Showing posts with label உணவகம். Show all posts
Showing posts with label உணவகம். Show all posts

September 20, 2013

சரவணபவன்


வெங்கட் நாராயணா சாலை பக்கம் சென்ற பொழுது சரவணபவன் வாசலில் குலைவாழைகள் தலை சாய்த்து,தோரணங்கள் காற்றில் ஆட  அந்த பக்கம் செல்பவர்களை எல்லாம் வாங்க  வாங்க என்று அழைத்துக்கொண்டிருந்தன.உட்பகுதியில் போர்வீலர்களும்,வெளிப்பகுதியில் டூவிலர்களும் ஏதோ விழாவோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டது. சரவணபவனில்  மூன்று நாட்களுக்கு புரட்டாசி மாதம் தலைவாழை இலைவிருந்து அறிமுகப்படுத்தி இருந்தார்கள்.சாதரணமாக சரவணபவன் கிளைகளில் அன் லிமிடெட் மீல்ஸ் விற்கும் விலைக்கே அன்று தடபுடல் விருந்து.

விருந்து சாப்பிட்டு வெகு நாளாகிறதே.பணம் கொடுத்தாவது விருந்து சாப்பிடலாம் என்ற எண்ணத்தில் உள்ளே புகுந்தோம்.வாகனநெரிச்சல்களை பார்க்கும் போது கூட்டம் கும்மி அடிக்குமே.சரி பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் மூன்று மாடிகள் கொண்ட உணவகத்துக்குள் நுழையும் போதே வாசலில் உள்ள காவலாளி இரண்டாவது தளம் போங்க என்று கூறினார்.

அடடா..முதல் தளம் முழுக்க நிரம்பி விட்டது காத்திருந்துதான் சாப்பிட வேண்டும் என்று நினைத்தபடி லிப்டினுள் நுழைந்தோம்.மாடியில் இருந்த கூட்டத்தைப்பார்த்து ஓரமாக இருந்த ஷோபாவில் அமர்ந்த மறு நொடியே உள்ளே வருமாறு  அழைத்து விட்டனர்.மிகுதியான குளிர்ச்சியும் அழகான டெகரெஷனும்,பளிரென்ற விளக்கு அலங்காரமுமாக .சுத்தமும் கண்களை கவர்ந்தது.அதைவிட உபசரிப்பு வழக்கதைவிட அதிகம் தூக்கல்.தலை வாழை இலை விருந்து என்று தலைப்பிட்டதாலோ என்னவோ உணவக நிர்வாகம் கஸ்டமர்களை ஸ்பெஷலாக கவனிக்க சொல்லி விட்டதோ என்னவோ?உண்மையில் விருந்து உபசாரம்தான்.



திக்காக சுவையாக ஜில்லென்று கிர்ணிப்பழ ஜூஸ் குடிக்க இதமாக இருந்தது.கூடவே டிரை ஜாமூன்.அதன் பின் மேஜைக்கு வந்த ஐட்டங்களை பார்க்கும் போது
120 ரூபாய்க்கு காய்கறி விற்கிற விலையில் இத்தனை ஐட்டங்களா என்று ஆச்சரியமாக இருந்தது.வெள்ளை நிற பவுலில் இரண்டு பேர் சாப்பிடக்கூடிய அளவில் பளீரென்ற சாதம்.”இவங்களுக்கு மட்டும் எப்படித்தான் இத்தனை பளிச் என்று சாதம் வருது .?” என்று பக்கத்தில் இருந்த நட்பிடம் கேட்டபொழுது “சுண்ணாம்பை கலப்பார்கள் போலும் ”என்றாள்.இதனை செவி மடுத்த சர்வர் ”இல்லேம்மா இது நயம் பச்சரிசி”சாப்பாட்டோடு சேர்த்து இலவச இணைப்பாக பல்பு கொடுத்தார்.
கிழே லிஸ்டை நன்றாக மூச்சு விட்டுக்கொண்டு படிங்க..மூக்கு பிடிக்க சாப்பிடத்தான் முடியாது..சாதம்,சாம்பார் கூட்டு பொரியல் குழம்பு எவ்வளவு கேட்டாலும் தருகிறார்கள்.ஆனால் மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிடத்தான் முடியாது.லிஸ்டில் இருந்ததைவிட இன்னும் அதிகளவில் ஐட்டங்கள் இருந்தன.
கிர்ணிப்பழஜூஸ்
டிரைஜாமூன்
சேமியா பால்பாயசம்
சாதம்
புதினா சாதம்
பருப்புவடை
பைனாப்பிள் ஸ்வீட் பச்சடி
கேரட் கோஸ் சாலட்
பீன்ஸ்காரக்கறி
கத்தரி கொண்டைக்கடலை கூட்டு
முருங்கைக்காய் சாம்பார்
பருப்பு
நெய்
தக்காளி ரசம்
கருணைகிழங்கு வற்றக்குழம்பு
தயிர்
மோர்
பருப்புத்துவையல்
வடகம் 
அப்பளம் 
நெல்லிக்காய் ஊறுகாய்
மோர்மிளகாய்
வாழைப்பழம்
பீடா
சிக்கூ ஐஸ் க்ரீம்


