Showing posts with label வாழ்வியல். Show all posts
Showing posts with label வாழ்வியல். Show all posts

September 18, 2011

விட்டுக்கொடுத்தல்



”மீரா..ஆஃபீஸில் இருந்து வந்து பத்து நிமிஷமாகுது.இன்னுமா காபி ரெடியாகவில்லை”
சதீஷ் எரிந்து விழுந்தான்.

அவசர அவசரமாக காபி டபராவுடன் அடுக்களைக்குள் இருந்து வெளிபட்டாள்.’ஆஃபீஸில் இருந்து வழக்கத்தை விட ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்தால் காஃபி எப்படி ரெடியாகி இருக்கும்’மீராவுக்கு கேட்கத்தோன்றினாலும் சதீஷின் முகம் காட்டும் கோபத்தைக்கண்டு வாயைக்கட்டுப்படுத்திக்கொண்டாள்.

ஆஃபீஸில் உள்ள பிரச்சினையை வீட்டிற்கு கொண்டு வந்து கோபத்தின் உச்சத்தில் கணவர் இருப்பது புரிந்தது.

“என்னை என்ன சர்க்கரை வியாதிக்காரன் என்றா நினைச்சே”கோபம் தலைக்கேற காபி டம்ளரை தூக்கி அடித்தவனை விக்கித்துபோய் பார்த்தாள் மீரா.அவசரத்தில்,கணவன் காபி கேட்டு பட படத்ததில் பதறிப்போய் காபிக்கு சர்க்கரையே போட மறந்து விட்டாள்.சதீஷோ சகிப்புத்தன்மையின்றி,பொறுமை இன்றி ஆர்ப்பாட்டம் செய்கின்றான்.கணவன் மனைவி உறவுகளுக்குள் இப்பாற் பட்ட சின்ன சின்ன பிரச்சினைகள்தான் பெரிய பிளவுக்கு வித்திடுகின்றது.

அலுவலகத்தில் பிரச்சினை,நண்பர்களால் தொந்தரவு,உறவுகளுக்குள் விரிசல்,கடன் தொல்லை,பணம் பற்றாக்குறை,தன் மீது கூறப்படும் புகார்கள்,உடல் நலத்தில் பிரச்சினை,பெற்ற பிள்ளைகளால் கவலை,சந்தேகம்,கவுரவத்துக்கு குந்தகம்,இப்படி மனம்,உடல்,பணம்,சூழல் சார்ந்த குழப்பங்கள்,பிரச்சினைகள் மனிதனை அண்டும் பொழுது மனித மனம் பாரம் மிகுந்து அதனால் சிந்திக்கும் தன்மையும்அற்றும்,உச்சகட்ட கோபமும்,மன அழுத்தமும் ஏற்படுகின்றது.

இதனை கட்டுப்படுத்தாமல்,கட்டுப்படுத்த தெரியாமல்,கட்டுப்படுத்த விரும்பாமல் வெறுப்புகளை உறவுகளிடம்,நட்புக்களிடம் உமிழும் பொழுதுதான் பிரச்சினைகளை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கின்றான் மனிதன்.

நட்புகுள்ளும்,உறவுக்குள்ளும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை,சகிப்புத்தன்மை இன்றி இருந்தால் நாளடைவில் அது பெரும் விரிசல் ஏற்பட்டு பெரும் விபரீதத்தில் வந்து முடியும் வாய்ப்பே அதிகம்.
இதனால் மன அமைதி கெட்டு,நிம்மதி இழந்து நட்புக்களை,உறவுகளை இழந்து மனிதன் தனிமரமாகி விடும் வாய்ப்பும் அமைந்து விடும்.

தேவையற்ற சந்தேகங்கள்.கேள்விகள்,குற்றம் சுமத்துதல்.ஒருவரை மற்றவர் தூற்றுதல் போன்ற காரணிகளால் மனிதமனம் கருத்துவேறுபாடுகளுக்குட்படுகின்றது.கருத்து வேறுபாடுகள் ஏற்படும் பொழுது மன அழுத்தம் ஏற்படுகின்றது.மன அழுத்தத்தினாலேயே பெரும் பிரச்சினைகள்,குடும்ப விரிசல்கள்,விபரீதங்கள் போன்ற விரும்பத்தகா சூழ்நிலைகள் வாழ்க்கையில் ஏற்பட்டு வாழ்க்கையை சின்னாப்பின்னப்படுத்தி விடுகின்றது.

“நீங்கள் முன்னே போல் இல்லை”என்று பாசத்துடன் உங்கள் முன் விரல் நீட்டி கேட்கும் பொழுது,

“முன்பு போல் இப்ப அடிக்கடி வர்ரதே இல்லை”உரிமையுடன் உங்களிடம் கேள்வி கேட்க்கப்படும் பொழுதும்,

”என்ன முகத்தில் சிரிப்பைக்காணோம்.அடிக்கடி உம்மணாமூஞ்சாகி விடுகின்றீர்களே”என்று பாசத்துடன் உங்களிடம் வினா எழுப்பப்படும் பொழுதும்,

“இப்பல்லாம் உங்களை புரிந்து கொள்ளவே முடியவே இல்லை”என்று உங்களிடம் உள்ள அக்கரையில் கேட்கும் கேள்விகளின் பொழுதும்

“என்ன ஜி டாக்கில் எப்பவும் ஆஃப் லைனில் காட்டுறீங்க”என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தும் பொழுதும்

விழித்துக்கொள்ளுங்கள்.கேள்விகேட்போரின் விட்டுக்கொடுக்கும் தன்மை குறைவதை புரிந்து கொள்ளுங்கள்.அப்பொழுதே மனம் விட்டு பேசி சிக்கல்கள் விழுவதில் இருந்து தப்பித்துக்கொள்ளுங்கள்.உறவுகளுக்குள்ளும் நட்புகளுக்குள்ளும் சுமூக நிலை நிலவுவதற்கு வழிவகுங்கள்.

