October 30, 2011

காலத்தால் அழியாத கதா பாத்திரங்கள்.

தேவனின் துப்பறியும் சாம்பு

அந்த நாளில் பழம்பெரும் எழுத்தாளர் தேவன் துப்பறியும் சாம்பு என்ற கதாபாத்திரத்தை உருவாக்கி அதன் பின் வந்த எழுத்தாளர்களுக்கெல்லாம் முன்னோடியாக இருந்தார்.
நான் பிறப்பதற்கு முன்பே வளைய வந்த சாம்புவை மொடமொடத்த பழுப்பேறிய தாள்களாக படித்து மகிழ்ந்து இருக்கிறேன்.

துப்பறியும் சாம்புவை தேவனின் மாஸ்டர் பீஸ் என்பார்கள்.சாம்பு முட்டாள்த்தனமாக செய்யும்காரியங்கள் யாவும் இறுதில் புத்திசாலித்தனமாக முடிக்கப்படுவது ஆசிரியரின் திறமையை வெளிப்படுத்தும்.மனபாரத்தோடு சாம்பு துப்பறியும் கதைகளை கையில் எடுத்து படிக்க ஆரம்பித்தால் மனம் லேசாகித்தான் புத்தகத்தை கீழே வைப்பார்கள்.

பட்டுக்கோட்டை பிரபாகரின் பரத் - சுசீலா

பி கே பி கற்பனையில் இந்த கேரக்டர்கள் உருவானதற்கு காரணி எழுத்தாளர் தேவனின் சாம்புவேதான்.

”தொடர்ந்து ஒரே பாத்திரங்கள் வருகின்ற போது வாசகர்களுக்கு தொடர்ந்து ஈடுபாடு வரும் இதற்காக எல்லாருமே இந்தமாதிரி தனிதனிப் பாத்திரங்களாவும் ஆண் பாத்திரமாகவும் வைத்திருக்கின்ற பொழுது நான் ஏன் காதல் ஜோடியாக வைத்திருக்க கூடாது அந்த துப்பறியும் பாத்திரங்கள் ஒரு காதலனும் ஒரு காதலியுமாக இருந்தா இன்னுமொரு சுவாரஸ்யமாக இருக்குமே அப்படின்னு யோசிச்சு பரத் சுசீலா அப்படி என்ற இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் தங்களுடைய அன்பையும் பாசத்தையும் காதலையும் கொட்டிக்கொண்டே துப்பறியும் கலைகளிலும் ஈடுபடுவார்கள் என்ற அமைப்போடு துவக்கப்பட்ட பாத்திரங்களே பரத் சுசீலா பாத்திரங்கள். ”மேற்கண்டவாறு பி கே பி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

பரத் சுசீலா பாத்திரங்களுக்கும், சுசீலாவின் டி சர்ட் வாசகங்களுக்கும் எக்கசக்க ரசிகர்கள்.இன்னிக்கு சுசீலா என்ன வாசகம் அணிந்த டீ ஷர்ட் அணிந்து வரப்போகின்றாள் என்ற படபடப்புடன் படிக்கும் வாசகர்களின் எதிர்பார்ப்பு பிகேபியின் எழுத்துக்குக்கு கிடைத்த ஒரு அங்கீகாரம்.

சுஜாதாவின் கணேஷ் - வசந்த்

சுஜாதா என்றதும் நினைவு வரும் மறக்க இயலாத கதாபாத்திரங்களான கணேஷ் - வசந்த்.
கணேஷை பொறுப்பான, அதிகம் பேசாத, கண்ணியமான, பெண்கள் பற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்ளாத, கண்டிப்பான அமைதியான கேரக்டராக சித்தரித்திருப்பார் சுஜாதா.

அதே நேரம் அவரது உதவியாளர் வசந்தை கிண்டல், கேலி, விளையாட்டுத்தனம், வாயாடித்தனம், எவ்வளவு சீரியஸான நேரத்திலும் பெண்களை கொஞ்சம் 'சைட்' அடித்தவாறு இருக்கும் ஜாலியான,துடுக்குத்தனமான கேரக்டராக சித்தரித்து இருப்பார்


பாக்கியம் ராமசாமியின் சீதாபாட்டி - அப்புசாமி

தாத்தா பாட்டி என்றதும் நினைவுக்கு வருவது மேற்கண்ட முதிய தம்பதிகள்தான்.கதாசிரியர் கற்பனையில் கண்டு மகிழ்வித்த அப்புசாமி, சீதாபாட்டி தம்பதியை, கண்முன் கொண்டுவந்து நிறுத்திய ஓவியர் ஜெயராஜின் சித்திரங்கள் மனதை அள்ளிச்செல்லும்.

