மார்ச் மாத லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்த என்னுடைய ஆர்டிகிள்.அனைவருக்கும் இனிய பெண்கள் தின நல் வாழ்த்துக்கள்.
தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கின்றது என்பது மாநபி மொழி.மாதவராய் பிறப்பதற்கு நல் மாதவம் செய்திடல் வேண்டுமம்மா,பெண்கள் நாட்டின்கண்கள் என்று பெரியோர் கூறினார்கள்.அத்தனை புகழ்களுக்கும் உரித்தான பெண்களுக்கே உரித்தான பெண்கள் தினம் அன்று பெண்ணாகிய நான் பெருமித்ததுடன் இவ்விடுகையை பதிவிடுகின்றேன்.
முதிர்ச்சியான அறிவுத்திறன்,பக்குவமான கவனிப்புத்திறன்,ஆழ்ந்து சிந்திக்கும் நுட்பத்திறன்,பொறுமையாக முடிவெடுக்கும் திறன்,கம்பீரமான நிர்வாகத்திறன் கொண்டோர்தான் பெண்கள்.இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க இயலாது.குடும்பத்தை,உறவுகளை,பொருளாதாரத்தை,சமையலை,விருந்தோம்பலை,நட்பை,அக்கம் பக்கத்தினரை,வேலையாட்களை இன்னும் தன்னைச்சுற்றி இருக்கும் அனைத்துசெயல்களையும் மிகவும் அழகாக திறமையாக நிர்வாகம் செய்து பண்முக ஆளுமையில்(multi faceted personality) முதன்மையானவர்கள் என்றால் மிகை ஆகாது.
1.பினான்சியல் மேனேஜ்மெண்ட்:
கணவரின் சம்பளத்துக்கேற்ற வாறு வாழ்க்கைத்தரத்தை சிக்கனமாக அமைத்துக்கொண்டு,கூடவே ஏலச்சீட்டுகள்,நகை சீட்டு,பாத்திரச்சீட்டு என்று சேமித்து கணவர் பணகஷ்டத்தில் இருக்கும் பொழுது பொருளாதாரரீதியாக உதவுவதில் கில்லாடிகள்.
2.சிச்சுவேஷன் மேனேஜ்மெண்ட்:
குடும்பத்தினருக்கு நோய் வாய்ப்படும் பொழுது அதிர்ந்து நிற்கும் ரங்க்ஸ்களுக்கு ஊக்கவார்த்தைகளை அளித்து விட்டு நோய் வாய்ப்பட்டவர்களுக்கு தகுந்த முதலுதவி செய்வதிலாகட்டும்,தர்மசங்கடமான சூழ்நிலையில் வீட்டில் விருந்தினர்கள் ஆஜர் ஆகிவிட்டால் சங்கடங்களை காட்டிக்கொள்ளாமல் வரவேற்று உபசரித்து விருந்தோம்பல் செய்வதில் ஆகட்டும் இப்படி எப்பேர்பட சூழ்நிலையையும் சமர்த்தாய் சமாளிப்பதில் வல்லவர்கள்.
3.மெட்டீரியல் மேனேஜ்மெண்ட்:
மாமியாருக்கு பிரஷருக்கேற்ற உப்பு குறைந்த உணவாகட்டும்,மாமனாருக்கு சர்க்கரை கம்மி செய்த உணவாகட்டும்,கணவருக்கு பிடித்த பொரியல் வகைகள் ஆகட்டும்,பிள்ளைகளுக்கு பிடித்த பாஸ்ட் புட் வகைகள்,பெரியவனுக்கு முகத்தில் பரு வந்தால் எண்ணெய் குறைவான சமையலும்,கணக்கில் மதிப்பெண்கள் கம்மியாக வாங்கும் மகளுக்கு தினம் வல்லாரையில் டிஷ் செய்து கொடுப்பதில் ஆகட்டும் ஒவ்வொன்றையும் ஒவ்வொருவரின் தேவையையும் ஞாபகத்தில் வைத்துக்கொண்டு சமைத்து பறிமாறி அக்கரை காட்டுவதில் புலிகள்.
4.பியூட்டி மேனேஜ்மெண்ட்:
அத்தனை வேளைகளுக்கு இடையே கடலைமாவை கரைத்துக்கொண்டு முகத்தில் அப்பிக்கொள்வதில் இருந்து,மூல்தானி மட்டியை பூசிக்கொள்வது,பொரியலுக்கு கேரட் நறுக்கும் பொழுது சிறிய துண்டும்,சாலட்டுக்கு வெள்ளரிக்காய் நறுக்கும் பொழுது ஒரு துண்டும் எடுத்து அரைத்து பூசிக்கொள்வது என்று பாய்ந்து பாய்ந்து தன்னை அலங்கரித்துக்கொள்வதில் சிறுத்தைகள்.
5.எஜுகேஷன்மேனேஜ்மெண்ட்:
எல் கே ஜி படிக்கும் சின்னமகளுக்கு ரைம்ஸ் சொல்லிக்கொடுப்பதிலாகட்டும்,பெரிய மகனுக்கு ரெகார்ட் நோட்டில்படம் வரைந்து கொடுப்பதில் ஆகட்டும்,கணவர் எழுதப்போகும் பேங்க் எக்ஷாம் சரியாக பண்ண வேண்டும் என்று கடவுளை பிரார்த்தனை செய்து கொள்வதிலாகட்டும்,அத்தனை வேலைகளுக்கிடையிலும் தனது இரண்டு அரியர்ஸ் பேப்பரை கிளியர் செய்யும் நிமித்தம் நின்று கொண்டும்,நடந்து கொண்டும்,சமைத்துக்கொண்டும் பாடங்களை உரு போட்டுக்கொண்டு இருப்பதில் மேதாவிகள்.
