July 29, 2012

வலையோசை - 1



இன்று அநேக வலைபூதார்களும் எவ்வித லாபநோக்கின்றி வலைப்பூ எழுதி மனநிறைவு ஒன்றினயே லாபமாக பெற்று வருகின்றனர். அங்கீகாரம் கொடுக்கும் வகையில் அவர்களின் வலைப்பூக்களைப்பற்றி அறிமுகம் செய்து வரும் பணியினை பிரபல பத்திரிகையான ஆனந்த விகடன் செய்து பதிவர்களை உற்சாகப்படுத்தி வருவது வரவேற்கக்கூடியவிடயம்.இனி வாரா வாரம் ஆனந்தவிகடனின் என் விகடனில் அறிமுகப்படுத்தும் வலைப்பூக்களைப்பற்றிய விபரங்களை தொடர்ந்து என் வலைப்பூவில் பகிர உத்தேசித்துள்ளேன்.இவ்வார என் விகடன் பதிப்புகளில் வெளியான வலைப்பூக்களின் அறிமுகங்கள் இதோ.

1.கோவை பதிப்பில் திருச்செங்கோட்டில் தனியார் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக பணிபுரியும் முனைவர் இரா குணசீலன் http://www.gunathamizh.com/வேர்களைத்தேடி என்ற வலைப்பூவில் சமூகம் சார்ந்த விஷயங்களை எழுதி வருகிறார்.
2.சென்னை பதிப்பில் குடும்ப உறவுகள்,வாழ்க்கையின் யதார்த்தங்கள்,தத்துவங்கள் என சகலத்தையும் நகைச்சுவை கலந்து யாவரும் கேளிர் என்ற தலைப்பில் திரு நர்சிம் அவர்களின் வலைப்பூ http://www.narsim.in/

3.திருச்சி பதிப்பில் புதுக்கோட்டையைச்செர்ந்த திரு பாரி சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர்.நாடோடி இலக்கியம் என்ற பெயரில் http://naadody.blogspot.in/ வலைப்பூவில் கவிதைகள்,பயணக்கட்டுரைகள்,கிராமம் பற்றிய நினைவுகளை எழுதி வருகிரறார்.

4.மதுரை பதிப்பில் சிவகாசியைச்சேர்ந்த செந்தில் ஆனந்த் சென்னையில் மென் பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரிபவர்.சுற்றுச்சூழல்,தன்னம்பிக்கை,சமூக உறவுகள்,உணர்வுகள் என்று பல விஷயங்களை www.just-like-tat.blogspot.in நினைவுகள் என்ற வலைப்பூவில் எழுதி வருகிறார்.


5.புதுச்சேரி பதிப்பில் பெங்களூருவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் ஐய்யப்பன் கிருஷ்ணன் தன்னுடைய http://www.kaladi.blogspot.in/ எண்ணங்கள் இனியவை என்ற வலைபக்கத்தில் கதைகளும்,ஆன்மீகம் தொடர்பான பதிவுகளும்,எழுதி வருகிறார்

July 24, 2012

பிக்னிக்



எங்களூரின் தெற்குப்பகுதி முழுக்க தென்னந்தோப்புகள் சூழப்பெற்ற கடற்பகுதி,பசேல் என்று இருக்கும் தென்னை மரங்கள்,குலை குலையாக காய்த்துக்குழுங்கும் தென்னைகள் முக்கிய விவசாயமாக உள்ளது.

தோட்டங்களில் குட்டியாக நீச்சல்குளம்,ஓய்வெடுக்க தோட்ட வீடுகள்,பறித்து சாப்பிட கொய்யா,மா,மாதுளை,சப்போட்டா,நாவல்,பப்பாளி போன்ற பழவகைகள்,குடிக்க குடிக்க திகட்டாத இளநீர்,பதனீர்,என்னதான் பிஸ்ஸா பர்கர் என்று மேற்கத்திய உணவுக்கலாச்சாரம் தொற்றிக்கொண்டாலும் சுட்ட பனங்கிழங்கு,நுங்கு,தவன்,பனம்பழம் போன்ற தின்ன தின்ன சலிக்காத இயற்கை உணவு வகைகள் கடற்காற்றுடன் சேர்ந்து கலக்கும் தென்னைமரத்தின் சலசலத்த காற்று,தூரத்தே தெரியும் குட்டி குட்டி தீவுகள்,இத்யாதி,இத்யாதி..இவைகள்தான் எங்களூர்வாசிகளை பிக்னிக் பிரியர்களாக மாற்றி விட்டது என்றால் மிகை ஆகாது.ம்... என்றாலே தோட்ட பிக்னிக்,தீவு பிக்னிக் என்று தங்கள் விடுமுறை நாட்களை ஜமாய்த்து விடுவார்கள்.