கூடவே
பீமா, ரசம், அரை பிளேடு, முக்கா பிளேடு என்று நண்பர் படை சூழ உட்கார்ந்து யோசித்து, புதுப் புதுத் திட்டங்கள் போடும்அப்புசாமி ,பொடி போடும் அப்புசாமியை அடக்க முயற்சிக்கும் சீதாப்பாட்டி,அடியேய்ய்ய்ய்ய்ய்..என்று நீட்டி முழங்கி மனைவியை அழைக்கும் ஸ்டைல்,எப்பொழுதும் மனைவியிடம் பல்பு வாங்கினாலும் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாத அப்புசாமி..இப்படி எத்தனை எத்தனையோ...

பக்கத்து வீட்டில் வசிப்பவர்களைப் பார்ப்பது போல் உணர்வூட்டும் அருமையான கேரக்டர்கள் நம்ம குலுங்க குலுங்க சிரிக்க வைத்து பரவசப்படுத்துவார்
ராஜேஷ்குமாரின் விவேக் - ரூபலா

பக்கா டீஸண்டாக இந்த கதாபாத்திரங்களை படைத்து படிப்பவர்கள் மனதை அள்ளிவிடுவார் ராஜேஷ்குமார்.துப்பறியும் நாயகன் விவேகானந்தன் என்கிற விவேக், புலனாய்வுதுறை உயரதிகாரி. அவரது மனைவி ரூபலா.ராஜேஷ்குமாரின் பல நாவல்கள் மிகவும் அற்புதமாக இருக்கும்.அதிலும் விவேக்-ரூபலா வரும் நாவல்கள் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.

கதை எழுதுவதற்கு எடுக்கும் சிரத்தையை கதைக்கு தலைப்பு வைப்பதிலும் ராஜேஷ்குமார் அக்கரை கொள்வார் என்பதற்கு இந்த தலைப்புகள் சிலதே உதாரணம்.
திருமரண அழைப்பிதழ்
நிலவை களவு செய்
தப்பு தப்பாய் ஒரு தப்பு
இனி மின்மினி
சூடான கொலை
கண்ணிமைக்க நேரமில்லை
நீலநிற மல்லிகை.




சுபாவின் வைஜெயந்தி - நரேன்

ஈகிள் ஐ என்ற துப்பறியும் நிறுவனம் நடத்தும் ராமதாஸ் இவர்களிடம் வேலைபார்க்கும் இந்த ஜோடிகள், அடிக்கும் லூட்டி மறக்க முடியாது.வைஜெயந்தியோட கோன் ஐஸ்க்ரீம் ஆசைகள் - வாசகர்களுக்கு பிரசித்தம்.நரேன் வைஜெயந்தி வரும் கதைகள், அவர்களது ஊடல்,கூடலுடன் படிப்பவர்கள் மனதை பரவசப்படுத்தும்

தமிழ்வாணனின் சங்கர்லால்

சலவை கலையாத முழுக்கை சட்டை,அதை உள்வாங்கி இருக்கும் பேண்ட்,காலில் பளபளக்கும் ஷூ,தலையில் தொப்பி,அவ்வப்பொழுது கழுத்தை இறுகப்பிடிக்கும் ஸ்கார்ஃப்,கண்களில் கூலிங் கிளாஸ்,கைகளில் தேநீர் கோப்பையுடன் நாற்காலியில் அமர்ந்து எதிரே இருக்கும் மேஜையின் மீது காலுக்கு மேல் காலை தூக்கிப்போட்டுக்கொண்டு ராயலாக உட்கார்ந்திருக்கும் உருவம் யார் என்றால் சட்டென நினைவுக்கு வருவது தமிழ்வாணனின் சங்கர்லால்.

துப்பறியும் சங்கர்லாலை உருவாக்கி அப்பொழுது பெரும் பரபரப்பை உருவாக்கிய தமிழ்வாணன் பிறகு துப்பறியும் தமிழ்வாணன் ஆக அவதரித்தார் அதே கெட்டப் உடன்.

