December 5, 2011

சிங்காரச்சென்னையில் சிங்காரிகள்.

மொடமொடப்பாக கஞ்சி போட்டு அழகாக பின் பண்ணி நேர்த்தியாக கட்டப்பட்ட நெகமம் காட்டன் சேலை.அடிக்கடி பியுட்டி பார்லர் போவதை பறைசாற்றும் வில்லாக வளைந்து நெளிந்த தீட்டப்பட்ட புருவங்கள் .சற்று சுமாரான களை என்றாலும் அவ்வப்பொழுது பேசியலும் பிளீசிங்கும் செய்த காரணத்தினால் செயற்கை களையை உண்டாக்கிய முகத்தோற்றம்.கண்களில் காஜல்,நகங்களில் க்யூடெக்ஸ்,தோளில் ஹாண்ட்பேக் ,கையில் மொபைல் சகிதம் பார்த்தபொழுது எதோ ஐடி கம்பெனியில்தான் வேலை செய்கின்றாள் என்று நினைத்து விடாதீர்கள்.வீட்டு வேலைக்கு செல்பவள்தான் அப்படி ஒரு தோற்றம்.

சேரிப்பகுதியில் பத்துக்கு பத்து அளவிலான சிறிய கடைகளில் பியூட்டி பார்லர் போர்ட் தொங்கும் பொழுதும்,ஆங்காங்கே சிறிய அளவில் பெண்களுக்கான ஜிம்மைக்காணும் பொழுதும் எனக்கேற்பட்ட ஆச்சரியம் கலந்த வினாவுக்கு அந்த பெண்ணைக்கண்ட பொழுது விடை கிடைத்தது.

கணவர் கூலி வேலைக்கு சென்று தினமும் 400 - 500 சம்பாதித்தாலும் ஏகபோகமாக வாழ்வதற்கு கணவன் சம்பாதிக்கும் பணம் போதவில்லை என்ற காரணத்தினால் கணவனை வேலைக்கு அனுப்பி விட்டு வெட்டியாக வீட்டில் இருந்து சீரியல் பார்த்துக்கொண்டிருப்பதை விட இப்படி வேலைக்கு வந்து ஒரே மணி நேரத்தில் 1000 - 1500 ரூபாய் சம்பாதிப்பதில் இப்பொழுது அடித்தட்டு மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.வேலை பார்க்கும் வீடுகள் ஒன்றுக்கும் மேற்பட்டதாக இருப்பது அவரவர்கள் திறமையைப்பொறுத்தது.

இழுத்துக்கட்டிய கண்டாங்கிச்சேலை,தூக்கிய கட்டிய கொண்டை,மஞ்சள் தேய்த்த முகம்,அப்பாவியான முகபாவம்,”இன்னா..வக்கீலம்மா..எதுக்கு கஷ்டப்படுறே.போட்டு வை.நான் வந்து செய்றேன்.உடம்புக்கு படுத்தினால் தேமேன்னு வேலையைப்பார்க்காமல் கொஞ்சம் ரெஸ்ட் எட்துக்கோ.நான் நைட்க்கு வீட்டாண்டே வந்து மிச்ச மீதி வேலை அல்லாத்தையும் பார்த்துக்கறேன்”எஜமானிகள் உடம்புக்கு முடியாவிட்டால் பரிவாக தயவாக ஆறுதல் சொல்லும் முனியம்மாக்களும்,தாயம்மாக்களும் இருந்தாலும் இப்பொழுது இந்த ஹைடெக் சிங்காரிகள் பெருகி இல்லத்தரசிகளை மிரட்டிக்கொண்டிருக்கின்ரனர்.

பிரபல நகைக்கடையில் சேல்ஸ் கேர்ளாக மாதம் 8000 சம்பாதிக்கும் பெண் காலையில் 6 - 7 ஒரு வீட்டிலும் 7- 8 இன்னொரு வீட்டிலும் வீட்டு வேலைகள் பார்த்து மாதம் 2500 வரை சுலபமாக சம்பாதித்து விடுகின்றாள்.எட்டாயிரம் என்பது காலை பத்து மணியில் இருந்து இரவு 9 மணி வரை உழைத்தால்தான் கிடைக்கும்.ஆனால் இரண்டே மணி நேரத்தில் 2500 சம்பாதித்து விடுவது சுலபமாக உள்ளது.

இவ்வாறாக ஹைடெக் ஹவுஸ்மெயிட்கள் அதிகரிக்க அதிகரிக்க வேலையாட்களுக்கான டிமாண்டும் அதிகரித்து விடுகின்றது.இரண்டு படுக்கை அறை கொண்ட 800 சதுர அடி கொண்ட கணவன் மனைவி,இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் ஒரு அடுக்கு மாடி குடியிருப்புக்கு வீட்டை பெருக்கி துடைத்து,பாத்திரங்கள் தேய்த்து,துணிகள் அலச சுமார் 1000- 1200 ருபாய் வாங்குகின்றனர்.அறைகள் கூட ஒன்றும்,ஆட்கள் இன்னும் ஓரிருவர் அதிகமாக இருந்தாலோ இன்னும் ரேட் எகிறி விடும்.

புதியதாக வேலையாள் நியமிக்கும் பொழுது வீட்டம்மாக்களுக்கு பொறுமை அதிகமாகவே தேவை இருக்கின்றது.
“வீட்டை பார்க்கணும்”
சரி என்று அனுமதித்தால் உதட்டை உச்சுக்கொட்டி ”வீடு கொஞ்சம் பெரிசூஊஊ தான் ” என்பதோடு நின்று விடாது.
”வீட்டில் எத்தனை ஆட்கள் இருக்கின்றார்கள்? ,அடிக்கடி விருந்தினர்கள் வருவார்களா?அடிஷனல் வேலைகள் எல்லாம் சொல்லக்கூடாது.பக்கத்தில் உள்ள கடைக்கு கூட செல்ல மாட்டேன்,பாத்திரம் அதிகம் போடக்கூடாது,பெருக்கும் பொழுது ஆங்காங்கே இருக்கும் பொருட்களை நீங்கள் தான் எடுத்து வைக்க வேண்டும்,வாரத்திற்கு ஒரு நாள் வரமாட்டேன்.அவ்வப்பொழுது உடம்புக்கு முடியாவிட்டால எடுக்கும் லீவுக்கு சம்பளத்தை பிடிக்க கூடாது..இப்படி அவர்கள் போடும் கண்டிஷனுக்கு வீட்டம்மாக்கள் சற்றே மிரண்டு போனாலும் வேலைக்கு ஆள் வைத்தே ஆகவேண்டும் என்பதில் தீர்மானமாக இருப்பதால் எப்படிபட்டவர்களுக்கும் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் உடனடியாக வழங்கப்பட்டு விடுகின்றது.

பழைய வீடுகள்,டைல்ஸ் தரைப்போடப்படாத வீடுகள் பக்கம் இவர்கள் எட்டியும் பார்ப்பதில்லை.அப்படி எட்டிப்பார்த்தாலும் அதற்கு ரேட்டே தனி.கூட்டுக்குடும்பம் என்றால் சொல்லவே வேண்டாம்.”அந்த சேட்டம்மா வீடா?கச கச என்று ஆட்கள் ரொம்ப இருப்பாங்க.நமக்கு சரிப்பட்டு வராது.”இப்படி கமெண்டுகள் வரும்.

அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வழங்கப்பட்டு வேலைக்கு வர ஆரம்பித்து விட்டார்களா?அப்பொழுது பிடிக்கின்றது வீட்டம்மாக்களுக்கு ஏழரை.முதல் இரண்டு நாள் சொன்ன நேரத்திற்கு வந்தவள் அடுத்த நாள் ஒரு மணி நேரம் லேட்.வர மாட்டாள் போலும் என்று பாதி பாத்திரம் தேய்த்துக்கொண்டிருக்கும் பொழுது உள்ளே நுழைவாள்.மறுநாள் நேற்று லேட்டாகத்தானே வந்தாள் என்று பாத்திரத்தை போட்டு வைத்திருந்தால் வேலைக்கு வரவே இல்லை.கொடுத்து இருக்கும் செல்போனுக்கு அழைத்தால் ஒன்று ஸ்விட்ச் ஆஃப் அல்லது பிசி என்று கீறல் விழுந்த ரெகார்டாய் வெறுப்பேற்றும்.

பதினோரு மணிக்கு வந்தாலும் சூடாக பில்டர் காபி கலந்து கொடுத்தாக வேண்டும்.கலந்து வைத்த காபியை சூடு பண்ணி கொடுக்கக்கூடாது.இது எழுதப்படாத சட்டம்.இதில் சிலர் நான் அதிகமாக காபி டீ சாப்பிடுவதில்லை .பாலாக தந்து விடுங்கள் என்று கூறி வயிற்றில் கடுங்காப்பியை வார்ப்பார்கள்.

வார்த்த தோசையை வாயிலும் வைக்க மாட்டார்கள்.ரங்ஸ்களே பல தடவை அட்ஜஸ்ட் செய்து ஹாட்பாக்ஸ் திறந்து வார்த்துப்போட்ட தோசையை வாய் திறக்காமல் சாப்பிட்டாலும் இவர்களுக்கோ அவர்கள் கண் முன்னே தவாவைப்போட்டு சுடச்சுட வார்த்து கொடுக்க வேண்டும் என்பது இல்லத்தரசிகளின் தலைவிதி.

தீபாவளி வந்தால் ஒருமாத சம்பளம் போனஸ்.பொங்கலுக்கும் கண்டிப்பாக கொடுத்தாக வேண்டும்.மற்றும் சிறு சிறு பண்டிகைகளுக்கு அவ்வப்பொழுது நூறு இருநூறுமாக கொடுக்காவிட்டால் முகம் ஒரு முழத்துக்கு தூக்கிப்போகும்.வீட்டில் விருந்தினர்கள் வந்துவிட்டால் அவர்களது துணிகளை கண்டிப்பாக தோய்க்க மாட்டேன் என்று ஆரம்பத்திலேயே கண்டிஷன் போட்டு விட்டாலும் அவர்கள் போனதும் ஒரு தொகையை கேட்டு வாங்கிகொள்வதில் முனைப்பு காட்டுவார்கள்.ஏனென்றால் பாத்திரங்கள் சற்று அதிகமாகி விட்டனவாம்.

இத்தனையும் சகித்துக்கொண்டு வேலைக்கு ஆள் வைத்துத்தான் ஆகவேண்டும் என்பதில் முனைப்பாக சென்னை வாழ் இல்லத்தரசிகள் இருப்பதுதான் எனக்கு தவுசண்ட் மில்லியன் டாலர் கேள்வி.

December 2, 2011

தலைமகன்

அப்பாவின் போனஸ் காசோலையாய் வந்தது
அம்மாவின் நகைகளோ கரன்சியாக மாறியது
வீட்டுப்பத்திரமோ வங்கியில் சரணம்
அம்மாவுக்கு தந்த சீதனக் காணி
சடுதியில் கைகள் மாறி
காந்தி தாத்தாபடம் போட்ட
சலவைத்தாளாய் ஆனது

இத்தனையும் போதாதென்று
அக்காவின் திருமணத்திற்கு
சேர்த்துவைத்த பொன்னகை சல்லிசாக
சென்றன சேட்டுக்கடை நோக்கியே
பாட்டி காதில் மினுமினுத்த வைரகம்மலும்
செவிமடலை விட்டு கழன்று போனது

வந்திருந்த தீபாவளி புத்தாடை காணவில்லை
வருடந்தோறும் செய்து வந்த பட்சணங்கள்
சுவைக்கவில்லை
பட்டாசு ஒன்றைக்கூட கையாலே
தொட்டதில்லை
அத்தனையும் விட்டுக்கொடுத்து
குடும்பத்தினர் தலைமகனை
மேல்நாடு அனுப்பிவைத்தர்

மேல்படிப்பு முடித்தமகன்
அத்தனையும் மீட்டிடுவான்
அமோகமாக வாழ்ந்திடுவான்
சென்ற செல்வம் திரும்பி வரும்
செல்லமகள் கரைசேர்வாள்
சோர்ந்த உள்ளம் மலர்ச்சி கொள்ளும்
எண்ணில்லா கனவுகளுடன்
நாளதனை எண்ணிக்கொண்டு
நல் வழியை எதிர்பார்த்து
ஆவலுடன் காத்திருந்தர்

வந்தன்றோ மின்னஞ்சல் ஒன்று
அதுகண்டு குடும்பத்தினர்
கணினி முன்னே தான் அமர்ந்து
மின் திரையை நோக்கினரே
பல்கலைகழகத்தில் உடன்படிக்கும்
கேத்தரீனை மணந்து கொண்டேன்
வாழ்வதற்கு சொந்தமாக
சின்னவீடு வாங்க வேண்டும்
சொகுசாக அங்கு வாழ
பொருளெல்லாம் சேர்க்கவேண்டும்
சுற்றித்திரிந்துவர
சொகுசுக்கார் வாங்க வேண்டும்
தேவை எனக்குங்கள் ஆசிர்வாதம்
மெல்லினமாய் கேட்டிருந்தான்
மேல் நாட்டு தலைமகன்

November 19, 2011

பார்பிகியூ நேஷன்நகரின் ஹாட் பிளேஸில் அமைந்துள்ள பார்பிகியூ நேஷன் உணவுப்பிரியர்களுக்கு ஏற்ற இடம்.பஃபேயில் ஸ்டார்டர் ஆக மட்டும் பலவித கிரில்ட் ஐட்டங்கள் டேபிளிலேயே கிரில் வசதியுடன் சூடாக பறிமாறுகின்றனர்.
ஸ்டார்டர் மெனுவைப்பாருங்கள்.

லெபனீஷ் மஷ்ரூம்
தந்தூரி பனீர்டிக்கா
பார்பிகியூ பைனாப்பிள்
பார்பிகியூ கேப்ஸிகம்
இந்தோனிசியன் கிரில் வெஜிடபிள்
நிஜாமி பட்டி
கஜுன் ஸ்பைஸ்டு பொடடோ
அங்கூர் டங்டி
சிக்கன் சாத்தே வித் பீ நட் சாஸ்
மட்டன் ஜிலபி ஷீக்
வியட்னாமிஸ் பிஷ்
ஜிங்கா கட மசாலா
பிரான்ஸ்
பிரைட் சிக்கன் லெக்பீஸ்
நான் வெரைடீஸ்
மட்டன் கபாப்

இதை சாப்பிட்டே மூச்சு முட்டிபோய் இருக்கும் பொழுது காத்திருக்கின்றது பஃபே.அனைத்து ஐட்டங்களையும் துளித்துளியாக கூட சாப்பிட முடியாது.
மெய்ன் மெனு லிஸ்டை பாருங்கள்.

