September 29, 2011

தூங்கிக்கொண்டிருக்கும் சென்னை மின்சாரவாரியம்.“சார்,கரண்ட் இல்லை சார்.”
“பார்த்துடலாம்.எந்த ஏரியா”

“என்னையா நினைச்சிக்கொண்டு இருக்கீங்க.இது என்ன சிட்டியா?இல்லை பட்டிதொட்டியா .இப்படி மணிக்கணக்கிலே கரண்ட் கட் இருக்கு?”
“கொஞ்சம் பொறுங்க சார் இன்னும் ஒரு மணி நேரத்திலே வந்துடும்”

“எப்போதான் சார் கரண்ட் வரும்”
“இதோ ஆஃப் அன் அவரில் வந்துடும்”

“சார் நான் மினிஸ்டர்........ செகரட்ரி பேசறேன் .ரெண்டு மணிநேரமா கரண்ட் இல்லை.”
“மினிஸ்டர் வீட்டிலேயே கரண்ட் இல்லை சார்.வந்துடும்.”

“சார்..இப்படி லோ வோல்டேஜ் கொடுத்து அவஸ்தை படுத்துவதற்கு மொத்தமா ஆஃப் பண்ணி போட்டுடுங்க”
“சரிபண்ணிடலாம்ங்க”

மின்சாரவாரியத்துக்கு வரும் போன் கால்களும்,அதற்கு அவர்கள் கொடுக்கும் பதில்களும்தாம் மேற்கண்டவை.

700 சதுர அடி வீட்டிற்கு 3 டன்னில் ஏசி வைத்தால் என்னவாகும் என்று மக்களை கேள்விகேட்கின்றனர்.

அடிக்கடி நாளிதழ்களில் அவரவர்கள் ஏரியாக்களில் மின் தடை பற்றியும்,லோ வோல்டேஜினால் உள்ள பிரச்சினைகளையும் வாசகர்கள் கடிதத்தில் எழுதி வருவது பிரசித்தம்.இப்பொழுது எங்கள் ஏரியாவிலும்.

தலைக்கு மேல் சுழலும் ஆமை வேகம்,நத்தை வேகத்தில் சுழலும் மின் விசிறி திடுமென ராட்சச வேகத்தில் உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..என்று சப்தமாக சுழலும் பொழுது மின் விசிறி கழன்று தலையில் விழுந்து விடுமோ என்ற கிலி வருகின்றது.

பவர் பிளக்சுவேசனால் அணைந்து அணைந்து எரியும் ஏஸிக்களால் நாளிதழகளில் வந்த ஏஸி விபத்துக்கள் மனக்கண்ணில் வந்து தூக்கத்தை தொலைக்கும் நாட்கள் தொடர்ந்து கொண்டுள்ளன.

டியூப் லைட் மின் மினிப்பூச்சி போல் மின்னிக்கொண்டுள்ளதே தவிர முழுதாக எரிந்து வெளிச்சம் தர ஸ்ட்ரைக் பண்ணுகின்றது.

ஓடிக்கொண்டு இருக்கும் பம்ப் செட் லோ வோல்டேஜினால் காயில் ,புகைந்து,எரிந்து புதிய பம்ப்செட் வாங்கி பொருத்தும் நிலை அனைவருக்கும் வந்து கொண்டுள்ளது.மின்சார வாரியம் புண்ணியத்தில் பம்ப்செட் வியாபாரம் அமோகமாக நடைபெற்றுக்கொண்டுள்ளது.

ஸ்டெபிலைசர் இருப்பதால் சில பல பொருட்கள் தப்பி வந்தாலும் ஃபிரிட்ஜ்ஜில் உள்ள பொருட்கள் கெட்டுப்போய் குப்பையில் கொட்டும் இல்லத்தரசிகள் வயிறெரிந்து போகின்றனர்.

ஒரு சிறிய கூட்டத்தை திரட்டிக்கொண்டு நேரிலேயே மின்சார வாரியத்திற்கு சென்றாலோ அலட்சியமான பதில்.

