வெளிச்சம் துளியும் தெரியாத அதிகாலைப்பொழுது.தன் வீட்டிற்கு எதிரே உள்ள வேப்பமரத்தடியை சரட் சரட் என்று பெருக்கும் சப்தம் அக்கம்பக்கத்தினருக்கு அலாரம்.சுத்தமாக சுற்றி பெருக்கி சருகுகளை குவித்து தீமூட்டி விட்டு,தண்ணீர் தெளித்து அடுப்பைமூட்ட ஆரம்பித்து விடுவாள் இட்லிகடை ஆயா அன்னம்மா,
அன்னம்மா பாட்டியைத்தெரியாதவர்களே அந்த கிராமத்தில் இருக்க முடியாது.பல்லு எல்லாம் போய் இருந்தாலும் பழமொழிக்கு குறைச்சல் இருக்காது.சொல்லுக்கு சொல் பழமொழியால் மழையே பொழிந்து வெள்ளப்பிராவகத்தையே ஏற்படுத்தி விடுவாள்.கூடவே காரியத்திலும் கண்ணாக இருப்பாள்.பொழுது விடியும் முன்னே ஆவி பறக்கும் இட்லிகளை அம்பாரமாக குவித்து,சூடாக சாம்பாரும்,இரண்டு வித சட்னியும் பொழுது விடிவதற்குள் தயாராகி கல்லா கட்டி விடுவதில் கில்லாடி.
”பாட்டி பத்து இட்லி கொடு”தூக்கு வாளியும் சட்னி சாம்பாருக்கு கிண்ணமும் கொண்டுவந்த அம்பியை நிதானமாக ஏறிட்டவள்.
”முதல்லே துட்டை எடு.போன தபா வாங்கிய 18 இட்லிக்கும் சேர்த்தே குடு.
கடன் இல்லா கஞ்சி கால் வயிறு என்று இந்த வயசிலேயும் மாங்கு மாங்குன்னு ஒழச்சிட்டு இருக்கேன்.என் கிட்டேயே கடன் வைத்து என்னிய கடங்காரி ஆக்குறியே”
:செவ்வாய்க்கெழமைக்கு மொத்த பைசாவையும் கொடுத்துடுறேன் ஆத்தா”
“
கொஞ்சம் கொஞ்சமாக் குடைஞ்சா குடகு மலையையும் குடைஞ்சிடலாம்ன்னு பாக்கறியா?அத்தெல்லாம் வேலைக்காகாது.
கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறதுங்கறது இதான்.
கையிலே காசு வாயிலே தோசை.அதான் நம்ம பாலிசி.”கறாராக பேசியவாறு பெரிய அகலமான இட்லித்தட்டில் குழிக்கரண்டியால் இட்லி வார்க்க ஆரம்பித்தாள்.
பள்ளிக்கூட சிறுவர்கள்,வேலைக்கு செல்பவர்கள் என்று டப்பாக்கள் கொண்டு வந்து வாங்கி செல்பவர்கள் தவிர ஓரமாக அமர்ந்து மந்தார இலையில் வைத்து சாப்பிடுபவர்களும் உண்டு.வாரத்திற்கு இரு முறை பண்ணை வீட்டில் இருந்து பெரிய தூக்குவாளிகளில் 100 இட்லி வரை கேட்டு வரும் பொழுது பாட்டி இன்னும் அதீத சுறுசுறுப்பாகி விடுவாள்.
இவளிடம் இட்லி வாங்கி வயிறு முட்ட தின்று விட்டு போததற்கு ” ஆத்தா இன்னும் ரெண்டு கரண்டி சாம்பார்தண்ணி ஊத்து”என்று கேட்டு வாங்கி சாப்பிட்டு விட்டு தூரமாக உட்கார்ந்து பீடி பற்ற வைத்துக்கொண்டிந்த பழனியை பார்த்து ”எல பழனிப்பையா,சாம்பார் சட்டி காலியாகுது.இன்னேரம் எம்மருமவ அடுத்த ஈடு சாம்பாரும்,சட்னியும் ரெடி பண்ணி இருப்பாள்.போய் தூக்கி வாயேன்”
”அட..போ ஆயா”சுவாரஸ்யமாக பீடிப்புகையை இழுப்பதிலேயே கருத்தாய் இருந்த பழனியைப்பார்த்து பாட்டிக்கு கோபம் வந்தது.
“நாளைக்கு கேளு ஆயா இன்னும் ரெண்டு கரண்டி சாம்பார் ஊத்துன்னு.கரண்டியாலே போடுறேன்.சோம்பேறிப்பயபுள்ள.இப்படியே ஒழைக்காம சளைகாமே காலத்தைப்போக்கு
.செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்.?”
