May 18, 2013

தண்ணீர்..தண்ணீர்..மண் பானைகள்,,தண்ணீர் நிரப்பி வைக்கும் அண்டா,வாட்டர் பில்டர்கள் இப்படியாகப்பட்ட பொருட்கள் எல்லாம் கண்காட்சியில் வைக்கப்படும் பொருளாக மாறிவிட்டது இந்த மினரல் வாட்டர் வரவால்.கிணற்றடி நீர்,நகராட்சிகள் விநியோகம் செய்யும்குடி நீர்,தெருக்குழாயில் கிடைக்கும் குடிநீர்,லாரிகளில் கிடைக்கும் குடிநீர் இப்படி கஷ்டப்பட்டு குடிநீரைப்பெற்று,அதனை காய்ச்சி,வடிகட்டி தண்ணீர் குடிப்பதற்கு சிரத்தை எடுத்த அம்மணிகள் இன்று சல்லிசாக பணத்தைக்கொடுத்து கேன் வாட்டர் வாங்கி மிக சுலபமாக தண்ணீர் பிரச்சினையை சமாளிக்கின்றனர்.இப்படி காசு கொடுத்து வாங்கும் நீர் தரமானதுதானா?உடலுக்கு கெடுதல் விளைவிக்காது  என்பதில் உறுதி கிடையாது.தமிழ்நாட்டில் ஐம்பது சதவிகித மக்கள் இந்த மினரல் வாட்டரைத்தான் அருந்துகின்றனர்

விருந்தினர் வந்தால் குடிப்பதற்கு நீர் கொடுத்தால் “மினரல் வாட்டர் தானே”என்ற கேள்விக்கு இல்லை என்று பதில் வந்தால் முகசுளிப்புத்தான் பதிலாக கிடைக்கும் பலரிடமிருந்து.”எங்கள் வீட்டில் கார்பரேஷன் வாட்டர் எல்லாம் குடிப்பதில்லை”இந்த வார்த்தைகளில் பெருமிதம் கொள்கின்றனர் தமிழக மக்கள்.


மக்களின் மனோபாவத்தை அறிந்த கில்லாடி வியாபாரிகளுக்கு லாபநோக்கை மட்டுமே கருத்தில் கொண்டு பல்வேறு பன்னாட்டு உள்நாட்டு நிறுவனங்களுக்கும் தண்ணீர் பிசினஸில் கல்லாக்கட்டுங்கள் என்ற உரிமையை தாராளமாக வழங்கி வள்ளல் தனம் புரிந்துகொண்டுள்ளது தமிழக அரசு.

தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட மினரல் வாட்டர் நிறுவனங்கள் 700க்கும் மேல் இருந்தால் போலியான நிறுவங்கள் 2000க்கும் மேல் என்று ஆய்வுகள் கூறுகின்றது.போலி நிறுவனங்களில் அன்றாடம் ரெய்ட் என்ற பெயரில் ஒரு கண் துடைப்பை நடத்தி,இரண்டு நாட்களுக்கு மூடு விழா நடத்தி இரண்டாம் நாளே ஜகஜோராக வழக்கப்படி கல்லாகட்டும் வேலை ஆரம்பித்து விடுவது வாடிக்கை.

பத்திரிகைகளில் வந்த  செய்திகளின் அடிப்படையில் தென்னிந்திய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து வழக்கை பதிவு செய்து அங்கீகாரம் இல்லாத தண்ணீர் நிறுவனங்கள்  மீது நடவடிக்கை எடுக்கும் படி தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது.அதிரடி சோதனை நடத்தியதில் உரிமம் பெறாத 103 மினரல் வாட்டர் நிறுவங்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கைகளினால் மற்ற எல்லா  தண்ணீர் சப்ளை செய்யும் நிறுவனங்களும் மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து
தண்ணீர் சப்ளை செய்வதை நிறுத்தி விட்டது.வரும் 20 ஆம்தேதி முதல் முழு வேலைநிறுத்த போராட்டத்துக்கு தயாராகி வருகிறது.

