Showing posts with label கதா பாத்திரங்கள். Show all posts
Showing posts with label கதா பாத்திரங்கள். Show all posts

June 12, 2013

அப்பாடக்கர் அய்யாசாமி!





ஒரு சித்திரை வெயில் மண்டையை பிளக்கும் உச்சி நேரத்தில் தனது சொந்த கிராமத்து புழுதிவீதியில் சொட்டை மண்டையில் இருந்து கணுக்கால் வரை வியர்வை வெள்ளத்தில் நனைந்த படி வாக் போய்க்கொண்டிருந்த அய்யாசாமியை அங்கு விளையாடிக்கொண்டிருந்த சில வாண்டுகள் ”மாமா மாமா என்று அழைத்த படி தொடர்ந்தனர்.

”என்னங்கடா செல்லங்களா?”இது அய்யாசாமி

கையில் கருப்பாக எதோ வஸ்துவை வைத்துக்கொண்டு  ”இது என்ன தெரியுமா மாமா உங்களுக்கு”என்று கோரஸாக கேட்டனர்.

அந்த வஸ்துவை கையில் வாங்கி அரை நிமிட ஆராய்ச்சிக்குப்பிறகு அது ஏதோ ஒரு கொட்டை என்று புரிந்து கொண்டு முடியே இல்லாத தலையை இன்னொரு அரைநிமிஷம் செலவு செய்து பிராண்டியபடி ”இதுவா கொளந்தேங்களா...இதுக்கு பேரு கோணக்கா மாணக்கா கொட்டையாக்கும்”என்ற படி திருப்பிக்கொடுத்தார்.

அந்த கோணக்கா மாணாக்காவில் திருப்தியுறாத குட்டீஸ் வேறு யார் யாரிடமோ கேட்டு அது எப்பாவோ யாராலோ சாப்பிட்டுவிட்டு தூர எறிந்த பனங்கொட்டை சித்திரை வெயிலில் சிதைந்து சிதிலமாகிப் போய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அன்றில் இருந்து கிராமத்து சிறுவர் பட்டாளம் அய்யாசாமியை கோணக்காமாணாக்கா மாமாவாக்கி விட்டனர்.

அதாகப்பட்ட இந்த கோணக்காமாணக்கா பட்டம் ஏதோ சர் பட்டம் கிடைத்த மாதிரி நம்ம அய்யாசாமிக்கு ஒரு பெருமிதம் தரும் பட்டம்.மாங்கு மாங்கு என்று பதினொரு வருசம் ஸ்கூல் படிப்பு படித்து,அப்புறம் பியுசி ஒரு ஒருவருசம், பட்டப்படிப்பு ஒரு மூன்று வருசம் ஆகமொத்தம் பதினைந்து வருடங்கள் மாடாக உழைத்து ஒடாக தேய்ந்து பெற்ற பி.ஏ ஹானர்ஸ் பட்டம் பெற்ற போது கிடைத்த மகிழ்ச்சியை இந்த கோணக்கா மாணாக்கா மட்டுமல்ல,பெரிசுகளால் அழைக்கப்படும் அப்பாடக்கர் பட்டத்தையும் மனநிறைவோடு ஏற்றுக்கொண்டாரென்றால் அதுதான் அப்பாடக்கர் அய்யாசாமி.

தெருவில் செல்பவர் யாரையோ அழைத்து எதுக்கோ வழிகேட்டால் இவருக்கு மூக்கில் வேர்த்துவிடும்.விடு விடு வென்று அவரிடம் சென்று அவர் கேட்கும் தெருவுக்கு வழியை விளக்கி சின்னதாக டிராயிங்கே போட்டுக்காட்டிவிடுவார்.

“என்னது..பட்டாளம் ராமசாமி வீடுங்களா?நேரே போனீங்கன்னா,பெரிய ஆலமரம் வரும்.அதற்கு தெற்காலே சின்னூண்டா பிள்ளையார் கோவில்...”இப்படி நீட்டி முழங்கி அந்த பட்டாளம் ராமசாமியின் வசிப்பிடத்தை விவரமாக சொல்வதுடன்”ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து ஏழு வரை இவர் பட்டாளத்தில் இருந்தவராக்கும்.இவரோட தோப்பனார் நஞ்சையில் நூறு ஏக்கராவும்,புஞ்சையில் நூறு ஏக்கராவும் வைத்து விவசாயம் பண்ணிட்டு ராஜபோகமாக வாழ்ந்தவர்..”ராமசாமியின் சரித்திரத்தை புட்டு புட்டு வைக்காவிட்டால் சற்றுமுன் சாப்பிட்ட சாம்பார் சாதமும்,கத்தரிக்காய் பொரியலும் இவருக்கு செரிமானம் ஆகாது.

இப்படி பட்டாளம் ராமசாமியின் வரலாறும்,அச்சுபிச்சு அந்துமணியின் சரிதையும் மட்டும் பேசிக்கொண்டு திரிபவர் இந்த அப்பாடக்கர் அய்யாசாமி என்று நீங்கள் கணித்தால் அது ரொம்ப ரொம்ப ரொம்பவே தப்பு.

“என்னது,குழம்பில் உப்பு ஜாஸ்தியாயிடுச்சா.ரெண்டு துண்டு உருளைக்கிழங்கை வெட்டிப்போடு,உப்பை இந்த உருளைக்கிழங்கு இழுத்துக்கும்”மனைவிக்கு டிப்ஸ் கொடுப்பதிலாகட்டும்,

“என்னது,டாக்டர் ஆபரேஷன் செய்யணும்ங்றார்னா சொல்லுறீங்க .அட..நீங்க வேற அவர் சொல்லுவாராம்,இவர் உடனே ஆபரேஷன் மேசை மேலே போய் நீட்டி நிமிர்ந்து படுத்துக்குவாராம்.அடப்போங்கங்காணும்..முதல்லே போய் டவுனில் இன்னொரு டாக்டரிடம் செகண்ட் ஒப்பீனியன் போங்க..என்னது பெஸ்ட் டாக்டரா?மெட்ராஸ்லே பெஸ்ட் கார்டியாலஜி வடபழனியில் இருக்கற இந்த ஹஸ்பிடலில் இருக்கார்.அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக்குங்க.செலவைப்பார்க்காமல் நேரே அங்கே போங்க சொல்லுறேன்.”

“என்ன இந்த லீவுக்கு உங்க பையன் இருக்கற துபாய்க்கு போறீங்களா?ஆகட்டும்..எமிரேட்ஸ் அது இதுன்னு டிக்கெட் போட்டு தண்டமா செலவு பண்ணாதீங்க.பேசாமல் ஏர் அரேபியாவில் புக் பண்ணுங்க.சீப்பா முடியும்.மிச்சம் பிடிக்கிற பைசாவில் பொண்டாட்டி பிள்ளைங்களுக்கு ஏதாவது வாங்கிக்கொடுத்தால் சந்தோஷப்படுவாங்க.”

“என்னது..மூன்றாவதும் பொண்ணா பொறந்துடுச்சுன்னு இந்த பாலுபயல் முகத்தை தூக்கி வச்சிட்டு பொண்டாட்டி பிள்ளையை போய் பார்க்காமலேயே இருந்துட்டானா?அட பன்னாடைபயலே.படிச்ச மூதிதானே நீயி.அவனவன் ராப்பகலா அன்னம்தண்ணி தூக்கம் இல்லாமல் ஆராய்ச்சி செய்து ஆண் பெண் குழந்தைகள் உருவாகக்காரணம் ஆணுடைய ஜீனில்தான் உள்ளது என்று சொல்லுறாங்க.இவன் முகத்தை தூக்கி வச்சிட்டு திரியறானா?செருப்பாலே அடிக்கணும்.அவன் வீட்டுக்காரியை முகத்தை தூக்கி வச்சிட்டு இருக்க சொல்லு”இந்த ரீதியில் இவர் பேச்சு இருக்கும்.

அசந்து மறந்து அந்த பாலுவை பார்க்க நேரிட்டாரானால் அவ்வளவுதான் X ஜீனுடன் XX ஜீன் சேர்ந்தால் பெண்குழந்தையாகவும்,X ஜீனுடன் XY ஜீன் சேர்ந்தால் ஆண் குழந்தையாகவும் பிறக்கிறது.இதற்கு காரணகர்த்தா ஆண்தான் என்ற தத்துவத்தை விலாவாரியாக ஒன்னரை மணி நேரம் லெகசர் அடித்தாரானால் அந்த பாலு தலையை பிய்த்துக்கொண்டு  மனைவியையும் குழந்தையையும் பார்க்க நேரே ஹாஸ்பிடலில் போய் நிற்பான்.

தலையில் பதநீர் பானையுடன் பதநீர் விற்கும் பெண்மணிடம் பைசாவை கொடுத்தோமா பதநீரை குடித்து விட்டு நடையை கட்டினோமா என்றிராமல் ,அக்கம் பக்கம் நின்று பதநீர் குடிப்பவர்களிடம் கால்லிட்டர் பதநீரில் உள்ள சத்துக்களை பட்டியலிட்டு,மலசிக்கலை நீக்கும்,இதயத்தை வலுப்படுத்தும்,எழும்புகளை எழுச்சியூட்டும்,தாதுபலத்தை அதிகரிக்கும் என்று அவர் டயலாக் விட்டால் அதில் கொஞ்சம் கேட்டுக்கொள்ளத்தக்க அட்வைஸ் இருக்கும் என்பதையும் மறுப்பதுக்கில்லை.

கோகுல் சாண்டல் பவுடரை முகத்தில் அப்பிக்கொண்டு ஹைதரலியின் சித்தப்பாகாலத்து கோட்டு ஒன்றை போட்டுக்கொண்டு கக்கத்தில் மான்மார்க் குடையுடன்  டவுன் பஸ்ஸை பிடிக்க கிளம்பிரானால் அது தாசில்தாரையோ,எம் எல் ஏவையோ,கலெக்டரையோபார்க்கத்தானாக இருக்கும்.”சத்துணவு கூட்டத்தில் ஏகப்பட்ட தில்லு முல்லு நடக்குது.நானும் எத்தனையோ போராடிப்பார்த்துவிட்டேன்.முடியலே கலெக்டரை பார்க்க அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி வச்சிருக்கேன்.கரெக்டா 10.30க்கு கலெக்டர் ஆஃபீஸில் இருக்கணும்.அதுதான் கிளம்பிட்டேன்”முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு ஓடும் பஸ்ஸில் தாவி எறுவார்தான்.ஆனால் அவர் கலெக்டரைப்பார்த்தாரா இல்லையா என்பது அந்த மேலே இருப்பவனுக்குத்தான் வெளிச்சம்.

அன்று ஒரு சுபயோகசுப தினத்தில் சின்ன சூட்கேஸுடன் சென்னைக்கு போகும் ரயிலைப்பிடிக்க நின்று கொண்டிருந்தவரை பக்கத்தில் நின்றவர்”என்ன அய்யாசாமியண்ணே.வெளியூருக்கு கிளம்பிட்டீங்களா?என்று கேட்டார்.

“ஆமாங்க.சென்னைக்குத்தான்.வேறு ஒன்றும் இல்லை.இந்த ரூபாய்க்கு ஒரு இட்லி அம்மா கடை சென்னையில் சக்கை போடு போடுதே.அதே அம்மாகடையை நம்மூருக்கும் கொண்டுவந்தே ஆகணும் என்பதற்காக நம்ம ஊரு எம் எல் ஏ மூலமாக அம்மாவை சந்தித்து பேச அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி வச்சிருக்கேன்.அதான் கிளம்பிட்டேன்.ஹி..ஹி..”

April 9, 2013

சைதாபேட்டை ஜக்கு



இன்னாது..அப்டி பாக்றே?நாந்தேன் ஜைதாபேட்டை ஜக்கு. கபாலீஸ்வரர் கோயிலண்டே பூக்கட்டி விக்கற பூக்காரின்னு என்னை வல்லிசா நெனச்சினியா?பஜார்ல உஜாரா இல்லைனா நிஜார கலட்டிடுவாங்க என்னை இஸ்துகினு வந்து கண்ணாலம் பண்ண கோவாலு பட்ச்சி தந்த பாடம்யா.

அது ஆச்சு ரெண்டு மாமாங்கம்.கண்ணாலம் கட்டுற வரைக்கும் கோவாலு தெண்டச்சோறாத்தான் இருந்துச்சு.கண்ணாலம் கட்டினு வந்தப்போ அது ஒரு குஜிலி கூட குஜாலா சுத்திகினு ஜல்சா பண்ணினு இருந்ததை பார்த்து மெர்சல் ஆயிட்டேன்.”யோவ்..சோமாரி..ஒரு தபா தப்பு பண்ணிட்டே.கண்டினியூவா இப்படி டபாய்ச்சே அப்பாலிக்கா காண்டாய்டுவேன்.இப்டி போங்குத்தனமா இருந்தே மெரிச்சுருவேன் மெரிச்சு.என் நைனா,அண்ணாத்தை பற்றி தெரிஞ்சு வச்சிகினு ஆட்டம் போடாதே.கீச்சுடுவாங்க கீச்சி”நான் இப்படி சொல்லாங்காட்டி கம்முன்னு கெடக்காது கோவாலு அப்படீன்னு நெனச்சது தப்பா பூடுச்சு.

திருந்தின பாடு இல்லை.சின்னதுலே வாத்தியார் படம் பார்த்த நியாபகம் சடுதியில் வந்துச்சு பாரு.எனக்கு வந்த கோவத்திலே சொம்மா பூரிக்கட்டையாலே வூடு கட்டி அடிச்சேன் பாரு.அவ்ங்கொப்பனும்..அதேங்..எம்மாமனார் கெயவனும்.மாமியா கெயவியும் அரண்டு போச்சுதுங்க.அடிச்ச அடியிலே கபாலம் ஒடன்ஞ்சி சல்லிசா ரத்தம் கொட்ட வேறென்ன  முச்சந்தியில் நின்ன மினியப்பன் ஆட்டோவிலே பெரியாஸ்பத்திரிக்கு இட்டாந்து தைய போட்டு வூட்டுக்கு இட்டாந்தேன்.அப்பாலிக்கா மச்சானுக்கு சவரட்சனை பண்ணி என் வழிக்கு கொண்டு வந்தேன்.

“ஏய்யா..கண்ணாலம் ஆச்சு,கொயந்தே குட்டிங்கன்னு ஆயிட்டா நம்ம கத என்னாத்துக்காகும்? எத்தினி காலத்துக்கு இப்படி தண்டமா குந்திகினு கிடப்பே?எத்தினி காலத்துக்கு உங்கம்மா கெயவி வூடு வூடா போய் சாமான் தேய்ச்சினு சம்பாரிச்சுன்னு வந்த துட்டுலே துன்னுகினு இருப்பே..புத்தியா பொழச்சிக்கோய்யா.”ராவும் பகலுமா நான் பொலம்பிய பொலம்பலில் மனுஷன் திருந்திட்டான்.

நல்ல மாட்டுக்கு ஒரு சூடும்பாங்க.ஒட்னே அந்தாண்டே பஜார் பக்கம் பிளாட்பாரத்திலே கட போட்டுச்சு.கோவாலு மச்சான் கில்பான்ஸ் இல்லாங்காட்டியும் டொச்சானா அட்டு ஆசாமியா இருந்தாங்காட்டியும் தில்லான கில்லியான ஆளு.மெய்யாலுமே மினியப்பன் சாமி புண்ணியத்துலே யாபாரம் பிச்சுகினு தூள் கிளப்புச்சுன்னா பார்த்துக்கோயேன்.காலம்பற மிலிட்டரி ஓட்டலாண்டே போய் பரோட்டாவும் சால்னாவும் வாங்கி நாஷ்டா பண்ணினு யாவாரத்துக்கு போச்சுன்னா மச்சான் வீட்டாண்ட்ட திரும்ப ராவு மணி பதினொண்ணாயிடும்.

என்னா ஒன்னு..போலீஸ் காரன் பிகில் சத்தம் கேட்டால் கடையை தூக்கிகினு ஓடணும்.அவனுங்களுக்கு மாலு கொடுத்து சொக்காவை கீய்ச்சுக்கணும்.இப்படிக்கா எங்க லைபு கன்பீஸ் இல்லாம மஜாவா போய்கினு இருந்துச்சு. அக்காங்..பீலா வுட்றேன்னு நென்ச்சிடாதே கண்ணூ..அவுல் கொடுக்குறது,கலாய்க்கிறது,டபாய்க்கிறது ,பீலா உட்றது,கப்ஸா வுட்றது எல்லாம் இந்த ஜக்கு கைலே சுட்டுப்போட்டாலும் வராது.

