April 15, 2013

ஞாபகம் வருதே...

நினைவுகளை விட்டு நீங்காத மனதில் பசுமரத்தாணியாக பதிந்து போன வாழ்வில் அவ்வப்பொழுது ரீவைண்டு செய்து பார்த்து மகிழக்கூடிய  நிஜமான சந்தோசங்களை அள்ளித் தந்த இளம் பருவம்.   இறுதிவரை சிறுமியாகவே இருக்க முடியாது தான்.ஆனால் அப்போதைய வாழ்வின்  வர்ண ஜாலங்களை ,மத்தாப்பூ நிகழ்வுகளை,வருடங்கள் எத்தனை கடந்து போனாலும் நினைவில் கொள்ளும் பொழுது மனசெல்லாம் சீனி மிட்டாய் சாப்பிட்ட தித்திப்பு அப்படியே கவ்வுகிறது. கடந்தகாலத்தை நினைத்துப் பார்ப்பதென்றால் அனைவருக்குமே இளம் பனி காலத்தில் ஏகாந்தமாக அமர்ந்து கொண்டு சில்லென்ற காற்று உடலை தடவ,வாசலில் பூத்துக்குலுங்கும் ரோஜாவும் நந்தியாவட்டையும் முல்லையும் போட்டிக்கொண்டு இதமான நறுமணத்தை நாசிக்கு செலுத்த ,பூத்திருக்கும் ரோஜா செடியின் ஓர் கிளையை பிடித்து இழுத்தால் அதில் பூத்திருக்கும்  மலரில் பரவிநிற்கும் பனித்துளிகள் முகத்தில் சிலீரிரென  பட்டு தெறிக்கும் பொழுது மனதில் எழும் மகிழ்ச்சிக்கு ஒப்பானதாகும் பால்ய பருவ நினைவுகள்.

நீங்கள் இவற்றை அனைத்தும் சாப்பிடாவிட்டாலும்,பெருமளவில் சாப்பிட்டு மகிழ்ந்திருப்பீர்கள் தானே?அள்ளித்தெளியுங்கள் உங்கள் அனுபவங்களை பின்னூட்டமாக.

தேன்மிட்டாய்


ஐந்துக்கு ஐந்து சைஸ் பொட்டிக்கடையில் கடைகாரர் உள்ளே நிற்பது கூட தெரியாமல் சரம் சரமாக தொங்கவிடப்பட்டு இருக்கும் இனிப்புகள் அடங்கிய பைகள்.வாகாக கை விட்டு பொருளை எடுப்பதற்கு வசதியாக பையின் ஓரத்தில் ஓட்டை போடப்பட்டு  50 காசை கொடுத்தால் கை நிறைய தேன் மிட்டாய்களை அள்ளித்தந்த காலமெல்லாம் மலை ஏறிபோயாச்சு.அக்கால பசங்களுக்கு பாகில் ஊறிய தேன் மிட்டாய் சாப்பிட்டால் தேன் குடித்த நரியாகி விடுவார்கள்.இப்போதுள்ள குட்டீஸோ விதம்விதமான சாக்லேட் சுவைப்பதில் நாட்டம் காட்டுகின்றனர்.


குருவிரொட்டி

பறவைகள்,மிருகங்கள் உருவத்தில் வடிவமைத்து இருக்கும் பிஸ்கட்டுகளே குருவி ரொட்டி.இதனை ஏதோ ஒரு படத்தில் வடிவேலு குருவி ரொட்டி என்ற நாமத்தைக்காட்டித்தந்தார்.கிராமப்புறங்களில் பிஸ்கட்டை ரொட்டி என்பர்.குருவிகள் உருவத்தில் வருவதால் குருவி ரொட்டி ஆனது போலும்.சிறுமியாக இருந்த பொழுது என் தந்தையார் வாங்கி வரும் இந்த குருவி ரொட்டிகளை ஒவ்வொரு உருவங்களாக வரிசைபடுத்தி தம்பி,தங்கைகளுக்கு அதன் பெயரை ஆங்கிலத்திலும்,தமிழிலும் சொல்லிக்காட்டி “இப்ப நீ மங்கியை சாப்பிட்டுக்கோ,இப்ப நீ லயனை சாப்பிடலாம்.நீ க்ரொவை சாப்பிடு “இப்படி சொல்லிக்காட்டி விளையாடி குருவி ரொட்டிகளை காலி பண்ணியதெல்லாம் ஞாபகத்திற்கு வருகிறது.

கமர்கட்டு


கருப்பு நிறத்தில் வாயில் போட்டு மென்றால் வலிக்கும் ஒரு வஸ்துதான் கமர்கட்டு.பெட்டிக்கடைகளில் கண்ணாடி பாட்டில்களில் குட்டீஸை ஈர்க்கும் ஒரு இனிப்பு .கல் போன்று கடினமாக இருப்பதால் கல்கோணா என்றும் கூறுவார்கள்.இப்போதும் தி நகர் பக்கம் சென்றால் பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் பளபளக்கும் கமர்கட்டுகள் தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்யப்படுவதை பார்க்கலாம்.

பவுனு மிட்டாய்


ஜவ்வு போன்ற ஒரு இனிப்பு வஸ்த்துவை வட்டவடிவமாக்கி அதனை அழகாக பொன்னிற சரிகை பேப்பரில் சுற்றி பார்க்க பவுன் போன்று தோற்றமளிக்கும் .சுவை எண்ணவோ பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி இல்லாவிட்டாலும் தங்க மிட்டாய் என்று சிறுவர்கள் அள்ளிக்கொள்வார்கள்.


சூடமிட்டாய் (அ )சுத்துற மிட்டாய்

வட்டவடிவ வெள்ளை நிற பட்டன் போன்ற வில்லையில் இரண்டு ஓட்டைகள் போட்டு அதில் நூல் கட்டி விற்பனைக்கு வரும் சூடமிட்டாயில் கட்டப்பட்டு இருக்கும் நூலை  இரண்டு ஆட்காட்டி விரல்களால் பிடித்து சுற்றி இழுத்தால் சொய்ங் என்று சுற்றும் அழகை ரசித்து ரசித்து  விளையாடி மகிழ்ந்து களைத்துபோனதற்கு அப்புறமாக நூலை அப்புறப்படுத்திவிட்டு சூடமிட்டாயை வாயில் போட்டால் ஒரு வித விறுவிறுப்புடன் கூடிய இனிப்புசுவையை இன்னுமும் மறக்க முடியாது.