”அடியே லலிதாம்பிகே.சாம்பாரு காலி ஆச்சுடி..சீக்கிரம் அடுத்த ஈட்டை கொண்டுவா.தோ..மச்சி வூட்டுலேர்ந்து தூக்கு சட்டி வந்துடும்”
வீட்டினுள் இருந்து மருமகள் வர தாமதமாகியது.
“எல்லா சாமான்களையும் போட்டு பருப்பை வேக வச்சிருக்கேன்
.இறுகினால் களி இளகினால் கூழ்ங்கற மாதிரி தண்ணியை ஊற்றி சாம்பாராக்குறதுக்கு இத்தனை அலும்பு பண்ணுறாளே பாதகத்தி.கேட்டால் கைப்புள்ள அழுவுறான்ம்பா.
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிருக்க வேண்டாம்?”
சூடான சாம்பார் சட்டியை துணியால் பிடித்து தூக்க முடியாமல் தூக்கி வந்த மருமகள் லலிதாம்பிகையைப்பார்த்து அக்னிபார்வையை வீசினாள்.
”ஹ்ம்ம்..
முன் ஏர் சென்ற வழியே, பின் ஏர் செல்லும் என்று பெரியவங்க சும்மாவா சொன்னாங்க.ஆத்தாவைப்போல மவ.
அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.வச்சி பேசி உன்னை பெற்றவள் நடித்த நடிப்பில் பாவி நான் மெய்மறந்து போய் ஒன் வூட்டு சம்பந்தம் வேணுமுன்னு சவடால் விட்டு இன்னிக்கு இப்படி கேக்கற கேள்விக்கு பதில் வராத அளவுக்கு அவமானபட்டு கிடக்கேனே?”
சாம்பார் சட்டியை நங் என்று கோபமாக வைத்ததில் சாம்பார்துளிகள் தெறித்து விழுந்தது.
”அடி ஆத்தி..மொகரக்கட்டைக்கு குசும்பைப்பாரு.எம்மேலே உள்ள கோவத்தை சாம்பார்சட்டியிலே காட்டுறே?
எய்தவன் இருக்க அம்பை நோவானேன் கதயால்ல இருக்கு.போ போ..கடைசி ஈடு சாம்பாரை ரெடி பண்ணி வெரசா கொண்டா”
அடியில் கொஞ்சமாக இருந்த சாம்பாரை புதிதாக வந்த சாம்பார் சட்டில் ஊற்றிவிட்டு காலி சட்டியை மருமகள் கையில் கொடுத்தாள்.
“அன்னமாக்கா..சூடா பன்னெண்டு இட்லி குடு”சுருக்குப்பையை திறந்து பணத்த எடுத்துக்கொடுத்த முத்தக்காவிடம்”எலே..சூட்டுக்கு என்ன கொறைச்சல்.
தாண்டி குதிக்குமாம் மீனு. தயாரா இருக்குமாம் எண்ணெய் சட்டி!
ன்னு சொல்லுறமாதிரி துணியில் இருந்து இட்லியை எடுத்துப்போட்டால் பஞ்சா பறந்து போயிடாது இந்த அன்னம்மா கெழவி சுடுற இட்லி.”
“ஏன்கா..இந்த வயசிலேயும் இந்த பாடு படுறே.ஒத்தைப்பிள்ளை.சாயம் பூசுற வேலைக்கு போய் நல்லாத்தானே சம்பாதிக்கறான்.அவன் போடுற சாப்பாட்டை சாப்பிட்டுட்டு அக்கடான்னு கிடக்கறதை விட்டுட்டு இந்த பாடுதேவையா?ஒருநாள் என்றில்லாமல் எல்லா நாளும் கருக்கல்ல எழுந்து இட்லிப்பானையோடு மல்லாடுறியே”
“
உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை என்று பெரியவங்க சொன்ன மாதிரி மவராசன் வாழ்ந்த காலம் பொறுப்பா இருந்தான்னா காடு கழனின்னு வாங்கிப்போட்டு இருந்தால் ஏன் இந்தப்பாடு படுறேன்.எல்லாம் என் தலவிதி”
“இருந்தாலும் ஒன்னிய பாக்கறதுக்கு சங்கடமாத்தேன் இருக்கு அன்னக்கா.காலத்துக்கும் அடுப்பில் கிடந்தே வேகுறே.கூடமாட ஒத்தாசைக்கு ஒரு குட்டியை வச்சிகிட்டாலும் ஒனக்கு சொமை குறையும் இல்ல”
“அக்காங்..
ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமியா.சரி போய் வேலையைப்பாரு.கிட்டவே நின்னுட்டு என் வாயப்புடுங்காதே”
“கெயவி..இந்த வயசுக்கும் ஒனக்கு குசும்பு சாஸ்தி.வாயி நீளம்.”சொல்லியபடி பக்கத்தில் அமர்ந்து மந்தாரை இலை அடுக்கில் இருந்து ஒரு இலையை எடுத்து தானகவே இட்லியை எடுக்க ஆரம்பித்த வேலனை சட்டென கையை தட்டிவிட்டாள்.