வெஜ் மஞ்சூ சூப்
சிக்கன் சூப்
பாயா சொர்பா
சிக்கன் தம் பிரியானி
நிஹாரிகோஸ்ட்
பட்டர் சிக்கன் மசாலா
கிரேப் காஸி
பிஷ் இன் ஹாட் பேஸில் சாஸ்
பனீர் ஜல்பர்ஸி
நவரத்னகுர்மா
தில்குஷ் கோஃப்தா கறி
கிரிஷ்பி கெர்லா
ஆலூ கோபி டிரை
ரைஸ் வெரைடீஸ்
சாலட் வகைகள்
அப்பளம் வற்றல் சிப்ஸ் வடகம் ஊறுகாய் வகைகள்.
வெஜ் புலாவ்
செஷ்வான் நூடுல்ஸ்
மஸ்ரூம் மஞ்சூரியன்
தால் புகாரா
ஃபிர்னி
ஐஸ் க்ரீம்
கேக் வகைகள்
ஹாட் குலோப்ஜாமூன்
மூஸ்
சாக்லேட் பிரவுனி
நறுக்கிய பழவகைகள்சூடான வெஜ் மஞ்சூ சூப்.காரம் அதிகமாக இருந்தாலும் சுவையாக இருந்தது.
டேபிளிலேயே பொருத்த பட்ட கிரிலில் கிரில் ஆகிக்கொண்டிருக்கும் பி பி கியூ ஐட்டங்கள்.மிகவும் ஸ்பைசியசான ஐட்டங்கள்.காரத்தை சற்றுக் குறைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
கிரில் ஐட்டங்களை முன்பு எல்லாம் நன்றாக கிரில் செய்து தருவார்கள்.இப்பொழுது அதிகளவு கூட்டத்தினாலோ என்னவோ வெந்தும் வேகாததுமாக கொண்டு வருகின்றார்கள்.டேபிளில் இருக்கும் கிரிலில் நன்கு வேக வைத்து வேகும் வரை காத்திருந்து சாப்பிட வேண்டியதுள்ளது.
சாஸ் வகைகள்.மாரினேட் பண்ணும்வகையில் சாஸ் வகைகளும் உண்டு.
நன்கு கிரில் செய்யப்பட்ட பி பி கியூ வகைகள்
மெய்ன் கோர்ஸ்.
இன்னொரு விதம் இது லைட்டாக இருக்கும்.
மூஸும் ஐஸ் க்ரீமும்
இதனையும் கடைசியாக ஒரு கட்டுகட்டலாம்.
சாக்லேட் சாஸுடன் ஐஸ் க்ரீம் உடன் சாக்லேட் பிரவுனி.


பார்பிகியூ நேஷன்
சோமசுந்தரம் தெரு
வடக்கு உஸ்மான் சாலை
ஜாய் ஆலுகாஸ் ஜுவல்லர்ஸ் அருகில்
தி.நகர்
சென்னை - 17

பெரியவர்கள்:600
சிறியவர்கள்:300
1-5 வயதினர்: இலவசம்
November 17, 2011

மழலை உலகம் மகத்தானது..!

சில வருடங்களுக்கு முன்னர் தீவுத்திடலில் நடக்கும் தமிழக அரசின் சுற்றுலா பொருட்காட்சிக்கு சென்று இருந்தேன் ஊரில் இருந்து வந்திருந்த உறவினர்களுடன்.கூட்டத்திற்கு பயந்து விடுமுறை அல்லாத நாட்களில் செல்வதுதான் வழக்கம்.எதிர்பார்த்தது போல் அன்று கூட்டம் அவ்வளவாக இல்லை.

என் குழந்தைகள் கேட்ட பொருட்களை வாங்கிக்கொடுத்து விட்டு புக் ஸ்டாலுக்கு சென்று புத்தகங்கள் வாங்கிக்கொண்டு ஹாண்ட்பாக்கை திறந்து பணம் எடுக்க பர்ஸை தேடினால் பர்ஸ் தென்படவே இல்லை.அதிர்ந்து போய் ஹாண்ட்பேக்கையே தலை கீழாக கவிழ்த்து தேடியும்..ம்ஹும்...சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.

சற்று முன் சென்று வந்த ஐஸ்க்ரீம் கடை,பஞ்சு மிட்டாய்க்கடை,மிளகாய்பஜ்ஜிகடை மூன்றுக்கும்தானே சென்றோம் என்பது ஞாபகத்தில் வந்தது.இது தவிர வேறு எங்கும் செல்ல வில்லையே?பணம் மட்டுமின்றி டெபிட் கார்டு,முக்கிய சில பில்களும் அந்த பர்ஸில் இருந்ததால் மனம் பதறியது.

ஓட்டமும் நடையுமாக மூன்று கடைகளுக்கும் சென்று கேட்டேன்.கூட்டம் அதிகம் இல்லாததால் போய் கேட்கவும் இயன்றது.மூன்றுகடைகளிலுமே இல்லவே இல்லை என்று கூறிவிட்டனர்.எனக்கோ பஞ்சு மிட்டாய் கடைக்காரரின் மீது சந்தேகம்.மீண்டும் அங்கே சென்று முக்கியமான கார்டு,பில்கள் எல்லாம் உள்ளது என்று குரலை தாழ்த்தியும் உயர்த்தியும் கேட்டுப்பார்த்து விட்டேன்.

“இருந்தால் தராமல் என்ன செய்வோம்.உங்கள் பர்ஸ் எங்களுக்கு எதற்கு?”சற்று எரிச்சலுடன் குரலை உயர்த்தினார்.
”சரிங்க பரவாஇல்லை.தொலைந்து போன பணத்தை விட இறைவன் எனக்கு பன்மடங்கு தருவான்.யார் அதனை எடுத்து இருந்தாலும் அந்த பணத்தை விட பன்மடங்கு நஷ்டம் கிடைக்கட்டும்.நான் பர்ஸை எடுத்தவர்களை சொன்னேன்”என்று கூறி விட்டு அந்த இடத்தை விட்டும் அகன்றேன்.சந்தேகம் அதிகமாகவே வலுத்தது.பஞ்சுமிட்டாய்க்காரும்,பக்கத்திலேயே நின்றிருந்த அவரது மகனது கண்களிலும் நன்றாகவே கள்ளத்தனம் தெரிந்தது.

பர்ஸ் தொலைந்ததற்கு என்னுடைய கவனக்குறைவுதான் காரணம் என்று என்று நொந்து போய் அழைத்து வந்தவர்களுக்கு ஏதுவுமே வாங்கிக்கொடுக்க இயலவில்லையே என்று மனம் வெதும்பி,அவர்களது சந்தோஷம் கெடக்கூடாது என்பதற்காக ஒரு ஓரமாக அமர்ந்து விட்டேன்.மேலே செல்வதற்கு மனதில்லாமல்.

கூட வந்திருந்தவர்களும் சுற்றிப்பார்த்துவிட்டு வந்ததும் இருட்டும் முன்னரே திரும்பி விட்டோம்.சரியாக பொருட்காட்சி வாசலை நெருங்கும் பொழுது மூச்சு இரைக்க பஞ்சு மிட்டாய் கடையில் இருந்த சிறுவன் “அக்கா..அக்கா..”என்று கூவியபடி ஓடி வருகின்றான்.