மக்கள் அதிகளவில் டாச்சர் கொடுத்தால் பெயருக்கு மின்சாரவாரியத்தில் இருந்து ஒரிரண்டு பேர் வந்து பார்த்து விட்டு ”சரியாகி விடும்”என்ற வார்த்தைகளில் பொய்தான் மிச்சம்.

இன்று சரியாகி விடும் நாளை சரியாகி விடும் என்று எதிர்பார்த்து ஏமாந்து மக்கள்தான் கேணையர்களாகிக்கொண்டுள்ளனர்.

மாநிலத்தலை நகருக்கே இந்த கதி என்றால் கடை நிலை கிராமங்களின் கதி....?

சென்ற ஆட்சி மீண்டும் வராததற்கு மின் தடையும் ஒரு முக்கிய காரணமாக இருந்தும் இந்த ஆட்சியாளர்கள் விழித்துக்கொள்ள வில்லையே?

வசதி உள்ளவர்கள் வீடுகளில் யூ பி எஸ் வைத்து மின்சாரம் இல்லாத சமயங்களில் உபயோகித்துக்கொள்ளவும்,ஸ்டெபிலைசர் வைத்து லோ வோல்டேஜை சமாளிக்கவும் மக்கள் தயாராகி வருகின்றனர்.யூ பி எஸ்,ஸ்டெபிலைசர்கள் எல்லா நேரத்திற்கும் அனைத்து மின்சாதனப்பொருட்களுக்கும் பொருந்தி வருமா என்று சொல்ல இயலாது.இது ஒரு புறம் நடக்க மின்சார சேமிப்பு பேர்வழி என்று சில சாலைகள்,தெருக்களில் தெருவிளக்கைகூட அணைத்து விடுவதால் சமூகவிரோதிகளுக்கு கொண்டாட்டமாகிப்போய் விட்டது.

போகின்ற போக்கைப்பார்த்தால் இனி தாத்தா பாட்டி காலத்தில் இருந்ததைப்போன்று சாயங்காலம் ஆனால் ஹரிக்கோன் லைட்டை பளிச் என்று துடைத்து,கெரஸின் நிரப்பி தீப்பெட்டியுடன் தயாராகவேண்டும்.அது போல் பனை ஓலை விசிறிகளும் தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் போலும்.

ஜெய்ப்பூரை பின்க் சிட்டி என்ற அடைமொழியுடன் அழைப்பதைபோல் வெகு விரைவில் சென்னைக்கு டார்க் சிட்டி என்ற அடை மொழி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

வெளிநாடுகளில் நொடிப்பொழுதேனும் மின் தடை இன்றி நிம்மதியாக வாழும் ஜீவன்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள்தான்.

September 18, 2011

விட்டுக்கொடுத்தல்”மீரா..ஆஃபீஸில் இருந்து வந்து பத்து நிமிஷமாகுது.இன்னுமா காபி ரெடியாகவில்லை”
சதீஷ் எரிந்து விழுந்தான்.

அவசர அவசரமாக காபி டபராவுடன் அடுக்களைக்குள் இருந்து வெளிபட்டாள்.’ஆஃபீஸில் இருந்து வழக்கத்தை விட ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்தால் காஃபி எப்படி ரெடியாகி இருக்கும்’மீராவுக்கு கேட்கத்தோன்றினாலும் சதீஷின் முகம் காட்டும் கோபத்தைக்கண்டு வாயைக்கட்டுப்படுத்திக்கொண்டாள்.

ஆஃபீஸில் உள்ள பிரச்சினையை வீட்டிற்கு கொண்டு வந்து கோபத்தின் உச்சத்தில் கணவர் இருப்பது புரிந்தது.

“என்னை என்ன சர்க்கரை வியாதிக்காரன் என்றா நினைச்சே”கோபம் தலைக்கேற காபி டம்ளரை தூக்கி அடித்தவனை விக்கித்துபோய் பார்த்தாள் மீரா.அவசரத்தில்,கணவன் காபி கேட்டு பட படத்ததில் பதறிப்போய் காபிக்கு சர்க்கரையே போட மறந்து விட்டாள்.சதீஷோ சகிப்புத்தன்மையின்றி,பொறுமை இன்றி ஆர்ப்பாட்டம் செய்கின்றான்.கணவன் மனைவி உறவுகளுக்குள் இப்பாற் பட்ட சின்ன சின்ன பிரச்சினைகள்தான் பெரிய பிளவுக்கு வித்திடுகின்றது.

