December 27, 2012

அறுசுவைத்திருவிழா





கடந்த அக்டோபர் மாதம் 12,13,14 ஆகிய தேதிகளில் மாலை நேரத்தில் பெஸண்ட் நகர் பீச்சுக்கு அருகே உள்ள வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு திண்டாட்டம்தான்.வாகனங்களும்,மக்கள் கூட்டமுமமாக தெருக்களில் நடக்க முடியாமல்,வாகனங்கள் பார்க் செய்ய முடியாமல் .ஏன்...வாகன‌ங்கள் நுழையவே இடம் இல்லாமல் ஏரியாவே தத்தளித்தது.அறுசுவை திருவிழாவால்.

திருவிழா என்றதும் ஆட்டம் பாட்டம் குடைராட்டினம்,விளையாட்டு ரயில், இதெல்லாம் இல்லை.எலியட்ஸ் பீச் மணலில் ஷாமியானா போடபட்டு வகை வகையான உணவுகளின் வாசனை மூக்கை துளைக்க மக்கள்ஸ் வாய்க்கும் கைக்கும் போராட்டமே நடத்திகொண்டிருந்தனர் அவசரகதியில்.

சாலையோரக்கடைகளில் வாங்கி சாப்பிட ஆசைபட்டும் செயல் படுத்த இயலாமல் லஜ்ஜை கொள்ளும் மக்களுக்கு அன்றைக்குகொண்டாட்டம்தான்.

தமிழ் நாட்டு உணவு மட்டுமின்றி  ,கேரளா.ஆந்திரா,கர்நாடகா,மகாராஷ்டிரா,கோவா,பஞ்சாப்,பெங்கால்.குஜராத்,ராஜஸ்தான்,காஷ்மீர் மாநில உணவுவகைகள் அத்தனையும் சுடசுட கிடைத்தன.

நுழைவு வாசலில் குறைந்தது 100 ரூபாய்க்கு டோக்கன் வாங்கிக்கொண்டுதான் உள்ளே செல்ல முடியும்.ஆனால் கண்டிப்பாக ஒருவருக்கு அந்த 100 ரூபாய் டோக்கன் போதவே போதாது.ஏனெனில் விலை அத்தனை அதிகம்.

வகை வகையான பிரியாணி வகைகள்,சிக்கன் வகைகள்,கபாப் வகைகள்,வடை போண்டா பஜ்ஜி வகைகள்,சாட் ஐட்டம்,பாயச வகைகள்,சூடான,குளிர் பான வகைகள் என்று எண்ணிலடங்கா உணவு வகைகள்.என்ன ஒன்று,விரும்பிய உணவை வாங்க பெரிய கியூவில் நிற்க வேண்டும்.

முதல் நாள் உணவு வகைகளின் விலை சற்றே குறைவாக இருந்தது.அடுத்த நாளே விலையை உயர்த்தி விட்டார்கள்."எவ்வளவு விலை உயர்த்தினாலும் நாங்களும் வந்து சாப்பிடுவோம்ல"என்பதை மக்கள் கூட்டம் நிரூபித்துக்கொண்டிருந்தது.



இரண்டு கீரை வடை 40 ரூபாய்.



ரோட்டோரக்கடையில் தாளத்துடன் டொடய்ங் டொடய்ங் என்ற மியூஸிக்குடன் கொத்து பரோட்டோ கொத்தும் ஓசையைத்தான் கேட்டு இருக்கிறேன்.நேரில் பார்த்ததில்லை.நீண்ட நாள் ஆசை .ஆரம்பம் முதல் இறுதிவரை கொத்துபரோட்டோ கொத்துவதை நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்.மின்னல் வேகத்தில் எண்ணி பத்தே நிமிடத்தில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட பிளேட் கொத்துபரோட்டா செய்து விடுகிறார் கொ.ப மாஸ்டர்.சூடான கொத்து பரோட்டாவை ஒரு விள்ளல் ஸ்பூனால் எடுத்து சாப்பிட்டால்...ம்ஹும்..நான் செய்யும் கொ.ப வுக்கு அடிக்காது.



சுடச்சுட கொ.ப‌


பெரிய பெரிய அடுப்புகளில் கிரில்  கம்பிகளில் மாட்டி சிக்கன் கபாப் தயாரித்து குவித்த வண்ணம் இருக்கின்றார்கள்.உடனுக்குடன் விற்றும் தீர்ந்து விடுகிறது.



பிராஸ்டட் சிக்கன்.பார்ப்பதற்கு வண்ணமயமாக இருக்க எக்கசக்க‌ கலர் பவுடர் போட்டு சாப்பிட தயங்க வைத்து விட்டனர்.


சூடான திருநெல்வேலி அல்வா.அதெப்படி எந்நேரமும் சூடாக கொடுக்கின்றார்கள்?இரண்டே ஸ்பூன் அல்வா 40 ரூபாய்.


ஒரு சிறிய குழிக்கரண்டி அளவு மூங் தால் அல்வா.இதுவும் 40 ரூபாய்.





வந்திருந்த கூட்டத்தினரின் ஒரு பகுதி.


கூட்டத்தின் இன்னொரு பகுதி.



ரோட்டரி இன்டர்நேஷனல் டிஸ்ட்ரிக்ஸ் 3230 என்ற அமைப்பு இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தது. ரோட்டரி சங்கத்தினர் அமைத்துள்ள மகிழ்ச்சியான கிராமம் என்ற திட்டத்துக்காக வசூல் ஆகும் தொகையை அவர்கள் தத்து எடுத்த
118 கிராமங்களுக்கும்  தேவையான வசதிகளை செய்து கொடுத்து மேலும் கிராம முன்னேற்றத்துக்கான‌  நலத்திட்டங்க‌ள் பலவற்றை நிறைவேற்றி ஏழை எளிய மக்க‌ளின் கண்ணீரை போக்குவதே இத்திருவிழாவின் நோக்கம்.

நல்லதொரு நோக்கம்.வரவேற்ககூடிய திட்டம்.
சிற‌ப்பான‌ இத்தொண்டு செய்யும் இந்த அமைப்பை பாராட்டவும் வேண்டும்.விலையைப்பற்றி கவலை கொள்ளாமல் எவ்வளவு விலை கொடுத்தாயினும் வாங்கி சாப்பிட்டு ஆதரவு கொடுக்கும் சென்னை மக்கள் ஃபுட்டீஸ் மட்டுமல்ல இரக்க சுபாவமும் உள்ளவர்கள் தான் :)



December 26, 2012

ஹஜ் அனுபவங்கள் ‍ 4

1.சென்னையில் இருந்து கிளம்பி சுமார் ஆறுமணி நேரம் விமானத்தில் பயணித்து ஜித்தா ஏர்போர்டில் இறங்கும் பொழுது அந்த ஊர் நேரம் பகல் ஒரு மணி.நாங்கள் ஜித்தா ஏர்போர்டில் அமர்ந்திருந்து மக்கா செல்ல பஸ் ஏறும் பொழுது இரவு ஒருமணி.அத்தனை நேரம் ஏர்போர்டில் காத்து இருந்தோம்.ஏர்போர்ட் என்றால் சில் என்ற ஏஸி குளிரும்,குஷன் இருக்கைகளும் போடப்பட்டு இருக்கவில்லை.கொளுத்தும் வெயில்.நிழலுக்கு குடை போன்ற  கூடாரங்களுக்கு கீழ் வியர்வை வழிந்தோட அங்குள்ள சிமெண்ட் திண்டுகளில் அமர்ந்திருந்தோம்.அப்பொழுது நினைத்துக்கொண்டேன்.இப்புனித தளத்தில் பொறுமையும் சகிப்புத்தன்மையும் அதிகம் அதிகம் வேண்டும் என்ற நிலைப்பாடை இப்பொழுதே இறைவன் காட்டி விட்டான் என்று.சுமார் பனிரெண்டு மணி நேரம் காத்திருந்து பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கு நல்லதொரு பயிற்சியும் அந்த இடத்தில் எடுத்துக்கொண்டோம் என்பதும் உண்மை.