பிக்னிக்கைப்பற்றி எங்களூர் பதிவரொருவர் பதிவிட்ட இந்த பதிவை படித்துபாருங்கள் புரியும்.

வழக்கம் போல் இந்த முறையும் ஊர் சென்று இருந்த பொழுது பிக்னிக் செல்ல தவறவில்லை.அங்கு கிளிக்கிய காட்சிகள் உங்கள் பார்வைக்கு.




வரிசை கட்டி நிற்கும் தென்னைமரகூட்டம் தென்னந்தோப்பை பசுமையாக்கிகொண்டுள்ளது.


தூரத்தே தெரியும் பனை மர வரிசைகள்.இனிப்பான பனம்பழம்,பனங்கிழங்கு,நுங்கு,பதனீர்.தவன்,பனங்குருத்து(சாப்பிட சுவையாக இருக்கும்),பனை ஓலை(அழகிய பெட்டிகள் கைவினைப்பொருட்கள் தயாரிப்பார்கள்),பனை நார்,பனை கழிவுகள் (எரிபொருளுக்காக),பனை மரச்சட்டங்கள் என்று பலவும் தரவல்ல அமுத சுரபி அல்லவா அவைகள்.

மனிதர்களுக்குத்தான் உடலில் கட்டிகள் தோன்றுமா என்ன?கட்டி தாவர இனத்தையும் விட்டு வைக்கவில்லை.முருங்கை மரம் ஒன்றின் கிளையில் பெரிதாக இருந்த ஒரு கட்டி ஆச்சரியப்படுத்தியது.உடனே என் கேமராவில் அதனை சிறைப்படுத்தி விட்டேன்.தூரக்கிளையில் தோன்றிய இக்காட்சியை உன்னிப்பாக கண்டு பிடித்து,என்னிடம் சொன்னதுமட்டுமில்லாமல் என்னை படம் எடுக்க தூண்டி,படம் எடுப்பதற்கு ஏதுவாக கிளையை கஷ்டபட்டு வளைத்து பிடித்து படம் எடுக்க உதவிய என் இரத்த பந்தங்களுக்கு எனது நன்றிகள்:)

இனி,பிக்னிக்கின் கிளைமாக்ஸ்,பொதுவாக பிக்னிக் சென்றால் சாப்பாடு சமைத்து அதனை பனை ஓலையில் செய்த பட்டையில் நிரப்பி பச்சை பனை ஓலை மணத்துடன் களறிக்கறி,தாளிச்சாவுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது உள்ள சுவை இருக்கிறதே..வார்த்தகளில் அடங்காது.கோழிகளில் மசாலா தடவி எண்ணெயில் பொரித்தோ சுட்டோ சாப்பிட்டும் மகிழ்வார்கள்.

இந்த முறை மீன் பிக்னிக்.தூரத்தே தெரியும் நாட்டுப்படகுகளுக்காக கரையில் காத்திருந்து படகு கரைக்கு வந்ததும் துள்ளிக்குதிக்கும் மீன்களை மொத்தமாக விலைக்கு வாங்கிக்கொள்வோம்.



தோட்டக்காராம்மாவிடம் மீனை சுத்தம் செய்ய கொடுத்து விட்டு ஹாயாக நீச்சல் குளத்தில் குளியலோ,கடற்கரையில் கால் நனைத்தலோ ஒரு புறம் நடக்கும்.