திரும்பிபார்த்தால் அவனது கையில் எனது பர்ஸ்.”இந்தாங்கக்கா உங்க பர்ஸ்.நானும் அப்பா மாதிரி பஞ்சு மிட்டாய் கடை வைத்து காலம் தள்ளக்கூடாது.படித்து வாழ்க்கையில் முன்னேறனும்.இதனை சொல்லியே அப்பாகிட்டே சண்டை போட்டு பர்ஸை வாங்கி வந்தேன்.”பர்ஸை என் கைகளில் தந்த பொழுது என் கண்கள் கலங்கிப்போனது.சிறுவனின் வார்த்தைகளில் திகைத்துப்போனேன்.

பர்ஸை திறந்து சிறிய தொகையை அவனுக்கு அன்பளிப்பாக வழங்க விரும்பியும் அவன் பிடிவாதமாக மறுத்து விட்டான்.ஏழ்மையில் வாழும் அந்த சிறுவனின் பெரிய மனதினை நினைக்கும் பொழுது என்னால் இன்னும் கூட வியப்பை அடக்க இயலாது.இப்பொழுதும் அந்த சிறுவன் வளர்ந்து அவன் விருப்பபடி நன்கு படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்று மனதிற்குள்ளாக பிரார்த்தனை செய்து கொள்வேன்.

இப்பொழுது சரி பொருட்காட்சிக்கு சென்றால் மனதினை விட்டும் அகலாத அந்த சிறுவனின் முகம் தேடி என் கண்கள் அலைவதை கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை.

கணேஷ் அண்ணா அழைத்த தொடர் பதிவு.அழைப்புக்கு மிக்க நன்றி!மேலும் குழதைகள் தொடர்பாக நான் எழுதிய கட்டுரைகள் பார்க்க கீழுள்ள சுட்டிகளை சொடுக்கவும்.
November 8, 2011

சர்வம் மாந்தர் மயம்ஏங்க..உங்கம்மாவுக்கு எத்தனைதான் படிச்சு படிச்சு சொன்னாலும் அறிவே இல்லையா?”

“.....”

சின்னஞ்சிறு பொண்ணாட்டம் ஜோல்னாபையையும் தூக்கி தோலில் மாட்டிட்டு அதென்ன கடமை போல வாரத்துக்கு மூன்று முறை பொண்ணை பார்க்கப்போறது?”

“....”

பொண்ணைப்பார்க்கப் போறதுமில்லாமல் மாசத்துக்கு வாங்கிப்போட்ட மளிகை சாமானை வேறு வழிச்சு துடைச்சுடுறா.”

“....”

போன வாரம் பொண்ணுக்கு காரட் அல்வா செய்றேன்னு இருந்த சர்க்கரை எல்லாம் காலி.மாசக்கடைசியிலே நானல்ல ததுங்கிணிதோம் அடிச்சுக்கணும்

“....”

மருமவன்பிள்ளை ஓட்டல் வச்சி நடத்தறான்.தினமும் வக்கனையா வாய்க்கு ருசியா வகை வகையா சாப்பாடு கொண்டு வந்து தருவான்னு தான் உங்கம்மா நாக்கைத்தொங்கப்போட்டுக்கொண்டு பொண்ணு வீட்டுக்கு போறாங்க.இந்த வயசிலும் இத்தனை நாக்கு ருசிக்கு அலையக்கூடாது

“....”


பிடிச்சு வச்ச பிள்ளையாராட்டம் இருக்கீங்களே..வாய் திறந்து ஏதாவது சொல்லுறீங்களா?”

வைதேகி..என்னை என்ன பண்ணச்சொல்லுறே.வயசானவங்க.கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க.இப்ப உனக்கு சர்க்கரைதானே வேணும்.ஆஃபீஸ் போய்ட்டு வர்ரச்சே ரெண்டு கிலோ வாங்கி வந்துடுறேன்.போதுமா

அதென்ன பொண்ணு வீடு கிட்டேவா இருக்கு.டிரைனில் போய் அங்கிருந்து பஸ் பிடித்து ஆவடி போறதுன்னா சும்மாவா?நம்ம வீட்டுக்குள்ளே கொஞ்ச நாழி இருந்தான்னா அங்கே வலிக்குது,இங்கே பிடிக்குதுன்னு எப்ப பாரு மாய்மாலம்.பொண்ணு வீடு போறதுன்னா ஜிங்கு ஜிங்குன்னு சின்ன பொண்ணு மாதிரி கிளம்பிடுறது

விடாமல் தூற்றிக்கொண்டிருந்த மனைவியின் வாயால் சலிப்படைந்த சங்கர் எரிச்சல் மேலிட சட்டையை மாட்டிக்கொண்டு வெளியில் கிளம்பினான்.

அவனுக்கு தன் தாய் மீதும் சற்று கோபம் வந்தது.அதென்ன ஒரு நாளில்லாமல் எப்பொழுதும் மகள் வீடு மகள் வீடு என்று அலைவது?வைதேகி சொல்லுவதிலும் சற்று நியாயம் உள்ளதுதானே?இருந்தாலும் நாக்கு ருசிக்காக தன் தாய் மகள் வீட்டுக்கு சென்று வருவதாக வைதேகி குறிப்பிட்டதை எண்ணி மிகவும் ரோஷப்பட்டான்.இங்கு கைக்குழந்தையுடன் வைதேகி தனியே கிடந்து அவஸ்தை படுவது எல்லாம் அம்மாவின் மனதை தைக்க வில்லை.மகள் இரட்டை குழந்தை பெற்று கஷ்டப்படுகிறாள் என்று அடிக்கடி இந்த வயதிலும் தனியாக அவ்வளவு தூரம் சென்று வருவது அவனது மனதினை உறுத்தியதுதான்.

ஆயிரம்தான் இருந்தாலும் அம்மாமார்களுக்கு மகள் வயிற்று பேரன் பேத்திகள் என்றால் தனிப்பிரியம்தான் போலும்.நினைக்கும் பொழுது மனதை சற்று வலித்தாலும் தாயை தட்டிக்கேட்கும் தைரியம் துளி கூட வரவில்லை சங்கருக்கு.

குழந்தையை தூளியில் போட்டு தூங்க செய்து கொண்டிருந்த வைதேகி அடுக்களையில் இருந்து வந்த ஏலக்காயின் மணம் நாசியை துளைக்க எட்டிப்பார்த்தாள்.

மாமியார் செண்பகம் அடுப்பில் வைத்து எதையோ கிளறிக்கொண்டிருந்தாள்.

என்னத்தை பண்ணுறீங்க?”

பூர்ணிமாவுக்கு பிடிக்கும்ன்னு கொஞ்சம் தேங்காய் பர்பி கிளற்றேன்.”

போன வாரம் காரட் அல்வா பண்ணியதில் இருந்த சர்க்கரை எல்லாம் காலி.உங்கள் மகன் கிட்டே சொல்லி இன்னும் ரெண்டு கிலோ வாங்கச்சொன்னேன்.அதனையும் காலி பண்ணுறீங்களா

வைதேகியின் குரலில் சூடு கிளம்பியது.

என்ன நீ..பூர்ணிக்கு செய்வதை எல்லாம் கணக்கு பார்க்கிறே?ஒவ்வொருத்தி மாதிரி அந்த சீர்,இந்த சீர் என்று அண்ணன் கிட்டே வந்து நிக்கறாளா?”வெடுக்கென்று செண்பகத்திடம் இருந்து பதில் வந்தது.