2.நடு நிசியில் ஜித்தாவில் இருந்து மக்கா செல்லும் பொழுது அசதியில் சற்றே கண்ணயர்ந்து விட்டேன்.அப்பொழுது ஜித்தாவில் இருந்து 55 கிலோ மீட்டர் தூரத்தில் மக்காவின் எல்லை ஆரம்பமாகும் இடமான ஹுதைபியா என்ற இடத்தில் ஹைவேயில் அகலமான சாலையில் பிரமாண்டமான ரைஹால்(குரான் வைக்கும் பலகை)மீது குர் ஆன் இருப்பது போன்ற அழகிய ஆர்ச்சை கவனிக்க முடியவில்லை.பிரிதொரு சமயம் ஜித்தா செல்லும் பொழுது இரவு நேரப்பயணத்தில் அதனை கண்டு கழித்தேன்.வண்ண மின் விளக்கு அலங்காரங்களுடன் கண்களை கவர்ந்தன அந்த அழகு ஆர்ச்.

3.மக்கா சென்றதும் நட்சத்திர ஹோட்டலில்,சகல வசதிகளுடன் தங்கி இருந்து புனித கஃபாவை தரிசனம் செய்து வந்தது போக ஹஜ்ஜின் ஆரம்பமாக முதலில் மினா டெண்டுக்கு அழைத்து சென்ற பொழுது ஒன்றேகால் அடி அகலமும் ஆறடி நீளமும் கொண்ட படுக்கையும்,அதே படுக்கையில் தொழவும் ஓதவும்,பிரார்த்தனை புரியவும்,சாப்பிடவும் தூங்கவுமாக ஐந்து நாட்களையும் கடத்தும் பொழுது மிக மிக பொறுமையும்,சகிப்புத்தன்மையும்,சேவைமனப்பான்மையும்,விட்டுக்கொடுத்தலும்,இறைவன் மீது அளவற்ற அச்சமும்,மனதில் ஏற்படுகிறது.

4.இடையில் அரஃபா மைதானம் சென்ற பொழுது சாமியானாவுக்கு கீழ் விளக்கு வெளிச்சம்,காற்று இல்லாமல் கரடு முரடான தரையில் கார்பெட் விரித்து அதிலும் தங்கி பிரார்த்தனை செய்த பொழுதும்,அங்கிருந்து முஸ்தலிபாவுக்கு சென்ற பொழுது அந்த  விரிப்புக்கூட இல்லாமல் கொண்டு சென்று இருந்த  பெட்ஷீட்டை விரித்து கற்கள் நிறைந்த நடு ரோட்டில் தங்கி இருந்த பொழுதும் ஏழை பணக்காரர் என்ற பாகுபாடின்றி பெருமை,புகழ்,உலகநோக்கங்கள்  வேறு சிந்தனை ஏதுவும் இன்றி இறைவன் ஒருவனுக்காகவே அத்தனை சிரமங்களையும் அனுபவித்து ஹஜ் கடமைகளில் ஈடு பட்டபொழுது மனம் மிகவுமே பக்குவப்பட்டு விடும்.

5.புனித கஃபாவை சுற்றி வலம் வரும் பொழுது உச்சிவெயிலானாலும் உச்சந்தலைதான் கொதிக்குமே தவிர நடக்கும் பொழுது கால் குளிரூட்டப்பட்டதைப்போன்ற குளுமையை அனுபவித்து ஆச்சரியப்பட்டுப்போனேன்.கொளுத்தும் வெயிலுக்கு தரை எப்படி சூடாக இருக்கும்?ஆனால் அந்த சூடே தெரியாத அளவுக்கு தரைகள்.செருப்பு அணியாத காலால் எப்படி வெயில் கொளுத்தினாலும் சிரமம் இல்லாமல் கஃபாவை வலம் வர ஏதுவாக இருந்தது மிக ஆச்சரியமே.

6.ஹரத்தில்  சொல்லப்படும் பாங்கு(தொழுகைக்கான அழைப்பு) பற்றி இங்கு சொல்லியே ஆக வேண்டும்.கணீர் என்ற கம்பீரக்குரல்.ஹரம் முழுக்க ஒலித்து செவிமடுப்போரின் செவியுனுள் பாய்ந்து,நெஞ்சமெல்லாம் நிறைந்து இதயம் முழுக்க ஊடுருவி,அல்லாஹ்வை வணங்க வாருங்கள் என்று அழைக்கும் ஒலி மனதினை பரவசப்படுத்தும்.பல இமாம்கள் இருந்தாலும் 14 வயதிலிருந்து அழைப்புப்பணியை மேற்கொண்டிருக்கும் ஷேக் அஹ்மது அலி முல்லா பாங்கு சொல்வதை நீங்களும் கேளுங்கள்.


7.உலகில் இருக்கும் இஸ்லாமிய நாடுகள் மொத்தம் 59 ஆகும்.இதில் அதிகளவு மக்கள் தொகை கொணட நாடு இந்தோனிஷியா ஆகும்.ஹஜ் செய்வதற்கு இந்நாட்டில் .இருந்து அதிக மக்கள் வருகின்றனர்.

8.புனித நீரான ஜம்ஜம் நீர் பூமியிலேயே சிறந்த நீராகும்.ஜம்ஜம் கிணறு தோன்றி 4853 ஆண்டுகள் என்று படித்தறிந்துள்ளேன்.30 மீட்டர் ஆழமுள்ள இக்கிணற்றில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு சுமார் 39,600 லிட்டர் நீர் ஊறுகின்றது.கோடிகோடியான மக்கள் குடித்தும்,கேன்களில் தங்கள் சொந்த நாடுகளுக்கு எடுத்து சென்றும் சிறிதேனும் வற்றாத அற்புத நீர் அது.சிறந்த நோய் நிவாரணியும் கூட.

9.மக்காவிலும் சரி.மதினாவிலும் சரி ஐந்து வேளை தொழப்போகும் பொழுதெல்லாம் தொழுகைக்குப்பிறகு ஜனாஸா தொழுகை(மரணித்தவர்களுக்காக)நடக்காத வேளையே இல்லை.ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஜனாஸாக்கள்(சடலங்கள்).தொழுகை நடத்தபட்ட பின் மின்னல் வேகத்தில் ஜனஸாக்களை சுமந்து செல்வார்கள். மையவாடியை(அடக்கஸ்தலம்)நோக்கி.

