது நல்லது.பற்பல விஷயங்களை பொறுத்தே ஒரு பிளாட்டின் விலையை மதிப்பீடு செய்ய  முடியும்.  வீட்டைக்கட்டும் பில்டர்,பிளாட் அமைந்துள்ள இடம்,உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட ஏரியா, ஃபிளாட்டின் வசதிகள்,கட்டுக்கோப்புகள்,உபயோகிக்கப்படும் பொருட்கள் ,பராமரிப்பு,  போன்ற  அம்சங்களை கொண்டு ஒரு ஃபிளாட்டின் விலை மதிப்பிடப்படுகிறது.

இதற்கு முன் அந்த நிறுவனத்தினர் கட்டிய அடுக்குமாடி குடியிருப்புகள்,நிறுவனத்தினரின் செயல்பாடுகள் அதன் வசதிகள் என்று அக்குவேறாக ஆணி வேறாக அலச வேண்டுவது அவசியம்.ஒரு புடவை வாங்குவதென்றாலே நான்கு கடைகள் ஏறி இறங்கும் பொழுது முழுதாக ஒரு வீடு வாங்கும் பொழுது கண்டிப்பாக சிரமம் ஏற்று அலைந்தாக வேண்டியது அவசியம்.

சதுர அடியின் விலை சற்று அதிகமாயினும் தரமான,முன்னணி பில்டர்களிடம் வாங்குவது இன்னும் பாதுகாப்பானது.உடனே குடி புகத்தேவை இல்லை என்றால் கட்டிடடத்திற்கு அஸ்திவாரம் போடும் பொழுதே நாம் புக் செய்து விட்டால் குறைந்த விலையில் வாங்கி விடலாம்.அதுதான் புத்திசாலித்தனமும் கூட.அடித்தளம் போடும் பொழுது 5000 ரூபாய் ஒரு சதுர அடி என்று அறிவித்து இருந்தால் 20 சதவிகிதம் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் பொழுது 5300 ஆகி விடும்.கட்டிடம் படிப்படியாக முழுமை பெற பெற சதுர அடியின் விலையும் எகிறிக்கொண்டே இருக்கும்.ஆரம்பநிலையில் விலை குறித்து பில்டர்களிடம் அடித்து பேரம் பேசலாம்.அவர்களும் நிறைய இறங்கி வருவார்கள்.ஃபிளாட் வாங்குபவர்களுக்கும் முதலீட்டுப் பெருக்கம் என்பது அவர்கள்  எதிர்பார்த்த அளவுக்கு அதிகமாக கிடைக்கும்.

முந்திய பதிவில் படித்த மாதிரி பில்டர்களின் கலர் கலர் விளம்பரங்களை அப்படியே நம்பி, வார்த்தை ஜாலங்களில் மயங்கி விடாமல்,அட்வான்ஸ் கொடுக்கும் முன் வாங்குபவர்கள் ராஜா.அட்வான்ஸ் கொடுத்த பின் பில்டர்கள் ராஜா என்பதை கவனத்தில் கொண்டு அட்வான்ஸ் கொடுக்கும் முன்னரே ஏகப்பட்ட ,வேண்டிய கேள்விகள் கேட்டு ,தேவையான கண்டிஷன்கள் போட்டு,தரமற்ற,நியாமற்ற புரமோட்டர்களின் வலையில் வீழ்ந்து விடாமல்,விழிப்புணர்வோடு,பக்கா டாக்குமெண்டில்,அவர்கள் சொல்லும் வாக்குறுதிகளை எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கி,அக்ரிமெண்ட் போட்டு,கட்டிடம் கட்டப்படும் காலம் பல தடவைகள் சிரமம் பாராது சென்று கட்டிடத்தின் வளர்ச்சியை கண்கானித்து,ஏமாற்றம்,குறை இருப்பின் அப்பொழுதே புகாராக கூறி,அதற்கான தீர்வு பெற்று ,அக்ரிமெண்டில் உள்ள பிரகாரம் பணம் செலுத்துவதில் கவனம் கொண்டு விழிப்புணர்வுடன் செயல் பட்டால் இனிய இல்லம் நமதே. மொத்தத்தில் பொன்னில் போட்ட காசுக்கும் மண்ணில் போட்ட காசுக்கும் பழுதில்லை என்ற பழமொழிகொப்ப புத்திசாலித்தனமாக,கவனமாக ஆராய்ந்து வீட்டை வாங்கி முதலீடு செய்வது நலமே.
January 19, 2013

வீடு வாங்கலியோ வீடு...


