December 31, 2010

புத்தாண்டு கலாச்சாரங்கள்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

சென்னை வாசிகளின் கைபேசிகளின் மெசெஜ் இன்பாக்ஸ் முழுக்க இப்பொழுது நிறைந்து இருக்கும் மெசேஜ் 31 ஆம் தேதி இரவு ஹோட்டல்கள்,கிளப்புகள்,ரிசார்ட்டுகள் போன்றவற்றில் நடக்கும் கேளிக்கை,களியாட்டத்திற்கான விளம்பரம்.

பெரிய நட்சத்திர ஹோட்டல்களில்.பிரமாண்டமான ஏற்பாட்டை புத்தாண்டு கொண்டாடுவதற்காக ஏற்பாடு செய்து வருகின்றன.1000 ரூபாய் முதல் 1 லட்சம் வரை இதற்காக கட்டணம் பெறப்படுகின்றது என்பது நம்மை விழி விரிய வைக்கின்றது.

இந்த காஸ்ட்லியான கேளிக்கை நிகழ்ச்சிகளில் பெரிய,சிறிய திரை உலக நடசத்திரங்கள் பங்கு பெற்று வாடிக்கையாளர்களுடன் ஆடிப்பாடி,உண்டு,அருந்தி களியாட்டம் போடுகின்றனர்.இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் திரை நட்சத்திரங்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ப லட்சங்களிலும்,கோடிகளிலும் சம்பளம் நிர்ணயிக்கின்றனர்.

சமீபத்தில் வந்த செய்தி மும்பையில் பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் புத்தாண்டு அன்று நடனமாட பாலிவுட் புகழ் கத்ரீனா கைஃபுக்கு 3 கோடி ரூபாய் தர முன் வந்தது.(ஆனால் மூன்று கோடி ரூபாயை ஒரே இரவில் சம்பாதித்து விடும் ஆசையை தன் மனம் நிறைவடையும் ஒரு காரியத்திற்காக சுலபமாக புறம் தள்ளி விட்டார் என்பது ஆச்சரியப்படவைத்த செய்தி.(இப்பொழுது அந்த மூன்று கோடி வேறு எந்த நட்சத்திரம் சம்பாதித்து இருப்பாரோ?)

இசை,நடனம்,மது,உணவு,விளையாட்டு,கேளிக்கைகளில் நடந்தேறும் அத்துமீறல்கள் என்று பண்பாட்டுக்கு ஒவ்வாத காரியங்கள் வருடந்தோறும் மிகை பட்டுக்கொண்டே இருகின்றது என்ற உண்மையை சமூக ஆர்வலர்கள் மிகவும் கவலையுடன் நோக்குகின்றனர்.

வரும் புத்தாண்டு நல்ல விதமாக அமைய வேண்டும்,விரும்பும் வாழ்கையை எட்ட வேண்டும் என்று எண்ணுவது மனித இயல்பு.அதனை இப்படி கலாச்சார கேட்டை ஏற்படுத்தும்,சமூகத்தில் சீர்கேட்டினை ஏற்படுத்தும் ஆர்ப்பாட்டங்களும்,அவலமும் தேவையா?

புத்தாண்டுகொண்டாட்டங்களை ஜரூராக ஏற்பாடு செய்து ஒரே இரவில் பணத்தை மூட்டை,மூட்டையாக அள்ளும் நிறுவனங்கள் தனியாக வருபவருக்கு ஒரு மாதிரிக்கட்டணம்,பெண்களுடன் வருபவருக்கு கட்டணசலுகை என்று ஆசை வலை விரித்து காலாச்சார பேரழிவுக்கு சிகப்புக்கம்பளம் விரிக்கின்றது என்பது அச்சபடவைக்கும் உண்மை.ஆண்களும்,பெண்களும் சேர்ந்து குடித்து ஆட்டம் போட்டு கேளிக்கை நடத்தி,இளையவர்களை கெடும் பாதைக்கு அழைத்து செல்லும் பப் கலாச்சாரம் நாட்டில் நடக்கும் பயங்கரவாதத்தில் ஒன்று என்றால் மிகை ஆகாது.

சில கட்சிகளும்,சமூகநல அமைப்புகளும் இத்தகைய அந்நிய கலாச்சார சீரழிவு நம் நாட்டுக்கு வேண்டாம் .அது நாளைய மன்னர்களை அழிவுப்பாதைக்கு அழைத்து செல்ல வழிகோலாகிவிடும் என்று கதறும் கதறலை நமது அரசாங்கம் வேடிக்கைப்பார்த்துகொண்டு வெறுமனே இருக்கின்றது.

தண்ணீரில் விழுந்து சாவு,பிரபல நட்சத்திர ஹோட்டலில் நீச்சல் குளம் மீது அமைக்கப்பட்ட நடனமேடை சரிந்து நீச்சல் குளத்தில் மூழ்கி சாவு என்று பத்திரிகைகளில் படித்து விட்டு “உச் “கொட்டுவதோடு சரி.


போலீஸ் சென்னையில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு வளையம் அமைத்து இருக்கின்றது.புத்தாண்டு என்றாலே பீச் ரோட்(காமராஜர் சாலை)முழுக்க ஆர்ப்பாட்டங்களும்,கொண்டாட்டங்களும் அமர்களப்படும்.இன்று நேப்பியர் பாலத்தில் இருந்து காந்திசிலை வரை வாகன போக்குவரத்தை தடை செய்து புத்தாண்டை கொண்டாட வழிவகை செய்து கொடுத்து இருக்கின்றார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் முதல் மாத முதல் நாளின் முதல் வினாடியை சந்தோஷத்துடன் கொண்டாட வேண்டும்.அப்படி ஆரம்பமானால் வருடம் முழுக்க சந்தோஷம் கிட்டும் என்று எண்ணுபவர்கள்,இத்தகைய கலாச்சார சீரழிவு நடத்தித்தான் கொண்டாட வேண்டும் என்று இல்லைதானே?

அந்நிய கலாச்சாரம் இளையவர்களை அலைகழிக்கின்றது.அத்தகைய கலாச்சார சீரழிவுக்கு காரணியாகாமல் இளையவர்கள் தம் பெற்றோர்கள் மகிழும் வண்ணம்,சமுதாயம் தலை நிமிரும் வண்ணம் நம் பண்பாட்டினையும் மறந்திடாமல் புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்தி,வரும் புத்தாண்டை நல்ல விதமாக வரவேற்று நிறை வாழ்வு வாழவாழ்த்துக்கள்.

இன்னும் சற்று நேரத்தில் உதிக்கவிருக்கும் புதிய ஆண்டு என் பிரியமான இணைய நட்புக்களுக்கு எல்லாவித நலன்களையும்,வளங்களையும்,சிறப்புகளையும்,முன்னேற்றங்களையும் வாரி வழங்கிட நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!



December 28, 2010

வெள்ளரி பவுலும்,விருதுகளும்.