அலுவலகத்தில் பிரச்சினை,நண்பர்களால் தொந்தரவு,உறவுகளுக்குள் விரிசல்,கடன் தொல்லை,பணம் பற்றாக்குறை,தன் மீது கூறப்படும் புகார்கள்,உடல் நலத்தில் பிரச்சினை,பெற்ற பிள்ளைகளால் கவலை,சந்தேகம்,கவுரவத்துக்கு குந்தகம்,இப்படி மனம்,உடல்,பணம்,சூழல் சார்ந்த குழப்பங்கள்,பிரச்சினைகள் மனிதனை அண்டும் பொழுது மனித மனம் பாரம் மிகுந்து அதனால் சிந்திக்கும் தன்மையும்அற்றும்,உச்சகட்ட கோபமும்,மன அழுத்தமும் ஏற்படுகின்றது.

இதனை கட்டுப்படுத்தாமல்,கட்டுப்படுத்த தெரியாமல்,கட்டுப்படுத்த விரும்பாமல் வெறுப்புகளை உறவுகளிடம்,நட்புக்களிடம் உமிழும் பொழுதுதான் பிரச்சினைகளை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கின்றான் மனிதன்.

நட்புகுள்ளும்,உறவுக்குள்ளும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை,சகிப்புத்தன்மை இன்றி இருந்தால் நாளடைவில் அது பெரும் விரிசல் ஏற்பட்டு பெரும் விபரீதத்தில் வந்து முடியும் வாய்ப்பே அதிகம்.
இதனால் மன அமைதி கெட்டு,நிம்மதி இழந்து நட்புக்களை,உறவுகளை இழந்து மனிதன் தனிமரமாகி விடும் வாய்ப்பும் அமைந்து விடும்.

தேவையற்ற சந்தேகங்கள்.கேள்விகள்,குற்றம் சுமத்துதல்.ஒருவரை மற்றவர் தூற்றுதல் போன்ற காரணிகளால் மனிதமனம் கருத்துவேறுபாடுகளுக்குட்படுகின்றது.கருத்து வேறுபாடுகள் ஏற்படும் பொழுது மன அழுத்தம் ஏற்படுகின்றது.மன அழுத்தத்தினாலேயே பெரும் பிரச்சினைகள்,குடும்ப விரிசல்கள்,விபரீதங்கள் போன்ற விரும்பத்தகா சூழ்நிலைகள் வாழ்க்கையில் ஏற்பட்டு வாழ்க்கையை சின்னாப்பின்னப்படுத்தி விடுகின்றது.

“நீங்கள் முன்னே போல் இல்லை”என்று பாசத்துடன் உங்கள் முன் விரல் நீட்டி கேட்கும் பொழுது,

“முன்பு போல் இப்ப அடிக்கடி வர்ரதே இல்லை”உரிமையுடன் உங்களிடம் கேள்வி கேட்க்கப்படும் பொழுதும்,

”என்ன முகத்தில் சிரிப்பைக்காணோம்.அடிக்கடி உம்மணாமூஞ்சாகி விடுகின்றீர்களே”என்று பாசத்துடன் உங்களிடம் வினா எழுப்பப்படும் பொழுதும்,

“இப்பல்லாம் உங்களை புரிந்து கொள்ளவே முடியவே இல்லை”என்று உங்களிடம் உள்ள அக்கரையில் கேட்கும் கேள்விகளின் பொழுதும்

“என்ன ஜி டாக்கில் எப்பவும் ஆஃப் லைனில் காட்டுறீங்க”என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தும் பொழுதும்

விழித்துக்கொள்ளுங்கள்.கேள்விகேட்போரின் விட்டுக்கொடுக்கும் தன்மை குறைவதை புரிந்து கொள்ளுங்கள்.அப்பொழுதே மனம் விட்டு பேசி சிக்கல்கள் விழுவதில் இருந்து தப்பித்துக்கொள்ளுங்கள்.உறவுகளுக்குள்ளும் நட்புகளுக்குள்ளும் சுமூக நிலை நிலவுவதற்கு வழிவகுங்கள்.