10.மனதினை உலுக்கியஇன்னொரு நிகழ்வு.நாங்கள் பயணித்த டிராவல்ஸில் ஒரு மலேஷிய தமிழ் குடும்பம்.பெரிய குழுவாக வந்திருந்தனர்.மிகவும் அன்பாக பழகியதில் அக்குடும்பத்தினருடன் ஐக்கியமாகி விட்டேன்.சுமார் 50 இல் இருந்து 55 வயது இருக்கும் கம்பீரமான உருவம்கொண்டவர்.பெயர் மெஹர் பானு.இவர் மட்டும் அதிகம் பேச மாட்டார்.நானோ “அக்கா,வெள்ளி(மலேசிய பணம்)தந்தால் தான் பேசுவீர்களா” என்று பேசி பேசியே அவரை கலகலப்பாக்கினேன்.ஹஜ் கிரியைகள் முடிந்து,இக்கிரியைகளை முடித்த பின்னர் கஃபாவை வலம் வந்தால் ஹஜ் பூர்த்தியாகி விடும்.இதற்கு தவாபே ஜியாரத் என்பர்.இதனை பூர்த்தி செய்து விட்டு ஹோட்டல் அறைக்கு திரும்ப இருக்கும் பொழுது ஹரத்தில் வைத்தே திடீர் என்று மரணம் அடைந்து விட்டார்.அவரது மரணம் அனைவரையும் உலுக்கி விட்டது.ஹாஜியாக முழுமை பெற்ற சில நொடிகளிலேயே மரணம் எய்து விட்டார்.என்னதொரு அற்புதமான மரணம்!இருப்பினும் மனித மனம் தவிக்கும் தவிப்பை நிறுத்த இயலவில்லையே.அவர் மரணம் அடைந்த பொழுது அவருடன் சேர்ந்து அந்த வேளை தொழுகைக்கு மட்டும் 47 ஜனாஸாக்கள்(சடலங்கள்)கொண்டு வரபட்டதாக அவரது உறவினர் கூறினார்.

11.ஜித்தாவுக்கு குடும்ப நண்பர் ஒருவர் அழைத்து இருந்தார்.ஜித்தாவை சுற்றிக்காட்டிய பொழுது தலை வெட்டி பள்ளிவாசல் என்ற ஒரு பள்ளிக்கு அழைத்து சென்றார்.அந்தப்பள்ளியில்தான் தப்பு செய்தவர்களை கை கால் தலை வெட்டுவார்களாம்.பள்ளிக்கு வந்த மக்கள் கூடி இருக்கும் பொழுதே குற்றவாளியை திடும் என்று அழைத்து வந்து தண்டனை கொடுப்பார்கள் என்று அவர் விளக்கிய பொழுது மனது பக் என்றாகி விட்டது.கூட வந்தஇன்னொருவர் இதனை கேட்டு விட்டு  ”வாங்க சீக்கிரம் போய்டுவோம் ”என்ற அவசரப்படுத்திய பொழுது சிரிப்பும் வந்தது.ஜித்தா நகரில் மிகபழமையான கட்டிடங்கள் இருக்கும் பகுதி ஒன்றும் பார்க்க வேண்டியவை.

12.அடுத்த பதிவில் ஹரத்தில் வைத்து நிகழ்ந்த ஒரு இனிய சந்திப்புடன் ஹஜ் அனுபவங்கள் நிறைவு பெறுகின்றது.

December 15, 2012

ஹஜ் அனுபவங்கள் ‍ 3

அல்-மஸ்ஜிதுன்னபவி (தீர்க்க தரிசியின் மசூதி)



மதீனா நகரிலுள்ள பிருமாண்டமான பள்ளி இது.இதனுள்ளேதான் நபிகளார் அடக்கம் செய்யப்பட்டு இருக்கின்றாரகள்.மதீனா செல்வதும், மஸ்ஜிதுன்னபவியில் தொழுவதும், நபி(ஸல்) அவர்களது கப்ரை ஜியாரத் செய்வதும் (அடக்கஸ்தலத்தை தரிசித்தல்)ஹஜ் கடமைகளில் உள்ளதல்ல  என்றாலும் “பள்ளிகளில் சிறந்தது மூன்று: 1. மக்காவில் கஃபத்துல்லாஹ் 2. மதீனாவில் மஸ்ஜிதுன்னபவி 3. தாருஸ்ஸலாமில் மஸ்ஜிதுல் அக்ஸா. இவைகளில் தொழுவது சாலச் சிறந்தது” என்ற நபிமொழிக்கொப்ப மஸ்ஜிதுன்னபவியில் தொழுவது சிறப்புக்குறியது.

இவைகளை நிறைவேற்ற எந்நேரமும், எவ்வித உடையிலும் செல்லலாம். இஹ்ராம் (உம்ரா .ஹஜ்ஜை நிறைவேற்ற மனதில் உறுதி எடுத்து,அதற்குண்டான ஆடைகளை அணிதல்
 தல்பியா (லப்பைக் அல்லாஹும்ம லப்பை ஓதுதல்)போன்றவை இல்லை. லட்சக்கணக்கில் செலவு செய்து பல்லாயிரக்கணக்கான மைல்களைக் கடந்து, அன்னிய நாட்டினராக வந்துள்ள ஹாஜிகள் இவைகளை செய்து வருவது சிறப்புக்குறியது மட்டுமேயன்றி கடமை அல்ல.

நபியவர்களின் வீடு மஸ்ஜிதுந் நபவிக்கு பக்கத்திலேயே இருந்தது. மஸ்ஜிதுந் நபவியும் நபியவர்களின் வீடும் ஒரே சுவராக இருந்தது. வீட்டுக்குள்ளிருந்து எட்டிப் பார்த்தால் பள்ளியில் என்ன நடக்கிறது என்று தெரிந்துவிடும். ஸஹாபாக்கள் (நபித்தோழர்கள்) பள்ளிக்குள் நபியவர்களை அடக்கம் செய்யவில்லை.

பரந்து விரிந்த பல ஏக்கர் பரப்ப‌ளவுள்ள இடத்தில் மிகப்பெரிய அளவில் மஸ்ஜிதுன்னபவி பள்ளியை மிக பிருமாண்டமாகவும் கலை நயத்துடனும்,அழகியமுறையில் உருவாக்கி உள்ளனர்.தரைப்பளப்பளவில் உலகிலேயே மிகப்பெரிய மசூதி இதுதான்.மேலடுக்குகள் இல்லாமலேயே தரைத்தளத்தில் மட்டும்  ஒரே நேரத்தில் சுமார் 4 லட்சம் பேர் தொழக்கூடிய அளவு விஸ்தீரனமான மசூதி இது.

மேற்கண்ட படம் மசூதில்  அழகு மிக்க கலை நயத்துடன் கூடிய பல நுழைவு வாயில்களில் ஒன்று

ரவ்லா ஷரீப்




பச்சை நிற டூமுக்கு கீழ்தான் நபிகளார் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.அவர்களுக்கு பக்கத்திலேயே அபூபக்கர் சித்தீக்(ரலி)உமர் (ரலி)
(நாற்பெரும் கலீபாக்களுள் இருவர்)இருவரும் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இதற்கு பெயர் ரவ்லா ஷரீப்.மஜிதுன்னபவிபள்ளிக்குள் போய் இந்த ரவ்லா ஷரிப்புகுள் போனாலும் நபிகளார் அடக்கம் செய்த இடத்தினை கண்ணால் பார்க்க இயலாது.

இந்த ரவ்லா ஷரீபுக்கு ஆண் பெண்களை தனித்தனியாக அனுப்புகின்றனர்.ஒவ்வோரு நாட்டவரையும் பிரித்து பிரித்து அனுப்புகின்றனர்.

முதலிலேயே எங்கள் இமாம் (குழுத்தலைவர்)ரவ்லா ஷரீஃபுக்குள் பய பக்தியுடன் மட்டிலுமே நுழையுங்கள்.அல்லாஹ்வின் தூதரை சந்திக்கிறோம் என்ற பய உணர்வு மேலோங்கி இருக்க வேண்டுமே தவிர கட்டிடக்கலையில் அழகையும்,கலை நுணுக்கங்களையும் ரசிக்காதீர்கள் என்று அறிவுறுத்தி இருந்தார்.இருப்பினும் அதன் கலை நயத்தையும்,நுணுக்கத்தையும்,பேர‌ழகையும்,பார்த்து ப‌ரவசப்படாமல் அதிசயிக்க முடியாமல் ,ஆனந்தப்படமுடியாமல் இருக்க இயலவிலை.

