September 30, 2009

திருமறை துஆக்கள்


உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும்,அந்தரங்கமாகவும் பிரார்த்தனை
செய்யுங்கள்.வரம்பு மீரியவர்களை நிச்சயமாக நேசிப்பதில்லை.
அல்குர் ஆன்(7:55)
புனித குர் ஆனில் வல்ல இறைவன் கற்றுத்தந்த அழகிய துஆக்கள்.ஒவ்வொரு வேளை
தொழுகைக்குப்பின்பும் இந்த து ஆவை அர்த்தம் புரிந்து இறைஞ்சினால் வல்ல
நாயன் நம் அனைவரின் நியாயமான துஆக்களை கபூல் செய்வானாக.ஆமீன்.வரிசையாக
தொகுக்கப்பட்டுள்ளது.இறைவனிடம் கையேந்தி,பணிவாக உங்கள் நாட்டங்களை அவன்
முன் வையுங்கள்.
நீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல முடியவில்லை இன்னும்..
இனி அடுத்தடுத்து கேட்பதற்கு அஞ்சுதே என் உள்ளம்
யா அல்லாஹ்..யா அல்லாஹ்..சுபுஹானல்லாஹ்..
என்று மன நிறைவு பெறுவீர்கள்.

1 - என் இறைவா!இந் நகரத்தை எனக்கு அமைதி அளிக்கும் நகரமாக்கி
வைப்பாயாக!இங்கு வசிப்பவர்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதி
நாளையும்நம்புகிறார்களோ அவர்களுக்கு கனி வர்க்கங்களை வழங்குவாயாக!
(2:126)

2 - எங்கள் இறைவா!எங்களிடம் இருந்து
அனைத்தையுமேற்றுக்கொள்வாயாக!நிச்சயமாக நீ செவி ஏற்பவனும்
நன்கறிந்தோனுமாவாய்! (2:127)

3 - எங்கள் இறைவா!மேலும் எங்கள் இருவரையும் உனக்கு முற்றிலும்
கீழ்படிந்தவர்களாய் ஆக்கி வைப்பாயாக!மேலும் எங்கள் வழித்தோன்றல்களிலிருந்து
முற்றிலும் உனக்கு கீழ்படிந்து வாழும் ஒரு சமூகத்தை தோற்றுவிப்பாயாக!கடமை
கிரியைகளை எங்களுக்கு காண்பிப்பாயாக!மேலும் எங்களின் பாவங்களை
மன்னிப்பாயாக!நிச்சயமாக நீ திரும்பத் திரும்ப மன்னிப்பவனும் மிக்க கிருபை
உடைவனுமாவாய்!(2:128)

4 - எங்கள் இறைவா!எங்களுக்கு இந்த உலகிலும் நன்மை அருள்வாயாக !மறுமை
உலகிலும் நன்மை அருள்வாயாக!மேலும் நரக வேதனையிலிருந்து
எங்களைக்காப்பாறுவாயாக! (2:204)

5 - எங்கள் இறைவா!நீ எங்கள் மீது பொறுமையை பொழிவாயாக!எங்கள் பாதங்களை
உறுதிப்படுத்துவாயாக!மேலும் நிராகரிக்கும் கூட்டத்தினருக்கு எதிராக
எங்களுக்கு உதவி செய்வாயாக! (2:250)

6 - எங்கள் இறைவா!நாங்கள் மறந்து விட்டாலோ,பிழை செய்து விட்டாலோ நீ
எங்களிடம் குற்றம் பிடிக்காதே.எங்கள் இறைவா!மேலும் எங்களுக்கு முன்
சென்றோர் மீது நீ பாரத்தை சுமத்தியது போல் எங்கள் மீதும் பாரத்தை சுமத்தி
விடாதே!மேலும் நாங்கள் இயலாத பாரத்தை எங்கள் மீது சுமத்தி விடாதே!எங்களை
பொறுத்தருள்வாயாக!எங்களுக்கு மன்னிப்பு வழங்குவாயாக!எங்கள் மீது கருணை
பொழிவாயாக!நீயே எங்கள் பாதுகாவலன்.நிராகரிக்கும் கூட்டத்தினருக்கு எதிராக
எங்களுக்கு உதவி செய்வாயாக! (2:286)

