Showing posts with label தகிடுதத்தம். Show all posts
Showing posts with label தகிடுதத்தம். Show all posts

September 17, 2012

கியாஸ் சப்ளையர்களின் தில்லுமுல்லு!

டிஸ்கி:புக் செய்தால் ரூ.400க்குள் வாங்கும் கியாஸ் சிலிண்டரை ரூ.800 கொடுத்து வாங்கிய ஆதங்கத்தில் எழுதபட்ட பதிவிது.

அவ்வப்பொழுது சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுபாடு வரும்பொழுதெல்லாம் இல்லதரசிகள் வயிறு எரிகின்றார்களோ இல்லையோ சப்ளையர்கள் வயிறு குளிர்ந்து போகின்றனர்.புக் செய்தால் மாதக்கணக்கில் சப்ளை செய்ய தாமதம் ஏற்படும் பொழுது அதிகம் பணம் கொடுத்து வாங்கியே ஆக வேண்டும் என்று நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகின்றனர் இல்லத்தரசிகள்.

இப்பொழுது அப்படிப்பட்ட தட்டுப்பாடு இல்லாவிட்டாலும் வருடத்திற்கு ஆறு சிலிண்டர்கள் மட்டும்தான் அரசு மானியத்தில் வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு பின் மறுபடி ஆட்டம் போட ஆரம்பித்து விட்டனர்.

இப்பொழுதெல்லாம் கைபேசியிலேயே சிலிண்டர் புக் செய்து உடனே புக்கிங் நம்பருடன் நமக்கு மெசேஜ் வந்துவிடும்.கியாஸ் டெலிவரிக்கு முன்னரோ சற்று பின்னரோ சப்ளை செய்துவிட்ட தகவலும் வந்து விடும்.

இப்பொழுது டெலிவரி செய்யப்பட்டு விட்டதாக தகவல் வந்ததே தவிர சிலிண்டர் சப்ளை செய்ய வில்லை.உடனே கால் செண்டருக்கு கம்ப்ளைண்ட் செய்தால் பார்க்கிறோம்,திரும்ப இந்த நம்பருக்கு அழைகிறோம் என்கின்றார்களே தவிர எந்த வித ஆக்‌ஷனும் எடுப்பதாக தெரியவில்லை.கியாஸ் ஏஜன்ஸீஸுக்கு புகார் செய்தால் இல்லையே சப்ளை செய்து விட்டோமே என்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன்னர் சிலிண்டர் தட்டுப்பாடு வந்த பொழுது இப்படித்தான்.சப்ளை செய்யப்படாமல் சப்ளை செய்து விட்டதாக மெசேஜ் வந்தது.உடனே ஏஜன்சியை அழைத்து புகார் பண்ணியதில் சப்ளை செய்யும் ஆளை வீட்டுக்கு அனுப்பினர் சப்ளை பண்ணி விட்டேன் என்று அடித்து கூறினார்.ரெஸிப்டில் சிலிண்டரை பெற்றுக்கொண்டதற்கான யாருடைய கையெழுத்தோ போடப்பட்டு இருந்தது.விடாப்பிடியாக மீண்டும் ஏஜென்சியை அணுகி சப்தம் போட்டு மறுநாள் ஒரு சிலிண்டர் சப்ளை செய்தனர்.

பூட்டி இருக்கும் வீடுகளின் கன்ஸ்யூமர் நம்பர்களில் அவர்களே புக் செய்து சிலிண்டரை அதிக விலைக்கு விற்றுக்கொள்கின்றனர்.