காக்காய் மிட்டாய்

படத்தில் இருப்பது சிறிய சைஸாக உள்ளது.காக்காய் முட்டை அளவில் வண்ண வண்ணமாக கல் போன்ற ஒரு மிட்டாய்தான் காக்காய் மிட்டாய்.பல்லில்வைத்து கடித்து சாப்பிடுவதற்கு பிராணன் போய் வந்துவிடும்.அம்மாவிடம் கொடுத்து பாக்கு வெட்டியால் நறுக்கி சாப்பிட்ட ஞாபகம்.பெரிசுகளோ இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது.சமீபத்தில் ஒரு சூப்பர் மார்கெட்டில் காக்காய் மிட்டாய்கள் அடங்கிய பை கண்ணை கவர பாக்குவெட்டி இருக்க பயம் ஏன் என்று ஒரு பாக்கெட் வாக்கினேன்.வீட்டிற்கு வந்து பார்த்தால் பாக்கு வெட்டி தேவையே படவில்லை.ஷாஃப்டாக இருந்தது.கடித்தால் உள்ளுக்குள் ஒரு முழு பாதாம் பருப்பு.அந்தக்காலத்து காக்காய் மிட்டாயின் சுவையே தனிதான்.

இலந்தவடை

இனிப்பு,புளிப்பு,காரம், இப்படி அருஞ்சுவைகளில் அநேகசுவைகள் உள்ளடங்கியதுதான் இலந்தை வடை .கருப்பு நிறத்தில் களிம்பு போல் உள்ளவஸ்தை பார்த்த மாத்திரத்தில் இது சாப்பிடும் பொருள்தான் என்று ஒப்புக்கொள்ளத்தோன்றாத ஒரு உருவம் இந்த இலந்தை வடைக்கு உண்டு.வாயில் போட்டு மென்றால் ஆஹா..உடை பட்ட இலந்தைக்கொட்டை நரநரக்க சுவை அள்ளிக்கொண்டு போகும்.சின்ன சின்ன பாக்கெட்டுகளில் பத்துகிராம் அளவில் உள்ளதை வழித்து எடுத்து சாப்பிட சோம்பேறித்தனமாக இருந்தாலும்,சுவைக்கு பஞ்சம் இருக்காது.

குச்சி ஐஸ்


கோரனோட்டா,கசட்டா,சாக்சிப்,சாக்அண்ட்நட் இப்படி வகை வகையான பெயர்களில் விதவிதமான சுவைகளில் இப்பொழுது ஐஸ்கிரீம்கள் கிடைத்தாலும்,அந்தக்கால குச்சி ஐசும் அவ்வப்பொழுது ஞாபகத்திற்கு வந்து செல்லத்தான் செய்கின்றன.துருபிடித்த சைக்கிள் கேரியரில் வண்ணம் போன சதுர மரப்பெட்டியினுள் ஐஸை வைத்து ஐஸ்காரர் வண்டியைத்தள்ளிக்கொண்டு சாலையில் நடந்து கொண்டே “ஐஐஐஐஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..பாலைஸ்,சேமியாஐஸ்,திராட்சை மேங்கோ”என்று கூவும் ஒலி குட்டீஸுக்கு குதுகலத்தை ஏற்படுத்தும்.விதவிதமான ஐஸ் க்ரீமை சுவைத்தாலும் சேமியா ஐஸின் சுவை இன்னும் நாவை விட்டு போக மறுக்கிறதே.

தூள் ஐஸ்


தள்ளு வண்டியில் ஐஸ் பார்களை ஓரமாக அடுக்கி,கலர் கலரான சர்பத் பாட்டில்களையும் ஏகத்துக்கும் அடுக்கி வைத்து மணி அடித்து கல்லா கட்டுவார்கள்.ஐஸ்துண்டு ஒன்றினை எடுத்து துருவலாக சீவி,கண்ணாடி கிளாசில் நிரப்பி,அங்கிருக்கும் அனைத்து சர்பத் பாட்டில்களில் உள்ளவற்றை எல்லாம் குலுக்கி குலுக்கி துள்ளித்துளியாக விட்டு ஐஸ் துகள்கள் மீது தெளித்து  இனிப்பாகவும் கலர்கலராகவும் ஆக்கி சிறுவர் கைகளில் தருவார்கள் பாருங்கள்.ஐஸை சீவுவதை வைத்த கண் வாங்காமல் பார்ர்த்துக்கொண்டுஇருக்கும் குட்டீஸ் ஐஸ் கிளாஸ் கையில் கிடைத்ததும் வெளிப்படுத்தும் மகிழ்ச்சி இருக்கிறதே.அப்பப்பா..இப்பொழுது அதுவே பெரிய ரெஸ்டாரெண்டுகளில் ஐஸ் கச்சாங் என்று சொல்லி விற்பனை செய்கின்றனர்.






ஜவ்வு மிட்டாய்




நீண்ட மூங்கில் கழிமீது அலங்கரிக்கப்பட்ட பொம்மை உருவத்தை வைத்து,கீழே தொங்கும் கயிற்றை பிடித்து இழுத்தால் பொம்மையின் இரண்டு கையும் ஒன்று சேர அடித்து எழும் சப்தம் குட்டீஸுக்கு கொண்டாட்டம்தான்.பொம்மைக்கு கீழே பாலிதீன் கவரால் சுற்றப்பட்ட ஜவ்வுமிட்டாய் நொடிபொழுதில் வாட்சாக,மோதிரமாக,வளையலாக செயினாக,நெக்லஸாக பரிமாணிக்கும்.கையில் அணிந்து அழகு பார்த்து விட்டு வியர்வை கசப்புடன் மிட்டாயை சுவைத்தது அந்தக்காலம்.


