January 29, 2010

பாரதத்தின் முதல் பெண்கள்




பிரதமர் - இந்திராகாந்தி

ஆளுனர் - சரோஜினி நாயுடு

முதல்வர் - சுதேஷாகிருபாளினி

உயர்நீதிமன்ற - பாத்திமாபீவி
நீதிபதி

தலைமைநீதிபதி - லீலாசேத்

சபாநாயகர் - மீராகுமார்

குடியரசுத்
தலைவர் - பிரதீபாபட்டீல்

மேயர் - அருணாஆஸிப் அலி

காபினட்
அமைச்சர் - ராஜ்குமாரி அம்ரித் கவுர்

மருத்துவர் - ஆனந்த பாய்ஜோஷி

பொறியாளர் - லலிதா

கமிஷனர் - ரமாதேவி

ஐ பி எஸ்
அதிகாரி - கிரன்பேடி

புற்றுநோய்
மருத்துவர் - முத்துலட்சுமிரெட்டி

துணை
வேந்தர் - ஹன்ஷாமேத்தா

பத்திரிக்கையாளர் - சுவர்ணக்குமாரிதேவி

விமானி - துர்காபானர்ஜி

மாலுமி - உஜ்வாலாபட்டீல்

விமானப்படை - ஹரிதாகவுர்
விமானி

ஒலிம்பிக்
வீராங்கனை - மேரி டிசோஷா

ஒலிம்பிக்கில் - கர்ணம் மல்லேஷ்வரி
பதக்கம் வென்றவர்

எவரஸ்ட்டில்
ஏறியவர் - பச்சோந்திரிபால்

கட்சித்தலைவர் - அன்னிபெஸண்ட்

பங்குச்சந்தைத்தலைவர் - ஓமனா ஆப்ரஹாம்

பேருந்துஓட்டுனர் - வசந்தகுமாரி

ரயில் ஓட்டுநர் - சுரேகா யாதவ்

அதிகபாடல்
பாடியவர் - லதா மங்கேஷ்கர்

உலக அழகி - ரீட்டா ஃபேரியா







January 24, 2010

அஞ்சறைப்பெட்டி - 1



ஆதங்கம்
_________

தீவுத்திடலில் 36 வது சுற்றுலா கண்காட்சி நடைபெற்று வருகிறது.முன்பெல்லாம் கண்களுக்கும்,வயிற்றுக்கும் மட்டுமல்லாமல் அறிவுக்கும் தீனி கிடைக்கும் வண்ணம் பொதுப்பணித்துறையினர் அரங்குகள் அமைத்து பார்வையாளர்களை பரவசப்படுத்துவார்கள்.இப்பொழுது ஸ்டால்களுக்கும்,சிறுவர்களைப்பரவசபடுத்தும் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இருந்தார்கள்.அரங்குகளை இப்பொழுது நிறைய தேடித்தேடி அலைய வேண்டியதிருந்தது.



கோபம்
______

ரயில் பயணம் என்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.வழக்கம் போல் அமைதியாக பயணம் செய்ய வேண்டி செகண்ட் ஏசியில் புக் செய்து பயணம் செய்தேன்.நிறைய பர்த் காலி."ஹப்பாடா"என்று மூச்சு விட்ட மறு நிமிஷம் அடுத்த ஸ்டேஷன்.குபு குபு வென்று ஒரு பெரிய கும்பல் ஏறி அனைத்து பர்த்களையும் நிரப்பி விட்டனர்.பெண்கள் கீழ் பர்த்தில் அமர்ந்திருக்க சற்று கூட மன சாட்சி இன்றி மேல் பர்த்தில் மூன்று பேர் அமர்ந்துகொண்டு கால்களை கீழே தொங்கப்போட்டுக்கொண்டு அரட்டையில் ஈடு பட்டிருந்தவர்களை பார்க்க எரிச்சல்.கீழ் பர்த்தில் அமர்ந்திருந்த பெண்கள் சங்கடப்பட ,எனக்கோ கோபம் தாங்காமல்"தம்பிகளா!கீழே லேடீஸ் இருக்காங்க"என்று சற்று கோபமாக கூறியதும் உடனே கீழ்படிந்தார்கள்.இரவு 10 மணியானதும் அவர்களின் சப்தமான அரட்டை கச்சேரி உச்ச ஸ்தாயியில் ஆரம்பித்து விட்டது.என்னை முந்திக்கொண்டு அடுத்த கம்பார்ட்மெண்டில் இருந்து கோபமாக வெளிபட்ட ஒரு சகோதரர் "தூங்குங்கப்பா..தூங்கப்போற சமயத்தில் சப்தம் போட்டு பேசறீங்களே"என்று கேட்டதும்தான் தாமதம்.அத்தனை பேரும் பிலு பிலு என்ற பிடித்த பிடியில் அந்த சகோதரர் போயே போய் விட்டார்.அவர்கள் பொது இடத்தில் மற்றவர்களுக்கு இடைஞ்சல் கொடுத்து அடித்த கொட்டத்தை தட்டிக்கேட்க மறு ஆள் இல்லை.



