Showing posts with label அஞ்சறைப்பெட்டி. Show all posts
Showing posts with label அஞ்சறைப்பெட்டி. Show all posts

December 9, 2013

அஞ்சறைப்பெட்டி - 9





1.என் சொந்த ஊரில் நடைபெறும் அநேக திருமணங்கள் மணமகள் வீட்டில்தான் நடை பெறும்.வீட்டு வாசலில் ஷாமியானா போடப்பட்டு பிளாஸ்டிக் சேர்களில் ஆண்களும்,வீட்டுனுள் பெண்களும் அமர்ந்து இருப்பார்கள்.பெண்கள் அனைவரும் தத்தம் செருப்புகளை வாசலிலேயே விட்டு விட்டு வருவது வழக்கம்.அந்நேரங்களில் பலர் செருப்புக்களை தொலைத்ததுண்டு.எனக்கும் நிறைய அனுபவம் உண்டு.ஒரு முறை ஒரு திருமணத்திற்கு சென்ற பொழுது செருப்பு கழற்றும் இடத்தில் ஒரு கேமரா மாட்டப்பட்டு இருந்தது.அட..நல்ல ஐடியாகவா இருக்கே என்று நினைத்துக்கொண்டேன்.செருப்புத்திருடர்கள் இனி பயப்படுவார்கள்தானே?

2.சமீபத்தில் பிரபல ஷோரூம் ஒன்றில் எலெக்ட்ரானிக் பொருள் ஒன்று வாங்கினேன்.பில்லிலேயே டிரான்ஸ்போர்ட்டுக்கு 150 ரூபாய் என்று குறிப்பிட்டு இதனை வண்டிக்காரரிடமே கொடுத்துவிடுங்கள் என்று கூறினர்.பொருள் வீட்டுக்கு வந்ததும் 150 ரூபாயை வண்டிக்காரரிடம் கொடுத்தால் ”எனக்கு ஏதாவது சேர்த்துக்கொடு என்றார்.”வண்டிக்காரர்.”உனக்குதானேப்பா இந்த கூலி”என்று கேட்டால் வெறுமையான சிரிப்புதான் வருகிறது.தொடர்ந்து வேலை தரும் காரணத்தினால் கடைக்கு 100 ரூபாயும்,கூலிக்காரருக்கு 50 ரூபாயுமாக பிரித்துக்கொள்கின்றனராம்.பிச்சை எடுத்ததாம் பெருமாள்.அதை பிடுங்கி தின்னுச்சாம் அனுமார்.

3.இரு சக்கரவாகனத்தில் பெட்ரோல் காலியாகும் நிலை.100 ரூபாய் கொடுத்து பெட்ரொல் போடச்சொல்லி விட்டு கைபேசியில் சுவாரஸ்யமாக பேசியதில் பெட்ரோல் நிரப்புவதை கவனிக்க தவறி விட்டார் என் பையன்.சில அடி தூரம் கூட வண்டியில் சென்று இருந்திருக்க மாட்டார் வண்டி பெட்ரோல் இல்லாமல் நின்று விட்டது.உடனே பைக்கை தள்ளிக்கொண்டே மீண்டும் பெட்ரோல் பங்க் வந்து சப்தம் போட்ட பொழுது உள்ளே இருந்த மேனேஜர் வந்து விசாரித்து இருகின்றார்.பெட்ரோல் போட்ட ஆள் திரு திரு வென விழிக்க ,மிகவும் கடினமாக பெட்ரோல் போடுபவரை கண்டித்து வேலையை விட்டு நிறுத்துவதாகவும் சப்தம் போட்டு விட்டு 100 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பி அனுப்பி இருக்கின்றார்கள்.100 ரூபாய்தானே இதைக்கேட்டுக்கொண்டெல்லாம் திரும்ப வரமாட்டார்கள் என்ற குருட்டு தைரியம்தான் போலும்.அதன் பின்னர் இரண்டு முறை மூன்று முறை அந்த பெட்ரோல் பங்க் சென்றபோதேல்லாம் ஏற்கனவே பெட்ரொல் போடுவதில் தகிடுதத்தம் செய்த ஊழியரை காணவில்லை.

4.ஆஸ்திரேலியாவில் ஒரு நகைக்கடைக்கு சென்ற திருடன் சுமார் முப்பது லட்சம் மதிப்புள்ள இரண்டு வைர மோதிரங்களை திருடும் பொழுது பிடிப்பட்ட தருணத்தில் மோதிரங்களை வாயில் போட்டு விழுங்கி விட்டார்.கடை ஊழியர்கள் துரத்தி சென்று திருடனை பிடித்து போலீஸில் ஒப்படைத்து விட்டனராம்.இப்பொழுது திருடனின் வயிற்றுக்குள் இருக்கும் மோதிரங்களை எடுக்கும் முயற்சியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றர்.இந்த திருடனுக்கு வயிற்றுக்குள் லாக்கர் இருக்கிறது போலும்!

5.சென்னையில் 14 ஆயிரத்து 600 கோடி மதிப்பில் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பணி நடைபெற்று வருகிறது.அயல் நாட்டுக்கு ஈடாக அனைத்து வசதிகளும் அமையப்பெற்று சென்னைவாசிகளுக்கு பயன்தரக்கூடிய வகையில் மக்களின் பெரும் எதிர்பார்ப்புடன் அடுத்த ஆண்டு மெட்ரோ ரெயில் பயன்பாட்டுக்கு வர துரிதமாக பணி நடந்துவருகிறது.ரெயில் பயன்பாட்டுக்கு வந்த பிறகு வெற்றிலை எச்சில்கள்,குப்பைகூளங்கள்,உணவுக்கழிவுகள் என்று அசிங்கப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று இப்பொழுதே மனம் சஞ்சலப்படுகிறது.




May 7, 2012

அஞ்சறைப்பெட்டி - 8

சென்னை தீவுத்திடல் மைதானத்தில் செவன் ஒண்டர்ஸ் என்று உலக அதிசயங்கள் ஏழினையும் செயற்கையாக உருவாக்கி சீனப்பெருஞ்சுவரையும் உருவாக்கி சீனப்பெருஞ்சுவரில் ஏறி எல்லா அதிசயங்களையும் கண்டு களிக்கும் படி உருவாக்கி சென்ற வாரம் திறப்புவிழாவும் நிகழ்த்தி நாளிதழ்களில் விளம்பரமும் செய்து இருந்தனர்.

