”அவளா..?ராட்சஷியாச்சே”
“அவள் வாய் இருக்கே.அது பனாமா கால்வாய்”
“யப்போய்..இவ வாய்லேர்ந்து தப்பி வர முடியுமா”
ஒரு சிலர் ஒரு சிலரைப்பற்றி இப்படி விமர்சிப்பதை கேட்டு இருப்போம்.பார்த்தும் இருப்போம்.உண்மையில் அந்த வாய்க்குறியவர்கள் அத்தனை பயங்கரவாதியா என்றால் அதுதான் இல்லை.இப்படிப்பட்டவர்களுக்கு வாய்ஜாலம் என்றால் என்னவென்றே தெரியாது.வார்த்தைகளில் வல்லினம் மெல்லினமாக பேசுவது எப்படி என்ற சூட்சுமம் புரியாது.
பஜ்ஜி மிளகாயில் உப்பும் மிளகாய்த்தூளும் கலந்து தடவி சுட்ட பஜ்ஜியை சாப்பிட்டடாற்போல் சிலரது வார்த்தைகளில் காரம் தெரிக்கும்.இன்னும் சிலர் பாலில் தேனைக்கலந்தாற்போல்,ஜீராவில் ஊறிய குலோப்ஜாமூன்,நெய்யில் தோய்ந்த அல்வாபோல் கேக் மீது பூசப்பட்ட ஐஸிங் போல் வார்த்தை மென்மையாக,இனிக்க இனிக்க இருக்கும்.கேட்கும்செவிப்பறைகளில் இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என்பதைப்போல் இருக்கும்.
நல்ல வாழ்க்கைக்கும்,அழகிய பண்பிற்கும்,கட்டுக்கோப்பான குடும்ப அமைப்புக்கும்,நெருக்கமான,தொய்வில்லாத நட்புக்களுக்கு,நாம் உத்தியோகம் செல்லும் இடங்களுக்கும் இப்படி எல்லாவித அம்சங்களுக்கும் இந்த ஜீராவில் ஊறிய குலோப்ஜாமூன்கள் அவசியம்தேவை.
வார்த்தைகளில் எப்பொழுதும் அதீத கறாரும் கண்டிப்பும் ,அதிகார தோரணையும்,இடைவிடா ஆளுமை குணமும்,தான் தான் உசத்தி என்ற மனோபாவமும்,அகம்பாவமும்,ஆணவமும் நமது மதிப்பீட்டை பிறர் முன் குறைத்துவிடும்.இப்பதிவின் முதல் மூன்று வரிகளால் விமர்சிக்கப்படுவோம்.
நமது வாழ்க்கைத்துணையாகட்டும்,மற்றநட்புக்கள், உறவுகளாகட்டும்,வீதியில்செல்லும் காய்காரி முதல் வீட்டில் வேலை பார்க்கும் முனியம்மா வரை இந்த மிளகாயில் காரம் தடவும் வேலை பலிக்காது.
“டேய் இருபத்திநாலு மணிநேரமும் கம்பியூட்டரில் இருந்து தொலைக்கறதே உனக்கு பொழைப்பா போச்சு.கொஞ்ச,ம் கூட பொறுப்பு கிடையாது.இப்படியே போனால் மாடுதான் மேய்க்கனும்.மரியாதையா போய் படிடா”பெற்ற பிள்ளையிடம் காட்டுக்கத்தலாக கத்தினால் அந்தப்பிள்ளை சந்தோஷமாக போய் படிப்பானா?மாட்டான்.உங்களுக்கு பயந்து படித்தாலும் மனபூர்வமாக படித்து ,மண்டையினுள்ளே ஏற்றிக்கொள்ளுவானா?மாட்டான்.
இதுவே ஜீராவில் குலோப்ஜாமூனை ஊற வைத்தாற்போல் பேசுங்கள்.
