April 14, 2010

கதைகேளு..கதைகேளு..



பதினெட்டு,பதினாறில் என் செல்வங்கள் அவர்களை நான் நிமிர்ந்து பார்க்கும் உயரத்தில் வளர்ந்திருந்தாலும்,இறைஅச்சமும்,படிப்பும்,கணினியும்,வாழ்க்கைமுறையும் , அவர்களுக்கு நான் அறியாதவைகளை எல்லாம் கற்றுத்தந்திருந்தாலும்,பெற்ற எனக்கே யோசனைகளும்,கருத்துக்களும் கூறி என்னை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கும் எனதருமைசெல்லங்கள் இன்றுவரை என்கதைகள் கேட்டு மகிழ்வார்கள்.நற்கதைகளும்,நீதிக்கதைகளும் கூறி அவர்களை புடம் போடுவதென்பது என்னின் மகிழ்ச்சி.சகோதரர் ஸ்டார்ஜன் தொடர் பதிவின் அழைப்பிற்கிணங்க என் பிள்ளைகள் கேட்டு மகிழ்ந்த கதை இங்கே..

செம்பவழநாட்டில் செம்பவழ‌ன் என்றொரு மன்னன் நல்லாட்சி புரிந்து வந்தான்.தன் மக்களுக்கு நல்லது செய்யும் தயாளகுணம் கொண்ட மன்னனாகினும் கண்டிப்பும்,கறாரும் மிகுதியானவன்.இது தலைமைக்கு அழகுதானே?

அதே நாட்டில் அஹ்மத் என்றொரு ஏழை வாழ்ந்து வந்தான்.அவன் வாழ்க்கையே பசியும்,பட்டினியினாலும் பின்னிபிணையப்பட்டவை.தன் தரித்திரம் தாங்க முடியாமல் மன்னனிடம் சென்று தன் ஏழ்மைபற்றி முறையிட்டு வறுமை நீக்குமாறு தாழ்மையுடன் கேட்டான்.

மன்னன் அவனது வேண்டுகோளை ஏற்று விலை மதிப்புள்ள ஒரு வைர‌க்கல்லை வழங்கினான்.அஹ்மத் மகிழ்வுடன் பெற்றுக்கொண்டு தன் பையில் பத்திரப்படுத்திக்கொண்டு தன் வீடு நோக்கி நடக்கும் பொழுது ஒரு குளம் கண்டு தன் தாகம் தீர்க்க குளக்கரையில் அமர்ந்து கைகளால் நீரை அள்ளி பருக ஆரம்பித்தான்.

தன் தாகம் தீர்ந்த பின்தான் தெரிந்தது.சட்டைப்பையில் பத்திரமாக வைத்திருந்த வைரக்கல் குளத்தோடு போய் விட்டதென்று.அழுதும,புலம்பி இருட்டும் வரை குளக்கரையில் தேடி ஓய்ந்து கவலையுடன் வீடு திரும்பினான்.

மறுநாள் மீண்டும் அரசனிடம் சென்று முறையிட்டான்.அரசரோ அவனது அலட்சியத்தை கடிந்து விட்டு இன்னொரு வைரக்கல்லை கொடுத்து "இதுதான் கடைசி"என்று எச்சரித்து அனுப்பினார்.

இப்பொழுது வைரக்கல்லை துணியால் சுற்றி பத்திரமாக தன் சட்டைப்பையில் வைத்துக்கொண்டு மகிழ்வுடன் வீடு திரும்பிய பொழுது மீண்டும் அதே குளம்,அதே தண்ணீர் தாகம்.இந்த முறை முன்னெச்சரிக்கையாக துணியில் சுற்றப்பட்ட வைரத்தை பத்திரமாக குளத்தடியில் வைத்து விட்டு நீர் அருந்திவிட்டு வந்து பார்த்தால்..ஒரு காகம் துணியுடன் சேர்த்து வைரகற்களை கவ்விய படி பறந்து மறைந்து விட்டது.

அதிர்ச்சியில் சிலையாகிப்போன அஹ்மத் அழுதபடி வீடு திரும்பினான்.அரசரை மீண்டும் சந்தித்து பேச பயந்தவன் பசியும் பட்டினியுமாக வாழ்ந்த பொழுது அரசனிடம் இருந்து மறு அழைப்பு.

பயந்தபடி சென்றவனிடம் அரசன் கேட்க,நடந்தவைகள் அனைத்தையும் அழுதபடி கூறினான்."இதற்கு மேல் நான் உதவி செய்ய முடியாது.எல்லாம்வல்ல இறைவனிடம் கேள்.அவன் உனக்கு உதவி செய்வான்"என்று கூறி அனுப்பி வைத்தான்.

வீட்டிற்கு வந்தததும் இறைவனிடம் அழுது,புலம்பி தனக்கேற்பட்ட இன்னல்களை கூறி உதவி கேடவனாக இருந்தான்.


