
"தோ..மாமி..வீட்டுக்கு போயிண்டே இருங்கோ..பையன் கிட்டக்க பின்னாடியே கொடுத்தனுப்பிச்சுடுறேன்”
“கிச்சா..இந்த டயலாக்கை இன்னும் எத்தினி நாழிதான் சொல்லி சமாளிச்சுண்டிருப்பே..காரடையான் நோன்புக்கு உடுத்திக்க புதுசா ஜாக்கெட் கொடுத்தேன்.இந்தா அந்தான்னு ஜவ்வு மாதிரி இழுத்துண்டு தீபாவளி போய்டும் போலும்”மாமி அலுத்துக்கொண்டாள்.
“இந்த வாட்டி கண்டிப்பா தெச்சி கொடுத்துடுறேன் மாமி.அடுத்த ஒரு மணி நேரத்தில் உங்களாத்துக்கு ஜாக்கெட் வந்துடும் .யோஜனை பண்ணாமல் போங்கோ.இதோ அனுப்பிச்சுடுறேன்.கொலு முதல் நாளே ஜம்முன்னு புதுசு கட்டி பேஷா ஜமாய்ச்சுடலாம் மாமி”
மாமி எரிச்சலுடனும் அவநம்பிக்கையுடனும் அங்கிருந்து நகன்றாள்.பித்தான் கட்டிக்கொண்டிருந்த டைலர் கிச்சாவால் பையன் என்று பாசத்துடன் அறிமுகப்படுத்தப்படும் கிச்சாவின் அஸிஸ்டெண்ட் “அண்ணே..மாமி பாவம்ண்ணே..எத்தனை நாள் அலையறா..தெச்சிக்கொடுத்துடலாம்ண்ணே”
“டேய்..உன் கழிவிரக்கத்தை ஒரு ஓரமா மூட்டை கட்டி வச்சிட்டு கடகடன்னு பித்தான் கட்டு.இந்த மாமியை சமாளிச்சுடலாம்.வக்கீலாத்தம்மா வந்தாங்கன்னா பிச்சி உதறிடுவாங்க.அவங்களை இதுக்கு மேலே சமாளிக்க முடியாது”
”ஏண்ணே..சின்ன டவுட்டு.உங்க ஹிஸ்டரியிலே சமாளிக்க முடியாதுன்னு ஒரு வார்த்தை இருக்காண்ணே?”பையன் வாயை பொத்திகொண்டு சிரித்தான்.
“டேய்..வர வர குசும்பு ஜாஸ்தியாயிடுச்சுடா உனக்கு”கழுத்தில் கிடந்த் டேப்பை எடுத்து செல்லமாக வீசி அடித்தான்.
கிச்சா டெய்லர்ஸ் என்று துரு பிடித்த போர்டுடன் கூடிய அந்த தையலகம் அந்த ஏரியாவில் பிரபலம்.துணி மலைகளுக்கிடையே நடுவில் மெஷின் வைத்து தைத்துக்கொண்டிருப்பான்.ஓரத்தில் அஸிஸ்டெண்ட்.காதிடுக்கில் பென்ஸிலும்,கழுத்தில் இன்ச் டேப் சகிதமாக கண்ணும் கையும் காரியத்தில் ஈடு பட்டுக்கொண்டிருந்தாலும் தலைக்கு மேலே சோம்பல் பட்டுக்கொண்டு லொட லொடவென்றுஓடிக்கொண்டிருக்கும் ஒளரங்கசீப் காலத்து மின்விசிறிக்கு போட்டி போட்டுக்கொண்டு வாயால் லொடலொடத்துக்கொண்டு இருப்பது கிச்சாவின் டிரேட் மார்க்.
உதவிக்கு இன்னொரு மெஷின் வாங்கிப்போட்டு இன்னொரு ஆளை வைத்து தைப்பதற்கு மனமில்லாமல் ஏகப்பட்ட ஆர்டர்களுக்கு ஒப்புக்கொண்டு குறித்த நேரத்தில் தைத்துக்கொடுக்காமல் வாடிக்கையாளர்களை சமாளிப்பதில் வடிகட்டிய கில்லாடி.