7 - எங்கள் இறைவா!எங்களை நீ நேர் வழியில் செலுத்திய பின்பு எங்கள்
இதயங்களை தடுமாற செய்து விடாதே!மேலும் எங்களுக்கு உன் அருளில் இருந்து
கொடை வழங்குவாயாக!திண்ணமாக நீயே உண்மையில் ,தாராளமாய் வழங்குவோன்! (3:8)

8 - எங்கள் இறைவா!திண்ணமாக நீ எல்லா மனிதர்களையும் ஒரு நாளில் ஒன்று திரட்டக்கூடியயவனாவாய்.இதில் எத்தகைய ஐயமும் இல்லை.நிச்சயமாக நீ வாக்குறுதி மீறுபவனும் இல்லை.(3:9)

9 -எங்கள் இறைவா !திண்ணமாக நாங்கள் உன் மீது நம்பிக்கை கொண்டோம்.எனவே எங்களுடைய பாவங்களை நீ மன்னித்தருள்.இன்னும் நரக வேதனையில் இருந்து எங்களைக்காத்தருள்!(3:16)

10 - என் இறைவா!உன்னிடமிருந்துஎனக்கு தூய சந்ததியை வழங்குவாயாக!நிச்சயமாக நீயே பிரார்த்தனையை செவியேற்பவன்.(3:38)

11 - எங்கள் இறைவா!நீ இறக்கி அருளிய யாவற்றையும் நாங்கள் நம்புகின்றோம்.தூதரையும் பின் பற்றுகின்றோம்.எனவே நீ எங்களைசான்று பகர்வோருடன் சேர்த்து எழுதுவாயாயாக!(3:53)

12 - எங்கள் இறைவா!எங்கள் பாவங்களையும் ,எங்கள் செயல்களில் நாங்கள் வரம்பு மீறல்களையும் மன்னித்தருள்வாயாக!மேலும் எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக!நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக நீ எங்களுக்கு உதவி அருள்வாயாக!(3:191)

13- எங்கள் இறைவா!இவை அனைத்தையும் நீ வீணாகப்படைக்க வில்லை.நீயே தூய்மையானவன்.எனவே நர வேதனையில் இருந்து நீ எங்களைக்காப்பாற்றுவாயாக!(3:191)

14 - எங்கள் இறைவா!நீ யாரை நரகத்தில் புகுத்தினாயோ ,அவனை நீ உண்மையில் மிகக்கேவலப்படுத்தி விட்டாய்.மேலும் இப்படிப்பட்ட அநீதியாளர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லை!(3:192)

15 - எங்கள் இறைவா!உங்கள் இறைவன் மீது நம்பிக்கைக்கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பை செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்.எனவே எங்கள் இறைவா!எங்கள் பாவங்களை மன்னித்தருள்வாயாக!எங்களிடம் உள்ள தீமைகளை அகற்றுவாயாக!மேலும் எங்களை நல்லவர்களுடன் மரணிக்கச்செய்வாயாக!(3:193)

16 - எங்கள் இறைவா!மேலும் தூதர்கள் மூலமாக நீ அளித்த வாக்குறுதிகளை எங்களுக்கு நிறைவேற்றித்தந்தருவாயாக!மேலும் மறுமை நாளில் எங்களைக்கேவலப்படுத்திவிடாதே!திண்ணமாக நீ வாக்குறுதி மீறாதவன்.(3:194)

17 - எங்கள் இறைவா!நாங்கள் ஈமான் கொண்டோம்.எனவே நீ எங்கள் சான்று பகர்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!(5:83)

18- எங்கள் இறைவா!எங்களுக்கு நாங்களே அநீதி இழைத்துக்கொண்டோம்.நீ எங்களை மன்னித்து எங்களுக்கு கிருபை செய்யாவிடில் நிச்சயமாக நாங்கள்
இழப்பிற்குறியவர்களாகி விடுவோம்!(7:23)

19 - எங்கள் இறைவா!அநியாயக்கார மக்களுடன் எங்களை சேர்த்து விடாதே!(7:47)