ஒவ்வொரு இல்லத்தரசியும் இந்நிலை கண்டு அரண்டு போய் இருப்பது என்னவோ உண்மைதான்.சென்னையில் பல இடங்களில் முறையாக குடிநீர் வரி செலுத்தி வந்தாலும்,மாநகராட்சி வழங்கும் மெட்ரோ வாட்டர் வருடக்கணக்காக வருவதில்லை.பல குடியிருப்புகளில் நிலத்தடி நீர் உண்ணத்தகுதியான தரத்தில் இருப்பதில்லை.பன்னாட்டு உள்நாட்டு நிறுவங்கள்,அடுக்குமாடி குடி இருப்பில் வசிப்பவர்கள், மெட்ரோ வாட்டர் வராத மேடான பகுதிகளில் வசிப்பவர்கள் மினரல்  வாட்டரை மட்டும்தான் நம்பி வாழ்கின்றனர்.20 ஆம்தேதிக்கு பிறகுதான் முழு வேலை நிறுத்த போராட்டம் நடை பெறும் என்று அறிவித்தாலும் இப்பொழுதே தண்ணீர் சப்ளை நிறுத்தி வைக்கப்பட்டு விட்டது.அக்கம் பக்கத்து கடைகளில் ஸ்டாக் வைத்திருக்கும் தண்ணீர் கேன்களை அதிக விலை கொடுத்து வாங்கி வரும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுவிட்டனர்.அதுவும் ஸ்டாக் இருக்கும் வரையே.

அரிசி பஞ்சம் வந்த பொழுது மற்ற தானிய பொருட்களை சமைத்து உணவாக்கினர்.பாலுக்கு பஞ்சம் வந்த பொழுது அதிக விலை கொடுத்து பால் வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு பெரியவர்கள் கருப்பு நிற காபியை அருந்தி வந்த காலமும் சரித்திரத்தில் உண்டு.பீன்ஸ் விலை 100 ரூபாயானால் பீன்ஸ் பொரியல் இல்லாமலும்,பீன்ஸ் போடாத வெஜிடபிள் புலாவும் இல்லாமல் மக்களால் வாழ முடியும்.வெங்காயம் விலை ராக்கெட் வேகத்தில் ஏறுமுகம் காட்டிய பொழுது நான்கு வெங்காயம் சேர்த்து செய்யும் சமையலில் பாதி வெங்காயத்தை சேர்த்து சமையலை கச்சிதமாக முடிக்கும் திடம் வாய்ந்தவர்கள் தமிழகத்து அம்மணிகள்.ஏன் தங்கம் விலை உச்சாணிக்கு போன போது பெண் மக்களின் திருமணங்களில் சவரன் எடை கிராமாக மாற்றமாகிப்போனது.ஆனால் குடிநீருக்கே பஞ்சம் ஏற்பட்டால்...?

தண்ணீர் வந்து குற்றால அருவியாக கொட்டும் என்ற அதீத எதிர் பார்ப்பில் 30000 லிட்டருக்கு பெரிய சம்ப் ஒன்று கட்டி வருடங்கள் ஆறை கடந்து விட்டாலும் இதுவரை ஒரு சொட்டு கார்பரேஷன் தண்ணீர் வந்து விழவில்லை.துன்பத்திலும் ஒரு இன்பம் என்பது போல் கார்பரேஷன் நீர்தான் வரவில்லை என்று லாரி தண்ணீரை விலை கொடுத்து வாங்கி சம்பை நிரப்பிக்கொள்ளும் துர்பாக்கிய நிலை இல்லாமல் இறைவன் கிருபையால்  நிலத்தடி நீர் அட்ஷ்ய பாத்திரமாக விளங்கினாலும் குடிப்பதற்கு தகுதி இல்லையே?

பத்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு காலி கேன்களை எடுத்துக்கொண்டு தண்ணீருக்கும் அலையப்போகும் நிலை தண்ணீர் தண்ணீர் சினிமாவை நினைவூட்டி பீதியைக்கிளப்புகிறது.(உறவினர் இருக்கும் ஏரியா பள்ளமான பகுதியாதலால் கார்பரேஷன் நீர் சம்பில் நயாகரா நீர்வீழ்ச்சியாக கொட்டி ஓவர் ஃப்ளோ ஆகி அதனைப்பார்த்துவிட்டு மாநகராட்சி ஆட்கள் ஸ்பாட்பைனை தீட்டிவிட்டு செல்வது தனிக்கதை)

சென்னையை பரபரப்பாக்கிக்கொண்டு இருக்கும் குடி நீர் தட்டுப்பாட்டை போக்க மாநகராட்சி லாரிகளில் நீர் விநியோகம் செய்ய ஆரம்பித்தாலும் உரிமம் பெறாத தண்ணீர் கம்பெனிகள் கன ஜோராக மீண்டும் சைலண்டாக திறக்கப்பட்டு வெகு விரைவில் கல்லா கட்டி,பரபரப்பாக பேசப்பட்டு வரும் தண்ணீர் தட்டுப்பாடு வெகு விரைவில் நீங்கிவிடும்  என்பது அனைவரும் அறிந்த ரகசியம் .25 comments:

Anonymous said...

