March 23, 2013

அன்னதானம் அன்னபூரணி


அன்னபூரணியை அவள் வசிக்கும் ஊரில் அறியாதவர்களே இருக்க முடியாது.அனைவரும் அறிந்த அந்த அன்னபூரணி பெரிய ஜமீன் வம்சமோ,அரசியல் குடும்பத்தை சேர்ந்தவளோ இன்ன பிறவோ என்று கற்பனை பண்ணி விடாதீர்கள்.

கஞ்சிப்போடாத சுங்குடி புடவையும்,கழுத்தில் முருக்கு செயினும்,கூடவே கருகமணியும்,மூக்கில் மூன்றுகல் வைர பேசரியும்,வீட்டுக்காரர் கல்யாணதப்போ போட்ட எண்ணெய் இறங்கினாலும் பள பளப்பு குறையாத  ஏழுகல் வைத்த வைரக்கம்மலுமாக ,வைட் அண்ட் பிளேக் ஆகி விட்ட தலையில் பாரசூட் எண்ணெயை சதைக்க தடவி,ஒரு முடிகூட சிலும்பிக்கொள்ளாமல் வழ வழவென தலைசீவி,கொண்டையில் மணக்கும் ஜாதி மல்லி வாசனையை மீறி மூக்கைத்துளைக்கும் மசாலாவின் கதம்ப மணமும்,பார்க்கும் நேரமெல்லாம் அவளது ட்ரேட் மார்க் கரண்டியுமாக காணப்படும் சாதாரண மனுஷிதான்.

அன்னம் என்றால் உணவு,பூரணம் என்றால் முழுமை பெற்றவள் என்ற அர்த்தம் காணும் அன்னபூரணி அவள் பெயருக்கேற்றார் போல் அன்னம் இட்ட கை என்பது அவளுக்கே பொருந்தும்.விருந்தோம்பலும்,உபசரிப்பும் அவளுக்கு கைவந்த கலை.

நான்கு ஆண் குழந்தைக்கு பிறகு தவமா தவம் இருந்து ஐந்தாவதாக பிறந்தவள்தான் இந்த அன்னபூரணி.அவள் பிறந்த நேரம் அவள் வீட்டில் பாலும் நெய்யுமாக ஓடிற்று எனலாம்.ஆசை ஆசையாக இந்த பெயரை பேத்திக்கு வைத்து “எல்லோரும் உன் கையில் இருந்து எல்லாமும் பெற வேண்டும்.உன் கைகள் கொடுக்கும் கைகளாக இருக்க வேண்டும்”என்று மனதார வாழ்த்தி குட்டி பேத்தியை உச்சி முகர்ந்த நேரம் அன்னபூரணியை பொருத்த வரை நல்ல நேரம்தான்.எல்லோருக்கும் கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறாள்.

அண்ணன் நால்வருக்கும்,அவளுக்குமாக சேர்த்து இலையில் சாதம் பறிமாறும் பொழுது அவளுக்காக இலையில் போடப்படும் அப்பளம் நான்காக உடைக்க பட்டு அண்ணன்மார்கள் இலையில் அமர்ந்து இருக்கும்.விஷேஷ வீடுகளுக்கு சென்றால் இலையில் பறிமாறப்படும் ஜாங்கிரி,மைசூர் பாக் போன்ற இனிப்பை கைகுட்டையில் சுருட்டி எடுத்து வந்து அண்ணன்களுக்கு தந்து மகிழும் பொழுது ஆரம்பம் ஆனது..இதோ  பேரன் பேத்தி எல்லாம் எடுத்து முடித்தும் அந்த சுபாவம் இன்னும் அப்படியே அவளிடம் உள்ளது.

அம்மா தரும் பிஸ்கட்டில் இரண்டினை சாப்பிடாமல் வைத்து இருந்து தெருவில் இவள் தலையைக்கண்டு விட்டாலே வாலை ஆட்டும் சொறி நாய்க்கு பிஸ்கட்டை போட்டு திருப்தி படுவாள்.

அம்மா ஆசை ஆசையாக பகலுணவுக்கு கட்டித்தரும் எலுமிச்சை சாதம் தயிர் சாதம்,கருவேப்பிலை சாதம் அனைத்தும் பள்ளி உணவு இடைவேளையின் போது இவளது வாயினுள் ஒரு கவளமாவது போய் இருக்குமா என்பது சந்தேகம்தான்.