நிலங்களின் மதிப்பு விண்ணுயரம் உயர்ந்து கொண்டே செல்கிறது.உலக பொருளாதாரம் சரிந்து கொண்டே சென்றாலும்,ரியல் எஸ்டேட்டும்,கட்டுமானத்தொழிலும் வானை எட்டிக்கொண்டே,தங்கத்துக்கு நிகரக பறந்து கொண்டுள்ளது.இது பொதுவாக எல்லா ஊர்களுக்கும் பொருந்தும் என்றாலும்  வளர்ந்து வரும் சென்னையில் கட்டுமானத்தொழில் இன்னும் கனஜோராக களைகட்டுகின்றது எனலாம்.

மக்கள்தொகை 56.63 லட்சம் கொண்ட விரிவாக்கப்பட்ட  சென்னையின் பரப்பளவு 430 சதுரகிலோ மீட்டராகும்.

பத்து ஆண்டுகளுக்கு முன் இரவானால் இருளடைந்து இருந்த சில சாலைகள் இன்று ஹார்ட் ஆஃப் சிட்டி ஆகி விட்டது.

ஸ்ரீபெரும்புதூர் தாண்டி நசரத் பெட்டை ,மாம்பாக்கம் என்றும்,சோழிங்கநல்லூர் தாண்டி நாவலூர் கேளம்பாக்கம்,திருப்போரூர்,நெமிலி வரையிலும்,வண்டலூர் தாண்டி ஊரப்பாக்கம்,காட்டாங்கொளத்தூர் மறைமலை நகர் என்றும்,தண்டையார் பேட்டை தாண்டி  திருவொற்றியூர் எண்ணூர் மீஞ்சூர்  பொன்னெரி என்று நகர் விரிவடைந்து கொண்டே செல்வது ரியல் எஸ்டேட் காரர்களுக்கும்,புரொமோட்டர்களுக்கும் லாட்டரி அடித்த கதையாகி விட்டது எனலாம்.

இப்பொழுதெல்லாம் நகருக்குள் சுமார் ஒன்றரை கிரவுண்ட் நிலத்தில் 10 அடுக்கு மாடி குடி இருப்புகளைக்கட்டி விற்று வந்த கதை எல்லாம் அரிதாகிக்கொண்டே உள்ளது.

இன்றைய விலை மதிப்பில் போட் கிளப்  பகுதியில் ஒரு சதுர அடி 25000 இல் இருந்து 30000 வரை அடுக்கு மாடி குடி இருப்புகள் விலை போகின்றது.அதே போல் ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஐந்து இலக்க எண்களுக்கு குறைவில்லாமல் ஒரு சதுர அடி அடுக்கு மாடி வீடு விற்பனை ஆகிறது.சாமானியர்கள் நகருக்குள் பிளாட் வாங்குவதென்றால் அது கடினமான விஷயமாகிப்போனதால் இப்பொழுதெல்லாம் சென்னையில் புறநகர் பகுதில் அடுக்கு மாடி குடி இருப்புகளை கட்டி கனஜோராக கல்லா கட்டிக்கொண்டு இருக்கின்றனர்.

200 குடி இருப்புகள்,300 குடி இருப்புகள் என்று கட்டியது போக இப்பொழுதெல்லாம் 1000 - 2000 வரை அடுக்கு மாடி குடி இருப்புகளை சகல வசதிகளுடன் கட்டி விளம்பரத்துக்காக கோடி கணக்கில் செலவு செய்து பன் மடங்காக லாபம் பார்த்து விடுகின்றனர்.