விட்டுக்கொடுத்தலும்,சகிப்புத்தன்மையும்,விரிசல் இல்லா உறவுகளும்,புரிதல் கொண்ட நட்புக்களும் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதவை.வாழ்கையை சுகப்படசெய்பவை.



July 14, 2011

கோபத்திற்கு குட்பை



மனிதனுக்கு இயற்கை தந்த பனிஷ்மெண்ட் என்று கோபத்தை சொன்னால் மிகை ஆகாது.ஆறுவது சினம் என்றார் அவ்வைப்பாட்டி.
கோபம் உள்ள இடத்தில் குணம் இருக்கும்,கோபம் சண்டாளம்,அடிக்கிற கைதான் அணைக்கும்,ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்று ஏகப்பட்ட பழமொழிகள் சினத்தை குறிப்பிட்டு சொல்லப்பட்டவைகள்.
மனித வாழ்க்கை சீராக சுபமாக செல்லவேண்டுமாயின் கோபத்தைக்குறைப்பதுதான் கைகண்ட மருந்து.

கோபத்தினால் நரம்புகள் இறுகும்.தலைவலி,இரத்த அழுத்தம்,உடல் வலிமை இழத்தல்,நரம்புத்தளர்ச்சி,மூச்சிரைத்தல் இப்படி பற்பல உடல் உபாதைகளை வலிய வரவழைத்துகொள்ள
வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவோம்.

கீழ்கண்ட காரணிகளால் கோப உணர்வுக்கு மனிதன் தள்ளப்படுகின்றான்.
1.இயலாமை
2.நினைத்ததை சாதிக்க இயலாமல் போகும் பொழுது
3.நிறைவேற்ற இயலாமல் போகும் காரியங்களினால்
4.பிறரைபற்றியே அதிகம் சிந்தித்தல்
5.பிறர் நம்மை மதிக்காத சந்தர்ப்பத்தில்
6.பிறர் நம்மை பொருட்படுத்தாத சூழ்நிலையின் பொழுது
6.சோம்பேறித்தனம் மிகும் பொழுது
7.பொழுத்து போகாமல் இருக்கும் பொழுது
8.ஏமாற்றங்களை சந்திக்கும் பொழுது
9.உடல் நலம் குன்றும் பொழுது
10.பொருளாதார சிக்கல் ஏற்படும் பொழுது
11.விவாதத்தின் பொழுது.
12.நம்முடைய கருத்துக்களை பிறர் ஏற்றுக்கொள்ளாத சூழ்நிலையின் பொழுது
13.பசியின் பொழுது

இப்படி பற்பல,வெவ்வேறு காரணங்களால் மனித மனம் இந்த கோப அரக்கனை இரத்தினம் கம்பளம் விரித்து வரவேற்கும் நிர்பந்தத்திற்குத்தள்ளப்படுகின்றது.
கோபம் கொள்ளும் பொழுது மனித மனங்களில், உடல்களிலும் ஏற்படும் மாற்றங்கள் எண்ணிலடங்காது.

சரி.இந்த கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது?
முதலில் கண்ணாடி முன் உங்கள் கோபமுகத்தை நோக்குங்கள்.
ச்சீ ...என்று வெறுத்து விடுவீர்கள்.எதனை ?கோபத்தைத்தான்.

கோபமாக முகத்தை வைத்துக்கொண்டு குளோஸ் சாட்டில் ஒரு போட்டோவும்,சிரித்த முகமாக வைத்துக்கொண்டு குளோஸ் சாட்டில்
மற்றொரு போட்டோவும்
எடுத்து படுக்கை அறை பக்கவாட்டு மேஜை மீது வைத்துக்கொண்டால் கோபம் கொள்வதில் இருந்து நம்மை மட்டுப்படுத்தலாம்.

கோபம் வந்தால் உடனே அந்த இடத்தை விட்டும் அகன்று சென்று விடுங்கள்.குளிர்ந்த நீரில் உடலை நனைத்தாலும் கண்டிப்பாக கோபம் மட்டுப்படும்.

மவுனத்தை கடைபிடியுங்கள்.ஈகோவை கைவிட்டு சுமுகநிலைக்கு தயாராகுங்கள்.

குழம்பும் மனதினை கட்டுப்படுத்தி ஒருமுகப்படுத்தக்கற்றுக்கொள்ளுங்கள்.
டேக் இட் ஈஸி பாலிசி மிகவும் நன்று.

இழந்த கவுரவத்தைப்பற்றி நினைத்துகொண்டே இராமல் மனதினை நிர்மூலப்படுத்துங்கள்.

இறைவன் நமக்கு அருளிய அருட்கொடைகளை எண்ணி உவகை கொள்ளுங்கள்.
எப்பொழுதும் சிரித்த முகத்துடன்,ஃபிரஷ் ஆக வளைய வரவேண்டும் என்பதில் தீர்மானமாக இருங்கள்.

கோபம் நம்மை விழுங்கி ஏப்பம் விட்டு கபளீகரம் செய்துவிடும் முன் நீங்கள் கோபத்தை மென்று ,விழுங்கி கபளீகரம் செய்து விடுங்கள்.