“அம்புஜம்,நெறய வேர்க்கடலை போட்டு அம்மா புளியோதரை செய்து தந்தா.இந்தா சாப்பிடு.கல்பு,உனக்குத்தான் தயிர்சாதம் பிடிக்குமே.நெகு நெகுன்னு கெட்டி தயிர் விட்டு கிளறி இருக்கு தயிர்சாதம் தொட்டுக்க கூடவே ஆவக்காய் ஊறுகாய்.எடுத்துக்கோ.ஐயோ..நம்ம ருக்குவோட அம்மாவுக்கு நாலு நாளா ஜுரம்.அவள் சாப்பாடே எடுத்து வரலே.இன்னிக்கு நான் அவளுக்கு கொடுத்துடப்போறேன்.”இப்படி வாரி வழங்கி விட்டு மூலையில் குவித்த மண் மீது இருக்கும் மண் கூஜாவின் தலை மேல் இருக்கும் அலுமினிய டம்ளரை எடுத்து கூஜாவினுள் இருக்கும் நீரை மொண்டு வயிறு ரொம்ப குடித்து விடுவாள்.அவள் தான் அன்னபூரணி.

இவளது இந்த தயாள குணத்துக்கு வீட்டினர் என்றுமே முட்டுக்கட்டை போட்டதில்லை.ஏனெனில் முன்னர் சொன்னது போல அவள் வீட்டில் பாலும் நெய்யுமாக ஓடிய தருணம்.திருமணம் ஆகி புக்ககம் வந்ததுதான் வசமாக மாட்டிக்கொண்டாள்.

“கடங்காரி,இப்படி ஆக்கித்தட்டியே எம்புள்ளையை கடங்காரன் ஆக்கி விடுவாள்”

“ஆமாமாம்..வண்டி வண்டியாக அப்பன் வீட்டில் இருந்து அரிசியும் பருப்புமாக வருது பாரு.பெரீஈஈய ராஜபரம்பரை ஆட்டம்..ம்கும்..”

“ஏண்டா..மகாதேவா...இப்படி இடிச்சு வச்ச புளியாட்டம் தேமேன்னு இருக்கியே.ஒம்பொண்டாட்டி கொட்டத்தை சித்த அடக்கப்படாதா?”

“ஆத்தாடி..கிள்ளிக்கொடுத்தா அள்ளிட்டு வரும்ன்னு இப்படி ஆக்கி கொட்டுறியா.என்ன அநியாயமா இருக்கு.ஏண்டி இப்படி புத்தி போறது”இப்படி மண்டையைப்போடும் வரை அன்னபூரணி வடிக்கும் சுடுசாதம் கணக்காக சூடாக வந்து விழும் மாமியாரின் வாயில் இருந்து நெருப்புத்துண்டங்கள்.

சும்மா சொல்லக்கூடாது.கைபிடித்த மகாதேவன் இது நாள் வரை அப்படிக்கொடு,இப்படி கொடுக்காதே என்று ஒரு வார்த்தை கூறியதில்லை.

எதிர் வீட்டு சரசு மருமகள் குழந்தை பெற்று இருக்கா.பத்திய சாப்பாடு சமைத்து வைத்து இருக்கேன்.போய் கொடுத்துட்டு வந்துடுறேன்.”முகத்தில் வழியும் வியர்வையை முந்தானையால் துடைத்த படி கணவரிடம் சொன்னால் போதும்”சித்த பொறுடி.இதோ ஆஃபீஸுக்கு கிளம்பிவிடுவேன்.காரிலேயே டிராப் பண்ணிடுறேன்.”மருத்துவமனை வாசலில் இறக்கி விட்டு “ஜாக்கிரதையா வீடு போய் சேரு”என்று ஆட்டோவுக்கும் சில்லரை கொடுப்பவர்.

“வயிற்றுக்கு மட்டும் வஞ்சனை பண்ணக்கூடாது.ஏன் ஜுரம் வந்தவளாட்டம் ரொம்ப டல்லடிக்குது உன் குரல். .சூடா மிளகு ரசம் வைத்து சுள்ளுன்னு ஒரு தொகையல் பண்ணி அப்பளத்தை நொறுக்கிப்போட்டு ஜம்முன்னு சாப்பிடு.என்னது வீட்டுக்கு வர்ரயா..வா வா..பேஷா பண்ணிப்போடுறேன்.”

