Showing posts with label ஊர் சுற்றலாம் சென்னை. Show all posts
Showing posts with label ஊர் சுற்றலாம் சென்னை. Show all posts

February 11, 2014

charisma 14


தேனாம் பேட்டை எஸ் ஐ ஈ டி மகளிர் கல்லூரியில் இன்றும் நாளையும்
charisma 14 திருவிழா நடை பெற்றுக்கொண்டுள்ளது.அங்கு ஒரு நெருங்கிய நட்பு ஸ்டால் அமைத்து இருப்பதால் காலையிலே ஆஜராகி விட்டேன்.



குவிந்து இருந்த கூட்டத்தையும் இளசுகளின் உற்சாக ஆராவாரத்தையும் பார்க்கும் பொழுது அது நமக்கும் தொற்றிக்கொண்டு விட்டது

 டீன்ஸ்கள் முதல் ஆண்ட்டிகள் வரை பயன்படுத்தக்கூடிய ஆடை அலங்கார அணிகலன்கள் வகை வகையாக டிஸ்ப்ளே செய்யப்பட்டு கண்களையும் மனதையும் கவர்ந்து பர்ஸை பதம் பார்த்துக்கொண்டிருந்தன.சேலைகள் சுடிதார்கள் குர்தீஸ் லெகின்ஸ் பர்தா ஷால்கள்  துப்பட்டாக்கள் என வித விதமாக கண்காட்சியில் இருந்து கண்களை கவர்ந்திழுத்தன.



ஆடிட்டோரியத்தில் பலவித கலை நிகழ்ச்சிகள் களைகட்டிக்கொண்டிருந்தன.அங்கிருந்து எழுந்து செல்ல மனதில்லாமல் தோழியின் அழைப்பை ஏற்று ஸ்டால்கள் அமைந்திருந்த பகுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

எதிர் புறமாக அத்தனையும் சாப்பாட்டுக்கடைகள்.வழக்கம் போல் பலாபழ‌த்தில் ஈ மொய்த்தது போல் மொய்த்துக்கொண்டிருந்தனர்.சிக்கன் வகைகள் கபாப் வகைகள் ரைஸ் ஐட்டங்கள் சாட் ஐட்டங்கள் ஐஸ் க்ரீம் கூல் டிரிங்ஸ் டீ காஃபி  வடை கட்லட் சமோசா ரோல் சைனீஸ் ஐட்டங்கள்  என்று மக்கள் கஞ்சத்தனம் பார்க்காமல் வக்கணையாக வெளுத்துக்கட்டிக்கொண்டு இருந்ததைப்பார்க்கும் பொழுது அடுத்த ஆண்டு நாமும் ஒரு சாப்பாட்டு ஸ்டாலை போட்டு சல்லிசா சல்லி  அள்ளலாமே என்ற ஆர்வம் தலை தூக்கியதை மறுப்பதுக்கில்லை.




வீட்டுபயோகப்பொருட்கள்,கைவிணைப்பொருட்கள்,அலங்காரப்பொருட்கள் என்று விதம் விதமாக அடுக்கி வைப்பட்டு இருந்தன.


ஒரு இளம் தாய் தன் குழந்தையை அருகில் படுக்க வைத்துக்கொண்டு மிஷின் போல் நிமிடத்தில் பாசி மாலைகளை உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்.கைகள் மணிமாலைகளை கோர்த்துக்கொண்டும் வியாபாரமும் நடத்திக்கொண்டும் இருந்த பொழுது கிளிக் செய்தேன்.புகைப்படம் எடுக்கட்டுமா என்று கேட்ட பொழுது மிகவும் மகிழ்ச்சியுடன் ஓப்புக்கொண்டார்.அத்தனையும் அவரது சொந்த தயாரிப்புக்கள்.


க்வில்லிங்கில் அணிகலன்கள்.பார்க்கவே அழகாக இருந்தன.இரு தோழியர் சேர்ந்து கடையை நடத்துகின்றனர் போலும்.முதலாமவர் மட்டும் பொழுது இருந்த பொழுது  அவரது அனுமதி பெற்று இரண்டு படங்களை க்ளிக் செய்து விட்டேன்.மூன்றாவதாக க்ளிக் செய்த பொழுது இன்னொரு நண்பி வந்து தடுத்து விட்டார்.எங்களைப்பார்த்து காப்பி அடித்து விறபனைக்கு வைத்துவிடுவதற்கு இடம் கொடுக்க மாட்டோம்.தயவு செய்து படம் எடுக்காதீங்க‌  என்று ரொம்ப தாராள மனதுடன் கூறும் பொழுது ந‌மது வலை உலகத்தோழி க்வில்லிங் குயீன்  ஏஞ்சலின் கை வண்ணத்தில் மலர்ந்து வலைப்பூவில் மணக்கும் வகை வகையான  க்வில்லிங் வேலைப்பாடுகள் நினைவுக்கு வந்தன.