மல்லிகைப்பூ சாதத்தின் மீது கட்டிப்பருப்பு.

கட்டிப்பருப்பின் மீது மணக்க மணக்க உருக்கு நெய்.

 வடை,மோர்மிளகாய் வடகம் ஊறுகாய் துகையல் வகையறாக்கள்



கடைசியாக பழம் பீடா ஐஸ்கிரீம்



லிஸ்டை பாருங்கள்.இன்னும் இரண்டு நாளைக்கு இந்த ஆஃபர் உள்ளது

உடன் வந்த வாண்டு எனக்கு மீல்ஸ் வேண்டாம் டிபன் தான் வேண்டும் என்றது ஒரு பனீர் தோசை ஆர்டர் செய்தோம்.இரண்டுவித சட்னிசாம்பாருடன் இருந்த பனீர் தோசையின் விலை 140 அடேங்கப்பா சொல்லவைத்தது.

சரி கடைசியாக ஒரு டம்ளர் டிகிரி காஃபி சாப்பிடலாம் என்று ஆர்டர் செய்து காஃபியை சுவைத்து பில்லை பார்த்தால் லைட்டாக மயக்கமே வந்து விட்டது..100 ml காஃபி ஒவ்வொன்றும் தலா 40 ரூபாய்..chennai guys...போய் 120 ரூபாய் கட்டி டோக்கன் வாங்கி சமர்த்தாக  மீல்ஸ் மட்டும் சாப்பிட்டுவிட்டு வாங்க.காஃபிக்கு ஆசைப்பட்டுடாதீங்க.டிப்ஸ் மற்றும் வேலட் பார்க்கிங்  தனி.இன்னும் சிம்பிளாக 95 ரூபாயில் இதே தலை வாழை விருந்து சிக்கனமாக சாப்பிடவேண்டுமென்றால் குளிரூட்டப்படாத கிளைகளுக்கு போகலாம்.



March 22, 2013

ருகா ஜி எஃப் சி



திருப்தியாக  சாப்பிடவும்,பட்ஜட் எகிறாமல் இருக்கும் படியான  நான்வெஜ் பாஸ்ட் புட் செல்ல வேண்டுமா?கண்ணை மூடிக்கொண்டு நந்தனம் மேற்கு சி ஐ டி நகரில் உள்ள ருகா ஜி எஃப் சி ரெஸ்டாரெண்டுக்கு செல்லலாம்.

சுவை,தரம்,சுத்தம் அனைத்துக்குமே பாஸ் மார்க் போடலாம்.பிராஸ்டட் சிக்கன்  மற்ற ரெஸ்டாரெண்டுகளில்  பிரை செய்து வைத்து இருப்பதை கொடுப்பார்கள்.ஆனால் இங்கோ ஆர்டர் வாங்கிய பின்னரே பிரை பண்ணவே ஆரம்பிக்கின்றனர்.பிளேட் டேபிளுக்கு வந்ததும் சூடு ஆறுவதற்காக கொஞ்சம் காத்திருக்க வேண்டும்.இதுவே இந்த ரெஸ்டாரெண்டுக்கு பிளஸ் பாயிண்ட்.

சிக்கன் வகைகள்,ரைஸ் வகைகள்,சாலட் வகைகள்,ரோல்ஸ்,பர்கர்,பிரன்ஞ் பிரை,சாண்ட்விச்வகைகள்,பிரஷ் ஜூஸ்,புரூட் சாலட்,ஐஸ் க்ரீம்,மில்க் ஷேக் வகைகள் என்று இருந்தது போக இப்பொழுது சாட் ஐட்டங்களும் அறிமுகப்படுத்தி விட்டார்கள்.