கொழு கொழுவென்ற சுவையான சுத்தம் செய்த பாறை மீனில் பதமாக மசாலா தடவுகிறார்கள்.
தீ மூட்டி மீனை சுட்டெடுக்கும் காட்சி.அடிக்கும் கடல்காற்றுடன் போட்டி போட்டு மீனை சுடுவது ஒரு சவால்தான்.பீச் காற்றிலேயே பீடி பற்ற வைப்போம் என்ற சினிமா வசனம் போல் கடற்காற்றிலேயே ,எந்த தடுப்பும் இல்லாமல் மீன் சுடுவது ஒரு சவால்தானே?
பக்குவமாக வெந்துள்ளதா என்று சுட்ட மீன்களை டிரேயில் போட்டு பரிசோதித்து விட்டுத்தானே சாப்பிட ஆரம்பிக்க வேண்டும்?
சுட்ட மீன்கள் பறிமாறுவதற்கு ஏதுவாக பேப்பர் பிளேட்டில்.
எங்கள் குடும்பத்து வாலு மீனை சுவைத்துக்கொண்டே அடித்த கமெண்ட் என்ன தெரியுமா?சூடா இருக்கு..சுவையா இருக்கு..காரமா இருக்கு..ராகம் போட்டு பாடாத குறைதான்.
சூடாக சுவைத்த மீனுக்கு அப்புறம் நாவுக்கு இதமாக இளநீர்.தோட்டக்காரர் வெட்டித்தர தர ஒன்று இரண்டு என்று வயிறை நிரப்பிக்கொண்டோம்.
குடித்த இளநீருக்கப்புறம் காயை இரண்டாக வெட்டி உள்ளே இருக்கும் வழுக்கையையும் விட்டு வைக்க மாட்டோம்.தேங்காய் வழுக்கையை எடுத்து சாப்பிட ஏதுவாக தேங்காய் மட்டையிலேயே செய்யப்பட்ட ஸ்பெஷல் ஸ்பூனையும் பாருங்கள்.


July 21, 2012

ரயில் பயணம்



பொதுவாக தென் மாவட்டங்களுக்கு,குறிப்பாக ராமேஸ்வரத்துக்கு சென்னையில் இருந்து செல்லும் சேது எக்ஸ்பிரஸ்,இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் போன்ற வண்டிகளில் வடநாட்டவர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.இந்த முறை அந்த வண்டியில் பயணம் செய்து வெந்து நொந்து போய் விட்டேன்.

வழக்கம் போல் படுக்கையுடன் கூடிய முன் பதிவு செய்யப்பட்ட கம்பார்ட்மெண்டில் பயணிக்கையில் எதிரே வட நாட்டு வாலிபர்கள் கூட்டமாக கூட்டமாக ஏறியது கண்டு மனம் பக் என்றாகி விட்டது.
ரயில் புறப்பட ஆரம்பிக்கும் முன்னரே இவர்களது லூட்டி ஆரம்பித்து விட்டது.ஒரு பெரிய பாலித்தீன் கவர் நிறைய உடைக்கபடாத வேர்கடலைகளை உரித்து சாப்பிட்டு அதன் தோல்களை கொஞ்சமும் மன சாட்சி இல்லாமல் கம்பார்ட்மெண்டுக்குள் போட்டுக்கொண்டு அவர்களது அட்டூழியத்தை அமர்க்களமாக ஆரம்பித்து விட்டனர்.

ரயில் வாசலை மூடாமல் திறந்து வைத்துக்கொண்டு இருந்தனர்.சிறு குழந்தையுடன் பயணித்த ஒருவர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவர்கள் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை.

கெக்கே பிக்கே சிரிப்புகளுடன் ஆளுக்கொரு செல்போனில் ஹிந்தி பாடல்களை சப்தமாக ஒலிக்க விட்டு அருகில் இருப்பவர்களை முகம் சுளிக்க வைத்தனர்.கம்பார்ட்மெண்டில் கூவி கூவி விற்கும் பழக்காரர்,சமோசா விற்பவர்,சிக்கி விற்பவர் ஒருவரையும் விட்டு வைக்காமல் கேலியும் கிண்டலும் தூள் பறந்தது.