இதுவும் க்வில்லிங் அணிகலன்கள்தான்.


 இதுதான் நமது நெருங்கிய தோஸ்துவின் ஸ்டால்.precious கற்கள்கோர்த்து அழகாக ரிச் ஆக தனது அதீத கற்பனை திற‌னை வைத்து வித விதமான நகைகள்.பர்சுக்கள்,மொபைல் பவுச்,சுவர் ஓவியங்கள்.செருப்பு கைவினைப்பொருட்கள்  செயற்கை மலர்கள் என்று செய்வதில் கில்லாடி



மாலைகள் மோதிரங்கள் என்று பலவும் டிஸ்ப்ளேயில் வைத்து இருந்தார்.


இவைகளும் அவரது தயாரிப்பில் உருவானவை.



 சாதரண செப்பலில் அவரது கைத்திறன் மிளிகின்றது.


 அழகான பற‌வைகளும் அது இடாத முட்டைகளும்.இவைகள் எல்லாம் என் நண்பியின் ஸ்டாலில் கிடைக்கின்றது.நாளைதான் கடைசி நாள்.



கடைசியாக திரும்பும் பொழுது இந்த பாப்பா என் கண்களை விட்டு அகல மறுத்து விட்டது.அழகாக ஸ்கார்ஃப் போட்டு பவ்யமாக சிரித்துக்கொண்டு இருந்த பாங்கு எல்லோரையும் கொள்ளை கொண்டு விட்டது.கடைகளை பார்க்காமல் சிலர் இந்த குழந்தையின் சுட்டியை ரசித்துக்கொண்டு இருந்தனர்,அதன் தாயிடம் அனுமதி பெற்று க்ளிக் செய்தேன்.

March 3, 2013

பீனிக்ஸ் மால்

பீனிக்ஸ் பறவை நாமோ,நம் முன்னோர்களோ பார்த்திராத ஒரு கற்பனைப்பறவை.உலக இலக்கியங்கள் அனைத்திலும் ஒருமித்து கூறப்பட்டுவரும் ஒரு அற்புதப்பறவை.

தமிழ் இலக்கியங்களில் இதனை ஊழிக்கால பறவை என்று வர்ணிக்கப்படுகிறது.விடாமுயற்சி,வெற்றிகிட்டும் வரை ஓயாது உழைப்பவர்களின் இலட்சியத்தை பீனிக்ஸ் பறவையுடன் ஒப்பிடுவார்கள்.அரசியல் தலைவரை பீனிக்ஸ் பறவையுடன் ஒப்பிடுவது நம்மூர் தொண்டர்களுக்கு  எழுதபடாத சட்டம்.

அப்பேற்பட்ட சாகாவரம் பெற்ற உலகம் முழுதும் பேசப்படும் ஒரு அற்புதப் பறைவையின் பெயரையும்,அப்பறவையின் உருவத்தை சின்னமாக வைத்தும் புதிதாக சென்னையில் இன்னொரு மெகா மால்  Phoenix Market City என்ற பெயரில் கடந்த மாதம் வேளச்சேரியில் திறக்கப்பட்டுள்ளது.

மும்பையை சேர்ந்த ”பீனிக்ஸ் மில்ஸ்” என்ற நிறுவனமே இந்த வணிக வளாகத்தை இங்கே கட்டியிருக்கிறது.இது ஏற்கனவே மும்பை,புனே,பெங்களூரு,போன்ற இடங்களில் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது.

சாலையை அகலப்படுத்துவதற்காக முக்கிய சாலைகளின் ஓரத்தில் அமைந்திருக்கும் கட்டிடங்களின் முன் பகுதியை சென்னை மாநகராட்சியினர் உடைத்து சில அடிகளை அள்ளிக்கொண்டு போகின்றனர்.ஆனால் பீனிக்ஸ் மால் இருக்கும் இடத்தில் இந்த பாச்சா பலிக்காது.ஏனெனில் சாலையை விட்டு பலமீட்டர் தூரத்தில்தான் மாலை அமைத்து இருக்கின்றனர்.
இருபது லட்சம் சதுர அடியில் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டு இருக்கும் ,உலகில் உள்ள முன்னணிஉலகத்தரம் வாய்ந்த  பிராண்ட் ஷாப்கள் ஒருங்கே அமையப்பெற்று பிரமிப்பூட்டுகின்றன.