“ராஜா...இன்னும் எக்ஸாமுக்கு பத்தேநாள் தான் இருக்குப்பா!போய் படிடா செல்லம்.”இந்த ஒரு வார்த்தை போதுமே.சடாரென்று சட் டவுன் செய்து விட்டு படிக்கும் மேசையை நோக்கி செல்வதற்கு.
“ஏங்க..உங்களுக்கு என்று சுய புத்தியே இல்லையா?சம்பளக்கவரை கையிலே வாங்கியதும் கடன் கேட்டானாம்,இவரும் தூக்கி தானம் வார்த்துட்டு வந்துட்டாராம்.ஒவ்வொருத்தனின் சாமர்த்தியத்தை பாருங்க.அவனவன் எப்படி உஷாரா இருக்கான்னு.தெளிவா இருக்கான்னு.அதான் அப்படியே இளிச்சவாயன்னு நெற்றியில் ஒட்டி இருக்கே.இதுக்கெல்லாமா யுனிவர்சிடியில் போய் படிக்க முடியும்?”
இப்படி பேச்சு சென்றால் அங்கே எப்படி அமைதி இருக்கும்?பிரச்சினைகளுக்கு சுழி போட்டது போல் ஆகி விடாதா?இவள் என்ன சொல்லுவது?நான் என்ன கேட்பது?என்ற கோப அகங்காரத்துக்கு வித்திட்டு விடாதா?
இதுவே கொஞ்சம் டயலாக் மாற்றி,குரல் உச்சஸ்தாயியில் இருந்து அடிகுரலுக்கு போய் அரவணைப்பு பேச்சால் நீங்கள் அணுகினால் உங்களவர் இனி கடன் கொடுப்பாரா?சம்பளக்கவர் கைக்கு வந்ததுமே உங்கள் அன்பு முகம் அல்லவா கண் முன் தெரியும்.
லேட்டாக வரும் வேலைக்காரியிடம்”இதே உனக்கு பிழைப்பா போச்சு.சம்பளம் மட்டும் வக்கணையா வாங்குறே.இஷ்டம் இருந்தால் டயத்துக்கு வா.இல்லேன்னா ஓடியே போய்டு” இப்படி ஆணவத்தை வெளிப்படுத்துவதைவிட “அட தாயம்மா,ஏன் லேட்டு ?நீ வந்துட்டு போய் விட்டால் சீக்கிரமா மார்க்கெட் போகலாம்ன்னு இருந்தேனே.சரி பரவா இல்லை.நாளைக்காவது டயத்துக்கு வா”இப்படி இருந்தால் ரிசல்ட் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.
சதா சோபாவில் சாய்ந்தபடி டிவி பார்த்துக்கொண்டும்,ஈஸி சேரில் சாய்ந்தபடி பேப்பர் வாசித்துக்கொண்டிருக்கும் மாமனாரிடம்”நீங்க ’சும்மா’தானே இருக்கீங்க.சின்னவனுக்கு ஹோம் வர்க் சொல்லிக்கொடுங்களேன்”என்று சொன்னால் அந்த் ’சும்மா’ சும்மா இருக்குமா என்ன?இதனையே வார்த்தையில் சற்று தேன் ,பால் தடவி ”மாமா,நீங்க ஹோம் வர்க் சொல்லிக்கொடுத்தால் சின்னவன் கப்புன்னு பிடித்துக்கறான்.அதென்னமோ தெரியலே தாத்தா சொல்லிக்கொடுத்தாருன்னா இவன் சமர்த்தா படிச்சுக்கறான்.கொஞ்சம் படித்துக்கொடுக்கறீங்களா மாமா.நான் அயர்ன் பண்ணிட்டு இருக்கேன்”இப்படி சொல்லிப்பாருங்கள் ரிஸல்ட் எப்படி இருக்கின்றது என்று.