அத்தனையும் நேரில் போய் பார்த்தால் லட்சங்கள் பல செலவாகும்.அது நடக்கக்கூடிய காரியமில்லை என்று ஒரு பெரிய பட்டாளத்துடன் ஏழு அதிசயங்கள் பார்க்க கிளம்பினோம்.கடற்கரை சாலையில் நுழைந்து சற்று தூரம் போனாலே பிரமாண்டமாக தாஜ்மகால் தூரத்தே தெரிந்து சென்னையில்தான் இருக்கிறோமா என்ற உணர்வினை ஏற்படுத்தியது.

அருகில் போய்ப்பார்த்தால் பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் அப்பொழுதுதான் உருவாகிக்கொண்டிருந்தது.டிக்கெட் கவுண்டர் திறக்கப்பட்டு டிக்கெட் விற்பனை மந்தமாக நடந்து கொண்டிருந்தது. இவ்வளவுதூரம் வந்தாச்சே என்று பலர் டிக்கெட் எடுத்து உள்ளே நுழைந்து கொண்டிருந்தனர்.சம்மர் ஹாலிடே முடியும் தருவாய் வரப்போகின்றதே என்று அரையும் குறையுமாக திறப்புவிழா நடத்தி விட்டனர்.பணத்தைக்கட்டி முழுமை இல்லாமல் பார்ப்பதை விட பணிகள் நிறைவடைந்ததும் முழுமையாக கண்டு களிக்கலாம் என்று முன் ஜாக்கிரதையாக திரும்பி விட்டோம்.


**********

சென்னை மக்களை அக்னி வெயில் வறுத்தெடுக்கிறது.104டிகிரி வெப்பத்தில் மக்கள் அவனுக்குள் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது.கடற்கரை சாலை,சிறுவர் பூங்கா இருக்கும் சாலை மற்றும் முக்கிய பூங்காக்கள் இருக்கும் சாலை அனைத்தும் டிராபிக் ஜாமில் மாட்டிக்கொண்டு தத்தளிக்கின்றது.

இது போதாது என்று மெட்ரோ டிரெயின் பணிகள் நடப்பதால் சென்னை ஸ்பென்சரில் இருந்து சைதாப்பேட்டை வரை வருவதற்குள் உயிர் போய் உயிர் வந்து விடும்.வாகனஓட்டிகள்,குறிப்பாக இரு சக்கரவாகன ஓட்டிகள் நிலை பரிதாபம்தான்.இதை எல்லாம் பார்க்கும் பொழுது மெட்ரோ டிரெய்ன் பணிகள் முடியும் வரை மவுண்ட் ரோடையே உபயோகப்படுத்தாமல் இருக்கலாம் என்று எரிச்சல் வருகிறது.நடகின்றகாரியமா?

**********

இந்த கொளுத்தும் வெயிலில் வியர்வை வழிந்தோட டிராஃபிக் போலீஸார் கண்களில் விளக்கெண்ணை ஊற்றிக்கொண்டு வாகன ஓட்டிகளை பிடித்து பைன் போட்டு வசூல் செய்வது ஜரூராக நடந்து கொண்டுள்ளது.சென்ற வாரம் ஓ எம் ஆர் சாலையில் ஒரு ஓரத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு போன் பேசிக்கொண்டிருந்த காரணத்தினால் இது நோ பார்க்கிங் என்று பைனை போட்டு விட்டனர்.வாகன ஓட்டிகள் பெட்ரோலை நிரப்புவாங்களோ இல்லையோ பர்ஸை நிரப்பிக்கொண்டுதான் செல்லவேண்டும் போலும்.தமிழக அரசுக்கு இந்த சாலை வசூல் அமோக வருமானத்தை உண்டுபண்ணி விடும்.

**********

ஒரு பிரபல வி ஐ பி நீர் மோர்பந்தல் திறப்புவிழாவை பத்திரிகைளில் கட்டம் கட்டி வெளியிட்டு இருந்தனர்.வீதியெங்கும் போஸ்டர் வேறு.தினமும் நீர் மோர் வழங்கப்படும் என்று அறிவிப்பு வேறு .அந்த வழியாக பல முறை சென்று வருகின்றேன்.ஒரு நாள் கூட நீர் மோர் பானையை கண்ணால் பார்க்கவில்லை.பெரிதாக ஷாமியானா பந்தல், அம்மா படம் ஐயா படம் என்ற அமர்களத்திற்கு இடையில் ஒரு மேசை மீது தண்ணீர் கேனுடன் கேனுக்கு மேல் கிரீடமாக ஒரு கவிழ்த்து வைக்கப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர் தவிர வெறொன்றும் அறியேன் பராபரமே.

**********


இரண்டு கிலோவுக்கும் அதிக எடையில் உள்ள பாறை,கொடுவா,வாவல் வஞ்சிரம் போன்ற அதிக விலையுள்ள மீன்களை மார்கெட்டில் வாங்கி சமைத்து சாப்பிட்டால் ஒருவித கெமிக்கல் கலந்த மண்எண்ணை வாடை சாப்பிட விடாமல் தடுக்கிறது.சட்டியுடன் அப்படியே குப்பைக்கு போய் போய் விடும்.தவறுதலாக மண் எண்ணெய் கேன் மீன் மீது கவிழ்ந்து விட்டது போலும் என்று நினைத்து விட்டேன்.சில நாள் இடைவெளிக்குப்பிறகு மீண்டும் பெரிய வகை மீன்கள் வாங்கி சமைக்கும் பொழுது அதே வாசனை மூக்கை சுளிக்க வைத்தது.சமைத்த பின்னர்தான் வாசனையே தெரிகின்றது.பிறகு விசாரிக்கையில் மீன் கெட்டுப்போகாமல் இருக்க ஏதோ ஊசி மூலம் மருந்து செலுத்தப்படுகின்றதாம்.கேட்டு விட்டு அரண்டே விட்டேன்.மீன் விரும்பிகளே ஜாக்கிரதை.

**********

சென்னைக்கு புலம் பெயர்ந்த வெளியூர் வாசிகள் பவர்கட்டுக்கு பயந்தே கோடை விடுமுறைக்கு ஊருக்கு செல்ல பயந்து சென்னையிலேயே அடைக்கலமாகி விட்டனர் உதாரணத்திற்கு நான்.இப்பொழுது காற்றாலை மூலம் மின்சார சப்ளை அதிகரித்ததும் பவர்கட் குறைந்து இப்பொழுது மின்சார சப்ளை சீராக நடைபெற்று வருகின்றது என்பதை அறிந்து அனைவரும் சொந்த ஊருக்கு கிளம்ப ஆயத்தமாகி விட்டனர்.