கால் செய்தால் வீட்டுக்கே குளிரூட்டப்பட வாகனம் அனுப்பி வைத்து அழைத்து செல்வது,கட்டுமான நிறுவனத்தின் அலுவலகமோ ஒரு பன்னாட்டு சாஃப்ட்வேர் நிறுவனத்தின் தோற்றத்தில்,படு ஹைபையாக காட்சி தருகிறது.அலுவலகத்திற்குள் நுழையும் முன்பே வாசலில் காவலாளி முன் இருக்கும் நோட்டுப்புத்தகத்தில் விபரங்கள் எழுதுவது,உள்ளே நுழைந்ததும் அங்கு நமக்காக காத்திருக்கும் சேல்ஸ் எக்ஸிகியூடிவ் வரிசையாக இருக்கும் அறைகளில் ஒன்றில் கார்ட் பன்ச் செய்து திறந்து உள்ளே அழைத்து சென்று மேஜை மீது மேப்பையும் படங்களையும் விரித்து வைத்துக்கொண்டு வார்த்தை ஜாலம் புரிந்து போணி பண்ணும் திறமையையும்,அங்கிருக்கும் ஊழியர்கள் கோட் சூட் என்று அணிந்து ஆடம்பரம் காட்டி வலம் வருவது,பெரிய திரையில்  அவர்கள் கட்டி வரும்,கட்டப்போகும் கட்டுமானங்களின் விபரங்களை அட்டகாசமாக ஒளி ஒலிகாட்சியாக்கி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துவது,இதை எல்லாம் கடந்து,சைட்டை பார்க்க செல்லும் பொழுது அலுவலக வளாகத்தில் ஒன்று பார்த்தாற் போல் வரிசையாக அணிவகுத்து நிற்கும் சைட்டுக்கு அழைத்து செல்லும் வாகனங்கள்,சீருடை அணிந்த ஒட்டுநர்கள் என்று அமர்க்களப்படுத்துகின்றனர்.

இதோ தாம்பரத்தில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில்தான்
 நம்ம சைட் என்று அந்த ”ம்”இல் சேல்ஸ் எக்ஸிகியூடிவ் ஒரு அழுத்தம் கொடுப்பார் பாருங்கள்.அப்பொழுதே வீடு நமதாகிவிடும்.

கார் பயணத்தில் அந்த புரமோட்டர் புராணம் பாடி,அவர்கள் ஆற்றி வரும் சேவைகளையும்,திறம் பட அவர்கள் கட்டுமானத்தொழிலில் தமிழகத்தில் செய்து வரும் புரட்சி பற்றியும் விலாவாரியாக விவரித்துக்கொண்டே வரும் பொழுது,அதற்கு கூடவே வரும் ஓட்டுநரும் ஜால்ரா தட்டிக்கொண்டே வருவதை கேட்கும் பொழுது செவி மடுப்பவர்களுக்கு”ஆஹா..வாங்கும் சம்பளத்திற்கு உண்மையாக எவ்வளவு உழைக்கிறார் ”என்று புளங்காகிதபடவைத்து விடுகின்றனர்.

சொகுசு வண்டி கரடு முரடு சாலைகளில் சர்க்கஸ் வித்தை பண்ணிக்கொண்டு ஒரு வழியாக சைட்டை அடைகின்றது.
“என்ன சார்.தாம்பரத்தில் இருந்து ஐந்தே கிலோ மீட்டர் என்றீர்கள்.எவ்வளவுதூரம் பயணித்து விட்டோம்”என்று கூட வருபவர் கொட்டாவி விட்டால்”சூ..சத்தியம் ,ஐந்தே கிலோ மீட்டர்தான்.இதோ நம்ம சைட் இருக்கும் பகுதியில் இப்பொழுது நூறடி சாலைதான்.இதனை இருநூறடி சாலையாக்கப்போகின்றனர்.”என்று பேச்சை நயம்பட திசை திருப்புவார்.