விட்டுக்கொடுத்தலும்,சகிப்புத்தன்மையும்,விரிசல் இல்லா உறவுகளும்,புரிதல் கொண்ட நட்புக்களும் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதவை.வாழ்கையை சுகப்படசெய்பவை.September 12, 2011

தாம்பூலமும் நானும்.தாம்பூலமும் நானும்.

சின்ன வயது முதல் வெற்றிலை என்றால் மிகவும் பிரியம்.பசேல் என்ற வெற்றிலையின் காம்பை கிள்ளி,(சிலர் நரம்பை கூட கிள்ளி எறிவார்கள்)வெற்றிலையை ஈரம் போக துடைத்து ரோஸ் நிற பன்னீர் சுண்ணாம்பை சன்னமாக தடவி,வாசனை பாக்கு,விறு விறுப்பான இனிப்பு சட்னி,குல்கந்து இன்ன பிற ஐட்டங்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வைத்து மடித்து பீடா பிரியாமல் இருப்பதற்காக நடுவில் ஒரு கிராம்பை குத்தி அம்மா தரும் வரை பொறுமையாக கண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டு அம்மா தந்ததும் பீடாவை வாங்கி வாயில் அதக்கிக்கொண்டு தெருவுக்கு ஓடும் சந்தோஷம் இருக்கின்றதே.அடடா!!!!!!!!!!!!!

அந்தக்கால பல் இல்லாத பாட்டி மார்கள் வெற்றிலையை உரலில் இட்டு இடித்து சாப்பிடுவார்கள்.அது தனி டேஸ்ட்.பாட்டி எப்படி பொருட்கள் போட்டு இடித்து சாப்பிடுவார்கள் என்று கவனித்து நாங்களும் சிறிய உரலில் நங் நங் என்று இடித்து வெற்றிலையை பேஸ்ட் ஆக்கி சாப்பிட்டு இருக்கின்றோம்.தூரமாக சென்று இருக்கும் பாட்டி என்னடா இது உரல் உலக்கை இடிக்கும் சப்தம் கேட்கின்றதே என்று ஓடி வருவதற்குள் அரையும் குறையுமாக இடிபட்ட வெற்றிலையை அள்ளி வாயில் திணித்துக்கொண்டு சிட்டாக பறந்து விடுவோம்.

என் சிறுமி பருவத்தில் நடக்கும் கல்யாணம்,விஷேஷங்களில் காபி டீயுடன் வெற்றிலையும் கொடுப்பார்கள்.வெற்றிலை சாப்பிடுவதற்காகவே கல்யாணவீடுகளுக்கு அலைவதை நினைத்தால் இப்பொழுதும் சிரிப்பு வருகின்றது.

உறவினர்கள் வீடுகளுக்கு அம்மாவுடன் தொற்றிக்கொண்டு போனால் அங்கு நடக்கும் டீ டிபன் உபசாரத்திற்கு பிறகு நடக்கும் தாம்பூல உபசாரத்துக்காகவே அம்மாவுடம் தொற்றிக்கொண்டு சென்ற காலமும் உண்டு.பெரியவர்கள் ஜாலியாக பேசிக்கொண்டிருக்க நைசாக தாம்பூலத்தட்டுடன் ஒரு ஓரமாக எஸ்கேப்தான்.

இப்படியாக இருந்த தாம்பூல மோகத்தைப்பார்த்து பெரியவர்கள் வெற்றிலை சாப்பிட்டு வாய் சிகப்பானால் மாடு குத்தும் என்று பயமுறுத்தலையும்,வாய் கோணிப்போகும் என்ற பயமுறுத்தலையும் புறந்தள்ளிவிட்டு தாம்பூலம் மென்ற காலங்கள் தான் எத்தனை ?

