டாக்டர்.ரஹ்மத்துன்னிஷா ரஹ்மான்
******************************************
ஈ டி ஏ குழுமத்தலைவர் அல்ஹாஜ் பி.எஸ் அப்துர்ரஹ்மான் அவர்களின் துணைவியாரும்,கீழக்கரை யூசுப்சுலைஹா மருத்துவமனை சேர்மனும் இன்னும் பற்பல பதவிகள் வகித்து ,சிகரங்கள் தொட்டும் பண்போடும்,அடக்கத்தோடும்,அன்போடும்,கருணையோடும்,எளிமையோடும் அனைவரிடமும் பழகும் பெண்மணி.கீழைநகரின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்பவர்.மருத்துவத்துறையில் மட்டுமின்றி,சமூகத்திலும்,அதன் வளர்ச்சியிலும் அதீத ஈடுபாடுகாட்டி வருபவர்.என் எழுத்துக்கு ஊக்கமெனும் மருந்துதந்தவர்.அன்பு லாத்தா ரஹ்மதுன்னிஷா அவர்களைப்பற்றி இந்த மகளிர் தின இடுகையின் மூலம் பெருமிதத்துடன் பகிர்ந்துகொள்கின்றேன்.
டாக்டர்.நஃபீஷா கலீம்
***********************
தலைசிறந்த இலக்கியவாதி,அந்தக்காலத்திலேயே ஒரு மீட்டர் நீளத்திற்கு பட்டங்கள் வாங்கி குவித்த அறிவுக்களஞ்சியம்,எழுத்தாளர்,பேச்சாளர்,திறமையான கல்வியாளர்,நிரவாகத்திறன் கொண்ட கம்பீரமான நிர்வாகி,கல்லூரியின் முதல்வர் இப்படி அனைத்திலும் நிகரற்று ,சகலகலா வல்லவராக விளங்கிய சாதனைப்பெண்மணி இனிய ஆண்ட்டி நஃபீஷா அவர்கள்.என் பாட்டியின் உற்ற நண்பியும்,எங்கள் குடும்ப நண்பருமான இவர் எனக்கு அறிமுகமானதே தன் நடுத்தர வயதைத்தாண்டிய பின்னர்தான்.அப்பொழுதே இவரது திறமை,அறிவு,கம்பீரம்,பேச்சாற்றல்,சிந்தனைத்திறன்,சமூக அக்கரை,பிரம்மிக்க வைக்கும் அழகு,ஆளை அசத்தும் நிறம் அனைத்தையும் கண்டு பெரு(மூச்சு)மை பட்டுஇருக்கிறேன்.கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் முதல்வராக,எல்லாமுமாக இருந்து ,கல்லூரியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து முதல்வர் பதவியை அலங்கரித்தவர்.கூட்டத்தில் எங்கிருந்தாலும்,எத்தனை பிசியாக இருந்தாலும் என் தலை கண்டதும் வாஞ்சையோடு உச்சிமுகரும் அவரின் தாய்மைஉணர்வு இப்பொழுதும் நெகிழவைக்கும்.கடைசியாக ஓரிருவருடங்களுக்கு முன் இம்பீரியல் ஹோட்டலில் நடந்த ஒரு கருத்தரங்கில் அவரை சந்தித்து பேசியதுதான்.இப்பொழுது எங்கிருக்கின்றார் என்பது தெரியவில்லை.அன்பு ஆண்ட்டி,இப்போ நீங்க எங்கே இருக்கின்றீர்கள்?உங்கள் நலம் அறிய பேராவல்.(ஆண்ட்டியின் புகைப்படம் கிடைக்க வில்லை.ஆதலால் ரோஜாவைப்போல் அழகாகவும்,மென்மையாகவும் இருக்கும் இந்த ரோஜாபடம் பொருந்தும்தானே?)
டாக்டர்.கிரேஸ்ஜார்ஜ்
************************
தன் தந்தையால் சிறிய அளவு ஆரம்பிக்கப்பட்ட பள்ளி கணவரால் விரிவுபடுத்தப்பட்டு,அவரது மறைவுக்குப்பின் தட்டித்தடுமாறி நிர்வாகத்தை தானே ஏற்று ,திறன் பட கல்வி நிறுவனத்தை நடத்தி.இன்று ஆலமரமாய் ஆல்பா பொறியியல் கல்லூரி,ஆல்பா ஆர்ட்ஸ்&சைன்ஸ் கல்லூரி.பள்ளியின் கிளைகள்,டாக்டர் கிரேஸ்ஜார்ஜ் மருத்துவமனை என்று மங்காப்புகழுடன் கல்வியறிவைபுகட்டிவரும் சாதனைப்பெண்மணி.சென்னை நந்தனத்திற்கே லேண்ட் மார்க்காக திகழும் ஆல்பா மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி கல்வி உலகிற்கு ஒரு கலங்கரை விளக்கம்.