எழுத்தாளர் அகஸ்தியன் உருவாக்கிய கதாபாத்திரங்களான மிஸ்டர் & மிஸஸ் பஞ்சு, மற்றும் தொச்சு, அங்கச்சி, கமலா யாவரும் மறக்க இயலாதது.

எழுத்தாளர் ராஜேந்திரக் குமாரின் ராஜா, ஜென்னி ,தேவிபாலாவின் பிரசன்னா - லதா ,புஷ்பா தங்கதுரையின் சிங் கேரக்டர்களும் வாசகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டவை.

இதெல்லாம் அன்றும் இன்றும் பரபரப்பாக பேசப்பட்டு,வாசிக்கப்பட்டு,ரசிக்கப்பட்டு வந்த கேரக்டர்களானாலும் நான் ரசித்து ,பல தடவை வாசித்த ஒரே நாவல் என்றால் அது கோவி.மணிசேகரனின் ”மனோரஞ்சிதம்”

ஒரு சலவைத் தொழிலாளியின் மகள் தன் வீட்டுக்கு வரும் அழுக்குத் துணிகளில், ஒரு பட்டு ஜிப்பாவில் மட்டும் மனோரஞ்சிதம் வாசனை மணப்பதை கவனிப்பாள். அந்த சென்ட் வாசனையை வைத்து, அதை அணிபவன் எத்தகைய அழகான இளைஞனாக இருப்பான் என்று கற்பனை செய்வாள். கற்பனையிலேயே காதல் கொள்வாள். கடைசியில் அவன் ஒரு குஷ்டரோகி என்பதுதான் கிளைமாக்ஸ்.தான் கற்பனை செய்து வைத்திருந்த காதலன் ஒரு குஷ்டரோகி என்ற உண்மை தெரிந்ததும் கலங்கிபோகும் கதாநாயகி படிப்பவர்களையும் கலங்க வைத்து விடுவாள்.சலவைத்தொழிலாளி மகளாக வரும் கிளியாம்பாள் கதா பத்திரம் என்னை பெரிதும் கவர்ந்தவள்.சிறுமி பிராயத்தில் வாசித்த அந்த நாவலின் சுவை இன்னும் என் மனதில் தேங்கி நிற்கின்றது.நான் வாசித்த முதல் நாவலும் இதுதான்.

டிஸ்கி:



October 27, 2011

ஆறில் இருந்து அறுபதுவரை

படம் சொல்லும் பாடல்கள்!

படம் - 1

செவ்வந்தி பூக்களாம் தொட்டியிலே
என் கண்மணிகள் இன்னும் தூங்க வில்லை.

படம் - 2

காதலிப்போம் காதலிப்போம் காதலிப்போம் நாலேஜுக்கு
ஐய்யைய்யோ ஆத்த மொரச்சி பாத்த
ஐய்யைய்யோ ஆத்த மொரச்சி பாத்த
தாங்காதடி தாங்காதடி தங்க ரதம்
ஐயொ தூங்காதடி தூங்காதடி எங்க மனம்

படம் - 3

அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும்
என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே
என் ஆயுள்வரை உன் அணைப்பினிலே
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்

படம் - 4

ஆசையுடன் பாசம் வரும்
இதில் அந்தரங்கம் கிடையாதம்மா
நாள் செல்ல நாள் செல்ல சுகம்தானம்மா

படம் - 5

தேடிய செல்வம் என்ன திரண்டதோர் சுற்றம் என்ன?
கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன?
வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?
வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ

படம் - 6

போனால் போகட்டும் போடா இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா
வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த
மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம் வரும்
ஜனனம் என்பது வரவாகும் அதில்
மரணம் என்பது செலவாகும்


டிஸ்கி:படத்தை கிளிக் செய்து பெரிது படுத்தி பார்க்கலாம்.


October 16, 2011

சபாஷ்...சரியான போட்டி

ஆபிதா பேக‌ம் (சுயே)ஆத‌ரவு - ம‌க்க‌ள் ந‌ல‌ பாதுகாப்பு க‌ழ‌கம்

எனது அன்புக்கும் ,மரியாதைக்கும் உரித்தான அன்பு ஆபிதா டீச்சர்.முப்பத்தி எட்டு வருடங்களாக ஆசிரியைப்பணியில் செவ்வன பணியாற்றி ஓய்வு பெற்றவர்.சமூக ஆர்வலர்.கனிவும்,பணிவும்,பொறுமையும் மிக்கவர்.