20 - எங்கள் இறைவா!எங்களுக்கும்,எங்கள் சமூகத்தாருக்குமிடையில் தீர்ப்பளிப்பாயாக!நீயே தீர்ப்பு அளிப்போரில் சிறந்தவன்!(7:89)

21 -எங்கள் இறைவா!எங்களுக்குப்பொறுமையை பொழிவாயாக!மேலும் உனக்கு முற்றிலும் சரணடைந்தவர்களாக எங்களை மரணிக்கச்செய்வாயாக!(7:126)

22 - எங்கள் இறைவா!அநீதி இழைக்கும் கூட்டத்தாரின் சோதனைக்கு எங்களை ஆட்படுத்தி விடாதே!மேலும் நிராகரிக்கும் கூட்டத்தாரிடமிருந்து உனது கருணையினால் எங்களைக்காப்பாற்றுவாயாக!(10:85,86)
23 - என் இறைவா!எதைப்பற்றி எனக்கு அறிவில்லையோ அதைப்பற்றி உன்னிடம் கேட்பதை உன்னிடத்தில் நான் பாதுகாப்புத்தேடுகின்றேன்.நீ என்னை மன்னித்து ,மேலும் அருள் புரியாவிட்டால் நான் அழிந்து போய் விடுவேன்.(11:47)
24 - என் இறைவா!இந்நகரத்தை அமைதி அளிக்கக்கூடியதாக ஆக்குவாயாக1!மேலும் என்னையும்,என் மக்களையும் சிலைகளை வணங்குவதில் இருந்து காப்பாற்றுவாயாக!(14:35)

25- என் இறைவா!என்னையும்,என் வழித்தோன்றலகளில் உள்ளவர்களையும் தொழுகையை நிலை நிறுத்துபவர்களாய் ஆக்குவாயாக!எங்கள் இறைவா!மேலும் எனது இந்த பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வாயாக!(14:40)

26 - எங்கள் இறைவா!எனக்கும்,என்பெற்றோறுக்கும் நம்பிக்கைக்கொண்டோர் அனைவருக்கும் கேள்வி கணக்கு கேட்கப்படும் நாளில் மன்னிப்பை அருள்வாயாக!(14:41)

27- என் இறைவா!சிறுவயதில் எவ்வாறு என்னை இவர்கள் இருவரும் கருணையுடனும் பாசத்துடனும் வளர்த்தார்களோ,அவ்வாறு இவர்கள் மீது நீ கருணை பொழிவாயாக1(17:24)

28- என் இறைவா!நீ என்னை எங்கே புக வைத்தாலும் உண்மையுடன் புகச்செய்வாயாக.என்னை எங்கே இருந்து வெளியேற்றினாலும் உண்மையுடன் வெளியேற்றுவாயாக!உன் தரப்பில் இருந்து எனக்கு பக்கபலமாக ஒர் அதிகாரத்தை வழங்குவாயாக!

29 - எங்கள் இறைவா1உன்னிடமிருந்து உன்னருளை எங்களுக்கு வழங்குவாயாக!எங்கள் காரியக்களை சீர் படுத்துவாயாக!(18:10)

30 - என் இறைவா1என் நெஞ்சத்தை விரிவாக்கி அருள்வாயாக!மேலும் என் காரியங்களை எனக்கு இலகுவாக்கித்தருவாயாக!நான் கூறுவதை மக்கள புரிந்து கொள்ளும் பொருட்டு என் நாவில் உள்ள முடிச்சை அவிழ்த்து விடுவாயாக!(20:25 - 28)

31 - என் இறைவா!எனது அறிவை அதிகரிப்பாயாக!(20:14)

32 - என் இறைவா!என்னை நீ தனித்தவனாக விட்டு விடாதே!நீயே வாரிசுரிமையுடையோரில் மிகச்சிறந்தவன்.(21:89)

33 - என் இறைவா!நீ உண்மையைக்கொண்டு தீர்ப்பளிப்பாயாக!(21:112)

34 - என் இறைவா!அருள் வளம் கொண்டதோர் இடத்தில் என்னை இறக்குவாயாக!நீ மிகச்சிறந்த இடத்தை நல்கக்கூடியவன்.(23:29)