சுப்ஹானல்லாஹ்!!!!இவ்வித பெரும் அழகும் இப்பூவுலகில் உள்ளதோ என்று மனம் ஆச்சரியப்படுகின்றது.எங்கு பார்த்திட்டாலும் லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர்ரசூலுல்லாஹ்
(இறைவன் ஒரருவனே.அவனது தூதர் நபி (ஸல்)அவர்கள் ஆவார்கள்)என்ற திரு நாமம் .

நபிகளாருக்கும்.உடன் அடக்கப்பட்டு இருக்கும் கலீபாக்களுக்கும் ஸலாத்தை எத்தி வைத்து விட்டு வெள்ளைதூணருகே பச்சை நிற கம்பளத்தின் மீது கூட்ட நெரிச்சலில் இரண்டு ரக் அத் தொழுது அல்லாஹ்விடத்தில் துஆ கேட்டு விட்டு கிளம்பினோம்.ஆற அமர அவ்விடத்தில் இருந்து தொழ இயலாதவாறு கூட்டம்,கண்காணிப்பாளர்கள் சீக்கிரம் நம்மை வெளியேற்றுவதில் கவனமாக இருக்கின்ற‌னர்.ஏனெனில் காத்துக்கிடக்கும் கூட்டத்தினர் அத்தனை பேர்.

ரவ்லா ஷரீஃபுக்குள் கேமரா அனுமதி இல்லை.ஏன் மதினா பள்ளிக்குள்ளும் கேமராவை அனுமதிக்க மறுக்கின்றனர்.பெண்களின் கைப்பையை தரோவாக செக் செய்து அனுப்புகின்றனர்.இருப்பினும் சிலர் ஆர்வக்கோளாரினால் கேமராவை கொண்டுவந்து படம் எடுத்துக்கொள்கின்றனர்.எனது ஹேண்ட் பேகில் பேனா இருந்ததற்கே அதை எடுத்து அப்புறப்படுத்தி விட்டுத்தான் உள்ளே அனுப்பினாரகள்.ஆதாலால் நான் ரிஸ்க் எடுகவில்லை.ஆண்கள் பகுதியில் இவ்வளவு கறார் கிடையாது.ஆகையால் கணவர் உள்ளே இருந்த படியே நகரும் டூமை மட்டும் படம் எடுத்து வந்தார்கள்.

மஸ்ஜிதுந்நபவியில் இருந்து தெரியும் உஹது மலை


மக்கா மதினாவை சுற்றியுள்ள ஒவ்வொரு மலைகளும் ஒவ்வொரு வரலாறு படைத்தது.அதில் உஹத் மலையானது மிகவும் உகப்பான மலை.நபி (ஸல்)அவர்கள் உவந்து சிலாகித்த மலையாகும்.

"
உஹத் மலை நம்மை நேசிக்கிறது நாமும் அதை நேசிக்க வேண்டும்."என்பது நபிமொழியாகும்.மஸ்ஜிதுந்நபவியில் தொழுகை முடித்து விட்டு செல்லும் பொழுதெல்லாம் பள்ளிவளாகத்தினுள் இருநத படி தூரத்தே தெரியும் உஹத் மலையை ஆசையுடன் பார்த்து சிலாகிப்பார்கள் நாயகமவர்கள்.

மஸ்ஜிதுன்னபவில் இருந்த படி தூரத்தில் தெரியும் உஹத் மலையின் படம் இது.இரு கட்டிடங்களுக்கு இடையே கொஞ்சமே தெரிகின்றது.

நகரும் டூம்



மதினா பள்ளி மிகவும் பரந்து விரிந்த பள்ளியாதலால் காற்றுக்காகவும் வெளிச்சத்திற்காகவும் பள்ளியில் நகரும் டூம் அமைத்து இருக்கின்றனர்.திடீரென்று மூடி இருப்பது திறந்து கொண்டு வானம் தெரியும் பொழுது வியப்பாக இருக்கும்வெயில் மழை பனி நேரத்தில் மூடியும் மற்ற நேரத்தில் திறந்தும் இருக்கும்.மிக மெதுவாக அது நகர்வதைப்பார்க்க கண்கொள்ளாகாட்சியாக இருக்கும்.இப்பள்ளியில் மொத்தம் 27 நகரும் டூம்கள் உள்ளன.ஒரு டூம் நிர்மாணிக்க ஆன செலவு இந்திய ரூபாயில் பத்துகோடி

விரிந்து சுருங்கும் நிழற்குடைகள்

வானத்தை மறைத்திடும் அழகுக்குடைகள் விரிந்து வரவேற்கும் மஸ்ஜிதுன் நபவி மின் தூபிகள் உயர்ந்து நின்று, துதி செய்யும் மக்களுக்குச் சோபனம் கூறுவது போல் கம்பீரமாக காட்சி அளிக்கின்ற‌து.

ஆம்.பரந்து விரிந்த அழகுப்பள்ளியை சுற்றிலும் வெயிலுக்காக மின் குடைகள் அமைத்து இருக்கின்றனர்.நெடுகிலும் நூற்றுக்கணக்கில் குடைகள் உள்ளன.வெயில் வந்ததும் அழகாக மெதுவாக விரியும் குடை வெயில் மறைந்ததும் அதே போல் மெதுவாக மூடிக்கொள்ளும் .நூற்றுக்கணக்காக குடைகளும் ஒரு சேர ஒரே அளவில் சுருங்கி விரியும் பொழுது காணும்அழகு இருக்கின்றதே அதனை வார்த்தைகளால் சொல்ல இயலாது.படத்தில் காண்பது விரிந்த குடைகள்.

விரிந்து கொண்டிருக்கும் குடைகள்


இந்த படம் குடை விரிந்து கொண்டு இருக்கும் பொழுது எடுத்தது.நான் அங்கு இருக்கும் பொழுது இரண்டு நாட்களாக விரிந்த குடை மடங்கவே இல்லை.குடை மடங்கும் நேரத்திற்காக அங்கு காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பினோம்.அதிக பனியின் காரணமாக குடையை இரண்டு நாட்களும் மூடாமல் வைத்து இருந்தார்களோ என்னவோ.

ஒரு வழியாக குடை விரிவதையும்,சுருங்குவதையும் பார்த்து படமும் எடுத்து விட்டேன்.

மடங்கிய குடைகள்


அழகான மினாரா போல் காட்சி தருவது குடை மூடியதும் உள்ள தோற்றம்.அத்தனை பெரிய குடை இத்தனை சிறிதாக அடங்கிவிட்டது பாருங்க‌ள்.

குடையை சுத்தம் செய்யும் ஊழியர்



மக்காவில் உள்ள ஹரத்தைப்போலவே மதினா ஹரமும் (இதனையும் ஹரம் என்றே சொல்வார்கள்)சுத்தம் செய்வதில் மிகவும் கவனமுடன் இருக்கினற‌னர்.ஆயிரக்கணக்கான ஊழியர்கள் எப்பொழுதும் சுத்தம் செய்து கொண்டே உள்ளனர்.பள்ளி வளாகத்திலும் சரி,பள்ளியினுள்ளும் சரி கலை நுணுக்கமான வேலைபாடுகள் எக்கசக்கமாக இருந்தும் எதிலும் ஒரு சிறு தூசியைக்கூட பார்க்க இயலாது,மிக நுண்ணிய இண்டு இடுக்குகளைக்கூட மிக சிரத்தை எடுத்து சுத்தம் செய்து பளிச் என்று வைத்துள்ளனர்.மசூதிக்கு வெளியே உள்ள குடைகளை கிரேனில் ஏறி சுத்தம் செய்யும் படத்தைப்பாருங்கள்.அழகான வேலைப்பாடுகள் அடங்கிய ஸ்டாண்டில் ஓதுவதற்காக குர் ஆன்கள் அடுக்கப்பட்டு இருக்கும்.ஓதிவிட்டு சரியாக அடுக்காமல் யாராவது வைத்து விட்டால பாய்ந்து கொண்டு வந்து சரியாக அடுக்கி விட்டு செல்லும் வேகத்தை பார்த்து அதிசயித்தேன்.அனைத்து விஷயத்திலும் அத்தனை நேர்த்தி.அத்தனை வேகம்.