தாஜுன்னிசா (திமுக‌)

இனிய நண்பி.வாணியம்பாடி மதராஸவில் ஆலிமா பட்டம் பெற்றுள்ளார்.கீழக்கரை அனைத்து பெண்கள் மதரஸாக்களின் தலைவியாக உள்ளார். சமூக சேவையில் ஆர்வமுள்ள இவர் ஹமீதிய மெட்ரிக் பள்ளியின் பெற்றோர் கழக உறுப்பினராக உள்ளார்.

ராபிய‌த்துல் காத‌ரியா(அதிமுக)
மெஹ‌ர் பானு(சுயே)ஆதரவு - தமுமுக மற்றும் அனைத்து சமுதாய தேர்தல் பணி குழு

ஆமீனத்துல் பஸ்ஸரா (காங்)

ஜீனத் மரியம் (தேமுதிக)

ஆயிச‌த் (சுயே)

ர‌ஹ்ம‌த் நிஷா(புதிய‌ த‌மிழ‌க‌ம்)


மெஹ‌ர் நிஷா(சுயே)

க‌திராயி(சுயேட்சை)

கீழக்கரை நகராட்சி தலைவர் வேட்பாளராக என்றுமில்லாத அதிசயமாக பத்துப் பெண்கள் போட்டியிடுகின்றனர்.அதில் அநேகர் பாரம்பர்யமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.முக்கியமாக எனது நண்பியும் எனது ஆசானும் போட்டியில் கலந்து கொண்டிருக்கின்றனர்.அனைவரது படங்களும்,விபரமும் உங்கள் பார்வைக்காக‌ இங்கே தரப்பட்டுள்ளது.பொருத்து இருந்து பார்க்கலாம்.யார் ஜெயிக்கின்றார்கள் என்று.


படங்கள் உதவி:கடலோசை

October 14, 2011

எங்கே செல்லும் இந்தப்பாதை :-(


ஒரு பிரபலமான பொறியிற்கல்லூரிக்கு நேற்றுசென்று இருந்தேன்.கூட்டம்,கூட்டமாக மாணவ மாணவிகள் ஆங்காங்கு சுற்றிக்கொண்டிருந்தனர்.வகுப்பு நடக்கும் நேரத்தில் இவர்கள் கேம்பஸை சுற்றி சுற்றி வருகின்றார்களே..ஏன்?

மனதில் தோன்றிய கேள்வி வாய் வரை வந்தாலும் “ஆஹா..கேள்வி ஏதாவது கேட்டு வைத்து கூட்டமாக இருக்கும் இந்த சின்னஞ்சிறுசுகளிடம் வசமாக மாட்டிக்கொள்ளக்கூடாது” என்று வாயைக்கட்டுப்படுத்திக்கொண்டேன்.இப்படி கல்லூரி வளாகத்தினுள் சுற்றுகின்றார்களே.கேட்பார் இல்லையா?மனதில் ஆதங்கம்.மரநிழலில் கட்டப்பட்ட திண்டுவில் அமர்ந்து செல்போனை குடைந்து கொண்டிருந்த பொழுது கண்களில் ஒரு மாணவன் சிக்கினான்

“தம்பி ,இங்கே வா”

“சொல்லுங்க ஆண்ட்டி”

“ஏன் கிளாஸ் போகலியா?”

“போகலே”

“ஏன்”

”ரெக்கார்டு எடுத்துட்டு வரலே.அதான்..”

“ரெக்கார்டு எடுத்துட்டு வரலேங்கறதுக்காக ஒரு கிளாஸை இப்படி மிஸ் பண்ணலாமா?உன் பேரண்ட்ஸ் உன் மேலே நம்பிக்கை வைத்து எவ்வளவு பணம் செலவு செய்து படிக்க அனுப்பி இருக்காங்க”

தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
ஏறு போல் நடையினாய் வா வா வா

நாம்தான் சிறுமை கண்டு பொங்கும் ஜாதி ஆயிற்றே.வசமாக பையன் மாட்டினான்.ஏதோ நம்மால் ஆன அட்வைஸ் என்று பேச எத்தனித்த பொழுது தூரத்தில் சென்று கொண்டிருந்த இன்னொரு மாணவனை கைதட்டி அழைத்து அறிமுகப்படுத்தினான்.

