May 28, 2010

கொஞ்சம் சிரிக்கின்றீர்களா?

சென்ற பதிவில் பிரபலமான கம்பெனிகளே தங்கள் வாடிக்கையாளர்கள் சர்வீஸ் என்று சென்றால் படுத்தும் பாட்டினை எழுதினேன்.இப்பொழுது ஒரு வாடிக்கையாளர் கம்பெனி கால் செண்டருக்கு போன் செய்து படுத்தும் பாட்டினை கேட்டு ரசித்து சிரியுங்கள்.இங்கே கிளிக் செய்து சிரித்து விட்டு பேசாமல் போய் விடாமல் பின்னூட்டமும் கொடுத்துவிடுங்கள்.விழுந்து விழுந்து சிரித்ததால் வயிற்று வலியோ,இடுப்பில் சுளுக்கோ ஏற்பட்டால் நிர்வாகம் பொறுப்பில்லை.
Text Color

May 25, 2010

பிராண்டடுகளின் ஃப்ராடுத்தனங்கள்


பொதுவாக எலக்ட்ரானிக்பொருட்கள் வாங்கினால் அழகானவையா,நன்கு உழைக்குமா என்று பார்ப்பதற்கு முன்னர் முன்னணி பிராண்டா?நல்ல சர்வீஸ் வசதி உண்டா என்பதைதான் முதலில் பார்ப்போம்.சர்வீஸுக்காகவே வெளிநாடுகளில் இருந்து வரும் வாய்ப்பிருந்தும்அநேக பொருட்களை மறுத்துவிட்டு இங்கு விற்பதைத்தான் விரும்பி வாங்குவோம்.

சென்னையில் பிரபலமான கடை.இந்தியாவில் லாஞ்ச் ஆகும் எல்லா பிராண்ட்ஏசிகளும்.அனைத்து மாடல்களும் ஒரே கூரையின் கீழ் வைத்து அமோகமாக விற்பனை செய்யும் பெரிய வேறு கிளைகள் இல்லா நிறுவனம்.ஏற்கனவே திட்டமிட்டபடி குறிப்பிட்ட விலையில்,குறிப்பிட்ட பிராண்டில் வாங்கப்போனால் மற்றுமொரு நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதி கைகளை பிடித்து அழைக்காத குறையாக வருந்தி அழைத்து வாங்கப்போகும் பிராண்டைப்பற்றிய குறைகளை பற்றி பெரிய லெக்சரே அடித்து யோசிக்க வைப்பார்.யோசிக்க ஆரம்பிக்க முன்னரே "இப்போ அத்தனை பணமும் இல்லேன்னா கூட பரவா இல்லை.டெலிவரி பண்ணும் பொழுது மீதிப்பணம் கொடுத்தால் போதும்"என்ற முன்னுரையோடு ஸ்டார் ரேட்டிங்,அதனால் கிடைக்கும் சேமிப்பு,அவர்களின் பிராடக்டின் தரம்,சேவை என்று விலாவாரியாக பேசி தலையில் கட்டிவிட்டுத்தான் மறுவேலைப்பார்ப்பார்.

சரி கியாரண்டி முடிந்துவிட்டதே என்று ஏ ம் சி எடுத்தால் சர்வீஸுக்கு கூப்பிட்டே போன் பில் எகிறுகின்றது.பிரபலமான வாட்டர் ஃபியூரிபையர் ஏ எம் சி எடுத்துவிட்டு நான் பட்டபாட்டினை,அதனால் எற்பட்டவாக்குவாதங்கள்,கோபமான உரையாடல்கள் ,கொல்கத்தாவில் இருக்கும் தலைமை அலுவலகத்திற்கு போனுக்கு மேல் போன் செய்து ,மின்னஞ்சல்கள் அனுப்பி வெறுத்துப்போன நிலையில் ஏ எம் சியும் முடிந்து ஓய்ந்திருக்கையில் கையில் பைலுடன் மெக்கானிக் ஏ எம் சியை ரினுவல் பண்ணும்படி கோரிக்கையுடன் வந்தவரை ஆத்திரம் தீர கேட்டு விட்டு அந்த வாட்டர் ஃபியூரிபையரையே கடாசிவிட்ட அனுபவமும் உள்ளது.
கிரைண்டரைக்கொண்டு போய் சர்வீஸுக்கு கொடுத்தால் சர்வீஸ் செய்து தருகின்றோம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.புதிதாக அறிமுகப்படுத்திய மாடலை காட்டி இதில் அந்த வசதி உள்ளது.இந்த வசதி உள்ளது.அடுத்த மாதத்திற்கு விலை ஏறப்போகின்றது.இதனை ரிப்பேர் செய்தால் தண்டம் இந்த ரீதியில் பேசி புதியவையை நம் தலையில் கட்டப்பார்க்கின்றனர்.சாமர்த்தியம் இருந்தால் பர்ஸ் தப்பும்

சரி ரிப்பேருக்கு கொடுத்தே பர்ஸ் இளைத்து விடுகின்றதே என்று சற்று பழசாகிப்போன குளிர்சாதனப்பெட்டிக்கு ஏ எம் சி எடுக்க வரும்படி அழைத்தால் "பர்ச்சேஸ் பண்ணி ஐந்து வருடங்களுக்குள் இருந்தால்தான் ஏ எம் சி எடுப்போம்" என்று அதிரவைக்கின்றார்கள்.அதாகப்பட்டது எந்தஒரு எலக்ட்ரானிக் தயாரிப்பும் அவர்களது தயாரிப்பில் ஐந்து வருடங்களுக்கு மேல் உழைக்காது என்று சொல்லாமல் சொல்லுகின்றார்கள்.

இருவருட கியாரண்டியுடன் தெரிந்தவர் வீட்டில் வாங்கிய கியாரண்டி முடிவதற்கு 10 நாட்கள் முன்பதாக குளிர்சாதனப்பெட்டி ரிப்பேராகி விட்டது.அழைப்புக்கு மேல் அழைப்பு வைத்து கிராண்டி பீரியட் முடிந்த பின் வந்து பார்த்து ரிப்பேர் செய்துவிட்டு பில்லை நீட்டினால் கோபம் வருமா வராதா?மெக்கானிக்கை அருகில் வைத்துக்கொண்டே கம்பெனி மேலாளருக்கு போன் செய்து போராடி பணத்தை கொடுக்காமல் மெக்கானிக்கை அனுப்பிவைத்தனர்.