இந்த வயசிலேயும்,வேகாத வெயிலிலேயும் இப்படி மைலாப்பூருக்கும்,ஆவடிக்குமா அலையறீங்களே.தேவையா?”

எது தேவை தேவை இல்லேன்னு எனக்கு தெரியும்.நீ மேலே பேசாதே

திருமணமாகி நாண்கு வருடங்கள் ஆகியும் இந்த மாமியாரை வழிக்கு கொண்டு வர முடியவில்லையே.பக்கத்து வீட்டு பவானியின் மாமியார் பெட்டிப்பாம்பாய் அடங்கி விட்டாளே?இவளை அடக்க முடிய வில்லையே?எல்லாம் இவர் கொடுக்கின்ற இடம்.பற்களை கடித்துக்கொண்டு நகர்ந்தாள்.

செல் போன் அடித்தது.வைதேகியின் அண்ணன்தான்.செங்கல்பட்டில் வசிக்கும் அவர்கள் குடும்பத்துடன் ஒரு வேலையாக சென்னை வந்திருப்பதாகவும் அங்கு வந்து இரவு சாப்பாட்டுக்கு மேல் டிரைனில் செங்கல் பட்டு திரும்பபோவதாகவும் போனில் தகவல் வந்தது.

இந்த நேரம் பார்த்து மாமியாரும் மகள் வீட்டுக்கு கிளம்பி விட்டதே.ஒருத்தியாக இருந்தல்லவா அத்தனை வேலையையும் பார்க்க வேண்டும்.’எண்ணம் மனதில் ஓடோடிக்கொண்டிருக்க கைகள் தனிச்சையாக சாம்பாருக்கும் பருப்பை குக்கரில் வைத்து விட்டு பிரிஜ்ஜை திறந்து ஸ்டோர் பண்ணி இருக்கும் காய்கறியையை ஆராய்ந்தது.

கேரட் சாலட்,பீன்ஸ் பொரியல் உருளைக்கிழங்கு பொடிமாஸுடன் நாலு அப்பளத்தையும் பொரித்தால் முடிந்தது வேலை.கடகடவென்று வேலையை ஆரம்பித்தாள் வைதேகி.

சாப்பிட்டு முடித்து அண்ணனுடன் பேசிகொண்டிருந்தாள்.

இருந்தாலும் உன் மாமியாருக்கு இத்தனை அழுத்தம் ஆகாது.அதென்ன இங்கே இருக்கும் பேரன் பேத்திகளை கவனிப்பதை விட்டுட்டு மகள் வீடு மகள் வீடு என்று அலைவது.ஒட்ட நறுக்கி வை உன் மாமியாரை..இல்லேன்னா உனக்குத்தான் கஷ்டம்

வைதேகியின் அண்ணி தூபம் போட அன்றிரவு மாமியார் மகள் வீட்டில் இருந்து திரும்பி வந்ததும் சண்டைக்கோழியாக சீறீனாள்.

என்றுமில்லாமல் வார்த்தைகள் தடித்து,குரல்களின் தொணி ஓங்கி சண்டை உச்சகட்டத்தில் செல்ல தொலைக்காட்சியில் இருந்த சங்கர் என்றுமில்லாமல் தாயின் மீது பாய்ந்தான்.

அதென்னமா..ஒரு நாள் போல் இல்லாமல் எப்ப பாரு மகள் வீடு மகள் வீடு என்று அலைவது.இவளும் கைக்குழந்தையுடன் தனியா இருந்துதானே கஷ்டப்படுறாள்

என் குழந்தைகள் எல்லாம் உனக்கு பேரன் பேத்திகளா தெரியலியா?”

உன் பொண்ணு வயிற்று பிள்ளைகளைமட்டும்தான் கவனிச்சுப்பியா?”

இருந்தாலும் உனக்கு நன்றியே இல்லேம்மா

இந்த வார்த்தைகள் போதாதா?செண்பகம் மூக்கை சிந்திக்கொண்டு படாரென்று கதவை அடித்து சாற்றிக்கொண்டு தன் அறைக்குள் புகுந்துகொண்டாள்.

தாயின் மீது கணவன் காட்டிய கோபம் வைதேகிக்கு ஆறுதலைத்தந்தது.

என்ன சண்டையிட்டு என்ன செய்ய?சற்றேனும் பொருட்படுத்தாமல் ஒருநாள் விட்டு ஒரு நாள் அலுப்பு சலிப்பு இல்லாமல் மகள் வீடு செல்வதும் தவறவில்லை.மகனும் மருமகளும் அவ்வபொழுது சாடைமாடையாகவும் நேரடியாகவும் சண்டையிட்டு வருவதும் அந்த வீட்டின் வழக்கமாகிப்போனது.

அன்று..

மதிய சாப்பாட்டுக்கு பின் குட்டித்தூக்கத்தில் ஆழ்ந்தவள் காலிங் பெல் ஒலி கேட்டு எழுந்து கதவைதிறந்தாள் வைதேகி.

மாமியார்தான்.வழக்கம் போல் காலையில் மகள் வீட்டுக்கு சென்றால் இரவு வருவதற்கு ஏழு எட்டு மணியாகி விடும்.இன்று அதிசயமாக நாண்கு மணிக்கே வந்து நிற்கிறாளே?அதுவும் முகமெல்லாம் சோர்ந்து போய்,விழிகள் எல்லாம் சிவந்து போய்...

வெறுப்பில் எதுவும் கேட்கப்பிடிக்காமல் விடு விடுவென்று தன் அறையினுள் சென்று தூக்கத்தை தொடர்ந்தாள் வைதேகி.

சங்கர் ஆஃபீஸில் இருந்து திரும்பி டிபன் காபி சாப்பிட்டு முடித்து விளக்கு வைத்த பிறகும் செண்பகம் தன் அறையினுள் இருந்து இன்னும் வராததை அறிந்து சங்கர்தான் தாயின் அறையை நோக்கிப்போனான்.

அங்கே அவன் கண்ட காட்சி அதிர்ச்சியை தந்தது.செண்பகத்தின் கண்களில் இருந்தல் தாரை தாரையாக கண்ணீர்.அழுது அழுது சிவந்த விழிகளுடன் தன் தாய் இருந்த கோலம் சங்கரை பதறச்செய்தது.

அம்மா என்னம்மா ஆச்சு?ஏன் அழுதுட்டு இருக்கே?”

சப்தம் கேட்டு வைதேகியும் உள்ளே நுழைந்தாள்.

எனக்கு இந்த அவமானம் தேவையா?ரெட்டைக்குழந்தை பெற்று பொண்ணு தனிக்குடித்தனத்தில் கஷ்டப்படுறாளேன்னு பூரணி வீட்டுக்கு நீங்கள்ளாம் என்ன சொல்லியும் கேட்காமல் அவ்வளவுதூரம் என் வயசைக்கூட பார்க்காமல் போய் வந்தேனே.எனக்கு இதுவும் வேண்டும்,இன்னுமும் வேண்டும்

ஏம்மா என்ன ஆச்சு?”

பூரணியோட மாமியார்க்காரி நான் அடிக்கடி அங்கே போய் வருவதை குறித்து அசிங்கமா பேசிட்டா என்னை?”

அங்கு நடந்தவைகளை அழுதபடி செண்பகம் விவரித்தபொழுது சங்கர் ஆத்திரப்பட்டான்.