**********

January 19, 2012

அஞ்சறைப்பெட்டி -7

தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் எக்மோர் ரயில்வே ஸ்டேஷனில் எண்ணி முன்றே மூன்று வீல் சேர் மட்டிலுமே.அதிலும் இரண்டு ரிப்பேர்.மற்றொன்று விரைவில் ரிப்பேர் ஆகும் நிலைமை.முதிய பயணிகளை லக்கேஜ் வைத்து செல்லும் டிராலியில் உட்கார வைத்து இழுத்து செல்வது பார்க்க பரிதாபமாக உள்ளது.ஆபத்தானதாகவும் உள்ளது.வீல் சேர் இல்லாததால் டிராலியில் வைத்து முதியோர்களை அழைத்துச்செல்லும் போர்ட்டர்கள் இஷ்டத்திற்கு சார்ஜ் பண்ணி பயணிகளின் வயிற்றெரிச்சலுக்கு ஆளாகுகின்றனர்.ரெயில்வே நிர்வாகம் கவனிக்குமா?


22 வருடங்கள் காணாத அளவிற்கு பனிப்பொழிவு சென்னையில்.காலையில் ஏழுமணிக்கே வெளிச்சம் சரியாக வருவதில்லை.போர்வைக்குள் சுருண்டு இருக்கும் பிள்ளைகளை தட்டி எழுப்புவதற்கு பெற்றோர்கள் படாதபாடு பட்டுக்கொண்டு இருக்கின்றனர்.எப்பொழுதடா வெயில்காலம் பிறக்கும் என்று சென்னை வாசிகள் வழி மீது விழி வைத்து காத்து இருக்கின்றனர்.ம்ம்ம்ம்...இக்கரைக்கு அக்கரை பச்சை.

பிரபலமான பிராண்ட் செருப்பு.இந்த செருப்பு வாங்குவதென்றால் சேல்ஸ் போடும் பொழுது வாங்கினால்தான் பர்ஸ் பழுக்காது.அந்த பிரபலமான மாலில் உள்ள ஷோ ரூமில் சேல்ஸ் நடைபெற்றுவருகின்றது என்று பத்திரிகை வாயிலாக அறிந்து அங்கு சென்றால் கடை வாசலிலேயே பிரமாதமாக விளம்பரம்.flat 40% off என்ற கொட்டை எழுத்துக்கள்.டிஸ்ப்ளே செய்து இருந்த செருப்புகளை செலக்ட் செய்து பில் போடும் பொழுதுதான் செருப்புகளுக்கு டிஸ்கவுண்டே போட வில்லை.கேட்டால் ஷோகேசினுள் உள்ள செருப்புகளுக்கு தள்ளுபடி கிடையாது.நடுவில் போடப்பட்டு இருக்கும் பெரிய மேஜையில் குவிந்து கிடக்கும் செருப்புகளுக்கு மட்டும்தான் தள்ளுபடி என்றார்களே பார்க்கலாம்.எனக்கு வந்த கோபத்தில் செருப்புகளை அங்கேயே கடாசிவிட்டு வந்துவிட்டேன்.

சென்றவாரம் பெசண்ட் நகர் பீச்சுக்கு சென்றிருந்தேன்.எதிரில் பெட்ஷீட் விரித்து கூடை பிளாஸ்க் சகிதமாக ஒரு குடும்பத்தினர்.உடன் வந்திருந்த ஒரு ஆறு ஏழு வயது குழந்தை ஒரு கேரி பேக்கை வைத்துக்கொண்டு மிஞ்சிய உணவுப்பொருட்கள்,உபயோகித்த பேப்பர் கப் ,பிளேட்,கடலை தோல் போன்றவற்றை எல்லாம் சேகரித்து அந்த கேரிப்பேக்கினுள் நிரப்பிய வண்ணம் இருந்தாள்.அவர்கள் எழுந்து செல்லும் பொழுது குப்பை கூடை எங்கே உள்ளது என்று தேடி கண்டு பிடித்துப் அதில் போட்டு விட்டு சென்றாள்.இதே போல் அனைவரும் இருந்து விட்டால் இந்திய சாலைகளும் பொது இடங்களும் எப்படி இருக்கும் என்று கற்பனை பண்ணி பார்க்கும் பொழுது சந்தோஷமாக உள்ளது.
சமீபத்தில் இறந்து போன வடகொரியா 2-ஆவது கிம் ஜோங் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாதவர்களுக்கும்,கலந்து கொண்டும் வாய் விட்டு அழாதவர்களுக்கும் தண்டனை கொடுத்தே ஆகவேண்டும் என்று அந்த நாட்டு நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாம்.இதற்காக யார் அதிக அளவில் அழுதது?யார் அதிக அளவு துக்கத்தை வெளிப்படுத்தியது ?என்றெல்லாம் அதிகாரிகள் புள்ளி விபரங்கள் சேகரிக்க ஆரம்பித்து விட்டார்களாம்.சிம்பிள் மெட்டருக்கே கொல வெறி என்று நாமகரணம் சூட்டுகின்றோம்.இதை எதில் சேர்ப்பது?

August 11, 2011

அஞ்சறைப்பெட்டி - 6

இளம் கன்று பயம் அறியாது என்பார்கள்.என் மகனுடைய நண்பனொருவன் ஃபிரண்ட் ஷிப் டே கொண்டாடுவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை பெரிய கூட்டத்துடன் கார்களிலும் பைக்குகளிலும் பெசண்ட் நகர் பீச்சுக்கு சென்று இருந்தனர்.மகன் நோன்பு வைத்ததால் செல்ல மறுத்து விட்டான்.கடற்கரை ஓரமாகத்தான் நின்று விளையாடிக்கொண்டிருந்திருக்கின்றனர்.சென்னைக்கடல் மிகவும் ஆபத்தானது என்பது அறிந்தும் இந்த இளையவர்கள் இப்படி அடிக்கடி கடற்கரைக்கு சென்று பெரிய விபரீதத்தில் சிக்கிக்கொள்கின்றனர்.

அலை இழுத்து சென்றதில் மூன்று பேர் அடித்து சென்று இருவரை காப்பாற்ற முடிந்தது.இந்த மாணவன் மட்டும் இறந்து விட்டான்.எல்லாம் ஐந்தே நிமிடத்தில் நடந்து முடிந்துள்ளது.நடந்ததைக்கேட்டு கதிகலங்கி விட்டேன்.என் மகனோ மூன்று நாட்கள் பித்துப்பிடித்தவன் போல் சிவந்த விழிகளுடன் இருந்தான்.