சம்மர் நேரம் .ஏசி அமோக விற்பனை செய்யும் நேரம்.ஆயிரத்தெட்டு சலுகைகள் அறிவித்து ஏசி வாங்கினால் இன்ஸ்டாலேஷன் ஃபிரி,ஸ்டெபிலைசர் இலவசம் என்று அறிவித்து விட்டு ஆங்கிள் போட்டுள்ளோம் ஜம்பர் போடுள்ளோம் பணம் கொடுங்கள் ஒவ்வொன்றுக்கும் பிடுங்குகின்றனர்.

பெரியதாக கால் செண்டர் என்று போட்டு நமது கம்ப்ளைண்டுகளை பதிவு செய்து ஒழுங்கான சேவை செய்கின்றார்களா என்றால் அதுவும் இல்லை.இந்த நபருக்கு போடுங்கள்,அந்த நம்பருக்கு போடுங்கள் என்று அலைகழித்து வெறுப்பின் உச்சகட்டத்திற்கே அனுப்பிவைத்து விடுகின்றனர்.

மிளாகாயாக கோபத்தில் கத்தினாலும்,தேனொழுக பேசி பேச்சில் மட்டும் சாதுர்யத்தை காட்டுவதற்கு நன்றாகவே டிரைனிங் கொடுத்துள்ளனர்.
அம்மியில் மசாலா அரைத்து,கல்லுரலில் மாவரைத்து,விறகடுப்பில் சமைத்து தன் கையே தனக்குதவி என்று ஆரோக்கியமாக வாழ்ந்த அந்தக்காலத்திலேயே வாழ்ந்து மடியாமல் மின்சாரசாதனங்களை நம்பி வாழ்ந்து அவஸ்தை பட்டுக்கொண்டிருக்கிறோமே என்கின்ற அளவுக்கு வெறுப்புத்தான் மிஞ்சுகின்றது.

நம்மை பாதிப்புக்குள்ளாக்கிய நிறுவனங்களுக்கு இந்த இடுகையை மட்டுமின்றி தொடரும் பின்னூட்டங்களையும் காப்பி பேஸ்ட் செய்யலாம் என்று இருக்கின்றேன்.(எருமை மாட்டில் பெய்த மழை என்கின்றீர்களா?)

டிஸ்கி- அடுத்த பதிவில் பிராண்டுகளின் பெயரையே அறிவித்து விடுகின்றேன்.

May 21, 2010

சோபா சுந்தரிகள்

சி(ப)ல வீடுகளில் பார்த்து இருப்போம்.உள்ளே நுழைந்ததும் வரவேற்கும் சோபா குண்டும் குழியுமாக,பஞ்சும் ,நாறும் பிதுங்க,பரிதாபகரமாக நம்மைப்பார்த்து "காப்பாற்றுங்களேன்"என்று வாய்விட்டு சொல்லாமல் சொல்லும்.இந்த சோபாவின் அவலத்திற்கு சூத்ரத்தாரிகள் இந்த சோபா சுந்தரிகள்தான்.சுந்தரிகள் என்றதும் சுந்தரர்கள் காலரை தூக்கிவிட்டுக்கொள்ளக்கூடாது.இருபாலருக்கும், சேர்த்துத்தான் இவ்விடுகை இடப்பட்டுள்ளது.

சோபாவில் ஃபெவிக்காலை தடவி அதன் மீது உட்காரவைத்துஇருப்பதுப்போல் அசையாமல் உட்கார்ந்து இருப்பார்கள்.சிலர் படுக்கையில் இருந்து எழுந்ததுமே நேரே பாத்ரூம் சென்று காலைக்கடன்களை முடித்து விட்டு அவரவர் வாழ்க்கை கடமைகளை ஆரம்பிப்பதற்கு முன் எழுந்ததுமே நேரே சோபாதான்.அந்த பிரதான இருக்கையில் அமர்ந்து சோம்பல் முறித்து,கொட்டாவிவிட்டு,கைவிரல்களை நெட்டிமுறித்து ,மிச்சசொச்ச தூக்கத்தை கஷ்டப்பட்டு விரட்டி அடித்துவிட்டு அப்புறம் சவகாசமாக காலை கடன்களை முடித்தால்தான் இந்த சோபா பிரியர்களுக்கு பொழுது விடியும்.

சாப்பிடுவது,ஆஃபீஸ் பைல் பார்ப்பது,சாய்ந்துகொண்டு லேப்டாப்பில் வேலை செய்வது,டிவி பார்ப்பது,காய்நறுக்குவது,தலையில் சிக்கெடுப்பது,தலையை துவட்டுவது,நகம் வெட்டுவது,நகத்திற்கு பாலிஷ் போடுவது ,சோபா கைப்பிடியில் தலையை வைத்துக்கொண்டு மணிக்கணக்கில் செல் போனில் கடலை போடுவது,குட்டித்தூக்கம் மட்டுமல்ல ஆழ்ந்து தூங்குவது,மணிக்கணக்கில் அமர்ந்து புத்தகம் படிப்பது,சாய்ந்து படுத்தபடியே பிஸ்கட் பாக்கட்டுகளையும்,சிப்ஸ் பொட்டலங்களையும்,கூல் டிரிங்க்ஸ் களையும் வயிற்றுக்குள் தள்ளி கொலஸ்ட்டராலை ஏற்றிக்கொள்வது,அப்படியே அமர்ந்து கொண்டு தொழுகையை முடிப்பது இத்யாதி..இத்யாதி..எதற்கெல்லாம் இந்த சோபா பயன்படுகின்றது என்ற விவஸ்தையே இல்லை.

போதைக்கு அடிமையாவதைப்போல் இந்த சோபாசுகத்திற்கு அடிமையாகிப்போவது அவர்கள் அறியாமலே,இது தவறு என்பது புரியாமலே,அதனால் ஏற்படும் பின் விளைவுகள் வருந்ததக்கது என்பது புரியாமலே நம்மவர்கள் சோபாவை..அல்ல..அல்ல..சோபா நம்மவர்களை ஆக்ரமித்துக்கொள்கின்றது.