என்னையும் மறவாமல் விருது கொடுத்து சிறப்பித்த அன்புள்ளங்களுக்கு என் நன்றிகள்!இந்த விருதோடு நான் என் உற்ற நட்புக்களுக்கு வைத்த சிறிய விருந்தில் நானே வெள்ளரிக்காயை செதுக்கி (carving ) அழகான பவுலாக்கி சாஸை நிரப்பி வந்தவர்களை விழி விரியச் செய்ததை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.அடுத்த முறை முழு பூசணிக்காய் கிடைத்தால் (சோற்றுக்குள் மறைத்து வைக்காமல்)ஒரு ரைஸ் பவுலாக்கி உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.சாஸ் பவுல் எப்படி இருக்கு என்று பார்த்து விட்டு சொல்லுங்கள்.

தோழி ஆசியா உமர் வழங்கிய விருது.

தங்கை மகி கொடுத்த விருது.


சகோதரர் அப்துல் காதர் கொடுத்த விருதுகள்.

விருது கிடைத்தமைக்கு என்னால் ஆன சின்ன ட்ரீட்.ஆளுக்கொரு பி பி கியூ சிக்கன் பீஸ் எடுத்துக்குங்க.குகும்பர் பவுலில் இருக்கும் டொமட்டோ சாஸ்,செராமிக் பவுலில் இருக்கும் மெயோனிஸ் செம காம்பினெஷனாக இருக்கும்

December 26, 2010

இனிய இல்லம் - 3

இனிய இல்லம் மூன்றாம் பாகத்தினை படிப்பதற்கு முன் படிக்காதவர்கள் முதல் இரண்டு பாகங்களையும் பார்க்க

இனிய இல்லம் முதல் பாகம்

இனிய இல்லம் இரண்டாம் பாகம்

சமையலறை

ஒரு இல்லத்தின் மிக முக்கியமான அறை.நல்ல காற்றோட்டத்துடனும்,வெளிச்சத்துடனும் அமையப்பெற்று இருப்பது அவசியம்.சில இல்ல சமையல்கட்டுகளில் மேடை முழுக்க பொருட்களை நிறைத்து வைத்திருப்பார்கள்.ஸ்டவ் தவிர மிக அத்தியாவசிய பொருட்கள் ஓரிரண்டு இருந்தால் தான் பார்க்க அழகாகவும்,சுத்தம் செய்ய எளிதாகவும் இருக்கும்.மிக்ஸி,எலெக்ட்ரிக் குக்கர் போன்றவற்றை உபயோகித்து விட்டு,அப்புறப்படுத்தும் வசதி இருந்தால் எடுத்து உள்ளே வைத்து விட்டால் இன்னும் பளிச் என்றாகி விடும்.இரண்டடி அகலத்தில் நாண்கு அடுக்குகள் கொண்ட மரத்தாலான செல்பை செய்து சமையல் கட்டில் ஒரு ஓரமாக வைத்து இருந்தால் ஒவ்வொரு அடுக்கிலும் எலெக்ட்ரிக் குக்கர்,டேபிள்டாப் கிரைண்டர்,மைக்ரோவேவ் அவன்,மிக்ஸி,கிரில்ட் அவன் ,டோஸ்டர் போன்ற மின்சார உபகரணங்களை வைத்துக்கொண்டால் இடம் அடைத்துக்கொள்ளும் அவஸ்தை இருக்காது.மிகவும் வசதியாக இருக்கும்.முயற்சித்துப்பாருங்களேன்.

நெய் வாங்கும் பொழுது கிடைத்த பாட்டில்,பருப்புப்பொடி வாங்கும் பொழுது தந்தது,தேயிலை ,காப்பித்தூளுக்கு கிடைத்த இலவச பாட்டில்களை அப்புறப்படுத்தி விட்டு ,ஒரே மாதிரி அளவுள்ள பெட் பாட்டில்களை மளிகை பொருட்களை நிரப்புங்கள்.பருப்பு ,உப்பு,சர்க்கரை போன்றவற்றுக்கு ஒரே அளவுள்ள பெரிய சைஸ்பாட்டில்களை வாங்கி வைத்தால் பார்க்க அழகாக இருக்கும்.இந்த பாட்டில்களை கையாளும் பொழுது ஈரக்கையினால் எடுப்பதை தவிர்த்தால் அழுக்கு படிவதை தவிர்க்கலாம்.மாதம் ஒரு முறை சோப்பு நீரினால் கழுகி உலரவைத்து எடுத்தல் அவசியம்

நம் வசதிக்காக பாத்திரங்களை அளவுக்கதிகமாக வைத்திருந்தாலும் சமையலறை அலங்கோலமாகி விடும்.ஆகவே அளவான பாத்திரங்களை வைத்து சமைக்க பழகிக்கொண்டால் அடுக்களையும் சுத்தமாகும்.வேலை செய்பவரும் காத தூரம் ஓடமாட்டார்.

கிச்சன் சின்க் கழிவுகள் இல்லாமல் சுத்தமாக,உலர்ந்த நிலையில் இருந்தால் பூச்சிகள் வருவது குறையும்.எச்சில் பாத்திரங்களை அதனுள் போட்டு வைக்காமல் இருப்பதே நல்லது.

ஸ்டோர் ரூம்:
ஒரு வீட்டுக்கு ஸ்டோர்ரூம் அமையப்பெற்று இருந்தால் சுத்தத்தை அதிகம் பேணலாம்.வாய்ப்பு இருப்பின் ஸ்டோர் ரூம் இணைக்கத்தவறாதீர்கள்.ஸ்டோர் ரூம்தானே என்று பொருட்களை அடைசலாக வைத்து இராமல் அதிலும் உங்களின் சுத்த பரமரிப்பைத்தொடருங்கள்.

சாப்பாட்டறை:
சாப்பாட்டு மேசையில்; தேவை இல்லாத பொருட்கள் பரப்பி இருப்பதை ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.எப்பொழுதும் துடைத்து சுத்தமாக வைத்திருங்கள்.அதன் நாற்காலிகள் மீது ஈர டவல்கள் போன்றவை தொங்குவதை தவிர்த்து விடுங்கள்.சாப்பிட்டதும் உடனுக்குடன் சுத்தம் செய்து பாத்திரங்களை அப்புறப்படுத்தி விடுங்கள்.ஊறுகாய்,சாஸ்,நெய்,உப்பு,பொடிவகைகள் போன்றவற்றை உள்ளே எடுத்து வைக்கும் வசதி இல்லாவிட்டால் அழகாக ஒரு டிரேயில் அடுக்கி ஓரமாக வைத்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

பரண்:
இதிலும் கசகச வென்று சாமான்கள் அடைத்து வைக்காமல் பெரிய அட்டைப்பெட்டிகளில் கட்டி.உள்ளே எனென்ன பொருட்கள் இருப்பது என்ற லிஸ்டை ஒரு பேப்பரில் எழுதி அட்டை பெட்டி மேல் ஒட்டி லாஃப்டில் அடுக்கி வைத்தால் எடுப்பதற்கு சுலபமாக,பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும்.