கோபத்துக்கு ஒரு பெரிய குட்பை சொல்லி விட்டு அப்புறம் பாருங்கள்.உங்கள் நட்பு வட்டமும்,உறவு வட்டமும் எப்படி பரந்து விரிந்து உங்களை பரவசப்படுத்துமென்பதை.















April 22, 2011

இனிமை நிறைந்த உலகம் இருக்கு!




நமது கடந்த காலத்தினை சற்று நினைவு கூர்வோம்.இதில் நாம் இழந்த இனிமைகள் எத்தனை?சந்தோஷக்கேடு எவ்வளவு?கஷ்டங்கள் எவ்வளவு?மனசஞ்சலம் எத்தனை?வேதனை எத்தனை?அதன் காரணிகளை சற்று யோசியுங்கள்.அநேகம் நாமாகவே இருப்போம்.அதேபோல் நமது செய்கையினால் பிற மனங்களை எவ்வளவு நோகடித்து இருக்கின்றோம்.பிறரது சின்ன சின்ன சந்தோஷங்களை சிதறடித்திருக்கின்றோம்.ரசனைகளை கொத்தி இருக்கின்றோம் என்று சற்று நேரம் ஆராயுங்கள் அமைதியாக.உண்மை புரிந்து நாணம் கொள்ளத்தோன்றும்.இப்படி எல்லாம் நடந்து சந்தோஷ தருணங்களை அநியாயமாக இழந்து விட்டோமே என்று மனம் உருகிவிடும்.

நம் வாழ்வில் நடந்த பற்பல நிகழ்வுகளை ஞாபகபடுத்திக்கொள்ளுங்கள்.கணவர் டூரில் இருந்து வரும் பொழுது வாங்கி வந்த காட்டன் சேலையினை பார்த்து விட்டு உதடு பிதுக்கி “உங்கள் செலக்‌ஷனோ செலக்‌ஷன்..ஏங்க மனுஷனுக்கு கொஞ்சமாவது ரசனை வேண்டாம்?”இப்படி வாய்களில் இருந்து வந்து விழும் வார்த்தைகளில் கணவரின் சிறிய எதிர்பார்ப்பு அப்படியே கசங்கிப்போய் இருக்கும்.

குடும்பத்துடன் ஒரு பிக்னிக் செல்கின்றோம்.மனதில் உள்ள ஏதோ ஒரு பிரச்சினையால் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டால் மொத்த குடும்பத்தின் சந்தோஷமும் தொலைந்து விடும்.வீட்டில் ஒரு விஷேஷ காரியம் நடக்கும் பொழுது ஒருவர் மட்டும் கோபத்தில் முறுக்கிகொண்டிருந்தால் மொத்த மகிழ்ச்சியும் காணாமல் போய்இருக்கும்.

மாமியார் ஆசை ஆசையாக கேட்ட கைகுத்தல் அரிசி சாப்பாட்டை ஒரு நாளாவது செய்து கொடுத்து இருகின்றோமா?வெளியில் போய் வரும் பொழுது குழந்தைகளுக்கு திண்பண்டங்களும்,பொம்மைகளும் வாங்கி வரும் பொழுது மாமியாருக்கென அவருக்கு பிடித்த லாலாகடை காராசேவ்வை பொட்டலம் கட்டி வாங்கி வந்து இருப்போமா?இப்பொழுது வாங்கிக்கொடுக்க மனம் பூரா ஆசை இருந்தாலும் இப்பொழுது வாங்கி சாப்பிட அவர் உயிரோடு இல்லையே?என்பதினை நினைத்துப்பார்த்தால் உங்கள் கண்களில் கண்ணீர் மளுக் என்று வரும்.வாழ்வில் வரும் நிகழ்வுகள் எது ஒன்றும் திரும்பி வரப்போவதில்லை.அந்த நிகழ்வுகளை நம் மகிழ்சிக்குறியதாகவும்,பிறரை மகிழ்சிக்குட்படுத்துவதாகவும் அமைத்தால் வாழ் நாள் பூராவும் அந்நிகழ்வுகள் நெஞ்சார்ந்த மகிழ்ச்சியுடன் மனதில் நிறைந்து நிற்கும்.

ஒருவர் நம்மை கோபப்படுத்தும் அளவுக்கு நடவடிக்கைகள் இருந்து நம்மை கோபப்படுத்தினால் திருப்பி அதனையே அவருக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட்டொழித்து விட்டு அன்று முழுக்க மனதில் குறு குறுப்புடன் உழன்று,நம் குடும்பத்தினரையும் நம் செய்கையால் உம்மணாமூஞ்சிகளாக்காமல் நமக்கு கோபமூட்டியவர் மீது உள்ள பலிவாங்கும் படலத்தை தவிர்த்து “பாவம் .என்ன கஷ்டமோ?வார்த்தைகளால் கொட்டி விட்டாள்.அவள் புத்தி அவ்வளவுதான்.போனால் போகின்றது”என்று விட்டுக்கொடுத்தோமானால் கிடைப்பது மன நிறைவு.உங்கள் அமைதி பார்த்து கோபப்பட்டவர் உங்களிடம் மன்னிப்பையும் கேட்டு உங்களை சந்தோஷப்படுத்துவார்.