இதனால் உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல மன ஆரோக்கியமும் பாதிப்படைகின்றது.சோபாவில் பொழுதும் உட்கார்ந்திருக்கும் ஒருவர் மிகச்சிறந்த சோம்பேறி ஆகிவிடுகின்றார்.

இப்படி அமர்ந்து அமர்ந்தே மனம் தேவை இல்லாதவற்றை எல்லாம் அசைபோடும்.விளைவு?மனக்குழப்பம்,பிறர்மீது தேவைஇல்லாத எரிச்சல்,சுறுசுறுப்பாக இருப்பவர்களைப்பார்த்து பொறாமை,மனச்சோர்வு,இதனால் ஏற்படும் ஹைபர்டென்ஷன் இப்படி லிஸ்ட் போட்டுக்கொண்டே போகலாம்.

இந்த சோபா சுகவாசிகள் அமர்ந்து அமர்ந்தே சோம்பேறியாகிப்போகின்றார்கள்.உடல் உழைப்பு குறைவதால் தொந்தி தொப்பையை எளிதில் சம்பாதித்துக்கொள்கின்றனர்.சோம்பேறித்தனத்தினால் அனைத்திலும் அசுவார்ஸ்யதன்மை ஏற்பட்டு முதிய தோற்றம் விரைவில் வந்துவிடுகின்றது.சோம்பேறித்தனத்தால் தாழ்வுமனப்பான்மை ரெக்கைக்கட்டிக்கொண்டு பறக்கும்.

சோபாவில் கம் போட்டு ஒட்டிக்கொண்டு குடித்தனமே நடத்தும் சோபாவாசிகள் இந்த ஆளுருக்கி பழக்கத்தை விட்டொழிக்கவேண்டும்.சுருண்டு சோபாவில் கிடக்கும் பொழுதை உதறிவிட்டு நேரத்தை பயனுள்ளதாக்கிக்கொள்ளுங்கள்.

காற்றார வெளியில் நடங்கள்.அருகில் உள்ள பார்க் சென்று பொழுதைக்கழியுங்கள்.சுற்றம்,சூழல்,நட்பில்லங்களுக்கு சென்று வாருங்கள்.உறவுகளும் பலப்படும்.நம் வீட்டு சோபாவும் சீக்கிரம் பழசாகாது.நல்ல காற்றும்,,வெளிமனிதர்களின் அறிமுகங்களும் கிடைக்கும்.சும்மா உட்கார்ந்து கொண்டே பொழுதை ஓட்டும் சமயத்தில் வீட்டிலுள்ள கப்போர்டுகளை புதிதாக பேப்பர் மாற்றி ஒழுங்கு செய்யலாம்.விட்டத்தில் தொங்கும் சாண்டிலியர்,பேன்,லைட்டுகளை துடைக்கலாம்.அடுக்களை செல்பை சுத்தம் செய்யலாம்.சுந்தரர்கள் சுந்தரிகளுக்கு இந்த விஷயத்தில் உதவலாம்.

ஒருநாளின் இருபத்திநாண்கு மணிநேரத்தில் பாதிநேரம் சோபாவை ஆக்ரமித்துக்கொண்டிருக்கும் மகா மனிதர்கள்,மனிதர்களின் மனைவிகள் அதன் பின்விளைவுகளை சிந்தித்துப்பாருங்கள்.

வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டு டெலிபோனிலே மளிகை லிஸ்ட்டும்,வண்டிக்காரனிடம் காய்கறிகள்,பழங்களும்,அயர்ன் பண்ண லாண்ட்ரிகளும்,ஏன் சோம்பேறித்தனத்தால் வாரத்தில் பாதிநாள் ஹோட்டல் சாப்பாடு சாப்பிடும் அவலம் நிறைய வீடுகளில் சர்வசாதாரணமாக நடக்கின்றது.

மளிகை சாமான்லிஸ்ட் அனுப்பும் நேரத்திற்கு ஹேண்ட் பேக்கை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு நீங்களாகவே கடையில் சென்று சாமான்களை பார்த்து தரமானதாக புதியனவையாக வாங்கலாம்.வண்டிக்காரரிடம் காய்ந்துபோன கறிகாய்களை வாங்கி சத்துக்கள் இழந்து சாப்பிடுவதைவிட மார்க்கெட்டுகளில் சென்று ஃபிரஷாக காய்களை வாங்கி சத்து நிறைந்ததாக சாப்பிடலாம்.சுலபமாக அயர்ன் செய்யும் ஆடைகளைக்கூட லாண்ட்ரியில் கொடுக்கும் வழக்கத்தை விட்டு செல் அயர்னிங் செய்தால் கைகளுக்கும் நல்ல பயிற்சி கிடைப்பதுடன் பர்சுக்கும் பாதுகாப்பு.கண்ணை பறிக்கின்ற கலருடன் அஜினமோட்டோ என்று உடல் நலத்தை பாதிக்கும் உணவுவகைகளை வெளியில் இருந்து வாங்கி உண்பதை குறைத்து நீங்களே தயார் செய்து உங்கள் "இணை"க்கு பறிமாறினால் அதனை விட இனிய சாப்பாடுண்டோ?

சோபாவில் அமர்ந்தே சோபாவை தேய்ந்துபோகச்செய்து,பொலிவிழந்து போகச்செய்துகொண்டிராமல் உடலையும் மனதினையும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள ஆரம்பியுங்கள்.
கிச்சனில் உள்ள மிக்ஸியைப்பாருங்கள்.உற்றுப்பார்த்தால் படிந்திருக்கும் அழுக்குத்தெரியும் ஈரத்துணியால் துடைத்து பளிச் பண்ணலாம்.குழந்தைகள் இரைத்துவிட்டுப்போன துணிமணிகள்,பேனா,பென்சில்,பொம்மைகளை அந்தந்த இடங்களில் வைத்து நேர்த்தி பண்ணுங்கள்.
அவசரத்தில் கடாசிவிட்டுப்போன சாவிக்கொத்து,சில்லரைக்காசு,முக்குகண்ணாடி,சீப்பு இத்யாதிகளை எடுத்து ஒழுங்கு செய்தால் வரப்போகும் டென்ஷனை தவிர்க்கலாம்.ஷோகேஸ் பொருட்களை துடைத்து அடுக்குங்கள்.அழுக்குகூடையில் வழிந்து நிரம்பும் துணிகளை துவைக்கப்போடுங்கள்.