படிப்பறை:
படிக்கும் அறையில் புத்தக அலமாரியில் பொருட்களை அளவுக்கு அதிகமாக அடுக்கி,நேர்த்தி இல்லாமல் இருந்தால் பிள்ளைகளுக்கு படிக்கும் மூடே போய் விடும்.மேசை மீது ஓரத்தில் புத்தகங்களை அடுக்கி வைத்து விட்டு வேலை செய்வதற்கு ஏற்ற வாறு இடம் ஒதுக்கி இருக்க வேண்டும்.பேனா,பென்சில்களுக்கு ஸ்டாண்ட்,பேப்பர் குப்பைகளை போட சிறிய குப்பைத்தொட்டிஎன்று வைத்து குழந்தைகளுக்கு நல்ல பழக்கத்தை வலியுறுத்துங்கள்.எந்தெந்த பொருட்கள் எங்கெங்கே இருக்கின்றது என்று தூக்கத்தில் எழுப்பிக்கேட்டாலும் டக் என்று சொல்லும் அளவு பிள்ளைகளை நாம் சீர்படுத்தினால அவர்களின் சிந்தனையும் சீராக தெளிவாக அவர்களை நேர்வழிப்படுத்தும்.

உங்கள் இல்லம் எளிமையாக இருந்தாலும் சுத்தமாக அழகாக,ரசனை மிக்கதாக அமைந்து உங்கள் இனிய இல்லம் சொர்க்கமாக அமைய வாழ்த்துக்கள்.

December 18, 2010

உழைப்பாளர் சிலையை சுற்றி உழைப்பாளிகள்

திரைகடல் ஓடி திரவியம் தேடு என்பது பழ மொழி.இவர்களோ திரைகடல் நோக்கி ஓடி உழைக்கும் வர்க்கத்தினர்.சென்னையின் அடையாளமாக இருக்கும் மெரினா பீச்சை நம்பி ஏகப்பட்ட ஏழைத்தொழிலாளிகள் வியர்வை சிந்த உழைத்து குடும்பத்தினை காப்பாற்றுகின்றனர்.மக்களுக்கு சுகாதாரமான காற்று,நல்லதொரு பொழுது போக்கு,நடைப்பயிற்சி,ஊருக்கே ஒரு பெருமை மிகு அடையாளம்,பர்ஸை பதம் பார்க்காத வீகெண்ட் கழிக்கும் வாய்ப்பு,பரந்து விரிந்த மணற்பரப்பில் பொது,அரசியல்,சமூக கூட்டங்களை அமைதியாக கண்டு களிக்கும் வசதி இப்படி நிறைய பலாபலன்கள் இருந்தாலும் இன்னொரு வர்கத்தினருக்கு வயிறு நிறைக்கும் வரமாக இந்த மெரினா பீச் அமைந்துள்ளது.

அசோர்டட் பஜ்ஜி வகைகளை டிஸ்போசபிள் பிளேட்டுகளில் புளிச்சட்னியுடன் சூடாக விற்பனை செய்பவர்.மிளகாய்,வெங்காயம்,கத்தரி,உருளை,வாழை,காலிபிளவர் போன்றவற்றில் பஜ்ஜி விற்பனைக்கு வருமே தவிர வடை போன்றவை பீச்சில் விற்பது கிடையாது.இவரிடம் காரணம் கேட்ட பொழுது ”வடைக்கு எல்லாம் மாவு அரைத்து,பொடியாக வெங்காயத்தை நறுக்கி..வேலை இழுத்து விடும்.பஜ்ஜி என்றால் எவ்வளவு வேண்டுமானாலும் சுலபமாக செய்து விடலாம்.”என்கின்றார்.கடற்கரை காற்று இவரது வியாபரத்துக்கு ஒரு சவால் ஆயினும் வீறு கொண்டு காற்றை ஜெயித்து,குடுமபத்தைக்காப்பாற்ற காற்றுடன் போராடி,போராடி ஜெயித்து வருகின்றார்.



சோளத்தை நெருப்பில் காட்டி உப்பு.காரம்,புளிப்பு தடவி மணக்க மணக்க விற்பனை செய்யும் பெண்ணிவர்.”நெட்டில் போடப்போகின்றேன்” என்றதும் “தாராளமா போட்டுக்கோ”என்று போஸ் கொடுத்தார்.”குளிர் சீஸன் ஆரம்பித்து விட்டது.இனி யாபாரம் டல்லு தான்.வூட்லே இனி கொஞ்சம் கஷ்டம்தான்”என்று கவலை தோய்ந்த குரலில் கூறினார்.
மும்பை இறக்குமதியான பேல்,பானி பூரிவகைகள்,பாவ்பாஜி போன்றவை விற்பனை செய்யும் வடநாட்டினை சேர்ந்தவர்கள்.தமிழில் பெயர் என்ன என்றால் கூட பதில் சொல்லத்தெரியாத இவர்கள் கனஜோராக வியாபாரம் செய்வதைக்காணும் பொழுது வியப்பாகத்தான் உள்ளது.

பலூன் சூட்டிங் நடத்துபவர்.பலூன்களை பெரிய போர்டுகளில் கட்டி வைத்து துப்பாக்கியால் சுடும் விளையாட்டு.சிறுவர்கள் இவரை சூழ்ந்து விளையாட போட்டி போடுகின்றனர்.சிறுவர்களின் கூட்டத்தினை பார்த்து இச்சிறுவனுக்கு குஷி ஏற்பட்டு வியாபாரத்தை சுறுசுறுப்பாக கவனிக்கின்றார்.

சில்வர்கேன்களில் சூடாக சுக்குக்காப்பி விற்பனை செய்பவர்.காப்பி விற்றுத்தான் தன் தாய்,சகோதர சகோதரிகளை காப்பாற்றி,படிக்கவைத்து சுமைகல்லாக இருக்கும் இச்சிறுவனைக்காணும் பொழுது கழிவிரக்கம் வருகின்றது.

“மல்லி..மல்லிப்பூ” என்று சுற்றி சுற்றி வந்து விருப்பமில்லாதவர்களையும் வாங்க வைத்து விடும் சாமர்த்தியசாலிகள்.காலையிலேயே பூ வாங்கி கட்டி கூடையில் சுமந்து கடற்கரைக்கு விற்பனைக்கு எடுத்து வந்து விடுவாராம்.மிஞ்சிய பூக்களை ஈரத்துணியில் சுற்றி மறு நாள் காலை அக்கம் பக்கத்தினருக்கு விற்பனை செய்து விடுவாராம்.”போட்டோ எடுக்கட்டுமா” என்று கேட்டபொழுது ”ஐயையோ..அம்புட்டுதேன்.என் வூட்டுக்காரன் தொடப்பக்கட்டயை தூக்குவான்”என்றவர் ”தாரளமா என் பூக்க்கூடையை எத்தினி போட்டோ வோணுனாலும் எட்துக்கோ.என்னை வுட்ரு”என்று பயந்து போய் பூக்கூடையை முன்னால் வைத்து விட்டு தூரமாகபோய் நின்றவரை அனைவரும் சிரிப்புடன் பார்த்தோம்.

கலர்கலராய் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்யும் சிறுவன்.”நாளொன்றுக்கு 200 ரூபாய்க்கு விற்பனையாகும்.அதனை வைத்துத்தான் குடும்பத்தை காப்பாற்றுகின்றேன்”என்று பெரிய மனுஷன் தோரணையில் கூறும் அச்சிறுவனை கலங்கிய மனதுடன் பார்த்தோம்.அநேக உழைப்பாளிகள் சிறுவர்களாக இருப்பது மனதினை பாதித்த விஷயம்.படிப்பு,ஜாலி,கொண்டாட்டம் என்று குதூகலாமாக கழிக்க விரும்பும் இப்பதின்ம வயதில் இச்சிறார்கள் தங்கள் ஆசாபாசங்களை கடல்மண்ணுக்கடியில் புதைத்து விட்டு சுமையை தோளில் சுமந்து,ஏழ்மையை கண்களில் சுமந்து,ஏக்கத்தை நெஞ்சினில் சுமந்து கடல் மண்ணில் பாதம் புதைய புதைய உழைத்து ஓடாய் தேய்பவர்கள்.