சம்பாரிச்சு என் மடியாண்டே வந்து கொட்டினான்தான்.என்ன ஒரு குறை அப்பப்ப  சல்பேட்டா வாங்கி கச்சேரி பண்ணி குடிச்சிகினு மட்டையாயிடுவான்.ஆரம்பத்திலே டர்ராயிட்டேன்.அப்பாலே அதுவே பயக்கமாயிடுச்சு.

கடையை மூடிட்டு வீட்டாண்டே வர்ரச்சே வாழை இலையிலே தம்மாதூண்டு பிச்சுப்பூவை கட்டிஎடுத்தாந்து “அடியே ஜக்கு கயிதை..குஜிலி கணக்கா  பிகரு மாரி ஷோக்கா டக்கரா கீறேடி.”இப்டிங்காட்டி குஜால் பண்ணி ஜல்சா பண்ணினா ”ஏன்யா உதாரு வுட்றே” ன்னு நான் ஒப்புக்கு சப்பாணியா கேட்டாலும் ஜக்குவுக்கு ஜல்பு புட்ச்சுடுன்னு உண்மை மச்சானுக்கு நல்லாவே  தெரியும்.

சொம்மா சொல்லப்படாதுய்யா.கடையிலே யாபாரம் ஷோக்கா நடந்துச்சின்னா பட்டையை போட்டுட்டு மட்டையாயிடுமே தவிர.பொட்டலம் போடறது,பிராத்தல் பண்றது,போங்கு பண்ணி பேரை கலீஜ் பண்றதுன்னு கேப்மாரி மொள்ளமாரித்தனம் அல்லாத்தையும் சல்லுன்னு தூக்கி கடாசிட்டு கோவாலு மச்சான் எனக்கேத்த புருஷனாத்தான் வாழ்ந்தான்.

எந்த பேமானி, சோமாறி ,கேப்மாரி,கஸ்மாலம் கேணன் எச்சக்கல,காலிப்பய பரதேசி பன்னாடை கபோதி கட்டேலேபோறவன்  கண்ணு பட்டுச்சோ.ஐயனாருக்கே வெளிச்சம்.கெரகம் புடிச்சு போய் ரோட்டாண்டே சீட்டு வெளாடினு கீந்தவனை சாவுகிராக்கி தூத்தேரி போலீஸ்காரன் தொறத்தி இருக்கான்.எகிறி குதிச்சு போங்கு காட்டினு இருந்தவனை கபால்ன்னு புச்சி மெரிச்சி போட்டதில் பகிலு ஒடஞ்சிப்பூடுச்சி.அப்பாலிக்கா பேஜாருதான்.வூட்டாண்டே வுழுந்து கெடக்குது கோவாலு மச்சான்.காலையிலே நாலு வூட்டாண்டே பத்துபாத்திரம் தேச்சி,சாயங்காலமாச்சுன்னா பூக்கட்டி வித்து வயித்தை கழுவிகினு கீறோம்.

என்னாது..வூட்டு வேல பாக்குறியான்னு கேக்குறியாஆஹாங்..மாமியா கெயவி பீச்சாங்கையி பீச்சாங்காலு இஸ்துகினு படுக்கையில் பத்து மாசம் கப்பு அடிச்சுக்கினு படுத்துடுச்சி.ஒரு தபா மார்லே வலிக்குதுன்ன்னு சொல்லி மறு நிமிட்டில் பல்பு வுட்டுறுச்சு.அது வேலை பார்த்த கொல்டி காரங்க,ஜட்கா காரங்க .ரெண்டு மாமிங்க வூட்டாண்டே பத்து பாத்திரம் தேச்சு டப்பு சம்பாரிச்சு உஷாயிராடேன்ல.அதான் தலப்பாலே சொன்னேனே பஜார்ல உஜாரா இல்லைனா நிஜார கலட்டிடுவாங்க இந்த மெட்ராஸ் ஊர்லே. இது எங்கோவாலு மச்சான் சொல்லித்தந்த பாடம்ன்னு.

இதான்யா மேட்டரு. எங்கதையை சொல்லி பீலிங்கு பண்ணிட்டேனா?இப்படிக்கா வூட்டாண்டே  போய்  லைபாய் சோப்பு வாங்கிட்டு மச்சானுக்கு குளிக்க கொடுத்து நாஷ்ட்டா வாங்கி கொடுக்கணும்.வர்ட்டா?இத்தினி தூரம் பொற்மையா குந்திகினு எங்கதையை கேட்ட உனக்கு ரொம்ப டாங்சு.

டிஸ்கி-1:மெட்றாஸ் பாஷையில் உங்க அல்லாத்துக்கிட்டேயும் ஒரு மினியம்மாவையோ கபாலியையோ கூட்டினு வந்து காட்டணும்ன்னு ரொம்ப நாளா ஆசை.ஜக்கை உருவாக்குவதற்குள் டங்குவாறு அந்து பேஜாரா பூடுச்சுங்கோ.ஜக்குவை பட்சிட்டு சூப்பரா சிரிச்சுட்டு அப்பாலிக்கா மறக்காமல் கருத்தை போட்டு ஓட்டும் போட்டுடுங்க..ஆமா சொல்லிபுட்டேன்...அக்காங்..

டிஸ்கி - 2:

படிப்பவர்களுக்கு  பல வார்த்தைகள் புரியவில்லை என்பதை அறிந்தேன்.பொருளறிந்து வயிறு வலிக்க சிரிக்க இந்த லிஸ்ட்

வல்லிசா -சுலபமாக
இஸ்துகினு - இழுத்துக்கொண்டு
கண்ணாலம் - கல்யாணம்
குஜிலி  - இளம் வயதுப்பெண்
குஜாலா -கொஞ்சல்
ஜல்சா - சரசம்
மெர்சல்  - பயம்
சோமாரி - ஒழுக்கம் இல்லாதவன்
தபா - தடவை
டபாய்ச்சே - ஏமாற்றி
அப்பாலிக்கா  - அப்புறமா
காண்டாய்டுவேன் - கோபமாகிவிடுவேன்
போங்குத்தனமா - கள்ளத்தனமாக
மெரிச்சு - மிதிச்சு
நைனா - தந்தை
அண்ணாத்தை - அண்ணன் 
கீச்சி - கிழித்து
சடுதி - சீக்கிரம்
சொம்மா - சும்மா 
கெயன் - கிழவன்
கெயவி - கிழவி
கபாலம்  -மண்டை
சல்லிசா  - சுலபமாக
நின்ன - நின்ற
இட்டாந்து - கொண்டுவந்து
சவரட்சனை  - தேவை அறிந்து செய்தல்
கொயந்தே -குழந்தை
குந்திகினு - உட்கார்ந்து கொண்டு
கில்பான்ஸ்  - பளபளப்பான ஆள்
இல்லாங்காட்டியும் - இல்லாவிட்டாலும்
டொச்சானா - அழகில்லாத
அட்டு -சுமாரான
தில்லான -தைரியமான,ஆண்மை
கில்லியான - திறமையான
யாபாரம்-வியாபாரம் 
பிச்சுகினு - பிய்த்துக்கொண்டு
காலம்பற  - காலையில்
மிலிட்டரி ஓட்டலாண்டே - அசைவஹோட்டல் அருகே
நாஷ்டா - காலை டிபன்
பிகில் - விசில்
மாலு - மாமூல்
சொக்கா - சட்டை
கீய்ச்சுக்கணும் - கிழித்துக்கொள்ளவேண்டும்
கன்பீஸ் - குழப்பம்
மஜா  -கேளிக்கை
போய்கினு - போய்க்கொண்டு
அக்காங் - ஆமாம்
பீலா -பொய்
கலாய்- கலாட்டா
டபாய்க்கிறது -ஏமாற்றுவது
கப்ஸா  - பொய்
பல்பு - சாவு
சல்பேட்டா -மலிவு விலை மது
கச்சேரி -குழுவுடன் மது குடித்தல்
மட்டை - அதீத போதை
டர்ராயிட்டேன். - கோபமாகிவிட்டேன்
அப்பாலே-அந்தப்பக்கம்
பயக்கமாயிடுச்சு. - பழக்கமாகிவிட்டது
தம்மாதூண்டு  - சிறிய அளவில்
கயிதை - கழுதை
குஜிலி -இளம்பெண்
கணக்கா  - அது மாதிரி
பிகரு மாரி  - அழகு மாதிரி
ஷோக்கா  - அழகா
டக்கரா கீறே - சூப்பரா இருக்கே
உதாரு -பொய்
ஜல்பு -ஜலதோசம்
சொம்மா- சும்மா
பட்டையை - சாரயத்தை
பொட்டலம் - கஞ்சா
பிராத்தல் 
போங்கு - கள்ளத்தனம்
கேப்மாரி - திட்டு வார்த்தை 
மொள்ளமாரித்தனம் 
அல்லாத்தையும் - எல்லாவற்றையும் 
சல்லுன்னு - சட்டென்று
கடாசிட்டு  - தூக்கி வீசிவிட்டு
பேமானி - திட்ட உபயோகிக்கும் வார்த்தை 
சோமாறி -திட்ட உபயோகிக்கும் வார்த்தை 
கேப்மாரி-திட்ட உபயோகிக்கும் வார்த்தை 
கஸ்மாலம் - முட்டாள் 
கேணன் - திட்ட உபயோகிக்கும் வார்த்தை 
எச்சக்கல-திட்ட உபயோகிக்கும் வார்த்தை 
காலிப்பய -திட்ட உபயோகிக்கும் வார்த்தை 
பரதேசி-கொடியவன்
பன்னாடை-திட்ட உபயோகிக்கும் வார்த்தை 
கெரகம்- ஏழரை நாட்டு சனி
சாவுகிராக்கி -திட்ட உபயோகிக்கும் வார்த்தை 
தூத்தேரி -திட்ட உபயோகிக்கும் வார்த்தை 
புச்சி - பிடித்து
மெரிச்சி - மிதிச்சி
பகிலு -இடுப்புப்பகுதி
பீச்சாங்கையி - இடதுகை
பீச்சாங்காலு -இடதுகால்
கப்பு - துர்நாற்றம்
தபா - தடவை
கொல்டி காரங்க  - தெலுங்கு பேசுபவர்கள்
ஜட்கா காரங்க  - ஹிந்தி பேசுபவர்கள்
மாமிங்க  - பிராமணர்கள்
டப்பு - பணம்
நிஜார் - கால்சட்டை
குந்திகினு  - உட்கார்ந்து கொண்டு
டாங்சு - நன்றி
கபோதி - திட்ட உபயோகிக்கும் வார்த்தை 
கட்டேலேபோறவன-திட்ட உபயோகிக்கும் வார்த்தை 
பேஜாரு - தொல்லை

March 23, 2013

அன்னதானம் அன்னபூரணி


அன்னபூரணியை அவள் வசிக்கும் ஊரில் அறியாதவர்களே இருக்க முடியாது.அனைவரும் அறிந்த அந்த அன்னபூரணி பெரிய ஜமீன் வம்சமோ,அரசியல் குடும்பத்தை சேர்ந்தவளோ இன்ன பிறவோ என்று கற்பனை பண்ணி விடாதீர்கள்.

கஞ்சிப்போடாத சுங்குடி புடவையும்,கழுத்தில் முருக்கு செயினும்,கூடவே கருகமணியும்,மூக்கில் மூன்றுகல் வைர பேசரியும்,வீட்டுக்காரர் கல்யாணதப்போ போட்ட எண்ணெய் இறங்கினாலும் பள பளப்பு குறையாத  ஏழுகல் வைத்த வைரக்கம்மலுமாக ,வைட் அண்ட் பிளேக் ஆகி விட்ட தலையில் பாரசூட் எண்ணெயை சதைக்க தடவி,ஒரு முடிகூட சிலும்பிக்கொள்ளாமல் வழ வழவென தலைசீவி,கொண்டையில் மணக்கும் ஜாதி மல்லி வாசனையை மீறி மூக்கைத்துளைக்கும் மசாலாவின் கதம்ப மணமும்,பார்க்கும் நேரமெல்லாம் அவளது ட்ரேட் மார்க் கரண்டியுமாக காணப்படும் சாதாரண மனுஷிதான்.

அன்னம் என்றால் உணவு,பூரணம் என்றால் முழுமை பெற்றவள் என்ற அர்த்தம் காணும் அன்னபூரணி அவள் பெயருக்கேற்றார் போல் அன்னம் இட்ட கை என்பது அவளுக்கே பொருந்தும்.விருந்தோம்பலும்,உபசரிப்பும் அவளுக்கு கைவந்த கலை.

நான்கு ஆண் குழந்தைக்கு பிறகு தவமா தவம் இருந்து ஐந்தாவதாக பிறந்தவள்தான் இந்த அன்னபூரணி.அவள் பிறந்த நேரம் அவள் வீட்டில் பாலும் நெய்யுமாக ஓடிற்று எனலாம்.ஆசை ஆசையாக இந்த பெயரை பேத்திக்கு வைத்து “எல்லோரும் உன் கையில் இருந்து எல்லாமும் பெற வேண்டும்.உன் கைகள் கொடுக்கும் கைகளாக இருக்க வேண்டும்”என்று மனதார வாழ்த்தி குட்டி பேத்தியை உச்சி முகர்ந்த நேரம் அன்னபூரணியை பொருத்த வரை நல்ல நேரம்தான்.எல்லோருக்கும் கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறாள்.

அண்ணன் நால்வருக்கும்,அவளுக்குமாக சேர்த்து இலையில் சாதம் பறிமாறும் பொழுது அவளுக்காக இலையில் போடப்படும் அப்பளம் நான்காக உடைக்க பட்டு அண்ணன்மார்கள் இலையில் அமர்ந்து இருக்கும்.விஷேஷ வீடுகளுக்கு சென்றால் இலையில் பறிமாறப்படும் ஜாங்கிரி,மைசூர் பாக் போன்ற இனிப்பை கைகுட்டையில் சுருட்டி எடுத்து வந்து அண்ணன்களுக்கு தந்து மகிழும் பொழுது ஆரம்பம் ஆனது..இதோ  பேரன் பேத்தி எல்லாம் எடுத்து முடித்தும் அந்த சுபாவம் இன்னும் அப்படியே அவளிடம் உள்ளது.

அம்மா தரும் பிஸ்கட்டில் இரண்டினை சாப்பிடாமல் வைத்து இருந்து தெருவில் இவள் தலையைக்கண்டு விட்டாலே வாலை ஆட்டும் சொறி நாய்க்கு பிஸ்கட்டை போட்டு திருப்தி படுவாள்.

அம்மா ஆசை ஆசையாக பகலுணவுக்கு கட்டித்தரும் எலுமிச்சை சாதம் தயிர் சாதம்,கருவேப்பிலை சாதம் அனைத்தும் பள்ளி உணவு இடைவேளையின் போது இவளது வாயினுள் ஒரு கவளமாவது போய் இருக்குமா என்பது சந்தேகம்தான்.

“அம்புஜம்,நெறய வேர்க்கடலை போட்டு அம்மா புளியோதரை செய்து தந்தா.இந்தா சாப்பிடு.கல்பு,உனக்குத்தான் தயிர்சாதம் பிடிக்குமே.நெகு நெகுன்னு கெட்டி தயிர் விட்டு கிளறி இருக்கு தயிர்சாதம் தொட்டுக்க கூடவே ஆவக்காய் ஊறுகாய்.எடுத்துக்கோ.ஐயோ..நம்ம ருக்குவோட அம்மாவுக்கு நாலு நாளா ஜுரம்.அவள் சாப்பாடே எடுத்து வரலே.இன்னிக்கு நான் அவளுக்கு கொடுத்துடப்போறேன்.”இப்படி வாரி வழங்கி விட்டு மூலையில் குவித்த மண் மீது இருக்கும் மண் கூஜாவின் தலை மேல் இருக்கும் அலுமினிய டம்ளரை எடுத்து கூஜாவினுள் இருக்கும் நீரை மொண்டு வயிறு ரொம்ப குடித்து விடுவாள்.அவள் தான் அன்னபூரணி.

இவளது இந்த தயாள குணத்துக்கு வீட்டினர் என்றுமே முட்டுக்கட்டை போட்டதில்லை.ஏனெனில் முன்னர் சொன்னது போல அவள் வீட்டில் பாலும் நெய்யுமாக ஓடிய தருணம்.திருமணம் ஆகி புக்ககம் வந்ததுதான் வசமாக மாட்டிக்கொண்டாள்.

“கடங்காரி,இப்படி ஆக்கித்தட்டியே எம்புள்ளையை கடங்காரன் ஆக்கி விடுவாள்”

“ஆமாமாம்..வண்டி வண்டியாக அப்பன் வீட்டில் இருந்து அரிசியும் பருப்புமாக வருது பாரு.பெரீஈஈய ராஜபரம்பரை ஆட்டம்..ம்கும்..”