அந்த ஏரியா இளவட்டங்களுக்கு கிச்சா கடை வாசல் போர்டு தொங்கவிடப்படாத சங்கம் பிளஸ் இளைஞர் மன்றம்.அரட்டை கச்சேரிகளில் வாயும் காதும் ஈடு பட்டு இருந்தாலும் கையும் காலும் கண்களும் காரியத்தில் மும்முரமாக ஈடு பட்டுகொண்டிருக்கும்
“எலே ..கிச்சா..இப்படி அரட்டை அடிச்சுட்டே தைத்தால் நாப்பது சைஸ் ஜாக்கெட் தைப்பதற்கு பதில் முப்பத்திரெண்டு சைஸில் தைத்து கஸ்டமர் கிட்டே வாங்கி கட்டிக்கப்போறே”
இப்படி யாராவது கேட்டால் கிச்சாவுக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்துவிடும்.
“என்னாது..கிச்சாவை என்னான்னு நெனைச்சே...பத்து வயசிலே அய்யணார் அண்ணேகிட்டே வேலைக்கு சேர்ந்தேன்.பதிமூணு வயசிலே மிஷின் முன்னாடி உக்காந்துட்டேன்.இந்த புரட்டாசி வந்தால் ஆச்சு நாப்பத்தேழு.முப்பத்தேழு வருஷ சர்வீஸில் ஒரு பழுது பார்த்திருப்பே..”
இப்படி சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுதே மளிகைக்கடை வீட்டம்மா முகமெல்லாம் சிவக்க கோபம் கொப்புளிக்க வந்தாள்.
“வாங்கக்கா வாங்க..நேற்றே உங்கள் ஜாக்கெட்டெல்லாம் தெச்சி கொடுத்தனுப்பிட்டேனே.”
“ஜாக்கெட் தச்சி இருக்கற லட்சணத்தைப்பாரு.’ப’ கழுத்து வைக்க சொன்னால் ‘யு’கழுத்து வச்சி இருக்கே.ஜாக்கெட் தந்த அளவை விட நாலு இஞ்ச் பெரிசா தச்சி இருக்கே.நல்லா தாரளமா இருக்கட்டுன்னுதானே முக்கால் மீட்டருக்கு பதில் ஒரு மீட்டரா எடுத்துக்கொடுத்தேன்.அப்பவும் உள்ளுக்குள் ஒட்டு போட்டு அசிங்கப்படுத்திட்டே..”
“யக்கா..யக்கா..நான் ஐடியாவோடத்தான் தைத்து இருக்கேன்க்கா.நீங்க வாங்கி இருக்கின்ற துணி சரி இல்லை.ஒரு வாஷ் போட்டீங்கன்னா சுருங்கிடும்.வாஷ் பண்ணிட்டு அப்புறம் சொல்லுங்க.கிச்சா எப்படி தைத்து இருக்கான்னு..”
“இதுவா மட்டமான துணி?நான் என்ன பிட் துணியா எடுத்தேன்.டவுனுக்கு போய் மீட்டர் நூறு ரூபாய்க்கு எடுத்து வந்ததாக்கும்.”
கோபம் குறையாமல் கத்தினாள்.
“பர்ஸ்டு குவாலிட்டின்னு உங்களுக்கு செகண்ட் குவாலிட்டி கொடுத்து எவனோ ஏமாத்திட்டான்க்கா.முப்பத்தேழு வருஷ சர்வீஸ்.துணிமணி பற்றிஎனக்கு தெரியாதா என்ன?”
“சரி ப கழுத்துதானே வைக்க சொன்னேன்.எதுக்கு யு கழுத்து வச்சே”
“ஹா.ஹா..யக்கா...அதான் சொல்லுறேனே மட்டமான துணி ப கழுத்து வச்சேன்னா குறுக்காலே அப்படியே கிழிஞ்சுடும்.யு கழுத்துன்னா அப்படியே இருக்கும்.நான் என்ன கூலிக்கு மாரடிக்கறவனாக்கா.ஒவ்வொரு கஸ்டமருக்கும் தைக்கும் பொழுது என் சொந்த உபயோகத்துக்கு தைக்கிற மாதிரியில்ல சிரத்தை எடுத்து தைக்கிறேன்..என்னைப்போய்..”
கிச்சாவின் அனுசரனையான பேச்சிலேயே ஓரளவு கூலாகிய மளிகைகடை வீட்டம்மா இன்னும் விட மனதில்லாமல் சற்று சுருதி குறைந்த தொணியில் “அப்ப எதுக்கு உள்ளுக்கு வேறு துணியாலே ஒட்டு போட்டு இருக்கே.பார்க்கவே அசிங்கமா இருக்கு”
“ஐயோ யக்கா...எந்த கடையிலே எடுத்தீங்க..உங்களை நல்லா ஏமாத்திட்டான்.நான் அளந்து பார்க்கும்பொழுது என்பது செண்ட் தான் இருந்தது.இனிமேல் ஜாக்கெட் பீஸ் வாங்கும் பொழுது வீட்டுக்கு வந்து அளந்து பாருங்க”
ஞாபகக்குறைவில் தவறுதலாக வெட்டிய உண்மையை ஒப்புக்கொள்ளவா முடியும்?