சிறுவர்களை கவரும் பலூன் விற்பனை செய்பவர்.இவர்களில் சிலர் காலையில் பள்ளி சென்று படித்து விட்டு மாலையில் பீச்சுக்கு வந்து விற்பனை செய்வதைக்கேட்கும் பொழுது உண்மையில் சற்று சந்தோஷமாக இருந்தது.”அக்கா..நான் படித்து கலேட்டர் ஆகணும்க்கா”என்று கூறும் பொழுது மனதார வாழ்த்தி விட்டு வந்தோம்.

மிஷினில் கரும்பு ஜூஸ் பிழிந்து ஐஸ்கட்டிகளைப்போட்டு விற்பனை செய்பவர்.காலையில் வெளியில் வியாபாரம் செய்து விட்டு மாலையில் பீச்சை நோக்கி ஓடி வருபவர்.பீச்சில் கூட்டம் அடங்கும் வரை நின்று வியாபாரம் செய்து தம்பி தங்கைகளை படிக்கவைக்கின்றார்.

குதிரை மேல் குழந்தைகளை ஏற்றி சவாரி செய்து சிறார்களை மகிழ்விப்பவர்.கண்ணுக்கெட்டும் தூரம் வரை சின்ன ரவுண்டுக்கு 30 ரூபாய் வாங்கினாலும் குதிரை தீனி,பராமரிப்புச் செலவு.குதிரைக்கு மருத்துவம் என்று இவருக்கு வருமானம் சவாலாகவே உள்ளது.இது போல் ஒட்டக ஓட்டிகளும் இருக்கின்றனர்.
பீச் என்றதும் தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டலை நினைவுக்கு வராதவர்களே இருக்க முடியாது.இப்படி சுண்டல் விற்கும் சிறுவர்கள் மட்டும் நூற்றுக்கணக்கில் இருக்கின்றனர்.அம்மா செய்து தரும் சுண்டலை மாங்காய்த்துருவலால் அலங்கரித்து பேப்பர் சுருள்களில் விற்கின்றார்.”சாதரண நாளில்1 ,1 1/2 கிலோ சுண்டல் போடுவோம்.சனி ஞாயிறுகளில் 2 ,2 1/2 கிலோ சுண்டல் விற்பனை செய்வோம்.”என்கின்றார்.இவர்களுக்கு கோடைகாலம் பிறந்தால்தான் கொண்டாட்டம்.மார்ச் மாதத்திற்காக வழி மேல் விழி வைத்து காத்து இருக்கும் ஜீவன்கள்.

சோன்பப்டியை விளக்கு வெளிச்சத்தில் வைத்து விற்பனை செய்பவர்.இவர்கள் பெரும்பாலும் வட இந்தியர்களாகவே இருக்கின்றனர்.”டிணிங்..டிணிங்..”என்று மணி அடித்தவாறு இவர்கள் வருவது யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே”என்பதை நினைவு கூறும்.

வீட்டில் கை முறுக்கு செய்வதில் மனைவி மக்கள் ஈடுபட்டு அவர்கள் செய்த முறுக்கை இவர் பீச்சில் விற்பனை செய்கின்றார்.பக்குவமாக மாவரைத்து பதமாக சுட்டெடுத்த முறுக்குகள்.பல வருடகாலங்களாக முறுக்குத்தொழிலில் இவரது குடும்பம் ஈடு பட்டு அதில் ஸ்பெஷல் ஆகி விட்டனராம்.நாளொன்றுக்கு 300,400 ரூபாய்க்கு விற்பனை ஆகும்.கோடைகாலம்தான் எங்களுக்கு கொண்டாட்டம்”என்கின்றார்.

டிஸ்கி:நான் எடுக்கத் தயங்கிய சில புகைப்படங்களை என் தங்கையின் பத்து வயது மகன் ஹம்ஜா பாய்ந்து பாய்ந்து கிளிக் செய்து உதவினான் ”பிளாக்கில் இன்னிக்கே போட்டு விடுங்க” என்று உத்தரவு இட்டுவிட்டான்.






December 10, 2010

கீழக்கரையும்,டிசம்பரும்!

டிசம்பர் என்றால் சங்கீதசீசன்,கிருஸ்துமஸ்,மழை,குளிர்,கண்களைப்பறிக்கும் டிசம்பர் பூக்கள் இத்யாதி..இத்யாதி ஞாபகத்திற்கு வரும்.கீழக்கரையை அறிந்தவர்களுக்கு டிசம்பரில் நடக்கும் கோலாகலங்கள் தான் நினைவுக்கு வரும்.
வெளிநாடு,வெளியூர்களின் வசிக்கும் அநேக கீழை வாசிகள் சீஸனுக்கு வேடந்தாங்கல் நோக்கி படை எடுக்கும் பறவைககள் போல் படை எடுப்பார்கள்.ஊரே களைகட்டி விடும்.வருடம் முழுக்க இருண்டிருந்த சாலைகள் வெளிச்சத்தில் மின்னும்.பூட்டப்பட்ட வாசல் கதவுகள் திறந்து ஜெகஜோதியாக இருக்கும்.திசைக்கொன்றாக வாழும் உறவினர்கள் இப்பொழுதான் ஒருவரை ஒருவர் சந்தித்து அன்பை பகிர்ந்து கொள்வார்கள்.

எல்லோரும் ஒன்று கூடும் இம்மாதத்தில்தான் வீட்டு விஷேஷங்களை நடத்துவார்கள்.ஒரே நாளில் ஏழெட்டு திருமணங்களில் கலந்து கொள்ளும் சூழ்நிலையும் வரும்.

விஷேஷம் கருதி இறைச்சி,மீன் காய்கறிகள்,பூக்கள்,பழங்கள் விலை உச்சத்தில் எகிறிவிடும்.கல்யாணவிருந்துக்காக ஆங்காங்கே ஆட்டுமந்தைகளை ஓட்டிச்செல்பவர்களையும்,வருடந்தோறும் ஆராவரம் இல்லாத சாலைகளில் வெளியூர்களில் இருந்து வந்த கார்களும்,மனிதர்களும் தெருவை அடைத்துக்கொண்டு போக்குவரத்தையே ஸ்தம்பிக்க செய்து விடுவார்கள்.
தெருவெல்லாம் அலங்காரமும்,வண்ணவிளக்குகளும்,ஆர்ப்பாட்டமும் அமர்க்களப்படும்.இம்மாதம் கீழைவாசிகள் வீடுகளில் சமைப்பதற்காக அடுப்பெறிவதே அபூர்வம் என்றாகி விடும்.ஏனெனில் திருமணத்திற்காக சமைக்கப்படும் சாப்பாட்டை பிளாஸ்டிக் பக்கெட்,டப்பாக்கள்,ஸ்டீல் தூக்குகளில் போட்டு வீட்டுக்கு வீடு விநியோகம் பண்ணி விடும் பழக்கம் இங்கு நடை முறையில் உள்ளது.ஒரே நாளில் நாண்கு,ஐந்து திருமண வீடுகளில் இருந்து வரும் சாப்பாடை வைத்துக்கொண்டு திணறிக்கொண்டிருப்பார்கள் இல்லத்தரசிகள்.