“ஆண்ட்டி,இவனும் கிளாஸை கட் பண்ணிட்டான்.என்னன்னு கேளுங்க”

புதியவன் முறைத்தான்.

“ஏம்ப்பா,நீ கிளாஸ் கட் பண்ணே?”

“ப்ஸூ..போர் அடிக்குது”

”படிக்கத்தானேப்பா வந்தீங்க.”

“அதுக்கூஊஊ ..ஒரு ரிலாக்‌ஷேஷன் வேணாமா?”

“ஒரு நாலு வருஷம் கஷ்டப்பட்டால் நாற்பது வருஷத்துக்கு நிம்மதியா இருக்கலாம் தம்பி.”

“அட..நீங்க வேற...என் கிட்டே கேட்கறீங்களே.சத்யம் தியேட்டர் போய் பாருங்க.பெசண்ட் நகர் பீச்சுக்கு போய் பாருங்க.ஒவ்வோரு மாலா போய் பாருங்க.எத்தனை ஆயிரம் ஸ்டூடண்ட்ஸ் கிளாஸை இல்லை காலேஜையே கட் பண்ணிட்டு ஜாலியா இருக்காங்க.நீங்க இப்ப ஸ்டூடண்டா இருந்தால் தானே தெரியும்.எங்க கஷ்டம்.டேய்..வாடா...கேண்டீனில் சூடா நக்கட்ஸ் போட்டிருப்பான்.வா போலாம்.”

நான் அவ்வ்வ்வ்வ்வ்வ்......

அதே நேற்று..

மாலை எக்மோரில் காரினுள் அமர்ந்திருந்தேன்.வேலையாக கூட வந்தவர் சென்று விட,வருவதற்கு தாமதமானதால் சாலையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.எதிரே ஒரு ஏஸி பார்.

மோட்டார் சைக்கிள்களில் கூட்டமாக கல்லூரி மாணவர்கள் வந்து இறங்கினார்கள்.தோளில் மாட்டிய பையுடன்,கையில் டிராஃப்டருடன் பாரினுள் நுழைந்து கொண்டிருந்தனர்.கும்மாளமும்,இரைச்சலுமாக அவர்கள் அடித்த லூட்டி சாலைக்கு இந்தப்புறம் இருந்த எனக்கு சகிக்கவில்லை.

“அடப்பாவிகளா!”மனதில் வேதனை மிகுந்தது.

இன்னும் சற்று நேரம் கழித்து நாலைந்து மாணவர்கள்.பள்ளி சீருடையில் ஆர்ப்பாட்டத்துடன் வந்தனர்.

அணிந்திருந்த யூனிஃபார்ம் சட்டையை மள மள வென்று கழற்றினார்கள்.

”என்னடா பண்ணுகின்றார்கள் இந்த சிறுவர்கள் நடுரோட்டில் வைத்து “திகைத்துப்போய் பட படப்பாக கவனித்துக்கொண்டிருந்தேன்.. சட்டைக்கு உள்ளே கலர் கலர் டீஷர்ட்டுகள்.கழற்றிய சீருடை சட்டையை தோளில் மாட்டிய பையினுள் வைத்துக்கொண்டு இவர்களும் பாருக்குள் ”ஹுர்ரேஏஏஏஏ” என்று சப்தம் போட்டபடி நுழைந்தனர்.

இவனுங்க என்னத்தை கண்டு பிடிச்சுட்டானுங்க.இந்த ஹுர்ரேஏஏஏ...

நான் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......

October 10, 2011

சாம்பிராணி


செந்நெருப்பு கனலில் இட்டால்
நாசி நிறைக்கும் நறுமணமும்
விழி சுருக்கும் புகை மண்டலமும்
கண்டு மனம் உவகை கொள்ளும்

பக்திமணம் கமழும் பொழுது
பவ்யமாய் உனை ஏற்றி
பரவசமாய் கண்மூடி
பாங்காக வணங்குகின்றர்.

வீட்டில் கொசுதொல்லை கண்டால்
சகித்துக்கொள்ள முடியாமல்
சலிக்காமல் தீயிலிட்டு
புகை காட்டி பலன் பெறுவர்.

அம்மா மீன் வறுக்கையில்
உவ்வே என்று சப்தம் போட்டால்
உடனே உன்னைத் தேடி
ஓடோடி வருகின்றனர்.