இப்படி சோம்பேறித்தனம் வளர்க்கும் சோபா சுகத்தை விட்டு விட்டு வீட்டில் இருக்கும் சின்ன சின்ன வேலைகளை செய்தால் சோபாவும் வெறுத்து விடும் .வீடும் பளிச் ஆகும்.உடலுக்கும்,மனதிற்கும் நல்லதும்கூட.



May 18, 2010

அற்புதமனுஷி அனுராதா ரமணன்


வழக்கம் போல் நேற்றும் காலையில் எழுந்ததும் வலது கையில் காபி கோப்பையும்,இடது கையில் அன்றைய நாளிதழ்களுமாக அமர்ந்து புரட்டியவள் அனுராதாரமணனின் மரணச்செய்தியை சொன்ன வரிகளை படித்ததும் ஸ்தம்பித்துவிட்டேன்.எதிரே அமர்ந்திருந்த என் தாயாரிடம் "அனுராதா ரமணன் இறந்துவிட்டாரம்மா"என்று படபடப்பாக கூறிய பொழுது அவரும்"நான் ராத்திரியே சன் நியூஸில் பார்த்தேன்" என்றார்.என் தாயார் அவர்களும் இன்றுவரை அவரது படைப்புகளை ஆர்வமுடன் படித்து விமர்சனம் செய்யக்கூடியவர்கள்.

அவர் எழுத்துக்களால் கவரப்பட்டு என் பதின்ம வயதுக்கு முன்னரே அவரின் படைப்புகளை விழுந்து,விழுந்து படித்தவள் .இப்பொழுது நாவல்கள் படிக்கும் ஆர்வம்குறைந்து போனாலும் அவரது எழுத்துக்களை மட்டும் விடாமல் படித்துவருபவள்.

என் இளம்பிராயத்தில் லட்சுமி,வாஸந்தி,சிவசங்கரி,இந்துமதி,ரமணிசந்திரன்,அமுதாகணேசன்,விமலா ரமணி போன்ற பிரபல எழுத்தாளர்கள் நிறைய எழுதிவந்தாலும்,நான் அவற்றை எல்லாம் சுவாரஸ்யமாக படித்து வந்தாலும் அனுராதா ரமணன் எழுத்துக்கள் போல் என்னை வேறு யாருடைய எழுத்துக்களும் கவரவில்லை.

எட்டாம் வகுப்பு படிக்கும் காலத்தில் அவரது ஒரு நெடுங்கதையால் கவரப்பட்டு பதினைந்துபைசா தபால் கார்டில் பாராட்டி எழுதிவிட்டு "இனி எழுதப்போகும் காரெக்டருக்கு எனது பெயரை வையுங்கள்" என்ற கோரிக்கையுடன் கடிதத்தை முடித்து போஸ்ட் செய்துவிட்டு அடுத்து அடுத்து வரும் கதைகளில் என் பெயர் வருகின்றதா என்று ஆவலுடன் படித்த நேரத்தை இப்பொழுது நினைவு கூர்ந்தால் சிரிப்பு வருகின்றது.

"மீண்டும் மீண்டும் உயிர்த்தெழலாம்" என்ற ஒரு தொடர் கட்டுரையில் தனக்கு வந்த நோய்களைப்பற்றியும்,சிகிச்சை பற்றியும்,சிகிச்சை அளித்த மருத்துவர்களைப்பற்றியும்,நோயின் பிடியில் இருந்து தப்பி வந்ததைப்பற்றியும் தனக்கே உரிய பாணியில் வெகு நகைச்சுவையுடன் பகிர்ந்து கொண்டது மிகவும் அற்புதமானது.நோயின் பிடியில் சிக்குண்டு இருப்பவர்கள்,முதியவர்கள் அக்கட்டுரையை படித்தால் கட்டாயம் தெம்பு வரும்,அசாத்திய நம்பிக்கைவரும்.
அவரின் எழுத்து திரைப்படமாக "கூட்டுபுழுக்கள்" என்ற பெயரில் வந்தது.அந்த திரைப்படத்தை அப்பொழுது பலமுறை ரசித்து பார்த்து இருக்கின்றேன்.தொடராக வந்தவைகளை எல்லாம் ஒன்று சேர்த்து பைண்டிங் செய்து ஊரில் இருக்கும் என் லைப்ரரி அறையையே நிரப்பி வைத்து இருக்கின்றேன்

மங்கை என்ற மாத இதழில் "விஜயாவின் டைரிக்குறிப்பு" என்று தேதி,மாதம்,வருடம் வாரியாக ஒரு டைரியையே வெளியிட்டு இருந்தார்.அது ஒரு நீண்ட தொடராக வெளிவந்தது."இது உண்மையில் நடந்த டைரிக்குறிப்பு" என்றும் குறிப்பிட்டு இருந்தார்.ஒரு சிறுமி தன் தாத்தா,பாட்டியிடம் வளர்ந்தது முதல்,அவளது இளம்பிராயத்து குறும்புகள் கலாட்டா என்று வெகுசுவாரஸ்யமாக போய்க்கொண்டிருந்த டைரிக்குறிப்பு திருமண வாழ்க்கையை பற்றி எழுத ஆரம்பித்ததும் படிப்பவரை சோகம் அப்பிக்கொள்ளசெய்துவிட்டது .சந்தேகப்பட்ட கணவனால் பட்ட அடி,உதை,கொடுமைகளை விவரிக்க,விவரிக்க பலமுறை கண்கள் குளமாக கட்டிக்கொள்ள வாசித்து இருக்கின்றேன்.இத்தனை மோசமான படுபாவி யார்?இத்தனையும் தாங்கிகொண்ட அந்த அப்பாவிப்பெண் யார்?என்ற ஆர்வம் படிப்பவரை யெல்லாம் தொற்றிக்கொண்டது.பலமாதங்களாக வந்த,பலரின் ஏகோபித்த பாராட்டுகளையும்,ஆர்வத்தையும் தூண்டச்செய்த அந்த தொடரின் கடைசி அத்தியாயத்தில் "டைரிக்குறிப்பில் வந்த விஜயா வேறு யாரும் அல்ல.நானேதான்" என்று அதிரவைத்தார்.