பிரியாணி,எண்ணெய் கத்தரிக்காய்,தயிர்பச்சடி,ஸ்வீட்,கோழிப்பொரியல் போன்றவற்றை தனித்தனியாக பேக் செய்து பிளாஸ்டிக் ,சில்வர் வாளிகளில் நிரப்பி அனுப்பப்படும் சாப்பாடு ஒரு முழுக்குடும்பமே சாப்பிடலாம்.நெய் சோறு,இறைச்சி குழம்பும்,தாளிச்சா,மாசிக்கறி,தக்காளி ஜாம் போன்றவற்றையும் இதே போல் பேக் செய்து விநியோகிப்பார்கள்.இவை எல்லாம் அலுத்துப்போகும் அளவுக்கு மாத இறுதில் நடக்கும் திருமணங்களில் இதன் கூட பொட்டுக்கடலை துகையலுடன்,ரசமும் சேர்த்து கல்யாணவிருதை அனுப்புவார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

தெருக்களில் திருமண ஊர்வலம் நடைபெறுவதால் போக்குவரத்து தடைபட்டும், தெருக்களிலும் வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்துப்போவதும் அடிக்கடி நிகழ்வதுண்டு.

ஒரே தெருவில் பல்வேறு திருமணங்கள் நடைபெறுவதால் திருமணத்திற்கு வெளியூரில் இருந்து வருபவர்கள்திருமண வீட்டைக் கண்டு பிடிக்காமல் திண்டாடும் அவலமும் நடைபெறும்

இலை விரித்து மேஜைகளில் உணவுவகைகள் பறிமாறப்பாட்டாலும் இஸ்லாத்தின் கொள்கையான சகோதரத்துவம்,சமத்துவம் மிளிற இங்கு இன்னும் சஹன்களில் உணவருந்தும் பழக்கமும் நடைமுறையில் உள்ளது.
திருமணத்தைத் தொடர்ந்து விருந்துகளும்,பிக்னிக்குகளும் அமர்க்களப்படும்.பிருமாண்டமான திருமணங்களும்,ஆர்ப்பாட்டங்களும்,ஆடம்பரங்களிலும் திளைக்கும் மக்கள் திணறித்தான் போவார்கள்.கீழைநகரின் ஆடம்பரத்திருமணங்களை கீழை வாசி ஒருவரே விளாசித்தள்ளி இருப்பதைப் பாருங்களேன்.

வீதிக்கு வீதி ஓலைப்பாய் விரித்து பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் சீலா மீன்,நெய்மீன் என்று அழைக்கப்படும் வஞ்சிரமீனை கிலோ 600 விலைகொடுத்துக்கூட வாங்கிச்செல்ல மக்கள் தயாராக இருப்பார்கள்.

கீழை நகரின் ஸ்பெஷல் உணவு வகைகளான தொதல்,ஓட்டுமா,பணியம்,கலகலா,நவதானியம் போன்ற திண்பண்டங்கள் செய்து விற்பனை செய்பவர்களுக்கு இம்மாதம் செமத்தியான வியாபரம் கிடைக்கும்.


எண்ணிலடங்கா ஆடுகள் கறி சமைப்பதற்காக வெட்டப்படும் பொழுது ஆட்டின் தலை,குடல்,கால் போன்றவை சாதாரண நாட்களில் ஒரு செட்டின் விலை 250 இல் இருந்து 300 வரை விற்கப்பட்டாலும் இந்த சீஸனில் வெறும் 50 ரூபாய்க்கு விற்பனை ஆகும் பொழுது கூட வாங்கிச்செல்ல ஆள் இருக்காது.


பூவியாபாரிகள்,பந்தல் அலங்கரிப்போர்,விளக்குகள் மற்றும் அலங்காரவிளக்குகள் ,ஜெனரேட்டரகள் வாடகை விடுவோருக்கு இந்த சமயத்தில் பயங்கர டிமாண்ட் இருக்கும்.

பள்ளி வாசல் மினாராக்களில் விளக்கு வெளிச்சம் தகதகக்கும்.டிஸம்பர் சீஸனுக்காவே புத்தாடை எடுப்பவர்களும் உண்டு.

பந்தியில் இலையை எடுப்பதற்கும்,ஏனைய சிறுசிறு வேலைகளுக்கும் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட அரவாணிகளை சேவை செய்ய அழைத்து கூலியைக்கொடுக்கும் மனித நேயத்தையும் பல திருமணக்களில் காணமுடியும்..கரன்ஸிகளை கணக்கில்லாமல் கொட்டி பிரமிப்பை ஏற்படுத்தும் திருமணங்களில் கூடவே ஏழை பெண்களுக்கும் சேர்த்து தங்கள் இல்லத்திருமணத்துடன் தங்கள் செலவிலேயே திருமணம் செய்து வைக்கும் நல்ல பண்பினையும் பாராட்டத்தான் வேண்டும்.

என்னதான் வெளிநாடுகளில் வெளியூர்களிலும் வசித்தாலும் தங்களது வீட்டுத் திருமணங்களை சொந்த ஊரான கீழக்கரையில் அதுவும் டிசம்பர் மாதத்தில் நடத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள் கீழைவாசிகள்.பழங்கால நவாப்களின் திருமணங்கள் பண்டைய ராஜபுத்திர வம்சத்து திருமணங்களுக்கு நிகரான ஆடம்பரம், கமகம பிரியாணி,அலங்காரங்கள்,விருந்தோம்பல்,வந்து குவியும் வி.ஐ.பி.க்கள் பட்டாளம்,நட்சத்திரப்பட்டளம் என திருமணங்கள் ராஜகளை கட்டும்.


பெண், மாப்பிள்ளை சமாசாரத்தை எல்லாம் ‘சம்பந்திகள்’ வெளிநாட்டிலோ,வெளியூரிலோ வைத்து சந்தித்துப் பேசி முடித்துவிடுவார்கள். ஆனால், கல்யாணத்தை மட்டும் கட்டாயம் டிசம்பரில் கீழக்கரையில் வைத்துத்தான் நடத்துவார்கள். வெளிநாடுகளில் பெரும்பாலும் டிசம்பர் மாதம்தான் விடுமுறை காலமாகும். அதைப் பயன்படுத்தித்தான், சொந்தவூரை நாடி வந்து விஷேஷங்களை நடத்துகின்றனர்.பிறந்த மண்ணுக்கு நாங்க செய்கின்ற மரியாதைதான் இந்த ‘டிசம்பர் திருமணங்கள்’ என்று பெருமிதப்படுகின்றனர் கீழைவாசிகள்.


