ஆன்- லைன் வர்த்தகத்திலிருந்து தங்கத்தை நீக்க உலக நாடுகள் ஒரு மித்த முடிவு.
தங்கம் விலை வரலாறு காணாத வீழ்ச்சி!
அமெரிக்கன் டாலர் தடாலடி உயர்வு!
பங்கு வர்த்தகத்தில் காளையின் ஆதிக்கம்!
மீடியாக்களில் கடந்த சில தினங்களாக இவைகள்தாம் தலைப்புச்செய்திகள்.
நாளுக்கு நாள் தங்கத்தின் விலை குறைந்து கொண்டே போவதால் நாளைக்கு இன்னும் குறையும்,நாளன்னிக்கு மேலும் குறையும் இந்த கண்ணோட்டத்தில் மக்கள் நகைகளை வாங்கத்தயங்கினாலும் சில தைரியசாலிகள் இதுதான் சான்ஸ் என்று வாங்கவும் செய்தனர்.அதனாலேயே நகைக்கடையில் கூட்டம் களைக்கட்டியது.
தங்கம்மாவின் கணவர் வைரமணி நகைக்கடைக்கு சென்று பத்து தங்க காயின் வாங்கி வந்து மனைவின் கையில் வாயெல்லாம் பல்லாக தந்த பொழுது தங்கம்மாவுக்கு மனம் நிறைய வில்லை.”காயினா வாங்கினதுக்கு பதிலாக காசுமாலை வாங்கித்தந்தால் என்ன”என்ற ஆதங்கம்.
“அதுக்கென்ன இப்போ..என் செல்லத்துக்கு அடுத்த வாரமே வாங்கித்தந்துடுறேன்”கணவனின் வார்த்தைகளில் மெழுகாய் உருக்கிப்போனாள் தங்கம்.
வங்கியில் போட்டு இருந்த ஒரு லட்சரூபாய் பிக்சட் டெபாஸிட் முதிர்வு அடையாமலே தங்கம் வாங்கும் நிமித்தமாக பணத்தை எடுக்க சென்றால் வங்கியில் எள் போட இடமில்லாமல் கூட்டம் களைக்கட்டியது.கூட்டத்தில் நின்ற பாதி பேருக்கும் மேலே வைப்புநிதிகளை க்ளோஸ் செய்யும் நிமித்தமாக வந்து இருந்தனர்.
ஒரு கட்டத்தில் ஒரு ஸ்டாஃப் வந்து நாளைக்குத்தான் பணம் பட்டுவாடா செய்யப்படும் என்று அறிவித்ததும் முணு முணுப்புடன் கலைந்து சென்றனர்.
கூட்டத்தோடு கூட்டமாக நின்றிருந்த வைரமணியும் அவரது சகதர்மினி தங்கமும் என்ன ஏது என்று விசாரிக்கையில் வங்கியில் பணம் காலியாகிவிட்டது என்ற தகவல் கிடைத்தது.
‘நாளைக்காலை சீக்கிரமே வங்கிக்கு வந்து பணத்தை எடுத்து விடவேண்டும்’முணு முணுத்தபடி இருவரும் வங்கியை விட்டு வெளியே வந்தனர்.
வீட்டை அடைந்த பொழுது வேலைக்கார தாயம்மா வாசல் அருகே நின்றிருந்தாள்.
”என்ன தாயம்மா இந்த நேரத்திலே..”
“ஒரு மூவாயிரம் ரூபாய் கடனா கொடும்மா”
“என்ன இப்படி திடும் என்று மூவாயிரம் கேட்டால் எங்கே போறது?போன மாசம் வாங்கிய கடனையே இன்னும் முடிச்ச பாடில்லையே?”
“என் ஊட்டுக்காரக்கடங்காரன் குடிச்சுட்டு பக்கத்து வீட்டு ஆளைப்போட்டு விளாசித்தள்ளிட்டானுங்கம்மா.அந்த பொறம் போக்கு நேரா போய் ஸ்டேஷனில் கம்ப்ளையிண்ட் கொடுத்துட்டான்.இப்ப மூவாயிரம் கட்டினால்தான் வெளியே விடுவாங்க...த்தூத்தேறி..”