சைட் அப்பரில் நான்கு இளைஞர்கள் கால்களை தொங்க விட்டுக்கொண்டு சப்தமாக பேசி ஓ வென்று சிரித்து அனைவரையும் எரிச்சல் படுத்தினார்கள்.ஹைலைட்டாக தலை மேல் வெள்ளரிக்காய்களை கூறு கட்டி கூடையில் வைத்து எடுத்து செல்லும் வெள்ளரிக்காய் விற்பனை செய்யும் பெண்மணி இவர்களை தாண்டி செல்லும் போது கூடை மேல் இருந்த வெள்ளரிக்காய்களை நைசாக லபக்கியதைக்கண்டு மனம் அதிர்ந்து விட்டது.கண்கள் படுக்கைக்கு கீழே உள்ள நகைகள் இருக்கும் எங்கள் பெட்டியின் மீது என் பார்வை ஜாக்கிரதையாக ,பயமுடன் சென்று வந்தது.

தூங்கும் நேரம் வந்த பொழுது விளக்குகளை அணைக்காமல் பான் பராக்கை மென்று கொண்டே ரம்மி விளையாட ஆரம்பித்து விட்டனர்.செல்போனில் ஹிந்திபாடல்கள் வேறு.இவர்களைக் கேட்பதற்கு ஆளேஇல்லை.

ஹேண்ட் பேகில் இருந்த சைக்கிள் செயின்களை எடுத்து முக்கியமான பெட்டிகளை கட்டி வைத்து இருந்தாலும் மனம் முழுக்க பயம் நிறைந்திருப்பதை தடுக்க முடியவில்லை.வேறு கம்பார்ட்மெண்டுகளில் இருந்து இவர்களின் சகாக்கள் கூட்டம் கூட்டமாக வந்து போய்க் கொண்டிருந்தனர்.சிகரெட் நெடி தூங்கியவர்களைக்கூட எழுப்பி இரும வைத்து விட்டது.கையில் சார்ட்டுடன் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்த டி டி ஆர் கூட இதைப்பற்றி கேட்கவில்லை.

தூக்கம் வரும் கண்களை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு பெட்டிகளை பாதுகாக்கும் நிமித்தமாக தூக்கத்தை தியாகம் பண்ண வேண்டி இருந்தது.

ரயில் ராமனாதபுரத்தை நெருங்கும் பொழுது ரயிலில் கொடுத்த போர்வைகளில் நல்லதாக தேர்ந்தெடுத்து அதனை கொண்டு வந்திருந்த பையில் அடுத்தவர் பார்க்கிறார்களே என்ற லஜ்ஜை இன்றி எடுத்து வைத்துக்கொண்டதை பார்க்கும் பொழுது இழுத்து நான்கு சாத்து சாத்த வேண்டும் போல் இருந்தது.

ஸ்டெஷன் வந்ததும் பெட்டிகளை எண்ணி காரில் வைத்துக்கொண்ட பொழுதுதான் நிம்மதியாக இருந்தது.

இரவு முழுக்க அனுபவித்த தூக்கமில்லா திகில் பயண அவஸ்தையே வேண்டாம் என்று திரும்பி வரும் பொழுது ஆம்னி பஸ்ஸில் திரும்பி சென்னைக்கு வந்து சேர்ந்தோம்.

வீட்டிற்கு வந்து நாளிதழை புரட்டும் பொழுது இந்த செய்தி கண்களில் பட்டது.படித்துப்பாருங்கள்.


July 8, 2012

சில்க் ஃபேப் கண்காட்சி



மங்கையர்களுக்கு மரியாதையையும் மதிப்பையும் தருவது சேலைகள் என்பது உண்மை.நவநாகரீகமான ஆடைகள் அணிபவர்கள் கூட சேலை கட்டும் பொழுது அணிபவர்களை கம்பீரமாக காட்டக்கூடியது.

தமிழ் நாட்டில் சேலை அணியும் மாந்தர்கள் அநேகம்.தமிழக பெண்களுக்காக சென்னை வள்ளுவர் கோட்டம் ஆடிட்டோரியத்தில் இந்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம் சில்க் பேப் என்ற புடவைகளின் கண்காட்சியை நடத்தி வருகின்றது.

ஆந்திரப்பிரதேசம்,அஸ்ஸாம்,பீகார்,கர்நாடகா,சட்டீஸ்கர்.குஜராத்,ஜார்கண்ட்,ஜம்மு காஷ்மீர்,மத்திய பிரதேசம்,மஹாராஷ்ட்ரா,ஒரிஸா,உத்திரபிரதேசம்,மேற்கு வங்காளம்,மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இருந்து இந்தியாவின் பாரம்பரிய,கைத்தறி துணிகளை கண்காட்சிக்கு வைத்து இருக்கின்றனர்.