சட்டையை கிச்சாவிடமே கடாசி விட்டு வந்து விட வேண்டும் என்று ஆக்ரோஷத்துடன் வந்தவள் மேலே ஏதும் பேசாமல் பர்ஸை திறந்து பணத்தை எடுத்து தந்து விட்டு ஜாக்கெட்டை திரும்ப வாங்கிகொண்டு சென்றவளை வெற்றிகரமாக பார்த்தான் கிச்சா.
”அண்ணே..அந்தம்மாவுக்கு பித்தான் கட்டும் பொழுதே கேட்டேன்.இப்படி சொதப்பிட்டீங்களே.அந்தம்மாவிடம் வாங்கி கட்டிக்கப்போறீங்கன்னு”
“டேய்..படவா..சும்மா வாய் பேசிட்டு இருக்காமல் சட்டுன்னு பித்தானை கட்டுடா.அதுக்கு முன்னாடி நாயர் கடையிலே ஸ்ட்ராங்கா ரெண்டு டீ வாங்கிவா”
“அண்ணே..இந்நேரம் கடையிலே சூடா நண்டுக்கால் போண்டா போடுவாங்கண்ணே”
“டேய்..இன்னிக்கு அமாவாசை.நண்டுக்காலும் தின்ன மாட்டேன்.திமிங்கலக்காலும் தின்ன மாட்டேன்”
“அண்ணே திமிங்கலத்துக்கு கால் இருக்குமாண்ணே..நண்டுகால்ன்னா வெங்காயத்தை நண்டுக்கால் போல் நீள நீளமா வெட்டிப்போட்டு முறுகலா போண்டா போடுவாங்கண்ணே”
“சரி சரி..போய் சீக்கிரமா வாங்கி வந்துட்டு வேலையை ஆரம்பி”
நண்டுக்கால் போண்டா சாப்பிடும் ஆசையில் பையன் துள்ளிக்கொண்டு ஓடினான்.
பேச்சுத்துணைக்கு ஆள் இல்லாமல் மெஷினை கட கடவென்று ஒட்டிக்கொண்டு இருந்த பொழுது இரைச்சலாக வந்து சேர்ந்தார் பாஷாபாய்.
“என்னய்யா கிச்சா..உன் மனசிலே என்ன நினைத்துட்டு இருக்கே.”
“வாங்க பாய்..சிங்கப்பூரில் இருந்து சவுகரியமா வந்து சேர்ந்தீகளா”
“ம்ம்..அதெல்லாம் நல்ல படியா வந்து சேர்ந்தாச்சு.இதென்னா..என்ன தைத்து இருக்கே”
துணி மூட்டையை விசிறி அடித்தார்.தோணி பாய்ந்து பந்தை பிடிப்பதுபோல் லாவகமாக கீழே விழாமல் கேட்ச் செய்த கிச்சா “பாய் சூடா இருக்கறமாதிரி இருக்கு”சிரித்தான்.
“பின்னே என்னய்யா..என்பொண்ணு அனார்கலி சுடிதார் வேணுமுன்னு ஆசை ஆசையா சிங்கப்பூரில் இருந்து துணி வாங்கியார சொன்னாள்.அனார்கலி தைக்க சொன்னால் ஆர்ட்னரி தைத்து இருக்கே..வர வர..தொழிலில் கவனமே இல்லாமல் போச்சு.சொல்லுற விதமா தைப்பதே இல்லை”
“பாய்..பாய்..என்ன பாய் இப்படி சொல்லிபுட்டீஹ..இந்த துணிக்கு அனார்கலி மாடல் தைத்தால் நல்லா இருக்காது..”