ஷரீ அத் கோர்ட்

ஷரீ அத் கோர்ட்.இஸ்லாமிய சட்ட திட்டங்கள் இங்கிருந்துதான் அமுலுக்கு வருகின்றது.இது புனித ரவ்லா ஷரிஃபுக்கு நேரெதிரில் அமையப்பட்டுள்ளது.நபி(ஸல்)அவர்கள் அடக்கஸ்த்தலத்திற்கு சரியாக நேரெதிரே மாஜிஸ்திரேட் அமர்ந்திருக்கும் இருக்கை போடப்பட்டு இருக்குமாம்.

ஜன்னத்துல் பகீ


மிகப்பெரிய ,பலஏக்கர்களைக்கொண்ட அடக்கஸ்தலம் .மஸ்ஜிதுனபவியின் கிழக்குப்பகுதியில் உள்ளது ஜன்னத்துல் பகீ.நபி(ஸல்)அவர்களின் மனைவிமார்கள்,பிள்ளைகள்,மற்றும் உறவினர் அடங்கப்பட்ட இமைகளை நனைக்கச்செய்யும்  பூமி பரந்து விரிந்துள்ளது.இங்கு பெண்களுக்கு அனுமதி இல்லை.

மதினா பள்ளிக்கு வரும் ஜனாஸாக்களையும் (இறந்த உடல்களையும்)இங்குதான் அடக்கம் செய்கின்றனர்.ஒரு முறை என் கணவர் அங்கு சென்று ஒரு ஜனாஸா அடக்கத்தில் கலந்து கொண்டுவந்தார்கள்.நூற்றுக்கணக்கில் அடக்கம் செய்வதற்கு  தயாராக குழிக‌ள் தோண்டி தயாராக இருக்குமாம்.


உஹத் மலை

என்னதான் முயன்றும் உஹத் மலையின் முழுத்தோற்றத்தையும் கண்களால் அள்ள முடிந்ததே தவிர கேமராவால் இயலவில்லை.

உஹத் போரில் வீர மரணம் எய்தியவர்களின் அடக்கஸ்தலம்


ஹஜ்ரத் ஹம்ஜா(ரலி ) - நபிகளாரின் சித்தப்பா உட்பட‌உஹது போரில் வீர மரண‌ம் அடைந்தவர்களை அடக்கம் செய்த அடக்க‌ஸ்தலம்.எவ்வளவோ ரத்தம் சிந்தி,இன்னுயிர்களை இழக்கச்செய்த வீரம் நிறைந்த பூமியப்பார்க்கும் பொழுது மனம் நெகிழ்ந்தது.

குபா மசூதி

நபிகள் நாயகம் (ஸல்)அவர்களுடைய‌  திருக்கரத்தால், அடிக்கல் நாட்டப்பட்டு கட்டப்பட்ட முதல் பள்ளி.மிகவும் அழகிய,பள்ளி அது.

குர் ஆன் பிரிண்டிங் பிரஸ்


உலகிலேயே மிக பெரிய குர் ஆன் பிரிண்டிங் பிரஸ் .வருடத்திற்கு 4 லட்சம் மில்லியன் பிரதிகள் தயாரிக்கப்படுகின்றது.இதனுள் நுழைய பெண்களுக்கு அனுமதி இல்லை.கணவர் எடுத்த படம் இது.பாலகனி போன்ற‌
நீளமான உயரமான வராண்டாவில் நின்று கீழே இருக்கும் பிரஸை பார்ப்பதற்கு வசதி அமைத்துள்ளார்கள்.


காந்த மலை




மதினா நகரில் இருந்து சற்று தொலைவில் உள்ள மலை இது.சாலையின் இருபக்கங்களிலும் எங்கு பார்த்தாலும் கருநிறமலை.

சாலையின் மீது உள்ள காந்த சக்தியால் கியர் இல்லாமல்,ஆக்சிலேட்டர் போடாமல் கார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்வது ஆச்சரியம்.இப்படி சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு செல்கிறது.10 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிலிண்டர் வடிவதண்ணீர் கேனில் முழுதும் நீரை நிரப்பி சாலையின் மையத்தில் வைத்தால் உருளை வடிவ தண்ணீர் கேன் சாலையில் குடு குடு வென்று ஓடுகிறது.








December 11, 2012

ஹஜ் அனுபவங்கள் ‍ 2


கிளாக் டவர்


உலகின் மிக உயரமான கட்டிடமான துபையில் இருக்கும் புர்ஜ் கலீஃபா கட்டிடத்தை விட 36 அடி மட்டிலுமே குறைவான உயரத்தில் உள்ள இந்த கிளாக் டவர் உலகின் மிகப்பெரிய கடிகாரம் என்ற பெருமையை பெற்றுள்ளது இந்த மக்கா கிளாக் டவர் ராயல் ஓட்டல் உச்சியில் உள்ள கடிகாரம்.

இந்த ஓட்டலின் மொத்த உயரம் 1591 அடி. மொத்தம் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் இந்த ஓட்டல் கட்டப் பட்டுள்ளது. புனித நகரமான மக்காவில் மிகவும் ஆடம்பர, அதிக கட்டணம் கொண்ட ஓட்டல் இதுதான். இந்த ஓட்டலில், 1005 அறைகள் உள்ளன. அதில் தங்கி இருப்பவர்கள் பயணிக்க, 76 லிப்ட்கள் உள்ளன.தொழுகை நடத்தும் ஹால்கள்,ஷாப்பிங் மால் புட் கோர்ட் என்று சகல வசதிகளும் அமையபெற்ற வளாகம் இது

இதன் உச்சியில் காணப்படும் ஜெர்மனி யில் தயாரான  இந்த கடிகாரம் 147 அடி அகலம், 141 அடி உயரம் கொண்டது. கட்டடத்தின் நான்கு பக்கங்களிலும் காணப்படும் இந்தக்கடிகாரம் மக்காவின் எந்த வீதியில் இருந்து பார்த்தாலும் கண்களுக்கு புலப்படும்.





நீர்வீழ்ச்சி




மக்காவில் வாகனத்தில் செல்லும் பொழுது ஆங்காங்கே இப்படி அழகானதொரு நீர்வீழ்ச்சியை கண்டு இருக்கிறேன்.இது நிஜமா செயற்கையா என்று தெரியவில்லை.முக்கிய போக்குவரத்து மிக்க சாலைகளில் இப்படி அருவிகள் கொட்டிக்கொண்டு இருப்பது கண்கொள்ளாகாட்சியாக இருக்கும்




அரஃபா டூ முஸ்தலிஃபா




தையல் இல்லாத வெண்ணிற ஆடையை(இஹ்ரான்)அணிந்து ஆண்கள் ஹஜ்ஜை நிறைவேற்றுவார்கள்.அப்படி வெண்நிற ஆடை தரித்து அரபா தினத்தன்று மைதானத்தில் கூடி இருக்கும் ஹஜ்ஜாளிகளை, அன்று மாலை அரபா மைதானத்தில் இருந்து முஸ்தலிஃபாவுக்கு கூட்டம் கூட்டமாக செல்லும் ஹஜ்ஜாளிகளை பார்க்க பிரமிப்பாக இருக்கும்.எங்கு பார்த்தாலும் வெந்நிற ஆடைதரித்து கூட்டம் கூட்டமாக சென்று கொண்டிருப்பார்கள்.