ஆச்சரியம்

__________

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு சென்று இருந்தேன்.அங்கு சிகிச்சைக்கு வரும் கூட்டத்தைப்பார்த்து எனக்கு அவ்வளவு ஆச்சரியம்.கண் சிகிச்சைக்கென்றே எவ்வளவு பெரிய மருத்து மனை,எவ்வளவு மருத்துவர்கள்,எத்தனை ஊழியர்கள்!!!மெடிக்கல் கன்சல்ட்டிங் என்று போனாலே காந்தி தாத்தா சிரிக்கும் கரன்ஸிகளை அள்ளும் மருத்துவ உலகில் வெறும் ஐம்பது ரூபாய் கன்ஸல்ட்டிங் சார்ஜ் வாங்கிக்கொண்டு பரிசோதிக்கிறார்கள் ஒரே நோயாளியை பல மருத்துவர்கள்.மிக குறைந்த செலவில் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அரவிந்த் கண் மருத்துவமனையில் கிடைக்கும் என்றால் அது மிகை ஆகாது.




எரிச்சல்
_______

பொதுவாக எனக்கு கூட்டம் என்றால் ரொம்பவே அலர்ஜி.பொங்கல் நேரம் சென்னையே களை கட்டி விட்டது.சங்கமம்,பீஸ் மாநாடு,சுற்றுலா கண்காட்சி,நுகர்வோர் கண்காட்சி,சர்க்கஸ்,நகைகண்காட்சி,கடைகளில் சேல்ஸ் இத்யாதி..இத்யாதி...இங்கே இருந்து கொண்டு எப்படி எதற்குமே போகாமல் இருப்பது?அனைத்துக்கும் போய் பை நிறைய சாமான்களுடன்,வயிறு நிறைய உணவும்,மனம் முழுக்க எரிச்சலுடனும் வீடு திரும்பியதும்"சே..சே..என்ன கூட்டம்..?இனி போகவே கூடாது "என்று தீர்மானம் செய்தாலும் லீவில் வந்த வாண்டுகள் கெஞ்சலுக்கு மீண்டும் மறுநாள் ஹேண்ட்பேக்கை தோளில் மாட்டிக்கொண்டு கிளம்பவேண்டியதுதான்.





சந்தோஷம்
_________

இப்பொழுதெல்லாம் லக்ஷரி பிளாட் என்பது சென்னையின் தாரக மந்திரம் ஆயிரதெட்டு வசதிகளை வாரி வாரி வழங்கி பணத்தை கறந்து அழகிய கனவு இல்லத்தை தந்து விடுகிறார்கள்.அந்த அழகிய இல்லத்தை நம்மிடம் தரும் நாளை கெட் டு கெதர் என்று ஏற்பாடு செய்து , லட்சகணக்கில் செலவு செய்து பில்டர்கள் வாடிக்கையாளர்களை அசத்துவது இன்றைய பேஷன்.நூற்றுக்கும் மேல் இருக்கும் குடியிருப்பில் ஒருத்தொருக்கொருத்தர் அறிமுகபடுத்தவும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது.ஆடல்,பாடல் மேஜிக்,கருத்தரங்கு,ஐந்து நட்சத்திர உணவகத்தில் இருந்து வரவழைக்கபட்ட பஃபே இப்படி ஆடம்பரமாக,அட்டகாசமாக கலக்குகின்றனர்.2010 ஆரம்ப நாளன்று அப்படி ஒரு ஈவண்ட் என்னை மிகவும் சந்தோஷப்படுத்தியது.


January 22, 2010

கதா பாத்திரம் - 4

சீட்டுக்கார சீதா
****************
கஞ்சி போட்டு மொடமொடப்பான காட்டன் சேலையை நேர்த்தியாக கட்டி,நெற்றியில் சின்னதாய் ஸ்டிக்கர் பொட்டும்,வகிட்டில் செந்தூரமும் மங்கலரமாக ஜொலிக்க தளர பின்னிய ஜடையில் துளி பூவும்,பளிச்சென்ற தோற்றமும்,எப்பொழுதும் மோனலிஷாவை நினைவுபடுத்தும் முகமும்,தோளில் கனமான ஹோல்ட் ஆலும்..போதும்..போதும் சீதாவை அறிமுகப்படுத்தியது.

சீட்டு பிடிக்கும் சீதா என்றால் ஊரில் தெரியாதவர்களே இருக்க முடியாது.ஏலச்சீட்டு,குலுக்கல் சீட்டு மட்டுமில்லாமல்,தன் அப்பாவின் போஸ்ட் மேன் பதவியைபயன் படுத்தி,தபால் துறையில் சிறுசேமிப்பு திட்டத்தில் முகவராகவும் இருக்கிறாள்.

கல்யாணம்,கண்காட்சி,திருவிழா,கோவில்,வங்கி,கடற்கரை,கடைகளில் போடும் தள்ளுபடி,ஹாஸ்பிடல்களின் விஸிட்டர் அவர்ஸ்..இப்படி எங்கே வேண்டுமானாலும் சீதாவின் முகம் தெரியும் தன் டிரேட் மார்க் ஹோல்டால் பிளஸ் புன்னகையுடன்.

கோவிலில் அக்ரஹாரத்தெரு மாமியைப்பார்த்தால்

"மாமி..எப்படி இருக்கேள்..?ஆத்திலே சவுக்கியமா?50000 ஆயிரம் ரூபாய் சீட்டு அடுத்த மாசம் முடியறதே.அடுத்தாக்கலே 1 லட்சரூபாய் சீட்டு பிடிக்கபோறேன்.ரெண்டா போட்டுடுவோமா?"