இதற்குத்தான் படிச்சு படிச்சு சொன்னேன்.கேட்டியா?பொண்ணு கஷ்டப்படுறா கஷ்டப்படுறான்னு புலம்பி தவித்தே.இப்ப அசிங்கப்பட்டு நிக்கறே.இதற்குத்தான் சொல்லுறது மகள் வீடானாலும் எல்லாம் லிமிட் தான்.லிமிட்டைத்தாண்டி போனதினாலே இப்ப இப்படி அவமானப்பட்டு அழறே.உனக்கு இதுவும் வேணும் இன்னுமும் வேணும்

அருகில் இருந்து அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த வைதேகிஎன்னங்க..அவங்களே மனசொடிஞ்சி போய் இருக்காங்க.நீங்க வேற வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சறீங்களே..”கணவனை அதட்டினாள்.

என்னான்னான்னு நினைத்துட்டு இருக்கா அந்த கண்டாங்கி சேலைக்காரி.உண்ணத்தின்ன வக்கிலாமலா நீங்க அங்கே போனீங்க?அள்ளிக்கொண்டுபோய் தட்டவல்லவா செய்தீங்க.நாக்கில் நரம்பில்லாமல் பேசிய அந்தபொம்பளையை நான் பக்கத்தில் இருந்தேன்னா என் அத்தையை நீ எப்படி அப்படி பேசப்போச்சுன்னு நாக்கை இழுத்து வச்சி அறுத்துடுவேன்.வரட்டும் ஒரு நாள் என்கிட்டே அந்த பொம்பளை மாட்டாமலா போய்டுவாள்.நம்ம குடும்பம் என்ன?அந்தஸ்து என்ன?தராதரம் இல்லாமல் என் அத்தையை பார்த்து பேசிய அந்த பொம்பளையை நினைச்சால் மனசெல்லாம் கொதிக்கறதே.வச்சிக்கறேன்.யாரைப்பார்த்து என்ன வார்த்தை பேசிட்டா அந்த பொம்பளை.அத்தே,நீங்க இதையே நினைச்சி உருகிட்டு இருக்காதீங்க அத்தே..எழுந்துக்குங்க..போய் முகம் அலம்பிட்டு வாங்க.சூடா கிச்சடி கிளறி வச்சிருக்கேன்.சாப்பிட்டுவிட்டு காபி குடிக்கலாம்.”

இதமாக பேசி கைகளை பிடித்து எழ உதவிய மருமகளின் கரத்தை பற்றிக்கொண்டு எழுந்த செண்பகத்திற்கு அந்த நொடி இதமாக இருந்தது.

November 4, 2011

பெயர் புராணம்1.செங்கல்சூளை அதிபர் - செங்கல்வராயன்.

2.பட்டுத்தறிகாரரின் மனைவி - பட்டம்மாள்

3.ராப்பிச்சைக்காரன் - ஆண்டியப்பன்

4.ஆண்கள் பியூட்டிபார்லர் முதலாளி - அழகேசன்

5.பக்கத்து வீட்டில் பாய்ந்து பாய்ந்து சண்டை போடுபவர் - வீரலக்‌ஷ்மி

6.முதிர்கன்னி - கண்ணியம்மாள்

7.வக்கீல் - சட்டநாதன்

8.கண்மருத்துவர் - கண்ணதாசன்

9.கேஷியர் - மணிவண்ணன்

10பால்கறப்பவர்- பாலுசாமி

11.பொதுமருத்துவர் - வைத்தியநாதன்

12.பீடியாட்ரிஷியன் - குழந்தைசாமி

13.கார்டியாலஜி - இருதயராஜ்

14.பிஸ்கட் கடை முதலாளி - மேரி

15.பாலிகிளினிக் கம்பவுண்டர் - கபாலி

16.நகை ஆச்சாரி - தங்கமணி

17.சலூன்கடைக்காரர் - பொன்முடி

18.திருமணதகவல் மையம் நடத்துபவர் - பொண்ணுசாமி

19.பழக்கடைக்காரர் - கனிவர்மன்

20.ஸ்வீட்கடைக்காரர் - பாதுஷா

21.டெண்டிஸ்ட் - பல்ராம்

22.மலை ஏறுபவர் - அண்ணாமலை

23.அனாதை இல்லம் நடத்துபவர் - அடைக்கலநாதன்

24.தமிழாசியர் - இலக்கியன்

25.ஓவியன் - கலைவாணன்

26.முடிதிருத்துபவர் - சிங்காரவேலன்

27.பொக்கே விற்பவர் - மலர்வண்ணன்

28.வாட்ச்கடைக்காரர் - மணியன்

29.வானிலை அறிவிப்பாளர் - மேகநாதன்

30.சைக்கியாரிஸ்ட் - அறிவரசன்

31.பாகன் - ஆனைமுத்து

32.சந்தேகப்படுபவர் - ஐயம்பெருமாள்

33.கார் மெக்கானிக் - கார்மேகம்

34.பிட் அடித்து பாஸ்பண்ணியவர் - தொல்காப்பியன்

35.லாயர் - சட்டநாதன்

36.டாஸ்மாக் கடைக்காரர் - மதுசூதன்

37.பெயிண்டர் - பஞ்சவர்ணம்

38.பூக்காரி - தங்கபுஷ்பம்

39.லாண்ட்ரிக்கடைக்காரர் - வெள்ளைச்சாமி

40.டான்ஸ்மாஸ்டர் - ஆடலரசு

41.பாட்டுவாத்தியார் - சிங்காரம்

42.டிரைவர் - மயில்வாகனம்

43.போஸ்ட்மேன் - அஞ்சல் நாதன்

44.நிதியமைச்சர் - மணிவண்ணன்

45.எலக்ட்ரீஷியன் - ஞான ஒளி

46.டெண்டிஸ்ட் - பல்ராம்

47.மீன்வியாபாரி - அமீன்

48.ஸ்வீட் தயாரிப்பாளர்- இன்பநாதன்

49.பால்வியாபாரி - கோபால்சாமி

50.டெய்லர் - தையல்நாயகி

51.பாம்பாட்டி ‍‍‍- நாகமணி

52.சந்தனமரம் கடத்தல்காரர் ‍ - சந்தானம்

53.ஒல்லியான ஆசாமி ‍ - பிச்சுமணி

54.ஆசிரியர் ‍ ‍ - குருசாமி
டிஸ்கி:இது யாரையும் குறிப்பிட்டு எழுதப்பட்டவை அல்ல.வெறும் தமாஷ் மட்டிலுமே.குறிப்பிட்டு இருக்கும் பெயர் உங்களுடையதாக இருப்பின் மன்னிக்க வேண்டுகின்றேன்!

பின்னூட்டுபவர்கள் தங்களுக்கு தெரிந்த நாமகாரணங்களை பின்னூட்டினால் அவரவர்களது நாமத்துடன் இணைத்துக்கொள்கின்றேன்:-)

நிறைய பெயர்கள் அறிந்தவர்கள் இதனை தொடர்பதிவாகவும் எழுதி அசத்துங்கள்!