அஹ்மதின் மனைவி பல நாள் பட்டினியுடன் வாடியவள் அன்று தன் வீட்டு கொல்லையில் இருந்த முருங்கை மரத்தில் கீரைகள் பறித்து கட்டுகளாக கட்டி விற்ற பணத்தை அஹ்மதிடம் கொடுத்து"இன்றாவது பிள்ளைகளுக்கு மீன் குழம்பு வைத்துக்கொடுப்போம்.மீன் வாங்கி வாருங்கள்"என்றாள்.

அஹ்மதும் பணத்தை வாங்கிச்சென்று மீன்கள் வாங்கி வந்தான்.

மீன் சுத்தம் செய்து கொண்டிருந்த பொழுது எங்கிருந்தோ காகம் வந்து மீனை கவ்விக்கொண்டு போய் விட்டது.

அஹ்மத் காகம் சென்ற திக்கில் போனபொழுது அது முருங்கை மரத்தில் கட்டி இருந்த கூட்டினுள் போய் உட்கார்ந்ததை பார்த்த பொழுது அவசரமாக முருங்கை மரம் ஏறி மீனை எடுத்து விடலாம்.இன்றொருநாளாவது பிள்ளைகள் வயிறார மீன் சாப்பாடு சாப்பிடட்டும் என்ற நோக்கில் மரம் ஏறி காகத்தை விரட்டி மீனை கையால் எடுத்த பொழுது கூட்டினுள் துணியால் சுற்றப்பட்ட ஒரு பொட்டலம் கண்டு அதனையும் மீனுடன் சேர்த்து எடுத்து வந்தான்.

அந்த பொட்டலம் அவன் வைரம் வைத்து சுற்றபட்ட பொட்டலம்.வைரம் கிடைத்த மகிழ்ச்சியில் இறைவனுக்கு நன்றி கூறி வைரத்தை பத்திரப்படுத்தினான்.

கணவனால் மீட்கப்பட்ட மீன் திரும்ப கிடைத்ததும் அதனை சுத்தம் செய்ய ஆரம்பித்தவள் மீன் வயிற்றினுள் இருந்து ஒரு வைரகல்லைப்பார்த்து கணவரிடம் கூற அது அரசனால தனக்கு வழங்கப்பட்ட வைரம்தான் என்பதனை அறிந்து இறைவனின் கருணையை,அளப்பறிய ஆற்றலை,கேட்டதும் உதவிய தயாளத்தை எண்ணி வியந்து தரையில் நெற்றி பதித்து இறைவனுக்கு நன்றி சொல்ல ஆரம்பித்தான்.

நீதி:

இறைவனிடம் கை ஏந்துங்கள்
அவன் இல்லை என்று சொல்லுவதில்லை
பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள்
அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை

ஈ எம் ஹனீஃபா அவர்களின் கணீர் குரலில் இந்த வைரவரிப்பாடல்கள் எப்பொழுது கேட்டாலும் உடல் புல்லரிக்கும்.மனம் சிலிர்த்துப்போகும்,கண்களில் கண்ணீர் ததும்பும்,இறைவனுக்கும் நமக்கும் உள்ள நெருக்கம் இன்னுமும் அதிகரிக்கும் போலுள்ள பிரம்மையை ஏற்படுத்தும்.நீங்களும் ரசியுங்கள்.

சித்திரைதிருநாள் வாழ்த்துக்கள்!

அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இனிப்புடன் கொண்டாடுங்கள்

இனிய வார்த்தை பேசுங்கள்

இன் முகம் காட்டுங்கள்.

இழி சொற்களை அகற்றுங்கள்

இதிகாசம் கேளுங்கள்

இன்ப வாழ்க்கை வாழுங்கள்

இறைவனை வணங்குங்கள்

இறைய‌ச்சம் நிலைக்கட்டும்

இதை விடவும் மேலான‌

இன்வாழ்வு அங்குண்டு

இதுதனை மறவாமல்

இடறின்றி வாழுங்கள்

இகமெல்லாம்

இன்புறவே

இன்பமாக வாழுங்கள்

April 10, 2010

ராணி கீரீடம்

சக சகோதரப்பதிவர்களுக்கு ராஜகிரீடம் கொடுத்தோம்.எனது 50ஆவது இடுகையில் சக பெண்பதிவர்களுக்கு ராணிகிரீடம் கொடுப்பதாக இருந்தது.ஆனாலும் அதுவரை பொறுமை இல்லை.இதோ என் அன்பு சகோதரிகள் இந்த கிரீடத்தை ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகோள் வைக்கின்றேன்.


முன்னர் சொன்னது போல் வலைஉலகில் புகுந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தி,எண்ணங்களைப்பகிர்ந்து,ஆலோசனை,அறிவுரை,குறிப்புரை,வரலாறு,நகைச்சுவை,கவிதை,மொக்கை,சமையல்,கதை.கற்பனை என்று கலக்கி தங்கள் வலைப்பூவை ஆட்சி செய்யும் ராணிகளுக்கு இவ்விருது பொருந்தும்தானே.முகம் அறிந்த சில சகோதரிகள் தலையில் இக்கிரீடத்தை மாட்டி கற்பனை செய்து மகிழும் பொழுது மகிழ்வாக உள்ளது.