க்ளோபல் டெசி,சார்லஸ்&கெய்த்,ஸ்டீவ் மாடென்,சூப்பர் டிரை,ப்ரொமோட்,ப்ரூக்ஸ் பிரதர்ஸ்,மாக்,மேக்ஸ்,லீ,மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர்,டொம்மி ஹைபிகர்,கேல்வின் கெவின்,பிபா,பெப்பி போன்ற பிராண்டட் ஷோரூம்கள் தவிர  ஆர் எம் கேவி,மெகா மார்ட் ,ஆர்ச்சீஸ்,பொப்பட் ஜமால்,பிக்பஜார்,வில்ஸ் லைப் ஸ்டைல்,விட்கோ,லைப்ஸ்டைல்,பாண்டலூன்,க்ளோபஸ் போன்ற எண்ணற்ற கடைகள் கடை விரித்துள்ளன.

ஐ போன்,நோகியா,பூர்விகா,யுனிவெர்செல் பிளாக்பெரி போன்ற கைபேசி விற்பனையகங்களில் கூட்டம் அலை மோதுகின்றது.

கீழ்த்தட்டு மேல்த்தட்டு மக்கள் அனைவரும் விரும்பி வாங்கும் பாட்டா பாதணிகள் ஷோ ரூம்முதல் ,இரு பெரிய நோட்டே ஆரம்பவிலையாக கொண்டு இருக்கும் மோச்சி,மெட்ரோ,வுட்லாண்ட்ஸ் போன்ற கடைகள் கண்களை கவர்கின்றன.

ஸ்வரோஸ்கி வைரக்கடலுடன்,தி நகரில் ஆரம்பிக்கப்பட்டு இருக்கும் மலபார் கோல்ட் ஹவுஸ் இங்கும் கிளை பரப்பி உள்ளது.

டைமேக்ஸ் முதல் டிஸ்ஸோட் வரை கடிகாரங்கள் ஷோ ரூம் கல்லா கட்ட வந்துவிட்டன.பாடி ஷாப்.ஹெல்த் அண்ட் க்ளோ கூட இளையவர்களின் பார்வைகளை அள்ளிச்செல்கின்றன.

இவ்வளவு பெரிய மாலுக்கு இத்தனை சிறிய புட் கோர்ட் புட் கோர்ட் பக்கமே செல்ல தயக்கம் கொள்ள வைக்கின்றது.மோத்தி மஹால்,இட்லி தோசா,கே எஃப் சி,வாவ் மமோ,டோமினோஸ்பிஸ்ஸா,நளா ஆப்பக்கடை,சைனாவால்,அரேபியன் ஹட் ,கைலாஸ் போன்ற ஒரு சில கடைகள் மற்றும் ஐஸ்கிரீம் பிரியர்களுக்கு ஐபாகோ,பாஸ்கின் அண்ட் ராபின்ஸ்,புரூட் பன்ச்,க்ரீம் அண்ட் பட்ஜ்,க்வாலிட்டி என்று  கடைகள்  திறக்கப்பட்டுள்ளது என்றாலும்,

கமிங் சூன் என்று பெரிய பெரிய போர்டுகள் தொங்கி சாப்பிட அழைக்கின்றன.ஸ்பாகெட்டி,நண்டூஸ்,கலிஃபோர்னியா பிஸ்ஸா,மேரி பிரவுன்,வசந்த பவன் இன்னும் பிறவும் வரவிருக்கின்றன.

சின்ன புட்கோர்ட்டாக உள்ளதே என்று நினைத்துகொண்டு இருந்த பொழுது ரூஃப் கார்டன் ரெஸ்டாரெண்ட் போல் ஒன்று இருக்க எட்டிப்பார்த்தேன்.ம்ஹும்..சுமார் 20 பேர் மட்டும் அமர்ந்து சாப்பிடும் அளவு குட்டியாக இருந்து ஏமாற்றத்தைதந்தது..

ஏஸி காற்று ஓசியில் வாங்க அக்கம் பக்கத்தினர் அங்கு செல்லலாம் என்று மெனக்கெடாதீர்கள்.இவ்வளவு பெரிய மாலை கட்டி விட்டு கரண்ட் பில்லுக்கு அஞ்சியோ என்னவோ ஏஸியே இல்லாமல் இருந்த நேரம் முழுக்க உஸ் உஸ் என்று மூச்சு விட்டுக்கொண்டே இருந்தவர்கள் அதிகம்.

மாலின் இன்னொரு பிளஸ் பாயிண்ட்.மொத்தம் 12 தியேட்டர்கள் அதில் ஒன்று ஐமாக்ஸ் தியேட்டர்.திரை ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.