எதிர் முனையின் பதிலை எதிர் பார்க்காமல் ரிஸீவரை வைத்துவிட்டு அவசர அவசரமாக அடுக்களைக்குள் நுழைந்து விடுவாள் மிளகு ரசம் வைக்க.

வீட்டுக்கு வரும் பால்க்காரி,கீரைக்காரி ஒருத்தரையும் விடுவதில்லை.அவர்களும் வயிறு நிறைய இவள் கையால் சாப்பிட்டு விட்டு ”தீர்க்காயுஸாக இரும்மா”என்று வாழ்த்தி விட்டு செல்லும் பொழுது அன்னபூரணியின் முகத்தில் ஒரு அரைசிரிப்பைத்தான் காண முடியும்.

தபால்காரர் தபாலை கொண்டு வந்து தந்து விட்டால் போதும்”என்னப்பா கதிர்வேலு..கொளுத்தற சித்திரை வெயிலில் எப்படித்தான் தெருத்தெருவா சுத்தி அலையறியோ.சித்த பொறு.ஊரில் இருந்து செவ்விளநீர் வந்து இருக்கு.உடைச்சி தர்ரேன்.குடிச்சுட்டு போ.தெம்பா அலைய முடியும்”

“வீட்டுக்கு எலெக்டிரிக்கல் வேலை செய்ய வரும் பையனிடம்”ராமு..அப்பா என்ன செய்றார்.சுகர் எல்லாம் கட்டுக்குள் இருக்கா?என்னது உன் அம்மாவுக்கு மலேரியாவா?அப்ப மதியத்துக்கு சாப்பாடு எடுத்து வரலியா.இரு..சார் சாப்பிட வர்ரசே உனக்கும் ஒரு தட்டு போட்டுறேன்.”அன்னபூரணி அம்மாவீட்டுக்கு வேலை செய்யப்போகிறோம் என்றே ராமு பகலுணவு எடுத்து வராமல் இருந்திருக்கும் தந்திரம் இவளுக்கு புரியாது.புரிந்து கொள்ளவும் விரும்பவும் மாட்டாள்.

கணவனும் மனைவியுமென இரண்டே பேர்தான்.இருந்தாலும் தினம் சட்டி சாதமும் சாம்பாரும் கூட்டும் குழம்பும் அன்னபூரணியின் அடுக்களை என்றும் அமர்க்களப்பட்டுக்கொண்டே இருக்கும்.

இப்படியாகப்பட்ட அன்னபூரணியின் கணவர் மகாதேவன் திடுமென நெஞ்சைப்பிடித்துக்கொண்டு ஊஞ்சலில் சாய்ந்துவிட்டார்.பதறிப்போன அன்னபூரணி சாதுர்யமாக ஆம்புலன்சை வரவழைத்து பிரபல மருத்துவமனைக்கு அழைத்து சென்று விட்டாள்.விஷயம் கேள்விப்பட்டு அறிந்தவர் அத்தனை பேரும் பதறி அடித்து மருத்துவமனைக்கு வர அட்மிட் ஆகி இருப்பவர் பெரிய வி ஐ பி யா என்று பலர் கேட்டும் விட்டனர்.

பரிசோதனை செய்த மருத்துவர் மைல்ட் அட்டாக்.போதுமான சிகிச்சை கொடுக்க வேண்டும்.இன்னும் இரண்டு நாள் கட்டத்துக்கு தங்கி இருந்து சிகிச்சை பெற வேண்டும்”என்று கூறி விட்டனர்.

கணவருக்கு அருகில் இருந்து பணிவிடை செய்து கலங்கிய மனதை தேறுதல் படுத்தி மருத்துவமனையில் வளைய வந்தாள்.

“மகாதேவன் சார்.பிரஷர் சுகர் இப்படி ஒன்றுமே இல்லையே.எப்படி இப்படி..இப்ப எப்படி இருக்கீங்க?”ஆஃபீஸில் வேலை பார்க்கும் நண்பரின் குரல் கேட்டு விழித்தவர் “வாங்க ராஜாமணி சார்.இறைவன் புண்ணியத்தில் பிழைத்து எழுந்துவிட்டென்.எல்லாவற்றுக்கும் காரணம் இறைவன் அருள் முதல் காரணமாக இருந்தாலும் என் மனைவியின் தயாள குணமும் அவள் தாலி பாக்கியத்தை நீடிக்க வைத்து விட்டது."சிரிப்பு பொங்க மகாதேவனின் வாயில் இருந்து வந்த வார்த்தைகள் கூட அருகில் இருந்த அன்னபூரணியை ஒன்றும் செய்து விடவில்லை.