வித விதமான புடவைகள் மட்டுமல்லாமல்,டிரஸ் மெட்டீரியல்கள்,ஃபர்னிஷிங்,துப்பட்டா, போன்ற அனைத்து உள்ளன.

சில நூறு ரூபாய் முதல் பல்லாயிரம் வரையிலான வித வித புடவைகள் கண்களை கவர்கின்றன்.இதுவே எக்ஸ்க்ளூசிவ் ஷோ ரூம்களில் சென்றால் பல நூறு அதிகமாக கொடுத்து வாங்க வேண்டும்.இங்கோ பேரம் பேசி வாங்கி பணம் சேமிக்கலாம்.

உயர் வகை பட்டுநூலால் தயாரிக்கப்படும் தமிழ்நாட்டு காஞ்சிபுரம்,கோயமுத்தூரின் கோவைகாட்டன்,சின்னாளபட்டி சுங்குடிவாரணாசியின் பனாரஸ்,ஒரிஸாவின் இக்கத்,ராஜஸ்தான் மற்றும் குஜராத்தின் பாந்தினி,கர்நாடகாவின் பன்கடி,ஆந்திராவின் போச்சம்பள்ளி ,வெங்கடகிரி,கத்வால், நாராயண்பேட்,மங்கள‌கிரி போன்ற வகை வகையான் புடவைகளின் அணி வகுப்பு எதனை வாங்க,எதனை விடுக்க என்று குழம்பவைத்து விடுகின்றது.
அசாம் சுலுகுசி,மஹாராஷ்ட்ரா பைதான்,பீகார் பங்கள்பூர் சில்க்,அஸ்ஸாம் முகா சில்க்,குஜராத் தஞ்சோய்,பட்டோலா,பாந்தினி,ப்ரகோட்,மஹாராஷ்ட்ரா பைத்தானி,மத்ய பிரதேஷ் சந்தேரி,மகேஷ்வரி,பெங்கால் பாலுச்சேரி,ராஜஸ்தான் கோட்டா,மேற்கு வங்காளம் ஜம்தானி இப்படி எண்ணற்ற வகையில் புடவைகள் விதம் விதமாக.
கண்காட்சியின் இறுதி நாட்களில் இன்னும் விலை மலிவாக கிடைக்கும் என்றாலும் கலெக்ஷன் மிகவும் குறைவாக இருக்கும்.



ஆர்கானிக் பழவகைகள்,காய் வகைகள் விற்பனைக்கு வந்துள்ளது போன்று ஜார்கண்ட் மாநில தயாரிப்பான ஆர்கானிக் சார் இங்கு புதுமையாக உள்ளது
வித விதமாக டஸ்ஸர்,ராசில்க் போன்ற‌வற்றில் அழகிய பார்டர்கள் தைத்து ரிச் லுக் தரும் புடவைகள் மிக குறைந்த விலையில் வாங்கலாம்.
கட்டினால் ஷாஃப்டாகவும் ரிச் ஆகவும் இருக்கும் சிம்மர் சில்க்,ஜாமேவார்,கடி சிஃபான்,பட்டர் சில்க்,பிரிண்டெட் சில்க்,பேப்பர் சில்க் என்று எத்தனை எத்தனை வகை.
அணிவதற்கு சுகமாக இருக்கும் பியூர் சில்க்,ஷாஃப்ட் சில்க் போன்றவை ஷோ ரூம்களில் இரண்டாயிரத்துக்கு மேல் கிடைப்பது இங்கோ ஆயிரத்து ஐநூறில் வாங்கலாம்.

அருமையான பிரிண்ட் போட்ட மதுபாணி புடவைகள்,மூன்று வித வெவ்வேறு மெட்டீரியலால் உருவாக்கப்பட்ட புடவைகள் என்று புதுமை புகுத்தி இருக்கின்றார்கள்.


சேலை வாங்கும் பொழுது துணியின் ஓரத்தை பலமாக இழுத்துப்பார்த்து அதன் பின் கிடைக்கும் ரிசல்ட்டை வைத்து பழைய ஸ்டாக்கா,புதிதா என்று தீர்மானித்து வாங்கும் சாதுர்யம் வேண்டும்.