“ஏண்டா..மகாதேவா...இப்படி இடிச்சு வச்ச புளியாட்டம் தேமேன்னு இருக்கியே.ஒம்பொண்டாட்டி கொட்டத்தை சித்த அடக்கப்படாதா?”

“ஆத்தாடி..கிள்ளிக்கொடுத்தா அள்ளிட்டு வரும்ன்னு இப்படி ஆக்கி கொட்டுறியா.என்ன அநியாயமா இருக்கு.ஏண்டி இப்படி புத்தி போறது”இப்படி மண்டையைப்போடும் வரை அன்னபூரணி வடிக்கும் சுடுசாதம் கணக்காக சூடாக வந்து விழும் மாமியாரின் வாயில் இருந்து நெருப்புத்துண்டங்கள்.

சும்மா சொல்லக்கூடாது.கைபிடித்த மகாதேவன் இது நாள் வரை அப்படிக்கொடு,இப்படி கொடுக்காதே என்று ஒரு வார்த்தை கூறியதில்லை.

எதிர் வீட்டு சரசு மருமகள் குழந்தை பெற்று இருக்கா.பத்திய சாப்பாடு சமைத்து வைத்து இருக்கேன்.போய் கொடுத்துட்டு வந்துடுறேன்.”முகத்தில் வழியும் வியர்வையை முந்தானையால் துடைத்த படி கணவரிடம் சொன்னால் போதும்”சித்த பொறுடி.இதோ ஆஃபீஸுக்கு கிளம்பிவிடுவேன்.காரிலேயே டிராப் பண்ணிடுறேன்.”மருத்துவமனை வாசலில் இறக்கி விட்டு “ஜாக்கிரதையா வீடு போய் சேரு”என்று ஆட்டோவுக்கும் சில்லரை கொடுப்பவர்.

“வயிற்றுக்கு மட்டும் வஞ்சனை பண்ணக்கூடாது.ஏன் ஜுரம் வந்தவளாட்டம் ரொம்ப டல்லடிக்குது உன் குரல். .சூடா மிளகு ரசம் வைத்து சுள்ளுன்னு ஒரு தொகையல் பண்ணி அப்பளத்தை நொறுக்கிப்போட்டு ஜம்முன்னு சாப்பிடு.என்னது வீட்டுக்கு வர்ரயா..வா வா..பேஷா பண்ணிப்போடுறேன்.”

எதிர் முனையின் பதிலை எதிர் பார்க்காமல் ரிஸீவரை வைத்துவிட்டு அவசர அவசரமாக அடுக்களைக்குள் நுழைந்து விடுவாள் மிளகு ரசம் வைக்க.

வீட்டுக்கு வரும் பால்க்காரி,கீரைக்காரி ஒருத்தரையும் விடுவதில்லை.அவர்களும் வயிறு நிறைய இவள் கையால் சாப்பிட்டு விட்டு ”தீர்க்காயுஸாக இரும்மா”என்று வாழ்த்தி விட்டு செல்லும் பொழுது அன்னபூரணியின் முகத்தில் ஒரு அரைசிரிப்பைத்தான் காண முடியும்.

தபால்காரர் தபாலை கொண்டு வந்து தந்து விட்டால் போதும்”என்னப்பா கதிர்வேலு..கொளுத்தற சித்திரை வெயிலில் எப்படித்தான் தெருத்தெருவா சுத்தி அலையறியோ.சித்த பொறு.ஊரில் இருந்து செவ்விளநீர் வந்து இருக்கு.உடைச்சி தர்ரேன்.குடிச்சுட்டு போ.தெம்பா அலைய முடியும்”

“வீட்டுக்கு எலெக்டிரிக்கல் வேலை செய்ய வரும் பையனிடம்”ராமு..அப்பா என்ன செய்றார்.சுகர் எல்லாம் கட்டுக்குள் இருக்கா?என்னது உன் அம்மாவுக்கு மலேரியாவா?அப்ப மதியத்துக்கு சாப்பாடு எடுத்து வரலியா.இரு..சார் சாப்பிட வர்ரசே உனக்கும் ஒரு தட்டு போட்டுறேன்.”அன்னபூரணி அம்மாவீட்டுக்கு வேலை செய்யப்போகிறோம் என்றே ராமு பகலுணவு எடுத்து வராமல் இருந்திருக்கும் தந்திரம் இவளுக்கு புரியாது.புரிந்து கொள்ளவும் விரும்பவும் மாட்டாள்.

கணவனும் மனைவியுமென இரண்டே பேர்தான்.இருந்தாலும் தினம் சட்டி சாதமும் சாம்பாரும் கூட்டும் குழம்பும் அன்னபூரணியின் அடுக்களை என்றும் அமர்க்களப்பட்டுக்கொண்டே இருக்கும்.

இப்படியாகப்பட்ட அன்னபூரணியின் கணவர் மகாதேவன் திடுமென நெஞ்சைப்பிடித்துக்கொண்டு ஊஞ்சலில் சாய்ந்துவிட்டார்.பதறிப்போன அன்னபூரணி சாதுர்யமாக ஆம்புலன்சை வரவழைத்து பிரபல மருத்துவமனைக்கு அழைத்து சென்று விட்டாள்.விஷயம் கேள்விப்பட்டு அறிந்தவர் அத்தனை பேரும் பதறி அடித்து மருத்துவமனைக்கு வர அட்மிட் ஆகி இருப்பவர் பெரிய வி ஐ பி யா என்று பலர் கேட்டும் விட்டனர்.

பரிசோதனை செய்த மருத்துவர் மைல்ட் அட்டாக்.போதுமான சிகிச்சை கொடுக்க வேண்டும்.இன்னும் இரண்டு நாள் கட்டத்துக்கு தங்கி இருந்து சிகிச்சை பெற வேண்டும்”என்று கூறி விட்டனர்.

கணவருக்கு அருகில் இருந்து பணிவிடை செய்து கலங்கிய மனதை தேறுதல் படுத்தி மருத்துவமனையில் வளைய வந்தாள்.

“மகாதேவன் சார்.பிரஷர் சுகர் இப்படி ஒன்றுமே இல்லையே.எப்படி இப்படி..இப்ப எப்படி இருக்கீங்க?”ஆஃபீஸில் வேலை பார்க்கும் நண்பரின் குரல் கேட்டு விழித்தவர் “வாங்க ராஜாமணி சார்.இறைவன் புண்ணியத்தில் பிழைத்து எழுந்துவிட்டென்.எல்லாவற்றுக்கும் காரணம் இறைவன் அருள் முதல் காரணமாக இருந்தாலும் என் மனைவியின் தயாள குணமும் அவள் தாலி பாக்கியத்தை நீடிக்க வைத்து விட்டது."சிரிப்பு பொங்க மகாதேவனின் வாயில் இருந்து வந்த வார்த்தைகள் கூட அருகில் இருந்த அன்னபூரணியை ஒன்றும் செய்து விடவில்லை.

“வாங்க அண்ணே.செளக்யமா?இந்த அளவுக்கு இவரை காப்பற்றித்தந்த அந்த இறைவனைத்தான் புகழ வேண்டும்.வேகாத வெயிலில் டூ வீலரில் வந்து இருக்கீங்களே கேண்டீனில் ஜூஸுக்கு சொல்லி இருக்கேன் .சாப்பிடுட்டு போங்க”

“அட..அதெல்லாம் இப்ப எதுக்குமா”

“பரவா இல்லை அண்ணே..ராஜாமணி அண்ணே சின்ன உபகாரம் பண்ணவேணும்.ஒரு அரை மணி நேரம் இருக்கீங்களா”

“அதுக்கென்னம்மா..இன்னிக்கு லீவுதானே தாராளமா இருக்கேன்”

“என்னங்க..வீட்டுக்கு போய் உங்களுக்கு கஞ்சியும் துகையலும் செய்து எடுத்துட்டு வர்ரேன்.கூடவே பக்கத்து வார்டு பிரம்மச்சாரி பையன் பைக் ஆக்ஸிடெண்டில் காலை முறித்துட்டு படுக்கையில் இருக்கான்.கேண்டீன் சாப்பாடு சாப்பிட்டு நாக்கு செத்து விட்டது என்று நர்ஸிடம் சொல்லிட்டு இருந்தான்,பாவம்.வயசுப்பையன்.நாக்குக்கு ருசியா கொஞ்சம் வத்தக்குழம்பும்,பீன்ஸ் பொரியலும் பண்ணி சித்த நேரத்தில் சாதமும் வடிச்சு எடுத்து வந்துடுவேன்.ராஜாமணி அண்ணே..நீங்களும் இங்கிருந்து மந்தவெளி வரை வெயிலில் டூவீலரை ஓட்டிட்டு போகணும்.கூடவே உங்களுக்கும் சேர்த்து ஒரு டிபன் பாக்சில் எடுத்துட்டு வர நாழி ஆகாது.சாப்பிட்டுட்டு மொள்ளமா போலாம்.தோ வந்துடுறேன்..”அவசரமாக ஜோல்னாபையை தோளில் மாட்டிகொண்டு கிளம்பிய அன்னபூரணியை பிரமிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார் ராஜாமணி.

September 3, 2012

இனிப்பு பிரியர் சீனிவாசன்

சீனிவாசன் என்று இவரது அப்பா எந்த நேரம் பெயர் வைத்தாரோ?இனிப்பின் மீது நம்ம சீனிவாசனுக்கு அத்தனை ஈர்ப்பு.சிறியவயதில் தன் தந்தையின் மிட்டாய்க்கடைக்கு சென்றாரே ஆனால் சுமார் ஒரு கிலோ இனிப்புகளை கபளீகரம் செய்து விட்டுத்தான் வெளியில் வருவார்.

வீட்டில் அம்மாவிடம் வந்து அப்பா இப்படி கத்துவார்.”இந்த ரீதியில் போனால் ஸ்கூல் முடிக்கறதுக்கு முன்னாடி உன் பிள்ளைக்கு சர்க்கரை வியாதி வந்துடும்டி”

“அட நீங்க வேற..உங்க வாயிலேர்ந்து நல்லதா நாலு வார்த்தை வராதா?இப்ப கல்லை தின்னாக்கூட செரிக்கிற வயசுங்க..சும்மா விடுங்கங்க..”அம்மா பரிந்து கொண்டுவருவாள்.

இட்லிக்கு தொட்டுக்கொள்ள சட்னி சாம்பார் என்று வகை வகையாக இருந்தாலும் ஒரு கிண்ணம் நிறைய தேனை வைத்துக்கொண்டு தொட்டு சாப்பிடத்தான் பிடிக்கும்.

இடியாப்பத்துக்கு நெய் மணக்க மணக்க வக்கணையாக குருமா செய்து இருந்தாலும் சர்க்கரை இல்லாமல் இடியாப்பம் இறங்காது.

விஷேஷங்களில் குலோப்ஜாமூன் செய்தால் மிஞ்சும் சர்க்கரைப்பாகு சீனிவாசன் வீட்டில் மிஞ்சியதாக சரித்திரமே இல்லை.குலோப்ஜாமூன்கள் வேண்டுமானால் பாத்திரத்துக்கடியில் கண்களை கொட்ட கொட்ட விழித்துகொண்டு ஒன்றிரண்டு இருக்குமே ஒழிய துளி பாகு இருக்காது.

அவரது இந்த இனிப்பு மோகத்திற்கு பொருத்தமாக மனைவியின் பெயர் அமைந்தது கூட ஆச்சரியம்தான்.

ஆமாம் இல்லக்கிழத்தியின் பெயர் இனிப்பு சொட்ட சொட்டத்தான் இருக்கும் .

தாலி கட்டிய நிமிடம் முதல் பேரன் பேத்தி எடுத்த இந்த நாள் வரை சீனிவாசனின் இனிப்புமோகம் தேன்மொழிக்கு மிகவும் ஆச்சரியமான விஷயம்.இன்னொரு காமெடி என்னவென்றால் கல்யாணம் ஆன இரவு அழகான மூங்கில் கூடையில் ஆப்பிள் மாம்பழம் மலைப்பழம் என்று அடுக்கி வைத்து இருந்தார்களே தவிர இனிப்பு வகைகளை கண்களிலே காணோம்.

மனைவியிடன் பேசிய முதல் வார்த்தையே இதுதான்.”தேனு,பழமெல்லாம் அட்டகாசமாக அடுக்கி வைத்திருக்கீங்க.இனிப்பெல்லாம் வைக்க மாட்டீர்களா?”

தேன் மொழி வெட்கச்சிரிப்புடன்”நீங்களே ஸ்வீட் கடைக்காரர்.திருநெல்வேலிக்கே அல்வாவா”இவ்வாறாக சீனிவாசனின் திருமதி முதல் நாளன்றே அல்வா கொடுத்து விட்டது குறித்து மனசு முழுக்க சீனி வாசனுக்கு இன்று வரை குறையாக உள்ளது.அவ்வப்பொழுது மனைவியும் கணவனும் பரம்பரையைப்பற்றி பேசும் பொழுது ‘சாந்தி முகூர்த்ததுக்கு இனிப்பு வைக்காமல் சிக்கனம் பிடித்த பரம்பரையாச்சே உன்னுது”என்று ஆரம்பித்தாரானால்

“ஆமாமாம்..எல்லாவற்றுக்கு சேர்த்து வைத்து தீபாவளிச்சீராக ஐநூறு அதிரசம் ஐநூறு லட்டு ஐநூறு லாடு என்று வண்டி வண்டியாக வாங்கி என் அப்பாவை மொட்டை அடிக்கலியா?”

“அடியேய்.. லட்டு சைசையும் லாடு சைசயும் இப்ப நான் சொன்னால் மூஞ்சை எங்கே கொண்டு வச்சிப்பே...ஒரு லாடு பிடிக்கிற மாவை வைத்து நாலு லாடு செய்து சீர் செய்த மகா பரம்பரை ஆச்சே..இருந்தாலும் சிக்கனத்தில் உங்க குடும்பத்தை அடிச்சுக்க முடியாதுடி”

சீனிவாசனின் நக்கல் பேச்சுக்கும் நையாண்டி பேச்சுக்கும் சளைக்காமல் ஈடு கொடுத்து பதிலடி கொடுப்பது போலவே அவரது இனிப்பின் மேலுள்ள பற்றை புரிந்துகொண்டு இனிப்பு இனிப்பாக வக்கணையாக சமைத்துபோட்டும் கணவரை திருப்தி படுத்தி நல்ல இல்லத்தரசியாக விளங்கினாள்.

வீட்டிலுள்ளவர்களுக்கு காபியில் சர்க்கரை அதிகம் பிடிக்காது. இவருக்கோ கூட இரண்டு ஸ்பூன் சர்க்கரையைகலக்கி நுரை ததும்ப ஆவி பறக்க காஃபியை கையில் தரும்பொழுது சீனி வாசன் பூர்வஜன்ம சங்கல்பம் அடைந்து இருப்பார்.பால்பாயஸம் கிளறினால் எல்லோருக்கு கிண்ணங்களில் எடுத்து வைத்துக்கொண்டு இறுதியாக நாலுஸ்பூன் சர்க்கரையை சேர்த்து கிளறி கணவருக்கு ஒரு பெரிய கோப்பை நிறைய பரிமாறும் பொழுது வாய் மட்டுமல்ல மனமெல்லாம் அமிர்தமாக இனிக்கும் சீனிவாசனுக்கு.

விஷேஷங்களுக்கு செல்லும் பொழுது பக்கத்து இலையில் அமர்ந்து இருக்கும் தேன்மொழி தனக்கு வைத்த மைசூர் பாகையும் ஜாங்கிரியையும் கணவரது இலையில் வைக்க தவறுவதில்லை.பாயசம் நிரம்பிய கப்,ஐஸ் கிரீம் இப்படி ஒவ்வொன்றும் சீனிவாசனின் இலைக்கு ஆட்டோமேடிக்காக சென்றடைந்து விடும்.மனைவியின் செய்கையில் நெகிழ்ந்து போய் “தேனு,எல்லா இனிப்பையும் என் இலைக்கே தள்ளிடுறே.நீயும் கொஞ்சம் டேஸ்ட் பார்க்க மாட்டே”
“பரவா இல்லைங்க”தேன்மொழி பிசிபேளா பாத்தில் மும்மரமாகி இருப்பாள்.

“அக்கா...அத்திம்பேருக்கு இனிப்பு ஆசை இருந்தாலும் இத்தனை ஆகாது..உன் பெரிய பையனுக்கு பெயர் சூட்டு விழாவில் கிண்ணத்தில் தேன் கொண்டு வந்து வைத்தோமில்லையா.பெயர் வைத்து விட்டு ஐயர் தேன் கிண்ணத்தை கீழே வைக்கப்போகும் பொழுது கபால் என்று கிண்ணத்தை அத்திம்பேர் வாங்கி தேனை பூரா கபளீகரம் செய்துட்டார்.ஐயர் அத்திம்பேரை பார்த்த பார்வை இருக்கே..ஹாஹ்ஹா..”இது நடந்து வருடங்கள் பல ஆனாலும் சொல்லிக்காட்டி இன்றைக்கும் சிரிப்பான் தேன்மொழியின் தம்பி.