வீட்டிற்கு தயிர் கொண்டு வரும் ஆயா ஒருவர் வருவார்.தயிரை அளந்து நாம் கொடுக்கும் பாத்திரத்தில் விட்டு விட்டு சில்லரை எடுப்பதற்காக சுருக்குப்பையை திறந்து சில்லரையை தந்து விட்டு,சில்லரை காசுகளுடன் கலந்து கட்டிய பாக்கு,வெற்றிலை சுண்ணாம்பு,புகையிலை சேர்த்து சாப்பிடுவதை ஆச்சரியமாக பார்த்து இருக்கின்றோம்.அவர் எங்களைப்போல் வாசனை பாக்கு,வாசனையூட்டிகள்,இனிப்பு கலந்து சாப்பிடுவதில்லை.நாலைந்து வெற்றிலையை எடுத்து மடியில் துடைத்துக்கொள்ளுவார்.ஒரு முழு வெட்டைப்பாக்கில் இரண்டு மூன்றை எடுத்து கடைவாய்பற்களால் நன்றாக மெல்லுவார்.வாய் ஒரு பக்கம் மென்று கொண்டிருக்க கைகள் ஜரூராக வேலை செய்து கொண்டு இருக்கும்.

காம்பை நீக்கி,சுண்ணாம்பு தடவி கிட்ட கிட்ட அரை டசன் வெற்றிலைக்கு மேலும் ஒவ்வொன்றாக வாயில் தள்ளி,கடைசியாக இரண்டு விரல்களால் பன்னீர் புகையிலையை கிள்ளி வாயில் போட்டுக்கொள்வார்.வாய் எப்பொழுதும் சிகப்பு நிறத்தில் அவருக்கு இருப்பது எங்களுக்கெல்லாம் பெருத்த ரசனையாக இருக்கும்.

“ஆயா..ஆயா..கடைசியா வைக்கோல் மாதிரி ஒன்றை வாயில் போட்டியே அது என்ன?”

“அழுவா..அழு போயிழை”

“எதுக்கு ஆயா இதை வெற்றிலையோட சேர்த்துப்போடுறே?”

“போயிழை சேழ்த்து வெழ்ழிலை போழ்ட்டால் சூப்பழா இழுக்கும்.உழக்கு வேழுமா?”

வாங்கி சாப்பிட ஆசை இழுத்தாலும் அழுக்கு சுருக்குப்பையும் அதில் இருக்கும் அழுக்கு நோட்டுகளும் ஞாபகத்திற்கு வர தலை பலமாக இடமும் புறமுமாக அசைத்து விட்டு “இந்த புகையிலை எங்கே கிடைக்கும் ஆயா”
மெல்ல ஆர்வத்துடன் நாங்கள் கேட்க,

“பூச்சை கழை பக்கத்தில் மழ்ழை காழ்கா கழையில் கிழைக்கும்”

வேறு என்ன?அடுத்த பத்தாவது நிமிஷம் நானும்,என் சகாக்களும் பூச்சைக்கடை பக்கத்தில் உள்ள மண்டைக்காக்கா கடையில்.வெற்றிலை,பாக்கு,சுண்ணாம்பு புகையிலை வகையாறாக்களுடன் பட்டையை கிளப்பினோம்.

தயிர்க்கார ஆயா செய்வதைப்போல செய்து புகையிலையுடன் வெற்றிலையை ஒரு கடி கடிப்பதற்குள் புரை ஏறி அதனால் கத்திய கத்தலில் வீட்டில் மதியத்தூக்கம் போட்டுக்கொண்டிருந்த அத்தனை பேரும் ஒருமித்து ஓடி அலறி அடித்துக்கொண்டு வர கண்ணீரும் கம்பலையுமாக நாங்கள் அலற ..விஷயம் தெரிந்து பிரம்படியும்,நறுக் என்ற குட்டும்,நங் என்ற அடியும்,பளிச் என்ற கிள்ளும்,டும் என்ற குத்தும் பொல பொலவென்றவசவுகளும் இலவசமாக எக்கசக்கமாக வாங்கிக்கட்டிக்கொண்டதில் வெற்றிலையை மறந்தே போனோம் பல காலமாக.