மினா வீதியில்


மினாவில் தங்கி இருந்த பொழுது டெண்டினுள் அந்தமிகச் சிறிய  படுக்கையிலேயே பொழுதை ஓட்டிக்கொண்டுதான் இருப்போம்.வெளியில் செல்ல பயம்.வழிதவறினால் மிகவும் கஷ்டமாகி விடும்.ஆயிரக்க‌ணக்கில் ஒரே மாதிரியான வீதிகளில் ஒரே மாதிரியான டெண்டுகள்.அதை நினைத்தே எங்கும் செல்லாமல் இருப்போம்.கணவர்தான் காலாற நடக்கலாம் என்றுஅழைத்ததன் பேரில் தைரியமாக புற‌ப்பட்டேன்.மினா டெண்டுகள் அடங்கிய கேட்டை விட்டு வெளியே வந்ததும் பிரமிப்பாக இருந்தது.வீதியெங்கும் கடை பரப்பி பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் வியாபாரம் கனஜோராக நடைபெற்றுக்கொண்டிருந்தது.வீதியின் ஒரு புறம் முழுக்க சாப்பாட்டுக்கடைகள்.நாங்கள் இருந்தடெண்ட் முஸ்தலிபாவுக்கு அருகில்.முசஸ்தலிஃபா பாலம் வரை நடைபாதை  கடைகள் தொடர்ந்து கொண்டிருந்தன.

வியாபாரம் செய்யும் அநேகர் கருப்பின பெண்கள்தான்.ஏழு எட்டு வயதுடைய சிறுவர் சிறுமிகள் கூட வியக்கும் அளவுக்கு ஜரூராக வியாபரம் செய்து கொண்டிருந்தனர்.அந்த சிறுமிகளின் தலை அலங்காரத்தால் கவரப்பட்டு கேமராவை தூக்கினால் சுட்டு விரலை வேகமாக ஆட்டி படம் எடுக்க கூடாது என்று உக்கிரமாக மறுக்கின்றாள்.எப்படியோ ஒரு பெண்ணை படம் எடுத்து விட்டேன்.இதில் பெரியவர்களை விட சிறியவர்கள்தான் உஷாராக இருக்கின்றனர்.



முஸ்தலிஃபா



முஸ்தலிபாவில் உள்ள கூட்டம்.அரஃபா மைதானத்தில் இருந்து சாரை சாரையாக முஸ்தலிபாவுக்கு வந்து அன்றிரவு மட்டும் தங்கி இருந்து கற்களை பொறுக்கிகொண்டு செல்வார்கள். அர்ஃபாவுக்கும் மினாவுக்கும் இடையே அமைந்துள்ளது முஸ்தலிபா . இவ்விடம் அர‌ஃபாவிற்கும் மினாவிற்கும் இடையே சுமார் 10 கி.மீ தூரத்தில் உள்ளது. அங்கு அனைவரும் கூடாரம் இல்லாத திறந்தவெளியில் இரவைக் கழிப்பார்கள்.சாலைகளில் பணக்காரர் ஏழை என்ற பாகுபாடின்றி அனைவரும் தெரு ஓரத்தில் படுத்துறங்க வேண்டும்.


சைத்தானுக்கு கல் எறியச்செல்லுதல்



 ஜம்ராத்தில் கல் எறியும் பகுதியான மினாவில் உள்ள “ஜம்ராத் பாலம்”, ஐந்தடுக்குகளாக ஹை-டெக் வசதிகளுடன் உள்ளது. கிட்டத்தட்ட 4.5 பில்லியன் சவூதி ரியால் பட்ஜெட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த 5 அடுக்கு ஜம்ராத் பாலம், ஒரு மணி நேரத்தில், 3 லட்சம் பேர்கள் கல்லெறிய வசதியாக அமைந்துள்ளது. கல்லெறியும் இடத்தில் ஹாஜிகளுக்கு பாதுகாவலாகவும், கூட்டத்தை ஒழுங்கு படுத்தவும், 12000 காவல்துறையினர் தயாராக இருப்பார்கள் .அங்கு செல்வதற்கு முஸ்தலிபாவில் பொறுக்கிய கற்களுடன் மக்கள் சாரை சாரையாக புறப்பட்டு செல்வதை படத்தில் பாருங்கள்.


நுழைவு வாயில்




சைத்தானுக்கு கல் எறியும் தூண்கள் இருக்கும் பகுதியின் நுழைவு வாயில்.பளிரென்ற வெளிச்சத்துடன்.சில்லென்ற ஏஸி குளிரூட்டப்பட்ட இடமிது.





தூணில் மக்கள் கல் எரிந்து கொண்டுள்ளனர்





சைத்தானுக்கு ஹாஜிகள் கல்லெறிவதை படத்தில் காண்கின்றீர்க‌ள்.இதுகூட்டம் இல்லாமல் இருந்த பொழுது நாங்கள் சென்ற   ஹஜ்சர்வீஸில் அழைத்துப்போகப்போய் மிக நெருக்கத்தில் போய்,சுலபமான முறையில் கல் எறிந்து விட்டு வந்தோம்.இதுவே கூட்டமாக இருக்கும் பொழுது எப்படி கஇருக்குமென்று கடைசி படத்தினை பாருங்கள்.கடைசிப்படம் மட்டும் கூகுளில் இருந்து எடுத்தது.

கடைசி படத்தில் மெலிதாக தெரியும் தூண் அதற்கும் முந்திய படத்தில் சுவர் போன்று அகலமாக தெரிவது தூணுக்கு மிக அருகில் நின்று படம் எடுத்ததினால்.இது போன்று மூன்று தூண்கள் உள்ளது .ஒவ்வொரு தூணிலும் ஹாஜிகள் முன்று நாட்கள் தொடர்ச்சியாக வந்து கல்லெறிய வேண்டும்.

தூணை சுற்றி மக்க‌ள் வெள்ளம்



December 6, 2012

ஹஜ் அனுபவங்கள் ‍ 1

புனித கஃபா




புனித மக்கா நகரில் அமையப்பட்ட இறை இல்லம்.முழுப்பெயர் கஃபதுல்லா ஆகும்.இறைவனின் ஆணைப்படி ஆதி தந்தை ஆதம் அவர்கள் கட்டிடம் எழுப்பினாரகள்.5000ஆண்டுகளுக்கு முன்னர் இப்றாஹீம் அலை அவர்கள் கஃபாவை கட்டினார்கள்.

நபிமார்கள் அனைவரும் இங்கு வந்து அல்லாஹ்வை தொழுது இருக்கின்றார்கள்.ஹஜ் செய்து இருக்கின்றார்கள்.

கருங்கல்லால் கட்டப்பட்ட கஃபாவின் உயரம் சுமார் 50 அடி,நீளம் 40 அடி,அகலம் 25 அடியும் நான்கு மூலைகளும் கொண்ட சதுரவடிவானது. 99 வாயில்களைக்கொண்டது.இப்பொழுது சவுதி அரசாங்கத்தால்மிகப் பெரிய அளவில் விரிவு படுத்தப்பட்டு பல லட்சம் மக்கள் தொழும் பிருமாண்டமான மஸ்ஜித் ஆக திகழ்கின்றது.