ஆகவே ரங்க மணிகள் தங்க மணிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கிறேன்
பேர்வழி என்று தனியாக போய் புடவை வாங்கி வாங்கிக்கட்டிக்கொள்ளாமல் கூடவே தங்கமணிகளையும் அழைத்துச்சென்றால் நல்லது:)

தூரத்துக்கு ஒன்றாக ஓடிக்கொண்டு இருக்கும் பெடல்ஸ்டல் பேன் காற்று மேலும் வெப்பத்தைத்தர,வியர்வை வழியும் முகங்களுடன் மக்கள்ஸ் கை கொள்ளாமல் பைகளை அள்ளிச்சென்ற வண்ணம் இருக்கின்றனர்.

பர்சேஸ் பண்ணிய அலுப்பு தீர வெளிப்பகுதியில் வரிசைகட்டிக்கொண்டு இருக்கும் கடைகளில் பஜ்ஜி போண்டா,ஸ்பிரிங் ரோல்,குழிப்பணியாரம் போளி,கேழ்வரகு அடை என்று வகை வகையான சாப்பாட்டு ஐட்டங்கள் வேறு பசியை போக்க காத்திருக்கின்றன.

July 1, 2012

ரோல்ஸ் ராய்ஸ் கார்



டிஸ்கி:தலைப்பை பார்த்ததும் "என்னக்கா இந்தக்கார் வாங்கப்போறீங்களா?"என்று ஹுசைனம்மா,ஸ்டார்ஜன் போன்றோர் நக்கல் கமண்ட் போட்டு விடக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக இந்த டிஸ்கி.இந்தக்கார் வாங்கும் அளவுக்கு வசதியோ,தகுதியோ,ஆசையோ இல்லை என்று பணிவுடன் சொல்லிக்கொள்கிறேன்)

படிப்பு முடிந்ததும் ஐ டி கம்பெனியில் வேலை,சொந்தவீடோ,இருக்கும் வீட்டை ரிப்பேர் பண்ணவோ,ரயில் நிலையத்தில் இருந்து இரண்டே நிமிடம் என்று தொலைக்காட்சிகளில் கூவி கூவி விற்கும் மலிவு விலை பிளாட்டை வாங்கிப்போடும் எண்ணமோ,அட அம்மாவின் வெற்றுக்கழுத்துக்கு ரெண்டு சவரனில் ஒரு செயினோ வாங்கிக்கொடுக்க மனதில்லாமல்,இவ்வளவு ஏன் வேலைதான் கிடைத்து விட்டதே காலாகாலத்தில் கல்யாணம் பண்ணிக்கொள்ளலாம் என்ற எண்ணம் தலைதூக்காமல் இருக்கும் இன்றைய இளைய தலை முறையினருக்கு கார்தான் உயிர் மூச்சு.அதிலும் சென்னை போன்ற நகரில் வாழ்பவர்களைப்பற்றி சொல்லவே வேண்டாம்.

ஐந்தாயிரம் ரூபாய் வாடகையில் சிறு பிளாட் எடுத்து வசிப்பவன்,சற்றும் தயங்காமல் பதினைந்தாயிரம் ஈ எம் ஐ ஆக கட்ட தயக்கப்படுவதே இல்லை.அவ்வளவு ஏன் மேன்ஷன் வாழ்க்கை வாழ்ந்து கொண்டு மெஸ்ஸில் சாப்பிட்டுக்கொண்டு வாழ்க்கை ஒட்டுபவன் கூட சந்தினுள் தன் காரை பார்க் பண்ணி வைத்துக்கொள்கிறான்.அந்தளவு இன்றைய மனிதனின் வாழ்க்கைக்கு அந்தஸ்தாக போய் விட்டது இந்தநாற்சக்கரவாகனம்.