1.என் அன்புத்தோழி,தங்கை.என் முதல் பதிவுலக நட்பு,தினம்,தினம் தொடர்பு கொண்டு எண்ணங்களைப்பறிமாறிக்கொள்ளும் நெருக்கம்,தொடர்ந்தார்ப்போல் மூன்று நாள் தொடர்பில்லாவிட்டாலும் "அக்கா என்ன ஆச்சு" என்று பதறும் பாசம் ,சமையலில் ராணியாக அசைக்கமுடியாத இடத்தில் இருந்தாலும் அக்கா இப்படி செய்யலாமா?அக்கா அப்படி செயலாமா என்று என்னிடம் கேட்டு நான் எது சொன்னாலும் அதில் நம்பிக்கைக்கொண்டு,நல்லதைத்தான் நான் சொல்லுவேன் என்று அதீத நம்பிக்கை வைத்து இருக்கும் என் அன்பு உடன் பிறவா தங்கை
ஜலீலாவுக்கு இவ்விருதினைக்கொடுத்து மகிழ்கிறேன்.

2.எப்பொழுதும் என்னை கலாய்த்து மகிழும் ,பதிவில் பூஸைக்காட்டி காட்டி என்னை பயமுறுத்தும் அன்புத்தங்கை
அதிரா.

3.சமையலில் புதுமை புகுத்துவதிலும் சரி,விருதுகளை வாரி வழங்குவதிலும் சரி முன்னிலை வகிக்கும்
மேனகா.

3.டிரங்குப்பொட்டி திறந்து பல்சுவைகளை வழங்கும்,பதிவில்தான் கிண்டலும் கேலியும்,குத்தலும்,குடைச்சலுமாக இருந்தாலும் தனிபட்ட முறையில் அந்த ஹுசைனம்மாவா ?என்று ஆச்சரியப்படவைக்கத்தோன்றும் அம்சஅடக்கமான தங்கை
ஹுசைனம்மா.

4.பதிவுலகில் என் நெருங்கிய அன்பு ஸ்நேகிதி,அலுவலக,வீட்டு வேலைகள் இவரை இறுகப்பிடித்து இருந்தாலும் ஆர்வத்துடன் பதிவிட்டு,எதனை செய்தாலும் பொறுமையுடன்,நேர்த்தியுடன் பாங்குற செய்வது இவருக்கு கை வந்த கலை. மலர்வனத்தில் பூக்களை பதமாக அழகுற பயிரிடும் என் தோழி
செந்தமிழ்செல்வி.

5.பிற தளங்களில் அதிகம் எழுதி அதன் மூலம் தொடர்பு கொண்ட சொற்ப நாட்களிலே நெருக்கமாகிவிட்ட,பதிவுலகில் நன்முத்துக்களை சிதற விடுபவர் , எழுத்தாளர்,கவிஞர்,ஓவியர்,சமையல்கலை வித்தகர் ,பாடகி கிட்டத்தட்ட எண்ணங்களிலும் ரசனைகளிலும் என்னை ஒத்துப்போகும்,அது பற்றிக்கூறி சிலாகிக்கும் என் அன்பு அக்கா
மனோ சுவாமிநாதன்.

6.நெல்லை சமையலில் கலக்கிக்கொண்டிருக்கும் மற்றொருதோழி இவர்.இணையதளங்களில் வரும் குறிப்புகளுக்கெல்லாம் பின்னூட்டமிட்டு அனைவரையும் உற்சாகமூட்டும் மிக நல்ல,பெரிய,பொறுமையான மனது இவருக்கு.இவரிடம் பிடித்ததும் இதுவேஅவ்வப்பொழுது தொடர்பு கொண்டு ஸ்நேகிதத்தை தொய்வில்லாமல் வைத்துக்கொண்டு,புதியதாக வலைப்பூ ஆரம்பித்து சமையலில் அசத்திக்கொண்டிருக்கும்
ஆசியாஉமர்


7.சைவசமையலில் வெளுத்துவாங்கும் ,முகமறியாவிட்டாலும் பேச்சில் அனபையும் பாசத்தையும் குழைத்து விருந்தாக்கி,ஊட்டிமகிழும் விஜி

8.நகைச்சுவையாக நல்ல விசயங்களை நல்கும் சித்ரா

9.கவிதையில் கலக்கி,அனுபவங்களை அழகுற அள்ளித்தெளித்து படிப்பவர்களை நெகிழ்ச்சி அடையச்செய்யும் மலிக்கா

10.இவர் கவிதை கண்டு அசந்து போன கணங்கள் பல உண்டு.நான் வசிக்கும் நகரமே இவர்வசிக்கும் நகரமென்பதில் எனக்குண்டு பெருமிதம்.யாரு?நம்ம
தேனம்மை அக்காதான்.