ஆரஞ்சு மிட்டாய்

ஆரஞ்சு சுளை வடிவத்தில் கலர்கலராக புளிப்புசுவையுடன் இருக்கும் மிட்டாய்தான் ஆரஞ்ச் மிட்டாய்.கிராமங்களில் சாக்லேட் வகைகள் அறிமுகம் இல்லாத காலகட்டத்தில் குட்டீஸுக்கு இது காணக்கிடைக்காத பேறு.

கடலை உருண்டை




பொட்டிக்கடைகளில் கண்ணாடி பாட்டிலில் அடைத்து கடைக்கு கடைக்கு விற்றாலும் கூட எங்கள் ஊரில் ஒரு வீட்டில் இந்த கடலை உருண்டை செய்து விற்பனை செய்வார்கள்.கெட்டி வெல்லப்பாகில் பொட்டுக்கடலை சேர்த்து கிளறி எண்ணெய் தேய்த்த பல்லாங்குழியில் ஊற்றி ஆற விட்டு தருவார்கள்.அவர்கள் கடலை உருண்டைகான பாகு செய்து கடலையை கலந்து பல்லாங்குழியில் நிரப்பி,சூடு ஆறுவரை காத்திருந்து வாங்கி பிரஷாக சாப்பிட்ட சுவை கடைகளில் கிடைக்காது.

சவுக்கு மிட்டாய்




எனக்கு ஆரம்பத்தில் ஜவ்வுமிட்டாய் சவுக்கு மிட்டாய்க்கு உள்ள பெயர் வித்தியாசம் தெரியாது.கடித்து மென்று சாப்பிடும் பக்குவத்தில் ஒரு இழுவை மிட்டாய்.அதில் சர்க்கரை தூள் தூவப்பட்டு மென்று சாப்பிடவே இதமாக இருக்கும்.இப்போது பல்லி பாச்சான் யானை பூனை உருவங்களில் ஜெல்லி மிட்டாய் என்று பெயரிட்டு பார்க்கவே டெரர் காட்டுகிறது.


அரிசி மிட்டாய்



குட்டியான சீரகத்தில் உள்ள மினி மிட்டாய் அரிசி சைஸில். அப்படியே வாயில் அள்ளிப்போட்டால் கடுக் மொடுக் சப்தத்துடன் சுவைக்கலாம்.இதனை எங்களூரில் குழந்தைகளுக்கு பல் முளைத்து விட்டால் பல்லரிசி என்ற ஒரு தின்பண்டத்துடன் இந்த அரிசிமிட்டாயையும் அக்கம் பக்கத்தினருக்கு கொடுத்து மகிழ்வார்கள்.

மாங்காகீத்து


கிளி மூக்கு மாங்காயை நீள வடிவில் மெலிதாக சீவி உப்பு மிளகாய் தூவி விற்பனை செய்யப்படும்.ஸ்கூல் வாசலில் உச் கொட்டிக்கொண்டே சாப்பிட்டது இன்றும்  நினைவில் உள்ளது. மாங்காய்கீத்து இப்போதும் கூட அழகாக பாலித்தீன் கவர்களில் போட்டு விற்பனை செய்கின்றனர்.இருந்தாலும் தெருவில் வைத்து மாங்காயை நறுக்கும் பெண்ணை பார்க்கும் பொழுது மாங்காயை கழுவினார்களா இல்லையா என்ற சந்தேகம் மாங்காகீத்து சாப்பிடவே தயக்கமாக உள்ளது.

கடலை அச்சு



இதனை அச்சுவடிவில் செய்வதால் கடலை அச்சு.உருண்டை வடிவமானால் வேர்க்கடலை உருண்டை.இது பெருமளவில் தயாரிப்பது கோவில் பட்டி என்றாலும் எந்த ஊரிலும் மூலை முடுக்கெல்லாம் கிடைக்கும்.என் கணவருக்கு இன்று வரை வித விதமான முந்திரி,பாதாம் ஸ்வீட்டுடன்,இந்த கடலை மிட்டாயை பக்கத்தில் வைத்தால் மற்றவற்றை சீந்தக்கூடமாட்டார்.

கொடுக்காப்புளி

அக்காலக் கிராமகுட்டிஸுடன் இது நெருங்கிய தொடர்புடையது.சுருள் சுருளான சிவப்பான காயும் பழங்களை உண்ண சிறுவர்கள் போட்டி போடுவார்கள் சில ரகங்கள் துவர்ப்பாகவும் சிலரகங்கள் இனிப்பாகவும் இருக்கும்.

April 9, 2013

சைதாபேட்டை ஜக்கு



இன்னாது..அப்டி பாக்றே?நாந்தேன் ஜைதாபேட்டை ஜக்கு. கபாலீஸ்வரர் கோயிலண்டே பூக்கட்டி விக்கற பூக்காரின்னு என்னை வல்லிசா நெனச்சினியா?பஜார்ல உஜாரா இல்லைனா நிஜார கலட்டிடுவாங்க என்னை இஸ்துகினு வந்து கண்ணாலம் பண்ண கோவாலு பட்ச்சி தந்த பாடம்யா.

அது ஆச்சு ரெண்டு மாமாங்கம்.கண்ணாலம் கட்டுற வரைக்கும் கோவாலு தெண்டச்சோறாத்தான் இருந்துச்சு.கண்ணாலம் கட்டினு வந்தப்போ அது ஒரு குஜிலி கூட குஜாலா சுத்திகினு ஜல்சா பண்ணினு இருந்ததை பார்த்து மெர்சல் ஆயிட்டேன்.”யோவ்..சோமாரி..ஒரு தபா தப்பு பண்ணிட்டே.கண்டினியூவா இப்படி டபாய்ச்சே அப்பாலிக்கா காண்டாய்டுவேன்.இப்டி போங்குத்தனமா இருந்தே மெரிச்சுருவேன் மெரிச்சு.என் நைனா,அண்ணாத்தை பற்றி தெரிஞ்சு வச்சிகினு ஆட்டம் போடாதே.கீச்சுடுவாங்க கீச்சி”நான் இப்படி சொல்லாங்காட்டி கம்முன்னு கெடக்காது கோவாலு அப்படீன்னு நெனச்சது தப்பா பூடுச்சு.