நீராடி முடித்து விட்டு
கச்சிதமாய் உனைக்காட்டி
கார்கூந்தல் மணமணக்க
உன் உதவி வேண்டுமென்பர்

சாமி அறையினுள்ளும் நீ
வரவேற்பறையிலும் நீ
சமையலறையிலும் நீ
சர்வ இடத்திலும் நீ

உன்னை புகைய விட்டு
கடை கடையாய் ஏறி இறங்கி
சல்லிசாய் காசு பார்த்து
காலத்தை கழிக்கின்றர்

பண்டிகை, நல்ல நாளென்றால்
மளிகைக்கடை பட்டியலில்
தவறாது இடம் பெற்று
முன்னணியில் நின்றிடுவாய்

இத்தனை முக்கியத்துவம்
உனக்கிங்கே இருந்தாலும்
மக்கு மட மாந்தர்களை
உன் பெயரில் அழைப்பது ஏன்?


October 4, 2011

என் வீட்டுத்தோட்டத்தில்...

ராட்சச வளர்ச்சி என்பார்களே.அது தான் இது போலும்.ஒரு சாண் அளவில் செடியாக நட்டு வைத்தது.நாலே வருடத்தில் மொட்டைமாடியை விட உயரமாக வளர்ந்து விட்டது.முன்னர் தென்னை மரங்கள்,வேம்பு,கொய்யா,நெல்லி என்று பலவித மரங்கள் வீட்டை சுற்றிலும் இருந்தன.வீடு கட்டும் பொழுது அத்தனை மரங்களையும் வெட்டும் கட்டாயம்.மரங்களை வெட்டிய பொழுது எதிர்வீட்டுத்தோழி அழாத குறைதான்.உங்கள் வீட்டு மரங்களை பார்த்துக்கொண்டிருந்தால் பிளஸண்ட் ஆக இருக்குமே!அத்தனையும் வெட்டி சாய்த்து விட்டீர்களே என்று புலம்புவார்.எனக்கும் வேம்பு மீது எப்பொழுதும் விருப்பம்.மற்ற மரங்கள் வளர்க்க முடியாவிட்டாலும் வேம்பையாவது வைக்கலாம் என்று காம்பவுண்ட் ஓரமாக வைத்தது இப்பொழுது அகலமான தெருவையே அடைத்துக்கொண்டு வளர்ந்துள்ளது.எங்கள் ஏரியாவில் மாமரங்களும்,வேப்பமரங்களும்,தென்னைமரங்க்ளும் அதிகம்.எங்கு பார்த்தாலும் இந்த மரங்களை காணலாம்.கிரேட்டஸ்ட் வேம்புமரம் என்றால் அது எங்கள் மரம்தான்.அத்தனை பெரீஈஈஈய மரம்.

குட்டியாக கருவேப்பிலை செடி.இது ஒன்றுதான் கிச்சன் செடி என்றுள்ளது.பூஸின் கார்டன் பார்த்து விட்டு இங்கு வளரும் தக்காளி,கத்தரி,பாகல்,அவரை போன்றவை நடவேண்டும் என்ற ஆவல் எழுந்துள்ளது.(காய் செலவையும் மிச்சம் பிடிக்கலாமே.)


இது ஒரு அலங்காரச் செடி தான் ..மெலிதான இலைகளுடன் பார்க்க அழகாக இருக்கும்.அநேகமாக குரோட்டன்களின் பெயர்கள் நிறையத்தெரியாது.தெரிந்தவர்கள் பின்னூட்டினால் இணைத்துக்கொள்வேன்.
பெரிய பெரிய இலைகளுடன் உள்ள குரோட்டன்.எண்ணி மூன்று நாண்கு இலைகளுக்கு மேல் வரவே வராது.அப்படி வந்தாலும் சீக்கிரத்தில் சருகாகிப்போகாது,எனது பேவரிட் செடி இந்த கலேடியம். இதில் பல கலர் / டிசைன் இலைகள் உள்ள விதங்கள் உண்டு. அதிகம் காணக் கிடைப்பது bleeding heart.

வயலட் நிறப்பூக்களுடன் அழகாக காணப்படும் செடி.ஈஞ்சம்பாக்கம் நர்சரி சென்று இருந்த பொழுது பூக்களுக்காக வாங்கியது.

தடிமனான இலைகளுடன் குட்டி குட்டி பின்க் வர்ண பூக்களுடன் கூடிய பால்சம் இனத்தை சேர்ந்த பூஞ்செடி வகை.