“இந்த துணியில் தைத்தால்தான் நல்லா இருக்கும்ன்னு சொல்லி வாங்கி வரசொன்னாள் என் பொண்ணு.சும்மா இல்லை.மீட்டர் பனிரெண்டு வெள்ளிக்கு வாங்கி வந்தேன்.இப்படி சொதப்பிட்டியே”
“எனக்கு தெரியாதா பாய்.பாய் என்ன ஒரு வெள்ளிக்கு ரெண்டு மீட்டர் வாங்கற ஆளா?துணி எத்தனி உசத்தின்னு தொட்டுப்பார்த்தாலே தெரியுமே.பாருங்க..லேசுலே யாருக்கும் போட மாட்டேன்.எக்ஸ்போர்ட் குவாலிடி நூலு..சும்மா மாஞ்சா கயிறு மாதிரி இருக்கும்.பித்தானை பாருங்க.செம்புலே வாங்கி போட்டு இருக்கேன்.சாதரணமா ஸ்டீல் ஹூக்தான் போடுவேன்.உங்களுக்குன்னு ஸ்பெஷல்..துணி கிழிந்தாலும் ஹூக் அறுந்துபோகாது”
“அதெல்லாம் சரிதான்..அனார்கலிக்குபதில் ஏன்யா ஆர்ட்னரி தைத்து இருக்கே”
“அதானே சொன்னேனே பாய்..இத்தனை ஒசத்தி துணியிலே அனார்கலி மாடல் தைத்தால் நல்லா இருக்காது பாய்.பொண்ணுக்கு விருப்பமா இருந்தால் சொல்லுங்க...நான் டவுனுக்கு போறச்சே நல்ல துணியா பார்த்து நானே பொருத்தமான துணி வாங்கி வந்து அனார்கலி மாடல் தைத்து தர்ரேன்.”
“அதை எங்க கிட்டே கேட்டுட்டு அப்புறமாக தைத்து இருக்கணும்.அதை விட்டுட்டு உன் இஷ்டத்திற்கு தைத்து இருக்கே.”
“ஐயோ..கேட்காமல் இருப்பேனா பாய்.நம்ம துணியை வெட்டுவதற்கு முன்னாடி பையன் கிட்டே கேட்டு அனுப்பத்தான் செய்தேன்,வீடு பூட்டி இருந்ததுன்னு வந்துட்டான் பாய்.லேட்டானால் சப்தம் போடுவீங்களேன்னு நானே தைக்க ஆரம்பித்துட்டேன்.கோவிச்சுக்காதீங்க பாய்”
“என்ன எழவோ போ..என் மவளை சமாளிக்கறதுக்குள்ளே நெஞ்சுதண்ணி காஞ்சி போகுது”விசிறி அடித்த துணியை திரும்பி வாங்கிக்கொண்டு நடையைக்கட்டினார் பாஷாபாய்.
‘உஸ்ஸ்ஸ்ஸ்..அப்பா..’வெற்றிகரமாக சமாளித்துவிட்ட தெம்பில் மீண்டும் மெஷினை ஓட்ட ஆரம்பித்தான்.
பாஷா பாய்வீட்டில் இருந்து தைக்க வந்த துணியை பார்த்ததுமே கிச்சாவின் மனைவி துணியின் வழ வழப்பிலும் பள பளப்பிலும் தரத்திலும் டிஸைனிலும் நிறத்திலும் ஈர்க்கப்பட்டு கணவனிடம்”என்ன செய்வியோ ஏது செய்வியோ.நான் ஊருக்கு போவதற்கு முன்னாடி என் தங்கச்சி மகளுக்கு சின்ன கவுன் இந்த துணியில் தைத்தே கொண்டுபோய் கொடுத்தே ஆகணும்.இந்த துணியில் என் தங்கை மகளுக்கு கவுன் தைத்துப்போட்டே ஆகணும்”என்று வழக்கம் போல் கடும் கட்டளை போட்டதை மறுக்க முடியாமல் யோசித்ததின் விளைவுதான் அனார்கலி ஆர்ட்னரி ஆகி விட்டது.
“அண்ணே..நண்டுக்கால் போண்டாண்ணே..சூடா சாப்பிட்டுட்டு டீயை குடிங்கண்ணே”
பசி வயிற்றை கிள்ள ஆவலுடன் போண்டாவை வாங்கி சாப்பிட ஆரம்பித்தான் கிச்சா.
“அண்ணே..போண்டா நல்லா இருக்காண்ணே..இன்னும் நாலு வாங்கிவரவா?நல்லா சாப்பிட்டீங்கன்னாத்தான் இனிமே வர்ர கஸ்டமரை தெம்பா சமாளிக்க முடியும்”சொல்லி விட்டு வாயை கைகளால் மூடிக்கொண்டு சிரித்த பையனை இன்ச் டேப்பால் அடிக்க கையை ஓங்கினான் கிச்சா.
Tweet |