திருந்தின பாடு இல்லை.சின்னதுலே வாத்தியார் படம் பார்த்த நியாபகம் சடுதியில் வந்துச்சு பாரு.எனக்கு வந்த கோவத்திலே சொம்மா பூரிக்கட்டையாலே வூடு கட்டி அடிச்சேன் பாரு.அவ்ங்கொப்பனும்..அதேங்..எம்மாமனார் கெயவனும்.மாமியா கெயவியும் அரண்டு போச்சுதுங்க.அடிச்ச அடியிலே கபாலம் ஒடன்ஞ்சி சல்லிசா ரத்தம் கொட்ட வேறென்ன  முச்சந்தியில் நின்ன மினியப்பன் ஆட்டோவிலே பெரியாஸ்பத்திரிக்கு இட்டாந்து தைய போட்டு வூட்டுக்கு இட்டாந்தேன்.அப்பாலிக்கா மச்சானுக்கு சவரட்சனை பண்ணி என் வழிக்கு கொண்டு வந்தேன்.

“ஏய்யா..கண்ணாலம் ஆச்சு,கொயந்தே குட்டிங்கன்னு ஆயிட்டா நம்ம கத என்னாத்துக்காகும்? எத்தினி காலத்துக்கு இப்படி தண்டமா குந்திகினு கிடப்பே?எத்தினி காலத்துக்கு உங்கம்மா கெயவி வூடு வூடா போய் சாமான் தேய்ச்சினு சம்பாரிச்சுன்னு வந்த துட்டுலே துன்னுகினு இருப்பே..புத்தியா பொழச்சிக்கோய்யா.”ராவும் பகலுமா நான் பொலம்பிய பொலம்பலில் மனுஷன் திருந்திட்டான்.

நல்ல மாட்டுக்கு ஒரு சூடும்பாங்க.ஒட்னே அந்தாண்டே பஜார் பக்கம் பிளாட்பாரத்திலே கட போட்டுச்சு.கோவாலு மச்சான் கில்பான்ஸ் இல்லாங்காட்டியும் டொச்சானா அட்டு ஆசாமியா இருந்தாங்காட்டியும் தில்லான கில்லியான ஆளு.மெய்யாலுமே மினியப்பன் சாமி புண்ணியத்துலே யாபாரம் பிச்சுகினு தூள் கிளப்புச்சுன்னா பார்த்துக்கோயேன்.காலம்பற மிலிட்டரி ஓட்டலாண்டே போய் பரோட்டாவும் சால்னாவும் வாங்கி நாஷ்டா பண்ணினு யாவாரத்துக்கு போச்சுன்னா மச்சான் வீட்டாண்ட்ட திரும்ப ராவு மணி பதினொண்ணாயிடும்.

என்னா ஒன்னு..போலீஸ் காரன் பிகில் சத்தம் கேட்டால் கடையை தூக்கிகினு ஓடணும்.அவனுங்களுக்கு மாலு கொடுத்து சொக்காவை கீய்ச்சுக்கணும்.இப்படிக்கா எங்க லைபு கன்பீஸ் இல்லாம மஜாவா போய்கினு இருந்துச்சு. அக்காங்..பீலா வுட்றேன்னு நென்ச்சிடாதே கண்ணூ..அவுல் கொடுக்குறது,கலாய்க்கிறது,டபாய்க்கிறது ,பீலா உட்றது,கப்ஸா வுட்றது எல்லாம் இந்த ஜக்கு கைலே சுட்டுப்போட்டாலும் வராது.

சம்பாரிச்சு என் மடியாண்டே வந்து கொட்டினான்தான்.என்ன ஒரு குறை அப்பப்ப  சல்பேட்டா வாங்கி கச்சேரி பண்ணி குடிச்சிகினு மட்டையாயிடுவான்.ஆரம்பத்திலே டர்ராயிட்டேன்.அப்பாலே அதுவே பயக்கமாயிடுச்சு.

கடையை மூடிட்டு வீட்டாண்டே வர்ரச்சே வாழை இலையிலே தம்மாதூண்டு பிச்சுப்பூவை கட்டிஎடுத்தாந்து “அடியே ஜக்கு கயிதை..குஜிலி கணக்கா  பிகரு மாரி ஷோக்கா டக்கரா கீறேடி.”இப்டிங்காட்டி குஜால் பண்ணி ஜல்சா பண்ணினா ”ஏன்யா உதாரு வுட்றே” ன்னு நான் ஒப்புக்கு சப்பாணியா கேட்டாலும் ஜக்குவுக்கு ஜல்பு புட்ச்சுடுன்னு உண்மை மச்சானுக்கு நல்லாவே  தெரியும்.

சொம்மா சொல்லப்படாதுய்யா.கடையிலே யாபாரம் ஷோக்கா நடந்துச்சின்னா பட்டையை போட்டுட்டு மட்டையாயிடுமே தவிர.பொட்டலம் போடறது,பிராத்தல் பண்றது,போங்கு பண்ணி பேரை கலீஜ் பண்றதுன்னு கேப்மாரி மொள்ளமாரித்தனம் அல்லாத்தையும் சல்லுன்னு தூக்கி கடாசிட்டு கோவாலு மச்சான் எனக்கேத்த புருஷனாத்தான் வாழ்ந்தான்.

எந்த பேமானி, சோமாறி ,கேப்மாரி,கஸ்மாலம் கேணன் எச்சக்கல,காலிப்பய பரதேசி பன்னாடை கபோதி கட்டேலேபோறவன்  கண்ணு பட்டுச்சோ.ஐயனாருக்கே வெளிச்சம்.கெரகம் புடிச்சு போய் ரோட்டாண்டே சீட்டு வெளாடினு கீந்தவனை சாவுகிராக்கி தூத்தேரி போலீஸ்காரன் தொறத்தி இருக்கான்.எகிறி குதிச்சு போங்கு காட்டினு இருந்தவனை கபால்ன்னு புச்சி மெரிச்சி போட்டதில் பகிலு ஒடஞ்சிப்பூடுச்சி.அப்பாலிக்கா பேஜாருதான்.வூட்டாண்டே வுழுந்து கெடக்குது கோவாலு மச்சான்.காலையிலே நாலு வூட்டாண்டே பத்துபாத்திரம் தேச்சி,சாயங்காலமாச்சுன்னா பூக்கட்டி வித்து வயித்தை கழுவிகினு கீறோம்.