“வாங்க அண்ணே.செளக்யமா?இந்த அளவுக்கு இவரை காப்பற்றித்தந்த அந்த இறைவனைத்தான் புகழ வேண்டும்.வேகாத வெயிலில் டூ வீலரில் வந்து இருக்கீங்களே கேண்டீனில் ஜூஸுக்கு சொல்லி இருக்கேன் .சாப்பிடுட்டு போங்க”

“அட..அதெல்லாம் இப்ப எதுக்குமா”

“பரவா இல்லை அண்ணே..ராஜாமணி அண்ணே சின்ன உபகாரம் பண்ணவேணும்.ஒரு அரை மணி நேரம் இருக்கீங்களா”

“அதுக்கென்னம்மா..இன்னிக்கு லீவுதானே தாராளமா இருக்கேன்”

“என்னங்க..வீட்டுக்கு போய் உங்களுக்கு கஞ்சியும் துகையலும் செய்து எடுத்துட்டு வர்ரேன்.கூடவே பக்கத்து வார்டு பிரம்மச்சாரி பையன் பைக் ஆக்ஸிடெண்டில் காலை முறித்துட்டு படுக்கையில் இருக்கான்.கேண்டீன் சாப்பாடு சாப்பிட்டு நாக்கு செத்து விட்டது என்று நர்ஸிடம் சொல்லிட்டு இருந்தான்,பாவம்.வயசுப்பையன்.நாக்குக்கு ருசியா கொஞ்சம் வத்தக்குழம்பும்,பீன்ஸ் பொரியலும் பண்ணி சித்த நேரத்தில் சாதமும் வடிச்சு எடுத்து வந்துடுவேன்.ராஜாமணி அண்ணே..நீங்களும் இங்கிருந்து மந்தவெளி வரை வெயிலில் டூவீலரை ஓட்டிட்டு போகணும்.கூடவே உங்களுக்கும் சேர்த்து ஒரு டிபன் பாக்சில் எடுத்துட்டு வர நாழி ஆகாது.சாப்பிட்டுட்டு மொள்ளமா போலாம்.தோ வந்துடுறேன்..”அவசரமாக ஜோல்னாபையை தோளில் மாட்டிகொண்டு கிளம்பிய அன்னபூரணியை பிரமிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார் ராஜாமணி.

March 22, 2013

ருகா ஜி எஃப் சிதிருப்தியாக  சாப்பிடவும்,பட்ஜட் எகிறாமல் இருக்கும் படியான  நான்வெஜ் பாஸ்ட் புட் செல்ல வேண்டுமா?கண்ணை மூடிக்கொண்டு நந்தனம் மேற்கு சி ஐ டி நகரில் உள்ள ருகா ஜி எஃப் சி ரெஸ்டாரெண்டுக்கு செல்லலாம்.

சுவை,தரம்,சுத்தம் அனைத்துக்குமே பாஸ் மார்க் போடலாம்.பிராஸ்டட் சிக்கன்  மற்ற ரெஸ்டாரெண்டுகளில்  பிரை செய்து வைத்து இருப்பதை கொடுப்பார்கள்.ஆனால் இங்கோ ஆர்டர் வாங்கிய பின்னரே பிரை பண்ணவே ஆரம்பிக்கின்றனர்.பிளேட் டேபிளுக்கு வந்ததும் சூடு ஆறுவதற்காக கொஞ்சம் காத்திருக்க வேண்டும்.இதுவே இந்த ரெஸ்டாரெண்டுக்கு பிளஸ் பாயிண்ட்.

சிக்கன் வகைகள்,ரைஸ் வகைகள்,சாலட் வகைகள்,ரோல்ஸ்,பர்கர்,பிரன்ஞ் பிரை,சாண்ட்விச்வகைகள்,பிரஷ் ஜூஸ்,புரூட் சாலட்,ஐஸ் க்ரீம்,மில்க் ஷேக் வகைகள் என்று இருந்தது போக இப்பொழுது சாட் ஐட்டங்களும் அறிமுகப்படுத்தி விட்டார்கள்.

