வல்லிம்மா
வல்லிம்மாவை அறியாத பதிவர்கள் இருக்க முடியாது.சாந்தமான முகம் போலவே அவரது எழுத்துக்களும் மெல்லிய இறகால் மேனியை வறுடுவது போல் மனதை வறுடும்.பதிவின் இறுதியில் ”எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்”என்ற அவரது வாழ்த்தை வாசிக்கும் பொழுது மனம் உண்மையில் பரவசப்பட்டுத்தான் போகும்.
2006 ல் இருந்து நாச்சியார் , புகைப்படப்பயணங்கள் என்ற வலைப்பூக்களில் எழுதி வருகின்றார்.அவரது வலைப்பூக்கள் அவருக்கு ஒரு டைரி.வாழ்வின் இனியதருணங்களையும் சோக தருணங்களையும் பரிமாறி வாசிப்பவர்களை தன் குடும்பத்தின் ஒரு அங்கத்தினராக்கி விடுவது வல்லிம்மாவுக்கு கை வந்த கலை.இனிய அனுபவங்களை பகிரும் பொழுது ஒரு எழுத்து விடாமல் படிக்கத்தோன்றுமளவுக்கு சுவாரஸ்யமும் படிப்பினையும் கொட்டிக்கிடக்கும்.
இவருடனான முதல் சந்திப்பு 2012 ஆகஸ்ட் மாதம் சென்னை மேற்கு மாம்பலம் புண்ணியகோடி திருமணமண்டபத்தில் நடைபெற்ற பதிவர் மாநாட்டில் நிகழ்ந்தது.
பளிச்சென்ற கம்பீரத்தோற்றம், இவருக்கு கன்னம் வலிக்காதா என்று தோன்றுமளவுக்கு எப்பொழுதும் புன்னகை ததும்பும் மிகவும் சாந்தமான முகம்,அனைவரையும் கைகளைப்பிடித்துக்கொண்டு மிக வாஞ்சையுடன் பேசும் பாங்கு,..இப்படி பல சொல்லிக்கொண்டே போகலாம்.இந்த ஈர்ப்பு என்னை திரும்பிப்பார்க்க வைத்தாலும் நானாக போய் பேச தயக்கம் காட்டிக்கொண்டு இருந்த பொழுது பெரியவராக இருந்தாலும் அவராகவே தன்னை என்னிடம் அறிமுகப்படுத்த ஆரம்பித்த பொழுது அவரது உயரிய பண்பு எனக்கு மிகவும் பிடித்துப்போனது.என்னிடம் மட்டுமல்ல வயது வித்தியாசமின்றி அனைத்துப்பதிவர்களிடமும் நெடு நாள் பழகியது போல் நட்புகொள்ள ஆரம்பித்தது அனைவரையும் கவர்ந்தது.தொலை பேசியில் உரையாடும் பொழுது கூட இதே பாணிதான்.வார்த்தைகள் மயிலிறகால் வருடுவதைப்போல் என்பார்களே அதனை இவரிடம் தான் கண்டேன்.
ஒரு பை நிறைய மல்லிகைப்பூவை கொண்டு வந்து பெண் பதிவர்கள் அனைவருக்கும் விநியோகம் செய்தது அனைவரையும் புன்னகைக்க வைத்தது.
வல்லிமாவின் எண்ணங்களை பத்து கேள்விகளில் அடக்க முடியாவிட்டாலும் அனுபவசாலியின் இந்த பதில்கள் நல்லதொரு அறிவுரைகளாக இருக்கும். என் கேள்விகளுக்கு வல்லிம்மா அளித்த பதில்கள் இதோ...
1.பெண்கள் படிக்க வேண்டிய பாடம் என்ன?
