"உப்புமாவாஆஆஆஆ"என்று பயத்தில் வாய்பிளக்கும் பார்த்தசாரதிகள்,மஸ்தான்கள்,டேவிட்டுகள் எல்லாம் நம்மிடையே நிறையவே உண்டு."ஏன்?பங்கஜங்கள்,பாத்திமாக்கள்,பிலோமினாக்கள் இல்லையா"என்றெல்லாம் அதிரா போன்றோர் குறுக்கு கேள்வியெல்லாம் கேட்கப்படாது.
உப்புமாவைப்பற்றி படங்கள்,சீரியல்களில் கூட மட்டமாக போடுவதைப்பற்றி எனக்கு நிறைய வருத்தம்.ஆஃபீஸுக்கும் சரி,ஸ்கூலுக்கும் சரி ஒரு நாளாவது உப்புமா கிளறி அணுப்பினால் "என்ன வீட்டில் உடம்புக்கு சரியில்லையா"என்று துக்கம் விசாரிக்க ஆரம்பித்து விடுவதுதான் அதிகபட்ச துக்கம்.
சந்திரபாபு "கல்யாண சமையல் சாதம்..காய்கறிகளும் பிரமாதம்..அந்த கவுரவபிரசாதம்..அதுவே எனக்குப்போதும்"என்று எத்தனை பட்சணங்களை ரசித்து,ருசித்து பாடினார்.இந்த உப்புமாவை மட்டும் அநியாயத்திற்கு விட்டு விட்டார்.இப்போ இருந்திருந்தாருன்னா நேராவே போய் "ஏஞ்சாமி..உப்புமா மேலே உங்களுக்கு இத்தனை பகை" ன்னு ஆத்திரம் தீர கேட்டு இருப்பேன்.சரி..பெரிய மனுஷர்..விட்டு விடுவோம்.
இந்த படாபட் ஜெயலட்சுமின்னு ஒருத்தர்.ரஜினி படத்தில் ரஜினியைப்பார்த்து "நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்தரிக்கா,நேத்து வச்ச மீன் குழம்பு என்னை இழுக்குதையா"ன்னு எத்தனை எத்தனை பதார்த்தங்களை சொல்லி சொல்லி நாக்கில் எச்சில் ஊற ஊற பாடினார்.அவராவது இந்த உப்புமாவைக்கண்டுகிட்டாரா?இல்லையே?
சரி இதெல்லாத்தையும் விடுங்க..சமீபத்தில் விக்ரம் மூச்சு விடாமல் ஒன்றரை மைல் நீளத்திற்கு ஒரு பாட்டு பாடினாரே
கூழு வேர்க்கடலை வறுத்தகறி சுண்டகஞ்சி வடுமாங்கா சுட்டவடை நீர்மோரு பேட்ரிதண்ணி இளநீர் எறா தொக்கு உப்புக்கண்டம் பழைய சோறு டிகிரிகாப்பி இஞ்சிமுரப்பா கடலைமுட்டாய் கமர்கட்டு வெள்ளரிக்காய் எலந்தப்பழம் குச்சிஐஸு கோலிசோடா முறுக்கு பஞ்சுமுட்டாய் கரும்புசாறு மொளகாபஜ்ஜி எள்ளுருண்டை பொரிஉருண்டை ஜிகிர்தண்டா ஜீராதண்ணி ஜவ்வுமிட்டாய் கீரைவடை கிர்னிப்பழம் அவிச்சமுட்டை ஹாப்பாயில் பல்லிமிட்டாய் பப்பாளி புகையிலை போதைப்பாக்கு புண்ணாக்கு..இத்தனை ஐட்டங்களையும் அசால்டா சொல்லிட்டு இந்த உப்புமாவை கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் விட்டுட்டார் பார்த்தீங்களா?
மேற் சொன்னா மூணு பாட்டையும் நீங்கள் வேணுன்னா கேட்டுட்டு நியாயத்தை சொல்லுங்க.
சந்திரபாபு பாடியது
படாபட் ஜெயலஷ்மி பாடியது
விகரம் பாடியது
அட,ஒரு நல்ல சைவ ஹோட்டலாக பார்த்து வாய்க்கு ருசியா உப்புமா சாப்பிடலாம்.வகைதொகையா வித வித சட்னி,சாம்பார் ,வடைகறி,குருமா,கொத்ஸு,ஊறுகாய் கடைசியா சர்க்கரையில் தோய்த்து வாயாற சாப்பிடலாம்ன்னு போனால் ஒரு முழ சைஸ் மெனு கார்டில் வாயில் நுழையாத பதார்த்தங்கள் பெயரையெல்லாம் போட்டு விட்டு இந்த உப்புமா மட்டும் மிஸ்ஸிங்ன்னா..உச்சகட்ட சோகம் அப்பிக்கொள்ளாமல் என்ன செய்யும்?நீங்களே சொல்லுங்கள்.