35- என் இறைவா!அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை நீ எனக்கு காண்பிப்பதாயின் என் இறைவா !அப்போது என்னை அந்த அநியாயக்காரர்களின் சமூகத்துடன் சேர்த்து வைக்காதிருப்பாயாக!(23:106,107)

36 - என் இறைவா!ஷைத்தான்களின் தூண்டுதல்களிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு கோருகின்றேன்.மேலும் என் இறைவா!அவர்கள் என் அருகில் வருவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு கோருகின்றேன்.(23:106,107)

37 - எங்கள் இறைவா!எங்கள் துர்பாக்கியம் எங்களி மிகைத்து விட்டது.உண்மையில் நாங்கள் வழி தவறிய மக்களாகி விட்டோம்.எங்கள் இறைவா!எங்களிடம் இதிலிருந்து வெளியேற்றி விடு.நாங்கள் மீண்டும் தவறு செய்தால் ,நாங்கள் மீண்டும் கொடுமைக்காரர்கள் ஆகி விடுவோம்.(23:106 - 107)

38 - எங்கள் இறைவா!நாங்கள் மீண்டும் நம்பிக்கைக்கொண்டோம்.எனவே எங்களை மன்னித்து எங்களுக்கு கருணை புரிவாயாக!கருணை புரிவோரில் எல்லாம் நீயே மிகச்சிறந்தவன்.(23:109)

39 -என் இறைவா!மன்னித்து கிருபை செய்வாயாக!கிருபை செய்பவர்களில் எல்லாம் நீயே மிகச்சிறந்தவன்.(23:118)

40 - எங்கள் இறைவா!நரக வேதனையை எங்களை விட்டு அகற்றுவாயாக!நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமான துன்பமாகும்(25:65)

41 - எங்கள் இறைவா!எங்கள் மனைவியரிடமும்,எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்கு கண்களில் குளிர்ச்சியை அளிப்பாயாக!இன்னும் பயபக்தியுடைவர்களுக்கு எங்களை வழிகாட்டி யாக ஆக்கியருள்வாயாக!(25:74)

42 - என் இறைவா!எனக்கு நீ நுண்ணறிவு திறனை வழங்குவாயாக!மேலும் என்னை உத்தமர்களோடு சேர்த்துவைப்பாயாக!மேலும் பிற்கால மக்களிடையே எனக்கு உண்மையான புகழை வழங்குவாயாக!மேலும் அருட்கொடைகள் நிரம்பிய சுவனத்தின் வாரிசுகளில் என்னையும் ஒருவனாக ஆக்கி வைப்பாயாக!(26:83 -85)

43 - என் இறைவா!என் மீதும்,என் பெற்றோர் மீதும் நீ புரிந்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்திக்கொண்டிருப்பதற்காகவும்,நீ திருப்தி படுகின்ற நற்செயலை செய்து வருவதற்காகவும் என்னை நீ கட்டுப்படுத்தி வைப்பாயாக!மேலும் உன் அருளால் என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்து வைப்பாயாக!(27:19)

44 - என் இறைவா!என் மீது நானே அநீதி இழைத்துக்கொண்டேன்.என்னை மன்னித்தருள்வாயாக!(28:16)

45 - என் இறைவா!என் மீது அருள் புரிந்ததன் காரணமாக ,நான் இனி ஒரு போதும் குற்றவாளிகளுக்கு உதவி செய்பவனாக இருக்க மாட்டேன்.(28:17)

46 - என் இறைவா!என்னை அநியாயக்கார கூட்டத்தாரிடமிருந்து காப்பாற்றுவாயாக!(28:21)

47 - என் இறைவா!நீ எனக்கு இறக்கி அருளும் நல்லவற்றின் பால் நிச்சயமாக நான் தேவைஉள்ளவனாக உள்ளேன்.(28:24)

48 - என் இறைவா!குழப்பம் செய்யும் கூட்டத்தாருக்கு எதிராக எனக்கு நீ உதவி புரிவாயாக!(29:30)