வாழ்க்கை என்பதை நிறைவாக,சந்தோஷமாக,மகிழ்வாக ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பது அனைத்து மனிதர்களின் ஆசை.அதனை இனிமையான தருணங்களாக வைத்துக்கொள்வது நம் கையில்தான் உள்ளது.குடும்பத்தில் ஒரு பிரச்சினை தோன்றி விட்டால் நல்ல முறையில் பேசி தீர்த்து சிக்கல்களை களைந்து,விட்டுக்கொடுத்து சுமுகமாக்க முன் வரவேண்டுமே தவிர கொடூர வார்த்தைகள் பகிர்தல்,மனக்‌கஷ்டங்கள்,தான் என்ற ஈகோ அனைத்தையும் விட்டொழித்து இனிமையை தக்க வைத்துக்கொள்வதுதான் சிறப்பு.இதை விடுத்து விட்டுக்கொடுக்காமையும்,பிடிவாதமும்,அகம்பாவமும் கஷ்டங்களையும்,நஷ்டங்களையும் பின் விளைவாகத்தரும்.

நடந்தது நடந்ததாக இருக்கட்டும்.இனி வரும் நாளெல்லாம் நாமும் இனிமையாக இருந்து,நம்மை சுற்றி இருப்பவர்களையும் இனிமை நிறைந்தவர்களாக மாற்றி வாழ்வின் நலவுகளை நம் செயல்களால் இனியவைகளாக அமைத்துக்கொள்வோம்.

February 22, 2011

வார்த்தை ஜாலம்




”அவளா..?ராட்சஷியாச்சே”
“அவள் வாய் இருக்கே.அது பனாமா கால்வாய்”
“யப்போய்..இவ வாய்லேர்ந்து தப்பி வர முடியுமா”

ஒரு சிலர் ஒரு சிலரைப்பற்றி இப்படி விமர்சிப்பதை கேட்டு இருப்போம்.பார்த்தும் இருப்போம்.உண்மையில் அந்த வாய்க்குறியவர்கள் அத்தனை பயங்கரவாதியா என்றால் அதுதான் இல்லை.இப்படிப்பட்டவர்களுக்கு வாய்ஜாலம் என்றால் என்னவென்றே தெரியாது.வார்த்தைகளில் வல்லினம் மெல்லினமாக பேசுவது எப்படி என்ற சூட்சுமம் புரியாது.

பஜ்ஜி மிளகாயில் உப்பும் மிளகாய்த்தூளும் கலந்து தடவி சுட்ட பஜ்ஜியை சாப்பிட்டடாற்போல் சிலரது வார்த்தைகளில் காரம் தெரிக்கும்.இன்னும் சிலர் பாலில் தேனைக்கலந்தாற்போல்,ஜீராவில் ஊறிய குலோப்ஜாமூன்,நெய்யில் தோய்ந்த அல்வாபோல் கேக் மீது பூசப்பட்ட ஐஸிங் போல் வார்த்தை மென்மையாக,இனிக்க இனிக்க இருக்கும்.கேட்கும்செவிப்பறைகளில் இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என்பதைப்போல் இருக்கும்.

நல்ல வாழ்க்கைக்கும்,அழகிய பண்பிற்கும்,கட்டுக்கோப்பான குடும்ப அமைப்புக்கும்,நெருக்கமான,தொய்வில்லாத நட்புக்களுக்கு,நாம் உத்தியோகம் செல்லும் இடங்களுக்கும் இப்படி எல்லாவித அம்சங்களுக்கும் இந்த ஜீராவில் ஊறிய குலோப்ஜாமூன்கள் அவசியம்தேவை.

வார்த்தைகளில் எப்பொழுதும் அதீத கறாரும் கண்டிப்பும் ,அதிகார தோரணையும்,இடைவிடா ஆளுமை குணமும்,தான் தான் உசத்தி என்ற மனோபாவமும்,அகம்பாவமும்,ஆணவமும் நமது மதிப்பீட்டை பிறர் முன் குறைத்துவிடும்.இப்பதிவின் முதல் மூன்று வரிகளால் விமர்சிக்கப்படுவோம்.

நமது வாழ்க்கைத்துணையாகட்டும்,மற்றநட்புக்கள், உறவுகளாகட்டும்,வீதியில்செல்லும் காய்காரி முதல் வீட்டில் வேலை பார்க்கும் முனியம்மா வரை இந்த மிளகாயில் காரம் தடவும் வேலை பலிக்காது.

“டேய் இருபத்திநாலு மணிநேரமும் கம்பியூட்டரில் இருந்து தொலைக்கறதே உனக்கு பொழைப்பா போச்சு.கொஞ்ச,ம் கூட பொறுப்பு கிடையாது.இப்படியே போனால் மாடுதான் மேய்க்கனும்.மரியாதையா போய் படிடா”பெற்ற பிள்ளையிடம் காட்டுக்கத்தலாக கத்தினால் அந்தப்பிள்ளை சந்தோஷமாக போய் படிப்பானா?மாட்டான்.உங்களுக்கு பயந்து படித்தாலும் மனபூர்வமாக படித்து ,மண்டையினுள்ளே ஏற்றிக்கொள்ளுவானா?மாட்டான்.
இதுவே ஜீராவில் குலோப்ஜாமூனை ஊற வைத்தாற்போல் பேசுங்கள்.

“ராஜா...இன்னும் எக்‌ஸாமுக்கு பத்தேநாள் தான் இருக்குப்பா!போய் படிடா செல்லம்.”இந்த ஒரு வார்த்தை போதுமே.சடாரென்று சட் டவுன் செய்து விட்டு படிக்கும் மேசையை நோக்கி செல்வதற்கு.