''...”எங்கள் வீட்டில் கார்பரேஷன் வாட்டர் எல்லாம் குடிப்பதில்லை”இந்த வார்த்தைகளில் பெருமிதம் கொள்கின்றனர் தமிழக மக்கள்...'' not only தமிழகம் but the all World....
Vetha.Elangathilakam.


Asiya Omar said...

//குடிநீருக்கே பஞ்சம் ஏற்பட்டால்...?//
நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
நல்ல அலசல் தோழி..

Anonymous said...

''...”எங்கள் வீட்டில் கார்பரேஷன் வாட்டர் எல்லாம் குடிப்பதில்லை”இந்த வார்த்தைகளில் பெருமிதம் கொள்கின்றனர் தமிழக மக்கள்...'' not only தமிழக மக்கள் but all World also.
Vetha.Elangathilakam

Ranjani Narayanan said...

நாங்கள் சென்னை அண்ணா நகரில் இருந்தபோது நாங்கள் குடிநீருக்குப் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. எங்கள் நண்பர் ஒருவரின் வீட்டிற்குப் போய் குடிதண்ணீர், சமைக்கக் நீர் எடுத்து வருவோம். உங்கள் கட்டுரை படிக்க மிகவும் திகிலாகத்தான் இருக்கிறது.

கோமதி அரசு said...

பெண் மக்களின் திருமணங்களில் சவரன் எடை கிராமாக மாற்றமாகிப்போனது.ஆனால் குடிநீருக்கே பஞ்சம் ஏற்பட்டால்...?//

குடிநீருக்கு பஞ்சம் ஏற்பட்டால் மிக கஷ்டம்தான் ஸாதிகா.
அந்த நிலை மாற மழை பெய்தால் தான் முடியும். தண்ணீர் தட்டுபாடு நீங்க இறைவன் அருள்புரியவேண்டும்.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி வேதா இலங்காதிலகம்.

ஸாதிகா said...

மிக்க நன்றி தோழி ஆசியாபரபரப்பான வாழ்க்கை சூநிலையில் எது சுலபமாக கிடைக்கிறதோ அதனை சுலபமாக ஏற்றுக்கொள்கிரோம்.மெனக்கெட,யோசிக்க நேரமில்லாமல்.இந்த குடிநீர் தட்டுப்பாடு வந்து இருக்கும் தருணத்திலாவது சிந்தித்து மாற்றம் கண்டு..ஆரோக்கியமான நீர் அருந்து ஆரோக்கிய வாழ்கையை மேற்கொள்ளவேண்டும்

ஸாதிகா said...

எங்கள் நண்பர் ஒருவரின் வீட்டிற்குப் போய் குடிதண்ணீர், சமைக்கக் நீர் எடுத்து வருவோம். //இந்த அனுபவம் நிறைய் என்னை வாசிகளுக்குண்டு ரஞ்சனிம்மா.வரவுக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

என்ன மழை பொழிந்தாலும் எங்கள் தெருவுக்கு குடிநீர் வரவே வராது கோமதிம்மா:( கருத்துக்கு நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தண்ணீர் பற்றிய நல்லதொரு அலசல்.

தண்ணீர் இல்லாவிட்டால் கண்ணீர்தான்.

பகிர்வுக்கு நன்றிகள்.

Yaathoramani.blogspot.com said...

நானும் சென்னையில் இருந்து
இந்தக் கஷ்டத்தை நேரடியாக அனுபவித்தேன்
எனவே தங்கள் கவலையை முழுவதும்
உணர முடிந்தது
என்ன செய்யப் போகிறது அரசு ?
விரிவான அருமையான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

நல்லதொரு அலசலுக்கு ஜசாக்கல்லாஹ் அக்கா..

