July 27, 2011

மும்மூன்று

இதனை தொடர் பதிவாக எழுத அழைத்த அபுதாபி தங்கச்சி ஹுசைனம்மாவுக்கும்,கட்டிலுக்கு அடியில் ஒளிந்துகொண்டு பயத்தோடு பம்மி பம்மி அழைத்திருக்கும் ஸ்காட்லாண்ட் தங்கச்சி அதிராவுக்கும் நன்றி.

பிடித்த உறவுகள்

1.என் உயிரினும் மேலான இணை
2.நான் ஈன்ற செல்வங்கள்
3என் பெற்றோரும்,உடன் பிறந்தோரும்

பிடித்த உணர்வுகள்.

1.பொறுமை
2.சகிப்புத்தன்மை
3.அமைதி

பிடிக்காத உணர்வுகள்.

1.கோபம்
2.தனிமை
3.சோம்பல்

முணுமுணுக்கும் பாடல்கள்


பிடித்த திரைப்படங்கள்

மன்னிக்க வேண்டும்.படமே பார்ப்பதில்லை.

அன்புத் தேவைகள்

1.எதிர்பார்ப்பில்லாத நட்பு
2குற்றம் குறை காணாத உறவுகள்
3.என் சொல்லுக்கு கீழ்படியும் என் பிள்ளைகள்

வலிமையை அழிப்பவை

1.உறவின் பிளவு
2.சோம்பல்
3 நம்பிக்கை இன்மை

பிடித்த பொன்மொழி

1.உன் செல்வமும்,உன் வாரிசுகளும் சோதனைக்கே
2.பொறுமையைக்கொண்டும் தொழுகையைக்கொண்டும் இறைவனிடன் உதவிதேடுங்கள்.
3.வசதி வாய்ப்பில் உனக்கும் கீழுள்ளவர்களை நோக்குங்கள்.

பயமுறுத்தும் பயங்கள்

1.மரணம்
2மறுமை
3செல்வம்

அடைய விரும்பும் நிலையான விருப்பங்கள்

1.என் பிள்ளைகள் உயர் நிலைக்கு வரவேண்டும்
2.நிரந்தர வாழ்வான மறுமைக்கு நிறைய தேட வேண்டும்.
3.சுலபமான மரணம் எய்தவேண்டும்


கற்க விரும்புவது

1.நான் ஜீனியஸ் என்று பிரமிக்கும் உறவுகளிடம் இருக்கும் நல்ல செயல் பாடுகள்.
2.என் கணவரிடம் நிறைந்திருக்கும் அளப்பறிய பொறுமை
3.போர் வீலர் ஓட்ட

வெற்றி பெற வேண்டியவை

1.சோம்பலின்மை
2.விடா முயற்சி
3.வயது வித்தியாசம் பாராத உழைப்பு

சோர்வு நீக்க தேவையானவை

1.என் பிள்ளைகள் செய்யும் காமெடி
2.மழலையின் குறும்பு
3.ஜில் என்ற பழச்சாறு

எப்போதும் தயாராக இருக்க வேண்டியது.

1.வங்கியில் பேலன்ஸ்
2.குளிர்சாதனப்பெட்டியில்சுலப்மாக சமைக்க பதார்த்தங்கள்
3.வருபவர்களை விழியகல செய்யும் அளவுக்கு சுத்தமான வரவேற்பறை

முன்னேற்றத்திற்கு தேவை

1..விடா முயற்சி.
2அனுபவம்
3.பொறுமை

எப்போதும் அவசியமானது

1.உறவுகளின் இணக்கம்
2.நீடித்த ஆரோக்கியம்
3.நிலைத்து நிற்கும் நற்பெயர்

தெரிந்து தெரியாது குழப்புவது

1.தீயோருக்கும் உயர் நிலை
2.வறியோருக்கும் தற்பெருமை
3.நல்லோர்களுக்கு இழிநிலை

எரிச்சல் படுத்துபவர்கள்

1.மதிய நேரத்தில் வரும் விளம்பர செல்பேசி அழைப்புகள்.
2.அரட்டை அடிக்கும் அலுவலக ஊழியர்கள்.
3.ஜவ்வாக இழுத்து நின்று நிதானித்து தமிழ் பேசும்
கால் செண்டர் ஊழியர்கள்.