”தாயம்மா இப்ப சுத்தமா என் கிட்டே பணம் இல்லே”
“இல்லே தங்கம்மாக்கா..நீ தான் எனக்கு கொடுத்து உதவணும். அப்பாலே சம்பளத்திலே கழிச்சுக்கறேன்.” பிடிவாதமாக நின்றாள் தாயம்மா.
விரலில் கிடந்த இரண்டு மோதிரத்தைக்கழற்றிக்கொடுத்து “இதைப்போய் சேட்டுக்கடையிலே வச்சி காசை வாங்கிக்க .வேற என்ன பண்ணுவது?”வேண்டா வெறுப்பாக கழற்றிகொடுத்த மோதிரங்களை வாங்கிக்கொண்டு சந்தோஷமாக கிளம்பினாள்.
சேட்டுக்கடை.
“இந்தா சேட்டு..இதை வச்சிட்டு ஒரு மூவாயிரம் கொடு.அவசரமா வோணும்.”
சேட்டு மூக்கு கண்ணாடியை போட்டுக்கொண்டு மோதிரத்தை திருப்பி திருப்பிப்பார்த்தான்.
“என்னா சேட்டு பாக்கிறே..அது சுத்த தங்கம்தான்..”
“அதுலே சந்தேகம் இல்லை.ஆனால்...”இழுத்தான்.
“என்னா சேட்டு இழுக்கறே,,முள்ளங்கிப்பத்தையாட்டம் ரெண்டு மோதிரத்தை கொண்டாந்துட்டு மூவாயிரம் கேட்கறேன்.இந்த யோசிப்பு யோசிக்கறியே..”
அவசரப்பட்டாள் தாயம்மா.
’இந்நேரம் லாக்கப்பில் இருக்கும் அவள் புருஷனை லத்தியால் எத்தனை அடி அடித்திருப்பார்களோ..’
முகத்தை சுளித்து உதட்டைப்பிதுக்கி”சவரன் போற போக்கை பார்த்தால் நான் எதுவும் ரிஸ்க் எடுக்க விரும்பலே.பேசாமல் வூட்டுலே இருக்கற பண்டம் பாத்திரத்தை எடுத்துட்டு வா.பைசா தர்ரேன்.”
மோதிரங்களை திருப்பித்தந்தவனை “அடப்பாவி”என்றபடி திகைத்து நின்றாள் தாயம்மா.
“இந்த வருஷ தீபாவளிக்கு நம்ம பொண்ணுக்கு டிஷ்யூ பட்டு எடுத்துக்கொடுத்துடணும்”
“டிஷ்யு பட்டு எதுக்கு?ஆறு சவரனில் நெக்லஸ் வாங்கிப்போட்டுடலாம்.”
“அதுவும் நல்ல யோசனைதான்.அப்படியே சின்னப்பொண்ணுக்கு ஒரு ஒட்டியாணம் எப்படியாவது வாங்கிடணும்.ஒட்டியாணம் என் ரொம்ப நாள் கனவுங்க”
“உன் கனவு நிறைவேறும் நாள் ரொம்ப தூரத்தில் இல்லை தங்கம்மா..டோண்ட் வர்ரி”சந்தோஷமாக சிரித்தான் வைரமணி.
“ஆங்..தங்கத்துக்கு உடம்பு பூரா தங்கம்..”முணங்கியவாறு புரண்டு படுத்த தங்கத்தை வைரமணி விநோதமாக பார்த்தான்.
“தங்கம்..அடி தங்கம்..என்னடி ஆச்சு உனக்கு?தூக்கத்தில் சிரித்துட்டே ஏதோதோ உளறுகிறே?ஏதாவது கனா கினா கண்டியா?”
Tweet |