மினி டிஃபன் என்று போட்டு குட்டியா ரெண்டு பூரி,இட்லி,வடை,பொங்கல் என்று பறிமாறும் பொழுது ஓரத்தில் ஒருகரண்டி உப்புமாவைக்கிளறிவைத்தால் என்ன?இந்த ஹோட்டல் காரர்கள் குறைந்தா போய் விடுவார்கள்?ஏன் எல்லோரையும் போல் இந்த ஹோட்டல் கார்களுக்கு உப்புமா மீது துவேஷம்?
சரி போனால் போகுது.கேட்டு வாங்கி சாப்பிடுவோம் என்று சர்வரைக்கூப்பிட்டு"ஒரு பிளேட் ரவா உப்புமா?" என்று கேட்டால் சர்வரின் அசடு வழிதலை பார்க்கும்பொழுது பற்றிக்கொண்டு வருகின்றதே.
"மேடம்..சூடா..இடியாப்பம்,சப்பாத்தி,ஆனியன் ரவா.மசால் தோசை,ஊத்தப்பம்,பரோட்டா,சோளா பூரி இருக்கு மேடம்"என்று அவர் லிஸ்ட் படிப்பதில் ஒன்றினை கடனே என்று வாங்கி சாப்பிட்டுவிட்டு ஏறும் கடுப்பில் ஒரு ஒற்றைபைசா டிப்ஸ் வைக்காமல் சர்வரை முறைத்துக்கொண்டே ஹோட்டலை விட்டு வெளியேறும் பொழுது உள்ள மன உளைச்சலை என்ன என்பது?
ரயிலில் பிரயாணப்படும் பொழும்பொழுது விழுப்புரம் ஜங்ஷன் வந்து விட்டால் உப்புமா பொட்டலம் விற்பனைக்கு வரும்.சூடான,சுவையான உப்புமாவுக்கு பெயர் பெற்றது விழுப்புரம் ஜங்ஷன்.விழுப்புரம் எப்போ வரும்,எப்போ வரும் என்று ஸ்டேஷன்களை எண்ணிக்கொண்டு வருகையில் அந்த உப்புமா ஸ்டேஷன் வந்துவிடும்.தூரத்தே உப்புமா பார்சல் காரர் நின்றிருப்பார்.நான் இருக்கும் கோச் அருகே வருவதற்குள் வண்டிக்கு பச்சைக்கொடி காட்டி விடும் பொழுது வென்னீரில் வெந்த உப்புமாவாகி விடுவேன்
எனக்கு உப்புமா என்றால் கொள்ளைப்பிரியம்.சின்ன வயதில் இருந்தே உப்புமாவைப்பாய்ந்து பாய்ந்து சாப்பிடுவேன்.தக்காளி,பொட்டுக்கடலை,மல்லி,புதினா,வெங்காயம்,இஞ்சி,தேங்காய் சட்னி வகைகள்,தொக்கு,சாம்பார்,குருமா,கொத்ஸு,கோசுமல்லி,வத்தக்குழம்பு,நேற்றுவைத்த கறிக்குழம்பு,முந்தாநாள் வைத்த மீன் குழம்பு,அதுக்கும் முந்தின நாள் வைத்த கருவாட்டுக்குழம்பு,வடைகறி,மாசி,சர்க்கரை,ஜாம்,சாஸ்,ஊறுகாய் எதனுடனும் பொருந்துக்கூடிய உணவு என்றால் இந்த உப்புமா ஒன்று மட்டும்தான் என்பது காலரை தூக்கி விட்டுக்கொண்டு சொல்லக்கூடியக்கூடிய சமாச்சாரம்.
இந்த உப்புமா இருக்கே..நறநறவென்ற பாம்பே ரவையில் நெய் விட்டுக்கிளறி,ஆங்காங்கே கடுகும் உளுத்தம்பருப்பும்,கடலைப்பருப்பும் மும்மூர்த்திகளாக கண்களை சிமிட்ட,தாளித்த சிகப்பு மிளகாய் லேசா எட்டிப்பார்க்க,கருவேப்பிலை கருத்தைக்கவர வெண்ணைக்கட்டி கணக்காபளீர்ன்ன உப்புமாவை தட்டில் போட்டு அதன் மீது சாம்பாரை கரண்டியில்லாமல் அப்படியே கவிழ்த்து ஓவர் ஃப்ளோ ஆகாமல் சாப்பிடும் பொழுது ஆஹாஹா ..இதற்கெல்லாம் ஒரு ரசனை வேண்டுமுங்கோ..அதாங்க..சாப்பாட்டு ரசனை..சாப்பிடுற ரசனை.