மனங்கவர்ந்த பாடகர்கள்

1.எல் ஆர் ஈஸ்வரி
2 பி பி. சீனிவாஸ்
3.கெ ஜே யேசுதாஸ்

இனிமையானவை

1.என் ரங்க்ஸின் ஆலோசனைகள்.
2.என் மூத்தவரின் ஆளுமை
3.என் சின்னவரின் வெள்ளந்தியான காமெடி

சாதித்தவர்களின் பிரச்சனைகள்

1.பொறாமை
2.தடைக்கல்
3.நிலையாக வைத்துக்கொள்வதற்கு சந்திக்கும் இன்னல்கள்.

பிடித்த உணவு

1.ஃபிரஞ்ச் லோஃப் rich chocolate cake
2.என் சின்னம்மா செய்யும் நெய் கமகமக்கும் இடியாப்பபிரியாணி
2.காஸ்மோ பாலிடன் கிளப் உணவகத்தில் கிடைக்கும் அமெரிக்கன்சாப்ஸி.

நிறைவேறாத ஆசைகள்

1அண்ணா மேம்பாலத்தில் பகல் பொழுதில் ஒரு முனையில் இருந்து மறு முனைக்கு நடந்தே செல்லுதல்.
2.மெரீனா பீச்சில் மிக மிக தாழ்வாக பறந்து ரோந்து சுற்றும் ஹெலிகாப்டரில் அமர்ந்து பறந்த படி மெரீனா பீச்சை பார்த்தல்.
3.கப்பல் பயணம்

பதிவிட அழைக்கும் மூவர்

1.சகோதரர் கிளியனூர் இஸ்மத்
2.சகோதரர்.ஜெய்லானி
3.சகோதரர் ஸ்டார்ஜன்


July 20, 2011

இயற்கை என்னும் இளைய கன்னி



இனிய சூழல் கண்டு நெகிழ்ந்து விட்டது நெஞ்சம்
உன்னத உறவுகள் கண்டு உவகையானது உள்ளம்
தொப்புள்கொடி உறவுகளால் தொலைந்து போனது துயரம்
சந்தித்த வெற்றிகளால் தேனினிப்பானது இதயம் .

வண்ண பூக்கள் கண்டு மனம் வாசமாகியது
வருடும் வளி கண்டு மகிழ்வு வானளவானது
சிமிட்டும் நட்சத்திரம் கண்டு மண்டும் வலி போனது
இனி எதிர்காலங்கள் வழி ஒளிகொண்டது.

இனிமை வாழ்வு தந்த இறைவனை நினைக்கையில்
எப்பொழுதும் முன் நெற்றி தரை தாழ நினைத்தது
முப்பொழுதும் எப்பொழுதும் என்னிறைவன் தன் நினைவில்
முக்தியான வாழ்வுத்தன்னை வாகாக பெற்றிடலாம்.

மகளாகி மனைவியாகி தாயாகி பாட்டியாகி
தனித்துவத்துடன் வாழ்ந்தாலும்
இன்னும் மனதினில் சிறுமியின் உற்சாகம்
இந்த நொடியிலினிலும் சாதிக்கும் உத்வேகம்.

அன்று பிறந்த மேனி அகத்தில்தான் பழமென்றாலும்
இன்று பிறந்த மனம் புறத்திலும் புதிதுதான்
சுற்றி வரும் உற்சாகத்தில் வயதொன்றும் பெரிதில்லை
பெருகி வரும் புண்ணியத்தில் வயதுகளைத் தொலைக்கவில்லை.

வான் கண்டு,மதிகண்டு,புவி கண்டு,மலை கண்டு
நீர் நிலை கண்டு,பனித்துளிகண்டு,வெண் மேகம் கண்டு
குளிரும் தென்றல் கண்டும்,வருடும் வெயில் கண்டு
பெய்யும் நன்மழைகண்டு,நல்கும் நல்விளைகண்டு
பறக்கும் கிளி கண்டு,கூவும் குயில் கண்டு
அகவை விரிக்கும் மயில் கண்டு,சாயும் அந்தி கண்டு

மனமெங்கும் சந்தனமாய் மணக்கின்றதே
உள்ளத்தில் உற்சாகம் பூக்கின்றதே
அகவை தொலைகின்றதே
அல்லும் பகலும் இனிக்கின்றதே

உள்ளங்கை வண்ண வண்ண
பிணி போக்கும் மாத்திரைகளின்
‘வடிவங்களை நோக்கும் பொழுதில்
அகவை தெரின்றதே
அத்தனையும் மொத்தமாக
அள்ளிச்செல்கின்றதே.