நிறைய காம்போ அறிமுகப்படுத்தி இருக்கின்றனர்.நம்  வசதி,டேஸ்டுக்கு ஏற்ப சாப்பிடலாம்.சாலட் வகைகள் க்ரீமியாக யம்மியாக உள்ளது.

திங்கள் முதல் வெள்ளி வரை பகல் 12 மணி முதல் 3 மணி வரை ஹாப்பி அவர்ஸ் என்று 20 சதவிகிதம் விலை குறைப்பு செய்து இருக்கின்றனர்.

சிக்கன் வகைகளில் நக்கட்ஸ்,ஸ்மைலீஸ்,பாப்கார்ன் என்று குழந்தைகளை ஈர்க்கும் மெனுவும் உண்டு.

ஸ்னாக்பாக் என்ற காம்போவில் இரண்டு பீஸ் பிராஸ்டட் சிக்கன்,பிரஷ் ஆக சூடாக சிறிய பன்,சாஸ்,கோக் அல்லது லெமன் மிண்ட் 135 ரூபாயில் கிடைக்கின்றது.இதுவே ஹாப்பி அவர்ஸில் சென்றால் வெறும் 110 ரூபாய்க்கு அருமையான லஞ்ச் முடிந்து விடும்.

மயோனைஸில் டொமட்டோ கெச்சப் கலந்து செய்த ஒரு வித சாஸை ஜி எஃப் சி ஸ்பெஷல் சாஸ் என்று தருகின்றனர்.வித்தியாசமான டேஸ்ட்.

குறை என்னவென்றால் காம்போவாக ஆர்டர் பண்ணினால் அவர்கள் குறிப்பிட்டுள்ள ஐட்டங்களில் ஓரிரண்டை தர மறந்து விடுகின்றனர்.பிரன்ஞ் பிரை வரவில்லை,ஸ்பெஷல் சாஸ் வரவில்லை என்று கேட்டு கேட்டு வாங்க வேண்டிஉள்ளது.சர்வீஸை இன்னும் சரியாக செய்தால் நன்றாக இருக்கும்.

உங்கள் பார்வைக்காக இதோ மெனு.



இது ஒரு காம்போ.சிக்கன் பீஸ்,பர்கர்,பிரன்ஞ் பிரஸ்,கோக் என்று தருகின்றனர்.

க்ரீமியாக யம்மியாக இருக்கும் ஹவாலியன் சாலட்.நாங்கள் ரெகுலர் கஸ்டமர் என்பதால் அரை பிளேட் பிரீ.பணம் கொடுத்து வாங்கினால் முழு பிளேட் தான் தருவார்கள்.



நான் பதிவில் குறிப்பிட்ட காம்போ.ஸ்னாக் பாக்


ஜில்லென்ற லெமன் மிண்ட்


கலர் கலராக மின்னும் சுவையான பலூடா.

அட்ரஸ்:18/19 கிழக்குசாலை,ஆல்ஃபா பள்ளி அருகில்,மேற்கு சி ஐ டி நகர்,நந்தனம்,சென்னை - 35

December 27, 2012

அறுசுவைத்திருவிழா





கடந்த அக்டோபர் மாதம் 12,13,14 ஆகிய தேதிகளில் மாலை நேரத்தில் பெஸண்ட் நகர் பீச்சுக்கு அருகே உள்ள வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு திண்டாட்டம்தான்.வாகனங்களும்,மக்கள் கூட்டமுமமாக தெருக்களில் நடக்க முடியாமல்,வாகனங்கள் பார்க் செய்ய முடியாமல் .ஏன்...வாகன‌ங்கள் நுழையவே இடம் இல்லாமல் ஏரியாவே தத்தளித்தது.அறுசுவை திருவிழாவால்.

திருவிழா என்றதும் ஆட்டம் பாட்டம் குடைராட்டினம்,விளையாட்டு ரயில், இதெல்லாம் இல்லை.எலியட்ஸ் பீச் மணலில் ஷாமியானா போடபட்டு வகை வகையான உணவுகளின் வாசனை மூக்கை துளைக்க மக்கள்ஸ் வாய்க்கும் கைக்கும் போராட்டமே நடத்திகொண்டிருந்தனர் அவசரகதியில்.

சாலையோரக்கடைகளில் வாங்கி சாப்பிட ஆசைபட்டும் செயல் படுத்த இயலாமல் லஜ்ஜை கொள்ளும் மக்களுக்கு அன்றைக்குகொண்டாட்டம்தான்.