இப்பொழுது வெற்றிலை போட்டால் கண்டிப்பதற்கு ஆள் இல்லை என்ற தைரியத்தில் ஹோட்டல்களில் சாப்பிட்டாலும் சாப்பிடவிட்டாலும் ஹோட்டல் வாசலில் குடை நிழலில் நிற்கும் பீடாக்கடைக்காரை பார்த்தால் கை ஹாண்ட் பேக்கை திறக்காமல் இருக்காது.

சென்னை முழுதும் பல பிராஞ்ச்கள் இருக்கும் காரைக்குடி ரெஸ்டாரெண்டில் கிடைக்கும் இலவச தாம்பூலத்திற்காவே காரைக்குடி ரெஸ்டாரெண்ட்தான் என்று ஒற்றைக்காலில் நின்று அங்கு சாப்பிட செல்லுவோம்.

சாப்பிட்டு அவசர அவசரமாக கை கழுவி டிஷ்யூவில் துடைத்துக்கொண்டு வேகமாக தாம்பூலம் இருக்கும் பக்கமாக எஸ்கேப்.அவசர அவசரமாக வெற்றிலையை ஒரு ரவுண்ட் கட்டி விட்டு மீண்டும் சாப்பிடும் இடத்தில் அமர்ந்து கொள்ளுவேன்.பில்லை எல்லாம் கட்டி விட்டு வெளியேறுகையில் அடுத்த ரவுண்ட் தாம்பூலம்.வீட்டாட்கள் “இனி உன் தலையைக்கண்டாலே ஹோட்டல் காரன் தாம்பூலத்தட்டை எடுத்து உள்ளே வச்சிடுவாங்க”என்று சிரிப்பார்கள்.

நுங்கம்பாக்கம் சங்கீதா ரெஸ்டாரெண்டுக்கு பக்கத்தில் இருக்கும் கல்கத்தா பான் ஷாப் பிரசித்தம் .இங்குள்ள பீடா கடையில் கிடைக்கும் பீடா விலையைப்போலவே சுவையும் அதிகம்.

சின்ன வயதில்தான் தாம்பூல ஆசைக்கு தடா.இப்போ என்ன கவலை என்று உற்சாகமாக வெற்றிலை மணக்க மணக்க வலம் வந்த பொழுதுதான்

என் மகன் சின்ன கிஃப்ட் பார்சலை நீட்டினார்.

”என்னப்பா”

“பீடாவுக்கு பதில் இதனை யூஸ் பண்ணுங்கம்மா’

”ஏன்பா..இது என்ன?பீடா போட்டால் என்ன?”

“நீங்க பீடா போடுவது ஒரு மாதிரியாக உள்ளது.ஹெல்துக்கு நல்லதில்லை.ஸோ..இதை இனி யூஸ் பண்ணுங்கம்மா”

’அது என்ன வெற்றிலைக்கு மாற்றாக..”

யோசித்த படி ரேப்பரை பிரித்து கையில் எடுத்தால் அடிக்கின்ற சிகப்பு நிறத்தில் ஒரு ரெவ்லான் லிப்ஸ்டிக்.

நான் இனி பீடான்னு உச்சரிக்கக்கூட செய்வேன்ங்கறீங்க????????

டிஸ்கி:என் பீடாவுக்கு உற்ற துணையான வாசனை பாக்கு செய்முறையை இங்கே பார்த்து விரும்பினால் நீங்களும் பாக்கு தயாரித்து சாப்பிடவும் செய்யலாம்.சாப்பிட்டு வீட்டில் வாங்கிக்கட்டிக்கொண்டால் கம்பெனி பொறுப்பில்லை.வியாபாரமும் செய்யலாம்.லாபத்தில் கம்பெனி பங்கு கேட்காது.
September 5, 2011

ஆபிதா டீச்சர்


நான் நடுநிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சமயம்.”ஏர்வாடியில் இருந்து புதுசா டீச்சர் வர்ராங்களாம்”அதுதான் என் வகுப்பறையில் மாணவர்களுக்கிடையே ஹாட் டாபிக்.புது டீச்சருக்காக மிகுந்த எதிர் பார்ப்புடன்,வெகு ஆவலாக,வழிமேல் விழி வைத்து காத்திருந்தோம்.ம்ஹும்..புது டீச்சர் வந்த பாடில்லை.