நேற்று அங்கு சென்று இருந்த பொழுது கிளிக் செய்த படங்களை கீழே காணுங்கள்.


பீனிக்ஸ் பறவையின் சின்னத்துடன் மாலின் பெயர்ப்பலகை.

மாலின் ஒரு வெளித்தோற்றம்.

மாலினுள் நுழையும் பொழுது நுழைவு வாயிலில் அலங்காரப்பந்துகள் தலை அசைத்து வரவேற்கின்றன.
மாலின் உட்புறத்தோற்றம்.



இன்னொரு உட்புறத்தோற்றம்.

மாலினுள் நுழைந்ததுமே இந்த சிலைதான் வரவேற்கும்.

மாலின் இன்னொரு உட்புறத்தோற்றம்.

esbeda ஷோரூமில் அணிவகுத்து அழகு காட்டும் கைப்பைகள்.


marks&spencer ஷோ ரூமில் அணிவகுத்து இருக்கும்செருப்புகள்.



புட் கோர்டின் ஆரம்பம் என்பதனைக்காட்ட தட்டுக்களால் மலர் போன்று அழகாக அலங்கரிக்கப்பட்டு கலை நயத்துடன் காட்சி அளிக்கின்றன.

பாட்டில்களால் ஆன மெகா சைஸ் பூ ஆங்காங்கே வைக்கப்பட்டு தயவு செய்து தொடாதீர் என்ற அறைவிப்பு பலகையுடன் காட்சி அளிக்கின்றன.
புட் கோர்டின் உட்புறத்தோற்றம்.


தரைதளத்தில் அமைந்திருக்கும் இன்னொரு கலைநயமிக்க சிலை.



குழந்தைகளை கவர்ந்து இழுத்து செல்லும் பன்சிட்டி.

யூத்துக்கள் ,ஆண்டீஸ் மட்டுமல்ல பாட்டீஸும் கன ஜோராக மாலை வலம் வருவதைப்பாருஙகள்.பாட்டீஸுக்கு பின்னால் ஓடிப்போய் என் கேமராவுக்குள் சிறை பிடிப்பதற்குள் அப்பப்பா போதும் போதும் என்றாகி விட்டது.


எங்க வீட்டு குட்டி.அவர் கேட்டதெல்லாம் கிடைக்க வில்லை என்று முகத்தை ஒன்றரைமுழ நீளத்துக்கு தொங்க வைத்துக்கொண்டு இருக்கிறார்.வீடு வந்து சேரும் வரை தொங்கிய முகம் ஒரு இன்ச் கூட ஏற வில்லை.





February 18, 2013

பாண்டிபஜார்




சென்னையில் வசிப்பவர்கள்,சென்னைக்கு வந்து செல்பவர்களின் காலடி அநேகமாக பாண்டிபஜாரில் பதியாமல் இருக்காது.ஷாப்பிங் செய்வதற்கு சென்னையிலேயே புகழ் பெற்ற ஸ்தலம் இதுவாகத்தான் இருக்கும்.

தந்தை பெரியாரின் தொடக்கக் காலத் தளபதிகளுள் மிகவும் முக்கியமாகத்திகழ்ந்தவர்  தென் தமிழகத்தின் பட்டிவீரன்பட்டி என்ற ஊரில் பிறந்த சவுந்தரபாண்டியன் ஆவார். 1929 ல் செங்கற்பட்டில் நிகழ்ந்த மாநில முதல் சுயமரியாதை மாநாட்டுக்குத் தலைமை வகித்து வரலாற்றில் இடம் பிடித்தவர்.இவரது பெயரால் அமைக்கப்பட்ட சவுந்தரபாண்டியன் கடைத் தெரு காலப்போக்கில் சுருக்கமாய்ப் பாண்டியன் கடைத் தெரு ஆகி பின்னர் பாண்டி பஜார் ஆனது.இதுவே பாண்டிபாஜாரின் பெயர்க்காரணம். 

புரசைவாக்கம்,வண்ணாரப்பேட்டை என்று ஷாப்பிங் செய்வதற்கான இடங்கள் விரிவடைந்து கொண்டு சென்றாலும் பாண்டி பஜார்தான் முதலிடத்தில் இருக்கும்.

நகரின் மையத்தில் தினமும் லட்சகணக்கான மனிதர்கள் வந்து செல்லும் மிக முக்கியமான வியாபாரஸ்தலமாக இருப்பினும் வீதியெங்கு மரங்கள் வளர்க்கப்பட்டு சாலை முழுதும் பசுமையுடன் ஷாப்பிங் செய்பவர்களுக்கு நிழல் தந்து பரவசமூட்டுகின்றது.