தமிழ் நாட்டு உணவு மட்டுமின்றி  ,கேரளா.ஆந்திரா,கர்நாடகா,மகாராஷ்டிரா,கோவா,பஞ்சாப்,பெங்கால்.குஜராத்,ராஜஸ்தான்,காஷ்மீர் மாநில உணவுவகைகள் அத்தனையும் சுடசுட கிடைத்தன.

நுழைவு வாசலில் குறைந்தது 100 ரூபாய்க்கு டோக்கன் வாங்கிக்கொண்டுதான் உள்ளே செல்ல முடியும்.ஆனால் கண்டிப்பாக ஒருவருக்கு அந்த 100 ரூபாய் டோக்கன் போதவே போதாது.ஏனெனில் விலை அத்தனை அதிகம்.

வகை வகையான பிரியாணி வகைகள்,சிக்கன் வகைகள்,கபாப் வகைகள்,வடை போண்டா பஜ்ஜி வகைகள்,சாட் ஐட்டம்,பாயச வகைகள்,சூடான,குளிர் பான வகைகள் என்று எண்ணிலடங்கா உணவு வகைகள்.என்ன ஒன்று,விரும்பிய உணவை வாங்க பெரிய கியூவில் நிற்க வேண்டும்.

முதல் நாள் உணவு வகைகளின் விலை சற்றே குறைவாக இருந்தது.அடுத்த நாளே விலையை உயர்த்தி விட்டார்கள்."எவ்வளவு விலை உயர்த்தினாலும் நாங்களும் வந்து சாப்பிடுவோம்ல"என்பதை மக்கள் கூட்டம் நிரூபித்துக்கொண்டிருந்தது.



இரண்டு கீரை வடை 40 ரூபாய்.



ரோட்டோரக்கடையில் தாளத்துடன் டொடய்ங் டொடய்ங் என்ற மியூஸிக்குடன் கொத்து பரோட்டோ கொத்தும் ஓசையைத்தான் கேட்டு இருக்கிறேன்.நேரில் பார்த்ததில்லை.நீண்ட நாள் ஆசை .ஆரம்பம் முதல் இறுதிவரை கொத்துபரோட்டோ கொத்துவதை நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்.மின்னல் வேகத்தில் எண்ணி பத்தே நிமிடத்தில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட பிளேட் கொத்துபரோட்டா செய்து விடுகிறார் கொ.ப மாஸ்டர்.சூடான கொத்து பரோட்டாவை ஒரு விள்ளல் ஸ்பூனால் எடுத்து சாப்பிட்டால்...ம்ஹும்..நான் செய்யும் கொ.ப வுக்கு அடிக்காது.



சுடச்சுட கொ.ப‌


பெரிய பெரிய அடுப்புகளில் கிரில்  கம்பிகளில் மாட்டி சிக்கன் கபாப் தயாரித்து குவித்த வண்ணம் இருக்கின்றார்கள்.உடனுக்குடன் விற்றும் தீர்ந்து விடுகிறது.



பிராஸ்டட் சிக்கன்.பார்ப்பதற்கு வண்ணமயமாக இருக்க எக்கசக்க‌ கலர் பவுடர் போட்டு சாப்பிட தயங்க வைத்து விட்டனர்.


சூடான திருநெல்வேலி அல்வா.அதெப்படி எந்நேரமும் சூடாக கொடுக்கின்றார்கள்?இரண்டே ஸ்பூன் அல்வா 40 ரூபாய்.


ஒரு சிறிய குழிக்கரண்டி அளவு மூங் தால் அல்வா.இதுவும் 40 ரூபாய்.





வந்திருந்த கூட்டத்தினரின் ஒரு பகுதி.


கூட்டத்தின் இன்னொரு பகுதி.



ரோட்டரி இன்டர்நேஷனல் டிஸ்ட்ரிக்ஸ் 3230 என்ற அமைப்பு இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தது. ரோட்டரி சங்கத்தினர் அமைத்துள்ள மகிழ்ச்சியான கிராமம் என்ற திட்டத்துக்காக வசூல் ஆகும் தொகையை அவர்கள் தத்து எடுத்த
118 கிராமங்களுக்கும்  தேவையான வசதிகளை செய்து கொடுத்து மேலும் கிராம முன்னேற்றத்துக்கான‌  நலத்திட்டங்க‌ள் பலவற்றை நிறைவேற்றி ஏழை எளிய மக்க‌ளின் கண்ணீரை போக்குவதே இத்திருவிழாவின் நோக்கம்.