சாமானியப்பட்டவர்களுக்கே இப்படி என்றால் பணத்தில் புரளும் பிரபலங்களைப்பற்றி சொல்லவா வேண்டும்.ஆடி,பி எம் டபிள்யூ,மெர்ஸிடஸ் பென்ஸ்,ரேஞ்ச்ரோவர்,செரா போன்ற பல லட்சங்களை கோடிகளை கொட்டிக்கொடுத்து வாங்கிய வாகனங்கள் சென்னையின் கரடு முரடு சாலையை அலங்கரித்துக்கொண்டிருப்பது அதிகரித்து வந்தாலும் இப்பொழுது பணக்காரர்களின் ராஜபரம்பரையினரின் அந்தஸ்த்து காரான ரோல்ஸ்ராய்(Rolls-Royce) கார் பவனி வர ஆரம்பித்து விட்டது.ஆம் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் பிரமாண்டமான கார்.தமிழகத்திற்கு வந்திருக்கும் முதல் ரோல்ஸ்ராய்ஸ்.திரை உலகினரை மட்டுமல்லாமல்,தகுதியுடையோரையும் ஏக்கத்துடன் திரும்பி பார்க்கவைக்கும்.

இங்கிலாந்தை சேர்ந்த சார்லஸ் ஸ்டீவர்ட் ரோல்ஸ் மற்றும் ஹென்றி ராய்ஸ் ஆகிய இருவராலும் 1906-ல் ஆரம்பிக்கப்பட்ட ரோல்ஸ்ராய்ஸ் கார் நிறுவனம் ஆடம்பர கார் தயாரிப்பில் புகழ் பெற்றது .ஆரம்பத்தில் காலத்தில் இங்கிலாந்து அரசே ஏற்று நடத்தினாலும் பின்னர் தனியாருக்கு சொந்தமாகி இப்போது பிரபல BMW கார் நிறுவனத்திற்கு சொந்தமாக உள்ளது. பெரும் பணக்கார,அந்தஸ்த்துள்ள வி வி வி ஐ பிக்களுக்காக தாயாரிக்கப்பட்டு,அவர்களால் மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டு வரும் புகழ்பெற்ற வாகனமாகும்.

இந்தியாவில் மும்பை டெல்லி.ஹைதராபாத் போன்ற இடங்களில் பிரமாண்டமான ஷோரூம்களை திறந்து விறபனை செய்யப்பட்டு வருகின்றது.

பல்வேறு முன்னணி கார் நிறுவங்களின் டீலராக இருக்கும் குன் மோட்டார்ஸ் நிறுவனம் ஹைதராபாத்தை அடுத்து விரைவில் சென்னையிலும் ஷோ ரூமை திறக்க உள்ளது.

உலகின் மதிப்புமிக்க காராக ரோல்ஸ் ராய்ஸ் திகழ்கிறது. அரசப் பரம்பரையினர், பிரபல நட்சத்திரங்கள், பெரும் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மட்டும்தான் ரோல்ஸ்ராய்ஸ் காரை சொந்தமாக்க முடியும்.உலகில் உள்ள பெரும் புள்ளிகளிடம் மட்டுமே இருக்கக்கூடிய இந்த கார் யாரிடமும் பணம் கோடி கோடியாக கொட்டிக்கிடந்தாலும் அவ்வளவு சுலபத்தில் அனைவராலும் வாங்கி விட இயலாது.வாங்குபவர்களில் பின்புலம்,குடும்பம் ,பெரும் புள்ளிகளுக்கு காரை விற்பனை செய்வதால் தன் நிறுவனத்திற்கு கிடைக்கவிருக்கும் புகழ்போன்றவற்றை தீர விசாரித்த பிறகே அதனை விற்பனை செய்யும் கொள்கையை இந்நிறுவனம் கடைப்பிடித்து உலகில் தன் நிறுவனத்திற்கான மதிப்பை தக்கவைத்துக்கொண்டுள்ளது.

புதிதாக உற்பத்தியாகும் காருக்குத்தான் இத்தனை விலை என்றில்லை
பிரிட்டன் நாட்டில் 1915 முன்பாக தயாரிக்கப்பட்ட ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் அண்மையில் 3.5 மில்லியன் பவுண்டுகளுக்கு ஏலம் போய் சரித்திரம் படைத்துள்ளது.

பாலிவுட் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்குவதற்கு புக் செய்ய சென்றுள்ளார். வழக்கம்போல் வாடிக்கையாளரின் தகுதி குறித்து ஆராய்ந்த ரோல்ஸ் ராய்ஸ், உங்களுக்கு நாங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு போதிய பின்புலம் இல்லை என்பதை கூறி கார் தர மறுத்துவிட்டது.