“ஏங்க..உங்களுக்கு என்று சுய புத்தியே இல்லையா?சம்பளக்கவரை கையிலே வாங்கியதும் கடன் கேட்டானாம்,இவரும் தூக்கி தானம் வார்த்துட்டு வந்துட்டாராம்.ஒவ்வொருத்தனின் சாமர்த்தியத்தை பாருங்க.அவனவன் எப்படி உஷாரா இருக்கான்னு.தெளிவா இருக்கான்னு.அதான் அப்படியே இளிச்சவாயன்னு நெற்றியில் ஒட்டி இருக்கே.இதுக்கெல்லாமா யுனிவர்சிடியில் போய் படிக்க முடியும்?”
இப்படி பேச்சு சென்றால் அங்கே எப்படி அமைதி இருக்கும்?பிரச்சினைகளுக்கு சுழி போட்டது போல் ஆகி விடாதா?இவள் என்ன சொல்லுவது?நான் என்ன கேட்பது?என்ற கோப அகங்காரத்துக்கு வித்திட்டு விடாதா?
இதுவே கொஞ்சம் டயலாக் மாற்றி,குரல் உச்சஸ்தாயியில் இருந்து அடிகுரலுக்கு போய் அரவணைப்பு பேச்சால் நீங்கள் அணுகினால் உங்களவர் இனி கடன் கொடுப்பாரா?சம்பளக்கவர் கைக்கு வந்ததுமே உங்கள் அன்பு முகம் அல்லவா கண் முன் தெரியும்.

லேட்டாக வரும் வேலைக்காரியிடம்”இதே உனக்கு பிழைப்பா போச்சு.சம்பளம் மட்டும் வக்கணையா வாங்குறே.இஷ்டம் இருந்தால் டயத்துக்கு வா.இல்லேன்னா ஓடியே போய்டு” இப்படி ஆணவத்தை வெளிப்படுத்துவதைவிட “அட தாயம்மா,ஏன் லேட்டு ?நீ வந்துட்டு போய் விட்டால் சீக்கிரமா மார்க்கெட் போகலாம்ன்னு இருந்தேனே.சரி பரவா இல்லை.நாளைக்காவது டயத்துக்கு வா”இப்படி இருந்தால் ரிசல்ட் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.


சதா சோபாவில் சாய்ந்தபடி டிவி பார்த்துக்கொண்டும்,ஈஸி சேரில் சாய்ந்தபடி பேப்பர் வாசித்துக்கொண்டிருக்கும் மாமனாரிடம்”நீங்க ’சும்மா’தானே இருக்கீங்க.சின்னவனுக்கு ஹோம் வர்க் சொல்லிக்கொடுங்களேன்”என்று சொன்னால் அந்த் ’சும்மா’ சும்மா இருக்குமா என்ன?இதனையே வார்த்தையில் சற்று தேன் ,பால் தடவி ”மாமா,நீங்க ஹோம் வர்க் சொல்லிக்கொடுத்தால் சின்னவன் கப்புன்னு பிடித்துக்கறான்.அதென்னமோ தெரியலே தாத்தா சொல்லிக்கொடுத்தாருன்னா இவன் சமர்த்தா படிச்சுக்கறான்.கொஞ்சம் படித்துக்கொடுக்கறீங்களா மாமா.நான் அயர்ன் பண்ணிட்டு இருக்கேன்”இப்படி சொல்லிப்பாருங்கள் ரிஸல்ட் எப்படி இருக்கின்றது என்று.

“அத்தே,நான் என் ஸ்நேகிதி சுபா வீட்டிற்கு போறேன்.சமைத்து வைத்து விடுங்கள்”என்று உத்தரவு போட்டால் அத்தையின் முகத்தில் கடுகை தாளித்து விடலாம்.இதுவே”அத்தை,நான் சுபா வீட்டிற்கு போறேன்.ஹாஸ்பிடலுக்கு கூப்பிடுறா.சாம்பாருக்கு பருப்பை வேக வைத்து இருக்கேன்.தாளித்துக்கொட்டி ஒரு பொரியல் பண்ணிடுங்கள்.நீங்கள் வச்ச முருங்கைக்காய் சாம்பார்ன்னா நம்ம சுஜிகுட்டி கூட நாலு கவளம் சாப்பிடுவாள்.பண்ணிடுறிங்களா அத்தை.இல்லை பண்ணி வச்சிட்டே போகட்டுமா?கூட பதினைந்து நிமிஷம் தான் லேட் ஆகும்”இப்படி ரசகுலா வார்த்தைகளில் சொல்லிப்பாருங்கள்.

“நீ போய் வாம்மா.கூடவே புதினா தொகையலும் அரைத்து,பச்சடி பண்ணி,நாலு அப்பளத்தை பொரித்து வச்சிடுறேன்.”என்று நீங்கள் வரும்பொழுது ஒரு விருந்தே காத்திருக்கும்.

ஊருக்கு போகும்பொழுது”சிலிண்டர் வர்ர நாள் வந்தால் வாங்கி வச்சிடுங்க.பால் பாக்கெட் வந்தால் பிரிட்ஜ்ஜில் வாங்கி வச்சிடுங்க.கொரியர் வந்தால் கையெழுத்து போட்டு வாங்கி வச்சிடுங்க”இப்படி வரிசையாக கட்டளை போட்டு விட்டு எதிர் வீட்டுக்கார அம்மணியின் முகத்தைப்பாருங்கள்.எள்ளும்,கொள்ளும் வெடிக்கும்.’இவள் என்ன உத்தரவுக்கு மேல் உத்தரவா போடுறாள்.நான் என்ன இவளோட சேவகியா?”என்று முகம் சொல்லாமல் சொல்லும்.