அருகே இருக்கும் உஸ்மான் சாலை,ரங்கநாதன் தெருக்களில் கிடைக்காத பொருட்களும் இங்கு கிடைக்கும்.அங்குள்ள கூட்ட நெரிச்சலுக்குஅஞ்சுபவர்கள் தேர்ந்தெடுத்து செல்லும் இடமும் இதுவாகத்தான் இருக்கும்.

அம்மா அப்பாவைத்தவிர அனைத்தும் இங்கே கிடைக்கும் என்று சொல்வார்கள்.மிக பிரபலமான வணிகஸ்தலங்கள்,பிராண்டட் ஷாப்கள்.உணவகங்கள் என்று அனைத்தும் இங்கேதான் உண்டு.சென்னையில் உள்ள பிரபல பதிப்பகங்கள் அநேகமாக பாண்டிபஜாரைத்தான் ஆக்ரமித்துக்கொண்டுள்ளன.

சென்னையில் மால்கள் பிரபலமில்லாத காலகட்டத்தில் இங்குதான் செல்லாமால்,மாயாபிளாசா என்ற மால்கள் தொடங்கப்பட்டு,பிரபலமாகி,கால ஓட்டத்தில் பிரபல மால்களின் வருகைக்கு பிற்பாடு இதன் மவுசு குறைந்து போனாலும் இன்னும் பழைய வாடிக்கையாளர்களால் கன ஜோராக இயங்கி வருகின்றன.

பழைய ராஜகுமாரி தியேட்டர் இடிக்கப்பட்டு, விஸ்தாராமான ஏழடுக்கு கட்டிடமாக ரூபினி சில்க்ஸ் இப்பொழுது பிக் பஜாராக பரிமாணித்து விட்டது.

கே.எப்.சி,மேரிபிரவுன்,பெலிட்டா,ஸீ செல்,அஞ்சப்பர்,சரவணபவன்,பஸ்கின் அண்ட் ரபின்ஸ்,ஹாட்சிப்ஸ், என்று பன்னாடுகளில் பவனி வரும் உணவகங்கள் மட்டுமல்ல ,பாலாஜி பவன் கீதாகஃபே,பஞ்சாபிதாபா,பனானா லீப் அடையார் ஆனந்தபவன்,கிருஷ்ணா ஸ்வீட்ஸ் என்று எண்ணற்ற உணவகங்கள் குவிந்து இருந்தாலும்,ரோட்டோரகடைகளுக்கும் பஞ்சம் இருக்காது.சென்னையில் மிக பிரபலமான சாலையோர உணவகங்கள் இங்குதான் உண்டு.

பெரிய கடைகள் மட்டுமின்றி ரோட்டோர கடைகளுக்கு(பிளாட்பார்ம் கடை)புகழ்பெற்றது இந்த இடம்.இங்கு பிளாட்பார்ம் கடைகள் வைத்திருப்போர் நகரின் மைய இடங்களில் பங்களாவாசிகளாக இருக்கின்றனர் என்பது ஆச்சரியமான உண்மை.

வெளிநாட்டுப்பொருட்கள் எங்கு வாங்கலாம் என்றால் இங்கே தான் கையைக்காட்டுவார்கள்.ஏ டு இஸட் வெளிநாட்டுப்பொருட்கள் இங்கு கிடைக்கும்.

இளம்பெண்களின் கூட்டமே பிளாட்பார்ம் கடைகளில் ஈ மொய்த்தாற்போல் இருக்கும்.மலிவு விலைகளில் ரெடிமேட் ஆடைகள்,உள்ளாடைகள்,பர்னிஷிங்,வீட்டு உபயோகப்பொருட்கள்,பெண்களுக்கான அக்ஸஸரீஸ்,கிளிப்புகள்,நவநாகரீகமான காலணிவகைகள்,கைப்பைகள்,சால்கள்,பொட்டு,வளையல் பிரேஸ்லெட் இப்படி இங்கு இல்லாத பொருட்களே இல்லை.

Marks & Spencer,Lovable,Jockey,Victorias,sonari போன்ற உள் நாட்டு பன்னாட்டு பெண்களுக்கான ஆயத்த ஆடைகள் அணிவகுத்து  பிரபலமாக இருந்தாலும் பல்லாண்டுகளுக்கு முன்னர் பெண்களுக்கான உள்ளாடைகளுக்கென்றே ஆரம்பிக்கப்பட்ட நாயுடுஹால் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டதும் இங்கேதான்.