11.கலகலப்பாக கலக்கும்
கவிசிவா.

12.புதியதாக வலைஉலகில் மினுமினுக்கும்
மின்மினி

13.பிரியாணி என் தலைப்பிட்டு பிரியாணி பிரியாணியை கண்ணிலேயே காட்டாவிட்டலும் விரைவில் பெரிய விருந்தே படைக்கப்போகும்
நாஸியா

14.அம்சமாக ஹதீஸ்களை எடுத்து சொல்லும் பாத்திமாஜொஹ்ரா.

15சமையலில் கலக்கும்
சுஸ்ரீ

16.மகளுக்கென்றே வலைப்பூ பின்னும்
ஹார்ஷினி அம்மா

17.அத்திப்பூத்தார்ப்போல் பதிவிட்டாலும் சிந்திக்கத்தூண்டும் பதிவிடும்,அவ்வப்பொழுது என்னை மறந்தே போகும்
இலா

18.சமைப்பது சுலபம்.சமைப்பதை பாங்குற அலங்கரிப்பது சிரமம்.அந்த வேலையை அழகுற செய்து பார்ப்பவர்களை வாவ் சொல்ல வைக்கும்
அம்முமது.

19.மற்ற இணையதளங்களுக்கு சென்று உபயோகமான பதிவுகளை திரட்டித்தரும் சிங்கப்பூர்
பிரபாதாமு.

20.போட்டோக்களை அழகுற கிளிக் செய்து அதனையே சக பதிவர்களுக்கு அன்பளிப்பாகத்தரும்
இமா.

21
.
செபா மேம்.இவரிடம் நான் அதிகம் பேசாவிட்டாலும் மரியாதைகலந்த அன்பு என்றும் உண்டு மூத்தபதிவரென்று.

22.இவர் சமையலறையில் உள்ளதை அழகுற பறிமாறும்
கீதாஆச்சல்.

23.சிறுகதைகள் சிறப்பாக‌ எழுதி வரும் வானதி.

24.விருந்து படைக்கும் மகி

25.பல்கலை வித்தகர்,இப்பொழுதெல்லாம் இவர் வலைப்பூவைத்திறந்தால் புதியபூ பூக்காமல் வெறுமையோடுகின்றது.கிடைக்கும் நேரத்தில் வந்து பதிவிட வேண்டி சுஹைனா விற்குஅழைப்பு விடுகின்றேன்

26.தனது இனிய இல்லத்தில் விதவிதமான அழகுப்பூக்களைப்பூக்கச்செய்யும்,கைவினைப்பொருட்கள் மட்டுமின்றி அனைத்திலும் வித்தகியாக சகலகலாவல்லி,புதியதாய் இவ்வுலகில் ஒரு சிறு பூ உதயமாக ஓய்வெடுத்தாலும் பதிவுலகில் தொய்வில்லாமல் இருக்க அவ்வ‌ப்பொழுது நற் பதிவுகளை வெளிவரசெய்துகொண்டுஇருக்கும் மிகப்பொருப்பான தங்கை பாயிஷாகாதர்.

27.அழகுற கவிதை எழுதும் பவி

28.அழகிய கருத்துக்கள் வழங்கும் மலர்.

29.ஆவக்காயில் பிரியாணி போடுபவர்.ஹைதையை அவ்வப்பொழுது செலவில்லாமல் சுற்றிக்காட்டுபவர்,நல்ல உணவகங்களை அறிமுகப்படுத்துபவர்..யாராக இருக்கும்?புதுகைதென்றல்தான்

30.அழகுற இணையதளம் நடத்தி நன் அதிகம் பங்கேற்காவிட்டாலும் தவறாது படித்துவரும் தமிழ்க்குடும்பம்

31.வித விதமான கோலங்களில் கலக்கும் சாருஸ்ரீராஜ்

32.சமையல் மற்றும் வித்தியாசமான படங்கள் மூலம் அசத்தும் சின்னுரேஸ்ரி மாதேவி

ஆகியோருக்கு இந்த ராணி கிரீடத்தை வழங்கி மகிழ்கின்றேன்.வலைஉலகராணிகளுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்.நீங்களும் உங்களுக்கு ப்ரியப்பட்ட ராணிகளுக்கு கொடுத்து மகிழுங்கள்!




நன்றி ஜெய்லானி
சகோதரர் ஜெய்லானி தந்த இவ்வைர விருதினை என் வலைப்பூவில் பதித்து பத்திரப்படுத்தி மகிழ்கின்றேன்.நன்றி சகோதரரே!

April 8, 2010

தோஹா மியூஸியம்

கத்தார் மியூஸியம் ஆஃப் இஸ்லாமிக் ஆர்ட்...கத்தார் தலைநகர் தோஹாவில் பார்க்கவேண்டிய ஒரு அதிஅற்புதமான கலைப்பொக்கிஷ‌ங்களின் உலகம்.கடலுக்கு நடுவில் அதி நவீனமாக,உயர்ந்த தொழில் நுடபத்துடன் அழகுற நிர்மானிக்கப்பட்டுள்ளது.

