இனிய இல்லம் இரண்டாம் பாகத்தினை படிப்பதற்கு முன் படிக்காதவர்கள் முதல் பாகத்தினையும் இங்கு கிளிக் செய்து படிக்கவும்.
இல்லப்பராமரிப்பை வீட்டிற்கு வெளியில் இருந்து ஆரம்பிப்போமா?
வீட்டின் வெளிப்பகுதி:
தனி வீடோ அடுக்குமாடிவீடோ வீட்டிற்கு வெளியில் குப்பைகள் இன்றி சுத்தமாக வைத்து தூசி கிளம்பாமல் நீர் தெளித்து,கேட் கிரில்கள்,காம்பவுண்ட் விளக்குகளை,வீட்டிற்கு வெளிப்பகுதியில் உள்ள ஜன்னல் கிரில்களை அவ்வப்பொழுது சுத்தம் செய்து வந்தால் வீடே தனித்துவமாக காட்சி அளிக்கும்.காம்பவுண்டுக்குள் செடி கொடிகள் இருந்தால் காய்ந்த தளைகள் அகற்றி,அவ்வப்பொழுது மண் சட்டிகளை இடம் மாற்றி கீழே படிந்துள்ள மண் துகள்களை சுத்தம் செய்வதைக்கடை பிடியுங்கள்.வீட்டிற்கு முன் செருப்புகள் சிதறிக்கிடக்காமல் ஸ்டேண்ட் வாங்கி வைத்து வீட்டிலுள்ளவர்களை செருப்பை கழற்றும் பொழுது ஸ்டேண்டில் கழற்றி வைக்க பழக்குங்கள்.வாசலுக்கு வெளியில் உள்ள கால் மிதி தூசி தும்புகள் இல்லாமல் தினமும் தட்டி சுத்தப்படுத்த தவறாதீர்கள். மாதம் இரு முறையாவது சோப்பினால் சுத்தம் செய்யுங்கள்.கதவு,நிலைப்படி போன்றவற்றை துணியினால் துடைத்து ஒட்டடை இன்றி சுத்தம் செய்யுங்கள்.
ஹால்:
நம்மை பிறர் மதிப்பீடு செய்வதில் வீட்டின் முன்னறை பெரும்பங்கு வகிக்கின்றது.விலைஉயர்ந்த சோபாக்கள்,கம்பளங்கள்,சாண்டிலியர்கள்,ஓவியங்கள் போன்றவற்றை அடுக்கி அழகு படுத்த வேண்டுமென்பதில்லை.இருப்பவற்றை சுத்தமாக வைத்து இருந்தாலே போதும்.தூசிகள் இல்லாத சோபா,கோடிழுத்தால் கோடு வராத டீபாய்,சோபாவுக்கு அடியில் குப்பைகள் தேங்காத நிலை,தொலைக்காட்சி பெட்டி இருக்கும் அலமாரியில் பொருட்கள் கன்னா பின்னவென்று இராமல் நேர்த்தியாக அடுக்கி வைத்தல்,அன்றைய தினசரியைத்தவிர மற்ற பழைய பேப்பர்களை பிறர் கண்களுக்கு படாமல் மறைவான இடத்தில் வைத்தல்,தினசரி,மற்றும் புதிய பத்திரிகைகள் போன்றவற்றை நேர்த்தியாக அடுக்கி வைத்தல்,மாதம் ஒரு முறை துவைத்து மாற்றிய கர்ட்டன்கள்,விளக்குகள் பேன் போன்றவற்றை துணியினால் 10 நாட்களுக்கு ஒரு முறையாவது துடைத்து சுத்தப்படுத்துதல் போன்றவற்றில் உறுதியாக இருங்கள்.ஆங்காங்கு உங்கள் பொருளாதர வசதிக்கு ஏற்ற படி படங்கள்,பூங்கொத்துக்கள் போன்றவற்றை மாட்டினால் வீடு அழகு கொஞ்சும்.