49 - என் இறைவா!நீ எனக்கு உத்தமர்களில் ஒருவரை (மகவை)தருவாயாக!(37:100)
50 - என் இறைவா!என்னை நீ மன்னிப்பாயாக!மேலும் எனக்குப்பின் எவரும் அடைய முடியாத ஓர் ஆட்சி அதிகாரத்தை எனக்கு நீ வழங்குவாயாக!நிச்சயமாக நீயே மிகப்பெரும் கொடையாளன்.(38:35)
51 - எங்கள் இறைவா!நீ உனது கருணையாலும் ஞானத்தாலும் எல்லாவற்றையும் சூழ்ந்துள்ளாய்.எவர்கள் பாவமன்னிப்புக்கோரி,உனது வழியைப் பின்பற்றினார்களோ அவர்களை மன்னிப்பாயாக!மேலும் அவர்களை நரக வேதனையில் இருந்து காப்பாற்றுவாயாக!(40:7)
52 - எங்கள் இறைவா!நீ அவர்களுக்கு வாக்களித்திருக்கும் நிலையான கவனங்களில் அவர்களையும் ,அவர்கள் மூதாதையர்களிலும்,மனைவியர்களிலும்,மற்றும் அவர்கள் சந்ததியர்களிலிலும் நன்மைசெய்தோரையும் நுழையச்செய்வாயாக!நிச்சயமாக நீயே மிகைத்தவன் ;நிச்சயமாக ஞானமிக்கவன்.(44:12)

52 - எங்கள் இறைவா!நீ அவர்களுக்கு வாக்களித்திருக்கும் நிலையான சுவனங்களில் அவர்களையும் ,அவர்கள் மூதாதையர்களிலும்,மனைவியர்களிலும் ,மற்றும் அவர்கள் சந்ததியர்களிலும் நன்மை செய்தோரையும் நுழையச்செய்வாயாக!நிச்சயமாக நீ மிகைத்தவன்;ஞானமிக்கவன்.(40:8)

53 - எங்கள் இறைவா!நீ எங்களை விட்டும் இந்த வேதனையை நீக்குவாயாக.நிச்சயமாக நாங்கள் முஃமீன்களாக உள்ளோம்.(44:12)
54 - என் இறைவா!நீ என் மீதும் என் பெற்றோர் மீதும் புரிந்த அருட்கொடைகளுக்காக நன்றி செலுத்தவும் ,உன் திருப்தியை பெறும் நற்செயலை புரியவும் நீ என்னை கட்டுப்படுத்தி வைப்பாயாக!மேலும் என்னுடைய சந்ததியையும் நல்லவர்களாக சீர் படுத்தியருள்வாயாக!நிச்சயமாக நான் உன்னிடம் பாவமன்னிப்புக்கோரி மீளுகின்றேன்.இன்னும் நான் உனக்கு முற்றிலும் சரணடைந்தோரில் ஒருவனாக உள்ளேன்.(46:15)

55 - என் இறைவா!நிச்சயமாக நான் தோல்வி அடைந்தவனாக உள்ளேன்.எனவே நீ எனக்கு உதவி புரிவாயாக!(54:10)
56 - எங்கள் இறைவா!எங்களையும் ,ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான் எங்கள் சகோதரர்களையும் மன்னித்தருள்வாயக!மேலும்,எங்கள் உள்ளங்களில் நம்பிக்கயாளர்களின் மீது பகையை ஏற்படுத்தாதே!எங்கள் இறைவா!நிச்சயமாக நீ பரிவுடையோனும் பெரும் கிருபையாளனுமாவாய்.(59:10)

57 - எங்கள் இறைவா!உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கின்றோம்.நாங்கள் உன்னையே நோக்குகின்றோம்.மேலும் உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது.(60:4)

58 - எங்கள் இறைவா1நிராகரிப்போருக்கு எங்களை ஒரு சோதனையாக்கி விடாதே!எங்கள் இறைவா!எங்கள் பாவங்கள் பொறுத்தருள்.நிச்சயமாக நீயே வல்லமை மிக்கவன்.நுண்ணறிவாளன்.(60:5)