வஸ்ஸலாம்..

ஸாதிகா said...

தண்ணீர் இல்லாவிட்டால் கண்ணீர்தான்.//ரைமிங்கா இருக்கு வி ஜி கே சார்.மிக்க நன்றி.

ஸாதிகா said...

அலைக்கும்சலாம் தம்பி ஆஷிக்,கருத்துக்கு மிக்க நன்றி.

Angel said...

நல்ல விரிவான அலசல் ..
விடுமுறை நாட்கள் மேலும் இப்போ அங்கே வெயிலும் அதிகமாச்சே இந்த நேரத்தில் ஸ்ட்ரைக் என்றால் மக்கள் கஷ்டபடுவாங்களே ,

இமா க்றிஸ் said...

வீட்டில் கிணறு இருந்தும் நீருக்கு அலைந்த காலம் ஒன்றிருந்தது. நீர்ப்பஞ்சம் கொடுமை.

பால கணேஷ் said...

சுடுகின்ற நிஜம் இதுதான் இன்று! கவலை கொண்டு தீர்வு சொல்ல வேண்டியது அரசாங்கம்தான்! ஆனால்... பாதிக்கப்படுவது என்னவோ ஆஸ் யூஷுவல் பொதுஜனம்தானே...!

Radha rani said...

நிலத்தடி நீர் குறைவதற்கும் குடி நீர் பற்றாக்குறைக்கும் மக்கள்தான் காரணம்..பசுமையை ஆதரித்தால் இவ்வளவு கஷ்டம் ஏது..? இந்திய நாட்டின் வாழ்வாதாரமே விவசாயம்தான்..90% விவசாயம் 30% சதவிதமாக குறைந்து விட்டது..பசுமையை ஆதரித்தால் மழையும் நன்றாக பொழியும். 2 ஏக்கர் நிலம் வைத்திருந்தவர்களும் சரி 100 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்களும் சரி விவசாயத்தை கை விட்டு வேறு தொழிலில் கவனத்தை செலுத்தியதால் இந்த கதி. வவசாய நிலங்களை அழிக்காமல் விவசாயம் மட்டும் செய்ய அரசாங்கம்தான் மக்களை ஊக்குவிக்க வேண்டும்.

ஹுஸைனம்மா said...

சிரமங்களை நல்லா விவரிச்சு எழுதிருக்கீங்க. அருமையான எழுத்து.

இன்னிக்கு ஸ்ட்ரைக் முடிஞ்சிடுச்சுன்னு வாசிச்சேன். சீர்கேடுகளைக் கண்டித்து, நடவடிக்கை எடுத்தா ஸ்ட்ரைக் செய்து, மக்களைத் துன்புறுத்துவது சரியா? இதைக் கண்டித்து, தண்டிக்க வேண்டிய அரசு ஒன்றும் செய்யாமல் இருப்பது வேதனை!

இந்த மாதிரி சமூகக் கட்டுரைகள் அடிக்கடி எழுதுங்கக்கா. :-)

Anonymous said...

enga pondicherryla rendu thannikkum panjam illa..ethirkalathil nichayam varum..ISI mutthirai vangum varaithan water can companygal konjam lab testing ellam ozhungaga seyvargalaam..athan piragu satharana thanneraithan virkirargal..ithai water companyil velai seyyum en nanban oruvane kooriyirukkiran..

முற்றும் அறிந்த அதிரா said...

என்னாச்சு ஸாதிகா அக்கா தண்ணி வேணுமோ? என்ன கொடுமை சாமி... சாப்பாடில்லாமல்கூட இருந்திடலாம், தண்ணியில்லாமல் போனால்ல்?...

ராமலக்ஷ்மி said...

அச்சுறுத்தும் நிதர்சனம். நல்ல பதிவு.

மாதேவி said...

தண்ணீர் கண்ணீர் காவியமாகிறது. எங்கே போய்முடியப்போகின்றதோ....

சசிகலா said...

இருக்கும் தண்ணீரையும் பயன்படுத்தாத நிலை எங்களுடையது லோ பவர் அதனால் மோட்டார் போட இயலாமல் படும் அவஸ்தை கொஞ்ச நஞ்சமல்ல என்ன செய்வது? நல்ல அலசல்.

Seeni said...

vethanaithaan ....