”எலே வேலா,தட்டில் இருக்கற இட்லியில் கண்ட பேரும் கை வைக்கபடாது.கேளு எடுத்து தர்ரேன்.முந்திரி கொட்டையாட்டம் மூக்கை நொழைக்காதே?”
“ஆமாம்..கெயவி கை சுத்தம்.மத்தவங்களாம் நாத்தம்”நக்கலாக சிரித்தான் வேலன்
“
பழுத்த ஒலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம்.சிரிடா சிரி.
“அன்னக்கா..நாலு இட்லி குடு.வர வர ஒன் இட்லி கல்லாட்டம் இருக்கு.நல்ல அரிசியா போட்டு இட்லி ஊத்துறது”வாயாடி வாணி வந்து நின்றாள்.
“அட தோடா,என்னது அன்னம்மா இட்லி கல்லு கல்லா இருக்கா?என் இட்லி சாப்பிடுறதுக்காகவே ஆளு அம்புன்னு இருந்தும் பண்ணை வீட்டில் இருந்து வாரத்துக்கு ரெண்டு தபா இட்லி வாங்குறாவ.எல்லோரும் பஞ்சு பஞ்சா இருக்காங்கறாவுக.நீயி கல்லு கல்லா இருக்குதுன்னு சொல்றே.பொறம் போக்கு.
ஆடத் தெரியாத ஆட்டக்காரி மேடை கோணல் என்றாளாம்.போ..போ..போ..ரெண்டு இட்லி பத்து ரூவாக்கு விக்கற ஐயர் கடையிலே வாங்கியே சாப்பிடு.அஞ்சு இட்லி பத்துரூவாக்கு கொடுக்கறேனே.எனக்கு இதுவும் வேணும்,இன்னமும் வேணும்”
“ஐயோ..யக்கா நெசம் எது தமாசு எதுன்னு புரியாமே கோவிச்சுக்கறியே”
“அடிப்போடி..தமாசு பண்ண நீயி எம்மாமன் மவன் பாரு”
மீந்த இட்லி,சாம்பார் சட்னிகளை கிண்ணங்களில் எடுத்து வைத்து விட்டு இன்னிக்கு எத்தனை இட்லி மிச்சம் என்று எண்ணினாள்.
”என்னக்கா இட்லியை எண்ணுறே”
“எல்லாத்திலேயும் கணக்கு வேணாம்.
எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டினு சொல்லி சொல்லி சோறு போட்டவளாச்சே என் ஆத்தா”
பேச்சு பேச்சாகவே இருக்க அடுப்பு சாம்பலை எடுத்து அத்தனை பாத்திரங்களையும் சடுதியில் கழுவி கவிழ்த்தினாள்.
சுருக்குப்பையை அவிழ்த்து பிடி சீவல் பாக்கை கடைவாய் ஓரத்தில் அதக்கிக்கொண்டு எழுந்து நெட்டி முறித்தாள்.
“யக்கா.இன்னிக்கு மத்தியானத்திற்கு மேலே கரண்டு இருக்காதாம்.நாளைக்கு காலம்பரத்தான் கரண்டு வுடுவாகளாம்.இட்லி மாவு எப்படி அரைப்பே?இட்லி யாபாரம் நாளைக்கு உண்டா?”
“நல்லா இருக்கே கதை.மழ,புசல் எது அடிச்சாலும் வேப்பமரத்திடியில் வச்சி இட்லி சுடாங்காட்டியும் என்வூட்டுலே வச்சாவது சுட்டு விக்கிறவ நானு.
ஐயர் வரவில்லை என்பதற்காக அமாவாசை நிற்குமா?இருக்கவே இருக்கு ஆட்டுரலும் குழவியும்”
நெட்டி முறித்தவளை ஆச்சரியமாக பார்த்து வியந்தாள் வாணி.
“அக்கா..ஒரு சட்டிக்கு நாப்பதெட்டு இட்லின்ன கணக்குலே ஏழெட்டு ஈடு இட்லி ஊற்றி விக்கறே.நாலு காசு சேர்த்து வச்சி இருப்பியே”
“அடிப்போடி..
அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லைன்ற கதையால்ல இருக்கு எங்கதி.சரி சரி..என் வாயைக்கிண்டி புடுங்கி
ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாள் ஆக்கிடாதே”பாத்திரங்களை அடுக்கி நங்கென்று இடுப்பிலும்,தலையிலும் லாவகமாக வைத்துக்கொண்டு,கல்லாப்பெட்டியை கவனமாக கக்கத்தில் இடுக்கிக்கொண்டு வீட்டை நோக்கி நடையைக்கட்டினாள் இட்லிக்கடை அன்னம்மா.