செயற்கைப்பூக்களை அடுக்கி விற்பனைக்காக வைத்து இருப்பது பார்க்க ரசிக்கும் படி இருக்கும்.இன்னொரு பக்கம் பூ மார்கெட்டே உண்டு.தூரத்தில் சென்றாலே கதம்ப பூக்களின் வாசனை வகை வகையான மாலைகள்,பொக்கேகள்,சரம் சரமான பூங்கொத்துக்கள் என்று நாசியையும் ,கண்களையும்,மனதையும் பரவசப்படுத்தும்.

புதிய புத்தகங்கள் மட்டுமல்ல,பழைய புத்தகங்கள்,சிடிக்கள் விற்பனையும் அமோகமாக இருக்கும்.படம் வெளிவரும் முன்னரே சிடி விற்பனைக்கு வந்துவிடும்.

பர் பொம்மைகளை விற்பனை செய்வோர் சாலை ஒரத்தில் நிறுத்தி வைத்திருக்கும் கார்களுக்கு பின்னால் பொம்மைகளை அடுக்கி வைத்து வியாபாரம் செய்வது வேடிக்கையாக இருக்கும்.காருக்கு சொந்தக்காரர் வந்துவிட்டால் வியாபாரியின் ஜாகை இன்னொரு காருக்கு மின்னல் வேகத்தில் மாறிவிடும்.

இங்கு நடுநிசிஉணவகங்களும் உண்டு.நடுநிசியில் சென்றாலும் ஐந்தே ரூபாயில் சூடாக சுவையான டீயை அருந்தலாம் இந்த பாண்டிபஜாரில்.அங்கிருக்கும் ஷாஃப்ட்வேர் கம்பெனி,கால்செண்டர்களில் வேலைப்பார்ப்பவர்களின் கூட்டம் நடுநிசிஆனாலும் அந்த சாலையோர டீ விற்பவரை சுற்றி நின்று டீயைகுடித்து ரெஃப்ரெஷ் செய்து கொள்வது வாடிக்கை.

விநாயகசதுர்த்தி வருகின்றதா கலர் கலராக பிள்ளையார் சிலைகள் வீதி முழுக்க நிறைந்து காணப்படும்.நவராத்திரியா மரப்பாச்சி பொம்மைகளும்,மண்பொம்மைகளும் குவிந்து கிடக்கும் விற்பனைக்காக.பொங்கலா கரும்பு கட்டுகளும் வாழைப்பழம்,மஞ்சள்கொத்து என்று பாண்டிபஜாரே கரும்பு தோட்டமாகி விடும்.தீபாவளியா சாதாரணமாக நடைபாதைகளை ஆக்ரமித்து இருக்கும் வளையல் கடையும் துணிக்கடையும்,புத்தகக்கடையும் பட்டாசு விற்பனையகமாக மாறிவிடும்.கிருஸ்துமஸ் காலத்தில் எரியும்பல்புகள் உடன் கூடியகிரிஸ்மஸ் ஸ்டார் விற்பனை கனஜோராக நடப்பது இங்குதான்.கிருஸ்துமஸ் முடிந்த மறுநாளே புத்தாண்டுக்கான வாழ்த்தட்டைகள் விற்கும் கடை முளைத்து விடுவது வாடிக்கை.இப்படி சீஸசனுக்கு ஏற்றவாறு கடைகள் மாற்றம் பெற்று பாண்டி பஜாரை தலை சிறந்த அங்காடித்தெரு என்ற  சிறப்பினை பெற்று விட்டது.


கீழுள்ள படங்கள் கூகிளாரின் உதவிதான்.பாண்டிபஜார் சென்று நாமே புகைப்படம் எடுத்து பிளாகில் எழுத வேண்டும் என்று ஆசைதான்.வழக்கம் போல் சோம்பேறித்தனம்.அதுதான் உட்கார்ந்த இடத்திலே இருந்து கொண்டே பாண்டி பஜாரை போட்டோ பிடித்து பகிர்ந்து விட்டேன்.



அம்மணி துணி வகைகளை எத்தனை ஆர்வத்துடனும்,கவனத்துடனும் பார்வையிலேயே ஆராய்ந்து கொண்டு இருக்கின்றார் பாருங்கள்.


 ஏஸி தேவை இல்லை,கரண்ட் தேவை இல்லை,வாடகை தேவை இல்லை,டாக்ஸ் கட்டத்தேவை இல்லை இந்த பர் பொம்மைகள் விற்பவருக்கு.

வளையோசை கலகலவென கவிதைகள் படிக்குது 
குளு குளு தென்றல் காற்றும் வீசுது 




என்னப்பா இது தலை இல்லாத பொம்மைகள் மீது கலர் கலராக சுடிதார்கள் அணிவித்து கண்காட்சி நடத்துறாங்க.