“மாலா,தங்கைக்கு குழந்தை பிறந்து இருக்கு. ஊருக்கு போய் பார்த்து விட்டு வரப்போகிறோம்.தொந்தரவுக்கு மன்னிக்கனும்.பாலை வாங்கி பிரிட்ஜ்ஜில் வச்சிடுறீங்களா?ஒண்ணும் பிரச்சினை இல்லையே..”இப்படி வார்த்தைகளை ஜவ்வு மிட்டாயாக இழுத்து சொல்லிப்பாருங்கள் அவர்களே ”யோசிக்காமல் போய்ட்டு வா.கொரியர்,கேஸ் எது வந்தாலும் வாங்கி வைக்கிறேன்.”என்று அவரே வலிய சொல்லி உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்து விடுவார்.

இவ்வாறாக வாய் வார்த்தைகள்ஆயிரத்தெட்டு மந்திர ஜாலம் புரியும்.சும்மா வார்த்தைகள் தானே என்று மிளகாய்பஜ்ஜியாக வார்த்தைகளை கொட்டி அவஸ்த்தைபடாமல் எப்பொழுதும் ஜீராவில் ஊறும் குலோப்ஜாமூனாக இருங்கள்.நம்மை பற்றிய உயர்வான எண்ணம் மற்றவர்களுக்கும் ஏற்படுவதற்கு இனிய சொற்கள் அதி முக்கியம்.ஆகையினால் எந்த மிஸ்ஸும்,மிஸஸும்,மற்றும் மிஸ்டர்களும் இதனை ஞாபகத்தில் வைத்துக்கொண்டால் வாழ்க்கைப்பயணம் சுவாரஸ்யமிக்கதாகவும்,இனிமையான உறவுகள் சூழப்பெற்றதாகவும் அமைந்து சூழலை எப்பொழுது இனிமையாக ,வாழ்க்கைபயணத்தில் கசப்புகள் மறைந்து இனிப்பு நிறைந்ததாக அமையும்.




December 31, 2010

புத்தாண்டு கலாச்சாரங்கள்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

சென்னை வாசிகளின் கைபேசிகளின் மெசெஜ் இன்பாக்ஸ் முழுக்க இப்பொழுது நிறைந்து இருக்கும் மெசேஜ் 31 ஆம் தேதி இரவு ஹோட்டல்கள்,கிளப்புகள்,ரிசார்ட்டுகள் போன்றவற்றில் நடக்கும் கேளிக்கை,களியாட்டத்திற்கான விளம்பரம்.

பெரிய நட்சத்திர ஹோட்டல்களில்.பிரமாண்டமான ஏற்பாட்டை புத்தாண்டு கொண்டாடுவதற்காக ஏற்பாடு செய்து வருகின்றன.1000 ரூபாய் முதல் 1 லட்சம் வரை இதற்காக கட்டணம் பெறப்படுகின்றது என்பது நம்மை விழி விரிய வைக்கின்றது.

இந்த காஸ்ட்லியான கேளிக்கை நிகழ்ச்சிகளில் பெரிய,சிறிய திரை உலக நடசத்திரங்கள் பங்கு பெற்று வாடிக்கையாளர்களுடன் ஆடிப்பாடி,உண்டு,அருந்தி களியாட்டம் போடுகின்றனர்.இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் திரை நட்சத்திரங்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ப லட்சங்களிலும்,கோடிகளிலும் சம்பளம் நிர்ணயிக்கின்றனர்.

சமீபத்தில் வந்த செய்தி மும்பையில் பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் புத்தாண்டு அன்று நடனமாட பாலிவுட் புகழ் கத்ரீனா கைஃபுக்கு 3 கோடி ரூபாய் தர முன் வந்தது.(ஆனால் மூன்று கோடி ரூபாயை ஒரே இரவில் சம்பாதித்து விடும் ஆசையை தன் மனம் நிறைவடையும் ஒரு காரியத்திற்காக சுலபமாக புறம் தள்ளி விட்டார் என்பது ஆச்சரியப்படவைத்த செய்தி.(இப்பொழுது அந்த மூன்று கோடி வேறு எந்த நட்சத்திரம் சம்பாதித்து இருப்பாரோ?)

இசை,நடனம்,மது,உணவு,விளையாட்டு,கேளிக்கைகளில் நடந்தேறும் அத்துமீறல்கள் என்று பண்பாட்டுக்கு ஒவ்வாத காரியங்கள் வருடந்தோறும் மிகை பட்டுக்கொண்டே இருகின்றது என்ற உண்மையை சமூக ஆர்வலர்கள் மிகவும் கவலையுடன் நோக்குகின்றனர்.

வரும் புத்தாண்டு நல்ல விதமாக அமைய வேண்டும்,விரும்பும் வாழ்கையை எட்ட வேண்டும் என்று எண்ணுவது மனித இயல்பு.அதனை இப்படி கலாச்சார கேட்டை ஏற்படுத்தும்,சமூகத்தில் சீர்கேட்டினை ஏற்படுத்தும் ஆர்ப்பாட்டங்களும்,அவலமும் தேவையா?

புத்தாண்டுகொண்டாட்டங்களை ஜரூராக ஏற்பாடு செய்து ஒரே இரவில் பணத்தை மூட்டை,மூட்டையாக அள்ளும் நிறுவனங்கள் தனியாக வருபவருக்கு ஒரு மாதிரிக்கட்டணம்,பெண்களுடன் வருபவருக்கு கட்டணசலுகை என்று ஆசை வலை விரித்து காலாச்சார பேரழிவுக்கு சிகப்புக்கம்பளம் விரிக்கின்றது என்பது அச்சபடவைக்கும் உண்மை.ஆண்களும்,பெண்களும் சேர்ந்து குடித்து ஆட்டம் போட்டு கேளிக்கை நடத்தி,இளையவர்களை கெடும் பாதைக்கு அழைத்து செல்லும் பப் கலாச்சாரம் நாட்டில் நடக்கும் பயங்கரவாதத்தில் ஒன்று என்றால் மிகை ஆகாது.