ஊட்டியில் இருந்து என் மகனின் நண்பரொருவர் பதியன் போட்டு பிளாஸ்டிக் கவர்களில் கொணர்ந்து தந்த பாம் செடி.ஆறுசெடியில் மூன்றுதான் இன்று மிச்சம்.தரையில் நட்டால் மரம் போன்று பெரிதாக வளர்ந்து விடும்.ஆனால் அழகு போய் விடும்.இது பூந்தொட்டியில் வளர்வதே அழகு.

ஒரு கோணம்
இதுவும் ஒருவகை க்ரோட்டன் தான்.ரொம்ப டல் லுக் தருது இல்லை.நேரில் பார்த்தால் அழகாக இருக்கும்.
என்னதான் குட்டிகரணம் போட்டாலும் பூக்கவே மாட்டேன் என்று அழிச்சாட்டியம் பண்ணும் பொல்லாத ரோஜா செடிகள்.பின்க்,வெள்ளை,சிகப்பு,மஞ்சள் என்று கலர் கலராக வாங்கி வைத்தேன்.பிளாஸ்டிக் கவரில் இருக்கும் பொழுது ரோஜா மலர்ந்ததோடு சரி.
மற்றொரு கோணம்
அழகான க்ரோடன் வகை

மணிப்பிளாண்ட்.பசேல் எனற இலைகளுடன் கும் என்று வளரக்கூடியது.மணி பிளாண்ட் வளர்த்தால் நிறைய பணம் சேரும் என்கின்றார்கள்.ஆனால் அது எல்லாம் மூட நம்பிக்கை என்று நம்புபவள் நான்.வெறும் அழகுக்காகவே மட்டும் வளர்க்கின்றேன்.இதனை இண்டோர் பிளாண்டாகவும் வளர்க்கலாம்.ஆனால் என் பேரக்குட்டி வில்லனாச்சே.

இது காக்டஸ்.ஒரே ஒரு செடியை நட்டு வைத்தால் அப்படியே பல பல செடிகளாக குட்டி போட்டு விடும்.பார்க்க அழகாக இருக்கும்.

வீட்டு முகப்பில் வைத்திருக்கும் செம்பருத்தி,மல்லிகை ரோஜா,இன்னும் சில வகைகள்.
இதுவும் ஒரு பகுதியில்
பறிப்பாரின்றி மல்லிகைகள் மலர்ந்து சிரிப்பதை பாருங்கள்.அதுப்போல் சிகப்பு செம்பருத்தியும் சீஸனில் ஒரே செடியில் பத்து பனிரெண்டு பூக்கள் மலரும் பொழுது அழகாக இருக்கும்.
குபீர் என்று வளர்ந்திருக்கும் பெரீஈஈய செடிவகை.நீள நீளமான பூக்களுடன் முட்கள் நிறைந்தது
கண்ணைக்கவரும் டார்க் பர்ப்பிள் நிற க்ரோட்டன் வகை..ரொம்ப அழகாக இருக்கும்.இதில் பச்சை,மஞ்சள் என்று அழகான வண்ணங்கள் உண்டு.



நம்ம பூஸார் தோட்டத்தில் பூஸ் நின்று இருந்தால் அப்படியே போட்டோ எடுத்துப்போடுங்கள் என்று ஆர்டர் போட்டு இருந்தார்.ஸாதிகாவின் கார்டனுக்குள் பூஸாவது வருவதாவது,என்னை கண்டால் பதினாறு கால் பாய்ச்சலில் ஓடோடி விடும்.ஹ்ம்ம்ம்ம்ம்.....இந்திய பூஸுக்குகெல்லாம் அக்காவைக்கண்டால் பயமாக இருக்கும்.ஆனால் இந்த பிரித்தானியா பூஸ்தான் நமக்கே தண்ணீர் காட்டுகின்றது.

பூஸாரின் கட்டளைக்கிணங்கி நேற்று முழுக்க கேமராவும் கையுமாக வீட்டை சுற்றி சுற்றி வந்ததில் பக்கத்து விட்டுக்கும்பக்கத்து வீட்டின் பாசேஜில் முதுகை காட்டிக்கொண்டிருந்த பூஸ் கண்ணில் மாட்டியது.அப்படியே ஜூம் செய்து கிளிக்கியது இந்தப்படம்.அதீஸ் எஞ்ஜாய்.