"பெருமாளே ரெண்டாவா" மாமி அதிர,

"ஏம்மாமி பெருமாளை அழைக்கிறேள்..பெருமாள் அனுக்ரஹம்நோக்கு எப்பவும் உண்டும்.கவலையே படாதேள்.நல்ல படியா சீட்டு போடுங்கோ.ஐம்பதாயிரம் சீட்டு போட்டு உங்கள் இளைய மகன் வேலைக்கு டெபாஸிட் கட்டினேளே.இப்ப பாருங்கோ ஜாம்,ஜாம் என்று முள்ளங்கி பத்தையாட்டம் சம்பாதித்துண்டு வந்து கொடுக்கறாளோ இல்லியோ."

இப்படி நைச்சியமாக பேசிப் பேசியே மாமியை மட்டுமல்ல,அவரது மகனை,சின்ன மருமகளை என்று மாமியின் குடும்பத்தில் குறைந்தது மூன்று சீட்டுகளாவது போடச்செய்து விடுவாள்.

ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் சந்தோஷில் இருந்து,வங்கியை சுத்தம் செய்யும் காத்தாயி வரை அனைத்துதரப்பினரும் இவளது கஸ்டமர்கள்.தன் குலோப்ஜாமூன் பேச்சாலும்,சிரித்த முகத்தாலும்,சாதுர்யத்தாலும் சீட்டு போடவே கூடாது என்று தீர்மானமாக இருப்பவர்களைக்கூட நொடியில் மாற்றிவிடும் வல்லமை இவளுக்குண்டு.


வேலைக்காரி சின்க் முன் நின்று கொண்டு பாத்திரம் தேய்த்துக்கொண்டிருக்கையில்,இவள் ஸ்டவ் முன் நின்று தோசை வார்த்துக்கொண்டே

"ஏண்டி..முனிம்மா..உன் வூட்டுக்காரன் இப்பல்லாம் குடிக்காமல் ஒழுங்கா சம்பளத்தைக்கொண்டு வந்து தர்ரானா?" கேட்டதுதான் தாமதம் பத்து நிமிஷம் வாய் மூடாமல் முனியம்மா புருஷனை திட்டி தீர்ப்பதை பொறுமையாக கேட்டு கொண்டிருந்து விட்டு இவள் ஒரு கால் அவர் அட்வைஸ் மூட்டையை அவிழ்த்து விட்டு முனியம்மாவை கூல் படுத்தி விட்டு

"முனிம்மா..மாசம் 300 ரூபாய் ஆர் டி போடுறியே இந்த மாசத்துடன் முடியறதே:என்று ஆரம்பித்து விடுவாள்.

"ஆமாங்கம்மா..கழுத்து வெறுமனே மூளியா இருக்கும்மா. ஒரு செயின் வாங்கலாம் என்று இருக்கேன்.நாளைக்கு பொண்ணுக்கும் ஆவுமே"

"அட பைத்தியகாரி..அதை வாங்கி வச்சி உன் குடிகார புருஷன் கிட்டே இருந்து எப்படி காபந்து பண்ணப்போறே?பேசாமே மொத்த காசையும் அப்படியே இந்திர விகாஷ் பத்திரமா வாங்கித்தர்ரேன்.ஏழே வருஷத்திலே பணம் அப்படியே டபுளா போய்டும்"

"டபுளாவா.."

"பின்னே..உன் பொண்ணு கல்யாணம் பண்ணும் சமயம் வரவும்,இது மெச்சூர்ட் ஆகவும் சரியா இருக்கும்"இப்படி நைச்சியமாக பேசி பேசி சாதித்து விடுவாள்.தவிர அடுத்த மாதத்தில் இருந்து புதிதாக முனியம்மாவை மாதம் ஐநூறு ரூபாய் ஆர்டி போடவும் வைத்து விடுவாள்.

வாசலில் பூ விற்றுக்கொண்டிருந்த பூக்காரியிடம் ஒரு முழப்பூ வாங்கிக்கொண்டு அதை அழகாக வாழை இலையில் சுருட்டி வாங்கி தன் ஹோல்ட் ஆலில் வைத்துக்கொண்டு சரசர வென்று நடந்து பஜனைக்கோவில்தெரு பத்மா வீட்டிற்கு ஆஜர் ஆகி விடுவாள்.உள்ளே நுழைந்ததுமே பூவை எடுத்து பவ்யமாக நீட்டி"வெள்ளிக்கிழமை அதுவுமா சும்மா எப்படி வர்ரது?பிடியுங்கோ மதுரை மல்லி"இப்படி பேசி காரியத்தை சாதித்துக்கொண்டு விடுவாள்.


"ஆர்த்தி..உனக்கு இந்த வருஷம் இன்கிரிமெண்ட் உண்டோ?பையனை பல்கா டொனேஷன் கொடுத்து எல் கே ஜி யில் சேர்த்து விட்டியே?குழந்தை சமர்த்தா போறானா?உன் பையனாச்சே.குழந்தைக்கு சமர்த்துக்கு குறைச்சல் இருக்குமா என்ன?இப்ப பையன் எங்கே..?"