அழகான பெண் - எழிலரசி

பணக்காரப் பெண் - செல்வநாயகி

கருப்பான பெண் - கருத்தம்மா

தொப்பை உள்ள ஆண் - கணேஷ்

உபயம் - சகோ கணேஷ்


முத்து வியாபாரி - முத்தரசு

கோயிலில் வேலைசெய்பவர் -கோயில் பிள்ளை

திருமணதகவல் மையம் நடத்துபவர் -கல்யாண சுந்தரம்

லைப்ரரியன் -களஞ்சியம்

உபயம் -ஏஞ்சலின்


குண்டாயிருப்பவர் - நோஞ்சாம்பிள்ளை

நோயாளி- ஆரோக்கியசாமி

கண் தெரியாதவர் - கண்ணப்பன்

உபயம் - விச்சு


பூ விற்ப‌வ‌ர் - தாமரை

நாட்டியமாடுபவர் - நடன சபாபதி

உபயம் - மனோ அக்காதேனரசு - தேன் விற்பவர்

நடராஜன் - நடனமாடுபவர்

தர்மராஜ் - தானதர்மம் செய்பவர்

நாகராஜ் - பாம்பாட்டி

சீனிவாசன் - சீனி வியாபாரி

பூபதி - பூக்கடைக்காரர்

பசுபதி - பால்காரர்

ஸ்ரீகாந்த் - காந்தவியாபாரி

சங்கீதா - பாடகி

வைரமுத்து -வைரவியாபாரி

செங்கலவராயன் - செங்கல் வியாபாரி

மைக்கேல் - சவுண்ட் பார்ட்டி

ஆகாயராஜ் - விமானி

கரீம் பாய் - கறிக்கடைகாரர்

சுரங்கன் - சுரங்க தொழிலாளி

வெள்ளையம்மாள் - சலவைத் தொழிலாளி

வெள்ளைச்சாமி - வெள்ளை அடிப்பவர்

பேச்சியம்மாள் - வாயாடி

உபயம்:தோழி - ஆசியாஉமர்

November 1, 2011

வளைகுடா நாட்டில் தமிழகம்,கேரளாவின் ஆதிக்கம்.

செல்வாக்கான இந்தியர்கள் என்பது அவர்களின் செல்வத்தைப் பொறுத்தது மட்டுமல்ல; அவர்களின் தொழிலின் தன்மை, தொழிலாளர் எண்ணிக்கை, அவர்களின் தயாரிப்புகள் சந்தையைப் பாதிக்கும் அளவு, அவர்களின் தனிப்பட்ட சமூக செல்வாக்குப் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியது. இப்பட்டியலில் அமீரகத்தைச் சார்ந்தவர்கள் 6 நபர்கள் உள்ளனர். அது போல் கேரளாவைச் சார்ந்தவர்கள் நால்வரும் தமிழகத்தைச் சார்ந்ச்ர் மூவரும் உள்ளனர். இதோ அப்பட்டியல்:

1. யூசுப் அலி :


செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த மிக்கி ஜக்தியானியைப் பின்னுக்கு தள்ளி விட்டு செல்வாக்கான இந்தியர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ள கேரளாவைச் சார்ந்த யூசுப் அலி இந்தியாவின் சிறந்த வெளிநாட்டு தொழிலதிபர்களில் குறிப்பிடத்தக்கவர்.
EMKE குழுமத்தின் நிர்வாக இயக்குநராக வெற்றிகரமாக நடத்தி செல்கிறார். வலிமையான போட்டிகள் நிறைந்த சிறு வர்த்தக பிரிவில் வெற்றிகரமாக விளங்கும் லூலூ சங்கிலி தொடர் சூப்பர் மார்க்கெட்டுகள் இவரின் எம்கே குழுமத்தைச் சார்ந்தவையே.
அபுதாபியைத் தலைமையிடமாக கொண்டு இயங்கும் இவரின் குழுமத்தில் 22,000 இந்தியர்கள் உள்ளிட்ட 27,000 நபர்கள் பணி புரிவதோடு 3.75 பில்லியன் டாலர் ஆண்டுதோறும் வர்த்தகம் நடக்கிறது. 2005ல் அபுதாபி சேம்பர் ஆஃப் காமர்ஸுக்குத் தேர்வு செய்யப்பட்ட முதல் வெளிநாட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது
2. மிக்கி ஜக்தியானி :
.லேண்ட்மார்க் குழுமத்தின் தலைவரான மிக்கி ஜக்தியானி தான் வளைகுடாவின் பணக்கார இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையைச் சார்ந்த மிக்கி ஜக்தியானி 1973ல் முதல் ஸ்டோரை பஹ்ரைனில் தொடங்கினார். இன்றோ, துபாயை தலைமையிடமாக கொண்டு சிறுவர் பேஷன், காஸ்மெட்டிக்ஸ் என்றும் நியூ லுக், மேக்ஸ், செண்டர் பாயிண்ட், பேபி ஷாப், ஹோம் செண்டர் என்று பல பிராண்டுகளுடனும் பரந்து விரிந்து உள்ளது இவரின் வர்த்தக சாம்ராஜ்யம்.

3. சன்னி வர்கீஸ் :
கேரளாவை சார்ந்த சன்னி வர்கீஸால் 1980ல் ஒற்றை பள்ளியாக ஆரம்பிக்கப்பட்ட Our Own High School இன்று உலகின் மிக பெரிய கல்வி குழுமங்களில் ஒன்றாக திகழ்கிறது. 11 நாடுகளில் 100 பள்ளிகளில் சுமார் 1 இலட்சம் மாணவர்கள் கிண்டர் கார்டனில் இருந்து பணிரெண்டாம் வகுப்பு வரை படிக்கிறார்கள்.
தற்போது வளைகுடாவையும் தாண்டி ஆப்பிரிக்காவிலும் ஒரு பள்ளிகூடத்தை ஆரம்பித்துள்ளது வர்கீஸின் ஜெம்ஸ் குழுமம்.

4. சங்கர்
கடந்த மே 2010ல் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மத்தியகிழக்கின் தலைமை நிர்வாகியாக சங்கரை ஸ்டாண்டர்டு சார்ட்டர்ட் வங்கி நியமித்தது. மத்தியகிழக்கின் அவ்வங்கியின் மிகப்பெரும் பொறுப்பில் உள்ள சங்கர் இவ்வங்கியில் 2001 ல் சேர்வதற்கு முன் பேங்க் ஆப் அமெரிக்காவில் 19 ஆண்டுகள் பணியாற்றியவர். தமிழகத்தைச் சார்ந்த சங்கர் புகழ் பெற்ற இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மெண்ட், பெங்களூரில் எம்.பி.ஏவும் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் இளநிலை பட்டமும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
5. முஹம்மது அலி
கேரளாவைச் சார்ந்தவரும் கல்பார் எஞ்சினியரிங் கன்ஸ்ட்ரக்ஷ்ண்ஸ் நிறுவனருமான முஹம்மது அலி மிக வெற்றிகரமான தொழில் முனைவர் ஆவார். கட்டுமானம், எண்ணைய் மற்றும் இயற்கை வாயு என விரிந்து பரந்துள்ள இவரின் நிறுவனம் இன்றைய நிலையில் ஓமனின் மிகப் பெரிய தனியார் நிறுவனம் ஆகும்.
ஓமன் பெட்ரோலியம் அல்லயண்ஸின் நிறுவனரான முஹம்மது அலி தனது பிஎம் பவுண்டேஷன் மூலம் கேரளாவில் கல்வி உதவிகளையும் செய்து வருகிறார்