நல்லதொரு நோக்கம்.வரவேற்ககூடிய திட்டம்.
சிற‌ப்பான‌ இத்தொண்டு செய்யும் இந்த அமைப்பை பாராட்டவும் வேண்டும்.விலையைப்பற்றி கவலை கொள்ளாமல் எவ்வளவு விலை கொடுத்தாயினும் வாங்கி சாப்பிட்டு ஆதரவு கொடுக்கும் சென்னை மக்கள் ஃபுட்டீஸ் மட்டுமல்ல இரக்க சுபாவமும் உள்ளவர்கள் தான் :)



June 24, 2012

பி.ஆர்.மத்ஸ்யா

"ரெஸ்டாரெண்ட் போய் நாளாகிறது "என்று எங்கள் குடும்ப ஜூனியர்ஸ் அடம் பிடிக்க,வெஜ் ரெஸ்டாரெண்ட் என்றால் ஒகே.இல்லை என்றால் ம்ஹும்..என்று கறார் ஆக கூறி விட்டேன்."வெஜ்ஜாஆஆஆஆஆ..ரெஸிடென்ஸி ஹோட்டல் சின் சின் போலாம்"உச்சஸ்தாயியில் அலறியதை பொருட்படுத்த வில்லை.

கடைசியில் வெஜ் என்று ஒரு மனதாக தீர்மானித்து அண்ணாச்சி உணவகத்திலும்,ஐயர் உணவகத்திலும் சாப்பிட்டு போர் அடித்து விட வித்தியாசமான வெஜ் ரெஸ்டாரெண்ட் எது என்று தேடியதில் அதே ஜூனியர் ஹிந்து மெட்ரோ பிளஸை தூக்கிக்கொண்டு வந்து காட்டிய பொழுது கண்ணில் பட்டது பி ஆர் மத்ஸ்யா.அடுத்த அரை மணி நேரத்தில் மத்ஸ்யாவில் இருந்தோம்.

கூட்டத்தையும் வரிசையாக அடுக்கி இருந்த பஃபே உணவு வகைகளையும் பார்த்த பொழுது சாப்பாடு செமத்தியாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டு போய் அமர்ந்தோம்.முதலில் பரிமாறிய சூப்பை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு விட்டு ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக்கொண்டு இருந்த பொழுது எங்கள் வீட்டு வால் பாகற்காய் சூப் என்று சற்று சப்தமாகவே சொன்னாள்.

அடுத்து கொண்டு வந்த சாட் ஐட்டமான பேல் பூரியும் தஹி பூரியும் பிரமாதமாக இருந்ததில் சூப் மறந்தே போய் விட்டது.உண்மையில் இப்படி ஒரு சுவையான சாட் ஐட்டம் சென்னையில் சாப்பிட்டதே இல்லை.அத்தனை அருமை.



வித விதமான சாலட் வகைகள்.கேபேஜ்ஜை க்ரீமியாக வைத்து இருந்தது டாப்

பாலக் பன்னீரும் பட்டர் பனீர் மசாலாவும்.
புதினா பூரி,நான் ஸ்டஃப்டு சப்பாத்தி இட்லி சட்னி வகையறாக்களுக்கும் குறைவில்லை.
தால் மக்கானியும் வெஜ் ரைஸும்
பொடொடோ பிரை காலி பிளவர் மஞ்சூரியன்
தயிர் சாதம் ,மோர் மிளகாய் ,அப்பளம் ,ஊறுகாய்

நூடுல்ஸ்,லெமன் ரைஸ் ,பாஸ்தா என்று எதை சாப்பிட எதை விட என்று குழம்ப வைக்கும் வகை வகையான உணவு வகைகள்.








மற்ற மாநில உணவு வகைகளை சப்புக்கொட்டிக்கொண்டு சாப்பிடலாம்.அதே நேரம் தமிழ்நாட்டு ஸ்பெஷலான இட்லி சட்னி,காரச்சட்னி,வெஜ் ரைஸ்,சாம்பார்,பாயஸம் போன்றவை பலரால் தொடப்படாமல் இருந்தது அதன் சுவையினால்.

இத்தனை ஐட்டங்களையும் சற்று குறைத்து ரேட்டையும் கம்மி பண்ணினால் வயிற்றுக்கும்,பர்ஸுக்கும் பங்கம் வராது.