அனுசரனையாக விசாரித்து குழந்தை அந்த பக்கம் வரும் நேரம் பார்த்து

"கண்ணா..ஸ்கூலுக்கு சமர்த்தா போறியா.நல்லா படிக்கணும்.அம்மாவுக்கு தொந்தரவு செய்யாமல் இருக்கணும் சரியாடா ராஜா"

வாய் பேசிக்கொண்டே கை ஹோல்ட் ஆல் ஜிப்பை திறக்கும்.ஒரு மஞ்ச் பாரை எடுத்து குழந்தையிடம் நீட்டி

"சாப்பிடுடா செல்லம்"என்று சொல்லி விட்டு அவள் வெளியேறும் பொழுது அந்த மாசம் குலுக்கல் ,ஏல சீட்டு,ஆர் டி க்கு உரிய பணம் அனைத்தையும் வாங்கி ஹோல்ட் ஆலில் பத்திரபடுத்திக்கொண்டதுமில்லாமல் புதிதாக இருபத்தி ஐந்து ஆயிரம் ரூபாய்க்கு இந்திர விகாஷ் பத்திரம் வாங்க செக் ஒன்றும் வாங்கி இருப்பாள்.

இப்பொழுது ஊரில் உள்ள அந்த தனியார் ஆஸ்பத்திரி வாசலில் பழக்கடைக்காரனிடம் பேரம் பேசி நாலு ஆப்பிளும்,ஆறு சாத்துகுடியும் வாங்கி கொண்டு லிப்ட் ஏறி 307 ஆம் வார்ட் முன் நின்று கதவை டொக் டொக் என்று தட்டுவாள்.

"ரஹீம் பாய் சலாம் அலைக்கும்.இப்ப உடம்பு எப்படி இருக்கு.உங்களுக்கு உடம்புக்கு முடியலேன்னு கேட்டுட்டு ஷாக் ஆகிட்டேன.அல்லா புண்ணியத்தில் நாளைக்கு டிஸ்சார்ஜா?அப்பா..ரொம்ப சந்தோஷம்.."

இப்படி அனுசரனையாக விசாரித்து அடுத்த முறை வீட்டுக்கு போய் இருக்கும் பொழுது ரஹீம் பாயின் சம்சாரம் புதிதாக ஆரம்பிக்கப்போகும் சீட்டுக்கு பணத்தை தயாராக எடுத்து வைத்து இருப்பாள்.

"யப்பா..வீட்டை பளிச்ன்னு வச்சிக்கறதில் உனக்கு நிகர் வேறு யாரும் இல்லை .அட..உன் கைங்காரியத்தில் தரை எல்லாம் பளிங்கு மாதிரி மின்னுது. வீட்டுக்கு சாமான் வாங்கிப்போடனும் என்றுதானே என் கிட்டே சீட்டு போட்டே.இந்த முறை விழுந்துடுச்சின்னா நல்லதா ஒரு லெதர் சோபா வாங்கி போட்டுடு.அழகா இருக்கும்.அடுத்த மாசம் ஏலசீட்டு புதுசா ஆரம்பிக்காப்போறேன்.."கண்டிப்பாக ஆர்டர் பிடித்து இருப்பாள்.


சீதாவின் பொண்ணுக்கு அரையாண்டு பரிட்சை முடிந்து ஸ்கூலில் ஓப்பன் டே .கையில் எக்ஸாம் பேப்பர்,புரோகிரஸ்கார்ட் சகிதமாக கிளாஸ் மிஸ்ஸிடம் அக்கறையாக மகளின் படிப்பைப்பற்றி பேசி விட்டு

"மிஸ் .."இந்த மாதம் புதுசா சீட்டு ஆரம்பிக்கப்போறேன்."என்று ஆரம்பித்து விடுவாள்.எதிரே வரும் புது மிஸ்ஸைப்பார்த்து"யாரு இது?புது அப்பாயிண்ட் மெண்டா?என்ன சப்ஜெக்ட்..சரண்யா..செவண்த் பி செக்ஷன் அவள் அம்மாதான் நான்"

தன்னை சுருக்கமாக அறிமுகபடுத்திக்கொண்டு

"அப்படியே நயன் தாரா மாதிரி இருக்கீங்க மிஸ்.முகத்திற்கு பேஷியல் பண்றீங்களா?"இப்படி பேசியே ஒரு ஸ்நேகிதத்தை உண்டாக்கி விடுவாள்.அப்புறம் என்ன?பெண்ணின் கிளாஸ் மிஸ் மூலம் ரெகமண்ட் செய்யப்பட்டு இந்த நயன் தாரா மிஸ்ஸும் ரொம்ப சீக்கிரத்தில் இவளின் கஸ்டமர் ஆகி விடுவார். ஸ்கூலை விட்டு வெளியேறும் பொழுதும் சும்மா இருந்ததில்லை.

வாசலில் உட்கார்ந்திருக்கும் வாட்ச்மேனிடம்
"என்னப்பா..ஏழுமலை.உன் பையன் எப்படி படிக்கறான்?நல்லா படிக்கசொல்லு.இந்த வருஷம் பப்ளிக் எக்ஷாம் ஆச்சே. ஒரே வருஷத்தில்; முடியும் குலுக்கல் சீட்டு ஆரம்பிக்கப்போறேன்.அவசியம் போட்டுடு.பையன் காலேஜ் போறச்சே கண்டிப்பா உதவும்.செலவுக்கப்புறம் சேமிப்புன்னு இருக்காமல் சேமிப்புக்கப்புறம் செலவு என்ற பாலிஷியை கடைபிடி.அதான் லைஃபுக்கு ஷேஃப்."குட்டியாக அட்வைஸ் பண்ணி விட்டு போனால் பலன் அடுத்த முறை சீதா ஸ்கூல் கேட்டை கிராஸ் செய்யும் பொழுது ஏழுமலை ஜேப்பியில் கை விட்டவாறு "மேடம்..மேடம்.."என்று குரல் கொடுப்பான்.