அறுபத்தி மூன்று வயதான அனுராதா ரமணன் 1200 சிறுகதைகள்,800 நாவல்கள்,குறுநாவல்கள்,ஏராளமான தொடர்கட்டுரைகள் எழுதிஉள்ளார்.இவரது படைப்புகளில் ஆறு படைப்புகள் திரைப்படங்களாகவும்,எண்ணற்ற படைப்புகள் தொலைக்காட்சி தொடர்களாகவும் வெளிவந்து வெற்றி கண்டுள்ளது.ஆனந்தவிகடனில் பொன்விழா சிறுகதைப்போட்டியில் முதல் பரிசும்,இதயம் பேசுகிறது இதழில் வாசன் சிறுகதைப்போட்டியில் இரண்டாம் பரிசு போன்று பல விருதுகள் பெற்றுள்ளார்.

அத்தனை சோகவாழ்க்கையிலும் எதிர்நீச்சல் போட்டு தன்னை அசாத்திய கம்பீரத்துடனும்,உயிர்ப்புடனும்,உற்சாகத்துடனும்,இளமையுடனும்,சர்வ அலங்காரத்துடனும்,தன்னை பின்னிப்பிணைந்த நோயின் தாக்கத்தை புறந்தள்ளிவிட்டு,வாழ்வில் எதிர்கொண்ட சோகங்களை பந்தாடிவிட்டு புன்னைகையுடன் இலக்கியப்பணி செய்த அனுராதா ரமணனின் மறைவு எழுத்துலகத்திற்கு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பு.


டிஸ்கி:
"பளிச் பெண்கள்" என்ற என் இடுகையில் அனுராதா ரமணன் பற்றி நான் எழுதிய சிறு குறிப்பு காண இங்கு கிளிக் பண்ணவும்.

எழுத்தாளர் அனுராதா ரமணன் அவர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இருக்கும் சில வலைத்தளங்களைக்காண கீழ் கண்ட தலைப்புகளில் கிளிக் செய்யவும்.

May 6, 2010

அபுதாபி- செட்டிநாடு உணவகம்

அபுதாபியில் eldorada cinema அடுத்து national cinema பின்புறம் அமையபெற்று இருக்கும் செட்டிநாடு ரெஸ்டாரெண்ட்டின் அழகிய உட்புறத்தோற்றம்.சுவையான இந்திய உணவு உண்டு மகிழ அருமையான ஒரு உணவகம்.
வசதியாக அமர்ந்து உணவு உண்ண விசாலமான இட அமைப்பு,அழகான உள் அலங்காரம்,கனிவான உபசரிப்பு,அபரிதமான சுவை,நியாயமான விலை,கண்ணைப்பறிக்கும் சுத்தம் அனைத்தும் ஒருங்கே பெற்ற தன்னிகரில்லாமல் விளங்கும் உணவகம்
ஆட்டுக்கால் சூப்..இந்தியாவில் உள்ள உணவகங்களில் கிடைக்கும் சுவையை பின்னுக்குத்தள்ளி விடும்.காராசாரமான சுவையான சூப்.பருகபருக திகட்டாது.
மின்னும் கிரில்ட் சிக்கன்.அருமையான இந்தியசுவைஉடன்,மெத்தென்ற கோழி இறைச்சியுடன் பதமாக மசாலா தடவிய கிரில்ட் சிக்கன்.சூடாக சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் இந்த ரெஸ்டாரெண்ட்டுக்கு போகத்தோன்றும்.
லேயர்,லேயராக வாய்க்குள் போட்டாலே கரைந்துவிடும் சுவைமிகு வீச்சுபரோட்டா.பதிவர் சந்திப்பு இனி அபுதாபியில் நடந்தால் தாரளமாக இங்கு இந்த ஐட்டங்கள் தவிர பிரியாணியும் சேர்த்து ஆர்டர் செய்துவிடலாம்.எத்தனை "மன்" பிரியாணி வேண்டுமோ கேட்கும் இடத்திற்கே கொண்டுவந்து டெலிவரி செய்து விடுவார்கள்.
கமகமக்கும் கார்லிக் நாண்.சைட் டிஷ்ஷுடன் உள்ளே தள்ளினால் போய்க்கொண்டே இருக்கும் அருமையான சுவை.
மணமணக்கும் பட்டர் நாண்.விதவித வடிவங்களில் சுவையுடன் இருக்கும்.
ஆஹா..இப்படி ஒரு சிக்கன்&எக் பிரைட் ரைஸ் நான் சாப்பிட்டதே இல்லை.அருமையான சுவை.மணக்க,மணக்க கண்களைப்பறிக்கும் வண்ணத்தில்,பார்த்தாலே நாவூரச்செய்துவிடும்.சாப்பிட்டதும் இல்லாமல் பார்சல் போட்டுக்கொண்டு வந்து வீட்டிலும் வைத்து சாப்பிடத்தோன்றும்.
சுவையான சிக்கன் டிக்கா."சுள்"என்ற சுவையுடன் எலுமிச்சைசாறு பிழிந்து சாப்பிட்டால் பிளேட் மளமளவென்று காலியாகிவிடும்.குழந்தைகள் கொத்திக்கொண்டு போய்விடுவார்கள்.கூட ஓரிரு பிளேட் சேர்த்து ஆர்டர் செய்யவேண்டும்.இந்த சிக்கன் டிக்கா விதவித பிளேவர்களில் தயாரிக்கின்றனர்.
சில்லிசிக்கன்.மணக்கமணக்க மசாலாவுடம்,கருவேப்பிலை,மல்லி,மிளகாய் எல்லாம் பதமாக போட்டு சுவை அள்ளுகின்றது.நாணுக்கு ஏற்ற அருமையான சைட் டிஷ்
ஹைதரபாதி சிக்கன்.கிரேவியைக்கூட மிச்சம் மீதி வைக்காமல் சாப்பிடத்தோன்றும் அளவு சுவை மிக்கது.இந்த உணவகத்தின் நிறுவனர் உணவு தயாரிப்பவர்கள் யார் யார் என்று அறிந்து சுவையான உணவு புது விதமாக தயாரித்து விட்டால் கூப்பிட்டு பாராட்டி,பரிசும் வழங்கி வாடிக்கையாளரின் நாவுக்கு சுவையாக விருந்து படைப்பதில் கில்லாடி.இதன் செய்முறையை கேட்டபொழுது "அதனை மட்டும் கேட்டுவிடாதீர்கள்"என்று உணவகத்தின் நிறுவனர் பதறிய பதறலில் அமைதியாகிவிட்டேன்.
மொறு,மொறு நெய் ரோஸ்ட்.கூடவே பலவித சட்னி சாம்பார்வகைகளுடன்.பசும்நெய் மணக்க அசல் நெய் ரோஸ்ட் என்றால் இதுதான்
நீளமான பேப்பர் ரோஸ்ட்.சுவையிலும்,அளவிலும் பெரியது.இதுவும் பலவித சட்னி,சாம்பாருடன் பறிமாறுகின்றார்கள்.அசைவத்தில் மட்டுமல்ல சைவத்திலும் எங்களுக்கு நிகரில்லை என்கின்றது இதன் பாரம்பரியமிக்க சுவை.
ஹைலைட்..வேறென்ன ?லஸ்ஸிதான்.அருமையான மாங்கோ லஸ்ஸி.தவிர மிண்ட் லஸ்ஸி சுவையே அலாதியானது.தரமான பொருட்களைதேர்ந்தெடுத்து,கைதேர்ந்த் உணவுக்கலை நிபுணர்களை வைத்து தரமிகு,சுவை மிகு உணவு படைக்கின்றனர் செட்டிநாடு ரெஸ்டாரெண்ட் நிறுவனத்தினர்.இலவச டோர்டெலிவரிக்கு கீழ்க்கண்ட தொலைபேசிஎண்களில் தொடர்பு கொள்ளலாம்.
02-6777699
02-6780002