வளர்ந்து வரும் கத்தாரில் 2008ஆம் ஆண்டு
நவம்பர்மாதம் 22ஆம் தேதி ஆரம்பிக்கபட்ட இந்த ஹைடெக் ஆர்கிடெக்சருடன் பிரம்மிக்கத்தக்கவகையில் பிரமாண்டமாக உலகில் மிக பிரபலமான முன்னணி கட்டிடக்கலை நிபுணர் IEOH MING PEIஎன்பவரால் வடிவமைக்கப்பட்டது.
பார்க்கவேண்டிய ஒரு அதிஅற்புதமான கலைப்பொக்கிஷ‌ங்களின் உலகம்.


தெற்குப்பகுதி கடற்கரை ஓரம் மேன் மேட் ஐலேண்ட் ஆக அமையக்க்ப்பட்டுள்ளது.3000 சதுர மீட்டர் ‍‍(376740 சதுர அடி)ஐந்து மாடிகளைக்கொண்டு அமைக்கப்பட்டுள்ளது

மேற்கூரையை பார்க்கும் பொழுது இறைவனின் அளப்பறிய ஆற்றலை எண்ணி வியந்தேன்.இத்தகைய கறபனை வளத்தை மனிதனுக்குள் தான் இறைவன் அமைத்தான் என்பதை எண்ணிப்பார்க்கும்பொழுது நெகிழ்ச்சியாக இருந்தது.ஒரே மோல்டில்,மெட்டாலிக் எஃபெக்ட்டுடன் நிமிர்ந்து பார்ப்பவரை ஆச்சர்யப்படவைத்தது.
கண்ணாடித்தடுப்புக்குள் அமர்ந்து பார்த்தால் அருகிலேயே தெரியும் பரந்த கடல் தூரத்தே கட்டிடங்கள்,கடலில் ஜிவ் வென்று படகு சவாரி செய்யும் கத்தாரிகள்(இவர்களின் பொழுதுபொக்கே படகுசவாரிதான்)தகதகக்கும் வெயிலை மீறி வரும் ரம்யமான குளிர்..
அழகுமிகு பரந்து விரிந்த காரிடார்.ஹோட்டல்,ஷாப்பிங்மால் மற்றும் தியானக்கூடம் கஃபேட் ஏரியா என்று அனைத்து வசதிகளும் செய்யப்பட்ட இங்கு நுழைவு கட்டணம் இல்லாவிட்டாலும் தீவிரமான பரிசோதனைக்குப்பிறகே பார்வையாளர்கள் அனுமதிக்கப்ப்டுகின்றனர்.
வித்தியாசமான கோணத்தில் அகலமான படிக்கட்டுகள் கண்ணைகவருகின்றன.
நிமிர்ந்து பார்த்தால் கழுத்து வலியெடுக்கும் உயரத்தில் மெட்டல் குதிரை கம்பீரமாக‌.
வைரம்,மற்றும் எமரால்ட் பதிக்கப்பட்ட 16ஆம் நூற்றாண்டின் நெக்லேஸ்.
தங்க எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட திருக்குர் ஆன்
டிரங்குப்பெட்டி.அதிகலை நயத்துடன் வருடங்கள் பல கடந்தாலும் பளீரிடுகின்றது.இங்கு செராமிக்,மெட்டல்,ஜுவல்,கிளாஸ் ,கிளாத் போன்ற கலெக்ஷன்களின் எண்ணிக்கை 2500க்கும் மேல் உள்ளது.
11 ஆம் நூற்றாண்டின் அரசருடைய ஆடை.விபரம்தரப்படவில்லை.தொட்டால் தூள் ஆகிவிடும்.பளபள கண்ணாடிப்பெட்டியினுள் பக்குவமாக பாதுகாத்து வருகின்றனர்.நூற்றுக்கணக்கான கண்காணிப்பு கேமராவும்,ஊழியர்களும் பாதுகாப்பும் அனைத்துப்பொருட்களையும் கண்ணாடிக்கூண்டுக்குள் பத்திரப்படுத்தி வைத்து இருந்த விதத்தையும் பாராட்டாமல் இருக்க முடியாது.
அலங்கார கூஜா.பொன்னெழுத்து பொறிக்கப்பட்டு தகதகக்கின்றது.
12ஆம் நூற்றாண்டின் திரு குர் ஆன்.தங்க எழுத்துக்களில் நூற்றாண்டுகள் பல கடந்தாலும் அதனுடைய கருத்துக்களைப்போல்,அறிவுரைகளைப்போல்,சத்தியங்களைப்போல் மின்னுகின்றது.தொட்டு மகிழவேண்டும்,நெற்றி பதிக்க வேண்டும்,சிலவரிகள் ஓதி திளைக்கவேண்டும் ஆவல் எழுப்புகின்றது.
பார்ப்பதற்கு உருவத்திலும்,நிறத்திலும் கிளியைப்போல் தோற்றம் தரும் ஃபால்கான் பறவை.தங்கதில் ஆன எனாமல்,ரூபி,எமரால்ட்,வைரம் சபையர் போன்றவற்றினால் செய்யப்பட்டது.இதன் அழகைப்பார்த்து அதனை விட்டு நகரவே மனதில்லை.இங்கே அணிவகுத்து நிற்கும் பொருட்கள் 7வது நூற்றாண்டில் இருந்து 19 வது நூற்றாண்டு வரை உள்ளவையாகும்.மூன்று கண்டங்களில் முக்கியமாக இந்தியா,வளைகுடா,ஸ்பெய்னில் இருந்து திரட்டப்பட்டவை ஆகும்
வேலைப்பாட்டுடன் கூடிய 13 வது நூற்றாண்டின் செராமிக் தட்டு.
ஆபரணங்கள்.பல நூற்றாண்டுகளுக்கு முந்தய டிசைன்கள் இப்பொழுது ஆண்டிக்,குந்தன் என்று புதிய பெயரில் பவனி வருகின்றது.
மெட்டலில் ஆன மிருகம்.

