சீனிவாசன் என்று இவரது அப்பா எந்த நேரம் பெயர் வைத்தாரோ?இனிப்பின் மீது நம்ம சீனிவாசனுக்கு அத்தனை ஈர்ப்பு.சிறியவயதில் தன் தந்தையின் மிட்டாய்க்கடைக்கு சென்றாரே ஆனால் சுமார் ஒரு கிலோ இனிப்புகளை கபளீகரம் செய்து விட்டுத்தான் வெளியில் வருவார்.
வீட்டில் அம்மாவிடம் வந்து அப்பா இப்படி கத்துவார்.”இந்த ரீதியில் போனால் ஸ்கூல் முடிக்கறதுக்கு முன்னாடி உன் பிள்ளைக்கு சர்க்கரை வியாதி வந்துடும்டி”
“அட நீங்க வேற..உங்க வாயிலேர்ந்து நல்லதா நாலு வார்த்தை வராதா?இப்ப கல்லை தின்னாக்கூட செரிக்கிற வயசுங்க..சும்மா விடுங்கங்க..”அம்மா பரிந்து கொண்டுவருவாள்.
இட்லிக்கு தொட்டுக்கொள்ள சட்னி சாம்பார் என்று வகை வகையாக இருந்தாலும் ஒரு கிண்ணம் நிறைய தேனை வைத்துக்கொண்டு தொட்டு சாப்பிடத்தான் பிடிக்கும்.
இடியாப்பத்துக்கு நெய் மணக்க மணக்க வக்கணையாக குருமா செய்து இருந்தாலும் சர்க்கரை இல்லாமல் இடியாப்பம் இறங்காது.
விஷேஷங்களில் குலோப்ஜாமூன் செய்தால் மிஞ்சும் சர்க்கரைப்பாகு சீனிவாசன் வீட்டில் மிஞ்சியதாக சரித்திரமே இல்லை.குலோப்ஜாமூன்கள் வேண்டுமானால் பாத்திரத்துக்கடியில் கண்களை கொட்ட கொட்ட விழித்துகொண்டு ஒன்றிரண்டு இருக்குமே ஒழிய துளி பாகு இருக்காது.
அவரது இந்த இனிப்பு மோகத்திற்கு பொருத்தமாக மனைவியின் பெயர் அமைந்தது கூட ஆச்சரியம்தான்.
ஆமாம் இல்லக்கிழத்தியின் பெயர் இனிப்பு சொட்ட சொட்டத்தான் இருக்கும் .
தாலி கட்டிய நிமிடம் முதல் பேரன் பேத்தி எடுத்த இந்த நாள் வரை சீனிவாசனின் இனிப்புமோகம் தேன்மொழிக்கு மிகவும் ஆச்சரியமான விஷயம்.இன்னொரு காமெடி என்னவென்றால் கல்யாணம் ஆன இரவு அழகான மூங்கில் கூடையில் ஆப்பிள் மாம்பழம் மலைப்பழம் என்று அடுக்கி வைத்து இருந்தார்களே தவிர இனிப்பு வகைகளை கண்களிலே காணோம்.
மனைவியிடன் பேசிய முதல் வார்த்தையே இதுதான்.”தேனு,பழமெல்லாம் அட்டகாசமாக அடுக்கி வைத்திருக்கீங்க.இனிப்பெல்லாம் வைக்க மாட்டீர்களா?”
தேன் மொழி வெட்கச்சிரிப்புடன்”நீங்களே ஸ்வீட் கடைக்காரர்.திருநெல்வேலிக்கே அல்வாவா”இவ்வாறாக சீனிவாசனின் திருமதி முதல் நாளன்றே அல்வா கொடுத்து விட்டது குறித்து மனசு முழுக்க சீனி வாசனுக்கு இன்று வரை குறையாக உள்ளது.அவ்வப்பொழுது மனைவியும் கணவனும் பரம்பரையைப்பற்றி பேசும் பொழுது ‘சாந்தி முகூர்த்ததுக்கு இனிப்பு வைக்காமல் சிக்கனம் பிடித்த பரம்பரையாச்சே உன்னுது”என்று ஆரம்பித்தாரானால்
“ஆமாமாம்..எல்லாவற்றுக்கு சேர்த்து வைத்து தீபாவளிச்சீராக ஐநூறு அதிரசம் ஐநூறு லட்டு ஐநூறு லாடு என்று வண்டி வண்டியாக வாங்கி என் அப்பாவை மொட்டை அடிக்கலியா?”
“அடியேய்.. லட்டு சைசையும் லாடு சைசயும் இப்ப நான் சொன்னால் மூஞ்சை எங்கே கொண்டு வச்சிப்பே...ஒரு லாடு பிடிக்கிற மாவை வைத்து நாலு லாடு செய்து சீர் செய்த மகா பரம்பரை ஆச்சே..இருந்தாலும் சிக்கனத்தில் உங்க குடும்பத்தை அடிச்சுக்க முடியாதுடி”
சீனிவாசனின் நக்கல் பேச்சுக்கும் நையாண்டி பேச்சுக்கும் சளைக்காமல் ஈடு கொடுத்து பதிலடி கொடுப்பது போலவே அவரது இனிப்பின் மேலுள்ள பற்றை புரிந்துகொண்டு இனிப்பு இனிப்பாக வக்கணையாக சமைத்துபோட்டும் கணவரை திருப்தி படுத்தி நல்ல இல்லத்தரசியாக விளங்கினாள்.