“அக்கா..அத்திம்பேருக்கு ரசம் சாம்பார் செய்யும் பொழுது உப்புக்கு பதிலா சர்க்கரையை போட்டு கொடுத்தால் கூட பேஷா சாப்பிடுவாறாக்கும்”இது தேன் மொழியின் சின்னத்தம்பி

அப்பேற்பட்ட இனிப்புத்தென்றல்,இனிப்பரசர்.இனிப்புசக்கரவர்த்தி சீனிவாசனுக்கு சர்க்கரை நோய் வந்து இருப்பது சோகத்திலும் சோகம்.

”ஸ்கூல் முடிக்கறதுக்கு முன்னாடி சக்கரை வியாதி வந்துடும் இவனுக்கு “சீனிவாசனின் தந்தையின் கூற்றை பொய்யாகி,பேரன் பேத்திகளெல்லாம் எடுத்த பின்னர்தான் சர்க்கரை வியாதி ஆரம்பித்திருப்பது சோகத்திலும் ஒரு சந்தோஷம்.

பரிசோதனை செய்ய மட்டேன் என்றவரை தர தரவென்று இழுத்து செல்லாத குறையாக இழுத்து சென்று சோதனை செய்து பார்த்ததில் இரத்தத்தில் முன்னூறுக்கும் மேல் இருப்பதாக பரிசோதனையின் முடிவு சொல்லிய பொழுது இவருக்கு தலையில் இடிவிழாத குறைதான்.

“ரிசல்ட் தப்பா வந்திருக்கும்.எங்க பரம்பரையில் யாருக்குமே இந்த வியாதி கிடையாது.அப்ப எனக்கு எப்படி வரும்?”ஒத்துக்கொள்ளாமல் அழிசாட்டியம் பண்ணியது தனிக்கதை.

மறுநாள் சர்க்கரை இல்லாத காஃபியை கையில் கொடுத்த பொழுது கண்ணீர்விட்டு அழாத குறைதான்.

“அடியே தேனு..அரை ஸ்பூன் போடுடி.தொண்டைக்குள் ஒரு மிடறு கூட இறங்க மாடேன்கிறது”பரிதாபமாக விழித்த புருஷனை மிரட்டாத குறையாக”உஷ்..மூச்..நாளைக்கு பையனிடம் சொல்லி சுகர் பிரி டேப்ளட் வாங்கித்தர்ரேன்.மற்ற படி சர்க்கரைங்கற பெயரைகூட உச்சரிக்கபடாது ஆமா சொல்லிட்டேன்.”

“இனி எவனாவது உன் பெயர் என்னன்னா சீனியை விட்டுட்டு வாசன்னு சொல்லிக்கறேன் போதுமா”கடுப்பானார் சீனிவாசன்.

கணவரின் உடல் நலன் கருதி சர்க்கரையை கண்ணில் கூட காட்டாமல் கட்டுப்பாடாக வைத்திருந்தும் என்ன செய்ய?கில்லாடி சீனிவாசன் பெண்டாட்டி இந்தப்பக்கம் போன சமயம் அடுக்களைக்குள் புகுந்து ரெண்டு ஸ்பூன் சீனியை வாயில் போட்டு அதக்கிக்கொண்டு பெரிய சாதனை செய்தது போல் பெருமூச்சு விட்டுக்கொள்வார்.

வெளியில் போன சமயம் பார்த்து டப்பாக்களை உருட்டி இனிப்பு பண்டங்களை கண்டால் விடுவதில்லை.

குளிர்சாதனப்பெட்டியை குடைந்து பேரக்குட்டிகளுக்காக வாங்கி வைத்திருக்கும் இனிப்புப்பண்டங்களை பதம் பார்த்து திருப்தி பட்டுகொள்ளுவார்.

கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் தக்குமுக்கு திக்குதாளம் என்பது கணக்காக ஒரு நாள் கையும் களவுமாக மனைவியிடன் மாட்டிக்கொண்டார் சீனிவாசன்.

துணி அடுக்கி வைத்திருக்கும் கப்போர்டினுள் தலை வைத்து படுக்காத குறையாக இருக்கும் கணவரின் நிலை கண்டு”என்னங்க..அப்படி என்னதான் இருக்கு அந்த அலமாரியில்?அலமாரியை குத்தகைக்கு எடுத்த மாதிரி அங்கேயே பலியா கிடக்கறீங்க?”தேனுவின் கேள்விக்கு தகுந்த பதில் கிடைக்காததால் தடாலடியாக அலமாரி முன் வந்து பரிசோதனை செய்ததில் அல்வா பொட்டலமும்,பூந்தி பொட்டலமும் தேன்மொழியைப்பார்த்து சிரிப்பாய் சிரித்தது

அவ்வளவுதான் தேனுவாகிய தேன்மொழி பெருங்குரல் எடுத்து அழவே ஆரம்பித்து விட்டாள்.பதினைந்து சவரனுக்கு குறையாமல் கழுத்தில் கிடந்த தாலி சரட்டை கையில் எடுத்து”என்னங்க..என் ஆயுசு முச்சூடும் இந்த தாலி என் கழுத்தில் தொங்கணும்ங்க.அதுக்கு பங்கம் வச்சிடாதீங்க”

என்ன செண்டிமெண்டால் அடித்தும் என்ன செய்ய?பங்கம் வந்தாலும் பரவா இல்லை என்பது போல் மதியநேரம் தேன்மொழி தூங்கும் சமயம் மணி அடித்துக்கொண்டு வரும் சோன் பப்டி காரனிடம் பேப்பர் நிறைய சோன் பப்டி வாங்கி வாசலில் வைத்தே சாப்பிட்டு விட்டு வாயைத்துடைத்துக்கொண்டு வந்துவிடுவதை வழக்கமாக்கிக்கொண்டார்.

“என்னதிது..ரிட்டயர்மெண்ட் ஆகிட்டாலும் ஏதோ ஆஃபீஸ் போறது கணக்கா நீங்கள்தான் மழ மழன்னு ஷேவ் செய்துடுவீங்களே புதுசா என்ன தாடி முளைச்சிருக்கு..?முகவாயில் ஒட்டிக்கொண்டிருந்த சோன் பப்டியை கையால் தட்டிவிட்ட தேனு அதிர்ச்சிக்குள்ளானாள்.

“அடப்பாவி மனுஷா..என் தாலிக்கு பங்கம் வர்ரதுக்கு கங்கணம் கட்டுறீங்களே உங்களுக்கே நியாயமா இருக்கா..”

இப்போதெல்லாம் இரும்பு பெட்டியின் சாவியுடன்,குளிர்சாதனப்பெட்டியின் சாவியும்,அடுக்களை பூட்டின் சாவியும் பவ்யமாக தேன்மொழியின் இடுப்பில் தொற்றிக்கொள்ள ஆரம்பித்துவிட்டது.


April 11, 2012

அடாவடி அலமு

”கீரைக்காரம்மா,நேற்று தந்த கீரை ஒரே கசப்பு.கீரை கூட்டுக்கு போட்ட எண்ணையும் தேங்காயும் தண்டம்.இத்தனை காலம் கீரை தர்ரீங்க பக்குவமா தரத்தெரியலே”பிலு பிலு வென்று கீரைக்கார அம்மாவை பிடித்துக்கொண்டாள் அலமு.

அலமுவுடன் மல்லுக்கு நின்றால் வேலைக்கு ஆகாது என்பது கீரைக்கார அம்மாவுக்கு தெரியும்.
வழக்கம் போல் ஒரு பெரிய கீரைக்கட்டை இலவச இணைப்பாக கொடுத்து விட்டு நடையைக்கட்டினாள் கீரைக்கார அம்மா.

கீரைக்காரி என்றில்லை பால்காரர்,காய்காரர்,தையல்காரர்,மளிகைக்கடை,பழைய துணிக்கு பிளாஸ்டிக் பொருட்கள் தருபவரில் இருந்து அனைவரிடமும் அடாவடி செய்தே சாதிப்பதில் மகா கில்லாடி அலமு.சாதித்து விட்டு அவளது முகத்தில் பொங்கும் சிரிப்பை பார்க்க வேண்டுமே.காண கண் கோடி வேண்டும்.

மணி ஆர்டர் கொண்டு வந்து தரும் தபால்காரர் பணத்தைக்கொடுத்துவிட்டு தலையை சொறிந்து கொண்டு நின்றால் ”என்ன என்ன என்ன..?”என்று கே பி சுந்தராம்பாள் ஆகி விடுவாள்.”

“இப்ப என்னத்துக்கு நிக்கறீங்க.இப்படி தலையை சொறிந்து கொண்டு..?இருக்கற ஒண்ணு ரெண்டு முடியும் போய்டப்போகுது.உங்கள் டியூட்டி.முடிச்சுட்டீங்க.அதுக்குத்தான் கவர்மெண்ட் சம்பளம் தருதில்லை..”இப்படி நீட்டி முழங்கியதுமே தபால்காரர் தடாலடியாக எஸ்கேப்தான்.

இவ்வளவு ஏன்?அலமு பாஸ்போர்டுக்கு அப்ளை பண்ணி,போலீஸில் இருந்து என்கொயரி வரும்பொழுது போலீஸ் காரருக்கு அன்பளிப்பு தராமல் “ஹி..ஹி..மாசக்கடைசியா வந்துட்டீங்க சார்.இல்லேன்னே இருநூறென்னா முன்னூறாகவே தந்திருப்பேன்”என்று கூறி அரை டம்ளர் நீர் மோரை பாசமாக கொடுத்து அனுப்பிவைத்தவளாயிற்றே!

போன மாதம் அப்படித்தான்.அலமுவின் உத்தம புத்திரன் புத்தகங்கள் வைக்க அலமாரி வேண்டும் என்று ஒற்றைக்காலில் பலிகிடக்க போனால் போகிறது என்று ஒரு கார்பெண்டரை அழைத்து நாலடி உயரத்தில் ஒரு புக் செல்ஃப் செய்ய பத்தாயிரத்தில் ஆரம்பித்த பேரம் ஆறாயிரத்து ஐநூற்றில் முடித்து அட்வான்சாக ஆயிரம் ரூபாய் கொடுத்து அனுப்பி வைத்தாள்.

அப்பாவி கார்பெண்டரும் சொன்ன நாளில் மினி லாரியில் புத்தக அலமாரியை கொண்டு வந்து இறக்கினார்.

புத்தக அலமாரியை தடவி,நுணுக்கமாக பரீசீலித்த அலமு ”என்ன இது பழைய சாமான் விக்கற கடையில் இருந்து தூக்கி வந்த மாதிரி இருக்கு.நான் கேட்ட மெட்டீரியல் ,டிசைன் ஒன்றுமே இல்லை.சரியான பித்தலாட்டக்காரானா இருப்பே..”

வானத்துக்கும்,பூமிக்கும் அலமு குதித்த குதியில் சுனாமியே வந்து விடும் போல் இருந்தது.

கார்பெண்டர் சொன்ன எதுவும் அலமுவின் முன்னால் எடுபடவே இல்லை.

“நான் பேலன்ஸ் தரப்போறதில்லை.இந்த அலமாரி இப்படியே ஓரமா இருக்கட்டும், மெட்டீரியல எடுத்துட்டு வந்து எங்க வீட்டு காம்பவுண்டுக்குள் வைத்து என் கண் முன்னாடி செய்து தந்துட்டு,பேலன்ஸை வாங்கிக்கொண்டு,இந்த பாடாவதி அலமாரியையும் எடுத்துட்டு போ.நான் அப்பவே சொன்னேன்.வீட்டிலே வைத்து செய்.அதான் இத்தனாம் பெரிய காம்பவுண்ட் இருக்கேன்னு.இல்லை மேடம் நொள்ளை மேடம் என்று சல்ஜாப்பு சொல்லிட்டு அலமாரின்ன பேரிலே குப்பையை கொண்டு வந்து போட்டு இருக்கியே..கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா?”

கார்பெண்டர் மானஸ்தன்.அடுத்த வாரமே அலமுவின் காம்பவுண்டுக்குள் மெட்டீரியல் கொண்டு வந்து இறக்கினான்.இரண்டு நாட்கள் வேலை பார்த்து அலமாரி வேலையை முடித்துக்கொடுத்து விட்டு பேலன்ஸ் பணத்திற்காக காத்திருந்தவனிடன்”ஓரமாக இருந்த அலமாரியைக்காட்டி எற்கனவே பண்ணிய இந்த குப்பை அலமாரியை என்ன பண்ணப்போறே”மெதுவாக கேட்டாள்.

“வேறென்னம்மா பண்ண..வீட்டுக்குத்தான் தூக்கிட்டு போகணும்”

“அதுக்கு வேற லாரி வாடகை கொடுக்கணும்.உன் பத்துக்கு பத்து வீட்டுக்குள்ளே இதைப்போய் எங்கே கொண்டு வைப்பே.போனாப்போகுது.செருப்பு வைக்கும் கப்போர்டா யூஸ் பண்ணிக்கறேன்.ஒரு விலை போட்டுக்கொடுத்துட்டு போ.”

ஆறாயிரத்து ஐநூறு ரூபாய் அலமாரி வெறும் ஆயிரத்து ஐநூறுக்கு முடிக்கப்பட்டது.

இதில் ஹைலைட் என்னவென்றால் அடுத்த நாளே பக்கத்து தெரு காமாட்சி வீட்டு கூடத்தை அலமாரி அலங்கரித்துக்கொண்டிருந்தது.

காமாட்சியிடம் சாதுர்யமாக பேசி ஆறாயிரத்து சொச்சத்துக்கு அவளது தலையில் கட்டி விட்ட அலமுவின் சாமர்த்தியத்தை சொல்லவும் வேண்டுமோ.?

அலமுவின் சின்னப்பொண்ணுக்கு அன்று பிறந்த நாள்.குடும்பத்துடன் பிரபலமான உணவகத்துக்கு பஃபே சென்றனர்.

முதலில் பறிமாறப்பட்ட ஸ்டார்டர்களை சர்வரின் காதில் விழுவது போல் குறை சொல்லிக்கொண்டே சாப்பிட்டு முடித்தாள்.

“ஏய்..மானத்தை வாங்காதேடீ.நீ சொல்லுறாப்போல் அவ்வளவு மோசமில்லை.வாயை மூடிட்டு சாப்பிடு”பற்களை கடித்து கடுகடுத்த கணவரை சட்டை செய்யாமல் “வாயை மூடிக்கொண்டு எப்படி சாப்பிடுறதாம்” என்று ஜோக் அடித்தவள் சாப்பாட்டை இஷ்டத்திற்கு ஒரு வெட்டு வெட்டி விட்டு சரவரிடம்”எங்கே உங்கள் மேனஜர்.கூப்பிடு அவரை..”அலமுவின் அதிகாரத்தைப்பார்த்து அரண்டு போய் மேனஜர் ஓடி வந்து விட்டார்.

“என்ன சார் சிட்டியிலேயே எவ்வளவு பேமசான ரெஸ்டாரெண்ட் இது.இப்படி மட்டமான புட் ஐட்டங்களை போட்டு கடுப்பேத்தறீங்களே.என் பொண்ணு பர்த்டேயை சந்தோஷமாக செலிபரேட் பண்ண உங்கள் ஹோட்டலில் கையை நனைத்து வயிற்றை நோக வைத்துதுதான் மிச்சம்..”நீட்டி முழங்கி பேச ஆரம்பித்ததுமே அலமுவின் ஆத்துக்காரர் எங்கேயோ எஸ்கேப் ஆகி விட,பிள்ளைகள் எல்லாம் தர்ம சங்கடத்துடன் அம்மாவை கோபப்பார்வை பார்த்துக்கொண்டிருந்தனர்.

“மேடம் ,மேடம்..கஸ்டமர் நிறைய இருக்காங்க..சப்தம் போட்டு பேசாதீங்க..அசிங்கமா போய்டும்.இனி இப்படி குறை வராத அளவு கவனமாக இருக்கோம்.”

“இப்படி என் பொண்ணு பிறந்த நாள் அதுவுமா அப்செட் பண்ணிட்டீங்களே.அதான் வருத்தமாக உள்ளது.நாலு பேரிடம் உங்கள் ரெஸ்டாரெண்ட் பற்றி எப்படி பெருமையா சொல்லிக்கறது.”