என்னாது..வூட்டு வேல பாக்குறியான்னு கேக்குறியாஆஹாங்..மாமியா கெயவி பீச்சாங்கையி பீச்சாங்காலு இஸ்துகினு படுக்கையில் பத்து மாசம் கப்பு அடிச்சுக்கினு படுத்துடுச்சி.ஒரு தபா மார்லே வலிக்குதுன்ன்னு சொல்லி மறு நிமிட்டில் பல்பு வுட்டுறுச்சு.அது வேலை பார்த்த கொல்டி காரங்க,ஜட்கா காரங்க .ரெண்டு மாமிங்க வூட்டாண்டே பத்து பாத்திரம் தேச்சு டப்பு சம்பாரிச்சு உஷாயிராடேன்ல.அதான் தலப்பாலே சொன்னேனே பஜார்ல உஜாரா இல்லைனா நிஜார கலட்டிடுவாங்க இந்த மெட்ராஸ் ஊர்லே. இது எங்கோவாலு மச்சான் சொல்லித்தந்த பாடம்ன்னு.

இதான்யா மேட்டரு. எங்கதையை சொல்லி பீலிங்கு பண்ணிட்டேனா?இப்படிக்கா வூட்டாண்டே  போய்  லைபாய் சோப்பு வாங்கிட்டு மச்சானுக்கு குளிக்க கொடுத்து நாஷ்ட்டா வாங்கி கொடுக்கணும்.வர்ட்டா?இத்தினி தூரம் பொற்மையா குந்திகினு எங்கதையை கேட்ட உனக்கு ரொம்ப டாங்சு.

டிஸ்கி-1:மெட்றாஸ் பாஷையில் உங்க அல்லாத்துக்கிட்டேயும் ஒரு மினியம்மாவையோ கபாலியையோ கூட்டினு வந்து காட்டணும்ன்னு ரொம்ப நாளா ஆசை.ஜக்கை உருவாக்குவதற்குள் டங்குவாறு அந்து பேஜாரா பூடுச்சுங்கோ.ஜக்குவை பட்சிட்டு சூப்பரா சிரிச்சுட்டு அப்பாலிக்கா மறக்காமல் கருத்தை போட்டு ஓட்டும் போட்டுடுங்க..ஆமா சொல்லிபுட்டேன்...அக்காங்..

டிஸ்கி - 2:

படிப்பவர்களுக்கு  பல வார்த்தைகள் புரியவில்லை என்பதை அறிந்தேன்.பொருளறிந்து வயிறு வலிக்க சிரிக்க இந்த லிஸ்ட்

வல்லிசா -சுலபமாக
இஸ்துகினு - இழுத்துக்கொண்டு
கண்ணாலம் - கல்யாணம்
குஜிலி  - இளம் வயதுப்பெண்
குஜாலா -கொஞ்சல்
ஜல்சா - சரசம்
மெர்சல்  - பயம்
சோமாரி - ஒழுக்கம் இல்லாதவன்
தபா - தடவை
டபாய்ச்சே - ஏமாற்றி
அப்பாலிக்கா  - அப்புறமா
காண்டாய்டுவேன் - கோபமாகிவிடுவேன்
போங்குத்தனமா - கள்ளத்தனமாக
மெரிச்சு - மிதிச்சு
நைனா - தந்தை
அண்ணாத்தை - அண்ணன் 
கீச்சி - கிழித்து
சடுதி - சீக்கிரம்
சொம்மா - சும்மா 
கெயன் - கிழவன்
கெயவி - கிழவி
கபாலம்  -மண்டை
சல்லிசா  - சுலபமாக
நின்ன - நின்ற
இட்டாந்து - கொண்டுவந்து
சவரட்சனை  - தேவை அறிந்து செய்தல்
கொயந்தே -குழந்தை
குந்திகினு - உட்கார்ந்து கொண்டு
கில்பான்ஸ்  - பளபளப்பான ஆள்
இல்லாங்காட்டியும் - இல்லாவிட்டாலும்
டொச்சானா - அழகில்லாத
அட்டு -சுமாரான
தில்லான -தைரியமான,ஆண்மை
கில்லியான - திறமையான
யாபாரம்-வியாபாரம் 
பிச்சுகினு - பிய்த்துக்கொண்டு
காலம்பற  - காலையில்
மிலிட்டரி ஓட்டலாண்டே - அசைவஹோட்டல் அருகே
நாஷ்டா - காலை டிபன்
பிகில் - விசில்
மாலு - மாமூல்
சொக்கா - சட்டை
கீய்ச்சுக்கணும் - கிழித்துக்கொள்ளவேண்டும்
கன்பீஸ் - குழப்பம்
மஜா  -கேளிக்கை
போய்கினு - போய்க்கொண்டு
அக்காங் - ஆமாம்
பீலா -பொய்
கலாய்- கலாட்டா
டபாய்க்கிறது -ஏமாற்றுவது
கப்ஸா  - பொய்
பல்பு - சாவு
சல்பேட்டா -மலிவு விலை மது
கச்சேரி -குழுவுடன் மது குடித்தல்
மட்டை - அதீத போதை
டர்ராயிட்டேன். - கோபமாகிவிட்டேன்
அப்பாலே-அந்தப்பக்கம்
பயக்கமாயிடுச்சு. - பழக்கமாகிவிட்டது
தம்மாதூண்டு  - சிறிய அளவில்
கயிதை - கழுதை
குஜிலி -இளம்பெண்
கணக்கா  - அது மாதிரி
பிகரு மாரி  - அழகு மாதிரி
ஷோக்கா  - அழகா
டக்கரா கீறே - சூப்பரா இருக்கே
உதாரு -பொய்
ஜல்பு -ஜலதோசம்
சொம்மா- சும்மா
பட்டையை - சாரயத்தை
பொட்டலம் - கஞ்சா
பிராத்தல் 
போங்கு - கள்ளத்தனம்
கேப்மாரி - திட்டு வார்த்தை 
மொள்ளமாரித்தனம் 
அல்லாத்தையும் - எல்லாவற்றையும் 
சல்லுன்னு - சட்டென்று
கடாசிட்டு  - தூக்கி வீசிவிட்டு
பேமானி - திட்ட உபயோகிக்கும் வார்த்தை 
சோமாறி -திட்ட உபயோகிக்கும் வார்த்தை 
கேப்மாரி-திட்ட உபயோகிக்கும் வார்த்தை 
கஸ்மாலம் - முட்டாள் 
கேணன் - திட்ட உபயோகிக்கும் வார்த்தை 
எச்சக்கல-திட்ட உபயோகிக்கும் வார்த்தை 
காலிப்பய -திட்ட உபயோகிக்கும் வார்த்தை 
பரதேசி-கொடியவன்
பன்னாடை-திட்ட உபயோகிக்கும் வார்த்தை 
கெரகம்- ஏழரை நாட்டு சனி
சாவுகிராக்கி -திட்ட உபயோகிக்கும் வார்த்தை 
தூத்தேரி -திட்ட உபயோகிக்கும் வார்த்தை 
புச்சி - பிடித்து
மெரிச்சி - மிதிச்சி
பகிலு -இடுப்புப்பகுதி
பீச்சாங்கையி - இடதுகை
பீச்சாங்காலு -இடதுகால்
கப்பு - துர்நாற்றம்
தபா - தடவை
கொல்டி காரங்க  - தெலுங்கு பேசுபவர்கள்
ஜட்கா காரங்க  - ஹிந்தி பேசுபவர்கள்
மாமிங்க  - பிராமணர்கள்
டப்பு - பணம்
நிஜார் - கால்சட்டை
குந்திகினு  - உட்கார்ந்து கொண்டு
டாங்சு - நன்றி
கபோதி - திட்ட உபயோகிக்கும் வார்த்தை 
கட்டேலேபோறவன-திட்ட உபயோகிக்கும் வார்த்தை 
பேஜாரு - தொல்லை