டிசம்பர் திருமணங்கள் கீழக்கரையில் ஏழை பணக்காரன் என்ற பாகுபாட்டை அதிகப்படுத்துகிறது,விலை வாசி உயருகின்றது,கோடிகளை கொட்டி இறைத்து அனாச்சாரம் தலை விரித்தாடுகின்றது,ஊரே ஸ்தம்பித்து விடுகின்றது,இது முடியாத எளியவர்கள் ஏங்கிப்போய் விடுகின்றார்கள் ,பெருமைக்காக ஆடம்பரம் செய்து விட்டு பின்னர் அவஸ்த்தைப்படுகின்றனர் என்று பல சர்ச்சைகள் இருந்து வந்தாலும் விஞ்ஞான மாற்றங்களால் உலகம் விரிவடைந்து, பல புதிய புதிய விஷயங்கள் நாளும் அவதரித்து வந்தாலும், கீழக்கரை மக்களின் கலாசார பேணலும், பிறந்த மண்ணுக்கு அவர்கள் காட்டும் மரியாதையும் ‘டிசம்பர் திருமணங்கள்’ ஆயிரம் சர்ச்சைகளை கடந்தும்,எண்ணற்ற விமர்சனங்களைக்கடந்தும் பிரியாணி போல் மணக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்!


December 4, 2010

இனிய கானங்கள்



பெண்கள் மனதை வெளிபடுத்தும் பாட்டு, அதுவும் பெண் பாடிய பாட்டு, அதுவும் பெண் குரலிலேயே இருக்கிற பாட்டு, அதுவும் பத்து பாட்டு பாடவேண்டுமென்ற தொடர் பதிவுக்கு தோழி ஆசியா அழைத்து இருக்கின்றார்.மிகவும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இப்பதிவை சற்று மெனக்கெட்டு பதிவு செய்கின்றேன்.ஆயிரம்தான் புதிய பாடல்கள் வந்து போனாலும் பழைய கானம் காலத்தால் அழியாதது.நாம் பிறக்கும் முன்னர் வெளிவந்த படத்தினைக்கூட ரசிக்கத்தூண்டும் வண்ணம் அமுதமாக காதில் வந்து பாயும் நான் ரசித்த,ரசிக்கும் பாடல்களை நீங்களும் கேட்டு மகிழ்ந்து கருத்தும் ஓட்டும் இட்டு விட்டு செல்லுங்களேன்.

எல்.ஆர் ஈஸ்வரியின் கணீர் குரல் என்றுமே எனக்கு பிடிக்கும்.ஆஹா..கேட்க கேட்க மனதில் உற்சாகமல்லவா பிறக்கும்.

1.துள்ளுவதோ இளமை
தேடுவதோ தனிமை
அள்ளுவதோ இனிமை
அத்தனையும் புதுமை



2.எல்.ஆர் ஈஸ்வரி ஹஸ்கி வாய்ஸில் பாடும் விடிவெள்ளி படத்தில் வரும் அற்புதமான பாடல்.எப்பொழுது கேட்டாலும் செய்யும் வேலைகளை ஒத்திப்போட்டு விட்டு லயித்து கேட்டு மகிழும் பாடல் இது.

காதோடுதான் நான் பாடுவேன்
மனதோடுதான் நான் பேசுவேன்
விழியோடுதான் விளையாடுவேன் -
உன் மடிமீதுதான் கண் மூடுவேன்

வளர்ந்தாலும் நான் இன்னும் சிறு பிள்ளைதான்
நான் அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்
உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா?
உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா?
குல விளக்காக நான் வாழ வழி காட்டவா?

காதோடுதான் நான் பாடுவேன்....

பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது
இதில் யார் கேட்டு என் பாட்டை முடிக்கின்றது


3.எல்.ஆர் ஈஸ்வரியின் பாடல்கள் எல்லாமே என்னைக்கவர்ந்தவைதான்.அதிலும் இந்த பாடலை உற்சாகமாக பாடி கேட்பவரையும் உற்ச்சாகத்திற்கு அழைத்து செல்லும் ரகசியம் எல் ஆர் ஈஸ்வரிக்கு கைவந்த கலை.கேளுங்கள்.மனதிற்குள் பூ பூக்கும்.

பட்டத்து ராணி பார்க்கும் பார்வை
வெற்றிக்குத்தான் என என்ன வேண்டும்
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை
வெற்றிக்குத்தான் என என்ன வேண்டும்
நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்
சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்
நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்
சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்

துடித்து எழுந்ததே
கொதித்து சிவந்ததே
கதை முடிக்க நினைத்ததே
நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்
சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்

நாடு கண்ட பூங்கொடி
காடு வந்த காரணம் ஒரு முறை எண்ணிப்பார்
தேடி வந்த நாடகம்
கூடி வரும் வேளையில் மறுபடி என்னைப்பார்
நாடு கண்ட பூங்கொடி
காடு வந்த காரணம் ஒரு முறை எண்ணிப்பார்
தேடி வந்த நாடகம்
கூடி வரும் வேளையில் மறுபடி என்னைப்பார்
வலை போட்டுப் பிடித்தாலும் கிடைக்காதது
துடித்து எழுந்ததே கொதித்து சிவந்ததே
கதை முடிக்க நினைத்ததே
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை
வெற்றிக்குத்தான் என என்ன வேண்டும்



4.இதுவும் பி.சுசீலா சோகம் இழையோட இழையோட பாடும் அழகிய பாடல்.

சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே
சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே
ஏன் ஏன் ஏன் என்னுயிரே
இன்னொரு கைகளிலே யார் யார் நானா
எனை மறந்தாயா ஏன் ஏன் ஏன் என் உயிரே
மங்கல மாலை குங்குமம் யாவும் தந்ததெல்லாம் நீதானே
மணமகளைத் திருமகளாய் நினைத்ததெல்லாம் நீதானே
என் மனதில் உன் மனதை இணைத்ததும் நீதானே
இறுதிவரைத் துணையிருப்பேன் என்றதும் நீதானே


5.பி.சுசீலாவின் கருத்தாழமிக்க பாடல்.குரலில் சோகம் இழையோட பாடும் பொழுது மனதை இறகால் வருடுவது போல் இருக்கின்றது.

நினைக்கத்தெரிந்த மனமே
உனக்கு மறக்கத்தெரியாதா?
பழகத்தெரிந்த உயிரே
உனக்கு விலகத்தெரியாதா


6.இதுவும் பி .சுசீலா பாடிய ஒரு அருமையான பாடல்.பாடலில் குரலை கொஞ்சலாக்கி அற்புதமாக பாடி அசத்துகின்றார்.

செல்லக்கிளியே மெள்ளப்பேசு
தென்றல் காற்றே அள்ளி வீசு


7.பி.சுசீலா பாடிய ஒரு அழகான கானம்.துணையின் பிரிவை ஏக்கத்துடன் எப்படி உருகிப்பாடுகின்றார் பாருங்கள்.