“ஓ..இவளுக்குத்தானா பர்த்டே..ஹேப்பி பர்த்டேடா செல்லம்.மேடம் நீங்கள் சாப்பிட்டதுக்கு பணமே தர வேண்டாம் போய்ட்டு வாங்க”கும்பிடாத குறையாக அவர்களை அனுப்பி வைப்பதில் மும்முரமானார் உணவக மேலாளர்.

இப்படித்தான் அன்று தினசரி பேப்பரினுள் வைத்து வந்த பிட் நோட்டீஸில் புதிய கேக் ஷாப் திறப்புவிழா பற்றி விளம்பரம் இருந்தது.ஒரு பிளாக் பாரஸ்ட் கேக் பீஸ் வாங்கினால் மற்றொன்று இலவசம் என்று.

அலமுவுக்கு கேக் ஷாப்புக்கு ஆஜர் ஆகாமல் இருக்க முடியாதே.பேப்பர் பிளேட்டில் வைத்துதந்த கேக்கை சப்புக்கொட்டிக்கொண்டு திவ்யமாக சாப்பிட்டு விட்டு,வீட்டிற்கு நான்கு பீஸ் பார்சல் வாங்கிக்கொண்டு கடைக்காரர் கொடுத்த பில்லை பார்த்து இவள் போட்ட கத்தலில் கேக் ஷாப்பில் எரியாமல் இருந்த ஓவன் பற்றிக்கொண்டு எரிந்து இருக்கும்.

“ஒண்ணு வாங்கினால் ஒண்ணு ஃபிரீ விளம்பரம் போட்டுட்டு இதென்ன பிராடுத்தனம்?”

“மேடம்,அது வாரத்துக்கு மட்டும்தான் மாசம் முழுக்க இல்லை”

“அதென்ன..காலக்கெடு எதுவும் போட்டு இருந்தீங்களா?இப்படி பிராடுத்தனம் பண்ணினால் எப்படி?”குரலை உயர்த்தியவளை அடக்கி பில்லில் பாதித்தொகையை மட்டும் வாங்கிக்கொண்டு கை எடுத்து கும்பிடாத குறையாக அனுப்பி வைத்தார் அந்த கேக் ஷாப்காரர்.

இவ்வாறாக அதட்டல் போட்டு அடாவடி பண்ணும் அலமுவாகிய அலமேலு அன்று மயில் கழுத்துப்பச்சை காஞ்சிபுரப்பட்டு படபடக்க,தலைகொள்ளாமல் பிச்சுப்பூவும்,கழுத்தில் தாம்பு கயிராட்டம் ரூபி எமரால்ட் கற்கள் பதித்து மோப்பு வைத்த காப்பிக்கொட்டை செயினும்.தோளில் ஹேண்ட்பேக் சகிதமாக கிளம்பி விட்டாள்.

எங்கே என்று கேட்கின்றீர்களா?

அடாவடி பண்ணி சேமித்த பணம் உடனடியாக உண்டியலில் போடப்படும்.எந்த ஒரு அவசரதேவைக்கும் திறக்கப்படாத உண்டியல் ஒரு அட்சய திருதியை அன்று மங்களகரமாக திறக்கப்பட்டு உண்டியல் பணம் முழுக்க நகைகடைக்கு சென்று ஒரு தோடாக மாறி விடும்.

வருடந்தோறும் சாதாரணத்தோடு வாங்கிய நம்ம அலமு இந்த வருடம் வைரத்தோடு வாங்கப்போகின்றாளாக்கும்.அடுத்த வருட டார்கெட் நெக்லெஸாகக்கூட இருக்கலாம்.


January 31, 2012

டெய்லர் கிச்சா

"தோ..மாமி..வீட்டுக்கு போயிண்டே இருங்கோ..பையன் கிட்டக்க பின்னாடியே கொடுத்தனுப்பிச்சுடுறேன்”

“கிச்சா..இந்த டயலாக்கை இன்னும் எத்தினி நாழிதான் சொல்லி சமாளிச்சுண்டிருப்பே..காரடையான் நோன்புக்கு உடுத்திக்க புதுசா ஜாக்கெட் கொடுத்தேன்.இந்தா அந்தான்னு ஜவ்வு மாதிரி இழுத்துண்டு தீபாவளி போய்டும் போலும்”மாமி அலுத்துக்கொண்டாள்.

“இந்த வாட்டி கண்டிப்பா தெச்சி கொடுத்துடுறேன் மாமி.அடுத்த ஒரு மணி நேரத்தில் உங்களாத்துக்கு ஜாக்கெட் வந்துடும் .யோஜனை பண்ணாமல் போங்கோ.இதோ அனுப்பிச்சுடுறேன்.கொலு முதல் நாளே ஜம்முன்னு புதுசு கட்டி பேஷா ஜமாய்ச்சுடலாம் மாமி”

மாமி எரிச்சலுடனும் அவநம்பிக்கையுடனும் அங்கிருந்து நகன்றாள்.பித்தான் கட்டிக்கொண்டிருந்த டைலர் கிச்சாவால் பையன் என்று பாசத்துடன் அறிமுகப்படுத்தப்படும் கிச்சாவின் அஸிஸ்டெண்ட் “அண்ணே..மாமி பாவம்ண்ணே..எத்தனை நாள் அலையறா..தெச்சிக்கொடுத்துடலாம்ண்ணே”

“டேய்..உன் கழிவிரக்கத்தை ஒரு ஓரமா மூட்டை கட்டி வச்சிட்டு கடகடன்னு பித்தான் கட்டு.இந்த மாமியை சமாளிச்சுடலாம்.வக்கீலாத்தம்மா வந்தாங்கன்னா பிச்சி உதறிடுவாங்க.அவங்களை இதுக்கு மேலே சமாளிக்க முடியாது”

”ஏண்ணே..சின்ன டவுட்டு.உங்க ஹிஸ்டரியிலே சமாளிக்க முடியாதுன்னு ஒரு வார்த்தை இருக்காண்ணே?”பையன் வாயை பொத்திகொண்டு சிரித்தான்.

“டேய்..வர வர குசும்பு ஜாஸ்தியாயிடுச்சுடா உனக்கு”கழுத்தில் கிடந்த் டேப்பை எடுத்து செல்லமாக வீசி அடித்தான்.

கிச்சா டெய்லர்ஸ் என்று துரு பிடித்த போர்டுடன் கூடிய அந்த தையலகம் அந்த ஏரியாவில் பிரபலம்.துணி மலைகளுக்கிடையே நடுவில் மெஷின் வைத்து தைத்துக்கொண்டிருப்பான்.ஓரத்தில் அஸிஸ்டெண்ட்.காதிடுக்கில் பென்ஸிலும்,கழுத்தில் இன்ச் டேப் சகிதமாக கண்ணும் கையும் காரியத்தில் ஈடு பட்டுக்கொண்டிருந்தாலும் தலைக்கு மேலே சோம்பல் பட்டுக்கொண்டு லொட லொடவென்றுஓடிக்கொண்டிருக்கும் ஒளரங்கசீப் காலத்து மின்விசிறிக்கு போட்டி போட்டுக்கொண்டு வாயால் லொடலொடத்துக்கொண்டு இருப்பது கிச்சாவின் டிரேட் மார்க்.

உதவிக்கு இன்னொரு மெஷின் வாங்கிப்போட்டு இன்னொரு ஆளை வைத்து தைப்பதற்கு மனமில்லாமல் ஏகப்பட்ட ஆர்டர்களுக்கு ஒப்புக்கொண்டு குறித்த நேரத்தில் தைத்துக்கொடுக்காமல் வாடிக்கையாளர்களை சமாளிப்பதில் வடிகட்டிய கில்லாடி.

அந்த ஏரியா இளவட்டங்களுக்கு கிச்சா கடை வாசல் போர்டு தொங்கவிடப்படாத சங்கம் பிளஸ் இளைஞர் மன்றம்.அரட்டை கச்சேரிகளில் வாயும் காதும் ஈடு பட்டு இருந்தாலும் கையும் காலும் கண்களும் காரியத்தில் மும்முரமாக ஈடு பட்டுகொண்டிருக்கும்

“எலே ..கிச்சா..இப்படி அரட்டை அடிச்சுட்டே தைத்தால் நாப்பது சைஸ் ஜாக்கெட் தைப்பதற்கு பதில் முப்பத்திரெண்டு சைஸில் தைத்து கஸ்டமர் கிட்டே வாங்கி கட்டிக்கப்போறே”
இப்படி யாராவது கேட்டால் கிச்சாவுக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்துவிடும்.

“என்னாது..கிச்சாவை என்னான்னு நெனைச்சே...பத்து வயசிலே அய்யணார் அண்ணேகிட்டே வேலைக்கு சேர்ந்தேன்.பதிமூணு வயசிலே மிஷின் முன்னாடி உக்காந்துட்டேன்.இந்த புரட்டாசி வந்தால் ஆச்சு நாப்பத்தேழு.முப்பத்தேழு வருஷ சர்வீஸில் ஒரு பழுது பார்த்திருப்பே..”

இப்படி சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுதே மளிகைக்கடை வீட்டம்மா முகமெல்லாம் சிவக்க கோபம் கொப்புளிக்க வந்தாள்.

“வாங்கக்கா வாங்க..நேற்றே உங்கள் ஜாக்கெட்டெல்லாம் தெச்சி கொடுத்தனுப்பிட்டேனே.”

“ஜாக்கெட் தச்சி இருக்கற லட்சணத்தைப்பாரு.’ப’ கழுத்து வைக்க சொன்னால் ‘யு’கழுத்து வச்சி இருக்கே.ஜாக்கெட் தந்த அளவை விட நாலு இஞ்ச் பெரிசா தச்சி இருக்கே.நல்லா தாரளமா இருக்கட்டுன்னுதானே முக்கால் மீட்டருக்கு பதில் ஒரு மீட்டரா எடுத்துக்கொடுத்தேன்.அப்பவும் உள்ளுக்குள் ஒட்டு போட்டு அசிங்கப்படுத்திட்டே..”

“யக்கா..யக்கா..நான் ஐடியாவோடத்தான் தைத்து இருக்கேன்க்கா.நீங்க வாங்கி இருக்கின்ற துணி சரி இல்லை.ஒரு வாஷ் போட்டீங்கன்னா சுருங்கிடும்.வாஷ் பண்ணிட்டு அப்புறம் சொல்லுங்க.கிச்சா எப்படி தைத்து இருக்கான்னு..”

“இதுவா மட்டமான துணி?நான் என்ன பிட் துணியா எடுத்தேன்.டவுனுக்கு போய் மீட்டர் நூறு ரூபாய்க்கு எடுத்து வந்ததாக்கும்.”
கோபம் குறையாமல் கத்தினாள்.

“பர்ஸ்டு குவாலிட்டின்னு உங்களுக்கு செகண்ட் குவாலிட்டி கொடுத்து எவனோ ஏமாத்திட்டான்க்கா.முப்பத்தேழு வருஷ சர்வீஸ்.துணிமணி பற்றிஎனக்கு தெரியாதா என்ன?”

“சரி ப கழுத்துதானே வைக்க சொன்னேன்.எதுக்கு யு கழுத்து வச்சே”

“ஹா.ஹா..யக்கா...அதான் சொல்லுறேனே மட்டமான துணி ப கழுத்து வச்சேன்னா குறுக்காலே அப்படியே கிழிஞ்சுடும்.யு கழுத்துன்னா அப்படியே இருக்கும்.நான் என்ன கூலிக்கு மாரடிக்கறவனாக்கா.ஒவ்வொரு கஸ்டமருக்கும் தைக்கும் பொழுது என் சொந்த உபயோகத்துக்கு தைக்கிற மாதிரியில்ல சிரத்தை எடுத்து தைக்கிறேன்..என்னைப்போய்..”

கிச்சாவின் அனுசரனையான பேச்சிலேயே ஓரளவு கூலாகிய மளிகைகடை வீட்டம்மா இன்னும் விட மனதில்லாமல் சற்று சுருதி குறைந்த தொணியில் “அப்ப எதுக்கு உள்ளுக்கு வேறு துணியாலே ஒட்டு போட்டு இருக்கே.பார்க்கவே அசிங்கமா இருக்கு”

“ஐயோ யக்கா...எந்த கடையிலே எடுத்தீங்க..உங்களை நல்லா ஏமாத்திட்டான்.நான் அளந்து பார்க்கும்பொழுது என்பது செண்ட் தான் இருந்தது.இனிமேல் ஜாக்கெட் பீஸ் வாங்கும் பொழுது வீட்டுக்கு வந்து அளந்து பாருங்க”

ஞாபகக்குறைவில் தவறுதலாக வெட்டிய உண்மையை ஒப்புக்கொள்ளவா முடியும்?

சட்டையை கிச்சாவிடமே கடாசி விட்டு வந்து விட வேண்டும் என்று ஆக்ரோஷத்துடன் வந்தவள் மேலே ஏதும் பேசாமல் பர்ஸை திறந்து பணத்தை எடுத்து தந்து விட்டு ஜாக்கெட்டை திரும்ப வாங்கிகொண்டு சென்றவளை வெற்றிகரமாக பார்த்தான் கிச்சா.

”அண்ணே..அந்தம்மாவுக்கு பித்தான் கட்டும் பொழுதே கேட்டேன்.இப்படி சொதப்பிட்டீங்களே.அந்தம்மாவிடம் வாங்கி கட்டிக்கப்போறீங்கன்னு”

“டேய்..படவா..சும்மா வாய் பேசிட்டு இருக்காமல் சட்டுன்னு பித்தானை கட்டுடா.அதுக்கு முன்னாடி நாயர் கடையிலே ஸ்ட்ராங்கா ரெண்டு டீ வாங்கிவா”

“அண்ணே..இந்நேரம் கடையிலே சூடா நண்டுக்கால் போண்டா போடுவாங்கண்ணே”

“டேய்..இன்னிக்கு அமாவாசை.நண்டுக்காலும் தின்ன மாட்டேன்.திமிங்கலக்காலும் தின்ன மாட்டேன்”

“அண்ணே திமிங்கலத்துக்கு கால் இருக்குமாண்ணே..நண்டுகால்ன்னா வெங்காயத்தை நண்டுக்கால் போல் நீள நீளமா வெட்டிப்போட்டு முறுகலா போண்டா போடுவாங்கண்ணே”

“சரி சரி..போய் சீக்கிரமா வாங்கி வந்துட்டு வேலையை ஆரம்பி”

நண்டுக்கால் போண்டா சாப்பிடும் ஆசையில் பையன் துள்ளிக்கொண்டு ஓடினான்.

பேச்சுத்துணைக்கு ஆள் இல்லாமல் மெஷினை கட கடவென்று ஒட்டிக்கொண்டு இருந்த பொழுது இரைச்சலாக வந்து சேர்ந்தார் பாஷாபாய்.

“என்னய்யா கிச்சா..உன் மனசிலே என்ன நினைத்துட்டு இருக்கே.”

“வாங்க பாய்..சிங்கப்பூரில் இருந்து சவுகரியமா வந்து சேர்ந்தீகளா”

“ம்ம்..அதெல்லாம் நல்ல படியா வந்து சேர்ந்தாச்சு.இதென்னா..என்ன தைத்து இருக்கே”

துணி மூட்டையை விசிறி அடித்தார்.தோணி பாய்ந்து பந்தை பிடிப்பதுபோல் லாவகமாக கீழே விழாமல் கேட்ச் செய்த கிச்சா “பாய் சூடா இருக்கறமாதிரி இருக்கு”சிரித்தான்.

“பின்னே என்னய்யா..என்பொண்ணு அனார்கலி சுடிதார் வேணுமுன்னு ஆசை ஆசையா சிங்கப்பூரில் இருந்து துணி வாங்கியார சொன்னாள்.அனார்கலி தைக்க சொன்னால் ஆர்ட்னரி தைத்து இருக்கே..வர வர..தொழிலில் கவனமே இல்லாமல் போச்சு.சொல்லுற விதமா தைப்பதே இல்லை”

“பாய்..பாய்..என்ன பாய் இப்படி சொல்லிபுட்டீஹ..இந்த துணிக்கு அனார்கலி மாடல் தைத்தால் நல்லா இருக்காது..”