July 18, 2011

அந்தநாள் ஞாபகம்:))


தங்கை அதிரா அன்புடன் அழைத்த தொடர் பதிவிது.அதீஸ்..புயல் வேகத்தில் பதிவிட்டு விட்டேன்.

என்னுடன் ஆரம்பகாலம் தொட்டே படித்து வந்த இரு தோழிகள் அடுத்தடுத்து
மிக இளம் வயதில் துர்மரணத்தை சந்தித்தது
இன்னும் என் ஆழ் மனதில் மாறாத வடுவாக பதிந்துள்ளது.
மர்ஜா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது)எனக்கு முன்னரே திருமணமாகி திடுமென கேஸ் வெடித்த
விபத்தில் மாண்டு போனவள்.
நீண்ட காலம் குழந்தை இல்லாமல் அந்த ஆசை நிறைவேறாமலே மறைந்தவளை
இப்பொழுது நினைத்தாலும் கண்கள் குளமாகும்.அவள்
கணவர் அவளது சொந்த தங்கையையே திருமணம் செய்து கொண்டு அவளுக்கும் நீண்ட காலமாக
குழந்தை இல்லாமல் இப்பொழுது ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்கின்றாள்.
இஸ்லாமியர்கள்
அதிலும் எங்களூர்க்காரர்கள் ஒரு ஆசிரமத்துக்கு சென்று குழந்தையை தத்தெடுப்பது என்பது
அபூர்வம்.ஆனால் இவள் அந்த முறையில் தத்தெடுத்து வளர்க்கும்
குழந்தையைப்பார்க்கும் பொழுது எனக்கு குழந்தையின் முகம் மர்ஜாவின் ஜாடையில் இருப்பதைப்போன்றே தோன்றும்.

என் தம்பியின் திருமணத்திற்காக இந்த நண்பியின் வீட்டிற்கு சென்று கதவை தட்டினேன்.
(வாசலில் காலிங்க் பெல் ஸ்விட்ச் இல்லை)எந்த ஒரு சப்தத்தையும் காணாது நண்பியின் பெயர் சொல்லி அழைத்து தட்டும் பொழுது
அவளது தாயார் சோகமாக கதவை திறந்து விட்டவர் முகத்தில் மலர்ச்சி இல்லாமல் இருந்ததை
கண்டு எங்கே அவள்என்று கேட்டதற்கு அழுகை வெடித்துக்கொண்டு வந்தது.
சென்றவாரம்தான் தூக்கு போட்டு இறந்ததை
அவர் விவரித்ததும் எனக்கு உடம்பே வெல வெலத்து விட்டது.

டிராஜடியாக இரண்டு அனுபவங்களை படித்து கனத்துப்போன மனங்களுக்கு
காமெடியான இரண்டு அனுபவங்கள்.

நாண்காவது வகுப்பில் படிக்கும் பொழுது என்று நினைக்கிறேன்.இவளும் நானும் மிகவும்
நெருங்கிய தோழிகள்.நான் மிகவும் கஷ்டப்பட்டு சேமித்து வீட்டிலேயே வைத்திருந்த
ஐம்பது ரூபாயைப்பற்றி இவளிடம் தம்பட்டம் அடிக்கப்போய் வைத்தாளே ஆப்பு.
(அப்போதெல்லாம் 50 ரூபாய் என்பது பெரிய தொகைங்க)கடனாக கொடு .
அப்புறமாக கொடுத்து விடுகின்றேன் என்று சொன்னதை நம்பி கொடுத்து விட்டு
திரும்ப வாங்குவதற்குள் நான் பட்டபாடு.பணத்தை எப்படி எல்லாம் கொடுக்காமல்
டிமிக்கி கொடுக்கலாம்
என்பதில் அவள் கில்லாடியாக இருந்தால் பணத்தை எப்படி வாங்குவது என்பதில் செம கில்லாடியாக
நான் இருந்து இறுதியில் ஹெட்மாஸ்டர் ரூம் வரை எங்கள் பிரச்சினை சென்று கடைசியில்
வசூல் செய்து விட்டுத்தான் ஓய்ந்தேன்.ஆனால் பிரண்ட்ஷிப் அப்போ கட் ஆனதுதான்.
இப்பொழுது கண்டாலும் அவள் முகத்தை திருப்பிக்கொள்கின்றாள்.