சில கட்சிகளும்,சமூகநல அமைப்புகளும் இத்தகைய அந்நிய கலாச்சார சீரழிவு நம் நாட்டுக்கு வேண்டாம் .அது நாளைய மன்னர்களை அழிவுப்பாதைக்கு அழைத்து செல்ல வழிகோலாகிவிடும் என்று கதறும் கதறலை நமது அரசாங்கம் வேடிக்கைப்பார்த்துகொண்டு வெறுமனே இருக்கின்றது.

தண்ணீரில் விழுந்து சாவு,பிரபல நட்சத்திர ஹோட்டலில் நீச்சல் குளம் மீது அமைக்கப்பட்ட நடனமேடை சரிந்து நீச்சல் குளத்தில் மூழ்கி சாவு என்று பத்திரிகைகளில் படித்து விட்டு “உச் “கொட்டுவதோடு சரி.


போலீஸ் சென்னையில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு வளையம் அமைத்து இருக்கின்றது.புத்தாண்டு என்றாலே பீச் ரோட்(காமராஜர் சாலை)முழுக்க ஆர்ப்பாட்டங்களும்,கொண்டாட்டங்களும் அமர்களப்படும்.இன்று நேப்பியர் பாலத்தில் இருந்து காந்திசிலை வரை வாகன போக்குவரத்தை தடை செய்து புத்தாண்டை கொண்டாட வழிவகை செய்து கொடுத்து இருக்கின்றார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் முதல் மாத முதல் நாளின் முதல் வினாடியை சந்தோஷத்துடன் கொண்டாட வேண்டும்.அப்படி ஆரம்பமானால் வருடம் முழுக்க சந்தோஷம் கிட்டும் என்று எண்ணுபவர்கள்,இத்தகைய கலாச்சார சீரழிவு நடத்தித்தான் கொண்டாட வேண்டும் என்று இல்லைதானே?

அந்நிய கலாச்சாரம் இளையவர்களை அலைகழிக்கின்றது.அத்தகைய கலாச்சார சீரழிவுக்கு காரணியாகாமல் இளையவர்கள் தம் பெற்றோர்கள் மகிழும் வண்ணம்,சமுதாயம் தலை நிமிரும் வண்ணம் நம் பண்பாட்டினையும் மறந்திடாமல் புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்தி,வரும் புத்தாண்டை நல்ல விதமாக வரவேற்று நிறை வாழ்வு வாழவாழ்த்துக்கள்.

இன்னும் சற்று நேரத்தில் உதிக்கவிருக்கும் புதிய ஆண்டு என் பிரியமான இணைய நட்புக்களுக்கு எல்லாவித நலன்களையும்,வளங்களையும்,சிறப்புகளையும்,முன்னேற்றங்களையும் வாரி வழங்கிட நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!



July 30, 2010

எங்கே செல்லும் இந்தப்பாதை??



பள்ளியின் கழிவறையில் பள்ளி மாணவியின் பிரசவம்,கள்ளக்காதலனின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் காதலனின் மகனையே கதறகதற கொன்ற கொடூரம்..அன்றாடம் நாம் அறியும் செய்திகளில் இவை லேட்டஸ்ட்.

கடந்த வாரம் ஒரு மாலுக்கு சென்று இருந்த பொழுது அங்கு காட்சி அளித்த இளசுகளின் தோற்றம்,நடை.உடை பாவனை,அலட்சியபோக்கு,பொது இடம் என்ற இங்கிதமின்றி பார்ப்போரை முகம் சுளிக்க வைக்கும் அவர்களது நடவடிக்கை எப்படியும் வாழலாம் இதுதான் நாகரீகம் என்று நினைத்து வாழும் தான் தோன்றித்தனம்..இவைகளை எல்லாம் பார்க்கும் பொழுது அந்த இளசுகளின் மீது வெறுப்பு ஒரு பக்கம் வந்தாலும்,கலாச்சாரசீரழிவுக்கு பச்சைக்கொடிகாட்டிவிட்டு இறுமாந்து போய் இருக்கும் அந்த இளசுகளைப் பெற்றவர்களை,முகம் தெரியாத அந்த மனிதர்கள் மீது கோபம்தான் வருகின்றது.

எத்தனையோ விஷயங்களில் வாழ்க்கையில் முன்னேறி விட்டோம்,விரல் நுனியில் உலகையே கொண்டுவந்துவிட்டோம் என்று பெருமிதப்படும் இவர்கள் கலாச்சாரா சீரழிவை நினைத்துப்பார்க்க வேண்டாமா?

இளசுகளின் இந்த முற்போக்குத்தனம் சமுதாயத்தில் முளைவிட்டிருக்கும் நச்சுக்காளான்,வாழ்க்கையையே நொடியில் புரட்டிப்போட்டு விடும் ஒரு பயங்கரவாதம் என்று புரிந்தும் அதனை களைய மனதில்லாமல் நாகரீகம் என்ற போர்வையில் வாழும் அநாகரீக வாதிகளை என்னென்பது?

காசுக்காக ஆட்டம் போடும் திரைஉலகத்தினரைப்பார்த்து நிஜ வாழ்க்கையில் அதே நடை,உடை பாவனைகளை பின்பற்றி கலாசாராத்தை சீரழித்து வருவதோடு,தங்களையும் சீரழித்து தங்களையே அதலபாதாளத்திற்கு தள்ளி விடுகின்றனர்.