டிஸ்கி:யாம் பெற்ற சுவை அனைவரும் பெறுக என்ற ஒரே நோக்கோடு போடப்பட்டது இவ்விடுகை

May 4, 2010

தித்திக்குதே...


துபையில் பார்க்கில் நடைபெற்ற பெண்பதிவர் சந்திப்பின் பொழுது மலிக்கா சமைத்து எடுத்து வந்த நூடுல்ஸ் ஸ்டஃப்ட் தோசா..மகனுக்கு காய்ச்சலாக இருந்தும் கைவண்ணத்தை காட்டவேண்டி கொண்டு வந்தது இது.தோசையம்மா தோசை..யாரு சுட்ட தோசை..மலிக்கா சுட்ட தோசை..மலிக்கா..டேஸ்ட் ரொம்பவே நன்றாக இருந்தது.சீக்கிரம் ரெசிப்பி போடுங்கள்.
ஜலி தங்கச்சி ஆசை ஆசையாக அவித்துக்கொண்டு வந்த அவித்த வேர்கடலை.சூப்பராக கடலை போடுவதில் வல்லவரான,நல்லவரான என் ரங்க்ஸுக்கு ரொம்ப பிடித்த ஐட்டம்.அதனாலே எனக்கும் ரொம்ப பிடிக்கும்.இது உங்களுக்கு எப்படி தெரியும் ஜலி??
வாவ்..முர்தபா...முர்தபா என்று ஈஸியா சொல்லி விடலாம்.ஆனால் லேசுபட்ட விஷயம் இல்லேங்க.ஏகப்பட்ட வேலையும் நேரமும் பிடிக்கும் இந்த முர்தபா செய்ய.ஆஃபீஸ்.வீடு என்று அலைந்துகொண்டிருக்கும் ஜலி அத்தனை பிஸியிலும் அழகாக சமைத்துக்கொண்டு வந்து "சாப்பிடுங்க..சாப்பிடுங்க.."என்று உபசரித்துக்கொண்டே இருந்தே அழகே தனிதான்
ஆஆ...மொறு மொறு வடை..ஆனால் சூடாக அலுமினியம் ஃபாயிலில் சுற்றப்பட்டதால் மொறுமொறுப்பு குறைந்தாலும் அதில் ஜலியின் அன்பும் ,கள்ளமில்லா சிரிப்பும் நிறைந்து இருந்தது.ஜலீலா&மலிக்கா சந்திப்பின் பொழுது கொழுகட்டை முழுவதையும் காலி செய்துவிட்டு பாக்ஸில் ஒட்டிக்கொண்டிருந்ததை போட்டொ எடுத்துப்போட்டதுபோல் இதுவும் ஆகி விடக்கூடாது என்று முன்ஜாக்கிரதை முத்தண்ணாவாக அவசரஅவசரமாக முதல் வடை வாய்க்குள் அகப்படுமுன் கிளிக்கியது.கேமராவைத்தூக்கியதும் மற்ற பதிவர்களும் தத்தம் கேமராவை தூக்கிவிட்டார்கள்
ஹை..நான் வென்ற பரிசு.நம்ம ஸ்நேகிதி ஆசியா மறக்காமல் தந்துவிட்டார்..சூப்பரான அல்வா.மைக்ரோவேவில் சூடு படுத்தி சுடசுட நெய்யொழுக பறிமாறினார்.கூடவே கோதுமை மாவு பணியாரத்தையும் ஊட்டிவிடாத குறையாக திணித்து விட்டார்.ஜெய்லானி புகை விடக்கூடாது.சார்ஜாவில் அடிக்கிற வெயிலுக்கு தாங்காது.
ஆசியா கொடுத்த அற்புதமான விருந்து.அந்த பெரிய மீன் சட்டியில் செய்த மீன் குழம்பு மட்டும் மிஸ்ஸிங்.திகட்டதிகட்ட ஆஸியா உபசரித்த விதம்..ம்ம்,..அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ளவேண்டும்.
ஆஸியா கொடுத்த அன்பளிப்பு.ஆசியா சீக்கிரம் எங்கள் வீட்டிற்கும் வாருங்கள்.இதே கப்பில் சூடாக உங்களைப்போல் ஒரு சுலைமானி டீ போட்டு தருகிறேன்.(ஸ்டார்ட்டர்தான்)
ஜலீலா கொடுத்த அழகு கைக்கடிகாரம்.நேரம் தவறாமல் இருங்கக்கா என்று சொல்லுவதைப்போல் இருந்தது.ஜலீலாவின் சிரிப்பைப்போல் மினுமினுக்கின்றது.சில்வர்,கோல்ட் கலரிலான இரண்டு கைக்கடிகாரங்களைக்காட்டி எதுவேண்டுமோ செலக்ட் செய்துகொள்ளுங்கள் என்றார்.அப்ப எனக்கும்,ஜலீலாவுக்கும் ஒரே மாதிரி வாட்ச் இருக்கு.ஜலி நீங்க இந்தியா வர்ரப்போ ஒரே மாதிரியான கடிகாரங்களை அணிந்துகொண்டு ஸ்கைவாக்கில் வலம்வருவோம்.
எனக்கு பிடித்த இளநீலக்கலர் சேலை.மனோ அக்கா வீட்டிற்கு வந்திருந்தபொழுது கொடுத்தது.
மலிக்கா எனக்கே எனக்கு ஸ்பெஷலாக தந்தது.மலிக்கா நீங்க தந்த நேரம் துபையில் இருந்து திரும்பும் பொழுது நிறைய திர்ஹம் மிச்சம் பிடித்து இந்த பர்சில் பத்திரப்படுத்தி பத்திரமாக இந்தியா கொண்டுவந்து பத்திரமாக கப்போர்டில் வைத்து பத்திரமாக பூட்டிவைத்து விட்டேன்.