நான் படித்த பள்ளிக்கு என் ஒன்றுவிட்ட தாத்தாதான் கரஸ்பாண்டண்ட்.அதனால் பள்ளிக்கே
செல்லமாக ஒரு குரூப் அலையும்.அதில் நானும் ஒருத்தி.முதலாம் வகுப்பு படிக்கும் பொழுது
பள்ளிக்கூடம் வேண்டாம்
என்று அழிச்சாட்டியம் பண்ணியவள் தொடர்ந்து மூன்று வருடங்களாக இதே அலைப்பரைதான்.
என்னை பள்ளியில் சென்று விட்டு வரும் மாமா முறை உள்ளவரை பள்ளியில் வகுப்பறை வாசலிலேயே
இறுத்திக்கொள்வேன்.நான் அசந்த நேரம் அவர் எஸ்கேப் ஆகி விட்டால் அழுது ஆர்ப்பாட்டம்தான்.இதனால்
இரண்டாவது மூன்றாவது பீரியடில் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள்.அப்பொழுது என் தோஸ்த்துகளின்
முகங்களை பார்க்கவேண்டுமே.பொறாமையில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும்.
ஆனால் என்னால் இந்த அழுகுணி ஆட்டத்தை ரொம்ப நாள் தொடர முடிய
வில்லை.மாஸ்டரின் பிரம்புக்கு பயந்து பெட்டிப்பாம்பாய் அடங்கி விட்டேன்.

என்னுடைய இளம் பிராயத்து தோழிகள் பலரும் என்னைத்தொடர்ந்து
சென்னையிலே ஒருவர் பின் ஒருவராக செட்டில் ஆகி விட்டனர்.ஆங்காங்கே தனித்தனியாக
சந்தித்துக்கொண்டாலும் எல்லோரும் ஒன்றாக ஒரு முறை,ஒரே இடத்தில் சந்திக்க வேண்டும்
என்ற எனது ஆவல் எப்பொழுது நிறைவேறப்போகின்றதோ?
அதே போல் எங்கள் சில நண்பிகள் தொடர்பு விடுபட்டு அவர்களை சந்திக்கும் ஆவல் மிகுதியாக
உள்ளது.வழிதான் தெரிய வில்லை.அவர்களை எல்லாம் கண்டுபிடித்து எப்பொழுது சந்தித்து அளாவளவும் வாய்ப்பு
கிடைக்கப்போகின்றதோ?







July 14, 2011

கோபத்திற்கு குட்பை



மனிதனுக்கு இயற்கை தந்த பனிஷ்மெண்ட் என்று கோபத்தை சொன்னால் மிகை ஆகாது.ஆறுவது சினம் என்றார் அவ்வைப்பாட்டி.
கோபம் உள்ள இடத்தில் குணம் இருக்கும்,கோபம் சண்டாளம்,அடிக்கிற கைதான் அணைக்கும்,ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்று ஏகப்பட்ட பழமொழிகள் சினத்தை குறிப்பிட்டு சொல்லப்பட்டவைகள்.
மனித வாழ்க்கை சீராக சுபமாக செல்லவேண்டுமாயின் கோபத்தைக்குறைப்பதுதான் கைகண்ட மருந்து.

கோபத்தினால் நரம்புகள் இறுகும்.தலைவலி,இரத்த அழுத்தம்,உடல் வலிமை இழத்தல்,நரம்புத்தளர்ச்சி,மூச்சிரைத்தல் இப்படி பற்பல உடல் உபாதைகளை வலிய வரவழைத்துகொள்ள
வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவோம்.

கீழ்கண்ட காரணிகளால் கோப உணர்வுக்கு மனிதன் தள்ளப்படுகின்றான்.
1.இயலாமை
2.நினைத்ததை சாதிக்க இயலாமல் போகும் பொழுது
3.நிறைவேற்ற இயலாமல் போகும் காரியங்களினால்
4.பிறரைபற்றியே அதிகம் சிந்தித்தல்
5.பிறர் நம்மை மதிக்காத சந்தர்ப்பத்தில்
6.பிறர் நம்மை பொருட்படுத்தாத சூழ்நிலையின் பொழுது
6.சோம்பேறித்தனம் மிகும் பொழுது
7.பொழுத்து போகாமல் இருக்கும் பொழுது
8.ஏமாற்றங்களை சந்திக்கும் பொழுது
9.உடல் நலம் குன்றும் பொழுது
10.பொருளாதார சிக்கல் ஏற்படும் பொழுது
11.விவாதத்தின் பொழுது.
12.நம்முடைய கருத்துக்களை பிறர் ஏற்றுக்கொள்ளாத சூழ்நிலையின் பொழுது
13.பசியின் பொழுது