ஹரம் ஷரீஃபில் உள்ள பிருமாண்டமான  நான்காவது தளத்தில்(மொட்டை மாடி)சுற்றுப்புற சுவரின் அருகே சேரில் உட்கார்ந்து கஃபதுல்லாவை கண்குளிர பார்த்துக்கொண்டே இருக்கலாம் நேரம் போவதே தெரியாமல்.அப்படிப்பட்ட ஒரு தருணத்தில் நடுநிசி 12 மணிக்கு எடுத்த புகைப்படம் இது.


பெண்களுக்கான வாயில்
.




87,88 பெண்களுக்கான பிரத்யேகமான வாயில்.இதனுள்ளே சென்றால் பளீர் என்ற விளக்கொளியும் அதீத ஏஸி சில்லிப்பும் என்னை மிகவுமே ஈர்த்து விட்டதால் அநேகமாக இங்கே சென்றே தொழுவேன்.அங்கு சீலிங்கில் போட்டு இருக்கும் பிருமாண்டமான சாண்ட்லியர் நூற்றுக்கணக்கில் இருக்கும்.அதில் ஒன்றுதான் இது.



கிங் அப்துல் அஜீஸ் கேட்



கேட் நம்பர் ஒன்று .இதற்கு கிங் அப்துல் அஜீஸ் பெயரை வைத்துள்ளார்கள்.இந்த கேட்டுக்கு நேராக உள்ள வீதியில் உள்ள ஹோட்டலில்தான் எங்கள் ஜாகை.யாரை சந்திக்க வேண்டுமோ இந்த கேட்டை அடையாளமாக வைத்து சுலபமாக சந்தித்துக்கொள்வோம்.இதற்கு எதிரே கிளாக்டவர் என்றும் பிருமாண்டமான ஹோட்டல்.அதன் உச்சியில் மிகப்பெரிய கடிகாரம்.மக்காவின் எந்த வீதியில் சென்றாலும் இந்த கிளாக்டவர் நம் கண்களுக்கு புலப்படும்.


மிக‌ நெருக்கத்தில் கஃபதுல்லாஹ்




இது ஒரு அரிய காட்சி.எப்பொழுதும் எறும்பு மொய்த்தாற்போல் ஹரத்தை சுற்றி மனிதத்தலைகள் மொய்த்திருக்கும்.இப்பொழுது யாருமே இல்லாத ஒரு படம் வியப்பை தருகின்றதா?கஃபாவை சுத்தம் செய்யும் பொழுது மிக நெருக்கத்தில் முதல் ஆளாக நின்று கொண்டு கஃபாவை கண்குளிர பார்த்தேன்.மிக நெருக்கத்தில் எடுத்த படம் ஆதலால் கஃபாவை முழுவதுமாக படம் எடுக்க இயல்வில்லை."ஹாஜி தரீக் தரீக்" என்ற கூக்குரலை பொருட்படுத்தாது ஆற அமர போட்டோக்கள் கிளிக் செய்தேன்.என்னை வைத்து எடுக்க பக்கத்தில் ஆள் இல்லாமல் நானே எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பார்த்த உறவினர்கள் இவ்வளவு நெருக்கத்தில் எப்படிப்போய் படம் எடுத்தாய் என்று ஆச்சரியப்பட்டனர்.

கஃபாவின் வாசல்






கஃபாவின் வாசல் சுத்தமான தங்கத்தினால் தயாரிக்கப்பட்டதாகும். தரை மட்டத்தில் இருந்து இரண்டு மீட்டர் உயரத்தில் இருக்கின்றது.அழகிய வேலைப்பாடும்,குர் ஆன் ஆயத்துகளும் பொறிக்கபட்ட இரட்டை கதவுகள்.இதற்கு படிகள் மூலமாக ஏறவேண்டும்.கூட்டம் காரணமாக எப்பொழுது மூடப்பட்டே இருக்கும் கதவுகள் வருடந்தோரும் நடைபெறும் சவூதியின் சர்வதேச குர்ஆன் மன‌னப்போட்டியில் கலந்து கொள்ளும் காரிக்கள், ஹாபிள்கள், விஷேட விருந்தினர்கள், சர்வதேசமட்டத்தில் பேசப்படும் அறிஞர்கள் போன்றோர் கலந்து கொள்ளும் முக்கிய நிகழ்வுகளின் மாத்திரம் அது திறக்கப்படும்.அப்படித்திறக்கப்படும் பொழுது வெள்ளியால் ஆன ஏணிப்படிகள் பொருத்தப்பட்டு உபயோகிப்பார்கள்.


மகாமு இப்ராஹீம்


. (இதையும் எண்ணிப் பாருங்கள்; ‘கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை – மகாமு இப்ராஹீமை – தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்’ (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் ‘என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்’ என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதிமொழி வாங்கினோம். (அல்குர்ஆன்2:125)

இப்ராஹீம்(அலை) அவர்கள் கஃபாவை எந்தக் கல் மீது நின்று கட்டினார்களோ அதனையே அல்லாஹ் இங்கு குறிப்பிடுகின்றான். அதைத் தொழும் இடமாக எடுத்துக் கொள்ளுங்கள் என அல்லாஹ் நமக்குக் கட்டளையிட்டிருக்கின்றான். எந்த ஒரு ஹாஜியோ அல்லது உம்ராச் செய்பவரோ அல்லது தவாஃப் செய்பவரோ அவர்களின் தவாஃபை முடித்த பின் மகாமு இப்ராஹீமுக்குப் பின் (தவாஃபுக்காக) இரண்டு ரக்அத் தொழவேண்டும்.

நபி இப்றாஹீம் (அலை)அவர்களின் கால்தடமும் இங்கு பதிவாகி உள்ளது.


கஃபாவை சுத்தம் செய்தல்.




"சுத்தம் ஈமானில் பாதியாகும்"என்ற நபி மொழிகொப்ப ஹரம் ஷரீபில் 24 மணி நேரமும் எங்காவது ஒரு மூலையில் குழுவாக நின்று சுத்தம் செய்துகொண்டே உள்ளனர்.எப்படிப்பட்ட பெரும் கூட்டத்தையும் ஒரு ரிப்பன் கயிற்றினால் ஓரம் கட்டிவிட்டு கூட்டமாக மின்னல் வேகத்தில் ஊழியர்கள் சுத்தம் செய்வது ஆச்சரியமாக இருக்கும்.ஆங்காங்கு ஹரம்ஷரீபை சுத்தம் செய்வது அனைவர் பார்வையில் பட்டாலும் கஃப்துல்லாவை சுத்தம் செய்யும் பொழுது காணும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது.கஃப்துல்லாவின் நிர்வாகிகள் முன்னிலையில் கஃபாவின் சுவர்களை கழுகி சுத்தம் செய்து கொண்டிருக்கும் ஊழியர்களைப்பாருங்கள்.


வெள்ளிக்கிழமை





புனித ஹரம் இருக்கும் இடத்துக்கு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் சாலை இது.வெள்ளிக்கிழமை அன்று அதிக கூட்டம் காரணமாக ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் உள்ள சாலைகளில் அமர்ந்தும் தொழுகை புரியும் மக்கள் வெள்ளத்தைப்பாருங்கள்.இதே போல் ஹரத்தை சுற்றி இருக்கும் சாலைகள் அனைத்திலும் இதே சாலையோர தொழுகை நடைபெறுவது வாடிக்கை.ஜும்மா நேரத்தில் மட்டுமின்றி ஒவ்வொரு வேலை தொழுகைக்கு முன்னரும் ஹரத்தினை சுற்றி உள்ள சாலைகளை வாகனங்கள் செல்லமுடியாதவாறு அடைத்து விடுவார்கள்.