சென்னையில் இன்றைய நிலவரப்படி 14.2 எடையுள்ள ஒரு சிலிண்டரின் விலை ரூ. 393.50 ஆகும். சப்ளை செய்பவர்களுக்கு ரவுண்டாக 400 ரூபாய் கொடுத்தால் வாங்கிக்கொள்வதில்லை.பேசி வைத்துக்கொண்டது போல் மேலும் 10 ரூபாய் கேட்கின்றனர்.ஆக 410 என்பது கொடுக்கபட்டே ஆகவேண்டும்.10 ரூபாய் சில்லரையாக இல்லாவிட்டாலும் வலுகட்டாயமாக 90 ரூபாய்தந்து நூறு ரூபாயை பெற்று சென்றுவிடுகின்றனர்.தெரிந்தவர் ஒருவர் 10 ரூபாய் கொடுக்காமல் இருந்ததற்காக சிலிண்டரினுள் இருக்கும் வாஷரை அகற்றிவிட்டு கொடுத்த கொடுமையும் நடந்துள்ளது.


கியாஸ் சப்ளையர்கள் அதிக விலைக்கு விற்கும் நோக்கில் புக் செய்த சிலிண்டர்களை விநியோகிக்காமல் தகிடுதத்தம் செய்வது அவ்வப்பொழுது நிகழ்ந்துகொண்டுதான் உள்ளது.

இதை தடுக்க சுலபமான வழி வாடிக்கையாளர்களுக்கு பாஸ்புக் அளவில் சின்ன புத்தகத்தினை தந்து சிலிண்டர் டெலிவரி செய்யும் பொழுது தேதியுடன் சப்ளை செய்பவரின் கைஎழுத்தை வாங்கிக்கொண்டால் தவறுகள் நிகழும் பொழுது ஆதாரத்துடன் நிரூபிக்க வசதியாக இருக்கும்.தவறுகளும் நிகழவும் வாய்ப்பு இருக்காது.சில விநியோகஸ்தர்கள் சொந்த செலவில் ஸ்டிக்கர் அச்சிட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கி விடுகின்றனர்.சப்ளை செய்த பின்னர் ஸ்டிக்கரில் ஒன்றை எடுத்து பில்லில் ஒட்டி சப்ளையர்களிடம் கொடுத்து விடவேண்டும்.ஸ்டிக்கர் இல்லாமல் சப்ளை செய்யப்படமாட்டாது.இந்த முறையும் தவறுகள் நிகழ்வதில் இருந்து தவிர்க்கலாம்.இதனை எரிவாயு நிறுவனத்தினர் ஒரு உத்தரவாகவே போடலாம்.

இனி அரசு உத்தரவு படி ஆறு சிலிண்டர்களுக்குப் பிறகு ஒரு சிலிண்டருக்கு சுமார் ரூ. 770 வரை கொடுக்க வேண்டும். அதாவது ஒரு சிலிண்டருக்கு கூடுதலாக ரூ. 384 வரை செலவாகும்.ஆகையினால் இனி மேற்கண்ட திட்டங்களை கண்டிப்பாக அமல் படுத்தினால் தான் குற்றங்கள் நிகழ்வது குறையும்.இல்லத்தரசிகளுக்கும் ஏமாற்றப்படுவதில் இருந்து தப்பிக்க முடியும்.சப்ளையர்கள் குறுக்கு வழியில் குபேரர்கள் ஆவதையும் தடுக்கலாம்.




May 25, 2010

பிராண்டடுகளின் ஃப்ராடுத்தனங்கள்


பொதுவாக எலக்ட்ரானிக்பொருட்கள் வாங்கினால் அழகானவையா,நன்கு உழைக்குமா என்று பார்ப்பதற்கு முன்னர் முன்னணி பிராண்டா?நல்ல சர்வீஸ் வசதி உண்டா என்பதைதான் முதலில் பார்ப்போம்.சர்வீஸுக்காகவே வெளிநாடுகளில் இருந்து வரும் வாய்ப்பிருந்தும்அநேக பொருட்களை மறுத்துவிட்டு இங்கு விற்பதைத்தான் விரும்பி வாங்குவோம்.