இப்படி பற்பல,வெவ்வேறு காரணங்களால் மனித மனம் இந்த கோப அரக்கனை இரத்தினம் கம்பளம் விரித்து வரவேற்கும் நிர்பந்தத்திற்குத்தள்ளப்படுகின்றது.
கோபம் கொள்ளும் பொழுது மனித மனங்களில், உடல்களிலும் ஏற்படும் மாற்றங்கள் எண்ணிலடங்காது.

சரி.இந்த கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது?
முதலில் கண்ணாடி முன் உங்கள் கோபமுகத்தை நோக்குங்கள்.
ச்சீ ...என்று வெறுத்து விடுவீர்கள்.எதனை ?கோபத்தைத்தான்.

கோபமாக முகத்தை வைத்துக்கொண்டு குளோஸ் சாட்டில் ஒரு போட்டோவும்,சிரித்த முகமாக வைத்துக்கொண்டு குளோஸ் சாட்டில்
மற்றொரு போட்டோவும்
எடுத்து படுக்கை அறை பக்கவாட்டு மேஜை மீது வைத்துக்கொண்டால் கோபம் கொள்வதில் இருந்து நம்மை மட்டுப்படுத்தலாம்.

கோபம் வந்தால் உடனே அந்த இடத்தை விட்டும் அகன்று சென்று விடுங்கள்.குளிர்ந்த நீரில் உடலை நனைத்தாலும் கண்டிப்பாக கோபம் மட்டுப்படும்.

மவுனத்தை கடைபிடியுங்கள்.ஈகோவை கைவிட்டு சுமுகநிலைக்கு தயாராகுங்கள்.

குழம்பும் மனதினை கட்டுப்படுத்தி ஒருமுகப்படுத்தக்கற்றுக்கொள்ளுங்கள்.
டேக் இட் ஈஸி பாலிசி மிகவும் நன்று.

இழந்த கவுரவத்தைப்பற்றி நினைத்துகொண்டே இராமல் மனதினை நிர்மூலப்படுத்துங்கள்.

இறைவன் நமக்கு அருளிய அருட்கொடைகளை எண்ணி உவகை கொள்ளுங்கள்.
எப்பொழுதும் சிரித்த முகத்துடன்,ஃபிரஷ் ஆக வளைய வரவேண்டும் என்பதில் தீர்மானமாக இருங்கள்.

கோபம் நம்மை விழுங்கி ஏப்பம் விட்டு கபளீகரம் செய்துவிடும் முன் நீங்கள் கோபத்தை மென்று ,விழுங்கி கபளீகரம் செய்து விடுங்கள்.

கோபத்துக்கு ஒரு பெரிய குட்பை சொல்லி விட்டு அப்புறம் பாருங்கள்.உங்கள் நட்பு வட்டமும்,உறவு வட்டமும் எப்படி பரந்து விரிந்து உங்களை பரவசப்படுத்துமென்பதை.















July 5, 2011

கொஞ்சம் செக் பண்ணிக்கோங்க..



நாற்பது வயதைத்தொடும் முன் உணவு,உடை,அத்தியாவசிய பொருட்களுக்கு செலவு செய்வதைப்போன்று மருத்துவப்பரிசோதனைக்கு செலவு செய்வதுதான் புத்திசாலித்தனம்.நாம்தான் திட காத்திரமாக,ஆரோக்கியமாக,வலிமையாக இருக்கின்றோமே நாமே கற்பனை செய்து கொண்டு உடல் நலனில் அக்கரையின்றி இருப்பது அறிவீனம். உடல் பாதிப்புகளை வெளியில் சொல்வதற்கு கூச்சம்,நமக்கெல்லாம் அப்படி எதுவும் வந்து விடாது என்றொதொரு குருட்டு நம்பிக்கை,எதற்கு தேவை இல்லாமல் செலவு செய்து கொண்டு என்றதொரு அலட்சிய மனோபாவம் இவை அனைத்தையும் களைத்தெறியும் குணம் விழிப்புணர்வு நம்மிடம் மிக குறைவாகவே உள்ளது.