வாரம் ஒரு முறையாவது கடற்கரையில் மாணவர் பலி என்ற செய்தி வந்து கொண்டுதான் உள்ளது.இருப்பினும் விபரீதத்தை தடுக்க இயலவில்லை.பெற்றோர்கள் தான் நயம் பட எடுத்து சொல்லி இப்படிப்பட்ட ஆபத்தான பொழுதுபோக்குகளை விட்டும் விலக செய்யவேண்டும்.வார இறுதி நாட்களில்,விடுமுறைதினங்களில் கடற்கரையில் காவலர்கள் நிற்பதை அதிகப்படுத்தி விபரீதங்களை தடுப்பார்களா?

மாணவன் அபிநயசெல்வன் ஆத்மா சாந்தி அடையவும்,அபியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு இறைவன் அமைதியையும்,பொறுமையையும் தரவும் இறைவனிடம் வேண்டிக்கொள்கின்றேன்.

மாணவன் அபியின் இறப்பினால பாதிக்கப்பட்டு,இப்பொழுது சற்று மனம் தெளிந்த என் முகன் தன் முகப்புத்தகத்தில் விடுத்திருக்கும் மெசேஜை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து இருக்கின்றேன்.

PLS AVOID TAKING BATH IN BEACH(U GUYS KNOW WHAT HAS HAPPENED).IF U GO ALSO PLS SIT AND COME BACK.
THIS S A SOCIAL AWARENESS CREATED ON BE HALF OF THE ALPHIANS 2010-2011
this is really a very serious thing... which happened in our frnd's life..... plz make it as ur status frnds... plz.... :'( :'( :'

சென்னையில் டிராஃபிக் ஜாம் என்பது சென்னையின் அடையாளமாகவே ஆகிவிட்டது.இந்த லட்சணத்தில் சிக்னலில் வண்டிகள் காத்திருக்கும் பொழுது கார்க்கண்ணாடியை லொட் லொட் என்று தட்டி விடாப்பிடியாக பிச்சை எடுப்பவர்கள்,கார் கண்ணாடியை நம் அனுமதி இல்லாமல் டஸ்டரால் துடைத்து விட்டு பணப் பறிக்கப்பார்க்கின்றவர்கள்,சிறு குழந்தைகள் இருந்தால் பொம்மைகள்,பலூன்களைக்காட்டி விற்பனை செய்பவர்கள் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே செல்வது இன்னும் சிக்கல் ஆக்குகின்றது.டிராஃபிக் போலீஸார் இது குறித்து நடவடிக்கை எடுக்கத்தயங்கவது ஏன்?

தி நகரில் ஹோட்டல் பென்ஸ் பார்க்கில் மிட்நைட் பஃபட் வார இறுதிநாட்களில் நடக்கின்றது.இரவு
12 மணி முதல் மூன்று மணி வரை.நைட் ஷோ முடிந்து வருபவர்களுக்கு வரப்பிரசாதம்.இப்பொழுது நோன்புகாலத்திலும் இஸ்லாமியர்களுக்கு சஹர் செய்வதற்கு வசதியாக உள்ளது.பாக்கெட்டையும் அதிகம் கடிக்காத அளவுக்கு விலை நிர்ணயித்து இருக்கின்றனர்.

அரசினர் மருத்துவமனை அவலங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கண்டிக்கத்தக்கது.எளியவர்கள் சிகிச்சைக்கு போவது அங்குள்ள மருத்துவர்களுக்கும்,செவிலியர்களுக்கும் மிகவும் இளப்பமாக உள்ளது போலும்.லேபர் வார்டில் எவ்வளவு அழைத்தும் வர சுணக்கம் காட்டிய மருத்துவர்,செவிலியர் துணையின்றி,தானே பிரசவித்து,பிரசவம் நடக்கும் டேபிளில் இருந்து பிறந்த குழந்தை தவறி விழுந்து இறந்த அவலம் மறைவதற்குள் இப்பொழுது கடலூர் மருத்துவமனை குழந்தையை மாற்றிக்கொடுத்து பெற்றோர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தி மரபணு சோதனை செய்ய வேண்டி நிர்பந்தித்துள்ளனர்.என்ன கொடுமை?கடுமையான உடனடி நடவடிக்கை மூலம் இது போன்ற நெஞ்சைப்பதறச்செய்யும் குற்றங்கள் நிகழாவண்ணம் தடுக்கப்படவேண்டும்.


படங்கள் உதவி:கூகுள்






February 15, 2011

அஞ்சறைப்பெட்டி - 5

வங்கிகளில் சென்று பணம் எடுக்கும் பொழுது அனைவர் முன்னிலையிலும் பணத்தை வாங்கி எண்ண வேண்டியுள்ளது.இது திருடர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக உள்ளது.பணம் பெற்றுக்கொள்ளும் கவுண்டரை சற்று மறைவாக வைத்திருந்தால் வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் பயனளிக்கும்தானே?
நாண்கு அல்லது ஐந்து அடி நீளமுள்ள மீன்பாடி வண்டிகளில் பத்து அடிக்கு மேலாக உள்ள கம்பிகள்,பைப்புகளை எப்படிப்பட்ட நெரிச்சலான போக்கு வரத்திலும் அனாசயாமாக கொண்டு செல்கின்றனர்.விளைவு பின்னால் வரும் வண்டிகளில் வருபவர்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கின்றது.நேற்று நடந்த இப்படிப்பட்ட விபத்தில் எங்கள் வீட்டிற்கு வரும் பிளம்பருக்கு கண்களில் செமத்தியான காயம் ஏற்பட்டு உள்ளது.போக்கு வரத்து போலீஸாரும் வேடிக்கைப்பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.

இப்பொழுதெல்லாம் ஹாஸ்பிடல் என்று போனால் அரை நாள் முழுதாக செலவாகி விடுகின்றது.அங்கு காத்திருப்பவர்கள் தூங்கி வழிந்து கொண்டோ,அல்லது ஒலி வராமல் ஓடிக்கொண்டு இருக்கும் தொலைக்காட்சியின் ஒளிக்காட்சிகளையோ அசுவாரஸ்யமாக பார்த்துகொண்டு இருக்க வேண்டியுள்ளது.சமீபத்தில் சென்ற ஒரு மருத்துவ மனையில் புத்தகங்கள் விற்பனைக்கு வைத்து இருந்தனர்.நமக்கு விருப்பமான புத்தகங்களை வாங்கிக்கொண்டு பொழுதை இனிமையாக ஓட்ட ஏதுவாக இருந்தது.இதனை அனைத்து இடவசதியுள்ள பிற மருத்துவ மனைகள் பின்பற்றலாமே.