முதலில் பொறுமை. அதிக அளவில் கோபம் வரும்போது பொறுமை இல்லாவிடில் செய்ய வேண்டிய வேலைகளில் கவனம் குறையும். சினம் மட்டும் எஞ்சி இருக்கும். சினம் எப்போது வருகிறது. வேறு யாராவது நம் அபிப்பிராயத்துக்கு எதிராகப் பேசும்போது. அதனால் அந்த வேளையில் அமைதியாக இருந்துவிட்டால் போதும். வாக்குவாதங்கள் குறையும். எதிராளியும் நம் பேச்சைக் கேட்க தயாராக இருப்பார். இது என் அபிப்பிராயம்
2.உங்கள் பிள்ளைகளுக்கு அடிக்கடி கூறும் அறிவுரை எது?
ம்ம்ம் அவர்கள் பெரியவர்கள் ஆகி ரொம்பநாட்கள் ஆகிறது. இருந்தாலும் என் அம்மா எனக்குச் சொன்னதை அவர்களிடம் சொல்வேன். வாழ்க்கையில் பாதிக் குழப்பங்கள் மற்றவர்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளாமல் போவதுதான். நீங்கள் அவர்கள் நிலைமையில் இருந்து யோசிக்கணும். அப்போழுது உங்களுடைய ரீஆக்ஷன் எப்படி இருக்கும் என்று யோசிக்க வேண்டும். அப்பொழுதுதான் புரியும்.எடுத்தோம் கவிழ்த்தோம் என்று ஒரு விஷயத்தையும் செய்யக் கூடாது. இதை அவர்கள் நன்றாகவே கடைப்பிடிக்கிறார்கள்.என்னைவிட நல்ல மனிதர்களாகவே இருக்கிறார்கள்.
3.அப்பா - மகன் உறவு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?
இரண்டு பக்கமும் பாசமும் அதைத் தொடர்ந்து புரிதலும் இருந்துவிட்டால் பிரச்சினையே இல்லை. எங்களைப் பொறுத்தவரைக் குழந்தைகளின் சுதந்திரத்தில் தலையிட்டதே இல்லை . அவர்களாகத் தேர்ந்தெடுத்துப் படித்தார்கள். அதற்கு வேண்டும் என்கிற உதவியை நாங்கள் செய்தோம். மணமாகும் வயது வந்தபோதும் அவர்கள் தேர்ந்தெடுத்த பெண்களையே மணம் முடித்து வைத்தோம். அவர்களும் கட்டுப்பாடு மீறாமலயே எங்கள் கலாச்சாரப்படித் திருமணம் செய்து கொண்டார்கள்.....இறைவன் காக்க வேண்டும். தந்தை மகன் உறவுக்கு எடுத்துக்காட்டு என் கணவரும் பிள்ளைகளும்.
4.வாழ்வில் சோகமயமான சூழ்நிலை ஏற்படும் பொழுது நம்பிக்கை கொள்ளச்செய்யும் செயல்கள் எது என்று நினைக்கின்றீர்கள்.
சோகம் தாக்கும் போது முதலில் பிரமிப்பு.அதிர்ச்சி.பிறகு நம்மால் ஆவது ஒன்றும் இல்லை என்ற முடிவு. இந்த மாதிரி சூழ்நிலைகள் நான்கு தடவை வந்துவிட்டன. எல்லாச் சூழ்நிலைகளிலும் இறைவனையே பிடித்துக் கொண்டேன். அவன் நாமம்தான் உதவியது. உதவி செய்யும் உறவினர்கள், அரவணைக்கும் மகளும் மகன்களும். இதை இறைவன் கொடுத்தார். அதையும் மீறி இழப்பு என்னைப் பாதிக்கும் நேரம் மனம் கொண்ட மட்டும் அழுதுதீர்த்துவிடுவேன். தெளிவு கிடைத்ததும் கடிதங்களாக எழுதுவேன். இப்போது பதிவுலகில் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் பாக்கியம் கிடைக்கிறது. இந்த நட்புகளையும் கொடுத்தவன் இறைவனே.
5.உங்கள் கணவரை குறிப்பிடும் பொழுது சிங்கமென்ற கம்பீரமான பெயரை உபயோகின்றீர்கள் அதன் காரணத்தை அறிந்து கொள்ளலாமா?