April 5, 2010

மலர்&காய்கனி கண்காட்சி - கத்தார்

கத்தார் ஃபெர்டிலைச‌ர் நிறுவனத்தினர்(QAFCO )கத்தார் நாட்டில் உள்ள உம்மு சைத் என்ற இடத்தில் மலர்.காய்கனி கண்காட்சி கடந்த வெள்ளி அன்று நடத்தினர்.எங்கு பார்த்தாலும் இந்திய முகம் குறிப்பாக தமிழ் முகங்கள்.ஆவலுடன் உள்ளே நுழைந்தால் வதங்கிய காய்கள்,மலர்கள் நம்மை அழுது வடித்து வர‌வேற்கின்றன."த்சோ..ஹைப்பர் மார்க்கெட்டில் கூட இதைவிட அழகா,பசேலென்று இருக்குமே.இந்தியாவில் எப்படிப்பட்ட மலர்கண்காட்சிகளை பார்த்து இருக்கிறோம்இதற்கா இவ்வளவு தூரம் வந்தோம்((நாங்கள் தங்கி இருந்த இடத்தில் இருந்து ஷோ நடந்தது சுமார் 60 கிலோ மீட்டர் தூரம்.இடம் தெரியாமல் சுற்றி அலைந்தது சுமார் 10 கிலோ மீட்டர் தூரம்)"என்ற வந்த ஏமாற்றத்தை புறந்தள்ளி விட்டு கூட்டத்தைக்கடந்து உள்ளே நுழைந்ததும் இந்த காய்வண்டிதான் நம்மைப்பார்த்து சிரித்தது
ஹை...தக்காளி..நம்ம சகோதரர்கள் மங்குனியும்,ஜெய்லானியும் ஒருவருக்கொருவர் மாற்றிமாற்றி இந்த காயின் பெயரை சொல்லிக்கொள்வார்களே!
இந்த மலர்களும் மெல்ல சிரித்து உள்ளே வந்து முழுக்க பார்த்துட்டு அப்புறம் உங்கள் அபிப்ராயத்தை சொல்லுங்க என்பது போல் தலையை அசைத்தது.
சூரியகாந்திப்பூகளைப்பர்த்ததும் மனதில் உற்சாகம் ஆரம்பமாகி விட்டது.
தர்பூஸ் பழத்தை செதுக்கி மற்ற காய்கனிகளை வைத்து அலங்காரம் செய்து இருந்ததைப்பார்க்க புருவங்கள் மேல் எழும்பின.எனக்கு மட்டுமல்ல.(புல் வெளியில் சிகப்பு நிற பட்டுப்பூச்சி(இதனை எப்படி நீங்கள் சொல்லுவீர்கள்)சிறு பிராயத்தில் மழைக்காலங்களில் வரும் இந்த மெத்தென்ற பூச்சை உள்ளங்கையில் வைத்து ஓடும் பொழுது கைகள் குறுகுறுக்கும்.சிலிர்த்து குழந்தைகள் மகிழ்வார்கள்.அந்த ஞாபகம் வந்து விட்டது).
கடுகு,மற்றும் பருப்பு வகைகளை வைத்து இந்த வாத்து.அதிரா பாஷையில் "தாரா" தாரா..தாரா..வந்தாரா..சங்கதி ஏதும் சொன்னாரா என்று பாட வைத்த‌து.இதன் அழகில் ரொம்ப நேரம் அங்கேயே நின்று விட்டேன்.பின்னால் கேமராவை வைத்துக்கொண்டு காத்திருக்கும் ஒருவரின்"எக்ஸ்க்யூஸ்மி"காதில் விழும் வரை.
தர்பூஸ்,திராட்சை,ஆரஞ்சு,கிவி போன்ற பழங்களை வைத்து செய்த‌ இந்த அழகு சிற்பத்தைப்பாருங்கள்.
தர்பூஸில் செய்த கார்விங்.நல்லா இருக்கு இல்லே.மங்குனி ஐயா அப்படியே எடுத்து சாப்பிடுங்க‌.
பாஸ்தா மற்றும் ரெட் பீன்ஸில் செய்யப்பட்ட கோபுரம்.உங்களுக்கு வேறு மாதிரி தெரிந்தால் சொல்லுங்கள்.(ஜலி..பாஸ்தாவை காட்டியாச்சு.பாஸ்தாவில் ஏதாவது குறிப்பு போடுங்கோ)
உருளைக்கிழங்கு,மற்றும் இஞ்சியினால் உருவாக்கப்பட்ட அரேபிய சாது விலங்கு.பல கோணரத்தில் கிளிக் செய்தேன்.(உருளைக்கிழங்கில் மசால் தோசை போடலாம ஆசியா)
சாக்லேட்டினால் ஆன மந்தியார்.முறைக்குது இல்லே.அதிரா, குரங்கை சாப்பிடலாமா?
இதென்னன்னு பார்க்கறீங்களா?நம்புங்க.பட்டர் கார்விங்.அத்தனை தத்ரூபமாக செதுக்கி இருந்தவர் கைக்கு ஒரு பூங்கொத்து கொடுக்கலாம்.யார் என்று தெரியலியே?மிகவும் அழகான சிற்பம்.இதே போல் வெண்ணெய் கொண்டு மூன்று சிற்பங்கள் இருந்தன.அத்தனையும் அழகு.
வேறொண்ணுமில்லே.ஐஸ் கார்விங்.நேரில் பார்க்கும் பொழுது இதை விட நன்றாக இருந்தது.