இப்பொழுதெல்லாம் சில முக்கிய பள்ளிகள் இருக்கும் பகுதிகளில் பள்ளி விட்ட பிறகு போலீஸார் ரோந்து சுற்றுகின்றனர்.ஆங்காங்கு கும்பலாக நிற்கும் மாணவர்களை விரட்டிவிடுகின்றனர்.போலீஸார் தலை தெரிந்ததுமே கும்பலாக நிற்கும் மாணவ கூட்டம் சிட்டாக பறந்து விடுகின்றனர்.மாணவர்களை ஸ்நேகம் பிடிக்கும் முயற்சிக்கும் சமூக விரோதக்கூட்டத்தினரில் இருந்து பாதுகாப்பு கிடைகின்றது.வாழ்க சிட்டி போலீஸாரின் சேவை.

தங்கத்தின் விலை இப்பொழுது ஏறுமுகமாவே உள்ளது.சற்று விலை குறைந்தாலும் சாண் ஏறினால் முழம் சறுக்கிய கதையாக உள்ளது.எவ்வளவு உயர்ந்தாலும் நகைக்கடையில் கூட்டத்திற்கு குறைவு இல்லை.பல கடைகளில் 1முதல் 5 சதவிகிதம் மட்டுமே சேதாரம் செய்கூலி இல்லை என்று விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கின்றனர்.இது அவர்களுக்கு எப்படி கட்டுப்படி ஆகின்றது.தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

பீகாரில் பெரிய மூட்டையுடன் பதுங்கி பதுங்கி நடந்து சென்ற இருவரை போலீஸார் பிடித்து விசாரித்ததில் முட்டை நிரம்ப இறந்த காகங்களை வைத்து இருந்தனராம்.விசாரித்ததில் ரோட்டோர பாஸ்ட்ஃபுட் கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக எடுத்து சென்று இருக்கின்றனர்.இன்னொரு அதிர்ச்சி கரமான விஷயம் என்னவென்றால் இவ்வளவு காகங்களையும் எப்படி பிடித்தார்கள் என்று விசாரித்த பொழுது வெட்டவெளியில் உணவில் விஷம் கலந்து காகங்களை வேட்டை ஆடி விற்கின்றனராம்.விஷம் உண்டு இறந்த பிராணிகளின் இறைச்சிகளை சாப்பிடுபவர்களின் கதி.இறைவா!



November 19, 2010

அஞ்சறைப்பெட்டி - 4



சாலைகளில் வழிநெடுகிலும் விளம்பர நிறுவனத்தினர் லட்சகணக்கில் செலவு செய்து வைக்கும் விளம்பரபோர்டுகளை மாநகராட்சி அத்தனையும் அகற்றி விளம்பரத்துறையினரை பெரும் நஷ்டத்துக்குள்ளாக்கி வருகின்றது என்பது கண் கூடாக காணும் அவலம்.இதற்கு விளம்பர போர்டுகள் இருப்பதால் விபத்துகள் நடந்தேறி வருகின்றது என்று கூறுகின்றனர்.வழி நெடுகிலும் சுவர்களில் கண்களையும் கருத்தையும் கவரும் விதம் அழகிய படங்களை வரைந்து அழகு படுத்துகிறேன் பேர்வழி என்று சிலருக்கு லாபம் கொடுத்து இருக்கின்றார்களே.அந்த சித்திரங்களால் விபத்து நடக்காதா என்ன?இல்லை இனி சாலைகளில் விளம்பர போர்டுகள் நிறுவப்படாமலே இருந்து விடுமா?


தமிழ்நாட்டில்,குறிப்பாக சென்னையில் ஆள் கடத்தல் சம்பவம் நிறைய நடகின்றது.இளைஞர்களையும் கடத்திப்போய் கோடிக்கணக்கில் பேரம் பேசுகின்றனர்.சமீபத்தில் நடந்தேறிய ஒரு தெரிந்த குடும்பத்திற்கு நேர்ந்த அவலம் மிகவும் வருந்ததக்கது.குற்றவாளிகளை பிடித்து அதிகபட்ச தண்டணை கொடுத்தால்த்தான் இது போன்ற அவலங்கள் நடந்தேறுவது குறையும்.

தியாகராயநகரில் இருக்கும் மன்னார்ரெட்டி தெருவில் ஒரு டாஸ்மாக் கடை.வழிநெடுகிலும் கையில் பாட்டிலும்,கிளாஸுமாக குடிமக்கள் பண்ணும் அலப்பரை,சண்டை நிகழ்வுகள் சகிக்க முடியவில்லை. போததற்கு சுண்டல் வண்டிகளும்,பஜ்ஜி வண்டிகளும் தெருவையே அடைத்துக்கொண்டு அந்த பகுதில் பெண்களும்,சிறுவர்களும் நடந்து செல்லவே அச்சப்பட வேண்டிய சூழ்நிலை.அங்கு குடி இருப்பவர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குறியது.இந்த தெருவில்மட்டுமல்ல சென்னையின் அநேகப்பகுதியில் இந்த அவலம் நடந்தேறி வருகின்றது.இன்னொரு கொடுமை என்னவென்றால் மிக பிரபலமான ஒரு மாலில் இதே கடையைக்கண்டு அதிர்ந்தேன்.அரசாங்கம் லாபம் பெறும் நோக்கத்திற்காக பொது மக்கள் இத்தனை அவஸ்தைப்பட வேண்டுமா?எப்பொழுது மனசாட்சி உள்ள அரசியல் வாதிகள் பிறப்பார்கள்?