வீட்டிலுள்ளவர்களுக்கு காபியில் சர்க்கரை அதிகம் பிடிக்காது. இவருக்கோ கூட இரண்டு ஸ்பூன் சர்க்கரையைகலக்கி நுரை ததும்ப ஆவி பறக்க காஃபியை கையில் தரும்பொழுது சீனி வாசன் பூர்வஜன்ம சங்கல்பம் அடைந்து இருப்பார்.பால்பாயஸம் கிளறினால் எல்லோருக்கு கிண்ணங்களில் எடுத்து வைத்துக்கொண்டு இறுதியாக நாலுஸ்பூன் சர்க்கரையை சேர்த்து கிளறி கணவருக்கு ஒரு பெரிய கோப்பை நிறைய பரிமாறும் பொழுது வாய் மட்டுமல்ல மனமெல்லாம் அமிர்தமாக இனிக்கும் சீனிவாசனுக்கு.
விஷேஷங்களுக்கு செல்லும் பொழுது பக்கத்து இலையில் அமர்ந்து இருக்கும் தேன்மொழி தனக்கு வைத்த மைசூர் பாகையும் ஜாங்கிரியையும் கணவரது இலையில் வைக்க தவறுவதில்லை.பாயசம் நிரம்பிய கப்,ஐஸ் கிரீம் இப்படி ஒவ்வொன்றும் சீனிவாசனின் இலைக்கு ஆட்டோமேடிக்காக சென்றடைந்து விடும்.மனைவியின் செய்கையில் நெகிழ்ந்து போய் “தேனு,எல்லா இனிப்பையும் என் இலைக்கே தள்ளிடுறே.நீயும் கொஞ்சம் டேஸ்ட் பார்க்க மாட்டே”
“பரவா இல்லைங்க”தேன்மொழி பிசிபேளா பாத்தில் மும்மரமாகி இருப்பாள்.
“அக்கா...அத்திம்பேருக்கு இனிப்பு ஆசை இருந்தாலும் இத்தனை ஆகாது..உன் பெரிய பையனுக்கு பெயர் சூட்டு விழாவில் கிண்ணத்தில் தேன் கொண்டு வந்து வைத்தோமில்லையா.பெயர் வைத்து விட்டு ஐயர் தேன் கிண்ணத்தை கீழே வைக்கப்போகும் பொழுது கபால் என்று கிண்ணத்தை அத்திம்பேர் வாங்கி தேனை பூரா கபளீகரம் செய்துட்டார்.ஐயர் அத்திம்பேரை பார்த்த பார்வை இருக்கே..ஹாஹ்ஹா..”இது நடந்து வருடங்கள் பல ஆனாலும் சொல்லிக்காட்டி இன்றைக்கும் சிரிப்பான் தேன்மொழியின் தம்பி.
“அக்கா..அத்திம்பேருக்கு ரசம் சாம்பார் செய்யும் பொழுது உப்புக்கு பதிலா சர்க்கரையை போட்டு கொடுத்தால் கூட பேஷா சாப்பிடுவாறாக்கும்”இது தேன் மொழியின் சின்னத்தம்பி
அப்பேற்பட்ட இனிப்புத்தென்றல்,இனிப்பரசர்.இனிப்புசக்கரவர்த்தி சீனிவாசனுக்கு சர்க்கரை நோய் வந்து இருப்பது சோகத்திலும் சோகம்.
”ஸ்கூல் முடிக்கறதுக்கு முன்னாடி சக்கரை வியாதி வந்துடும் இவனுக்கு “சீனிவாசனின் தந்தையின் கூற்றை பொய்யாகி,பேரன் பேத்திகளெல்லாம் எடுத்த பின்னர்தான் சர்க்கரை வியாதி ஆரம்பித்திருப்பது சோகத்திலும் ஒரு சந்தோஷம்.
பரிசோதனை செய்ய மட்டேன் என்றவரை தர தரவென்று இழுத்து செல்லாத குறையாக இழுத்து சென்று சோதனை செய்து பார்த்ததில் இரத்தத்தில் முன்னூறுக்கும் மேல் இருப்பதாக பரிசோதனையின் முடிவு சொல்லிய பொழுது இவருக்கு தலையில் இடிவிழாத குறைதான்.
“ரிசல்ட் தப்பா வந்திருக்கும்.எங்க பரம்பரையில் யாருக்குமே இந்த வியாதி கிடையாது.அப்ப எனக்கு எப்படி வரும்?”ஒத்துக்கொள்ளாமல் அழிசாட்டியம் பண்ணியது தனிக்கதை.