புறாக்கள்


மக்காவில் எங்கு பார்த்தாலும் புறாக்கூட்டம் லட்சக்கணக்கான புறாக்கள்.இருப்பினும் ஹரத்தின் மொட்டை மாடி கைப்பிடிகள்,சுற்றுவட்டாரம்,ஏன் தங்கி இருந்த ஹோட்டல் ரூமின் பால்கனிசுவர்கள் ஜன்னலோரங்கள் எதிலுமே புறா எச்சங்களை நான் பார்த்ததில்லை.இங்கு சென்னையில் நான் வசிக்கும் பகுதியிலும் புறா நடமாட்டமுண்டு.சொற்பபுறாக்க‌ள் நடமாட்டத்துக்கே பால் கனியில் ஜன்னலோரத்திலும் புறா எச்சங்கள் அசிங்க‌ப்படுத்தவதை ஒப்பீடு செய்து ஆச்சரியப்பட்டதுண்டு.ஒரு திடலில் புறாக்க‌ளுக்கு தீனி போட்டு மகிழ்கின்ற‌னர் மக்க‌ள் கூட்டம்.வீதியெங்கும் நெல் மணிகளும் கோதுமை மணிகளும் கொட்டிக்கிடக்க புறாக்கள் கொத்தித்தின்னும் அழகினைப்பாருங்க‌ள்.



மினா





சுமார் 30 லட்சம் ஹாஜிகள் கூடாரமடித்துத் தங்கக்கூடிய அளவு வசதி உள்ள பிரமாண்டமான மைதானம் இங்கே உள்ளது.சவுதி அரசாங்கம் தீ பிடிக்காத குளிர்சாதனவசதி உள்ள சுமார் 30 லட்சம் ஹாஜிகளுக்கு தேவையான கூடாரங்களை தண்ணீர் வசதியுடன் ஏற்படுத்தித்தந்திருக்கின்றது.இங்கு படுக்கை இரண்டடி அகலம் ஆறடி நீளம் கொண்டது ஒவ்வொரு ஹாஜிக்கும் ஒதுக்கப்பட்டு இருக்கும் இடமாகும்.ஒரு கூடாரத்தினுள் சுமார் 60 முதல் 100 பேர் வரை தங்கக்கூடியதாக இருக்கும். இதனுள்ளே 5நாட்கள் தங்கி இருந்து உண்டு உற‌ங்கி தொழுது பிரராத்தனை செய்து கொண்டிருக்க வேண்டும்.


சவுதி அரசாங்கத்தால் 30 லட்சம் ஹாஜிகளுக்கு மேல் தங்கக்கூடிய கூடாரங்கள் அமைக்கப்பட்டு இருந்தாலும் வீதிகளில் தற்காலிகமாக கூடாரங்கள் அமைத்து ஹஜ் கிரியைகளை செய்யும் ஹாஜிகளைப்பாருங்கள்.அந்த கூடார‌மே இன்றி வானமே கூரையாக நினைத்து ஐந்து நாட்களும் தெருவோரத்தில் குழந்தைகளுடன் தங்கி இருந்து ஹஜ்ஜை நிறைவேற்றும் ஹாஜிகளும் உண்டு.  

ஆயிரக்கணக்கில் இருக்கும் மினா கூடாரங்கள்



சுமார் 30 லட்சம் ஹாஜிகள் கூடாரமடித்துத் தங்கக்கூடிய அளவு வசதி உள்ள பிரமாண்டமான மைதானம் இங்கே உள்ளது.சவுதி அரசாங்கம் தீ பிடிக்காத குளிர்சாதனவசதி உள்ள சுமார் 30 லட்சம் ஹாஜிகளுக்கு தேவையான கூடாரங்களை தண்ணீர் வசதியுடன் ஏற்படுத்தித்தந்திருக்கின்றது.லட்சக்கணக்கான மக்கள் தங்கி இருந்து கடமைகளை நிறைவேற்றி விட்டு திரும்பியவுடன் சுத்தம் செய்யப்பட்ட மினா டெண்டுகள்.கூட்டம் கூட்டமாக மனிதத்தலைகள் குவிந்த இடம் பிறகு ஆள் அரவமின்றி வெறிச்சோடு உள்ளது

நடச்சத்திர டெண்ட்


இது நட்சத்திர‌ டெண்ட்.வி ஐ பிக்களுக்குறியது.சீரியல் பல்புகளும்,அலங்காரத்தோரணங்களும்,சிகப்பு கார்பெட்டும் இருக்கைகளும் இன்னும் பற்பல வசதிகள் அமையபெற்ற டெண்ட் வாசலில் காவலாளி துணையுடன்.



அரபா

ஹஜ்ஜின் முக்கிய கிரியைகள் நிறைவேறும் இடம்.ஹஜ்ஜின் முக்கிய தினமான அரபா தினத்தன்று ஹஜ்ஜாளிகள் அனைவரும் இங்கு ஒன்று கூடி இறைவனிடன் தொழுது பிரார்த்தனை புரிவார்கள்.தூரத்தே காணும் மலை உச்சியில்தான் ஆதம்(அலை)ஹவ்வா (அலை) இருவரும் முதன் முதலில் பூமியில் சந்தித்துக்கொண்ட இடமாகும்.இதற்கு "ஜபலே ரஹ்மத்" என்று பெயர்.இந்த மலையின் அடிவாரத்துக்கு கீழுள்ள பெரும் திடலில் தான் தற்காலிக கூடாரங்கள் அமைத்து ஹாஜிகள் தங்க வைக்கப்படுவார்கள்.இறைவன் முன் இரு கையேந்திகண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் ஆறாக ஒட ஹாஜிகள் பிரார்த்தனை புரிவது மிகவும் நெகிழ்வுக்குறிய விஷயம்.பிரார்த்தனை அங்கீகரிக்க கூடிய இடமாகும்

முஸ்தலிஃபா 




முஸ்தலிஃபா என்பது மினாவுக்கும்,அரஃபாத்துக்கும் இடையில் உள்ள ஒரு இடமாகும்.துல் ஹஜ் மாதம் 9,10 ஆவது நாள்களுக்கு இடையே உள்ள இரவில் ஹாஜிகள் இங்கே தங்க வேண்டும்.நடு ரோட்டின்  மேல் அமர்ந்து இரவு முழுதும் பிரார்த்தனையில் ஈடு படவேண்டும்

அங்கே ஹாஜிகள் 70 பொடிக் கற்களைப் பொறுக்கிக்கொள்ள வேண்டும்.பாலைவனம் நிறைந்த அந்த நாட்டில் முஸ்தலிஃபாவில் மட்டும் எங்கு பார்த்தாலும் பொடிக்கற்களாவே தென் படுகின்றன.ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான ஹாஜிகள் கல் பொறுக்குகின்றனர்.கல் பற்றாக்குறை வருவதே இல்லை.இது அல்லாஹ்வின் அற்புதமாக உள்ளது.இந்த இடம் துஆ ஏற்றுக்கொள்ளப்படுவதில் விஷேஷ அந்தஸ்த்தைப்பெறுகின்றது.

முஸ்தலிஃபாவில் தங்கிய ஹாஜிகள் அனைவரும் மினாவை நோக்கி நகர்ந்து செல்வர்,அப்போது ஒரே மைதானத்தில் ஹாஜிகள் அனைவரையும் பார்க்கும் பொழுது மறுமை நாளில் அல்லாஹ்வுக்கு முன்னால் எல்லா மனிதர்களும் நிறுத்தப்படும் காட்சி நினைவுக்கு வரும்.


கற்கள்

முஸ்தலிபாவில் பொறுக்கபட்ட கற்கள்.