ஞாயிறன்று சென்றதால் ஐட்டங்களும் அதிகம் விலையும் சற்று அதிகம்.ஒரு நபருக்கு 300 ரூபாய் பிளஸ் டாக்ஸ்,சர்வீஸ் சார்ஜ்.மற்ற நாட்களில் 240.

வடமாநில சைவ உணவுப்பிரியர்களுக்கான நல்லதொரு ரெஸ்டாரெண்ட்.

பி.ஆர் மத்ஸ்யா,
29/31,தணிகாசலம் சாலை,
தி.நகர்,
சென்னை - 17

டிஸ்கி:போய் உட்கார்ந்ததும் ஹேண்ட் பேகில் இருந்து கேமராவை தூக்கினால் சார்ஜ் சுத்தமாக இல்லை.பக்கத்தில் இருந்த வாண்டுவின் கேலக்சி டேபில் இருந்து அவனை விட்டே எடுத்த படங்கள் .சராமாரியாக படத்தை எடுத்து தள்ளி விட்டாலும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டு பாருங்கள்.

March 25, 2012

கோல்டன் பீச் தோசை







ஈஞ்சம்பாக்கம் தங்கக்கடற்கரை இதுதான் சென்னையின் முதல் தீம் பார்க் என்று நினைக்கிறேன்.தங்ககடற்கரைஎன்றதும் சிரிக்காது நிற்கும் சிலை மனிதர் தவிர நீநீநீநீநீ..ள தோசைதான் ஞாபகத்திற்கு வரும்.

சென்ற வாரம் அங்கு சென்று இருந்த பொழுது சிலை மனிதரைக்காணவில்லை.ரெஸ்ட் எடுக்கப்போய் இருப்பாரோ?அல்லது அன்று அவருக்கு விடுமுறையோ தெரியவில்லை.

எத்தனையோ முறை அங்கு சென்று இருந்தாலும் ஒரு முறை கூட நீள தோசை சாப்பிட்டதில்லை.

இந்த முறை வலைப்பூவில் எழுத வேண்டும் என்பதற்காக கேண்டீன் பக்கம் சென்றோம்.8 அடி தோசை 1000 ரூபாய்.3 அடி தோசை 200 ரூபாய் என்று போர்டில் எழுதப்பட்டு இருந்தது.

எட்டு அடி தோசை சாப்பிட ஆள் இல்லாததால் மூன்றடி தோசைக்கு ஆர்டர் செய்தோம்.களை கட்டி இருந்த கேண்டீனில் எட்டடி தோசை தென்பட்டால் கேமராவில் கிளிக் செய்யலாம் என்று சுற்று முற்றும் பார்த்தால் ஏமாற்றம்தான்.

ஆர்டர் செய்த அரைமணிநேரத்திற்கு பிறகு தோசை கிடைத்தது.தோசையைப்பார்த்ததுமே சாப்பிடும் ஆசை போய் விட்டது.ஒரு பக்கம் முறுகலாக இன்னொரு பக்கம் வெந்தும் வேகாததுமான ஒரு நீள தோசை அலுமினிய டிரேயில் பட்டர் பேப்பர் விரித்து சுருட்டப்பட்டு இருந்தது.

தோசையில் முறுகலான பகுதியையும்,வெண்மையான பகுதியையும் பார்த்ததும் பிளேக் அண்ட் வைட் தோசை என்று உடனடியாக செல்லப்பெயர் சூட்டி விட்டனர்.

கூடவே ஆறிப்போன சாம்பார்,ஐஸ் போன்று ஜில்லிட்டிருந்த உருளைக்கிழங்கு மசால்,புளித்துப்போன தேங்காய் சட்னி...

எதுவும் சாப்பிடாமல் அலுமினிய டிரேயில் இருந்த தோசையை கொத்து பரோட்டாவாக்கி அதகளப்படுத்தி விட்டு எழுந்தது தான் மிச்சம்.

”நல்ல வேளை ஆட்கள் அதிகம் இருந்து எட்டடி தோசை ஆர்டர் பண்ணாமல் தப்பித்தோம்” பெருமூச்சு விட்ட படி நடையைக்கட்டினோம்.





March 3, 2012

காரைக்குடி ரெஸ்டாரெண்ட்

சென்னையில் பல இடங்களில் காரைக்குடி ரெஸ்டாரெண்ட் கிளைகள் ஆரம்பித்து அசல் செட்டிநாட்டு உணவுவகைளை,செட்டிநாட்டு பின்னணியுடன் சுவையாக வழங்குகின்றார்கள்.