59 - எங்கள் இறைவா!எங்கள் ஒளியை எங்களுக்கு முழுமையாக்கித் தருவாயாக!மேலும்,எங்களை மன்னிப்பாயாக!நிச்சயமாக நீ அனைத்தின் மீதும் பேராற்றல் உள்ளவன்(66:8)

60 - என் இறைவா!எனக்காக சுவர்க்கத்தில் ஒரு வீட்டை கட்டித்தருவாயாக!இன்னும் அநியாயக்கார மக்களிடம் இருந்து என்னை காப்பாற்றுவாயாக!(66:11)

61 - என் இறைவா!எனக்கும் என் பெற்றோருக்கும்,என் வீட்டில் இறை நம்பிக்கையோடு பிரவேசிப்போர்களுக்கும்,மேலும் ஈமான் கொண்ட ஆண் - பெண் அனைவருக்கும் நீ மன்னிப்பளிப்பாயாக!இன்னும் அநீதியாளர்களுக்கு அழிவைத்தவிர வேறு எதையும் அதிகரிக்காதே!(71:28)

அல்ஹம்து லில்லாஹ்!இந்த திருமறை துஆக்களை ஒரே மூச்சில் தட்டச்சு செய்து எனக்கு ஆர்வத்தை தந்த வல்ல ரஹ்மானுக்கு எல்லாப்புகழும்.என்னை அறியாது இதில் எழுத்துப்பிழைகள்,சொற்பிழைகள் இருந்தால் வல்ல அல்லாஹ் என்னை மன்னிப்பானாக.வாசிப்பவர்கள் சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்வேன்.
ஸாதிகா ஹஸனா

September 29, 2009

இறை வாழ்த்துப்பா


கீழக்கரை டவுன் காஜியும்,மரியாதைக்குறிய மாமாவும் மர்ஹூம் கே.எல்.எம் முஹம்மது இப்ராஹீம் பாஜில் நூரியீ அவர்கள் இயற்றிய இறை வாழ்த்துப்பா.என் மனம் கவர்ந்த,வல்ல இறையோனை நெக்குருகி வாழ்த்திப்பாடும் இந்த அருமையான பாடலை இந்த பிளாக்கில் பதிவு செய்து மகிழ்கின்றேன்.நீங்களும் இதனை மனனம் செய்து வல்லோனின் அருளை பெறுவீர்களாக!
இறை வாழ்த்துப்பா

ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ்
மாபி கல்பி கைருல்லாஹ்
நூருமுஹம்மது ஸல்லல்லாஹ்
லாயிலாஹா இல்லலாஹ்

அருள் மிகு இறைவா யா அல்லாஹ்
அன்பால் அணைப்பவன் நீ அல்லாஹ்
அனைத்தையும் ஆள்பவன் நீ அல்லாஹ்
அருஞ்சுடர் பரப்பும் யா அல்லாஹ்

நீயே அனைத்தையும் படைத்தருளும்
நிகரினை இல்லா நிஜப்பொருளும்
நீயே கதி எமக்கென் னாளும்
நிதமும் அருள்வாய் யா அல்லாஹ்

எங்கும் ஒளியாய் உயர்ந்திலங்கும்
எங்கள் அகத்திருள் வாய்த்துலங்கும்
என்றும் உனதருள் அன்பு பொங்கும்
எங்கள் இறைவா யா அல்லாஹ்

பார்க்கும் பொருளெல்லாம் பகரும்
பாங்காய் உந்தனை தினமுனரும்
பாக்கியபலனால் பாவம் தகரும்
பாத்திப பரம் பொருள் நீ அல்லாஹ்

உத்தம உளங்களில் திகழ்பவனே
உன்னத ஞானம் தருபவனே
ஊன் விழிகாண மிளிர்பவனே
உள்ளக ஜோதியே யா அல்லாஹ்

சார்ந்திடும் பக்தரை அணைத்திடுவாய்
சாயுச்ய பதவியில் உயர்த்திடுவாய்
சந்தமும் ஜெயமும் தந்திடுவாய்
சத்ய சத் பொருள் நீ அல்லாஹ்

