எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே
அவன் நல்லவனாவதும் தீயவனாவதும்
அன்னை வளர்ப்பினிலே
என்று ஒரு பாடல் வரிகள் உண்டு.இது முழுக்க முழுக்க உண்மை.பாடலின் வரிகளை மேலோட்டமாக பார்த்தால் அபத்தமாகத்தான் தெரியும்.ஒரு தாய்க்கு தன் பிள்ளை கெட்டவன்(ள்)ஆவதற்கு பிடிக்குமா?நல்லவனாவதற்காகத்தானே பாடு படுவாள்.அதையே குறிகோளாக கொண்டுதானே வளர்ப்பாள்.அதற்காகத்தானே பிராயசித்தப்படுவாள்?இப்படித்தான் தோன்றும்.ஆழ்ந்து சிந்தித்துப்பார்த்தோமானால் உண்மை புலப்படும்.
நம் பிள்ளைகள் செய்யும் ஒவ்வொரு சிறு தவறுகளுக்கும் பெற்றோர்கள் தம்மை தொடர்பு படுத்தி சிந்தித்து பாருங்கள்.உண்மை புரிபடும்.உதாரணமாக ஒரு இல்லத்தரசி ஒரு நூறே ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்குகிறாள்.கணவருக்கு தெரிந்தால் 'தேவையா'என்று கடிந்து கொள்ளுவார் என்று அவள் கணவரிடம் மறைத்து விடுகிறாள்.இது சாதாரண விஷயமாயினும் இதைப்பார்த்துக்கொண்டிருக்கும் பிள்ளையும் நாளைக்கு அந்த 'மறைத்தல்' என்ற விஷயத்தை பின் பற்றும்.சின்ன தவறுகளை செய்து விட்டு பெற்றோர் திட்டுவார்களே என்று மறைக்க ஆரம்பிக்கும்.இதுவே வளர்ந்து பள்ளிக்கு கட் அடித்து விட்டு ஸ்நேகிதர்களுடன் ஊர் சுற்றி பெற்றோருக்கு தெரிந்தால் திட்டுவார்களே என்று தப்புக்கு மேல் தப்பு செய்தால் நம்மால் ஜீரணிக்க இயலுமா?
குழந்தை வயிற்றில் ஜனனம் ஆனதுமே பெற்றோர்களுக்கு கடமையும் பொறுப்புணர்வும் ஆரம்பித்து விடுகிறது.பெண்ணின் வயிற்றில் கரு தோன்றி விட்டது என்று உறுதி ஆனதுமே தாய் நல்ல மனநிலையிலும்,அமைதியான குடும்ப சூழ்நிலையிலும் உயரிய எண்ணங்களுடனும் ,பொய்,பொறாமை,காழ்ப்புணர்வு,வெறுப்பு,கோபம்,எரிச்சல்,சச்சரவு,அகம்பாவம்,ஆணவம் போன்றவற்றை விட்டொழித்து மனதினை நேரிய வழியில் வைத்துக்கொள்ள வேண்டும்.இதைத்தான் இன்றைய மருத்துவ உலகம் கூறுகிறது.
தனிமையில் இருக்கும் பொழுது வயிற்றில் இருக்கும் குழந்தையுடன் பேசுங்கள் என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.எனக்கு தெரிந்த ஒரு பெண் அவளது கர்ப்பகாலத்தில் இதற்கெனவே நேரம் ஒதுக்கி அறையை மூடிக்கொண்டு பேச ஆரம்பித்துவிடுவார்.மற்றொருவரோ தன் மதம் சார்ந்த உரையாடல்களை செல்போன் மூலம் ஒலிக்க விட்டு வயிற்றின் மேல் வைத்துக்கொள்வார்.
இறைவனின் படைபில் மனிதப்படைப்பு என்பது உன்னதமானது.மற்ற உயிரினங்களை விட மனிதனுக்கு தனியான அந்தஸ்தையும்,சிறப்பையும்,பாக்கியத்தையும் இறைவன் கொடுத்துள்ளான்.ஒருவனின் திறமை,ஆளுமை அவனது புத்திக்கூர்மையை வைத்துத்தான் கணிக்கிறோம் அவன் வல்லவனா என்று.மனிதனின் புத்திகூர்மை,நினைவாற்றல்,விசாலமாக சிந்திக்கும் திறன்,செய்யும் ஒவ்வொன்றையும் பகுத்து,அலசி,ஆராய்ந்து,திட்டமிட்டு,ஆலோசனை செய்து செயலாக்கம் செய்தால் அவன் அறிஞனாக வெளிப்படுகின்றான்.
மனித மூளையின் அளவும்,திறனும் கரு உருவான உடனே ஆரம்பமாகி விடுகிறது.ஆரம்பத்தில்தான் அதன் அபரிதமான வளர்ச்சி பிரமாண்டமாக இருக்கும் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றது.
எண்ணங்களின் கோர்வைதான் மனம்.அறிவுப்பூர்வமான,ஆக்கப்பூர்வமான,எல்லா விஷயங்களையும் கற்று பலதரப்பட்ட விஷயங்களையும் அறிந்து,புகட்டி,நல்லவற்றை ஏற்று,தீயவற்றை அகற்றி,கசடுகளை களை எடுத்து எண்ணங்களில் அசாத்திய தன்னம்பிக்கையும்,வரைமுறைக்குட்பட்ட தைரியத்தையும் ஒழுக்கத்தையும் பயிற்றுவித்தோமானால் நன் மக்களை அறுவடை செய்யலாம்.நல்ல சமுதாயமும் உண்டாகும்.
தன்னம்பிக்கை,ஆற்றல்,கம்பீரம்,சுயமாக தீர முடிவெடுத்தல்,விடா முயற்சி,அறிவு,நல்லொழுக்கம்,கல்வி போன்றவற்றில் உயர்ந்து,சிறந்து நம் சந்ததிகள் விளங்குமாயின் அது நமக்கும்,சமுதாயத்திற்கும் கிடைக்கும் பெரும் பேறல்லவா?
மற்றொரு பதிவில் குழந்தைவயிற்றில் ஜனித்ததில் இருந்து அதன் பதின் பருவம் வரை நாம் நம் சந்ததியருக்கு ஆற்றக்கூடிய கடமைகளையும்,பொறுப்புகளையும்,கட்டாயங்களையும் பார்ப்போம்.
இரண்டாம் பாகம் காண இங்கே சொடுக்கவும்,.
இரண்டாம் பாகம் காண இங்கே சொடுக்கவும்,.
Tweet |