சென்னையில் பிரபலமான கடை.இந்தியாவில் லாஞ்ச் ஆகும் எல்லா பிராண்ட்ஏசிகளும்.அனைத்து மாடல்களும் ஒரே கூரையின் கீழ் வைத்து அமோகமாக விற்பனை செய்யும் பெரிய வேறு கிளைகள் இல்லா நிறுவனம்.ஏற்கனவே திட்டமிட்டபடி குறிப்பிட்ட விலையில்,குறிப்பிட்ட பிராண்டில் வாங்கப்போனால் மற்றுமொரு நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதி கைகளை பிடித்து அழைக்காத குறையாக வருந்தி அழைத்து வாங்கப்போகும் பிராண்டைப்பற்றிய குறைகளை பற்றி பெரிய லெக்சரே அடித்து யோசிக்க வைப்பார்.யோசிக்க ஆரம்பிக்க முன்னரே "இப்போ அத்தனை பணமும் இல்லேன்னா கூட பரவா இல்லை.டெலிவரி பண்ணும் பொழுது மீதிப்பணம் கொடுத்தால் போதும்"என்ற முன்னுரையோடு ஸ்டார் ரேட்டிங்,அதனால் கிடைக்கும் சேமிப்பு,அவர்களின் பிராடக்டின் தரம்,சேவை என்று விலாவாரியாக பேசி தலையில் கட்டிவிட்டுத்தான் மறுவேலைப்பார்ப்பார்.

சரி கியாரண்டி முடிந்துவிட்டதே என்று ஏ ம் சி எடுத்தால் சர்வீஸுக்கு கூப்பிட்டே போன் பில் எகிறுகின்றது.பிரபலமான வாட்டர் ஃபியூரிபையர் ஏ எம் சி எடுத்துவிட்டு நான் பட்டபாட்டினை,அதனால் எற்பட்டவாக்குவாதங்கள்,கோபமான உரையாடல்கள் ,கொல்கத்தாவில் இருக்கும் தலைமை அலுவலகத்திற்கு போனுக்கு மேல் போன் செய்து ,மின்னஞ்சல்கள் அனுப்பி வெறுத்துப்போன நிலையில் ஏ எம் சியும் முடிந்து ஓய்ந்திருக்கையில் கையில் பைலுடன் மெக்கானிக் ஏ எம் சியை ரினுவல் பண்ணும்படி கோரிக்கையுடன் வந்தவரை ஆத்திரம் தீர கேட்டு விட்டு அந்த வாட்டர் ஃபியூரிபையரையே கடாசிவிட்ட அனுபவமும் உள்ளது.
கிரைண்டரைக்கொண்டு போய் சர்வீஸுக்கு கொடுத்தால் சர்வீஸ் செய்து தருகின்றோம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.புதிதாக அறிமுகப்படுத்திய மாடலை காட்டி இதில் அந்த வசதி உள்ளது.இந்த வசதி உள்ளது.அடுத்த மாதத்திற்கு விலை ஏறப்போகின்றது.இதனை ரிப்பேர் செய்தால் தண்டம் இந்த ரீதியில் பேசி புதியவையை நம் தலையில் கட்டப்பார்க்கின்றனர்.சாமர்த்தியம் இருந்தால் பர்ஸ் தப்பும்

சரி ரிப்பேருக்கு கொடுத்தே பர்ஸ் இளைத்து விடுகின்றதே என்று சற்று பழசாகிப்போன குளிர்சாதனப்பெட்டிக்கு ஏ எம் சி எடுக்க வரும்படி அழைத்தால் "பர்ச்சேஸ் பண்ணி ஐந்து வருடங்களுக்குள் இருந்தால்தான் ஏ எம் சி எடுப்போம்" என்று அதிரவைக்கின்றார்கள்.அதாகப்பட்டது எந்தஒரு எலக்ட்ரானிக் தயாரிப்பும் அவர்களது தயாரிப்பில் ஐந்து வருடங்களுக்கு மேல் உழைக்காது என்று சொல்லாமல் சொல்லுகின்றார்கள்.