தெருவில் விசுக்,விசுக் என்று நடந்து போகும் பேங்க் காஷியர் சியாமளாவை வேக நடையில் நெருங்கி"சியாமு..உன் அம்மா உடம்பு இப்ப எப்படி இருக்காங்க?நேற்று மாங்காடு போனேன்.இந்தா பிரசாதம்.அம்மாவுக்கு கொண்டு போய் கொடு.அவசியம் ஒரு நாள் அம்மாவைப்பார்க்க வர்ரேன் .நான் ரொம்ப கேட்டதாக சொல்லு என்ன?"தன் டிரேட் மார்க் ஹோல்ட் ஆலில் இருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து நீட்டுவாள்.ஏதும் பேசுவதற்கு சந்தர்ப்பம் வைக்காமல் சியமளாவே

"அக்கா வீட்டு பக்கம் வந்தீங்கன்னா புதுசா ஆரம்பிக்கப்போற சீட்டுக்கு பணத்தை வாங்கிட்டு போங்க"என்று விடுவாள்.சியமாளா வின் கன்னத்தை செல்லமாக தட்டி

"இதை விட எனக்கு வேறு என்ன வேலை.சாயங்காலம் அவசியம் வர்ரேன்" என்பாள்

இப்படியாக தன் ஹோல்ட் ஆல் குலுங்க,மோனலிஷா புன்னகையுடன் ஊரை வலம் வந்து கொண்டு நடையால் தனது ஹெல்த்துக்கும்,அனுசரனையான பேச்சால் நூற்றுக்கணக்கான கஸ்டமர்களும்,ஸ்நேககிதங்களும்,மனிதர்களும் ,அதனால் ஏகபட்ட லாபமும் தனக்கு கிடைப்பது மட்டுமால்லாமல் தன் கஸ்டமர் அனைவருக்கும் சேமிப்பாலான பலனையும் தரும் சீதா பாராட்டப்படவேண்டடியவள்தானே?

January 18, 2010

அறிவான சந்ததிகள் - 2




மனித மூளை ஒரு மாபெரும் அதிசயம்.புத்திசாலித்தனம்,அறிவு என்பது மூளையில் உள்ள நியுரான்கள் எங்ஙனம் ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளன என்பதைபொறுத்தே அமைந்து இருக்கிறது .60000மில்லியனுக்கும் அதிகமான நியுரான்கள் மனித மூளையில் அமையப்பட்டுள்ளது என்பது விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பு.தாயின் வயிற்றில் கரு தோன்றிய சில வாரங்களிலேயே கருவின் மூளையில் நியுரான்களின் உற்பத்தி ஆரம்பமாகி விடுகிறது.அதனால்தான் என்னவோ இன்றய மருத்துவ உலகம் குழந்தை வயிற்றில் இருக்கும் பொழுதே ஆக்கப்பூர்வமான சில,பல செயல்களை கருவுற்ற தாய்மார்கள் செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்கிறது.குழந்தை பிறந்து உலகின் முதல் சுவாசத்தை ஆரம்பித்த உடனேயே நமது கடமைகளும் ஆரம்பமாகி விடுகிறது.




குழந்தை பிறந்ததும்:
கருப்பையின் இளம் சூட்டில் இருந்து வெளிபட்டு உடனேயே தாயின் வயிற்றில் சிசுவை கிடத்துகின்றனர்.கருவறையின் கதகதப்பு சில சதவிகிதங்களாவது சிசு பெறும் அல்லவா?தான் இருக்கும் கிளைமேட்டின் நிலைக்கேற்ப சிசு தன்னை தயார்படுத்திக்கொள்கிறது.வாயை அசைத்து பாலை குடிக்க கற்றுக்கொள்கிறது.இந்த நேரத்தில் தாயின் அரவணைப்பும்,கதகதப்பும் அவசியம் தேவை.குழந்தை முகத்தைப்பார்த்து ஏதாவது பேசிக்கொண்டே இருப்பது தாயின் கட்டாய வேலகளில் ஒன்று என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.நேரம் கிடைக்கும் பொழுது குழந்தையுடன் பேசலாம் என்றிராமல் இதற்கெனவே நேரத்தை ஒதுக்கிகொள்ளுங்கள்.




1மாதம்:
இப்பொழுது வண்ணங்களை ஆராயும் .கண்களை சுழற்றிப்பார்க்கும் தன்மை ஏற்படுகிறது.இப்பருவத்தில்தான் முளையின் வளர்ச்சி முறையாக ஆரம்பமாகி விடுகிறது.வண்ணமயமான ஆடைகள்,பொருட்கள்,விளையாட்டு சாமான்கள்,திரை சீலைகள் என்று குழந்தையின் சுற்றுபுற சூழ்நிலையை வண்ண மயமாக அமைத்துக்கொள்ளுங்கள்.மென்மையான ஒலி எழுப்பகூடிய கிளுகிளுப்பைகளை உபயோகியுங்கள்.