April 1, 2010

கிரீடம்


அன்பை பலப்படுத்த அன்பளிப்புகளை கொடுத்து வாங்குங்கள் என்பது நபி மொழி.நான் பிளாக் ஆரம்பித்த இந்த ஏழுமாத காலத்திற்குள் இனிய நட்புகள்,நிறைய சகோதர,சகோதரிகள்,அவர்கள் தரும் ஊக்கங்கள் மட்டுமின்றி விருதுகள் தந்து,தொடர் பதிவுகளுக்கும் அழைத்து எழுத்துக்கு ஊக்கமெனும் டானிக்கை தந்து இருக்கின்றனர்.

ஆனால் நான் இதுவரை யாருக்குமே விருதும் தரவில்லை.தொடர்பதிவுகளுக்கும் அழைத்ததில்லை.காரணம் யாருக்கு கொடுக்கலாம்,யாரை அழைக்கலாம் என்று யோசிப்பதற்குள் எனக்கு அறிமுகமான எல்லா பதிவர்களுக்கும் பறிமாறப்பட்டு விடுகின்றது.

வாங்கி,வாங்கி வைத்துக்கொண்டு பேசாமல் இருப்பது முறை அல்லவே?அதனால் நானும் கொடுக்க விழைந்துள்ளேன்.

ம்ம்..யாருக்கு கொடுக்கலாம்?என்ன கொடுக்கலாம்.யோசிக்கயோசிக்க தலையினுள் இருக்கும் வெள்ளைப்பிரதேசம்(அதாங்க..ஏதோ எனக்குள் இருக்கும் சிறிய சைஸ் மூளை) டிரை ஆகிவிடுகின்றது.

சரி ..கொடுக்கலாம் என்று மனம் வைத்தாயிற்று.கொடுத்துடுறேன்.முதலில் ஜெண்டில் மேன் ஃபர்ஸ்ட்.(ஜெண்டில் வுமெண்களுக்கு ஸ்பெஷல் ஆக என் ஐம்பதாவது பதிவில் கொடுக்கறேன்(தாய்குலங்கள் அவசரப்பட்டு சபிச்சிடாதீங்க)

அரசவையில் கோலோச்சிக்கொண்டு இருக்கும் அரசருக்கு மட்டுமா கிரீடம் சொந்தம்?பதிவுலகில் கோலோச்சும் இவர்களுக்கும் கிரீடம் சொந்தம்தான்.எனவே இந்த அழகிய வைரகற்கள் பதிக்கபட்ட பிளாட்டினத்தால் செய்யப்பட்ட கிரீடத்தை சமர்ப்பிகின்றேன்.