எனக்கு தெரிந்த ஒருவர் கை மிகவும் வலியாக உள்ளது என்று சாதரணமாக வலி நிவாரண தைலத்தை பூசிக்கொண்டு வலியைக்கட்டுப்படுத்திக்கொண்டே வந்தவர்,பிரிதொரு நாளில் மிகவும் தாங்க இயலாமல் மருத்துவரிடம் சென்ற பொழுது அவருக்கு இருந்த ஹை பிரஷரைப்பார்த்து டாக்டரே அதிர்ந்து விட்டார்.உடனடியாக ஈ சி ஜி எடுத்து அது நார்மல் என்றான பிறகுதான் பிரஷருக்குண்டான மாத்திரைகளை ரெகுலராக சாப்பிட பரிந்துரைத்தார் மருத்துவர்.இப்படியே அலட்சியமாக இன்னும் சில நாட்கள் இருந்திருந்தால் விபரீதமாகி இருக்கும் என்றார்.

நாற்பது வயதைத்தொடும் முன் இரத்தத்தில் சர்க்கரை அளவு,இரத்த அழுத்தம்,புற்று நோய் பரிசோதனை,கொலஸ்ட்ரால்,தைராய்டு போன்றமுக்கியாமான நோய்களுக்குண்டான பரிசோதனைகளை செய்து கொள்வது நல்லதொரு விழிப்புணர்வு.தனியார் மருத்துவ மனைகளில் முழு உடல் பரிசோதனை செய்கின்றார்கள்.தவிர அரசு மருத்துவ மனைகளில் குறைந்த கட்டணத்தில் பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்.

விழிப்புணர்வு மிக்க இன்னொரு தெரிந்த பெண்ணொருவர் பிரபல ஸ்கேன் செண்டரில் அக்டோபர் மாதம் நடந்த மார்பகபுற்று நோயை சலுகை கட்டணத்தில் பரிசோதிக்கின்றார்கள் என்பதை விளம்பரம் வாயிலாக அறிந்து விளையாட்டைப்போல பரிசோதனை செய்து கொள்ளப்போனார்.பரிசோதனையின் முடிவில் வந்த ரிப்போர்டை பார்த்து மயக்கம் வராத குறை.மார்பக புற்றுநோயின் ஆரம்ப கட்டத்தில் இருந்திருக்கின்றார்.எனக்கு எந்த பிரச்சினையும் இல்லையே?விளையாட்டாகத்தானே பரிசோதனைக்கு வந்தேன் என்று தவித்துப்போனார்.ஆரம்ப கட்டம் ஆதலால் மிக குறுகிய நாளில்,சுலபமான சிகிச்சைகள் மூல தற்பொழுது நோயில் இருந்து முழுமையாக மீண்டு விட்டார்.சீக்கிரம் கண்டறியப்பட்டதால் பெரும் விபரீதத்தில் இருந்து தப்பி விட்டேன் என்று இப்பொழுதும் சிலாகித்து கூறுவார்.

வரும் முன் காப்பது என்பது பல விபரீதங்களில் இருந்தும்,அளவுக்கதிகமான செலவுகளில் இருந்தும் தப்பிக்கலாம்.30 வயதைத்தாண்டிய பெண்களுக்கு ஆண்டு தோறும் புதியதாக நாண்கு லட்சம் பேருக்கு மார்பக,கர்பப்பை புற்று நோய்க்கு ஆளாகுகின்றனர்.இது இந்தியாவில் மட்டுமே.இப்புற்றுநோய்களுக்கான பரிசோதனையை முப்பதுவயதைத்தாண்டிய ஒவ்வொரு பெண்ணும் ஒருதடவை பார்ப்பது மட்டுமின்றி மூன்று ஆண்டுகளுக்கொரு முறை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.வயது ஏற ஏற பரிசோதனை செய்யும் காலகட்டத்தின் இடைவெளி குறைய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

விழிப்புணர்வுடன் வருமுன் காத்து பொருள்,சந்தோஷம்,காலம் போன்றவற்றின் நஷ்டங்களில் இருந்து தவிர்த்து எல்லோரும் நலம் வாழ நல் வாழ்த்துக்கள்