“இந்த புது டீச்சர் எப்படி இருப்பாங்க”
“ரங்க நாதன் சார் மாதிரி இருந்துட்டா”
ரங்க நாதன் வாத்தியார்(பெயர் மாற்றப்பட்டுள்ளது)பிரம்பால் அடி வாங்காதவர்கள் இருக்கவே முடியாது.சிகப்பு நிற முட்டைக்கண்களை விழித்து,நாக்கை துருத்தி,விரல்களை மடக்கி ”நச்”என்று தலையில் வைத்த குட்டு இந்த நொடிவரை அவர் கையால அடி வாங்கியவர்கள் மறந்து இருக்க மாட்டார்கள் என்பது என் கணிப்பு.

“ஐயோ..அப்படி இருந்தாங்கன்னா அடுத்த வருஷமே இந்த ஸ்கூலை விட்டு விலகிடுவேன்”
ஆவலை கட்டுப்படுத்த முடியவில்லை.

மாணவ மாணவிகள் மத்தியில்
போர்டில் இலக்கணத்தை எழுதிக்காட்டிக்கொண்டிருந்த மிஸ்ஸிடம் ”மிஸ் மிஸ்”என்று குரல் கொடுத்து திரும்ப வைத்து ஆட்காட்டி விரலை மட்டும் நீட்டி பரிதாபமாக நின்றிருந்தோம்.

சாக்பீஸ் துகளை ஊதிய படி எரிச்சலுடன் உறுத்துப்பார்த்த மிஸ் புறங்கை காட்டி போகலாம் என்பதைப்போல் சைகையை வெறுப்புடன் வெளிப்படுத்த கண்டு கொள்ளாத நாங்கள் பாத்ரூம் இருக்கும் பக்கத்தை தவிர்த்து எதிர் கோடியில் ஹெட்மாஸ்டர் ரூம் பக்கம் சென்றோம்.

அங்கு புது டீச்சர் தரிசனம் கிடைக்காதா என்ற நப்பாசையில்.ம்ஹும்...ஹெட்மாஸ்டர் காந்திதாத்தா கண்ணாடி வழியே பைலை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தார்.ஏமாற்றத்துடன் நழுவினோம்.

இண்டர்வல்,லஞ்ச் டைம் எல்லாம் முடிந்து,மாணவர்களில் புது டீச்சர் பற்றிய முணு முணுப்பு ஓரளவு ஓய்ந்து,மறந்து இருந்த வேளை...

கிளாஸ் ரூமுக்கு மெர்குரி லைட் போட்டாற்போன்ற ஒரு வெளிச்சம்...
நெடிய ஒல்லியான உருவம்,ஆளை அசரடிக்கும் பளீர் என்ற அப்பொழுதுதான் சலவை செய்து வந்தாற்போன்று அசத்தலான நிறம்,பெரிய கருப்புநிற பிரேம் இடப்பட்ட அழுத்தமான மூக்கு கண்ணாடி,கைதேர்ந்த ஓவியன் மிக்க கருத்துடன் வரைந்த ஒரு பெண்ணோவியமாக நின்று இருந்த புது டீச்சரை பார்த்தத்தில் அத்தனை மாணவ மாணவியர்களுக்கும் ஒரே பரவசம்.மொத்தத்தில் பசி படத்தில் வரும் ஷோபாவைப்போன்ற் தோற்றம்...

உருவத்தைப்போன்றே அமைதியான குணம்,பரிவான வாஞ்சை,சட்டென்று புரியும் படி பாடம் நடத்தும் பாங்கு,அதே நேரம் அதீத கண்டிப்பு என்ற பல் கலவையுடன் பரிவாய் இருந்த ஆபிதா டீச்சரின் வரவு மாணவர்களுக்கு மிகவும் நிறைவாகவும்,சந்தோஷமாகவும் இருந்தது.