நிறைய காம்போ அறிமுகப்படுத்தி இருக்கின்றனர்.நம்  வசதி,டேஸ்டுக்கு ஏற்ப சாப்பிடலாம்.சாலட் வகைகள் க்ரீமியாக யம்மியாக உள்ளது.

திங்கள் முதல் வெள்ளி வரை பகல் 12 மணி முதல் 3 மணி வரை ஹாப்பி அவர்ஸ் என்று 20 சதவிகிதம் விலை குறைப்பு செய்து இருக்கின்றனர்.

சிக்கன் வகைகளில் நக்கட்ஸ்,ஸ்மைலீஸ்,பாப்கார்ன் என்று குழந்தைகளை ஈர்க்கும் மெனுவும் உண்டு.

ஸ்னாக்பாக் என்ற காம்போவில் இரண்டு பீஸ் பிராஸ்டட் சிக்கன்,பிரஷ் ஆக சூடாக சிறிய பன்,சாஸ்,கோக் அல்லது லெமன் மிண்ட் 135 ரூபாயில் கிடைக்கின்றது.இதுவே ஹாப்பி அவர்ஸில் சென்றால் வெறும் 110 ரூபாய்க்கு அருமையான லஞ்ச் முடிந்து விடும்.

மயோனைஸில் டொமட்டோ கெச்சப் கலந்து செய்த ஒரு வித சாஸை ஜி எஃப் சி ஸ்பெஷல் சாஸ் என்று தருகின்றனர்.வித்தியாசமான டேஸ்ட்.

குறை என்னவென்றால் காம்போவாக ஆர்டர் பண்ணினால் அவர்கள் குறிப்பிட்டுள்ள ஐட்டங்களில் ஓரிரண்டை தர மறந்து விடுகின்றனர்.பிரன்ஞ் பிரை வரவில்லை,ஸ்பெஷல் சாஸ் வரவில்லை என்று கேட்டு கேட்டு வாங்க வேண்டிஉள்ளது.சர்வீஸை இன்னும் சரியாக செய்தால் நன்றாக இருக்கும்.

உங்கள் பார்வைக்காக இதோ மெனு.இது ஒரு காம்போ.சிக்கன் பீஸ்,பர்கர்,பிரன்ஞ் பிரஸ்,கோக் என்று தருகின்றனர்.

க்ரீமியாக யம்மியாக இருக்கும் ஹவாலியன் சாலட்.நாங்கள் ரெகுலர் கஸ்டமர் என்பதால் அரை பிளேட் பிரீ.பணம் கொடுத்து வாங்கினால் முழு பிளேட் தான் தருவார்கள்.நான் பதிவில் குறிப்பிட்ட காம்போ.ஸ்னாக் பாக்


ஜில்லென்ற லெமன் மிண்ட்


கலர் கலராக மின்னும் சுவையான பலூடா.

அட்ரஸ்:18/19 கிழக்குசாலை,ஆல்ஃபா பள்ளி அருகில்,மேற்கு சி ஐ டி நகர்,நந்தனம்,சென்னை - 35

March 3, 2013

பீனிக்ஸ் மால்

பீனிக்ஸ் பறவை நாமோ,நம் முன்னோர்களோ பார்த்திராத ஒரு கற்பனைப்பறவை.உலக இலக்கியங்கள் அனைத்திலும் ஒருமித்து கூறப்பட்டுவரும் ஒரு அற்புதப்பறவை.

தமிழ் இலக்கியங்களில் இதனை ஊழிக்கால பறவை என்று வர்ணிக்கப்படுகிறது.விடாமுயற்சி,வெற்றிகிட்டும் வரை ஓயாது உழைப்பவர்களின் இலட்சியத்தை பீனிக்ஸ் பறவையுடன் ஒப்பிடுவார்கள்.அரசியல் தலைவரை பீனிக்ஸ் பறவையுடன் ஒப்பிடுவது நம்மூர் தொண்டர்களுக்கு  எழுதபடாத சட்டம்.

அப்பேற்பட்ட சாகாவரம் பெற்ற உலகம் முழுதும் பேசப்படும் ஒரு அற்புதப் பறைவையின் பெயரையும்,அப்பறவையின் உருவத்தை சின்னமாக வைத்தும் புதிதாக சென்னையில் இன்னொரு மெகா மால்  Phoenix Market City என்ற பெயரில் கடந்த மாதம் வேளச்சேரியில் திறக்கப்பட்டுள்ளது.