நான் சென்றது போரூர் உணவகம்.உணவகத்தினுள் நுழைந்தாலே செட்டிநாட்டு வீட்டுனுள் நுழைத்த பிரம்மையை ஏற்படுத்தும்.மேலிருந்து தொங்கும் பழங்கால பாணி விளக்குகள்,சுவரில் அலங்கரித்துப்பட்டு இருக்கும் வண்ண ஓவியங்கள்,கலைப்பொருட்கள்,பறிமாறும் பாத்திரங்கள்,டம்ளருக்கு பதில் எவர்சில்வர் சொம்பு என்று அமர்க்களப்படுத்துகின்றனர்.

அருமையான வெஜிடேரியன் தாலி ,நான்வெஜிடேரியன் தாலி கிடைக்கின்றது.நான் வெஜ் தாலி என்றால் மீன் குழம்பிலும்,கறிக்குழம்பிலும் பீஸைத்தேடிக்கொண்டிருக்க கூடாது.வெறுமனே குழம்பு மட்டிலும்தான். மீன் , கறி பீஸ் வேண்டுமென்றால் தனியாக ஆர்டர் செய்ய வேண்டும்.

தாலி மீல்ஸ் வெறுமனே 90 ரூபாய்தான் என்றாலும் ஒரு சைட் டிஷ் விலை அதை விட அதிகமாக உள்ளது.

தாலியில் சூடான பச்சரிசி சாதத்துடன்,சாம்பார்,ரசம்,பொரியல்,வற்றல் குழம்பு,பருப்பு சேர்த்த கூட்டு,காய்கறி கூட்டு.கெட்டித்தயிர்,ஸ்வீட்,மீன் குழம்பு ,கறிக்குழம்பு என்று அன் லிமிடெட் ஆக பரிமாறுகின்றனர்.

அப்பளப்பிரியர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் அப்பளங்களை விளாசித்தள்ளலாம்.வற்றல் குழம்பு திரும்ப கேட்டு வாங்கி சாப்பிடத்தூண்டும் அருமையான சுவை.
தந்தூரி சிக்கன் பல ரெஸ்டாரெண்டுகளில் வெந்தும் வேகாததுமாக பறிமாறுவார்கள்.இங்கு நன்றாக வேகவிடப்பட்ட தந்தூரி சிக்கன் சுவையான பச்சை சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
தொக்கு போல் இருக்கும் செட்டிநாட்டு நாட்டுக்கோழி சிக்கன் கிரேவி காராசாரத்துடன் சப்புக்கொட்டி சாப்பிட வைக்கும்.
மொறு மொறுப்பான நெத்திலி வறுவலில் கருவேப்பிலையை பொரித்து போட்டு கார்னிஷ் பண்ணி இருப்பார்கள்.பொரித்த கருவேப்பிலையுடன் நெத்திலி பிரையை சாப்பிட்டால் யம்மிதான்.

சைட் டிஸ்கள் சற்று காஸ்ட்லியாக இருந்தாலும் சுவைக்காக செலவு செய்யலாம்.

ஹைலைட்டாக சாப்பிட்டு முடிந்ததும் பெரிய பித்தளை தாம்பாளத்தில் அழகாக அடுக்கப்பட்ட வெற்றிலை,வாசனை சுண்ணாம்பு,ரஸிக்லால் பாக்கு,கல்கண்டு என்று காத்திருக்கும்.வழக்கம் போல் நானே பீடா செய்து ரெண்டு ரவுண்டு சாப்பிட்டு விடுவேன்.இந்த முறை பீடா சாப்பிடுவது மிஸ்ஸிங்.காரணம் தட்டு நிறைய தாம்பூலம் இருந்தாலும் புத்தாண்டு resolution பீடா ,பாக்கு பக்கமே போகக்கூடாது என்பதால் தாம்பூலதாம்பாளம் என்னை வா வா என்று அழைத்தும் வலுகட்டயமாக திரும்பிப்பார்க்காமல் வந்து விட்டேனாக்கும்:(

November 19, 2011

பார்பிகியூ நேஷன்



நகரின் ஹாட் பிளேஸில் அமைந்துள்ள பார்பிகியூ நேஷன் உணவுப்பிரியர்களுக்கு ஏற்ற இடம்.பஃபேயில் ஸ்டார்டர் ஆக மட்டும் பலவித கிரில்ட் ஐட்டங்கள் டேபிளிலேயே கிரில் வசதியுடன் சூடாக பறிமாறுகின்றனர்.
ஸ்டார்டர் மெனுவைப்பாருங்கள்.