தெரிந்தவர்கள் கல்யாணத்திற்கு கூப்பிடுறாங்க.கைகொள்ளாமல் பரிசுப்பொருளுடன் போய் மணமக்களை வாயாற வாழ்த்தி மணமக்கள் கையில் பரிசுப்பொருளை கொடுத்துவிட்டுவிட்டு,கொடுத்தற்கு அத்தாட்சியாக வீடியோவிலும் சிரித்து விட்டு நேரே பந்திக்கு போனால் வகை,வகையாக கலர் கலராக பதார்த்தங்களை பறிமாறும் பொழுது கூடவே ஒரு கரண்டி உப்புமாவையும் பறிமாறினால் சொத்தில் பாதி கரைந்து விடுமா என்ன?இப்படி (மனசுக்குள்ளேயேதான்)கேட்கத்தோணுமா?தோணாதா?நீங்களே சொல்லுங்க?
சரிதான்,ரொம்ப நாள் கழித்து ஸ்நேகிதியாளை பார்க்கலாம்ன்னு ஆசை ஆசையா போனால் பாம்பே ரவாவில் நெய் சொட்ட சொட்ட ஃபுரூட்கேசரியும்,முந்திரியும்,கிஸ்மிசும் பளிச் என்று சிரிக்க பிடித்த ரவாலாடும்.குடிக்கறதுக்கு ரவா ஃபிர்னியும் தந்தாளே ஒழிய தம்மாதூண்டு கிண்ணத்தில் சூடா ஒரு கரண்டி உப்புமாவைக்கிளறி வைப்போமுன்னு தோன்ற மாட்டேன்கிறதே.
பிளாக் எழுதற தங்கமணிகள் வீட்டில் கண்டிப்பாக அவசர கதியில் ஒரு உப்புமாவைக்கிளறி துளி ஊறுகாயை தட்டின் ஓரத்தில் வைத்து ரங்கமணிகளுக்கு அவசர,அவசரமாக நாஷ்டா கொடுத்து விட்டு தொடர்ந்து தங்களது பிளாக் பணியை செவ்வன நிறைவேற்றுவார்கள் என்று நம்புகின்றேன்.
அதே போல் பிளாக் எழுதற ரங்கமணிகளைப்பார்த்து பிளாக் படிக்காத தங்கமணிகள்"எங்கள் கஷ்டம் உங்களுக்கெல்லாம் எங்கே புரியப்போறது.ஒரு நாள் சமைக்க தில் இருக்கா?"என்று கேட்டு உசுப்பேத்தி,நம்ம பிளாக் ரங்கமணிகளும் மீசையை முறுக்கிக்கொண்டு அவசர கதியில் ஒரு உப்புமாவைக்கிளறி,ஓரத்தில் தாராளமாக சாஸை விட்டு,ஸ்டைலாக ஒரு ஸ்பூனையும் சைடில் வைத்து தங்கமணிகள் முன் பவ்யமாக நீட்டுவார்கள் என்று நம்புகின்றேன்.
வெளிநாட்டு வாழ் இந்தியபிரமச்சாரிகள் வெளியில் நிதம் பிரட் சாப்பிட்டு போரடித்து இனி சுடசுட உப்புமா கிளறி சாப்பிட்டு விட்டு அவசர அவசரமாக ஆஃபீஸ் செல்வார்கள் என்று நம்புகின்றேன்.
இனி எல்லார் வீட்டிலும் உப்புமா கொண்டாட்டம்தானா?உப்புமான்னா இனிமேல் இந்த எல்லாப்புகழும் இறைவனுக்கே வலைப்பூ கண்டிப்பா உங்கள் எல்லோருக்கும் நினைவுக்கு வந்து விடும் இல்லையா?
டிஸ்கி:"அட..சொந்த அனுபவமா?அப்ப வீட்டைய்யாவுக்கு தினம் தினம் உப்புமா அபிஷேகம் தானா"என்று ஸ்டார்ஜன் ஷேக் போன்றோர் கேட்டுடக்கூடாதுன்னு இந்த அவசர டிஸ்கி.வீட்டைய்யா உப்புமான்னா எட்டுக்கால் பாய்ச்சலில்,பின்னங்கால் பிடறியில் அடிக்க ஒட்டம் எடுப்பார் என்பதுதான் இன்றைய சோகத்தின் ஹைலைட்.
Tweet |