“இந்த துணியில் தைத்தால்தான் நல்லா இருக்கும்ன்னு சொல்லி வாங்கி வரசொன்னாள் என் பொண்ணு.சும்மா இல்லை.மீட்டர் பனிரெண்டு வெள்ளிக்கு வாங்கி வந்தேன்.இப்படி சொதப்பிட்டியே”

“எனக்கு தெரியாதா பாய்.பாய் என்ன ஒரு வெள்ளிக்கு ரெண்டு மீட்டர் வாங்கற ஆளா?துணி எத்தனி உசத்தின்னு தொட்டுப்பார்த்தாலே தெரியுமே.பாருங்க..லேசுலே யாருக்கும் போட மாட்டேன்.எக்ஸ்போர்ட் குவாலிடி நூலு..சும்மா மாஞ்சா கயிறு மாதிரி இருக்கும்.பித்தானை பாருங்க.செம்புலே வாங்கி போட்டு இருக்கேன்.சாதரணமா ஸ்டீல் ஹூக்தான் போடுவேன்.உங்களுக்குன்னு ஸ்பெஷல்..துணி கிழிந்தாலும் ஹூக் அறுந்துபோகாது”

“அதெல்லாம் சரிதான்..அனார்கலிக்குபதில் ஏன்யா ஆர்ட்னரி தைத்து இருக்கே”

“அதானே சொன்னேனே பாய்..இத்தனை ஒசத்தி துணியிலே அனார்கலி மாடல் தைத்தால் நல்லா இருக்காது பாய்.பொண்ணுக்கு விருப்பமா இருந்தால் சொல்லுங்க...நான் டவுனுக்கு போறச்சே நல்ல துணியா பார்த்து நானே பொருத்தமான துணி வாங்கி வந்து அனார்கலி மாடல் தைத்து தர்ரேன்.”

“அதை எங்க கிட்டே கேட்டுட்டு அப்புறமாக தைத்து இருக்கணும்.அதை விட்டுட்டு உன் இஷ்டத்திற்கு தைத்து இருக்கே.”

“ஐயோ..கேட்காமல் இருப்பேனா பாய்.நம்ம துணியை வெட்டுவதற்கு முன்னாடி பையன் கிட்டே கேட்டு அனுப்பத்தான் செய்தேன்,வீடு பூட்டி இருந்ததுன்னு வந்துட்டான் பாய்.லேட்டானால் சப்தம் போடுவீங்களேன்னு நானே தைக்க ஆரம்பித்துட்டேன்.கோவிச்சுக்காதீங்க பாய்”

“என்ன எழவோ போ..என் மவளை சமாளிக்கறதுக்குள்ளே நெஞ்சுதண்ணி காஞ்சி போகுது”விசிறி அடித்த துணியை திரும்பி வாங்கிக்கொண்டு நடையைக்கட்டினார் பாஷாபாய்.

‘உஸ்ஸ்ஸ்ஸ்..அப்பா..’வெற்றிகரமாக சமாளித்துவிட்ட தெம்பில் மீண்டும் மெஷினை ஓட்ட ஆரம்பித்தான்.

பாஷா பாய்வீட்டில் இருந்து தைக்க வந்த துணியை பார்த்ததுமே கிச்சாவின் மனைவி துணியின் வழ வழப்பிலும் பள பளப்பிலும் தரத்திலும் டிஸைனிலும் நிறத்திலும் ஈர்க்கப்பட்டு கணவனிடம்”என்ன செய்வியோ ஏது செய்வியோ.நான் ஊருக்கு போவதற்கு முன்னாடி என் தங்கச்சி மகளுக்கு சின்ன கவுன் இந்த துணியில் தைத்தே கொண்டுபோய் கொடுத்தே ஆகணும்.இந்த துணியில் என் தங்கை மகளுக்கு கவுன் தைத்துப்போட்டே ஆகணும்”என்று வழக்கம் போல் கடும் கட்டளை போட்டதை மறுக்க முடியாமல் யோசித்ததின் விளைவுதான் அனார்கலி ஆர்ட்னரி ஆகி விட்டது.

“அண்ணே..நண்டுக்கால் போண்டாண்ணே..சூடா சாப்பிட்டுட்டு டீயை குடிங்கண்ணே”

பசி வயிற்றை கிள்ள ஆவலுடன் போண்டாவை வாங்கி சாப்பிட ஆரம்பித்தான் கிச்சா.

“அண்ணே..போண்டா நல்லா இருக்காண்ணே..இன்னும் நாலு வாங்கிவரவா?நல்லா சாப்பிட்டீங்கன்னாத்தான் இனிமே வர்ர கஸ்டமரை தெம்பா சமாளிக்க முடியும்”சொல்லி விட்டு வாயை கைகளால் மூடிக்கொண்டு சிரித்த பையனை இன்ச் டேப்பால் அடிக்க கையை ஓங்கினான் கிச்சா.

















January 26, 2011

இட்லிக்கடை அன்னம்மா




வெளிச்சம் துளியும் தெரியாத அதிகாலைப்பொழுது.தன் வீட்டிற்கு எதிரே உள்ள வேப்பமரத்தடியை சரட் சரட் என்று பெருக்கும் சப்தம் அக்கம்பக்கத்தினருக்கு அலாரம்.சுத்தமாக சுற்றி பெருக்கி சருகுகளை குவித்து தீமூட்டி விட்டு,தண்ணீர் தெளித்து அடுப்பைமூட்ட ஆரம்பித்து விடுவாள் இட்லிகடை ஆயா அன்னம்மா,

அன்னம்மா பாட்டியைத்தெரியாதவர்களே அந்த கிராமத்தில் இருக்க முடியாது.பல்லு எல்லாம் போய் இருந்தாலும் பழமொழிக்கு குறைச்சல் இருக்காது.சொல்லுக்கு சொல் பழமொழியால் மழையே பொழிந்து வெள்ளப்பிராவகத்தையே ஏற்படுத்தி விடுவாள்.கூடவே காரியத்திலும் கண்ணாக இருப்பாள்.பொழுது விடியும் முன்னே ஆவி பறக்கும் இட்லிகளை அம்பாரமாக குவித்து,சூடாக சாம்பாரும்,இரண்டு வித சட்னியும் பொழுது விடிவதற்குள் தயாராகி கல்லா கட்டி விடுவதில் கில்லாடி.

”பாட்டி பத்து இட்லி கொடு”தூக்கு வாளியும் சட்னி சாம்பாருக்கு கிண்ணமும் கொண்டுவந்த அம்பியை நிதானமாக ஏறிட்டவள்.

”முதல்லே துட்டை எடு.போன தபா வாங்கிய 18 இட்லிக்கும் சேர்த்தே குடு.கடன் இல்லா கஞ்சி கால் வயிறு என்று இந்த வயசிலேயும் மாங்கு மாங்குன்னு ஒழச்சிட்டு இருக்கேன்.என் கிட்டேயே கடன் வைத்து என்னிய கடங்காரி ஆக்குறியே”

:செவ்வாய்க்கெழமைக்கு மொத்த பைசாவையும் கொடுத்துடுறேன் ஆத்தா”

கொஞ்சம் கொஞ்சமாக் குடைஞ்சா குடகு மலையையும் குடைஞ்சிடலாம்ன்னு பாக்கறியா?அத்தெல்லாம் வேலைக்காகாது.கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறதுங்கறது இதான்.கையிலே காசு வாயிலே தோசை.அதான் நம்ம பாலிசி.”கறாராக பேசியவாறு பெரிய அகலமான இட்லித்தட்டில் குழிக்கரண்டியால் இட்லி வார்க்க ஆரம்பித்தாள்.

பள்ளிக்கூட சிறுவர்கள்,வேலைக்கு செல்பவர்கள் என்று டப்பாக்கள் கொண்டு வந்து வாங்கி செல்பவர்கள் தவிர ஓரமாக அமர்ந்து மந்தார இலையில் வைத்து சாப்பிடுபவர்களும் உண்டு.வாரத்திற்கு இரு முறை பண்ணை வீட்டில் இருந்து பெரிய தூக்குவாளிகளில் 100 இட்லி வரை கேட்டு வரும் பொழுது பாட்டி இன்னும் அதீத சுறுசுறுப்பாகி விடுவாள்.

இவளிடம் இட்லி வாங்கி வயிறு முட்ட தின்று விட்டு போததற்கு ” ஆத்தா இன்னும் ரெண்டு கரண்டி சாம்பார்தண்ணி ஊத்து”என்று கேட்டு வாங்கி சாப்பிட்டு விட்டு தூரமாக உட்கார்ந்து பீடி பற்ற வைத்துக்கொண்டிந்த பழனியை பார்த்து ”எல பழனிப்பையா,சாம்பார் சட்டி காலியாகுது.இன்னேரம் எம்மருமவ அடுத்த ஈடு சாம்பாரும்,சட்னியும் ரெடி பண்ணி இருப்பாள்.போய் தூக்கி வாயேன்”

”அட..போ ஆயா”சுவாரஸ்யமாக பீடிப்புகையை இழுப்பதிலேயே கருத்தாய் இருந்த பழனியைப்பார்த்து பாட்டிக்கு கோபம் வந்தது.

“நாளைக்கு கேளு ஆயா இன்னும் ரெண்டு கரண்டி சாம்பார் ஊத்துன்னு.கரண்டியாலே போடுறேன்.சோம்பேறிப்பயபுள்ள.இப்படியே ஒழைக்காம சளைகாமே காலத்தைப்போக்கு.செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்.?”

”அடியே லலிதாம்பிகே.சாம்பாரு காலி ஆச்சுடி..சீக்கிரம் அடுத்த ஈட்டை கொண்டுவா.தோ..மச்சி வூட்டுலேர்ந்து தூக்கு சட்டி வந்துடும்”
வீட்டினுள் இருந்து மருமகள் வர தாமதமாகியது.


“எல்லா சாமான்களையும் போட்டு பருப்பை வேக வச்சிருக்கேன்.இறுகினால் களி இளகினால் கூழ்ங்கற மாதிரி தண்ணியை ஊற்றி சாம்பாராக்குறதுக்கு இத்தனை அலும்பு பண்ணுறாளே பாதகத்தி.கேட்டால் கைப்புள்ள அழுவுறான்ம்பா.ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிருக்க வேண்டாம்?”

சூடான சாம்பார் சட்டியை துணியால் பிடித்து தூக்க முடியாமல் தூக்கி வந்த மருமகள் லலிதாம்பிகையைப்பார்த்து அக்னிபார்வையை வீசினாள்.

”ஹ்ம்ம்..முன் ஏர் சென்ற வழியே, பின் ஏர் செல்லும் என்று பெரியவங்க சும்மாவா சொன்னாங்க.ஆத்தாவைப்போல மவ.அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
வச்சி பேசி உன்னை பெற்றவள் நடித்த நடிப்பில் பாவி நான் மெய்மறந்து போய் ஒன் வூட்டு சம்பந்தம் வேணுமுன்னு சவடால் விட்டு இன்னிக்கு இப்படி கேக்கற கேள்விக்கு பதில் வராத அளவுக்கு அவமானபட்டு கிடக்கேனே?”
சாம்பார் சட்டியை நங் என்று கோபமாக வைத்ததில் சாம்பார்துளிகள் தெறித்து விழுந்தது.

”அடி ஆத்தி..மொகரக்கட்டைக்கு குசும்பைப்பாரு.எம்மேலே உள்ள கோவத்தை சாம்பார்சட்டியிலே காட்டுறே?எய்தவன் இருக்க அம்பை நோவானேன் கதயால்ல இருக்கு.போ போ..கடைசி ஈடு சாம்பாரை ரெடி பண்ணி வெரசா கொண்டா”
அடியில் கொஞ்சமாக இருந்த சாம்பாரை புதிதாக வந்த சாம்பார் சட்டில் ஊற்றிவிட்டு காலி சட்டியை மருமகள் கையில் கொடுத்தாள்.

“அன்னமாக்கா..சூடா பன்னெண்டு இட்லி குடு”சுருக்குப்பையை திறந்து பணத்த எடுத்துக்கொடுத்த முத்தக்காவிடம்”எலே..சூட்டுக்கு என்ன கொறைச்சல்.தாண்டி குதிக்குமாம் மீனு. தயாரா இருக்குமாம் எண்ணெய் சட்டி!
ன்னு சொல்லுறமாதிரி துணியில் இருந்து இட்லியை எடுத்துப்போட்டால் பஞ்சா பறந்து போயிடாது இந்த அன்னம்மா கெழவி சுடுற இட்லி.”

“ஏன்கா..இந்த வயசிலேயும் இந்த பாடு படுறே.ஒத்தைப்பிள்ளை.சாயம் பூசுற வேலைக்கு போய் நல்லாத்தானே சம்பாதிக்கறான்.அவன் போடுற சாப்பாட்டை சாப்பிட்டுட்டு அக்கடான்னு கிடக்கறதை விட்டுட்டு இந்த பாடுதேவையா?ஒருநாள் என்றில்லாமல் எல்லா நாளும் கருக்கல்ல எழுந்து இட்லிப்பானையோடு மல்லாடுறியே”

உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை என்று பெரியவங்க சொன்ன மாதிரி மவராசன் வாழ்ந்த காலம் பொறுப்பா இருந்தான்னா காடு கழனின்னு வாங்கிப்போட்டு இருந்தால் ஏன் இந்தப்பாடு படுறேன்.எல்லாம் என் தலவிதி”

“இருந்தாலும் ஒன்னிய பாக்கறதுக்கு சங்கடமாத்தேன் இருக்கு அன்னக்கா.காலத்துக்கும் அடுப்பில் கிடந்தே வேகுறே.கூடமாட ஒத்தாசைக்கு ஒரு குட்டியை வச்சிகிட்டாலும் ஒனக்கு சொமை குறையும் இல்ல”

“அக்காங்..ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமியா.சரி போய் வேலையைப்பாரு.கிட்டவே நின்னுட்டு என் வாயப்புடுங்காதே”

“கெயவி..இந்த வயசுக்கும் ஒனக்கு குசும்பு சாஸ்தி.வாயி நீளம்.”சொல்லியபடி பக்கத்தில் அமர்ந்து மந்தாரை இலை அடுக்கில் இருந்து ஒரு இலையை எடுத்து தானகவே இட்லியை எடுக்க ஆரம்பித்த வேலனை சட்டென கையை தட்டிவிட்டாள்.
”எலே வேலா,தட்டில் இருக்கற இட்லியில் கண்ட பேரும் கை வைக்கபடாது.கேளு எடுத்து தர்ரேன்.முந்திரி கொட்டையாட்டம் மூக்கை நொழைக்காதே?”
“ஆமாம்..கெயவி கை சுத்தம்.மத்தவங்களாம் நாத்தம்”நக்கலாக சிரித்தான் வேலன்
பழுத்த ஒலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம்.சிரிடா சிரி.

“அன்னக்கா..நாலு இட்லி குடு.வர வர ஒன் இட்லி கல்லாட்டம் இருக்கு.நல்ல அரிசியா போட்டு இட்லி ஊத்துறது”வாயாடி வாணி வந்து நின்றாள்.

“அட தோடா,என்னது அன்னம்மா இட்லி கல்லு கல்லா இருக்கா?என் இட்லி சாப்பிடுறதுக்காகவே ஆளு அம்புன்னு இருந்தும் பண்ணை வீட்டில் இருந்து வாரத்துக்கு ரெண்டு தபா இட்லி வாங்குறாவ.எல்லோரும் பஞ்சு பஞ்சா இருக்காங்கறாவுக.நீயி கல்லு கல்லா இருக்குதுன்னு சொல்றே.பொறம் போக்கு.ஆடத் தெரியாத ஆட்டக்காரி மேடை கோணல் என்றாளாம்.போ..போ..போ..ரெண்டு இட்லி பத்து ரூவாக்கு விக்கற ஐயர் கடையிலே வாங்கியே சாப்பிடு.அஞ்சு இட்லி பத்துரூவாக்கு கொடுக்கறேனே.எனக்கு இதுவும் வேணும்,இன்னமும் வேணும்”

“ஐயோ..யக்கா நெசம் எது தமாசு எதுன்னு புரியாமே கோவிச்சுக்கறியே”
“அடிப்போடி..தமாசு பண்ண நீயி எம்மாமன் மவன் பாரு”

மீந்த இட்லி,சாம்பார் சட்னிகளை கிண்ணங்களில் எடுத்து வைத்து விட்டு இன்னிக்கு எத்தனை இட்லி மிச்சம் என்று எண்ணினாள்.

”என்னக்கா இட்லியை எண்ணுறே”

“எல்லாத்திலேயும் கணக்கு வேணாம்.எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டினு சொல்லி சொல்லி சோறு போட்டவளாச்சே என் ஆத்தா”

பேச்சு பேச்சாகவே இருக்க அடுப்பு சாம்பலை எடுத்து அத்தனை பாத்திரங்களையும் சடுதியில் கழுவி கவிழ்த்தினாள்.
சுருக்குப்பையை அவிழ்த்து பிடி சீவல் பாக்கை கடைவாய் ஓரத்தில் அதக்கிக்கொண்டு எழுந்து நெட்டி முறித்தாள்.

“யக்கா.இன்னிக்கு மத்தியானத்திற்கு மேலே கரண்டு இருக்காதாம்.நாளைக்கு காலம்பரத்தான் கரண்டு வுடுவாகளாம்.இட்லி மாவு எப்படி அரைப்பே?இட்லி யாபாரம் நாளைக்கு உண்டா?”