சரீஃபா அஜீஸ்
******************
கீழை நகர் பிரமுகரும்,சிறந்த கல்வியாளரும்,ஈடிஏ குழுமத்தலைவரின் குடும்ப அங்கத்தினரும்,சென்னை நுங்கம்பாக்கம் கிரஸண்ட் பெண்கள் பள்ளியின் டைரக்டரும்,முதல்வரும்,பள்ளியின் அபார வளர்ச்சிக்கும்,சிறப்புக்கும்,மாணவிகளின்சீரிய ஒழுக்கத்திற்கும் வித்திட்டு அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து அயராது,சிறப்புற பள்ளியின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றிவரும் கண்ணியப்பெண்மணி சரீஃபா அஜீஸ் அவர்கள் என்றால் மிகைஆகாது.ஊடகங்களில் அடிக்கடி வலம் வரும் பெண்மணி ஆகையால் அனைவரும் அறிந்திருக்கும் வாய்ப்பு அதிகம்.அறிவுப்பூர்வமான செயல்பாடுகள்,,எப்பொழுதும் கல்வியைப்பற்றிய சிந்தனை,அதற்கான பாடுபடல்,அசாத்திய ஞாபகசக்தி,கம்பீரம் அனைத்தையும் இவரிடம் கண்டு வியந்திருக்கின்றேன்.
டாக்டர்.கீதா ஹரிப்பிரியா
*******************************
மலடு என்ற சொல் அகராதியில் இல்லாதவாறு செய்வதற்கு வழிவகுத்துக்கொண்டிருப்பவர்.செயற்கைமுறை குழந்தை மருத்துவத்தில் சாதனை படைத்து சென்னையில் தன்னிகரில்லா இடத்தில் இருப்பவர்.சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் பிரஷாந்த் மருத்துவமனையின் உரிமையாளர்.குழந்தை நாடி வெளிமாநிலங்களில் மட்டுமல்லாமல்,வெளிநாடுகளிலும் இருந்தும் வந்து தங்கி சிகிச்சை பெற்று.கை கொள்ளாமல் ஒன்று,அல்லது ஒன்றுக்குமேற்பட்ட குழந்தைகளை கைநிறைய சுமந்துகொண்டு சொந்த ஊருக்கு மகிழ்ச்சியாக திரும்பும் வயது முதிர்ந்த பெற்றோர்கள் ஏராளம் ஏராளம்.காலையில் முழுக்க மருத்துவ உடையில் சுறுசுறுப்பாக வலம் வரும் இவர் இரவு பளிச் என்ற பாட்டாடை அணிந்து பரவசமாக, சிகிச்சைக்குவருபவர்களுக்கு நடுநிசிவரை தனது கன்ஸல்டிங் அறையில் இருந்து மருத்துவம் பார்க்கும் சுறுசுறுப்பு அலாதியானது.இத்தனை பிசியிலும் ஒவ்வொரு நோயாளியிடமும் தனிப்பட்ட கவனம் செலுத்துதல்,அந்யோன்யம்,அன்பான பேச்சு,பொறுமையுடன் சந்தேகம்தீர்த்தல் அனைத்தும் இவரின் குணாதிசியங்கள்.இவரின் சுறுசுறுப்பும்,அயராத உழைப்பையும் பார்ப்பவர்கள் வியக்காமல் இருக்க இயலாது.24 மணி நேரத்தில் நாண்கு மணிநேரம் கூட ஓய்வு எடுப்பாரா என்பது சந்தேகமே.இந்த மங்கா உழைப்பு இவருக்கு இறைவன் கொடுத்த வரம்.
அனுராதாரமணன்
*********************
எல்லோரும் அறிந்த பிரபல எழுத்தாளர்.இவரைப்பற்றி நான் அதிகம் சொல்லத்தேவை இல்லை.என் பதிம வயதில் இவரது எழுத்துக்கள்தாம் என்னுள் எழுத்தார்வத்தை,ஒரு அழகிய,சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தியது.அன்று முதல் இன்று வரை அதே இளமையுடன் இருந்து எழுத்திலும் இளமையை தக்க வைத்து என்னை அசத்திய அபூர்வபெண்மணி.நூல்கள் படிக்கும் ஆவல் இப்போது எனக்கு குறைந்தாலும்,அனுராதாரமணனின் எழுத்துக்கள் படிப்பதில் ஆர்வம் இதுவரை குறைந்ததில்லை. ,சுண்டல் கட்டித்தரும் பேப்பரில் அவரது எழுத்துக்கள் இருந்தால் கூட விடுவதில்லை.
சுமையா தாவூத்
******************
கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் கல்லூரி ஆரம்பித்த புதிதில் ஒரு மாணவியின் தோற்றத்தில் கல்லூரியின் விரிவுரையாளராக நுழைந்ததில் இருந்து எனக்கு இவரைத்தெரியும்.இவரது திறமையாலும்,உழைப்பாலும்,பயிற்றுவிக்கும் பாங்கினாலும் ஹெச்.ஓ டி ஆக வளர்ந்து,இன்று முதல்வராக மிளிர்ந்து இப்போது கல்லூரிவளர்ச்சிக்காக பாடுபடுகிறார்.இவரது ஆரம்ப கட்ட வளர்ச்சியை அருகிலிருந்தே பார்த்தவள் நான்.பழகுவதற்கு இனிய ஸ்நேகிதி.
டிஸ்கி
*******
கையில் பொம்மையுடன் பொக்கைவாய் சிரிப்புடன் நிற்கும் இந்த கு(சு)ட்டிப்பொண்ணும் 'பளிச்'தான்.ஹி..ஹி..ஹி..