மாலைப் பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி
மணம் முடித்தவர் போல் அருகினிலே-ஓர்
வடிவு கண்டேன் தோழி
மங்கை என் கையில் குங்குமம் தந்தார்
மாலையிட்டார் தோழி
வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில்
சாய்ந்து விட்டேன் தோழி
அவர் மறவேன் மறவேன் என்றார் உடனே
மறந்து விட்டார் தோழி
மறந்து விட்டார் தோழி ஆஆஆஆஆ
மாலைப் பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி



8.எஸ் ஜானகி பாடிய மிக பிரபலாமான பாடல் 1970களில் அனைவரின் வாயிலும் முணுமுணுத்த பாடல்.அதில் சுஜாதாவின் எளிமையான நடனமும்,ஜானகியின் தேன் குரலும்,இளையராஜாவின் இசையும் சேர்ந்த ஒரு அற்புதமான கலவை.

மச்சானைப்பார்த்தீங்களா
மலைவாழைத் தோப்புக்குள்ளே,
குயிலக்கா கொஞ்சம்
நீ பார்த்துச்சொல்லு வந்தாரா பார்க்கலையே
அவர் வந்தாரா பார்க்கலையே


9.கன்னிப்பருவத்திலே என்ற படத்தில் எஸ் .ஜானகி உருகி,உருகிப்பாடி நம்மை உருக வைக்கும் பாடல் இது.

பட்டுவண்ண ரோசாவாம்
பார்த்தகண்ணு மூடாதாம்
10.வாணி ஜெயராம் பாடிய எனக்குமட்டுமல்ல பெண்கள் அனைவருக்கும் பிடித்த ஒரு பாடல்.இசையும் வாணிஜெயராமின் பாஸந்தி குரலும் சேர்ந்து..ஆஹா..அடடா...எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டு ரசிக்கலாம்.

மல்லிகை-என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ?
எந்நேரமும் உன்னாசைபோல்
பெண்பாவை நான் பூச்சூடிக் கொள்ளவோ?
வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
திங்கள்மேனியைத் தொட்டுத் தாலாட்டுது!
குளிர் காற்றிலே தளிர் பூங்கொடி!
கொஞ்சிப்பேசியே அன்னபப் பாராட்டுது
என் கண்ணன் துஞ்சத்தான்
என் நெஞ்சம் மஞ்சம்தான்
கையோடு நானள்ளவோ
என் தேவனே உன் தேவி நான்
இவ்வேளையில் உன் தேவை என்னவோ

இந்த தொடர் பதிவை

மேனகா

கீதாஆச்சல்

ஹுசைனம்மா


மின்மினி.

லக்ஷ்மி அம்மா

தேனம்மை

ராமலக்ஷ்மி

சாருஸ்ரீராஜ்

ஜலீலா

இலா

ஆகியோரை பதிவிட அழைக்கின்றேன்.மேற்கண்டவர்களின் பாடல் ரசனை எப்படி உள்ளது என்று அறிய ஆவல்.விரைவாக பதிவிடுங்கள் நட்புக்களே.

டிஸ்கி: பாடல்வரிகள் கொண்ட சிகப்புவண்ண எழுத்துக்களை கிளிக் செய்து பாடல்களை ரசியுங்கள்.




December 1, 2010

கோடீஸ்வரர்களின் வங்கி.





கணக்கு ஆரம்பிக்க தனி மேலாளர்

காஃபி ஷாப்

ஆடை மாற்றும் நவீன அறைகள்

ஓய்வெடுக்கும் அறைகள்

கான்ஃப்ரன்ஸ் அறைகள்

24 மணி நேர பாதுகாப்புப்பெட்டக வசதி.

பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து எடுத்த நகைகளை அங்கேயே அலங்கார அறையில் அமர்ந்து அலங்கரித்து வைபவங்களுக்கு சென்றுவிட்டு மீண்டும் அணிந்த நகைகளுடன் வங்கிக்கு திரும்பி பெட்டகத்தில் அணிந்திருக்கு நகைகளை கழற்றி வைக்கும் வசதி.

வாடிக்கையாளர்களை வீட்டுக்கே வந்து காரில் அழைத்து சென்று வேலை முடிந்ததும்
வீட்டிற்கு திரும்ப கொண்டு விடும் அளப்பறிய சேவை.

வரிகள், சார்ட்டர்ட் அக்கெளண்டன்ட் தொடர்பான உதவிகள்.

விரும்பினால் வாடிக்கையாளர்களின் இருப்பிடத்திற்கே நேரில் வந்து வங்கியின் சேவைகளை செய்து முடித்துத்தரும் ஊழியர்கள்.

வீடியோ கான்ஃப்ரன்ஸ் வசதி

வைஃபி வசதி

லிஸ்டைப்பார்த்து வியப்பாக உள்ளதா?வேறு எந்த நாட்டிலோ இந்த வங்கி அமையப்பெறவில்லை.நமது நாட்டிலேயேதான்.கசங்கிப்போன பத்து ரூபாய் நோட்டுகளை வைத்துக்கொண்டு கேஷ் கவுண்டரில் பணம் கட்ட கியூவில் நிற்கும் குப்பை பொறுக்கும் தொழிலாளியைக்கூட வாடிக்கையாளராக வைத்திருக்கும் அதே பாரதஸ்டேட் வங்கிதான் இப்படி ஒரு நட்சத்திரக்கிளையை ஹைதரபாத் நகரில் ஆரம்பித்து இருக்கின்றது.

கோடிகளில் புரள்பவர்களுக்கு மட்டுமே தொடங்கப்பட்ட இவ்வங்கி ஹைதராபாத் பஞ்ஞசரா ஹில்ஸ் பகுதியில் "கோஹினூர் பஞ்ஞசரா பிரிமியம் பேங்கிங் செண்டர்" என்ற பெயரில் 4000 சதுர அடி பரப்பளப்பளவில் இந்த ஒரே கிளைக்கு 80 லட்ச ரூபாயை செலவு செய்து நடச்சத்திர வங்கியை பணக்கற்றைகளில் நீச்சலடிக்கும் கோடீஸ்வரர்களுக்கு வலைவிரித்து இருக்கின்றது.குறிப்பாக ஹைதராபாத் நிஜாம் பகுதியில் வசிக்கும் கோடீஸ்வர்களான பழைய இஸ்லாமிய நவாபுகளை சுண்டி இழுக்கும் வண்ணம் இக்கிளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புகழ் பெற்ற வைரத்தை தன் பெயராக கொண்ட இவ்வங்கி பிஸினஸ் செண்டர்களுக்கு மாணிக்கம்,மரகதம் - Ruby and Emerald என்றும்,காஃபி ஷாப்புக்கு முத்து - pearl என்றும்,கான்ஃப்ரன்ஸ் ஹாலுக்கு நீலக்கல் - Sapphire என்றும்,பாதுகாப்பு பெட்டக அறைக்கு கோமேதகம் - Topaz என்றும் நவரத்தினக்களின் பெயர்களை சூட்டி அலங்கரித்து இருக்கின்றது.


இந்த வங்கில் கணக்கு வைத்துக்கொள்ள தகுதியான அம்சங்கள்.
1.பெரும் கோடீஸ்வரர் ஆக இருக்க வேண்டும்.

2.கோடீஸ்வரர் தான் என்று வங்கியே தீர்மானித்து வங்கி நிர்வாகமே வாடிக்கையாளருக்கு கணக்கு தொடங்க அழைப்பு விடுக்க வேண்டும்.

3.கணக்கு வைத்துக்கொள்ள குறைந்த பட்சத்தொகை ஜஸ்ட் ஒரு கோடி மட்டுமே.