“நல்லா இருக்கே கதை.மழ,புசல் எது அடிச்சாலும் வேப்பமரத்திடியில் வச்சி இட்லி சுடாங்காட்டியும் என்வூட்டுலே வச்சாவது சுட்டு விக்கிறவ நானு.ஐயர் வரவில்லை என்பதற்காக அமாவாசை நிற்குமா?இருக்கவே இருக்கு ஆட்டுரலும் குழவியும்”

நெட்டி முறித்தவளை ஆச்சரியமாக பார்த்து வியந்தாள் வாணி.
“அக்கா..ஒரு சட்டிக்கு நாப்பதெட்டு இட்லின்ன கணக்குலே ஏழெட்டு ஈடு இட்லி ஊற்றி விக்கறே.நாலு காசு சேர்த்து வச்சி இருப்பியே”

“அடிப்போடி..அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லைன்ற கதையால்ல இருக்கு எங்கதி.சரி சரி..என் வாயைக்கிண்டி புடுங்கி ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாள் ஆக்கிடாதே”பாத்திரங்களை அடுக்கி நங்கென்று இடுப்பிலும்,தலையிலும் லாவகமாக வைத்துக்கொண்டு,கல்லாப்பெட்டியை கவனமாக கக்கத்தில் இடுக்கிக்கொண்டு வீட்டை நோக்கி நடையைக்கட்டினாள் இட்லிக்கடை அன்னம்மா.




June 25, 2010

பிய்ந்த பொட்டி பீதாம்பரம்



சிலுசிலுவென்ற வைகாசி மாலை நேரக்காற்று முகத்தைத்தடவ ,எதிரே இருந்த வேப்ப மரக்கிளையில் அமர்ந்திருந்த காகம் வாயில் எதனையோ வைத்து விடாப்பிடியாக கடித்துக்கொண்டிருக்க,அதே மரத்தில் அணில் ஒன்று சுறுசுறுப்பாக மேலும்,கீழும் ஏறி தன் அசாத்திய சுறுசுறுப்பை பறைசாற்றிக்கொண்டிருந்தது.தூரத்தே தெரியும் கோவில் கோபுரத்தில் அதற்குள் விளக்கு ஏற்றப்பட்டுவிட்டது.எதிர் வீட்டு அம்பிமாமா நந்தியாவட்டை பூக்களை சிறு கூடையில் பறித்திக்கொண்டிருந்தார்.தன் மாலை நேர பூஜைக்காக.ஒரு சிறுவன் சைக்கிள் மணியை டிணிங்..டிணிங் என்று தொடர்படியாக அடித்துக்கொண்டு சென்றது கூட மகேஷுக்கு இனிமையாக இருந்தது.தான் வசிக்கும் நகரத்தில் இப்படி காட்சிகள் காணக்கிடைக்காத காரணத்தினால் அனைத்தையும் ஆர்வமுடன் ரசித்துக்கொண்டிருந்த பொழுது

"தம்பி மகேஷ்.."அப்பாவின் குரல் கேட்டு திரும்பினான்.
"என்னப்பா..மாடியில் இருந்து கீழே ஆளையே காணோம்"

"இல்லேப்பா..பால்கனியில் அமர்ந்து வெளியே வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தேன்.ரம்யமாக பொழுது போச்சு"


கீழே இருந்து பாகீரதியும் வந்து சேர்ந்துகொள்ள பேச்சு களைக்கட்டியது."என்னங்க..கம்பியூட்டர் வந்ததில் இருந்து இந்தபக்கம்,அந்தப்பக்கம் அசையாமல் இருப்பீர்களே.இப்ப அதிசயமாக மகனோட பேச பால்கனிக்கு வந்து விட்டிர்களே"கணவரை வம்புக்கு இழுத்தாள்.

பின்னே என்ன?மகேஷ் கம்பியூட்டர் வாங்கி,நெட் கனெக்ஷன் கொடுத்த இந்த நாண்கு நாளில் மனைவியின் பேச்சை காது கொடுத்துக்கேட்காதவராயிற்றே.


"என்னங்க..நாளைக்கு ஈ பி பில் கட்ற கடைசி தேதி.."

"நம்ம மகேஷுக்கு சேப்பங்கிழங்கு ரோஸ்ட்டும்,முள்ளங்கி சாம்பார்ன்னா மகா இஷ்டம்.அரைகிலோ சேப்பங்கிழங்கும்.சாம்பார்வெங்காயமும் வாங்கிட்டு வந்துடுறீங்களா?"

"நம்ம விசாலினி போன் போட்டாள்.என்ன ஆச்சுன்னா.."

ப்படி எதற்குமே பதில் சொல்லாமல் அவரை கம்பியூட்டரே முழுக்க முழுக்க ஆக்கிரமித்துஇருக்கும்.பேசி,பேசி அலுத்துப்போகும் பாகீரதி கடைசியில் வெறுத்துப்போய் பையை தூக்கிக்கொண்டு வெளியில் நடையைக்கட்டுவாள்.

சாயங்காலம் ஆச்சுன்னா நாண்கு தெருவையும் வேக நடையில் நடந்து நடைபயிற்சியும்.மார்க்கெட்,ஈபி பில்,போன் பில்,கோவில் ,நண்பர்கள்,உறவினர்கள்,அவ்வப்பொழுது சீட்டுக்கட்டு,என்று சுறுசுறுப்பாக இருந்த அவரது வாழ்க்கை முறை இந்த கம்பியூட்டர் வந்த இந்த நாண்கு நாட்களாக வாழ்கை முறையையே அப்படியே மாற்றிப்போட்டு விட்டது.இதனால் பாகீரதிக்கு மூக்கு முட்ட மனக்குறை.
"அடியே ..பாகீ..ரிடயர்ட் ஆனப்புறம் பொழுதை போக்க நான் பட்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும்.ஏதோ என் பிள்ளை யுஎஸ்ஸில் இருந்து வந்தான்.அப்பன் கேட்டதுமே ஏன்னு மறு வார்த்தை கேட்காமல் வாங்கிகொடுத்திருக்கான்.நீ குறுக்கே பேசப்படாது."செல்லமாக மனைவியை கடிந்துவிட்டு

"மகேஷ் நல்லதா ஒரு பேரு செலக்ட் பண்ணிக்கொடுப்பா?"

"எதற்கப்பா"

"நான் பிளாக் ஆரம்பிக்கப்போறேன்."

"அட்றா சக்கை..பிசி வாங்கிய நாலே நாளில் பிளாக் எழுதுற அளவுக்கு ஆச்சா?"

"இது என்னோட ரொம்ப நாள் கனவு.அப்பப்ப பிரவுசிங் செண்டர் போய் மற்றவங்களோட பிளாக் படிச்சதில் இருந்து நாமும் ஒரு பி சி வாங்கி பிளாக் ஆரம்பிக்கணும்ன்னு ஆசை"

"கொட்டுமுரசு..பெயர் நல்லா இருக்காப்பா"

"அட..ரொம்ப சீரியஸான பெயரா இருக்கு மகேஷ்"

"வண்ணத்துப்பூச்சி,வாசமலர்,வாடாமலர்.."

மகேஷ் அடுக்கிக்கொண்டே போனான்

"இல்லேப்பா..உனக்கு பிளாக் உலகம் பற்றித்தெரியலே.இப்படி எல்லாம் பெயர் வச்சால் ஒரு பய வரமாட்டான்..நான் ஒரு பெயர் மனசுலே வச்சி இருக்கேன்"

"ம்ம்"

"பிய்ந்த பொட்டி பீதாம்பரம்"

"ஐயே..என்ன பெயருப்பா இது"

"இப்படி தடாலடியா பெயர் வச்சேன்னா பாரு எண்ணி ஒரே மாசத்திலே ஒருசதத்திற்கும் மேல் ஃபாலோவர்ஸ் வந்துடுவாங்க.இதே ரீதியில் பதிவு போட்டேன்னா பின்னூட்டமும் வந்து குமிஞ்சுடும்."

"சபாஷ்.சரிப்பா..ஏதோ செய்யுங்க.நானும் அங்கு போனப்புறம் டைம் கிடைக்கும் பொழுது உங்கள் பிளாக் பார்க்கறேன்.எங்கப்பாவும் பிளாக் எழுதுறார்ன்னு சொல்லிக்கலாம்"

"படிக்கமட்டும் செய்யாமல் மறக்காமல் பின்னூட்டமும் போட்டுடு.எங்கப்பாவும் பிளாக் எழுதுறார் ன்னு சொல்ல மட்டும் செய்யாமல் எல்லோரிடமும் படிச்சுட்டு அவங்களையும் பின்னூட்டமும்,ஓட்டும் மறக்காமல் போட்டுட சொல்லு"

"அது சரி..அதென்ன பிய்ந்த பொட்டி பீதாம்பரம்?பெயரே என்னவோ போல் இருக்கே"

"பிய்ந்த பொட்டின்னா கிழிந்த பொட்டின்னு அர்த்தம்.கிழிந்து போன பொட்டியில் ஒரு பொருட்களும் தங்காது.எல்லாம் கீழே கொட்டிட்டே இருக்கும்.அது மாதிரி என் மூளையில் உதிக்கும் சமாச்சாரங்கள் எல்லாத்தையும் பிளாக்கில் கொட்டிட்டே இருப்பேன்.எப்படி நாம்ம பெயர் வச்சது?"

"அடேங்கப்பா.அசத்துங்க..அசத்துங்க."


ப்புறமென்ன?ஒரு சுபயோக சுபதினத்தன்று "பிய்ந்த பொட்டி பீதாம்பரம்" உதயமாகி விட்டார்.பெயரைப்போலவே பதிவுகளும் இருந்ததால் ஓட்டுகளுக்கும்,பின்னூட்டங்களுக்கும் குறைவில்லை.பீதாம்பரம் எக்கசக்க குஷியாகிவிட்டர்.சாப்பிடும் நேரம்,தூங்கும் நேரம் தவிர மற்ற நேரம் முழுதும் கம்பியூட்டர் முன்னால் பழி கிடந்தார்.

"அப்பா..மெயில் செக் பண்ணிக்கறேன்"மகேஷ் கேட்டு வாங்க வேண்டி இருந்தது.

"தம்பி மகேஷு..நீ டிஜிட்டல் கேமரா வைத்து இருகிறேதானே"

"ஆமாப்பா"

"எனக்கு கொடுத்துட்டு புதுசா ஒண்ணு வாங்கீக்கோயேன்"

"ஏன்ப்பா..பதினைந்து நாள்தானே..எதற்கு எடுத்துட்டு வரன்னு அங்கேயே வைத்துட்டு வந்துட்டேன்ப்பா"

"அச்சச்சோ..பரவா இல்லை.நல்லதா இங்கே ஒண்ணு வாங்கிகொடுத்துடுறியாப்பா"

"எதுக்குப்பா அவசரமா டிஜிட்டல் கேமரா?"

"வேறு ஒண்ணும் இல்லைதம்பி.வெளியிலே போகிறச்சே பிடிச்ச காட்சிகளை போட்டொ எடுத்து பிளாக்கில் போடலாமேன்னுதான்"

விடாப்பிடியாக பேசி,மகனை கையோடு கூட்டி சென்று நல்லதொரு கேமரா வங்கினார்.அத்தோடு மகேஷை சனிபகவான் கெட்டியாக பிடித்துக்கொண்டுவிட்டார்.

"தம்பி மகேஷு..ஒரு காரை ஹையருக்கு எடுத்துட்டு அப்படியே முட்டுக்காடு,எம்ஜிஎம்,மகாபலிபுரம் என்று குட்டியா டிரிப் அடிக்கலாமா?"

"என்னப்பா திடீர்ன்னு"

"வேறு ஒண்றுமில்லை.. போய் பார்த்தாப்போலேயும் இருக்கும்.போட்டோ பிடிச்சு பிளாக்கில் போட்டாப்போலேயும் இருக்கும்"

டுத்து,மறுக்கும் அளவிற்கு மகேஷ் வளர்க்கபடவில்லையாதலால் அப்பாவின் வேண்டுகோளை தட்டாமல் நிறைவேற்றினான்.

"தம்பி மகேஷு..வர்ரியா..ராத்திரிக்கு ஹோட்டலுக்கு போவோம்"
"என்னப்பா ஆச்சரியமாக இருக்கு.ஹோட்டல் சாப்பாடே உங்களுக்கு ஒத்துக்காதே"

"அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன்ப்பா...போய் சாப்பிட்டாப்லேயும் இருக்கும்.நம்ம பிளாக்கில் படம் எடுத்து போட்டாப்போலேயும் இருக்கும்..அவனவன்..கையேந்தி பவன் முதல் பைவ் ஸ்டார் ஹோட்டல் வரை போய் டேஸ்ட் பார்த்துட்டு படத்துடன் பிளாக்கில் போட்டு ஹிட்ஸை அள்ளுறான்கள்.நாமும் டிரை பண்ணலாமேன்னுதான்."

கேஷ் கிளம்பும் வரை சின்னதும் பெரியதுமாக அரை டசன் ஹோட்டலுக்கு சென்று மறக்காமல் போட்டொ எடுத்து மறக்காமல் பதிவும் செய்துவிடுவார் பீதாம்பரம்.

"அடி.. பாகீ..இன்னிக்கு மோர்குழம்பு பண்றியா..நான் படமெடுத்து பிளாக்கில் போடணும்"மனைவியையும் விட்டு வைக்கவில்லை.அதை செய்,இதை செய் என்று பாடாய்படுத்தி போட்டோ தவறாமல் எடுத்துவிட்டுத்தான் மறு வேலைப்பார்ப்பர்.


திவுகள் படித்து விட்டு அவரை தட்டியும்,கொட்டியும் வரும் பின்னூட்டங்களை படித்து ரசித்து,சிரித்து சிலாகிப்பதுமில்லாமல்

"அடி..பாகி சித்த வந்து பாரேன்.இந்த பொண்ணு எப்படி பீட் பேக் கொடுத்து இருக்கான்னு..தம்பி மகேஷு..நீ இங்கே வந்து பாரேன்.இந்த பீட்பேகை படிச்சுப்பாரேன்.இதுக்கு நான் எப்படி பதிலடி கொடுக்கறதுன்னு ஒரு ஐடியா சொல்லேன்"

ன்ன வேலையாக இருந்தாலும் அவர் அழைத்ததும் வந்து கம்பியூட்டர் முன் வந்து ஆஜர் ஆகிவிடவேண்டும்.மனைவி.மகனை மட்டுமல்ல அவரது பிரண்ட்ஸ்,உறவினர்களை வேறு போனில் அழைத்து மணிக்கணக்கில் டிஸ்கஷன் நடக்கும்.


"இதோ.. பாருடா கிச்சா..'அட்றா மச்சான்' ன்னு நான் நேற்று போட்ட பதிவைப்பார்த்தியா?"

"அந்த ஹோட்டலை பற்றி நான் எழுதியதைப்பார்த்தியா?இந்நேரம் அவனுக்கும்வியாபாரம் பிச்சுக்கிட்டு போகும்"

"கந்தசாமிதெருவுலே இருக்கிற பூக்கடையை பற்றி எழுதினேன் பாரு..அந்த ஓனர் சாட்சாத் கடவுளையே பார்க்கற மாதிரி என்னை பார்க்க ஆரம்பிச்சுட்டான் மனுஷன்."

"மெயின் ரோட்டிலே பள்ளம் நோண்டிப்போட்டு பத்து நாளாகுது.போட்டோவுடன் காட்டமா ஒரு பதிவு போட்டேன் பாரு..மனுஷன்னா இப்படி சமுதாயசிந்தனை அவசியம் இருக்கணும்.இப்படி எத்தனைபேருக்கு இருக்கும்?ஹ்ம்ம்ம்"
பேச்சு இந்த ரீதியில் இருக்கும்.

"ப்பா..மகேஷு...நாளைக்கு கிளம்புறே..எத்தனை மணிக்கு டாக்சிக்கு சொல்லட்டும்?"

"நைட்டு பத்து மணிக்கு சொல்லிடுங்கப்பா"

"மகேஷு..மறந்துடப்போறேன்.அடுத்த டிஸம்பரில் மறுபடி ஊர் வர்ரச்சே நல்லதா ஒரு லேப்டாப் வாங்கிட்டு வர்ரியா"

"இப்பதானே பி சி வாங்கித்தந்தேன்"

"வயசான காலத்திலே சேரிலே உக்காந்துட்டே இருக்க முடியலேப்பா..அப்பப்ப ஷோபாவிலே காலை நீட்டிட்டு மடியில் வச்சிட்டு வர்க் பண்ணலாம்..பெட்டில் சாய்ந்து கொண்டு வர்க் பண்ணலாம்,காத்தாட பால்கனி,மொட்டைமாடியில் உக்காந்துட்டு வர்க் பண்ணலாம்."