தினம் ஆசிரியருக்கு உரிய மெரூன் நிற பிளைன் மடிப்பு கலையாத காட்டன் சேலை,அதனை சற்றும் கலையாத வண்ணம் தலையில் முக்காடாக சுற்றி இருக்கும் பாங்கு,காண்ட்ராஸ்டாக வெள்ளை நிற ஜாக்கெட்,அதே கம்பீரத்தைக்கூட்டிக்காட்டும் கண்ணாடி,கையில் கருப்பு பட்டை கைக்கடிகாரம் என்று தினமும் அன்றலர்ந்த ரோஜாவாக காட்சி தரும் ஆபிதா டீச்சரின் செல்லப்பிள்ளையாகிப்போனேன் சொற்பநாட்களில்.

உரிமையுடன் அவரது வீட்டிற்கு செல்வதும்,புரியாத பாடங்களுக்கு விளக்கம் கேட்பது,பரீட்சை நாட்களில் ஸ்பெஷல் பீஸ் இல்லாமல் டியூஷன்,அவர் தருவதை சாப்பிடுவதும்,அவரிட்ட வேலைகளை உவகையுடன் செய்வதும்,வீட்டில் அம்மாவிடம் கேட்டு பட்சணங்கள் வாங்கி டீச்சருக்கு தந்து மகிழ்வதுமாக அந்த பள்ளியில் படித்து முடிக்கும் வரை மிக சந்தோஷமாகவே கழிந்தது நாட்கள்.

டீச்சரின் திருமணம்,குழந்தை பிறப்பு,புது வீடு கிரஹப்பிரவேசம் என்று ஒவ்வொரு வளர்ச்சியையும் நானும் வளர்ந்து கொண்டே பார்த்துக்கொண்டிருந்தேன்.

வாழ்க்கை சக்கரம் உருண்டோடிய வேகத்தில் டீச்சரின் வாழ்வில் எத்தனை எத்தனையோ சோகங்கள்.கர்ப்பவாய் வாய் புற்று நோயுடன் போராடி,மருத்துவ உதவியுடன் தனக்கே உரித்தான தன்னம்பிக்கையுடன் புற்றை வென்று நிம்மதியாக இருக்கையில் மீண்டும் வாழ்வில் விதி குரூரமாக விளையாடியது.இப்பொழுது வந்திருந்தது மார்பக புற்று நோய்.எத்தனையோ மாணவ மாணவிகளின் கல்விக்கண்களை திறந்து வாழ்வில் வெற்றி பெற தூண்டுகோலாய் இருந்தவர் இந்த மார்பக புற்றுநோயையும் எதிர்த்து போராடி இறைவன் உதவியால் வெற்றி கொண்டார்.

இன்றும் பல பேரன் பேத்திகள் கண்டிருந்தாலும் இத்தனை வாழ்கை சூறாவளிகளை சந்தித்தாலும்,அன்று பார்த்த ஆபிதா டீச்சரை இப்பொழுது பார்த்தாலும் முதல் நாள் பார்த்த அதே ஆபிதா டீச்சர் தோற்றத்திலேயே இருக்கின்றார்.சில வருடங்களுக்கு முன்னால் ரிடையர் ஆனார்.

இப்பொழுதும் அதே பாசத்துடன் என் பெயர் கூறி அழைத்து வாஞ்சையை பறிமாறும் பொழுது நான் மனம் நெகிழ்ந்து போவேன்.

ஊருக்கு செல்லும் பொழுதெல்லாம் நான் அவரை சென்றுபார்த்து வர மறந்தாலும் என்னை அவர் வந்து மறவாது பார்த்து செல்லும் பாசத்துக்கு விலை ஏது?

அன்பு ஆபிதா டீச்சர்,நீங்கள் இன்னும் பல்லாண்டு நோய் நொடியின்றி,சந்தோஷமாக வாழ வேண்டும் என்று இந்த ஆசிரியர் தினத்தன்று மனப்பூர்வமாக வாழ்த்தி பிரார்த்தனை செய்கின்றேன்.

அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் ஆசிரியர்தின வாழ்த்துக்கள்!