4.ஹ்ம்ம்ம்ம்ம்....நமக்கும் தொலைத்தொடர்பில் ஒரு அமைச்சர் பதவியை போட்டு கொடுத்தாங்கன்னா ஒன்றென்ன ரெண்டு ,மூன்று அக்கவுண்டே இந்த வங்கியில் சுலபமாக திறந்து விடலாம்.



November 19, 2010

அஞ்சறைப்பெட்டி - 4



சாலைகளில் வழிநெடுகிலும் விளம்பர நிறுவனத்தினர் லட்சகணக்கில் செலவு செய்து வைக்கும் விளம்பரபோர்டுகளை மாநகராட்சி அத்தனையும் அகற்றி விளம்பரத்துறையினரை பெரும் நஷ்டத்துக்குள்ளாக்கி வருகின்றது என்பது கண் கூடாக காணும் அவலம்.இதற்கு விளம்பர போர்டுகள் இருப்பதால் விபத்துகள் நடந்தேறி வருகின்றது என்று கூறுகின்றனர்.வழி நெடுகிலும் சுவர்களில் கண்களையும் கருத்தையும் கவரும் விதம் அழகிய படங்களை வரைந்து அழகு படுத்துகிறேன் பேர்வழி என்று சிலருக்கு லாபம் கொடுத்து இருக்கின்றார்களே.அந்த சித்திரங்களால் விபத்து நடக்காதா என்ன?இல்லை இனி சாலைகளில் விளம்பர போர்டுகள் நிறுவப்படாமலே இருந்து விடுமா?


தமிழ்நாட்டில்,குறிப்பாக சென்னையில் ஆள் கடத்தல் சம்பவம் நிறைய நடகின்றது.இளைஞர்களையும் கடத்திப்போய் கோடிக்கணக்கில் பேரம் பேசுகின்றனர்.சமீபத்தில் நடந்தேறிய ஒரு தெரிந்த குடும்பத்திற்கு நேர்ந்த அவலம் மிகவும் வருந்ததக்கது.குற்றவாளிகளை பிடித்து அதிகபட்ச தண்டணை கொடுத்தால்த்தான் இது போன்ற அவலங்கள் நடந்தேறுவது குறையும்.

தியாகராயநகரில் இருக்கும் மன்னார்ரெட்டி தெருவில் ஒரு டாஸ்மாக் கடை.வழிநெடுகிலும் கையில் பாட்டிலும்,கிளாஸுமாக குடிமக்கள் பண்ணும் அலப்பரை,சண்டை நிகழ்வுகள் சகிக்க முடியவில்லை. போததற்கு சுண்டல் வண்டிகளும்,பஜ்ஜி வண்டிகளும் தெருவையே அடைத்துக்கொண்டு அந்த பகுதில் பெண்களும்,சிறுவர்களும் நடந்து செல்லவே அச்சப்பட வேண்டிய சூழ்நிலை.அங்கு குடி இருப்பவர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குறியது.இந்த தெருவில்மட்டுமல்ல சென்னையின் அநேகப்பகுதியில் இந்த அவலம் நடந்தேறி வருகின்றது.இன்னொரு கொடுமை என்னவென்றால் மிக பிரபலமான ஒரு மாலில் இதே கடையைக்கண்டு அதிர்ந்தேன்.அரசாங்கம் லாபம் பெறும் நோக்கத்திற்காக பொது மக்கள் இத்தனை அவஸ்தைப்பட வேண்டுமா?எப்பொழுது மனசாட்சி உள்ள அரசியல் வாதிகள் பிறப்பார்கள்?

எங்கள் வீட்டருகே அதிகம் பிரபலமில்லாத ஒரு தேசிய மயமாகப்பட்ட வங்கியின் கிளை சமீபத்தில் திறந்தனர்.அதில் கணக்கு வைத்துக்கொள்ள வேண்டி வங்கிக்கு சென்றேன்.தேவையான சில proof கள் எடுத்து சென்றுஇருந்தாலும் introducer இல்லாமல் புதிதாக கணக்கு தொடங்க இயலாது என்றார்.எனக்கு தெரிந்தவர்கள் யாரும் இல்லாததை எடுத்து சொன்னேன்.ஆனால் வங்கியின் மேலாளர் "அதுதான் ரூல்ஸ்" என்று அழுத்தமாக கூறிவிட்டார்."யாரவது கிடைத்தால் மீண்டும் வருகிறேன்" என்று கூறி அப்ளிகேஷனை வாங்கிக்கொண்டு திரும்பிய பொழுது பின்னால் இருந்து "மேடம் மேடம்.." என்ற குரல் கேட்டு திரும்பினேன்.ஒரு இளைஞர் "introducer கையெழுத்து வேண்டுமென்றால் நான் போட்டுகொடுக்கிறேன்.இதே பிராஞ்சில் நான் அக்கவுண்ட் வைத்துள்ளேன்" என்றார்.மனதில் அவநம்பிக்கையுடன் அவரை நான் பார்த்த பொழுது அடுத்த வார்த்தையில் அதிர்ந்து போனேன்."அதிகம் வேண்டாம் மேடம் ஒரு திரீ ஹண்ட்ரட் ருபீஸ் கொடுங்கள் போதும்" என்றாரே பார்க்கலாம்.கையில் இருந்த ஹேண்ட் பேக்கை இறுக்கமாக பிடித்துக்கொண்டு பதில் ஏதுவும் சொல்லாமல் ஓட்டமும் நடையுமாக வீட்டுக்குள் மூச்சிரைக்க ஓடி வந்து விட்டேன்.எப்படி எல்லாம் மனிதர்கள் இருக்கிறார்கள் பாருங்கள்.

November 15, 2010

ஈதுல் அல்ஹா நல்வாழ்த்துக்கள்

இன்நன்னாளில் அனைவருக்கும் என் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்.குடும்பத்தினருடனும்,நட்புக்களுடனும்,நெருங்கியவர்கள் கூடவும் இன்னாளை சந்தோஷமாக கொண்டாடிட வாழ்த்துகிறேன்.
ஹஜ்ஜுப்பெருநாள் என்றால் புத்தாடை,தக்பீர்,ஈதுதொழுகை,குர்பானி,பெருநாள்
பணம்,கொண்டாட்டம் ,இறைச்சிவகை கலந்த சாப்பாடு குறிப்பாக பிரியாணி என்று நீண்டு
கொண்டே போகும்.ஒரு முறை வித்தியாசமான சாப்பாடு செய்து குடும்பத்தினரை அசத்துங்களேன்.புது வகை குறிப்புகளுக்கு இருக்கவே இருக்கின்றது சமையலில் கொடிகட்டிப்பறக்கும் வலைப்பூ தோழிகளின் குறிப்புகள்.கண்டு மகிழ்ந்த பின் வீட்டில் செய்து உண்டு மகிழ்ந்து பெருநாளை சந்தோஷமாக கொண்டாடுங்கள்.


சிக்கன் பிரைட் ரைஸ்


செஸ்வான் மட்டன் நூடுல்ஸ்

கிரில்ட் சிக்கன்


சிக்கன் லாலிபாப்

சில்லி பிரான்

மட்டன் ரோல்

தந்தூரி சிக்கன்.