April 8, 2013

அறிவீர்களா இவரை - 1


அறுசுவை பாபு

மின்னல் வரிகள் கணேஷண்ணா ”தெரியுமா இவரை” என்ற தலைப்பில் உலகளாவிய புகழ் பெற்றவர்களை தன் தளத்தில் அறிமுகப்படுத்த ஆரம்பித்ததன் விளைவே என்னை இப்பதிவு எழுத தூண்டுகோலாக இருந்தது..

லியனார்டோ டாவின்சி ,ஹோசிமின் ,நெப்போலியன் ,ஸோய்சிரோ ஹோண்டா ,முசோலினி போன்றோரைபற்றி மட்டும்தானா எழுத வேண்டும்,நாம் அறிந்தோரைப்பற்றி எழுதினால் என்ன என்ற எண்ணம் உதயம் ஆனது.அவ்வப்பொழுது என் ஞாபகத்தில் வருபவர்களை என் கோணத்தில் எழுத விருப்பம்.அநேகமாக நீங்கள் அனைவரும் அறிந்த மனிதர்,மனுசிகளாகவும் இருக்கலாம்.ஏன் நம்மில் வளைய வரும் பதிவுலக நட்புக்களும் நிறைய இவ்வறிமுகத்தில் தொடர்வார்கள்.இப்பதிவுக்கு கிடைக்கப்போகும் வரவேற்பை பொறுத்து ”அறிவீர்களா இவரை”என் வலைப்பூவில் தொடரும்.

முதலில் நான் அறிமுகப்படுத்தபோவது பிரபல இணையதள நிர்வாகி திரு D.V.பாபு அவர்கள்.இன்று நம்மில் வளைய வரும் பல வலைப்பூதாரர்களை உருவாக்கியவர்.வலைப்பூ என்றால் என்ன என்பதையும் பலருக்கு காட்டித்தந்த பலருக்கு தமிழை எப்படி தட்டச்சு செய்வது என்பதை கற்றுதந்த இணையதளத்திற்கு சொந்தக்காரர்.அதுவரை கணினியை ஆன் செய்யக்கூட தெரியாத தமிழர்கள் பலரை கணினியின் வசமாக்கியவர்.

வெளிநாட்டு வாழ் கணினி அறிந்த தமிழர்களுக்கு சமையல் என்றால் என்ன என்று அறியாதவர்களுக்கு ,புதிதாக திருமணமாகி தனிக்குடித்தனம் சென்ற தம்பதிகளுக்கு,குடும்பத்துடன் இல்லாமல் தனியே வெளிநாட்டில் வாழ்ந்து சுய சமையலில் ஈடுபடும் பேச்சிலர்கள்,ஏன் சமையலில் சக்கை போடு போடும் கைதேர்ந்த இல்லத்தரசிகளும் கூட புது வித சமையல் செய்ய வேண்டு மென்றால் அறுசுவையை தளத்தினைத்தான் நாடுவார்கள்.

 இப்படி பலருக்கும் ரசம் வைப்பது எப்படி என்பதை அறிய வேண்டுமென்றால் அவரது கணினித்திரையில் அறுசுவை விண்டோ திறந்து இருக்கும்,சாதராண ரசம்  முதல் பன்னாட்டு உணவுகள் செய்யும் செய்முறை குறித்தும் அறிய வேண்டுமென்றால் இருக்கவே இருக்கின்றது அறுசுவைதளம் என்று கூறும் அளவிற்கு அத்தளத்தில் ஆயிரக்கணக்கான சமையல் குறிப்புகள் மட்டுமல்ல பல்வேறு உபயோகமான குறிப்புகளும் கொட்டிக்கிடக்கின்றன.