எங்கள் வீட்டருகே அதிகம் பிரபலமில்லாத ஒரு தேசிய மயமாகப்பட்ட வங்கியின் கிளை சமீபத்தில் திறந்தனர்.அதில் கணக்கு வைத்துக்கொள்ள வேண்டி வங்கிக்கு சென்றேன்.தேவையான சில proof கள் எடுத்து சென்றுஇருந்தாலும் introducer இல்லாமல் புதிதாக கணக்கு தொடங்க இயலாது என்றார்.எனக்கு தெரிந்தவர்கள் யாரும் இல்லாததை எடுத்து சொன்னேன்.ஆனால் வங்கியின் மேலாளர் "அதுதான் ரூல்ஸ்" என்று அழுத்தமாக கூறிவிட்டார்."யாரவது கிடைத்தால் மீண்டும் வருகிறேன்" என்று கூறி அப்ளிகேஷனை வாங்கிக்கொண்டு திரும்பிய பொழுது பின்னால் இருந்து "மேடம் மேடம்.." என்ற குரல் கேட்டு திரும்பினேன்.ஒரு இளைஞர் "introducer கையெழுத்து வேண்டுமென்றால் நான் போட்டுகொடுக்கிறேன்.இதே பிராஞ்சில் நான் அக்கவுண்ட் வைத்துள்ளேன்" என்றார்.மனதில் அவநம்பிக்கையுடன் அவரை நான் பார்த்த பொழுது அடுத்த வார்த்தையில் அதிர்ந்து போனேன்."அதிகம் வேண்டாம் மேடம் ஒரு திரீ ஹண்ட்ரட் ருபீஸ் கொடுங்கள் போதும்" என்றாரே பார்க்கலாம்.கையில் இருந்த ஹேண்ட் பேக்கை இறுக்கமாக பிடித்துக்கொண்டு பதில் ஏதுவும் சொல்லாமல் ஓட்டமும் நடையுமாக வீட்டுக்குள் மூச்சிரைக்க ஓடி வந்து விட்டேன்.எப்படி எல்லாம் மனிதர்கள் இருக்கிறார்கள் பாருங்கள்.

September 13, 2010

அஞ்சறைப்பெட்டி - 3

புதியதாக திறந்து இருக்கும் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் உள்ளே நுழையும் பொழுதே செக்யூரிடி கைப்பைகளை திறந்து சோதித்து அனுப்புவதைப்பார்த்து அந்த பிருமாண்டமான மாலுக்கும்,சின்னத்தனமான செயலுக்கும் சற்று கூட பொருத்தமில்லாமல் இருந்தது."என்னப்பா..இது சரவணா ஸ்டோர் ரேஞ்சில்.."என்ற முணுமுணுப்பு எனக்கு பின்னால் இருந்து ஒலித்தது.மேலே புட் கோர்ட் சென்றால் இரண்டு பீஸ் பிராஸ்டட் சிக்கன் 135 என்றனர்.அதே கடையினுடைய மற்றுமொரு பிராஞ்ச்இன்னொரு பெரிய மாலில் உள்ளது.அங்கு அதே பிராஸ்டட் சிக்கன் இரண்டு பீஸ் 85 ரூபாய்தான்.இரண்டு பீஸ் சிக்கனில் மட்டும் 50 ரூபாய் அதிகம் வைத்து விற்பனை செய்கின்றனர்.கட்டணத்தைக்கட்டி கார்ட் ரீசார்ஜ் பண்ணி விடுவதால் மக்கள்ஸ் வேறு வழி இல்லாமல் வாங்கி சாப்பிட்டுவிட்டே செல்கின்றனர்.



பின்னணி பாடகி ஸ்வர்ணலதா இளம் வயதில் மரணம் அடைந்து விட்டார்.இனிய குரலால் கட்டிப்போட்ட அவரது மறைவு ரசிகர்களுக்கு பெரிய இழப்புதான்.அவரது ஆன்மா சாந்தியடையவும்,அவரது குடும்பத்தினருக்கு பொறுமையும் ,அமைதியும் கிடைக்கவும் வேண்டிக்கொள்கின்றேன்.



பிரார்த்தனா டிரைவ் இன் தியேட்டருக்கு நீண்ட இடை வேலைக்குபிறகு சென்றிருந்தேன்.சாதரணமாக படம் பார்ப்பதென்றால் எனக்கு எட்டிக்காய்.பிள்ளைகளின் வற்புறுத்தலுக்காக சென்று கொசு கடித்து வெந்து,நொந்து திரும்பினேன்.(இனி தியேட்டர் பக்கம் போவேன்...?)டிரைவ் இன் தியேட்டர் செல்பவர்கள் இனி கண்டிப்பாக மஸ்கிடோ பேட்,ஒடோமஸ்,டார்டாய்ஸ் எல்லாம் எடுத்துட்டுப்போங்க.மறந்திடாமல் வீட்டிலேயே மஸ்கிடோ பேட்டை சார்ஜ் பண்ணிக்கோங்க.டார்டாய்ஸை கொளுத்த வத்திப்பெட்டியும் எடுத்துட்டு போக மறந்துடாதீங்க மக்கா.



ஏடிஎம்மில் கொள்ளை அடிப்பது அதிகரித்து வருகின்றது.சம்பளம் வாங்கும் காவலாளியும் கூலாக தூங்கி விட்டதாக வாக்குமூலம் கொடுத்து இருக்கின்றார்.வங்கிகளும் காவல்துறையும் இன்னும் விழிப்புடன் செயல் பட்டு தொடர்கதையாகாமல் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்(என்னா ஈஸியா நோகாம சம்பாதிக்கப்பார்க்கறாங்கப்பா..)

"காலையில் எழுந்ததும் தினத்தந்தி காப்பி குடிப்பது அதன் பிந்தி"இது தினத்தந்தி தினசரியின் வாசகம்.ஆனால் முதல் பக்கத்திலேயே 'கடன் வாங்குங்க.நாங்கள் இருகிறோம்.' 'வட்டிவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது.' இப்படி வாசங்கள் எரிச்சலூட்டுகின்றது. காலையிலே முதல் பக்கத்தில் வந்து மக்களை கடனாளியாக ஆக்கப்பார்க்கின்றது.(அதனாலே நான் இப்போதெல்லாம் நான் முதல்லேயே முதல் பக்கத்தை மட்டும் விட்டுட்டு அடுத்தடுத்த பக்கங்களைத்தான் தந்தி பேப்பரில் பார்க்கிறேனாக்கும்)



"வீட்டுக்கொரு மரம் வைப்போம்"இது தமிழக அரசின் தாரக மந்திரம்.கூட ஒரு படி மேலே போய் நான் வீட்டுக்கு வெளியிலும் வைத்தேன்.அதை இப்ப அகற்றிவிட்டு கேட்டை பெரிது பண்ண கார்ப்பரேஷனுக்கு அழைய வேண்டியதாக உள்ளது.நம்ம தேவையை நிறைவேற்ற முடியாமல் இழுத்தடிகின்றனர்.இன்னும் நாலே அடி தள்ளி மரத்தை வைத்துவிடுகின்றோம் என்று சொன்னாலும் எடுபடவில்லை.நல்லதுக்கு காலமில்லேங்கறது நிஜம்தான் போலும்.