“அத்தே,நான் என் ஸ்நேகிதி சுபா வீட்டிற்கு போறேன்.சமைத்து வைத்து விடுங்கள்”என்று உத்தரவு போட்டால் அத்தையின் முகத்தில் கடுகை தாளித்து விடலாம்.இதுவே”அத்தை,நான் சுபா வீட்டிற்கு போறேன்.ஹாஸ்பிடலுக்கு கூப்பிடுறா.சாம்பாருக்கு பருப்பை வேக வைத்து இருக்கேன்.தாளித்துக்கொட்டி ஒரு பொரியல் பண்ணிடுங்கள்.நீங்கள் வச்ச முருங்கைக்காய் சாம்பார்ன்னா நம்ம சுஜிகுட்டி கூட நாலு கவளம் சாப்பிடுவாள்.பண்ணிடுறிங்களா அத்தை.இல்லை பண்ணி வச்சிட்டே போகட்டுமா?கூட பதினைந்து நிமிஷம் தான் லேட் ஆகும்”இப்படி ரசகுலா வார்த்தைகளில் சொல்லிப்பாருங்கள்.
“நீ போய் வாம்மா.கூடவே புதினா தொகையலும் அரைத்து,பச்சடி பண்ணி,நாலு அப்பளத்தை பொரித்து வச்சிடுறேன்.”என்று நீங்கள் வரும்பொழுது ஒரு விருந்தே காத்திருக்கும்.
ஊருக்கு போகும்பொழுது”சிலிண்டர் வர்ர நாள் வந்தால் வாங்கி வச்சிடுங்க.பால் பாக்கெட் வந்தால் பிரிட்ஜ்ஜில் வாங்கி வச்சிடுங்க.கொரியர் வந்தால் கையெழுத்து போட்டு வாங்கி வச்சிடுங்க”இப்படி வரிசையாக கட்டளை போட்டு விட்டு எதிர் வீட்டுக்கார அம்மணியின் முகத்தைப்பாருங்கள்.எள்ளும்,கொள்ளும் வெடிக்கும்.’இவள் என்ன உத்தரவுக்கு மேல் உத்தரவா போடுறாள்.நான் என்ன இவளோட சேவகியா?”என்று முகம் சொல்லாமல் சொல்லும்.
“மாலா,தங்கைக்கு குழந்தை பிறந்து இருக்கு. ஊருக்கு போய் பார்த்து விட்டு வரப்போகிறோம்.தொந்தரவுக்கு மன்னிக்கனும்.பாலை வாங்கி பிரிட்ஜ்ஜில் வச்சிடுறீங்களா?ஒண்ணும் பிரச்சினை இல்லையே..”இப்படி வார்த்தைகளை ஜவ்வு மிட்டாயாக இழுத்து சொல்லிப்பாருங்கள் அவர்களே ”யோசிக்காமல் போய்ட்டு வா.கொரியர்,கேஸ் எது வந்தாலும் வாங்கி வைக்கிறேன்.”என்று அவரே வலிய சொல்லி உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்து விடுவார்.
இவ்வாறாக வாய் வார்த்தைகள்ஆயிரத்தெட்டு மந்திர ஜாலம் புரியும்.சும்மா வார்த்தைகள் தானே என்று மிளகாய்பஜ்ஜியாக வார்த்தைகளை கொட்டி அவஸ்த்தைபடாமல் எப்பொழுதும் ஜீராவில் ஊறும் குலோப்ஜாமூனாக இருங்கள்.நம்மை பற்றிய உயர்வான எண்ணம் மற்றவர்களுக்கும் ஏற்படுவதற்கு இனிய சொற்கள் அதி முக்கியம்.ஆகையினால் எந்த மிஸ்ஸும்,மிஸஸும்,மற்றும் மிஸ்டர்களும் இதனை ஞாபகத்தில் வைத்துக்கொண்டால் வாழ்க்கைப்பயணம் சுவாரஸ்யமிக்கதாகவும்,இனிமையான உறவுகள் சூழப்பெற்றதாகவும் அமைந்து சூழலை எப்பொழுது இனிமையாக ,வாழ்க்கைபயணத்தில் கசப்புகள் மறைந்து இனிப்பு நிறைந்ததாக அமையும்.