1.சகோதரர் ஸ்டார்ஜன்(அமைதிப்புறாவாக பதிவிடுவிடுவதற்காக)

2.சகோதரர் ஜெய்லானி(சிந்திக்கத்தூண்டும் பதிவுகள் மட்டுமின்றி சிரிக்கவைக்கும் பின்னூட்டங்களுக்காக)

3.சகோதரர் ஜமால்(குறிஞ்சிப்பூவாக பதிவிட்டாலும் பதிவர்களுக்கு பின்னூட்டம் இட்டு பிற பதிவர்களின் வளர்ச்சிப்படிகளுக்கு நிற்கும் தூண்களில் ஒன்றாக இருப்பதற்காக)

4.சகோத‌ரர் ஷஃபி(அருமையான ஆக்கங்களை பகிர்ந்து கொண்டதோடு பதிவர்களுக்கு ஜமாலைப்போலவே ஊக்கம் தருவதற்காக)

5சகோதரர் .சீமான்கனி(தொடகட்டுரை,தொடர் கதை போன்று தொடர் கவிதை தந்து கன்னித்தீவு சிந்துபாத் ஆகிக்கொண்டிருப்பதற்காக)

6.சகோதரர் எஸ்.சரவணக்குமார்(மொக்கை,கவுஜை,கலக்கல்,கவிழ்த்தல் என பதிவுலகம் உற்சாக நடைபோடும் வேலையில் தனக்கே உரிய பாணியில் அமைதியாக பதிவிட்டு,பதிலிட்டு வருவதற்காக)

7.சகோதரர் ஷாஜஹான் என்ற மங்குனி அமைச்சர்(மனம் கனத்தால் தியானம் புத்தகம்,இசை,மழலை என்று
இருந்தது போக இவரது இடுகைகளையும்,பின்னூட்டங்களையும் பார்த்து மனங்கள் இலேசாகிப்போவதற்காக)

8.சகோதரர் ஹைஷ்(இவரும் பிரயோஜனமான முறையில் இடுகை இட்டு,சந்தேகங்களை சாந்தமாக தீர்ப்பதற்காக)

9.சகோதரர் வசந்த்(கட்டுரையானாலும் சரி,மொக்கையானாலும் சரி கலக்கிற கலக்கலில் பர்ர்ப்பவர்கள் ஆடிப்போவதற்காக)

10.சகோதரர் நிஜாமுதீன்(இவர் சிரிக்காமலே சிரிக்கவைக்கும் நகைச்சுவைக்காக)

மேற்கண்ட பத்து பேர்களுக்கும் இந்த கிரீடத்தை சமர்ப்பிகின்றேன்.கிரீடத்தை எடுத்து தங்கள் சிரத்தில் அணியா விட்டாலும்,உங்கள் வலைப்பூவின் சிகரத்தில்(உச்சியில்)அணிவிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். கேட்டுக்கொள்கிறேன்.

கிரீடத்திற்கு பொருத்தமானவர்கள் இன்னும் நிறைய சகோதரர்கள் இருந்தாலும் கிரீடம் பெற்றவர்களும் இதனை பகிந்து கொள்ள வேண்டுமென்ற நோக்கில் மேற்கண்ட பத்து பேர்களுக்கும் மட்டும் இக்கிரீடம் வழங்கப்ப்டுகின்றது.நீங்களும் உங்களுக்கு தோன்றியவர்களுக்கு கொடுத்து இந்த கிரீடம் நூறு சிரங்களிலாவது அலங்கரிக்கப்பட வேண்டும்.

குறுகிய காலத்தில் பதிவுலகத்தில் இருந்து கற்றுக்கொண்டது நிறைய..நிறைய.கவுஜை,ஆணிபிடுங்கல்,பொட்டிதட்டுதல்,கொசுவத்தி சுற்றல், மொக்கை எக்ஸ்ட்ரா..எக்ஸ்ட்ரா..என் தலையாய வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு இந்த பாடாகபடுத்தும் பதிவுலகில் எதோ ஒன்று போட்டுக்கொண்டு இருக்கிறேன்.

தவறாது படித்து,தவறாது ஓட்டளித்து,தவறாது பின்னூட்டமிட்டுவரும் நல் உள்ளங்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு இந்த இடத்தில் என் மகிழ்ச்சியையும் சமர்ப்பிக்கின்றேன்.மீண்டும் மீண்டும் தங்களின் நல் ஆதரவை தரும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.(ஆஹ்..வந்துட்டீர்களா ஜெய்லானி சார்!இப்ப என்னதான் சொல்ல வர்ரீங்க?அரசியலில் இறங்க ஐடியா இருக்கான்னு கேட்கவர்ரீங்க.அப்படித்தானே?ஐடியா வந்துச்சுன்னா கண்டிப்பா ஓட்டு கேட்டு வர்ரேன் ‍ வெள்ளிகாயினுடன்.மங்குனி ஐயா என்ன வாறு வாறப்போகிறாரோ?அதற்குள்ளே என்னை ஸ்டெடி பண்ணிக்கறேன்.)

டிஸ்கி

(யாரது அங்கே? ஹுசைனம்மாவா?அக்கா..ரொம்ப பில்ட் அப் கொடுக்க்றீங்க ஓவரா இல்லேன்னு முணுமுணுக்கறது..அதிரா.. ஜெனரேட்டர் ஓடுற சப்தம் உங்கள் பக்கமிருந்து வருது.பல்லை ரொம்ப கடிக்காதீங்கோ)