பதிவுகள் ஆரம்பித்த போது பெயரைச் சொல்வதில் தயக்கம். பிறகு தெளிவு. அவர் பெயரிலேயே சிங்கம் இருப்பதால் ,அவரைப் பற்றிக் குறிப்பிடும் போது வீட்டு எஜமானர் என்றோ சிங்கம் என்றோஓ குறிப்பிடுவது வழக்கமாகி விட்டது. இப்போது எல்லோருக்கும் சிங்கமாகி விட்டார். என்னைப் பொறுத்தவரையில் அவருடைய குணநலன்களுக்கு அந்தப் பெயர்தான் சரி. சிங்கமாகவே இருந்தார்.சிங்கமாகவே மறைந்தார்.
6.கலாச்சாரம் என்பது என்ன?
என்னைப் பொறுத்தவரை அன்புதான் கலாச்சாரம். கலாச்சாரப் போர்வையில் மற்றவர்களைத் துன்புறுத்துவது சரியான மற்றவர்களைத் துன்புறுத்துவது சரியான கொள்கை இல்லை. வாழு வாழவிடு என்று இருக்க வேண்டும். எல்லோரும் இதை மதித்தால் போதும். கலாச்சாரம் தன்னைத்தானே பார்த்துக்கொள்ளும்.
7.பல நாடுகள் சென்று வந்து இருக்கின்றீர்கள்.உங்களுக்கு பிடித்த நாடு ஒன்றினை குறிப்பிடுங்களேன்.காரணம் என்ன?
நம்நாடுதான் முதல். இங்கே இருக்கிற சுதந்திரம் வேறெங்கும் கிடைக்காது. அதைவிட்டால் அரபு நாடுகளில் துபாய். . கைகள் நிறையப் பணமும் மற்றவர்களிடம் மரியாதையும் இருந்தால் எந்த நாட்டிலும் சுகமாக இருக்கலாம்.நட்பு மனம் வேண்டும்.
8.உங்களின் முக்க்ய பொழுது போக்கு?
இசை. படிப்பு, இணையம்.வாழ்க்கை குழந்தைகளோடு......
9.இணையத்தில் பல ஆண்டுகளாக எழுதி வருகின்றீர்கள்.எப்போதாவது சலிப்பு ஏற்பட்டுள்ளதா?
இல்லை. சலிப்பு என்பதே இல்லை. என் எழுத்து இல்லாவிடில் எப்போதோ முடங்கி இருப்பேன். பிரமாதமான எழுத்துக்குச் சொந்தம் என்று சொல்ல மாட்டேன். என்னுடைய மறுபாகமாக எழுத்து இருந்து வருகிறது. சலிப்பும் வராது.அருமை நட்புகளின் பதிவுகள் கூட வருகையில் நேரம் கிடைத்தால் போதும் என்ற நிலையில் தான் இருக்கிறேன்.
10.இறுதியாக உங்கள் சிங்கம் பற்றிக்கூறுங்களேன்.
என்னவென்று சொல்வது. 47 வருட தாம்பத்தியம். எத்தனையோ மேடுகள் பள்ளங்கள். அவர் ஒருவர் இருந்ததால் தாண்டி வந்தேன். என் காவலர், கணவர்,அன்பர். எந்த நிலைமையையும் சமாளிக்கும் திறமை கொண்டவர். யாருக்கும் பயந்ததில்லை. யாரையும் துன்புறுத்தியதில்லை.. நிறைய சொல்லலாம். மீண்டும் இழப்பு என்னை உறுத்த ஆரம்பிக்கும்.
அன்பு ஸாதிகா எனக்குப் பேச ஒரு ஆரம்பம் கொடுத்தீர்கள். உங்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள். பதிவுலக அன்பு நட்புகளுக்கும் என் நன்றி. இனி வெளியுலக வாழ்க்கையில் என் தூண்கள் அவர்கள் தான்.
மிக்க அன்புடன்,வாழ்த்துகளுடன்,
வல்லிம்மா என்கிற ரேவதி நரசிம்ஹன்
Tweet |