"இதோ இந்த மினி ஸ்கர்ட்டை எடுத்துக்கொள்"
"ஏற்கனவே தலைக்கு போட்டு இருக்கும் கலர் கொஞ்சம் டல்..இந்த முறை இன்னும் டார்க்கா வாங்கலாமா"
"உன் பாய்பிரண்டுக்கு பர்த்டே ன்னியே?என்ன பிரஷன்டேஷன் வாங்கலாம்?"
இப்படி கேள்விகளை ஒருதாயே கேட்கும் அளவிற்கு நாகரீகம் முற்றி விட்டது.

"கண்ணதாசன் காரைக்குடி..பேரைச்சொல்லி ஊத்திக்குடி"இப்படி நாண்கு வயது மகன் பாடி ஆடுவதை ரசித்து சிலாகிக்கும் அப்பா அம்மாக்கள் இருக்கும் வரை பள்ளிக்கழிவறையில் பிரசவங்களும்,கள்ளக்காதலால் கொலைகளும் நடந்தேறிக்கொண்டுதான் இருக்கும்.

இறைவன் மேலுள்ள நாட்டம்,குடும்பத்தினர் மேலுள்ள நாட்டம் குறைந்து,மறைந்து போவதால் தான் இத்தகைய சீரழிவுக்கான காரணம்.
இறைவன் மேலுள்ள நாட்டமும்,அச்சமும் தவறு செய்யக்கூடிய தருணங்களைக்குறைக்கின்றன.குடும்பத்திலே ஒருவருக்கொருவரான ஆழமான பாசம் இக்காலத்தில் தகர்க்கப்பட்டு வருகின்றது.

சிறுவயதிலேயே சொல்லிக்கொடுக்கப்படவேண்டியவைகளை,கண்டிக்கப்படவேண்டிய காரியங்களை இக்கால பெற்றோர்கள் செய்யத்தவறி விடுகின்றனர்.

வெட்க உணர்வு இல்லாமல் போவதற்கு ஆண்,பெண் பாகுபாடின்றி வரைமுறையற்று பழகுதல்,எதிர்பாலினரில் எவ்வளவு நண்பர்களோ அவ்வளவு பெருமைக்குரிய விஷயம் என்று தங்களையே சிறுமைப்படுத்திக்கொண்டு வாழ்வது,எப்படியும் வாழலாம்,மனம் போல் வாழலாம் என்ற நிலைக்கு வந்து விடுகின்றனர்.

பிள்ளைகளைப்பற்றிய பயம் பெற்றோர்களுக்கு இல்லை.பெற்றோர்களைப்பற்றிய பெருமிதம் பிள்ளைகளுக்கு இல்லை."என் பிள்ளை எஞ்சினியர் ஆகவேண்டும்,மருத்துவர் ஆக வேண்டும்,கலெக்டராக வேண்டும்,மேற்படிப்புக்கு யூ கே அனுப்ப வேண்டும்,அண்ணா யுனிவர்ஸிடி கவுன்ஸிலிங் வரை வெயிட் பண்ண முடியாதுன்னு பணத்தை பணம் என்று பார்க்காமல் நம்பர் ஒன் காலேஜில் எழு லட்சம் கட்டி சீட் வாங்கி விட்டேன்"இப்படி எண்ணங்கள் தான் இன்றைய பெற்றோருக்கு மிகுதியாக உள்ளதே ஒழிய நம் பிள்ளையை நல்ல பிரஜை ஆக்க வேண்டும்,நேரிய வாழ்வியலை பின்பற்ற வேண்டும்,இறை வழி நடக்கவேண்டும்,கலாசார சீரழிவுக்கு அடிபணிந்து விடலாகாது போன்ற உயரிய சிந்தனைகள் ,மேன்மையான போக்கும் இன்றைய பெற்றோரிடம் இல்லை.

அயல் தேசத்து உணவு பழக்கவழக்கங்களுக்கு அடிபணிந்து விட்டதைப்போல்,அந்நிய கலாசாராத்திற்கும் அடி பணிந்து வாழ்க்கையை தொலைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவதுதான் பரிதாபம்.

நன்நடத்தை,விடா முயற்சி,விசாலமான அறிவு,தானே நல்ல முடிவெடுத்து அனைவரையும் ஆச்சரியத்துடன் நோக்கவைக்கும் உயர்வு இவைகள் எல்லாம் ஒருங்கே பெற்று விஞ்ஞானத்தை நன் முறையில் பயன் படுத்தி வாழ்வில் சிகரங்களைத்தொடக்கூடிய நாளைய இளவரசர்கள்,இளவரசிகள் தறிகெட்டுப்போய் வாழ்க்கையை தவற விடுகின்றனர்.

சுகாதாரமாக வாழ நினைக்கிறோம்,சுற்றுப்புற தூய்மைகளை கவனிக்கின்றோம்.பொது இடத்தில் அமர்ந்தால் கூட ஆடை வீணாகி விடுமோ என்று ஆள்காட்டி விரலால் கோடிழுத்துப்பார்த்து விட்டு அமர முனைகின்றோம்.நம்முடல் அழுக்கேற்படாமல் சுத்தமாக வைத்திருக்க முனைகின்றோம்.ஆனால் நாம் அறியாமலே நம் சந்ததிகள் மனம் அழுக்கடைந்து,காலப்போக்கில் காட்டாற்று வெள்ளமாக எல்லை மீறிப்போகும் அவலத்திற்கு துணை நிற்கலாமா?

நாகரீகம் என்ற போர்வையில் அநாகரீகமாக நடமாடவிட்டு,நாட்டையும்,வீட்டையும் சீரழிக்க முனையும் பிள்ளைகளின் பெற்றோரே சிந்தியுங்கள்