செருப்புகளின் அணிவகுப்பு.மகாராஜா மகாராணி இளவரசன் இளவரசி மன்னாதி மன்னன் என்று பெரிய பெரிய ஷோ ரூம்கள் குளிரூட்டப்பட்டு கண்ணை கட்டினாலும் இப்படி பிளாட் பார கடைகளில் ஒன்றுக்கு நான்காக வாங்கி விதம் விதமாக செருப்பு அணிந்து மகிழ்வது என்றால் இப்போதைய யூத்துகளுக்கு கொண்டாட்டம்.பெற்றவர்களுக்கு திண்டாட்டம்.கடைக்கரார்களுக்கோ பந்தாட்டம்.

மலர் மாலைத்தோரணங்கள் கண்களையும் நாசியையும் கவர்ந்து பரவசப்படுத்துகிறன.

மஞ்சல்,குங்குமம்,கயிறு விபூதி என்று அநேகப்பொருட்களும் விற்பனை செய்யும் இடம்.

விதவிதமான பொம்மைகள்,சிலைகள்,சாவிகொத்துக்கள் என்று விற்பனை செய்யும் ஆல் இன் ஆல் அட்டகாசக்கடை.


February 3, 2013

வண்டலூர் பூங்கா


சென்னையின் தெற்கில் 30 கீ.மீ தொலைவில் உள்ள வண்டலூரில் அமைந்துள்ளது. இப்பூங்கா வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது. சென்னையில் 1855ல் தோற்றுவிக்கப்பட்ட இந்தியாவின் முதல் விலங்கியல் பூங்காவாகும்.

வண்டலூர் பூங்கா, தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்கா என்ற சிறப்பு பெற்றது. 1,265 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்காவில், 1,500க்கும் அதிகமான விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன.

தினமும் 5,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் 10,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.லயன் சபாரி,மான் சபாரி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் பரவசப்படுத்தி வருகிறது.

இப்பூங்காவுக்கு இன்னும் சிறப்பு செய்யும் விதத்தில் .3 கோடியே 25 லட்சம் செலவில் இப்பூங்கா புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள நவீன முறையில் அறிவியல் அடிப்படையில் பராமரிக்கப்படும் மிகச்சில உயிரியல் பூங்காக்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா முதன்மையாக சிறந்து விளங்குகிறது.

பூங்காவின் முக்கியமான நோக்கங்களுள் ஒன்றான வன விலங்கு பாதுகாப்பு குறித்த கல்வியை பொது மக்களும், பள்ளி மாணவ,மாணவியரும் பெறும் வகையில் பூங்கா நிர்வாகத்தினர் கற்பித்து வருகின்றனர்.பார்வையாளர்களுக்கு வனவிலங்குகளின் முக்கியத்துவம்,வனவிலங்குகளின் பாதுகாப்பு பற்றி வகுப்புகள் நடத்துகின்றனர்.மாணவ மாணவிகளுக்கு வனவிலங்குகளைப்பற்றிய விழிப்புணர்வு அதிகம் வேண்டும் என்ற கொள்கையினால் சாதாரணமாக 30 ரூபாய் நுழைவு கட்டணத்தை 12 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவியருக்கு வெறும் இரண்டு ரூபாய் மட்டுமே கட்டணமாக பெறுகின்றனர்.செவ்வாய் அன்று இப்பூங்காவுக்கு விடுமுறை தினமாகும்.

வனவிலங்கு பூங்காவுக்கு சென்று இருந்த பொழுது கேமராவில் சிறைபிடித்த சில விலங்குகளும் பறவைகளும்.






நீருக்குள் நிற்கும் நீர்யானை.அது நடந்தாலே நீருக்குள் ஒரு பிரளயமே நடந்தது போல் நீர் தளும்புவதைப்பார்க்க பிரமிப்பாக இருக்கும்.




நீருக்கு வெளியில் நீர் யானை.கம்பீர நடை போட்டு உலா வரும் காட்சி.




குட்டி யானைகள் இரண்டு கும்மி கூத்தாடுகின்றன.அதன் விளையாட்டை படிப்படியாக காட்சிகளாக பதிவு செய்து வைத்துள்ளேன்.


சிங்கவால் குரங்குக்கு என்ன கோபமோ?முகத்தை காட்ட மாட்டேன் என்று போயே போய் விட்டது.