June 11, 2010

அஞ்சறைப்பெட்டி - 2

சென்னையின் கிளைமேட்டே குளு குளு என ஆகிப்போய் விட்டது.கொளுத்தும் கத்திரிவெயிலால் அவதிப்பட்டுவந்த சென்னை வாழ் மக்களுக்கு இந்த பூமழைத்தூவும் தென் மேற்கு பருவமழையின் வரவு ஆனந்தமாக உள்ளது.ரம்யமான சூழ்நிலை மனதிற்கு உற்சாகமாக உள்ளது.அழகான மழை சீஸன் ஆரம்பமாகி விட்டாலும் மழையைக்கண்டதும் மனித மனம் மகிழ்வது போல் இந்த கொசுக்களும் மகிழ்வுடன் படை எடுக்க ஆரம்பித்து விடுமே என்பதை நினைத்தால் மனம் கிலி கொள்கின்றது.சென்ற வருடம் தென் மேற்கு பருவ மழை பொய்த்து விட்டதால் சென்னை நகரில் ஆங்காங்கு தண்ணீர் லாரிகளின் தலை காணப்பட்டது.இந்த வருடன் அவ்விதம் இருக்காது என்று நம்புவோம்.


சென்ற வாரம் அமிஞ்சிகரைக்கு ஒரு கடைக்கு சென்று இருந்தேன். கைபேசியில் ஒருவர் பேசும் பேச்சு செவியில் விழும் பொழுது ஏதோ மேடை பேச்சைக்கேட்பது போல் இருந்தது.இத்தனை நாவன்மைக்குறியவர் யாராக இருக்கும் என நிமிர்ந்து பார்த்தால் அன்னாள் பெரியார்தாசனும்,இன்னாள் அப்துல்லாவும் தன் மனைவியாருடன் நின்றிருந்தார்.மீடியாக்களிலும்,வலையுலகிலும் பரபரப்பாக பேசபட்டவர்.நீண்ட நேரம் எங்களுடன் மிகவும் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தார்."அப்போதய பெரியார் தாசனுக்கும்,இப்போதைய அப்துல்லாவிற்கு என்ன வித்தியாசத்தை உணர்கின்றீர்கள் குடும்ப ரீதியாக" என்று அவரது மனைவியிடம் கேட்ட பொழுது "செயின் ஸ்மோக்கரான இவர் நான் ஸ்மோக்கர் ஆகி விட்டார்" என்று சிரித்தார்.பெரியார் தாசனிடம் இதே கேள்வியைக்கேட்ட பொழுது அவர் தன் மனைவி வாசுகி அம்மையாரை சுட்டிக்காட்டி"இவர் என்னை ஏற்றுக்கொண்டார்"என்று பெரும் சிரிப்புடன் சொன்னார்.சுவாரஸ்யமாக பல நிமிடங்கள் அந்த ஆதர்ஷ தம்பதிகளுடன் செலவிட்டது மனதிற்கு மகிழ்வாக இருந்தது.
சைதை துரைசாமியின் மனிதநேயம் அறக்கட்டளை சார்பில் கடந்த 2006-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். இலவச பயிற்சி மையம் சென்னையில் அவரது இல்லத்தின் அருகிலேயே தொடங்கப்பட்டது. முதல் ஆண்டிலேயே இந்த மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களில் 12 பேர் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றனர். கடந்த ஆண்டு 25 பேர் வெற்றி பெற்றனர். இதைத்தொடர்ந்து சென்னை அண்ணாநகரிலும் பயிற்சி மையம் துவக்கப்பட்டுள்ளது.கரங்களில் பைலுடன் கலெக்டர் கனவுகளுடன் மாணவமாணவிகள் அணிவகுத்து செல்வதைப்பார்க்கும் பொழுது மனம் மகிழ்வாக உள்ளது.அரிய சேவையை செய்து வரும் சைதை துரைசாமி அவர்கள் நிச்சயம் பாராட்டுக்குறியவர்.வளர்க அவர் நற்தொண்டு.

சிங்காரச்சென்னை சிங்காரச்சென்னை என்று மூச்சுக்கு முன்னூறு முறை முழங்கும் வல்லவர்கள் மாநகரப்பேருந்தை பார்த்து இருக்கமாட்டார்கள்.பேருந்தின் வெளிப்புறத்தில் ஒரு இஞ்சுக்கு தூசி.போதாதற்கு அஷ்டகோணல் உருவத்துடன் சர்ரென எதிரே வருபவர்களுக்கு எமனாக சீறிப்பாய்கின்றது.ஒரு இஞ்ச் படிந்திருக்கும் தூசி ஒன்றரை இஞ்ச் ஆகி சிங்காரச்சென்னையை மேலும் மேலும் அசிங்கார சென்னையாக மாற்றி வருவதற்குள் தகுந்த நடவடிக்கை எடுப்பார்களா?
சென்னை டிராஃபிக்கை நினைத்தால் வெளியில் கிளம்பவே எரிச்சலாக உள்ளது.அதிலும் சிக்னல் விளக்கு இல்லாத இடங்களில் கேட்கவே வேண்டாம்.டிராஃபிக்கை கட்டுப்படுத்தும் போலீஸ் வீட்டுக்கவலையோ என்னவோ ஒரு புறத்தை மறந்தே விடுகின்றார்.கையில் கட்டி இருக்கும் கைக்கடிகாரத்தையும் பார்ப்பதே இல்லை.அந்த புறகணிக்கபட்ட பக்கத்து வாகன ஓட்டிகள் ஹாரன்களை அலற விட்டு நின்று கொண்டிருக்கும் டிராஃபிக் போலீஸுக்கு ஞாபகப்படுத்த வேண்டி உள்ளது.இப்படி மாதிரி ஒரு டிராஃபிக்கில் மாட்டிக்கொண்டு அவஸ்த்தைப்பட்டுக்கொண்டு எரிச்சல் முகத்தோடு இருந்த பொழுது அருகில் அமர்ந்திருந்த என் மகன் பேப்பரில் ராக்கெட் செய்ய ஆரம்பித்தார்.நான் வரும் எரிச்சலை கட்டுப்படுத்திக்கொண்டு "ஏன் இப்ப பேப்பர் ராக்கெட்" என்று கேட்ட பொழுது "ரோட்டிலேயே நின்று கொண்டே தூங்கிக்கொண்டிருக்கும் அந்த போலீஸ் காரரை தட்டி எழுப்பத்தான்" என்கின்றார்.