லெபனீஷ் மஷ்ரூம்
தந்தூரி பனீர்டிக்கா
பார்பிகியூ பைனாப்பிள்
பார்பிகியூ கேப்ஸிகம்
இந்தோனிசியன் கிரில் வெஜிடபிள்
நிஜாமி பட்டி
கஜுன் ஸ்பைஸ்டு பொடடோ
அங்கூர் டங்டி
சிக்கன் சாத்தே வித் பீ நட் சாஸ்
மட்டன் ஜிலபி ஷீக்
வியட்னாமிஸ் பிஷ்
ஜிங்கா கட மசாலா
பிரான்ஸ்
பிரைட் சிக்கன் லெக்பீஸ்
நான் வெரைடீஸ்
மட்டன் கபாப்

இதை சாப்பிட்டே மூச்சு முட்டிபோய் இருக்கும் பொழுது காத்திருக்கின்றது பஃபே.அனைத்து ஐட்டங்களையும் துளித்துளியாக கூட சாப்பிட முடியாது.
மெய்ன் மெனு லிஸ்டை பாருங்கள்.

வெஜ் மஞ்சூ சூப்
சிக்கன் சூப்
பாயா சொர்பா
சிக்கன் தம் பிரியானி
நிஹாரிகோஸ்ட்
பட்டர் சிக்கன் மசாலா
கிரேப் காஸி
பிஷ் இன் ஹாட் பேஸில் சாஸ்
பனீர் ஜல்பர்ஸி
நவரத்னகுர்மா
தில்குஷ் கோஃப்தா கறி
கிரிஷ்பி கெர்லா
ஆலூ கோபி டிரை
ரைஸ் வெரைடீஸ்
சாலட் வகைகள்
அப்பளம் வற்றல் சிப்ஸ் வடகம் ஊறுகாய் வகைகள்.
வெஜ் புலாவ்
செஷ்வான் நூடுல்ஸ்
மஸ்ரூம் மஞ்சூரியன்
தால் புகாரா
ஃபிர்னி
ஐஸ் க்ரீம்
கேக் வகைகள்
ஹாட் குலோப்ஜாமூன்
மூஸ்
சாக்லேட் பிரவுனி
நறுக்கிய பழவகைகள்



சூடான வெஜ் மஞ்சூ சூப்.காரம் அதிகமாக இருந்தாலும் சுவையாக இருந்தது.
டேபிளிலேயே பொருத்த பட்ட கிரிலில் கிரில் ஆகிக்கொண்டிருக்கும் பி பி கியூ ஐட்டங்கள்.மிகவும் ஸ்பைசியசான ஐட்டங்கள்.காரத்தை சற்றுக் குறைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
கிரில் ஐட்டங்களை முன்பு எல்லாம் நன்றாக கிரில் செய்து தருவார்கள்.இப்பொழுது அதிகளவு கூட்டத்தினாலோ என்னவோ வெந்தும் வேகாததுமாக கொண்டு வருகின்றார்கள்.டேபிளில் இருக்கும் கிரிலில் நன்கு வேக வைத்து வேகும் வரை காத்திருந்து சாப்பிட வேண்டியதுள்ளது.
சாஸ் வகைகள்.மாரினேட் பண்ணும்வகையில் சாஸ் வகைகளும் உண்டு.
நன்கு கிரில் செய்யப்பட்ட பி பி கியூ வகைகள்
மெய்ன் கோர்ஸ்.
இன்னொரு விதம் இது லைட்டாக இருக்கும்.
மூஸும் ஐஸ் க்ரீமும்
இதனையும் கடைசியாக ஒரு கட்டுகட்டலாம்.
சாக்லேட் சாஸுடன் ஐஸ் க்ரீம் உடன் சாக்லேட் பிரவுனி.


பார்பிகியூ நேஷன்
சோமசுந்தரம் தெரு
வடக்கு உஸ்மான் சாலை
ஜாய் ஆலுகாஸ் ஜுவல்லர்ஸ் அருகில்
தி.நகர்
சென்னை - 17

பெரியவர்கள்:600
சிறியவர்கள்:300
1-5 வயதினர்: இலவசம்