3மாதம்:
இந்த நேரத்தில் குப்புறப்படுப்பது,திட உணவு கொடுத்தல்,உட்காருதல் போன்றவை செயல் படுத்தும் காலம்.அறையில் சீரியல் பல்புகளை தொங்க விட்டு சற்று தூரத்தில் நின்று அதனை பார்க்க செய்யுங்கள்.இதனால குழந்தையின் அறிவுத்திறன் பெருகும்.




6 மாதம்:
விளையாடுதல்,நடத்தல்,புரிந்துகொள்ளுதல் போன்ற செயல்கள் இருக்கும்.இச்சமயத்தில் மென்மையான விளையாட்டுப்பொருட்களை கஞ்சத்தனம் பண்ணாமல் வாங்கிகொடுங்கள்.உடைக்க விடுங்கள்.கயிற்றினால இழுக்கக்கூடியவண்டிகள் ,பொம்மைகள் போன்றவை நலம் பயக்கும்.




1வருடம்:
பொருட்களை தூக்கி வீசவும்,கீழ்படியவும்,பேச ஆரம்பிக்கவும் கூடிய பருவம்.மழலைகள் நாம் சொலவதை விட செய்வதைத்தான் அதிகம் ஏற்றுக்கொள்ளும்.ஆகவே நல்ல விஷயங்கள்,பண்பாடுகள்,செயல்களை குழந்தையின் எதிரே செய்வதற்கு பழகுங்கள்.வெறுப்பையும்,எரிச்சலையும்,கோபத்தையும்,சண்டை சச்சரவுகளையும் குழந்தை முன் காட்டாதீர்கள்.நல்ல பழக்க வழக்கங்களைப்பார்க்கும் மழலை தன் ஆழ்மனதில் பதித்துக்கொள்ளும்.பிற்காலத்தில்; நல்ல பிரஜையாக உருவெடுக்கும்.




2 வருடம்:
இந்நேரத்தில் குழந்தை ஆராயும் மன நிலைக்கு வந்திருக்கும்.மூளையின் சக்தி மேம்படும் பருவம் இது.நிறைய வெளியிடங்களுக்கு அழைத்து செல்ல வேண்டும்.எதிரே வரும் ஒவ்வொரு சம்பவத்தினையும் விளக்கிக்காட்டவேண்டும்.மழலையில் கேட்கும் வினாக்களுக்கெல்லாம் சலிக்காமல் கருத்தான பதில் கூறி தெளிவை ஏற்படுத்த வேண்டும்.டிவியில் மியூஸிக் சானலை ஆன் செய்து "மை நேம் இஸ் சுப்பு லக்ஷமி" போன்ற பாடலை அலற விட்டு அது ஆடுவதை ரசிக்காமல் அறிவுப்பூர்வமாக நேஷனல் ஜியாகிரபிக்,டிஷ் கவரி சேனல் போன்றவற்றை காட்டி விலங்குகள்,பறவைகள் போன்றவற்றை போட்டுக்காட்டி விளக்கம் சொலலாம்.பகுப்பாயும் திறனை வளர்க்கவேண்டும்.குழந்தையையும் பெரிய மனிதராக பாவித்து முக்கியத்துவம் கொடுங்கள்.




3 வருடம்:
நன்றாக பேச கற்றுக்கொள்கிறார்கள் .மொழிவளர்ச்சி அதிகரிக்கூடிய வயது.குழந்தை மீது தாய் அதிகம் கவனிக்க கூடிய பருவம் இது.குழந்தையின் ஆட்டம்,சேட்டைகளால் அசம்பாவிதம் ஏதும் நடந்து விடாமல் கண்களில் விளக்கெண்ணை விட்டு பார்த்துக்கொள்ள வேண்டிய சிக்கலான பருவம்.ஞாபகசக்தியை மேம்படுத்த நர்சரி ரைம்ஸ்,எழுத்துக்கள்,எண்கள் போன்றவற்றை பயிற்றுவிக்கவேண்டும்.அலுக்காமல் நல்ல கதைகள் கூறி கேள்வி கேட்டு பதில் கூறி தெளிவு படுத்த வேண்டும்.அவர்களையும் வினா எழுப்ப பழக்க வேண்டும்.வீர தீர கதைகள் கேட்கும் குழந்தைகள் தானும் சாதிக்க வேண்டும் என்ற ஆசைப்படுவார்கள்.வெற்றி பெற்ற மனிதர்களின் சரித்திரம் கேட்கும் மழலைகள் தானும் அவ்வாறே வரவேண்டும் என்ற எண்ணத்துடன் வளர்வார்கள்




4 வருடம்:
குழந்தையின் செயல்களை உன்னிப்பாக கவனியுங்கள்.நட்பு ஆரம்பமாகும் பருவம் இது.சேட்டைகள் தாங்காமல் அடிப்பதை குறைத்துக்கொள்ளுங்கள்.அடி வாங்கும் குழந்தை ஆராயும் அறிவு குறைந்து விடும்.சுறுசுறுப்பும் குறைந்து விடலாம்.நயமான வார்த்தைகள் பேசி பழகுங்கள்.