January 24, 2010

அஞ்சறைப்பெட்டி - 1



ஆதங்கம்
_________

தீவுத்திடலில் 36 வது சுற்றுலா கண்காட்சி நடைபெற்று வருகிறது.முன்பெல்லாம் கண்களுக்கும்,வயிற்றுக்கும் மட்டுமல்லாமல் அறிவுக்கும் தீனி கிடைக்கும் வண்ணம் பொதுப்பணித்துறையினர் அரங்குகள் அமைத்து பார்வையாளர்களை பரவசப்படுத்துவார்கள்.இப்பொழுது ஸ்டால்களுக்கும்,சிறுவர்களைப்பரவசபடுத்தும் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இருந்தார்கள்.அரங்குகளை இப்பொழுது நிறைய தேடித்தேடி அலைய வேண்டியதிருந்தது.



கோபம்
______

ரயில் பயணம் என்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.வழக்கம் போல் அமைதியாக பயணம் செய்ய வேண்டி செகண்ட் ஏசியில் புக் செய்து பயணம் செய்தேன்.நிறைய பர்த் காலி."ஹப்பாடா"என்று மூச்சு விட்ட மறு நிமிஷம் அடுத்த ஸ்டேஷன்.குபு குபு வென்று ஒரு பெரிய கும்பல் ஏறி அனைத்து பர்த்களையும் நிரப்பி விட்டனர்.பெண்கள் கீழ் பர்த்தில் அமர்ந்திருக்க சற்று கூட மன சாட்சி இன்றி மேல் பர்த்தில் மூன்று பேர் அமர்ந்துகொண்டு கால்களை கீழே தொங்கப்போட்டுக்கொண்டு அரட்டையில் ஈடு பட்டிருந்தவர்களை பார்க்க எரிச்சல்.கீழ் பர்த்தில் அமர்ந்திருந்த பெண்கள் சங்கடப்பட ,எனக்கோ கோபம் தாங்காமல்"தம்பிகளா!கீழே லேடீஸ் இருக்காங்க"என்று சற்று கோபமாக கூறியதும் உடனே கீழ்படிந்தார்கள்.இரவு 10 மணியானதும் அவர்களின் சப்தமான அரட்டை கச்சேரி உச்ச ஸ்தாயியில் ஆரம்பித்து விட்டது.என்னை முந்திக்கொண்டு அடுத்த கம்பார்ட்மெண்டில் இருந்து கோபமாக வெளிபட்ட ஒரு சகோதரர் "தூங்குங்கப்பா..தூங்கப்போற சமயத்தில் சப்தம் போட்டு பேசறீங்களே"என்று கேட்டதும்தான் தாமதம்.அத்தனை பேரும் பிலு பிலு என்ற பிடித்த பிடியில் அந்த சகோதரர் போயே போய் விட்டார்.அவர்கள் பொது இடத்தில் மற்றவர்களுக்கு இடைஞ்சல் கொடுத்து அடித்த கொட்டத்தை தட்டிக்கேட்க மறு ஆள் இல்லை.



ஆச்சரியம்

__________

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு சென்று இருந்தேன்.அங்கு சிகிச்சைக்கு வரும் கூட்டத்தைப்பார்த்து எனக்கு அவ்வளவு ஆச்சரியம்.கண் சிகிச்சைக்கென்றே எவ்வளவு பெரிய மருத்து மனை,எவ்வளவு மருத்துவர்கள்,எத்தனை ஊழியர்கள்!!!மெடிக்கல் கன்சல்ட்டிங் என்று போனாலே காந்தி தாத்தா சிரிக்கும் கரன்ஸிகளை அள்ளும் மருத்துவ உலகில் வெறும் ஐம்பது ரூபாய் கன்ஸல்ட்டிங் சார்ஜ் வாங்கிக்கொண்டு பரிசோதிக்கிறார்கள் ஒரே நோயாளியை பல மருத்துவர்கள்.மிக குறைந்த செலவில் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அரவிந்த் கண் மருத்துவமனையில் கிடைக்கும் என்றால் அது மிகை ஆகாது.




எரிச்சல்
_______

பொதுவாக எனக்கு கூட்டம் என்றால் ரொம்பவே அலர்ஜி.பொங்கல் நேரம் சென்னையே களை கட்டி விட்டது.சங்கமம்,பீஸ் மாநாடு,சுற்றுலா கண்காட்சி,நுகர்வோர் கண்காட்சி,சர்க்கஸ்,நகைகண்காட்சி,கடைகளில் சேல்ஸ் இத்யாதி..இத்யாதி...இங்கே இருந்து கொண்டு எப்படி எதற்குமே போகாமல் இருப்பது?அனைத்துக்கும் போய் பை நிறைய சாமான்களுடன்,வயிறு நிறைய உணவும்,மனம் முழுக்க எரிச்சலுடனும் வீடு திரும்பியதும்"சே..சே..என்ன கூட்டம்..?இனி போகவே கூடாது "என்று தீர்மானம் செய்தாலும் லீவில் வந்த வாண்டுகள் கெஞ்சலுக்கு மீண்டும் மறுநாள் ஹேண்ட்பேக்கை தோளில் மாட்டிக்கொண்டு கிளம்பவேண்டியதுதான்.





சந்தோஷம்
_________

இப்பொழுதெல்லாம் லக்ஷரி பிளாட் என்பது சென்னையின் தாரக மந்திரம் ஆயிரதெட்டு வசதிகளை வாரி வாரி வழங்கி பணத்தை கறந்து அழகிய கனவு இல்லத்தை தந்து விடுகிறார்கள்.அந்த அழகிய இல்லத்தை நம்மிடம் தரும் நாளை கெட் டு கெதர் என்று ஏற்பாடு செய்து , லட்சகணக்கில் செலவு செய்து பில்டர்கள் வாடிக்கையாளர்களை அசத்துவது இன்றைய பேஷன்.நூற்றுக்கும் மேல் இருக்கும் குடியிருப்பில் ஒருத்தொருக்கொருத்தர் அறிமுகபடுத்தவும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது.ஆடல்,பாடல் மேஜிக்,கருத்தரங்கு,ஐந்து நட்சத்திர உணவகத்தில் இருந்து வரவழைக்கபட்ட பஃபே இப்படி ஆடம்பரமாக,அட்டகாசமாக கலக்குகின்றனர்.2010 ஆரம்ப நாளன்று அப்படி ஒரு ஈவண்ட் என்னை மிகவும் சந்தோஷப்படுத்தியது.