உலகின் ஒவ்வொரு பெரும்பணக்காரரும் விரும்பும் விஷயங்களில் ஒன்றான ரோல்ஸ் ராய்ஸ் காரை இந்தியாவில் திரைஉலகத்தினர் சிலர் சொந்தமாக்கி வைத்துள்ளனர்.ஆமிர் கான்,அமிதாப்பச்சன்,தயாரிப்பாளர் விது வினோத்சோப்ரா,சஞ்சய்தத் குடும்பத்தினர் போன்ற சொற்பசிலரே வைத்திருக்கின்றனர்.

கேரளாவை ஆண்ட திருவிதாங்கூர் ராஜகுடும்பத்தின் வாரிசான மன்னர் உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மாவின் 90ஆவது பிறந்தநாளுக்காக 5 கோடி மதிப்புள்ள காரை அவரின் அறக்கட்டளை சார்பாக பரிசளிக்கப்பட்ட்து.

பிரபல ஜாய் ஆலுக்காஸ் ஜூவல்லரி குழுமத்தினர் பிரிட்டனில் இருந்து பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்தனர்.

எர்ணாகுளத்தை சேர்ந்த பிரபல கல்வி குழுமங்களின் தலைவரான டாக்டர் ஜிபிசி.நாயரும் இக்காருக்கு சொந்தக்காரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.

மறைந்த சாய்பாபாவும் இக்காருக்கு சொந்தக்காரராக இருந்திருகின்றார்.சாய் பாபாவின் காரை மும்பை பந்த்ரா பகுதியை சேர்ந்த டொயோட்டோ டெக் சர்வீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் இர்பான் மொகுல் விலைக்கு வாங்கி உள்ளார்.

மைக்கேல் ஜாக்சன் பிரபல பாப் பாடகர்

பிரபல நடிகர் சில்வஸ்டர் ஸ்டேல்லன்

அமெரிக்கா பாடகி ஆரோன் ப்ரெஸ்லி

புருணை சுல்தான்

பிரன்ஞ்ச் நடிகை brigitti bardot

பிரிட்டன் பாடகி ஜான்லெனான்

பிரான்ஸ் தொழிலதிபர் sir alan sugar

இங்கிலாந்து பாடகர் ஜேசன் கே

ஜிம்பாப்வே அதிபர் robert mugambe

அமெரிக்கபாடகி டிட்டி மற்றும் கிறிஸ்டினா ஆகீலேரா

பிரபல கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்காம்

அமெரிக்க நடிகை எட்டி மர்பி

பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் டோனால்ட் டிரம்ப்

அமெரிக்காவைச்சேர்ந்த டான்ஸர் மைக்கேல் ஃப்லேட்லி

பிரிட்டனை சேர்ந்த இசையமைப்பாளர் imon cowe போன்ற பிரபலங்கள் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு சொந்தக்காரர்கள் என்ற பெறுமையை தட்டிச்செல்கின்றனர்.

உலகில் பல லட்சம் அமெரிக்க டாலர்களை விலையாக கொண்ட ரோல்ஸ்ராய்ஸ்காருக்கு நிகரான ,அதனை விட பலமடங்கு அதிகம் விலையுள்ள சொகுசு கார்களான Lamborghini Reventon,Aston Martin One,Bugatti Veyron,agani Zonda Clinque Roadster ,Ferrari Enzo ,Porsche Carrera போன்ற பிரமிக்க வைக்கும் கார்கள் உலகின் பணக்கார நாடுகளில் கம்பீரமாக வலம் வந்தாலும் ரோல்ஸ்ராய்ஸ் காருக்கு தனி மவுசு என்பதுதான் உண்மை.இதற்கு காரணம் தரம்,பயன்பாட்டாளாருக்கான வசதிகள் மட்டுமில்லாமல் அந்த நிறுவனத்தின் கொள்கை ,கட்டுப்பாடும் காருக்கான ராஜமரியாதைக்கு காரணங்களாகும்.

கோடிகளை கொட்டிக்கொடுத்து இக்காரை சொந்தமாக்கி தார்ச்சலையில் உலாவ்ர பெரும் கோடீஸ்வரக்கூட்டம் காத்திருக்கின்றன.இனி வரும் காலங்களில் சென்னையிலும்.