6.ஹியூமன் ரிசொஸ் மேனேஜ்மெண்ட்:
பிறந்த வீட்டினர் வந்தால் அவர்களை கவரும் விதமாகவும்,புகுந்த வீட்டினர் வந்தால் அவர்களையும் கவரும் விதமாகவும்,லீவு போடும் வேலைக்காரியை தட்டிக்கொடுத்து லீவுபோடாமல் வருவதற்கு உள்ள பேச்சுத் திறமையும்,பிஸினஸுக்கு பணம் கேட்டு ஒற்றைக்காலில் நிற்கும் கொழுந்தனார் முதல்,தீபாவளிக்கு வைர மோதிரம் கேட்கும் நாத்தனார்வரை சமாளித்து யாவரின் மனமும் கோணாமல் சமாளித்து வருவதில் மேதாவிகள்.
7.டெக்னிகல் மேனேஜ்மெண்ட்:
வீட்டில் குக்கர் பர்னர் பிலண்டர் போன்ற சிறு எலக்ட்ரானிக் பொருட்கள் ரிப்பேர் ஆனால் முடிந்தவரை தன்கையாலே ரிப்பேர் பார்த்தல் ”ரிப்பேர்ன்னு போனால் கடங்காரன் நூறு நூறா பிடிங்கிடுறானே”என்று புலம்பியப்படி தானே ஸ்க்ரூ டிரைவரும் கையுமாக ஒரு வழியாக பொருட்களை உயிர்பித்து தேற்றி காசு மிச்சம்பிடிப்பதில் வீராங்கனைகள்.
8.டைம் மேனேஜ்மெண்ட்:
காலங்கார்த்தாலே அரக்கபறக்க எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு,டிகிரிகாப்பியை டபராக்களில் நிரப்பி ஒவ்வொருவராக கொடுத்து,டிபன் செய்து டிபன் பாக்ஸில் கட்டி,காய் நறுக்கி பகல் சமையலையும் முடித்து,அனைவருக்கும் சாப்பாடு போட்டு,பாத்திரம் ஒழித்து தானும் வேலைக்கு செல்வதென்றால் கேட்கவே வேண்டாம். குளித்து விட்டு அள்ளி முடிந்த கூந்தலை திருத்தி,டிரஸ் செய்து இத்தனை வேலைகளுக்கும் இடையே “விஜி,நேற்று ஆஃபீஸில் இருந்து சிகப்புக்கலர் பென்டிரைவை கொண்டு வந்தேனே பார்த்தியா”என்று கூவும் கணவருக்கும் தேடி கொடுத்து,”என்னோட மேத்ஸ் நோட்ஸைக்காணோம்”என்று அலறும் பெண்ணின் அலறலை நிறுத்தி சரியான நேரத்திற்கு அனைவரையும் அனுப்பி விட்டு தானும் கிளம்புவதில் சூரர்கள்.
9.கிரைசிஸ் மேனேஜ்மெண்ட்:
பெரிய தொகையை ஏலச்சீட்டு போட்டு முடியும் தருவாயில் சீட்டுகம்பெனியே எஸ்கேப் ஆகிவிட தலையில் கைவைத்து இடிந்து போய் நிற்கும் கணவரை தேற்றுவதில் ஆகட்டும்.திடுமென வந்த நெஞ்சுவலியால் மாமனாரை மருத்துவமனையில் சேர்த்து பைபாஸ் செய்ய மருத்துவர் பரிந்துரை செய்யும் பொழுது கணவர் கைகளை பிசைந்து கொண்டு இருக்கும் பொழுது யோசிக்காமல் கழுத்தில் கிடக்கும் நகைகளை கழற்றிக்கொடுத்து ஆபத்பாந்தவனாக நிற்பதில் சிங்கங்கள்.
10.பிளாகிங் மேனேஜ் மெண்ட்:
அத்தனை வேலைகள்,பொறுப்புகளுக்கிடையிலும் பிளாக் எழுதி,வெறுமனே எழுதாமல் சமையலாகட்டும்,மற்ற படைப்புகளாகட்டும் பொறுமையாக கேமராவால் படம் எடுத்து அப்லோட் செய்து அழகாக போஸ்ட் செய்வது மட்டுமின்றி,வலையுலகம் தன் வலைப்பூவை மறந்து போய்விடக்கூடாது என்று வாரத்திற்கு குறைந்தது இரண்டு பதிவுகளாவது போஸ்ட் செய்து,வரும் பின்னூட்டங்களுக்கு பொறுப்பாக பதில் சொல்வது மட்டுமின்றி,மற்ற வலைப்பூக்களுக்கும் சென்று அவர்களை ஊக்கம் கொடுக்கும் வகையில் பின்னூட்டம் கொடுத்து மறவாமல் ஒட்டும் போடுவதில் சாதனை சிகரங்கள்.
தோழி தேனம்மை,லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியர் கிரிஜா ராகவன் மேமுக்கும் நன்றி.
தோழி தேனம்மை,லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியர் கிரிஜா ராகவன் மேமுக்கும் நன்றி.
Tweet |