பேரொழியாகிய பரம் பொருளே
பேரின்ப பாக்கிய மீதருளே
பேதம் நீங்கிய மனதினுள்ளே
பேரருள் புரிவாய் யா அல்லாஹ்

இன்புயர் இன்பத்தேனமுதம்
இறைவா உந்தன் உயர் நினைவாம்
இதயங்களுக்குத் தெளிவதுவாம்
இடம்பெற்றுணர்வூட்டும் அல்லாஹ்

உள்ளங்களுக்குள் ஒரு உயர் நாமம்
ஓங்கும் அல்லாஹ் வெனும் நாமம்
ஓதுவோம் உந்தன் திரு நாமம்
ஓர்மை மனதுடன் யா அல்லாஹ்

பொல்லா வழிதனில் செல்லாமல்
பொய்,புற,வசை மொழி சொல்லாமல்
எல்லாம் சதமெனக்கொள்ளாமல்
எங்களைக்காத்தருள் யா அல்லாஹ்

தாக்கும் பிணிகளை தகர்த்திடுவாய்
தாவும் பகைகளை தாக்கிடுவாய்
தாழ்த்தும் குறைகளை நீக்கிடுவாய்
தகை மிகு தற்பொருண் நீ அல்லாஹ்

ஆர்த்திகை அகற்றி அடியாருக்கும்
அனுதினமுந்தன் அருள் சுரக்கும்
ஆதரித்தருள் புரிவாய் எமக்கும்
ஆதி பராபொருன் நீ அல்லாஹ்

பெருக்கும் பிழைகளை பொறுத்தருள்வாய்
பேரருளால் எமை பொதிந்திடுவாய்
பேரின்ப அமுதை புகட்டிடுவாய்
பெரும் புகழ் இறைவா யா அல்லாஹ்

உந்தன் நினைவால் உயர் அடைவோம்
உந்தன் அருளால் பலனடைவோம்
உன்னிடமே நாம் சரண் அடைவோம்
உகப்புடன் அணைத்தருள் யா அல்லாஹ்

வாய்மை மிளிரும் சன்மார்க்கம்
வான்புவி எங்கும் சௌபாக்கியம்
வாழ்கவே அகங்களில் அருள் வாக்கியம்
வாழ்வினில் வளம்பெறுவோம் அல்லாஹ்

எங்கும் பொங்குக அருளின்பம்
என்றும் நீங்குக பல துன்பம்
எங்கள் அகங்களில் ஒளி பிம்பம்
என்றும் துலங்குக யா அல்லாஹ்

காழி இப்றாஹீம் நூரி
கவிகருள் ஆசி நிதம் கூறி
காருண்யனே உனதருள் வாரி
கருணை பொங்குக யா அல்லாஹ்

மாமுயர் சன்மார்க்கம் வாழ்க
மாண்புயர் நபி மணி குணம் வாழ்க
மக்கள் நல் வழி சார்பாக
மகிழ்வுடன் வாழ்க யா அல்லாஹ்

ஆமீன் ஆமீன் யா அல்லாஹ்
ஆமீன் ஆமீன் யா அல்லாஹ்
ஆமீன் ஆமீன் யா அல்லாஹ்
ஆமீன் வர்ஹம் யா அல்லாஹ்

என் ஆருயிர் பெற்றோர்களுக்கு சமர்ப்பணம்


அவனையன்றி(வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும்,பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்து இருக்கின்றான்.அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால் அவர்களை உஃப்(சீ)என்று (சடைத்தும்)சொல்ல வேண்டாம்.அவ்விருவரையும் உம்மிடத்தில் இருந்து விரட்ட வேண்டாம்.இன்னும் அவ்விருவரிடமும் கனிவான,கண்ணியமான பேச்சை பேசுவீராக!
அல்குர் ஆன்(17:23)

இன்னும் இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீர்களாக.மேலும் என் இறைவனே !நான் சிறு பிள்ளையாக இருந்த பொழுது என்னை (பரிவோடு)அவ்விருவரும் வளர்த்தது போல் ,நீயும் அவர்களுக்கு கிருபை செய்வாயாக! என்று கூறிப் பிரார்த்திப்பீராக!
அல்குர் ஆன் (17:24)