May 3, 2010

அந்த நாள் இனிய நாள்



எனது அமீரகவிஜயத்தின் பொழுது இத்தனை சந்தோஷங்கள் கிட்டும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை,என் உற்றவர்களின்,இரத்தபந்தங்களின் அன்பு மழையில் ந‌னைந்த நான் என் அன்பு சக வலைப்பூ சகோதரிகளின் அன்புவெள்ளத்திலும் நனைவேன் என்று நினைக்கவில்லை.ஏதோ தமது வீட்டு விஷேஷத்திற்கு அழைத்து நான் வந்து இருந்தது போல் அனைவரும் கைபேசியில் அழைத்து அன்பை வெளிப்படுத்தி திக்குமுக்காட வைத்துவிட்டனர்.

விமானநிலையத்தில் இருந்து வந்ததில் இருந்து மீண்டும் விமானநிலையம் செல்லும் வரை என் செல்பேசிக்கு ஓய்வே இல்லை.அன்பு மனோ அக்காவின் வருகை ,நீண்ட நாள் ஸ்நேகிதிபோல் எளிமையுடன் பழகி பொழுதை மகிழ்ச்சிகரமாக்கினார்.ஜலீலா என் வருகையால் சிறு குழந்தையாவே மாறி என்னை பரவசப்படுத்துவிட்டார்.,தினமும் காலையிலும்,மதியத்திலும்,இரவிலும் போன் செய்து அளவளாவும் நேசம்,தங்கை ஹுசைனம்மா பதிவர் சந்திப்பு நிகழ்ந்தே தீரவேண்டும் என்று உத்வேகத்துடன் செயல் பட்டு நிகழவும் வைத்து விட்டார்.

குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று குறிப்பிட்ட பகுதிக்கு நெருங்கி போன் செய்தால் திரும்பி பாருங்கள் என்று சொன்ன திக்கில் திரும்பினால் அங்கு மூன்று பேர்.ஜலீலா,ஹுசைனம்மா,மலிக்கா...பார்த்ததுமே பேச்சே வராமல் பரவசத்தில் மூழ்கிவிட்டோம்.

ஜலீலாவை ஏற்கனவே புகைப்படத்தின் மூலம் பார்த்து இருக்கிறேன்.ஹுசைனம்மா,மலிக்காவைப்பார்த்து இருக்காததால் அவர்களை என்னால் யூகிக்க இயலவில்லை.ஒரு வழியாக அவர்தான் ஹுசைனம்மா என்று கண்டுபிடித்து நான் சொன்னதும் எங்களிடம் இருந்து வெளிப்பட்ட சிரிப்பொலி அருகில் விற்பனைக்காக அடுக்கிவைக்கப்பட்டு இருந்த மலர் கொத்துகளிடையே புகை வருவதைப்போல் உணர்ந்தேன்.

ஏற்கனவே திட்டமிட்டபடி பார்க்கிற்கு அழைத்து சென்றனர்.அங்கு ஒரு இன்ப அதிர்ச்சி.நான் சற்றும் எதிர்பாராத தோழி ஆசியா.அத்தனை தூரத்தில் இருந்து வருவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.என்னைகண்டதும் அவரும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போனார்.இன்முகத்துடன் "ஸாதிகா" என்று அணைத்து தன் அன்பை வெளிப்படுத்தினார்.அவரின் அன்பயும்,மென்மையான ஸ்நேகிதத்தையும் மின்னஞ்சல் மூலமாக அறிந்திருந்த நான் அன்று நேரிலும் பார்த்த்து பரவசப்பட்டேன்.

சாதரணமாகவே ஸாதிகா அக்கா,ஸாதிகா அக்கா என்று என்னையே மெயிலில் சுற்றிவராத குறையாக வரும் என் தங்கை ஜலீலா நான் அமீரகம் வரப்போவதை அறிந்ததுமே அவர் கொண்ட உற்சாகம் குழந்தைபருவத்தை நினைவு கொள்ள வைத்தது.அவரின் தொடர் அலுவலுக்கிடையே அடிக்கடி போன் செய்து அன்பை வெளிப்படுத்தியவர் நேரில் பார்த்தும் ...சொல்லவும் வேண்டுமோ...?

டிரங்கு பொட்டி ஹுசைனம்மா..பதிவில் பட்டாசாக இருந்தாலும் நேரில் மத்தாப்பூவாக இருந்தார்.அக்கா..அக்கா..என்று பாசத்தைக்குழைத்து பழகியவிதம் என்னை பரவசப்படுத்தியது."பதிவிலும்,நேரிலும் பார்ப்பதற்கு வித்தியாசமாக உள்ளது"என்று என் கணிப்பை சொன்னால் "நீங்களும் அப்படித்தான் இருக்கீங்க"என்றார்.உண்மைதான்.அன்று அந்த பார்க் பட்ட பாடு..."கெட் டு கெதரா?" என்று வேடிக்கைப்பார்த்த ஒருசிலரை புறந்தள்ளிவிட்டு எங்கள் உற்சாகத்தை குறைத்துக்கொள்ளாமலே இருந்தோம்.