5 வருடம்:
நல்ல பள்ளியாக ஒரு வழியாக சேத்து இருப்பீர்கள்.குழந்தைக்கு கல்வி மீது ஈர்ப்பும்,ஆர்வமும் ஏற்படுத்த வேண்டியது பெற்றோருக்கு மட்டுமல்ல ஆசிரியருக்கும் உள்ள கடமை.ஆகவே குழந்தை வகுப்பாசிரியர்களுடன் தொடர்பு வைத்துகொள்ளுங்கள்.அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் விதமாக பேசுங்கள்.குழந்தையின் ஆர்வம்தான் அது அதி புத்திசாலியாக நிர்மாணிக்கும்.ஆகவே குழந்தையின் ஆர்வத்தை மேம்படுத்துங்கள்.




6 வருடத்திற்கு மேல்:
கூச்ச சுபாவம்,குறைந்த கற்கும் திறன்,சோம்பல் போன்ற குறைபாடுகள் இருக்கும் குழந்தைகள் இனம் கண்டு திருத்தபடவேண்டியது பெற்றோர் மற்றும் ஆசிரியர் கடமை.பிறரிடம் எப்படி பழகுதல்,உறவினர்கள்,பெரியவர்களுக்கு எப்படி மரியாதை கொடுத்தல்,எப்படி நடந்து கொள்ளுதல் போன்றவை அழகுற அறிந்து கொண்டு இருக்கக்கூடிய பருவம் இது.பிள்ளைகளின் அபார உடல்,மூளை வளர்சியை பெற்றோர் அறிய முடியும்.அறிவையும்,ஆற்றலையும்,உடல் பலத்தையும் எப்படி மேம்பட வைக்கவேண்டும் என்று நல்ல ,சத்துமிகு உணவுபழக்கவழக்கங்களாலும்,அரவணைப்பான பேச்சுகளாலும்,வாஞ்சையான அறிவுரைகளாலும்,தோழமை உணர்வு மிக்க நெருக்கத்தாலும் பிள்ளைகளை பண்பட வைக்கவேண்டிய கால கட்டமிது.




8 வயதுக்கு மேல்:
விளையாடும் ஆர்வம் அதிகமிருக்கும் பருவம் இது.படிப்பு மட்டுமல்லாமல் மற்ற நல்ல விஷயங்களிலும் ஈடுபட வையுங்கள்.பெற்றோர்கள் நல்லதொரு வழிகாட்டியாக ரோல்மாடலாக இருங்கள்.பெரியவ்ர்கள்,உறவினர்களிடம் எப்படி மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுக்கொடுங்கள்.கூட்டுக்குடும்பம் காணாமல் போய்க்கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் வீட்டிற்கு வரும் உறவினர்களிடம் அமர்ந்து அளவளாவும் சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுங்கள்.வெறுமனே ஹாய்..ஊய்..என்றிராமல் பொறுப்புடன் நடந்துகொள்ளும் பண்பை வளருங்கள்.




10 வயதுக்கு மேல்:
குழந்தை படிக்கும் முறை,அறை,நேரம்,நட்பு,அவர்களின் பொழுது போக்கு,செயல் முறை,உணவுபழக்கவழக்கங்கள்,பணப்புழக்கம் போன்றவற்றில் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமிது.நீங்கள் அம்மா,அப்பா என்பதுடன் நல்ல நண்பன் முறையிலும் குழந்தைகளை அணுகுங்கள்.



பதின் பருவம்:
இப்பருவத்தில் உங்கள் பிள்ளைகளுக்கு அதி முக்கியம் கொடுங்கள்.நட்பு என்ற சொல்லே மந்திரம் என்று இருப்பார்கள்.அதிலும் ஒரு அளவை நிர்மாணிக்க கற்றுக்கொடுங்கள்.பிள்ளையின் ஆர்வமும்,நோக்கமும் எந்த துறையின் மீது உள்ளதோ அதனை மேலும் விரிவு படுத்த உதவுங்கள்.உதாரணமாக் கிரிக்கெட்டில் ஆர்வம் இருந்தால் கோச்சிங் கிளாஸில் சேர்த்துவிடத்தயங்காதீர்கள்.வலுகட்டாயமாக உங்கள் விருப்பங்களை புகுத்தும் பொழுதுதான் பிரச்சினையே ஆரம்பமாகிறது.இக்கால கட்டத்தில் ஜங்ஃபுட் போனன்றவற்றில் அதீத ஆர்வம் காட்டுவர்.அவைகளை குறைத்து நல்ல சத்துமிக்க ஆகாரங்களை,காய் பழ வகைகளை அதிகம் உட்கொள்ள வையுங்கள்.சுயமாக நல்ல முடிவெடுக்கும் திறனை ஊக்குவியுங்கள்
அறிவுப்பூர்வமான .ஆக்கமிகு விஷயங்களை அறியச்செய்வது,ஊக்குவித்தல்,அமைதியான சூழல் ஏற்படுத்திக்கொடுத்தல்.நல்ல பண்பாடு,நல்ல சிந்தனைகள்,நல்ல நட்புகள் போன்றவை சுற்றி இருக்குமாயின் பிள்ளைகளின் தன்னம்பிக்கை வலுப்பட்டு,நல்ல ,அறிவான சந்ததியினராக உருவெடுப்பார்கள்.சகாப்தத்தை படைப்பார்கள்.வெற்றி பெற்ற மனிதர்களாக ஜொலிப்பார்கள்.சாதனையாளர்களாக சாகப்தம் படைப்பார்கள்.