மும்பையை சேர்ந்த ”பீனிக்ஸ் மில்ஸ்” என்ற நிறுவனமே இந்த வணிக வளாகத்தை இங்கே கட்டியிருக்கிறது.இது ஏற்கனவே மும்பை,புனே,பெங்களூரு,போன்ற இடங்களில் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது.

சாலையை அகலப்படுத்துவதற்காக முக்கிய சாலைகளின் ஓரத்தில் அமைந்திருக்கும் கட்டிடங்களின் முன் பகுதியை சென்னை மாநகராட்சியினர் உடைத்து சில அடிகளை அள்ளிக்கொண்டு போகின்றனர்.ஆனால் பீனிக்ஸ் மால் இருக்கும் இடத்தில் இந்த பாச்சா பலிக்காது.ஏனெனில் சாலையை விட்டு பலமீட்டர் தூரத்தில்தான் மாலை அமைத்து இருக்கின்றனர்.
இருபது லட்சம் சதுர அடியில் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டு இருக்கும் ,உலகில் உள்ள முன்னணிஉலகத்தரம் வாய்ந்த  பிராண்ட் ஷாப்கள் ஒருங்கே அமையப்பெற்று பிரமிப்பூட்டுகின்றன.

க்ளோபல் டெசி,சார்லஸ்&கெய்த்,ஸ்டீவ் மாடென்,சூப்பர் டிரை,ப்ரொமோட்,ப்ரூக்ஸ் பிரதர்ஸ்,மாக்,மேக்ஸ்,லீ,மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர்,டொம்மி ஹைபிகர்,கேல்வின் கெவின்,பிபா,பெப்பி போன்ற பிராண்டட் ஷோரூம்கள் தவிர  ஆர் எம் கேவி,மெகா மார்ட் ,ஆர்ச்சீஸ்,பொப்பட் ஜமால்,பிக்பஜார்,வில்ஸ் லைப் ஸ்டைல்,விட்கோ,லைப்ஸ்டைல்,பாண்டலூன்,க்ளோபஸ் போன்ற எண்ணற்ற கடைகள் கடை விரித்துள்ளன.

ஐ போன்,நோகியா,பூர்விகா,யுனிவெர்செல் பிளாக்பெரி போன்ற கைபேசி விற்பனையகங்களில் கூட்டம் அலை மோதுகின்றது.

கீழ்த்தட்டு மேல்த்தட்டு மக்கள் அனைவரும் விரும்பி வாங்கும் பாட்டா பாதணிகள் ஷோ ரூம்முதல் ,இரு பெரிய நோட்டே ஆரம்பவிலையாக கொண்டு இருக்கும் மோச்சி,மெட்ரோ,வுட்லாண்ட்ஸ் போன்ற கடைகள் கண்களை கவர்கின்றன.

ஸ்வரோஸ்கி வைரக்கடலுடன்,தி நகரில் ஆரம்பிக்கப்பட்டு இருக்கும் மலபார் கோல்ட் ஹவுஸ் இங்கும் கிளை பரப்பி உள்ளது.

டைமேக்ஸ் முதல் டிஸ்ஸோட் வரை கடிகாரங்கள் ஷோ ரூம் கல்லா கட்ட வந்துவிட்டன.பாடி ஷாப்.ஹெல்த் அண்ட் க்ளோ கூட இளையவர்களின் பார்வைகளை அள்ளிச்செல்கின்றன.

இவ்வளவு பெரிய மாலுக்கு இத்தனை சிறிய புட் கோர்ட் புட் கோர்ட் பக்கமே செல்ல தயக்கம் கொள்ள வைக்கின்றது.மோத்தி மஹால்,இட்லி தோசா,கே எஃப் சி,வாவ் மமோ,டோமினோஸ்பிஸ்ஸா,நளா ஆப்பக்கடை,சைனாவால்,அரேபியன் ஹட் ,கைலாஸ் போன்ற ஒரு சில கடைகள் மற்றும் ஐஸ்கிரீம் பிரியர்களுக்கு ஐபாகோ,பாஸ்கின் அண்ட் ராபின்ஸ்,புரூட் பன்ச்,க்ரீம் அண்ட் பட்ஜ்,க்வாலிட்டி என்று  கடைகள்  திறக்கப்பட்டுள்ளது என்றாலும்,

கமிங் சூன் என்று பெரிய பெரிய போர்டுகள் தொங்கி சாப்பிட அழைக்கின்றன.ஸ்பாகெட்டி,நண்டூஸ்,கலிஃபோர்னியா பிஸ்ஸா,மேரி பிரவுன்,வசந்த பவன் இன்னும் பிறவும் வரவிருக்கின்றன.