சைட்டிலும் ஆர்பாட்டமாக ஒரு அலுவலகம்,சகல வசதிகளும் செய்யப்பட்ட மாடல் ஹவுஸ்,குடியிருப்புகளை சாலை வசதிகளுடன்,விளக்கு ஒளியுடன் காட்டும் மினியேச்சர் வீடுகள் என்று பார்ப்போரை விழியகல வைத்து விடுகின்றனர்.

அதோ தூரத்தில் தெரிகிறதே கம்பம் அதற்கு பின்னால்தான் நோகியா கம்பெனி வரப்போகிறது.அதோ அந்தப்பக்கம் பென்ஸ் கார் கம்பெனி வரப்போகிறது,இதோ இந்தப்பக்கம் பெரிய மால் கட்டப்போகின்றர். மகேந்திரா சிட்டி கூட வரப்போகிறது என்று தூரத்தே கையை காட்டி விளக்கம் தரும் பொழுது எதிரில் இருப்பவர் வாயைப்பிளந்து பார்த்துக்கொண்டே இருப்பார்கள்.

கரெக்ட் டைமுக்கு பொசிஸன் கொடுப்பதில் எங்கள் கம்பெனியை அடிச்சுக்கவே முடியாது.ஒரு வேளை தாமதாகி விட்டால் அதற்குண்டான வாடகையை தந்து விடுவார்கள்.ஆனால் அதற்கு சந்தர்ப்பமே வராது”சர்க்கரை பாகு தடவிய வார்த்தைகள்.

“நீஙகள் வாடகை பர்பஸுக்கு என்று வாங்கினால் வாடகைக்கு நல்ல ஆட்களை நியமிக்க,வாடகை வசூல் என்று பண்ணித்தரவும் ஆட்கள் இருக்கின்றனர்.நீங்கள் வந்து செல்லும்தொந்தரவே இருக்காது.”

”சுமாராக மூன்று பெட் ரூம் பிளாட்டுக்கு எவ்வளவு வாடகை வரும்”அக்கரையாக கேட்கப்படும் கேள்விக்கு அலர்ட்டான பதிலொன்று வரும்.”முள்ளங்கி பத்தை மாதிரி 20000 ரூபாயை யார் வேண்டுமானாலும் கண்ணை மூடிக்கொண்டு கொடுப்பார்கள் சார்.”

“20000 ரூபாயா...?எங்கள் ஏரியாவில் கூட இவ்வளவு வாடகை வராதே.இப்படி புறநகர் பகுதில் தருவார்களா 20000?”கேள்வியை முடிக்கும் முன் டாண் என்று பதில் வரும்.

“கிளப் ஹவுஸ் உண்டா,ஸ்விமிங் பூல் உண்டா,ஏஸி ஜிம் உண்டா?ஹை ஸ்பீட் இண்டர்நெட் உண்டா?மீட்டிங் ஹால் உண்டா?இண்டோர்கேம் ஜோன் உண்டா?இண்டர்காம் வசதி உண்டா?மெயிண்டனென்ஸ் ஸ்டாஃப் உண்டா?ஃபயர் அலார்ம் உண்டா?விசிட்டர் கார் பார்க் உண்டா?ரூஃப்டாப் பார்ட்டி டெரஸ் உண்டா?கவர்ட் கார்பார்க் உண்டா?எலக்ட்ரானிக் செக்யூரிட்டி உண்டா?பவர் பேக் அப் உண்டா?பைப் கியாஸ் கனெக்‌ஷன் உண்டா?கிரீச் உண்டா?கான்பரன்ஸ் ரூம் உண்டா?ஹெல்த் கிளப் உண்டா?கெஸ்ட்சூட் உண்டா? இதெல்லாம் நாங்கள் தருகின்றோமே சார்”இப்படி அடுக்கிக்கொண்டே கேட்போரை திகைக்க வைத்து விடுகின்றனர்.

இறுதிப்பகுதி அடுத்த பகிர்வில்.