இது தவிர  இல்லத்தரசிகளுக்கு ஏதாவது சந்தேகமோ,உடல் நலம் குறித்தோ கேட்கவேண்டுமென்றால் மன்றத்தில் ஒரு கேள்வி எழுப்பினாலே போதும்.பதில் தந்து உதவ பலர் இருப்பார்கள்.இங்ஙனம் பல வாறு சேவைகள் அறுசுவையில் கிடைப்பது அறுசுவை உறுப்பினர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

தப்பும் தவறுமாக தமிழில் தட்டச்சு செய்பவர்களை ஊக்குவித்து தனது தளஉறுப்பினர்களுக்கு ஊக்கம் கொடுத்து,கை தேர்ந்த பதிவர்களாக வார்த்தெடுத்ததுமல்லாமல்,அவ்வப்பொழுது தள உறுப்பினர்களை கலந்துரயாடச்செய்து நல்ல நட்புக்களை பலருக்கு பெற்றுத்தந்தவர் என்றால் மிகை ஆகாது.

இணையதளத்துக்காவே லட்சகணக்கில் தன் சுய சம்பாத்தியத்தை செலவழித்தவரும் கூட.பொறியியல் துறையில் பட்டம் பெற்ற இவரை பெற்றோரும்,உடன் பிறந்தோரும், நட்புக்களும் இணையத்திற்காக இத்தனை பாடுபடுவதை குறித்து விமர்சனம் செய்த பொழுது அதை எல்லாம் புறம் தள்ளிவிட்டு,பல சோதனைகளைக்கடந்தும் இன்று இணையத்தில் வெற்றி நடை போடுகின்றவர்.

நானும் ஆரம்பத்தில் நூற்றுக்கணக்கில் சமையல் குறிப்புகள் கொடுத்தேன்.மன்றங்களில் பங்கெடுத்தேன்.பின்னாளில் எனக்கென ஒரு வலைப்பூ ஆரம்பித்துவிட்ட பிறகு தொடர்ந்து என்னால் அங்கு எழுத முடியவில்லை.அங்கு எழுத வேண்டும் என்ற என் எண்ணத்தை செயல்படுத்துவதில் காலதாமதமாகிகொண்டே இருப்பதில் எனக்கு மிகுந்த மனக்குறையுடன் கூடியவருத்தம் உண்டு.

ஒரு பிரபலமான மூத்த பெண் பதிவரின் உறவினரும் கூட.(அவரது அனுமதி இல்லாமல் அவரை இங்கு யாரென்று சொல்ல முடியவில்லை)இருவரும் உறவினர்கள் என்று ஒருவருக்கொருவர் தெரியாத நிலையில் தொடர்ந்து அறுசுவையில் எழுதிய பொழுது நேர்ந்த ஒரு சந்திப்பின் மூலம் தெரிந்தது என்பதனை இருவருமே கூறி சிலாகிப்பாரகள்.

எனக்கு ஹாட் அண்ட் ஷோர் சிக்கன் சூப் என்றதும் முதலில் நினைவுக்கு வருபவர் பாபுதான்.ஏனெனில் அறுசுவையில் உறுப்பினர் பக்கம் சுய விபரத்தில் ஹாட் அண்ட் ஷோர் சிக்கன் சூப்பிற்காக உயிரில் கொஞ்சம் இழக்கவும் தயார் என்று தன்னைப்பற்றி நகைச்சுவையாக அறிமுகப்படுத்திய வரிகளை வாசிக்கும் நேரமெல்லாம் சிரிப்பை வரவழைத்து விடும்.

பிளாக் என்று அறிந்திராத காலகட்டத்தில் சுமாராக 90 களில் வெகு சிலரே விரல் விட்டு எண்ணக்கூடிய காலகட்டத்தில் தமிழில் பிளாக் எழுதிய பெருமையும் இவருக்குண்டு.

அறுசுவையில் வெளியான பல சமையல் குறிப்புகளையும் பல்வேறு தலைப்புகளில் நூல்களாக்கி இருப்பது மகளிர் மத்தியில் மட்டுமல்லாது சமையல் தெரியாத ஆண்களுக்கும் உதவிகரமாக உள்ளது.

ஆங்கிலதளம் இன்ன பிறவென்று வலைதளத்தில் இன்னும் உயர உயர பறக்க வேண்டும் என்பதே இவரது இலட்சியம்.இவரது ஆர்வமும், முயற்சியும்,உழைப்பும் வெகு விரைவில் இவர் தன் இலக்கை அடைய வைக்கும்.

April 5, 2013

பயணம் - தொடர்பதிவு!




தோழி ஆசியா எப்பொழுதோ என்னை தொடர் பதிவு ஒன்றுக்கு அழைத்து இருந்தார்கள்.நான் அதனை மறந்தே போனேன்.மீண்டும் மெயில் செய்து ஞாபகமூட்டினார்கள்.என்னுடைய அனுபவத்தில் பக் பக் பயண அனுபவம் ஏதும் இல்லாவிட்டாலும் ஆசியா அழைப்புக்காக  என் பழைய அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

80களில் நான் பத்திரிகைகளுக்கு தீவிரமாக எழுதிக்கொண்டிருந்த நேரம்.மலர்மதி என்று பெண்கள் மாத இதழில் நிறைய எழுதினேன்.அதன் மூலம் அதன் ஆசிரியை திருமதி அலிமா ஜவஹருடனான நட்பு மிகவும் நெருக்கமானது.பரஸ்பரம் நாங்கள் மட்டுமல்ல எனது,அவரது ஒட்டுமொத்த குடும்பமும் மிகவும் ஐக்கியமாகி விட்டோம்.திருமதி அலிமாவைப்பற்றி சொல்ல வேண்டுமானால் அவர் தன் கணவர் ஜவஹருடன் இணைந்து அமீரகத்தில் பல தமிழர்கள் தங்கள் பெயருக்கு பின்னர்  பட்டத்தின் பெயரை போட்டுக்கொள்ள தூண்டுகோலாக இருந்தவர்.ஆம்,விஸ்டம் எஜுகேஷனல் இன்ஸ்டிட்யூட் என்று ஆரம்பித்து கல்விப்பணி ஆற்றி அமீரகத்தில் கல்வில் கற்பிப்பதில் கோலோச்சிக்கொண்டிருந்தவர்கள்.