நம் அனைவரது சந்ததிகளுக்கும் அந்த பேறு கிடைத்திட வேண்டும்.

January 4, 2010

கங்காரு கண்டத்தில் மேற்படிப்பு.


பிள்ளை வெளிநாடு சென்று படித்து வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்லவேண்டும் என்ற ஆசையுடன் வங்கியில் லட்சகணக்கில் கடன் வாங்கி மகனை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து கண்கள் நிறைய கனவுகளுடனும்,மனது நிறைய எதிர்பார்புகளுடனும் இருப்பதில் இன்றைய பெற்றோர் அநேகர் ஒருவருக்கொருவர் போட்டியாக இருக்கின்றனர்.இதுதான் இன்றைய நம் நாட்டுபெற்றோர்களின் நிலை.
இதில் எனக்கு மிகவும் நெருங்கிய ஸ்நேகிதி ஒருவரும் தன் ஒரே மகனை அனுப்பி வைத்து இருக்கிறார்,நேற்று நடந்த நிகழ்வும்,அதனைத்தொடர்ந்து என் ஸ்நேகிதி போன் செய்து என்னிடம் பதட்டப்பட்டதையும் தொடர்ந்து இந்த பதிவு.

ஆஸ்திரேலியாவில் இத்தனை நாள் இனவெறிதாக்குதல் நடந்து பூச்சாண்டி காட்டிக்கொண்டே இருந்த பற்பல வருந்ததக்க சம்பவங்கள் இன்று ,பூதாகரம் எடுத்து மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டது.

ஆம்,இந்திய மாணவர் 21 வயதான நிதின் கார்க் என்பவர் கொல்லப்பட்ட செய்திதான்.எத்தனை கனவுகளுடன் அவரது பெற்றோர் மாணவரை படிக்க அனுப்பி வைத்தனரோ?முகம் தெரியாத அந்த பெற்றோரை நினைக்கையில் என் கண்கள் தளும்புகின்றது.

கடந்த மூன்ற ஆண்டுகளாக மாணவர்களை குறி வைத்து தாக்கும் போங்கு இன்று உச்ச கட்டமாகி ஒரு மரணத்தில் வந்து நின்றுஇருக்கின்றது.

அந்நாட்டு காவல்துறையினரின் மெத்தனபோக்கு மட்டுமல்லாமல்,அரசாங்கத்தின் மெத்தனப்போக்கும்,வேடிக்கைப்பார்க்கும் அலட்சியமும் இன்று நம் அத்தனைபேரையும் பதற வைத்து இருக்கின்றது.

உள் நாட்டு மாணவர்கள் தங்களுக்கு மதிப்பில்லாமல் போய்விடுமோ,வேலைவாய்ப்பில் பாதிப்பு வருமோ என்று அஞ்சியே இவ்வன்முறையில் ஈடு படுகின்றனர்.

குற்றம் செய்யப்பட்ட அந்நாட்டினரை அந்நாட்டு அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுத்து தண்டணை கொடுத்து மற்றவர்கள் மீண்டும் தவறுகள் செய்யா வண்ணம் கடும் தண்டனை விதிப்பதும் இல்லை.அப்படியே கண்டு கொண்டாலும் ஜெயில் வாழ்க்கையில் சகல வசதி வாய்ப்புகளையும் வழங்கி குற்றவாளிகளை பெருக்குவது கண்டிக்கத்தக்கது.

நம் அரசாங்கம் வெறும் அறிக்கைகளுடன் நின்று விடாமல் உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும்.இப்படி நிகழ்வுகள் இனி நடக்காமல் தடுக்கப்படவேண்டும்.இதுவே முதலும்,இறுதியுமாக நடந்த துர்சம்பவமாக இருக்கட்டும்.

கடைசியாக பெற்றோருக்கு ஒரு அன்பு வேண்டுகோள்:
இவ்வளவு நடந்தும் ஆஸ்திரேலியா எம்பஸிக்கு பிள்ளையை மேற்படிப்பு சம்பந்தமாகதொடர்பு கொள்வதை பற்றி சிந்தியுங்கள்.அதிகம் முன்கோபமும்,இளமைத்துள்ளலும்,பயமறியாத்தனமும்,அதீத ஆர்வக்கோளாறும்,அசாத்திய துணிச்சலும்,ஹீரோத்தனமும் வாலிப பருவத்தின் ஆரம்பத்திலே சற்று என்ன மிகவுமே அதிகமாக இருக்கும்.இது இயற்கை.இவ்விளைய பருவத்தில் நாம் பெற்றெடுத்த செல்வங்களை,நம் கனவுகளை,நம் இலட்சியங்களை இந்த கரடுமுரடான பயணத்திற்கு உட்படுத்த வேண்டுமா?துஷ்டனைக்கண்டால் தூர விலகு என்பதைப்போல் விலகி இருப்பதே மேல்.நம் சந்ததியினருக்கும் பாதுகாப்பு.படிக்க வைக்கவும்,பிழைக்கவும் எத்தனையோ வழிகள்,இடங்கள் ,பாதுகாப்பான தேசங்கள் உள்ளது.ஆபத்தான இலக்கு வேண்டாமே.யோசியுங்கள்.