மறுநாள் சர்க்கரை இல்லாத காஃபியை கையில் கொடுத்த பொழுது கண்ணீர்விட்டு அழாத குறைதான்.
“அடியே தேனு..அரை ஸ்பூன் போடுடி.தொண்டைக்குள் ஒரு மிடறு கூட இறங்க மாடேன்கிறது”பரிதாபமாக விழித்த புருஷனை மிரட்டாத குறையாக”உஷ்..மூச்..நாளைக்கு பையனிடம் சொல்லி சுகர் பிரி டேப்ளட் வாங்கித்தர்ரேன்.மற்ற படி சர்க்கரைங்கற பெயரைகூட உச்சரிக்கபடாது ஆமா சொல்லிட்டேன்.”
“இனி எவனாவது உன் பெயர் என்னன்னா சீனியை விட்டுட்டு வாசன்னு சொல்லிக்கறேன் போதுமா”கடுப்பானார் சீனிவாசன்.
கணவரின் உடல் நலன் கருதி சர்க்கரையை கண்ணில் கூட காட்டாமல் கட்டுப்பாடாக வைத்திருந்தும் என்ன செய்ய?கில்லாடி சீனிவாசன் பெண்டாட்டி இந்தப்பக்கம் போன சமயம் அடுக்களைக்குள் புகுந்து ரெண்டு ஸ்பூன் சீனியை வாயில் போட்டு அதக்கிக்கொண்டு பெரிய சாதனை செய்தது போல் பெருமூச்சு விட்டுக்கொள்வார்.
வெளியில் போன சமயம் பார்த்து டப்பாக்களை உருட்டி இனிப்பு பண்டங்களை கண்டால் விடுவதில்லை.
குளிர்சாதனப்பெட்டியை குடைந்து பேரக்குட்டிகளுக்காக வாங்கி வைத்திருக்கும் இனிப்புப்பண்டங்களை பதம் பார்த்து திருப்தி பட்டுகொள்ளுவார்.
கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் தக்குமுக்கு திக்குதாளம் என்பது கணக்காக ஒரு நாள் கையும் களவுமாக மனைவியிடன் மாட்டிக்கொண்டார் சீனிவாசன்.
துணி அடுக்கி வைத்திருக்கும் கப்போர்டினுள் தலை வைத்து படுக்காத குறையாக இருக்கும் கணவரின் நிலை கண்டு”என்னங்க..அப்படி என்னதான் இருக்கு அந்த அலமாரியில்?அலமாரியை குத்தகைக்கு எடுத்த மாதிரி அங்கேயே பலியா கிடக்கறீங்க?”தேனுவின் கேள்விக்கு தகுந்த பதில் கிடைக்காததால் தடாலடியாக அலமாரி முன் வந்து பரிசோதனை செய்ததில் அல்வா பொட்டலமும்,பூந்தி பொட்டலமும் தேன்மொழியைப்பார்த்து சிரிப்பாய் சிரித்தது
அவ்வளவுதான் தேனுவாகிய தேன்மொழி பெருங்குரல் எடுத்து அழவே ஆரம்பித்து விட்டாள்.பதினைந்து சவரனுக்கு குறையாமல் கழுத்தில் கிடந்த தாலி சரட்டை கையில் எடுத்து”என்னங்க..என் ஆயுசு முச்சூடும் இந்த தாலி என் கழுத்தில் தொங்கணும்ங்க.அதுக்கு பங்கம் வச்சிடாதீங்க”
என்ன செண்டிமெண்டால் அடித்தும் என்ன செய்ய?பங்கம் வந்தாலும் பரவா இல்லை என்பது போல் மதியநேரம் தேன்மொழி தூங்கும் சமயம் மணி அடித்துக்கொண்டு வரும் சோன் பப்டி காரனிடம் பேப்பர் நிறைய சோன் பப்டி வாங்கி வாசலில் வைத்தே சாப்பிட்டு விட்டு வாயைத்துடைத்துக்கொண்டு வந்துவிடுவதை வழக்கமாக்கிக்கொண்டார்.
“என்னதிது..ரிட்டயர்மெண்ட் ஆகிட்டாலும் ஏதோ ஆஃபீஸ் போறது கணக்கா நீங்கள்தான் மழ மழன்னு ஷேவ் செய்துடுவீங்களே புதுசா என்ன தாடி முளைச்சிருக்கு..?முகவாயில் ஒட்டிக்கொண்டிருந்த சோன் பப்டியை கையால் தட்டிவிட்ட தேனு அதிர்ச்சிக்குள்ளானாள்.
“அடப்பாவி மனுஷா..என் தாலிக்கு பங்கம் வர்ரதுக்கு கங்கணம் கட்டுறீங்களே உங்களுக்கே நியாயமா இருக்கா..”
இப்போதெல்லாம் இரும்பு பெட்டியின் சாவியுடன்,குளிர்சாதனப்பெட்டியின் சாவியும்,அடுக்களை பூட்டின் சாவியும் பவ்யமாக தேன்மொழியின் இடுப்பில் தொற்றிக்கொள்ள ஆரம்பித்துவிட்டது.