இருவருட கியாரண்டியுடன் தெரிந்தவர் வீட்டில் வாங்கிய கியாரண்டி முடிவதற்கு 10 நாட்கள் முன்பதாக குளிர்சாதனப்பெட்டி ரிப்பேராகி விட்டது.அழைப்புக்கு மேல் அழைப்பு வைத்து கிராண்டி பீரியட் முடிந்த பின் வந்து பார்த்து ரிப்பேர் செய்துவிட்டு பில்லை நீட்டினால் கோபம் வருமா வராதா?மெக்கானிக்கை அருகில் வைத்துக்கொண்டே கம்பெனி மேலாளருக்கு போன் செய்து போராடி பணத்தை கொடுக்காமல் மெக்கானிக்கை அனுப்பிவைத்தனர்.

சம்மர் நேரம் .ஏசி அமோக விற்பனை செய்யும் நேரம்.ஆயிரத்தெட்டு சலுகைகள் அறிவித்து ஏசி வாங்கினால் இன்ஸ்டாலேஷன் ஃபிரி,ஸ்டெபிலைசர் இலவசம் என்று அறிவித்து விட்டு ஆங்கிள் போட்டுள்ளோம் ஜம்பர் போடுள்ளோம் பணம் கொடுங்கள் ஒவ்வொன்றுக்கும் பிடுங்குகின்றனர்.

பெரியதாக கால் செண்டர் என்று போட்டு நமது கம்ப்ளைண்டுகளை பதிவு செய்து ஒழுங்கான சேவை செய்கின்றார்களா என்றால் அதுவும் இல்லை.இந்த நபருக்கு போடுங்கள்,அந்த நம்பருக்கு போடுங்கள் என்று அலைகழித்து வெறுப்பின் உச்சகட்டத்திற்கே அனுப்பிவைத்து விடுகின்றனர்.

மிளாகாயாக கோபத்தில் கத்தினாலும்,தேனொழுக பேசி பேச்சில் மட்டும் சாதுர்யத்தை காட்டுவதற்கு நன்றாகவே டிரைனிங் கொடுத்துள்ளனர்.
அம்மியில் மசாலா அரைத்து,கல்லுரலில் மாவரைத்து,விறகடுப்பில் சமைத்து தன் கையே தனக்குதவி என்று ஆரோக்கியமாக வாழ்ந்த அந்தக்காலத்திலேயே வாழ்ந்து மடியாமல் மின்சாரசாதனங்களை நம்பி வாழ்ந்து அவஸ்தை பட்டுக்கொண்டிருக்கிறோமே என்கின்ற அளவுக்கு வெறுப்புத்தான் மிஞ்சுகின்றது.

நம்மை பாதிப்புக்குள்ளாக்கிய நிறுவனங்களுக்கு இந்த இடுகையை மட்டுமின்றி தொடரும் பின்னூட்டங்களையும் காப்பி பேஸ்ட் செய்யலாம் என்று இருக்கின்றேன்.(எருமை மாட்டில் பெய்த மழை என்கின்றீர்களா?)

டிஸ்கி- அடுத்த பதிவில் பிராண்டுகளின் பெயரையே அறிவித்து விடுகின்றேன்.

December 18, 2009

எப்படி எல்லாம் ஏமாற்றுவார் இந்த உலகிலே!


சென்ற வாரம் இரண்டு ஆட்கள் வந்து பிட் நோட்டீஸ்,விசிட்டிங்கார்ட்,கூப்பன் சகிதமாக வந்தனர்.


"மேம்..புதிதாக ஷாப் ஓப்பன் பண்ணுகின்றோம்."என அறிமுகப்படுத்திக்கொண்டனர்.

உங்கள் வீட்டில் உள்ள பெயர்களை சொல்லுங்கள்."குலுக்கல் முறையில் தேர்வு செய்து பரிசு தருகின்றோம்."என்றனர்.