அவர்களது அழைப்பின் பேரில் பலமுறை நாகர் கோவில் சென்றதுண்டு.ஒரு முறை நாகர் கோவில் செல்லும் பொழுது என் குடும்பத்தினருடன் அவரது ஒட்டு மொத்த குடும்பத்தினரும் ஒரு மேக்ஸிகேப் அரேஞ்ச் பண்ணிக்கொண்டு முட்டம் கடற்கரை, திற்பரப்பு அருவி, பத்மநாதபுரம் அரண்மனை,பேச்சிப்பாறை,முக்கடல் அணை என்று சுற்றியுள்ள சுற்றுலாதளங்களை காண பகலுணவு சமைத்து எடுத்துக்கொண்டு சுமார் 15 பேர்கள் கொண்ட குழுக்களாக காலையிலேயே கிளம்பினோம்.

வேன் பேச்சிப்பாறையை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது.எங்கு பார்த்தாலும் மலை.ஆளரவமின்றி சாலைகள்.திடீரென்று வேன் நின்று விட்டது.அனைவருக்கும் அதிர்ச்சி.ஓட்டுனரும் எவ்வளவோ முயன்று பார்த்தும் வேன் தொடர மறுத்து விட்டது.

நிழலுக்கு ஒரு மரநிழலில் அனைவரும் அமர்ந்து கொண்டோம்.வேன் டிரைவரோ பேச்சிப்பாறை டேமுக்கு எப்படியாவது போய் சேருங்கள்.நான் வண்டியை சரி செய்து கொண்டு அங்கு வந்து உங்களை பிக் அப் செய்கிறேன் என்று சொல்லி விட்டார்.வரிசையாக திட்டமிட்டு செல்லும் இடங்களுக்கு எல்லாம் போவது சாத்தியப்படாது.மிக நீண்ட காத்திருப்புக்கு பின் அந்த வழியே சென்ற ஒரு நகர் பேருந்தை கையக்காட்டி நிறுத்தினோம்.எங்கள் அனைவருக்கும் அதில் இருக்கை இருக்காவிட்டாலும் அட்ஜஸ்ட் செய்து கொள்கிறோம் என்று நடத்துனரிடம் கெஞ்சி ஒரு வழியாக மூட்டை முடிச்சுகளுடன் ஒவ்வொருத்தராக பஸ்ஸில் ஏறினோம்.என்னுடைய முதல் பேருந்து அனுபவமே மிகவும் அவஸ்தையாக ,சங்கடமாக அமைந்து விட்டது.

பஸ்ஸில் எனது மகளுக்கு டிக்கெட் எடுக்கவில்லை.ரயிலில் பயணிக்க ஆறு வயது வரை டிக்கெட் தேவை இல்லை.அது போல் பஸ்ஸுக்கும் ஆறு வயது வரை தேவை இல்லை என்று நாங்களே தீர்மானித்து டிக்கெட் எடுக்காமல் இருந்து விட்டோம். இரண்டு மூன்று ஸ்டாப் வந்ததும் டிக்கெட் பரிசோதகர் வந்துவிட்டார்.


குழந்தைக்கு எத்தனை வயது என்றார்.ஐந்து வயது என்றதும் எப்படி டிக்கெட் எடுக்காமல் பயணிக்கலாம் என்று காச் மூச் என்று கத்தினார்.நாங்களும் அதற்குறிய பைனை கட்டி விடுகிறோம் என்றோம்.அவரோ நடத்துனரையும் ஒரு எகிறு எகிறி விட்டு எங்களிடம் பணத்தை பெறாமலேயே  கீழே இறங்கி சென்றுவிட்டார்.அவர் போனதும் நடத்துனர் “ஐந்து வயது என்று சொல்லி என்னை வம்பில் மாட்ட வைத்து விட்டீர்களே “என்று கடிந்து கொண்டார்.நாங்களோ சங்கடத்துடன்  கூட்ட நெரிச்சலில் அவஸ்த்தைப்பட்டு பயணித்துக்கொண்டிருந்தோம்.

ஒரு வழியாக பேச்சிப்பாறை டேம் வாசலில் பஸ் நின்றதும் இறங்கினோம்.ஆண்கள்: அனைவரும் மூட்டை முடிச்சுகளை தூக்கிக்கொண்டு நடந்தனர்.சுமை பொறுக்க இயலாமல் திரு ஜவஹர் அவர்கள் அவர் சுமந்து சென்ற பெட்டியை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு நடக்கலானார்.அதனை கண்ட அவரது மனைவி”ஐயோ..என் கணவர் அங்கே கோட்டும் சூட்டுமாக அவர் இருக்கும் கெட்அப்பே வேறு. இப்ப இப்படி தலையில் தூக்கி வைத்துக்கொண்டு நடக்கின்றாரே என்று சிரிப்புடன் விசனப்பட்டது இன்னும் நினைவில் நிற்கின்றது.அவரது மகன்களோ”டாடி..துபை பிசினஸை முடித்துக்கொண்டு வந்தால் இங்கே உங்களுக்கு போர்ட்டர் வேலை கைகொடுக்கும் என்று தமாஷ் செய்து இறுக்கமான சூழ்நிலையை கலகலப்பாக்கினார்கள்.

வெயில் மண்டையை பிளந்தது.பசி வயிற்றிக்கிள்ளியது.சாப்பாட்டு மூட்டையை அவிழ்க்க முற்படும் பொழுது உள்ளே சாப்பாட்டுக்கு அனுமதி இல்லை என்று சொல்லி விட்டார்கள்.

பிறகென்ன?மறுபடி மூட்டை முடிச்சுகளுடன் வெளியில் வந்து வாசலில் சாலை ஓரத்தில் கொளுத்தும் வெயிலில் அங்காங்கே இருந்த திண்டு ,கல் மீது அமர்ந்து சாப்பிட்டு முடித்தோம்.

திட்டமிட்ட  இடங்களுக்கெல்லாம் செல்ல முடியாமல் அன்று மாலை திற்பரப்பு அருவிக்கு மட்டும் சென்று  இருந்து குளித்து விட்டு திரும்பினோம்.அன்றைய பயணம் என்றும் மறக்க முடியாத பயணமாக அமைந்து விட்டது.