மலிக்காவின் கலகலப்பான ,நகைச்சுவைமிளிரும் பேச்சு.அந்த இடத்திற்கு மேலும் மெருகூட்டியதுஜலீலாவும் மலிக்காவும் சமைத்துக்கொண்டு வந்திருந்த பதார்த்தங்களை சுறுசுறுப்பாக பறிமாறி அந்த இடத்துக்கு களைக்கட்டிக்கொண்டுஇருந்தார்.நெடுநாள் பழகியதுபோல் சிரிக்கவைத்து பேசுவதில் வல்லவர் என்பதை புரிந்துகொண்டேன்.எங்கு நகைசுவைமிக்க உரையாடல் இருந்தாலும் அந்த இடம் என்னையும் கவர்ந்துவிடும்.அந்த விஷயத்தில் மலிக்காவின் பேச்சு வழக்கு என்னை ரொம்பவுமே கட்டிப்போட்டு விட்டது.

அத்தனை பிசியான நேரத்திலும் மனோ அக்கா கலந்துகொண்டது மகிழ்ச்சியாக இருந்தது.வழக்கம் போல் அமைதியும்,மென்மையுமாக அனைவரது கொட்டத்தையும் ஆழ்ந்து ரசிக்கத்துவங்கியது மட்டுமில்லாமல் அந்த கலகலப்பில் கலந்துகொண்டது தோழியர் அனைவருக்கும் மகிழ்ச்சியை தந்தது.

அநன்யா மகாதேவன்..ஆஹா..எனது கலகலப்பிற்கு ஏற்ற அருமையான இணை.அவரை சுற்றி எப்பொழுதும் சரவெடி ஒலித்துக்கொண்டே இருக்கும்.அவரது பதிவைப்போலவே.பார்த்தமாத்திரத்தில் பிடித்துப்போய் நிறைய பேசிக்கொண்டிருந்தேன்.

எங்களிடையே இளையவர் பிரியாணி நாஸியா.அவர் பார்க்கினுள் நுழைந்ததுமே "ஆ..பிரியாணி"என்ற ஆராவாரமாக கூச்சல்தான் அவரை வரவேற்றது.

மலர்.பெமிலியரான முகம்,குரல்.எங்கோ பார்த்து போல் இருந்தது.பிறகுதான் தெரிந்தது.என் ஆருயிர் தோழியான ஒரு பத்திகையாளர் இவருக்கு உறவு என்று.இஸ்லாமிய பேச்சு வழக்கைப்பற்றி அநன்யா இவரிடமும்,பிரமணாள் பேச்சு வழக்கைப்பற்றி மலர் அநன்யாவிடம் கேட்டு இருவரும் விளக்கம் சொன்னதை சுவாரஸ்யத்துடன் கேட்டுக்கொண்டிருந்தேன்.

இறுதிவரை இருந்து என்னையும் என் தங்கையையும் வழியனுப்பிவைத்த ஜலீலா,ஹுசைனம்மாவின் அன்பு மெய்சிலிர்க்கவைத்து.எங்களை அழைத்து வந்த எங்கள் வீட்டு ஆண்களும் பொறுமை காத்து ஆங்காங்கே அமர்ந்திருத்தும்,நின்றுகொண்டிருந்தும்,காரில் அமர்ந்தபடி தூங்கிக்கொண்டும் ,அருகில் இருந்த மால்களில் சுற்றிக்கொண்டும் எங்கள் நட்புக்கு கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டு பொறுமை காத்தது எங்களுக்கு பெருமையாக இருந்தது.

மறுநாள் அல் ஐன் சென்ற பொழுது ஸ்நேகிதி ஆசியா விடாப்பிடியாக தொலைபேசியில் தொடர்ந்து அரைமணி நேரத்திற்கு ஒரு முறை அழைத்து எங்களை அவரது இல்லத்திற்கு காந்தமாக அழை(இழு)த்துவிட்டார்.

ஆசியாவின் பரந்த மனதினைப்போல் அவரது வில்லாவும் பரந்து விரிந்து இருந்தது அழக்காக இருந்தது.அமைதியான அந்த சூழ்நிலையை விட்டும்,ஆசியாவின் அன்புபிடியினை விட்டு அகலவே மனமில்லை. அவர் மட்டுமல்லாமல் அவர் குடும்பமே உபசரித்து எங்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி விட்டது.நாங்கள் கிளம்ப ஆயத்தமாகி விட்டாலும் எங்கள் வீட்டு ஆண்கள் ஆசியாவின் கணவருடன் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தார்கள்.

மறக்காமல் ஆசியா வைத்த போட்டியில் நான் வென்று அவர் பரிசாக அறிவித்த திருநெல் வேலி அல்வாவையும் மறக்காமல் தந்து விட்டார்.இதிலிருந்து ஆசியா வாக்கு மாறாதவர் என்பதையும் புரிந்து கொண்டேன்.

அய்மான் சங்கத்தலைவர் சகோதரர் ஷாகுல்ஹமீது அவர்கள் குடும்பத்தினரின் உபசரிப்பு,அபுதாபி ஷேக் ஜைத் பள்ளி வளாகத்தில் எதிர்பாராவிதமாக சகபதிவர் சோனகனின் சந்திப்பு,நான் துபை வந்தது பற்றி சகபதிவர் மூலமாக அறிந்து சகோதரர் கிளியனூர் இஸ்மத் அவர்களின் கைபேசி மூலமாக அழைத்து தன் குடும்பத்தினரை வந்து பார்த்து செல்லுமாறு அழைப்பு,அறுசுவை இணையதளஸ்நேகிதிகள்அன்புள்ளங்கள் தளிகா மற்றும் ரேணுகாவின் தொலைபேசி அழைப்பு ,என் இரத்தபந்தங்களின் மறக்கமுடியாத உபசாரங்கள் அனைத்தையும் அசைப்போட்டபடி விமானத்தில் ஏறி அமர்ந்தேன்.