நீள வால் கருங்குரங்குகள் மரத்தின் மேல் கும்பலாக ஏறி குரங்கு சேட்டை பண்ணிக்கொண்டுள்ளன.நீண்ட வாலைப்பார்க்கும் பொழுது  சிறு வயதில் படித்த சித்திரக்கதையில் வரும் சுட்டிக்குரங்கு கபீஷின் நினைவு வந்தது

 வங்கபுலி எனும் வெள்ளைப்புலிகள் இந்தியாவில் சுமார் 100 என்ற அளவிலேயே உள்ளன.இவற்றில் இப்பூங்காவில் மட்டும் ஒன்பது புலிகள் உள்ளன.2006 ஆம் ஆண்டில் டில்லியில் உள்ள தேசியப்பூங்காவில் இருந்து விலங்குகள் பரிமாற்ற முறையில் இப்பூங்காவுக்கு இவ்வெள்ளைப்புலிகள்  கொண்டு வரப்பட்டன.

மேலே உள்ள படத்தில் கம்பீர நடை போடும்  புலியார்.ஆக்ரோஷமாக சீறிக்கொண்டே உலா வருகின்றார்

.வீரா சிங்கத்தை பவ்யமாக படம் பிடித்து வந்தேன் .அந்த படத்தை என் கேமராவில் இருந்து காக்கா தூக்கிகொண்டு போய்விட்டது போலும் .காணவே காணோம்.

அப்படி என்னதான் உள்ளதோ.கீழ் படத்தில் உள்ள மான் கூட்டம் பாரவையாளர்கள் நிற்பதை பொருட்படுத்தாமல் கும்பலாக என்னதான் செய்கின்றதோ??


ஒட்டகை சிவிங்கி தன் ஜோடியுடன் குஷாலாக  வாக்கிங் போவதைப்பாருங்கள்.




இந்த குரங்குக்குட்டி என்ன சமர்த்தாக செயற்கை குகையினுள் உட்கார்ந்து கொண்டுள்ளது பாருங்கள்.பார்வையாளர்கள் வாழைப்பழத்தினை  காண்பித்தும் அது வெளியில் வரவே இல்லை.
வாரே வாஹ்..கோபித்துக்கொண்டு சிங்கவால் குரங்கு முதுகைக்காட்டிக்கொண்டு போனது இப்பொழுது கோபம் தணிந்து என்னைப்பார்,என் அழகைப்பார் என்று தள்ளாட்டம் போட்டு நடந்து வருகிறது.

அம்மா குருவியும் அப்பா குருவியும் தன் வாரிசின் வரவுக்காக என்னஒரு எதிபார்ப்புடன் இருக்கிறதை பாருங்கள்.அப்பாக்குருவி ஒற்றைக்காலில் தவம் இருக்க,அம்மா குருவி, குஞ்சுக்குருவியின் சப்தம் முட்டைக்குள் கேட்கின்றதா என்ரு ஆராய்ச்சி பண்ணிக்கொண்டுள்ளது போலும்.



இது ஒரு நாரைவகை.என் மகன் படிக்கும் கல்லூரி இந்தப்பூங்காவின் அருகில் உள்ளதால் பிளான் பண்ணாமலேயே அவ்வப்பொழுது சென்று வருவேன்.ஆதலால் குறிப்புகள் எடுக்கவில்லை.



இது ஒரு கோழி இனம் பார்க்க நெருப்புக்கோழி போன்ற பயமுறுத்தும்  தோற்றம்.



இதுவும் ஒரு வகை கொக்கினம்தான் என்னவோ சோகம் கவ்விக்கொண்டது போல் உள்ளதே இந்த கொக்கு!கொக்கம்மா அப்படி என்னதான் உன் சோகம்?



பயணத்தின் போது வழியில் முட்டை இடுமாம் ஆமை.இதோ அவசர கதியில் செல்கின்ற வணடலூர் ஆமையார் வழியில் முட்டை இடுவாரா?முட்டைக்கு காத்திருந்து முட்டை(பூஜ்ஜியம் )தான்  ரிஸல்ட்.


முதலைக்கண்ணீர் என்று சொல்லுவார்கள்.முதலை சிரிப்பைப்பார்த்து இருக்கின்றீர்களா?இந்த முதலை சிரிக்கின்றதுதானே?(மெட்ராஸ் முதலைகள் எல்லாம் நை நை என்று அழுது கண்ணீர் விடாது போலும்.)




ஆகாசத்தில் பறக்கும் ஒற்றைப்பறவையைப்பாருங்கள்.பூங்காவுக்கு சொந்தமான பறவை பத்திரமாக பூங்காவுக்கு திரும்பி விடுமா என்று கவலையுடன் மேங்கோ ஐஸை சுவைத்து கொண்டே ஏக்கமாக பார்த்துக்கொண்டே  இருந்தேன்.