படுக்கையறை:
கட்டில் வாங்கினால் ஸ்டோரேஜ் கட்டிலாக பார்த்து வாங்குதல் படுக்கை அறை அடைசல் இல்லாமல் இருக்க வழிவகுக்கும்.காலையில் எழுந்ததுமே போர்வைகளை மடித்து தலை அணைகளை எல்லாம் அப்புறப்படுத்தி கட்டிலுக்கடியில் இருக்கும் ஸ்டோரேஜில் அடுக்கி வைத்து,பெட் சீட்டை உதறி சுருக்கமில்லாமல் விரித்து வையுங்கள்.வாரம் ஒரு முறை பெட்ஷீட் மாற்றும் பழக்கத்தினை மேற்கொள்ளுங்கள்.அதே போல் படுக்கையறையில் இருக்கும் திரைச்சீலைகளையும் அடிக்கடி துவைத்து சுத்தம் செய்யுங்கள்.படுக்கை அறையில் நசநசவென்று பொருட்கள் அடைத்து இருப்பதை விட எளிமையாக சுத்தமாக வைத்து இருந்தால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.குளிர்சாதன வசதியுடன் கூடிய படுக்கையறையாக இருந்தால் நறுமணமாக இருப்பதற்கு செலவு செய்யத்தயங்காதீர்கள்.இதமான வர்ணத்தில் பெயிண்டும்,ஒரு சில இதமான ஓவியங்களும் மனதிற்கு இதம் தரும்
கப்போர்ட்:
அநேகமாக எல்லாப் படுக்கை அறைகளிலும் இருக்கும்.ஆறுமாதத்திற்கு ஒரு முறையாவது உள்ளே இருக்கும் பொருட்கள் அனைத்தையும் எடுத்து நன்கு துணியால் துடைத்து பேப்பர் மாற்றுவதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.அநேக வீடுகளில் நியூஸ்பேப்பரை கப்போர்ட் தட்டுகளுக்கு விரித்து பொருட்களை அடுக்குவார்கள்.இந்த முறை கனமான சார்ட் பேப்பர்,அல்லது பிரவுன் ஷீட்டை விரித்துப்பாருங்கள்.இனி அந்த பழக்கத்தை விடவே மாட்டீர்கள்.அழகாக இடைவெளி விட்டு அடுக்கி,நாப்தலின் பால்களை ஆங்காங்கே வைத்து ,துணிகளும் மற்ற பொருட்களையும் தனித்தனி அடுக்குகளில் வைத்து தேடினால் உடனே கிடைக்கும் படியாக அமைத்துக்கொள்ளுங்கள்.
பாத் ரூம்:
இது அநேக வீடுகளில் படுக்கையறையுடன் அமைந்திருக்கும்.இதனை அதிகம் கவனம் செலுத்தி எப்பொழுதும் உலர்ந்த நிலையில் வைத்திருந்தால் ஆரோக்கியமாக இருக்கும்.குளிக்கும் முன்னர் தினமும் சுத்தப்படுத்தும் வழக்கம் அவசியம்.வாஷ் பேசின்கள்,டாய்லெட்டுகளை அதற்குறிய கிளீனிங் உபகரணங்களை வைத்து சுத்தப்படுத்தி,தரையை பிரஷ் செய்து நறுமணயூட்டிகளை மாட்டி வையுங்கள்.ஒரு வைப்பரை வாங்கி வைத்து ஒவ்வொருவரும் உபயோகித்தபின் வைப்பரால் நீர் தேங்காத வண்ணம் சுத்தம் செய்யும் பழக்கத்தினை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படுத்திக்கொண்டால் நலம் பயக்கும்.வைப்பர்,புரூம்,பிரஷ் போன்றவற்றை பாத்ரூமின் மூலையில் சாய்த்து வைப்பதைத்தவிர்த்து சின்ன ஹூக்குகளை ஓரமாக பொருத்தி அதில் மாட்டி வைத்தால் தரையை இலகுவாக சுத்தம் செய்யலாம்.டாய்லெட்டினுள் இருக்கும் கேபினெட்டின் கண்ணாடி மற்றும் கேபினெட்டை ஈரத்துணியால துடைத்து பொருட்களை நேர்த்தியாக அடுக்கி வைத்து நாப்தலின் உருண்டைகளைப்போட்டு வையுங்கள்.பழைய பிரஷ்கள்,காலியான பேஸ்ட்கள்,குப்பிகள்,காலியான சாஷேக்கள் போன்றவற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்துங்கள்.ஜலபாதையில் ஒரு போதும் முடி தங்கி இருக்காதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.தரையை மட்டுமின்றி சுவரில் பதித்திருக்கும் டைல்ஸ்,மற்றும் பிட்டிங்குகளையும் அவ்வப்பொழுது அதற்குறிய கிளீனிங் லிக்விட் கொண்டு சுத்தம் செய்ய தவறாதீர்கள்.
அடுத்து ஒரு இடுகையை வீட்டின் இன்னும் பிற இடங்களைப்பார்ர்ப்போம்.
படங்கள்:கூகுள்
Tweet |