சின்ன புட்கோர்ட்டாக உள்ளதே என்று நினைத்துகொண்டு இருந்த பொழுது ரூஃப் கார்டன் ரெஸ்டாரெண்ட் போல் ஒன்று இருக்க எட்டிப்பார்த்தேன்.ம்ஹும்..சுமார் 20 பேர் மட்டும் அமர்ந்து சாப்பிடும் அளவு குட்டியாக இருந்து ஏமாற்றத்தைதந்தது..

ஏஸி காற்று ஓசியில் வாங்க அக்கம் பக்கத்தினர் அங்கு செல்லலாம் என்று மெனக்கெடாதீர்கள்.இவ்வளவு பெரிய மாலை கட்டி விட்டு கரண்ட் பில்லுக்கு அஞ்சியோ என்னவோ ஏஸியே இல்லாமல் இருந்த நேரம் முழுக்க உஸ் உஸ் என்று மூச்சு விட்டுக்கொண்டே இருந்தவர்கள் அதிகம்.

மாலின் இன்னொரு பிளஸ் பாயிண்ட்.மொத்தம் 12 தியேட்டர்கள் அதில் ஒன்று ஐமாக்ஸ் தியேட்டர்.திரை ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.

நேற்று அங்கு சென்று இருந்த பொழுது கிளிக் செய்த படங்களை கீழே காணுங்கள்.


பீனிக்ஸ் பறவையின் சின்னத்துடன் மாலின் பெயர்ப்பலகை.

மாலின் ஒரு வெளித்தோற்றம்.

மாலினுள் நுழையும் பொழுது நுழைவு வாயிலில் அலங்காரப்பந்துகள் தலை அசைத்து வரவேற்கின்றன.
மாலின் உட்புறத்தோற்றம்.இன்னொரு உட்புறத்தோற்றம்.

மாலினுள் நுழைந்ததுமே இந்த சிலைதான் வரவேற்கும்.

மாலின் இன்னொரு உட்புறத்தோற்றம்.

esbeda ஷோரூமில் அணிவகுத்து அழகு காட்டும் கைப்பைகள்.


marks&spencer ஷோ ரூமில் அணிவகுத்து இருக்கும்செருப்புகள்.புட் கோர்டின் ஆரம்பம் என்பதனைக்காட்ட தட்டுக்களால் மலர் போன்று அழகாக அலங்கரிக்கப்பட்டு கலை நயத்துடன் காட்சி அளிக்கின்றன.

பாட்டில்களால் ஆன மெகா சைஸ் பூ ஆங்காங்கே வைக்கப்பட்டு தயவு செய்து தொடாதீர் என்ற அறைவிப்பு பலகையுடன் காட்சி அளிக்கின்றன.
புட் கோர்டின் உட்புறத்தோற்றம்.


தரைதளத்தில் அமைந்திருக்கும் இன்னொரு கலைநயமிக்க சிலை.குழந்தைகளை கவர்ந்து இழுத்து செல்லும் பன்சிட்டி.

யூத்துக்கள் ,ஆண்டீஸ் மட்டுமல்ல பாட்டீஸும் கன ஜோராக மாலை வலம் வருவதைப்பாருஙகள்.பாட்டீஸுக்கு பின்னால் ஓடிப்போய் என் கேமராவுக்குள் சிறை பிடிப்பதற்குள் அப்பப்பா போதும் போதும் என்றாகி விட்டது.


எங்க வீட்டு குட்டி.அவர் கேட்டதெல்லாம் கிடைக்க வில்லை என்று முகத்தை ஒன்றரைமுழ நீளத்துக்கு தொங்க வைத்துக்கொண்டு இருக்கிறார்.வீடு வந்து சேரும் வரை தொங்கிய முகம் ஒரு இன்ச் கூட ஏற வில்லை.