இப்படி மாதிரி காரியங்களில் எனக்கு எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை."இதெல்லாம் சரிப்பட்டு வராது.குலுக்கலும் வேண்டாம்,பரிசும் வேண்டாம்"என்று மறுத்தேன்.இருந்தாலும் விடாகண்டானாக பிடிவாதமாக பெயரைக்கேட்டு கூப்பனை நிரப்புவதிலேயே குறியாக இருந்தனர்.எவ்வளவோ மறுத்தும் கேட்கவில்லை.

"ஏன் மேம்,இதில் உங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை.குலுக்கலில் தேர்வானால் பரிசுதானே கிடைக்கப்போகின்றது.என்கரேஜ் பண்ணுங்கள்"இப்படி பேசியே என் மனதை மாற்றி கூப்பனை நிரப்பவைத்தனர்.நானும் அரை மனது..இல்லை,இல்லை..கால் மனதுடன் கூப்பனை நிரப்பி கையில் கொடுத்தேன்.அனைத்தையும் வாங்கி வைத்துக்கொண்டு"மேம்..புரோஷசிங் சார்ஜ் டென் ருபீஸ் கொடுங்கள்.அதற்கு பில் கொடுத்துடுவோம்"என்றான்.கோபம் ஜிவ் என்று ஏறியது.

நான் கோபத்தைக்காட்டும் முன்"மேம்..பரவா இல்லை.உங்களுக்காக அந்த பைசாவை நானே போட்டுக்கொள்கிறேன்"என்று கிளம்ப ஆரம்பித்தான்.இன்னும் கோபம் அதிகமாகி "எனக்காக பைசா போடுவதற்கு நீ யார்?"என்று சப்தம் போட்டு பத்து ரூபாயை கொடுத்து அனுப்பி விட்டேன்.

நடந்ததை மறந்தும் போய் விட்டேன்.நேற்று மீண்டும் அந்த இரண்டு நபர்களும் வந்தனர்."மேம்..கங்கிராஜுலேஷன்"வாயெல்லாம் பல்லாக ஒரு பெரிய பார்சலுடன் வந்தனர்.

" உங்களுக்கு குலுக்கலில் எலக்ட்ரிக் குக்கர் பரிசு கிடைத்து இருக்கு"என்று அவர்கள் சொன்ன பொழுது அவர்களைப்பார்த்த பொழுது ஏற்பட்ட எரிச்சல் சற்று தணிந்தது.'அட..பரவாஇல்லையே.அன்னிக்கு இந்த ஆட்களிடம் அவ்வளவு கோபம் காட்டினோமே'என்று நினைத்துக்கொண்டேன்.

பார்சலைக்கீழே வைத்துவிட்டு ,பாக்கட்டில் இருந்து ஒரு பில்லை எடுத்து நீட்டுகின்றனர்."மேம்..50 பெர்ஸண்ட் ஆஃப் மேம்.மார்க்கட்டில் இந்த குக்கர் விலை 4500.உங்களுக்கு 2250க்குத்தான் கிடைத்து இருக்கின்றது"என்கிறார்.

எனக்கு வந்ததே கோபம்."என்னப்பா,விளையாடுகிறீர்களா?"என்று சப்தம் போட்டேன்.அந்த கை தேர்ந்தவர்கள் என் கோபத்தை பார்த்து அசரவில்லை.என் தலையில் கட்டி பணத்தை வாங்கிக்கொண்டு போவதிலேயே குறியாக இருந்தனர்

."இதே போல் குக்கர் என்னிடமும் உள்ளது.நீங்கள் வேண்டுமானால் எனக்கு 2000 மட்டுமே தந்துவிட்டு எடுத்து செல்லுங்கள்"இப்படி எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை.கோபம் தலைக்கேற கேட்டை காட்டி"முதல்லே வெளியே போ"நான் போட்ட சப்தத்தில் இருவரும் எஸ்கேப்.உங்கள் வீட்டிற்கும் வரலாம்.ஜாக்கிரதை!