".............நல்லதுப்பா.."மகேஷின்குரலில் சுருதி இறங்கியது

"அப்படியே ஒரு பிரிண்டரும் கொண்டு வந்துட்டால் நல்லது.என் பதிவைபூரா பிரிண்ட் போட்டு பைண்டிங் பண்ணி வச்சிக்கலாம்."

"...."

"என்னப்பா..சப்தத்தைக்காணோம்?"

"ஆகட்டும்ப்பா"


டாக்சி ஏர்போர்ட் நோக்கி போய்க்கொண்டிருந்தது.
"தம்பி மகேஷு..டிஸம்பரில் வர்ரச்சே பிரியாவையும்,குழந்தைகளையும் அழைச்சுட்டு வருவே இல்லியா"

"ம்ம்ம்"

"சின்னவன் நல்லா வளர்ந்து இருக்கானா?"

"ம்ம்"

"படிப்பெல்லாம் எப்படிப்போகுது"

"நல்லாப்போகுதுப்பா"

"ஹ்ம்ம்...எத்தனை காலத்துக்குத்தான் குண்டு சட்டிக்குள் குதிரையை ஓட்டிட்டு இருக்கறது.நானும் நாலு இடத்தை பார்க்கணும்.போறச்சே அந்த சந்தோஷத்தோட நிம்மதியா போய் சேரணும்"

"என்னப்பா..என்ன ஆச்சு..திடீருன்னு இப்படி பேசறீங்க?"

"நானும் யு எஸ் வந்து சுற்றிப்பார்க்கணும்ன்னு ஆசை வந்துடுச்சுப்பா.அங்கே கூட்டிப்போக ஏற்பாடு பண்றியாப்பா?"

ஆவல் மிளிரகேட்டவரை ஆயாசத்தோடு பார்த்தான்.

"ஏம்ப்பா..அதையும் உங்கள் பிளாக்கில் எழுதனும்னா.."தீனமாக ஒலித்தது மகேஷின் குரல்.







January 22, 2010

கதா பாத்திரம் - 4

சீட்டுக்கார சீதா
****************
கஞ்சி போட்டு மொடமொடப்பான காட்டன் சேலையை நேர்த்தியாக கட்டி,நெற்றியில் சின்னதாய் ஸ்டிக்கர் பொட்டும்,வகிட்டில் செந்தூரமும் மங்கலரமாக ஜொலிக்க தளர பின்னிய ஜடையில் துளி பூவும்,பளிச்சென்ற தோற்றமும்,எப்பொழுதும் மோனலிஷாவை நினைவுபடுத்தும் முகமும்,தோளில் கனமான ஹோல்ட் ஆலும்..போதும்..போதும் சீதாவை அறிமுகப்படுத்தியது.

சீட்டு பிடிக்கும் சீதா என்றால் ஊரில் தெரியாதவர்களே இருக்க முடியாது.ஏலச்சீட்டு,குலுக்கல் சீட்டு மட்டுமில்லாமல்,தன் அப்பாவின் போஸ்ட் மேன் பதவியைபயன் படுத்தி,தபால் துறையில் சிறுசேமிப்பு திட்டத்தில் முகவராகவும் இருக்கிறாள்.

கல்யாணம்,கண்காட்சி,திருவிழா,கோவில்,வங்கி,கடற்கரை,கடைகளில் போடும் தள்ளுபடி,ஹாஸ்பிடல்களின் விஸிட்டர் அவர்ஸ்..இப்படி எங்கே வேண்டுமானாலும் சீதாவின் முகம் தெரியும் தன் டிரேட் மார்க் ஹோல்டால் பிளஸ் புன்னகையுடன்.

கோவிலில் அக்ரஹாரத்தெரு மாமியைப்பார்த்தால்

"மாமி..எப்படி இருக்கேள்..?ஆத்திலே சவுக்கியமா?50000 ஆயிரம் ரூபாய் சீட்டு அடுத்த மாசம் முடியறதே.அடுத்தாக்கலே 1 லட்சரூபாய் சீட்டு பிடிக்கபோறேன்.ரெண்டா போட்டுடுவோமா?"

"பெருமாளே ரெண்டாவா" மாமி அதிர,

"ஏம்மாமி பெருமாளை அழைக்கிறேள்..பெருமாள் அனுக்ரஹம்நோக்கு எப்பவும் உண்டும்.கவலையே படாதேள்.நல்ல படியா சீட்டு போடுங்கோ.ஐம்பதாயிரம் சீட்டு போட்டு உங்கள் இளைய மகன் வேலைக்கு டெபாஸிட் கட்டினேளே.இப்ப பாருங்கோ ஜாம்,ஜாம் என்று முள்ளங்கி பத்தையாட்டம் சம்பாதித்துண்டு வந்து கொடுக்கறாளோ இல்லியோ."

இப்படி நைச்சியமாக பேசிப் பேசியே மாமியை மட்டுமல்ல,அவரது மகனை,சின்ன மருமகளை என்று மாமியின் குடும்பத்தில் குறைந்தது மூன்று சீட்டுகளாவது போடச்செய்து விடுவாள்.

ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் சந்தோஷில் இருந்து,வங்கியை சுத்தம் செய்யும் காத்தாயி வரை அனைத்துதரப்பினரும் இவளது கஸ்டமர்கள்.தன் குலோப்ஜாமூன் பேச்சாலும்,சிரித்த முகத்தாலும்,சாதுர்யத்தாலும் சீட்டு போடவே கூடாது என்று தீர்மானமாக இருப்பவர்களைக்கூட நொடியில் மாற்றிவிடும் வல்லமை இவளுக்குண்டு.


வேலைக்காரி சின்க் முன் நின்று கொண்டு பாத்திரம் தேய்த்துக்கொண்டிருக்கையில்,இவள் ஸ்டவ் முன் நின்று தோசை வார்த்துக்கொண்டே

"ஏண்டி..முனிம்மா..உன் வூட்டுக்காரன் இப்பல்லாம் குடிக்காமல் ஒழுங்கா சம்பளத்தைக்கொண்டு வந்து தர்ரானா?" கேட்டதுதான் தாமதம் பத்து நிமிஷம் வாய் மூடாமல் முனியம்மா புருஷனை திட்டி தீர்ப்பதை பொறுமையாக கேட்டு கொண்டிருந்து விட்டு இவள் ஒரு கால் அவர் அட்வைஸ் மூட்டையை அவிழ்த்து விட்டு முனியம்மாவை கூல் படுத்தி விட்டு

"முனிம்மா..மாசம் 300 ரூபாய் ஆர் டி போடுறியே இந்த மாசத்துடன் முடியறதே:என்று ஆரம்பித்து விடுவாள்.

"ஆமாங்கம்மா..கழுத்து வெறுமனே மூளியா இருக்கும்மா. ஒரு செயின் வாங்கலாம் என்று இருக்கேன்.நாளைக்கு பொண்ணுக்கும் ஆவுமே"

"அட பைத்தியகாரி..அதை வாங்கி வச்சி உன் குடிகார புருஷன் கிட்டே இருந்து எப்படி காபந்து பண்ணப்போறே?பேசாமே மொத்த காசையும் அப்படியே இந்திர விகாஷ் பத்திரமா வாங்கித்தர்ரேன்.ஏழே வருஷத்திலே பணம் அப்படியே டபுளா போய்டும்"

"டபுளாவா.."

"பின்னே..உன் பொண்ணு கல்யாணம் பண்ணும் சமயம் வரவும்,இது மெச்சூர்ட் ஆகவும் சரியா இருக்கும்"இப்படி நைச்சியமாக பேசி பேசி சாதித்து விடுவாள்.தவிர அடுத்த மாதத்தில் இருந்து புதிதாக முனியம்மாவை மாதம் ஐநூறு ரூபாய் ஆர்டி போடவும் வைத்து விடுவாள்.

வாசலில் பூ விற்றுக்கொண்டிருந்த பூக்காரியிடம் ஒரு முழப்பூ வாங்கிக்கொண்டு அதை அழகாக வாழை இலையில் சுருட்டி வாங்கி தன் ஹோல்ட் ஆலில் வைத்துக்கொண்டு சரசர வென்று நடந்து பஜனைக்கோவில்தெரு பத்மா வீட்டிற்கு ஆஜர் ஆகி விடுவாள்.உள்ளே நுழைந்ததுமே பூவை எடுத்து பவ்யமாக நீட்டி"வெள்ளிக்கிழமை அதுவுமா சும்மா எப்படி வர்ரது?பிடியுங்கோ மதுரை மல்லி"இப்படி பேசி காரியத்தை சாதித்துக்கொண்டு விடுவாள்.


"ஆர்த்தி..உனக்கு இந்த வருஷம் இன்கிரிமெண்ட் உண்டோ?பையனை பல்கா டொனேஷன் கொடுத்து எல் கே ஜி யில் சேர்த்து விட்டியே?குழந்தை சமர்த்தா போறானா?உன் பையனாச்சே.குழந்தைக்கு சமர்த்துக்கு குறைச்சல் இருக்குமா என்ன?இப்ப பையன் எங்கே..?"

அனுசரனையாக விசாரித்து குழந்தை அந்த பக்கம் வரும் நேரம் பார்த்து

"கண்ணா..ஸ்கூலுக்கு சமர்த்தா போறியா.நல்லா படிக்கணும்.அம்மாவுக்கு தொந்தரவு செய்யாமல் இருக்கணும் சரியாடா ராஜா"

வாய் பேசிக்கொண்டே கை ஹோல்ட் ஆல் ஜிப்பை திறக்கும்.ஒரு மஞ்ச் பாரை எடுத்து குழந்தையிடம் நீட்டி

"சாப்பிடுடா செல்லம்"என்று சொல்லி விட்டு அவள் வெளியேறும் பொழுது அந்த மாசம் குலுக்கல் ,ஏல சீட்டு,ஆர் டி க்கு உரிய பணம் அனைத்தையும் வாங்கி ஹோல்ட் ஆலில் பத்திரபடுத்திக்கொண்டதுமில்லாமல் புதிதாக இருபத்தி ஐந்து ஆயிரம் ரூபாய்க்கு இந்திர விகாஷ் பத்திரம் வாங்க செக் ஒன்றும் வாங்கி இருப்பாள்.

இப்பொழுது ஊரில் உள்ள அந்த தனியார் ஆஸ்பத்திரி வாசலில் பழக்கடைக்காரனிடம் பேரம் பேசி நாலு ஆப்பிளும்,ஆறு சாத்துகுடியும் வாங்கி கொண்டு லிப்ட் ஏறி 307 ஆம் வார்ட் முன் நின்று கதவை டொக் டொக் என்று தட்டுவாள்.

"ரஹீம் பாய் சலாம் அலைக்கும்.இப்ப உடம்பு எப்படி இருக்கு.உங்களுக்கு உடம்புக்கு முடியலேன்னு கேட்டுட்டு ஷாக் ஆகிட்டேன.அல்லா புண்ணியத்தில் நாளைக்கு டிஸ்சார்ஜா?அப்பா..ரொம்ப சந்தோஷம்.."

இப்படி அனுசரனையாக விசாரித்து அடுத்த முறை வீட்டுக்கு போய் இருக்கும் பொழுது ரஹீம் பாயின் சம்சாரம் புதிதாக ஆரம்பிக்கப்போகும் சீட்டுக்கு பணத்தை தயாராக எடுத்து வைத்து இருப்பாள்.

"யப்பா..வீட்டை பளிச்ன்னு வச்சிக்கறதில் உனக்கு நிகர் வேறு யாரும் இல்லை .அட..உன் கைங்காரியத்தில் தரை எல்லாம் பளிங்கு மாதிரி மின்னுது. வீட்டுக்கு சாமான் வாங்கிப்போடனும் என்றுதானே என் கிட்டே சீட்டு போட்டே.இந்த முறை விழுந்துடுச்சின்னா நல்லதா ஒரு லெதர் சோபா வாங்கி போட்டுடு.அழகா இருக்கும்.அடுத்த மாசம் ஏலசீட்டு புதுசா ஆரம்பிக்காப்போறேன்.."கண்டிப்பாக ஆர்டர் பிடித்து இருப்பாள்.


சீதாவின் பொண்ணுக்கு அரையாண்டு பரிட்சை முடிந்து ஸ்கூலில் ஓப்பன் டே .கையில் எக்ஸாம் பேப்பர்,புரோகிரஸ்கார்ட் சகிதமாக கிளாஸ் மிஸ்ஸிடம் அக்கறையாக மகளின் படிப்பைப்பற்றி பேசி விட்டு

"மிஸ் .."இந்த மாதம் புதுசா சீட்டு ஆரம்பிக்கப்போறேன்."என்று ஆரம்பித்து விடுவாள்.எதிரே வரும் புது மிஸ்ஸைப்பார்த்து"யாரு இது?புது அப்பாயிண்ட் மெண்டா?என்ன சப்ஜெக்ட்..சரண்யா..செவண்த் பி செக்ஷன் அவள் அம்மாதான் நான்"

தன்னை சுருக்கமாக அறிமுகபடுத்திக்கொண்டு

"அப்படியே நயன் தாரா மாதிரி இருக்கீங்க மிஸ்.முகத்திற்கு பேஷியல் பண்றீங்களா?"இப்படி பேசியே ஒரு ஸ்நேகிதத்தை உண்டாக்கி விடுவாள்.அப்புறம் என்ன?பெண்ணின் கிளாஸ் மிஸ் மூலம் ரெகமண்ட் செய்யப்பட்டு இந்த நயன் தாரா மிஸ்ஸும் ரொம்ப சீக்கிரத்தில் இவளின் கஸ்டமர் ஆகி விடுவார். ஸ்கூலை விட்டு வெளியேறும் பொழுதும் சும்மா இருந்ததில்லை.

வாசலில் உட்கார்ந்திருக்கும் வாட்ச்மேனிடம்
"என்னப்பா..ஏழுமலை.உன் பையன் எப்படி படிக்கறான்?நல்லா படிக்கசொல்லு.இந்த வருஷம் பப்ளிக் எக்ஷாம் ஆச்சே. ஒரே வருஷத்தில்; முடியும் குலுக்கல் சீட்டு ஆரம்பிக்கப்போறேன்.அவசியம் போட்டுடு.பையன் காலேஜ் போறச்சே கண்டிப்பா உதவும்.செலவுக்கப்புறம் சேமிப்புன்னு இருக்காமல் சேமிப்புக்கப்புறம் செலவு என்ற பாலிஷியை கடைபிடி.அதான் லைஃபுக்கு ஷேஃப்."குட்டியாக அட்வைஸ் பண்ணி விட்டு போனால் பலன் அடுத்த முறை சீதா ஸ்கூல் கேட்டை கிராஸ் செய்யும் பொழுது ஏழுமலை ஜேப்பியில் கை விட்டவாறு "மேடம்..மேடம்.."என்று குரல் கொடுப்பான்.

தெருவில் விசுக்,விசுக் என்று நடந்து போகும் பேங்க் காஷியர் சியாமளாவை வேக நடையில் நெருங்கி"சியாமு..உன் அம்மா உடம்பு இப்ப எப்படி இருக்காங்க?நேற்று மாங்காடு போனேன்.இந்தா பிரசாதம்.அம்மாவுக்கு கொண்டு போய் கொடு.அவசியம் ஒரு நாள் அம்மாவைப்பார்க்க வர்ரேன் .நான் ரொம்ப கேட்டதாக சொல்லு என்ன?"தன் டிரேட் மார்க் ஹோல்ட் ஆலில் இருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து நீட்டுவாள்.ஏதும் பேசுவதற்கு சந்தர்ப்பம் வைக்காமல் சியமளாவே

"அக்கா வீட்டு பக்கம் வந்தீங்கன்னா புதுசா ஆரம்பிக்கப்போற சீட்டுக்கு பணத்தை வாங்கிட்டு போங்க"என்று விடுவாள்.சியமாளா வின் கன்னத்தை செல்லமாக தட்டி

"இதை விட எனக்கு வேறு என்ன வேலை.சாயங்காலம் அவசியம் வர்ரேன்" என்பாள்

இப்படியாக தன் ஹோல்ட் ஆல் குலுங்க,மோனலிஷா புன்னகையுடன் ஊரை வலம் வந்து கொண்டு நடையால் தனது ஹெல்த்துக்கும்,அனுசரனையான பேச்சால் நூற்றுக்கணக்கான கஸ்டமர்களும்,ஸ்நேககிதங்களும்,மனிதர்களும் ,அதனால் ஏகபட்ட லாபமும் தனக்கு கிடைப்பது மட்டுமால்லாமல் தன் கஸ்டமர் அனைவருக்கும் சேமிப்பாலான பலனையும் தரும் சீதா பாராட்டப்படவேண்டடியவள்தானே?