6. மகன்மால் பன்ஞ்சோலியா
சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் சீன கார்கோ கப்பல் மூலம் கராச்சியிலிருந்து ஷார்ஜாவுக்கு வந்து அங்குள்ள துறைமுகத்தில் சிறிய அளவில் பொருட்களை விற்றவர் இன்று அமீரக இந்திய தொழிலதிபர்களின் முகமாக விளங்குகிறார். 1957-லேயே மின்சாரத்தின் தேவையைத் தொலை நோக்காக கணிப்பிட்டு அமீரக அரசு, முறையாக மின்சார வாரியம் அமைக்கும் முன்னே ஜெனரேட்டர்கள் மூலம் துபாய் கிரீக் பகுதியில் உள்ள கடைகளுக்கு மின்சாரம் விநியோகம் செய்தார்.
சிறிய அளவில் படிப்படியாக முன்னேறியவர் இன்று அரேபியன் டிரேடிங் ஏஜென்ஸியின் தலைவர் ஆக உள்ளார். மேலும் துபாய் சேம்பர் ஆப் காமர்ஸ், அல் மக்தூம் மருத்துவமனை மற்றும் நேஷனல் பேங்க் ஆப் துபாய் உள்ளிட்டவற்றிலும் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
7. சையது சலாஹுதீன்
அமீரகத்தில் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் அனைவருக்கும் பரிச்சயமான பெயர் ETA. 1973 -ல் துபாயில் உள்ள அல் குரைரின் ஒத்துழைப்புடன் தமிழகத்தைச் சார்ந்த பி.எஸ். அப்துர் ரஹ்மானால் கட்டுமான நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட ஈ.டி.ஏ அஸ்கான் இன்று அமீரகத்தில் கட்டுமானம், லிப்ட், எலக்ட்ரோ மெக்கானிகல் சேவைகள், ஆடை, போக்குவரத்து, வர்த்தகம் உள்ளிட்ட பல்துறை நிறுவனமாக பரிணமிப்பதில் நிச்சயமாக ஈடிஏ ஸ்டார் நிர்வாக இயக்குநர் சலஷுத்தினுக்கு முக்கிய பங்குண்டு.
1.36 பில்லியன் டாலர் மதிப்புள்ள திட்டங்களை நிறைவேற்றியுள்ள இந்நிறுவனம் 21 நாடுகளில் உள்ளதோடு 75,000 பணியாளர்களையும் கொண்டுள்ள மிகப் பெரிய நிறுவனமாகும். தன் வர்த்தக திறன்களுக்காக மத்தியகிழக்கின் முன்னேற்றத்திற்குச் சிறந்த பங்காற்றிய ஆசியன் விருதைப் பெற்றவர் சலாஹுத்தின். மேலும் அவர் இந்திய முஸ்லீம் அஸோஷியனின் தலைவராகவும் உள்ளார்.
8. டாக்டர் திது மைனி
கத்தார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பூங்காவின் தலைவராக விளங்கும் திது மைனி இதற்கு முன் லண்டனிலுள்ள இம்பீரியல் காலேஜில் பணியாற்றியவர் என்பதோடு பாதுகாப்பு, மிண்ணணுவியல், உற்பத்தி துறை, தொழில்நுட்ப நிறுவனங்களில் 30 வருட அனுபவம் கொண்டவர்.
மேலும் ஸ்கூலும்பெர்கர் நிறுவனத்தின் மூத்த துணை தலைவராகவும், சீமா குழுவின் நிர்வாக உறுப்பினராகவும், ஜீஈசி மார்கோனியின் துணை தலைவராகவும் ஜீஈசி சாப்ட்வேர் நிறுவனத்தின் நிர்வாக தலைவராகவும் இருந்தவர்.
9. பி.என்.சி.மேனன்
கேரளாவில் பிறந்த மேனன் 1976ல் ஓமனுக்குக் குடிபெயர்ந்து இண்டீரியர் டெக்கரேட்டிங் நிறுவனத்தை ஆரம்பித்தார். 1995ல் இந்தியாவில் ஷோபா டெவலப்பர்ஸை ஆரம்பித்து ரியல் எஸ்டேட்டில் கொடி கட்டி பறக்கிறார்.
35 வருடங்கள் கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட்டில் அனுபவமுள்ள மேனன் சோபா டெவலப்பர்ஸ் மூலம் இது வரை 71 குடியிருப்பு திட்டங்களை நிறைவேற்றியுள்ளார்.
10. சீத்தாராமன் :
கடந்த ஆண்டின் பட்டியலை விட 49 இடங்கள் முன்னேறியுள்ள தோஹா வங்கி குழுமத்தின் தலைமை நிர்வாகியான சீத்தாராமன் தமிழகத்தைச் சார்ந்தவர். எப்போதும் தனது அடையாளமான Bow tie எனப்படும் சிறு கழுத்துப் பட்டையுடன் காணப்படும் சீத்தாராமன் சுமார் 30 வருடங்கள் வங்கி, ஐடி மற்றும் நிர்வாக ஆலோசனை துறைகளில் அனுபவம் கொண்டவர்.
வங்கி துறையைத் தாண்டி புவி வெப்பமயமாகுதல் உள்ளிட்ட சமூக பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்காக கடந்த ஆண்டு சர்வதேச இந்தியன் உள்ளிட்ட ஏராளமான விருதுகளைக் குவித்தவர். அது போல் பொருளாதார நெருக்கடியின் போது "இஸ்லாமிய வங்கியியலே தற்போதைய பிரச்னைகளுக்குத் தீர்வு" என்று கூறி சர்வதேச கவனத்தைக் கவர்ந்தவர்.
மெயிலில் வந்தது.படங்கள் மட்டும் கூகுள் உபயம்.

October 30, 2011

காலத்தால் அழியாத கதா பாத்திரங்கள்.

தேவனின் துப்பறியும் சாம்பு

அந்த நாளில் பழம்பெரும் எழுத்தாளர் தேவன் துப்பறியும் சாம்பு என்ற கதாபாத்திரத்தை உருவாக்கி அதன் பின் வந்த எழுத்தாளர்களுக்கெல்லாம் முன்னோடியாக இருந்தார்.
நான் பிறப்பதற்கு முன்பே வளைய வந்த சாம்புவை மொடமொடத்த பழுப்பேறிய தாள்களாக படித்து மகிழ்ந்து இருக்கிறேன்.

துப்பறியும் சாம்புவை தேவனின் மாஸ்டர் பீஸ் என்பார்கள்.சாம்பு முட்டாள்த்தனமாக செய்யும்காரியங்கள் யாவும் இறுதில் புத்திசாலித்தனமாக முடிக்கப்படுவது ஆசிரியரின் திறமையை வெளிப்படுத்தும்.மனபாரத்தோடு சாம்பு துப்பறியும் கதைகளை கையில் எடுத்து படிக்க ஆரம்பித்தால் மனம் லேசாகித்தான் புத்தகத்தை கீழே வைப்பார்கள்.

பட்டுக்கோட்டை பிரபாகரின் பரத் - சுசீலா

பி கே பி கற்பனையில் இந்த கேரக்டர்கள் உருவானதற்கு காரணி எழுத்தாளர் தேவனின் சாம்புவேதான்.

”தொடர்ந்து ஒரே பாத்திரங்கள் வருகின்ற போது வாசகர்களுக்கு தொடர்ந்து ஈடுபாடு வரும் இதற்காக எல்லாருமே இந்தமாதிரி தனிதனிப் பாத்திரங்களாவும் ஆண் பாத்திரமாகவும் வைத்திருக்கின்ற பொழுது நான் ஏன் காதல் ஜோடியாக வைத்திருக்க கூடாது அந்த துப்பறியும் பாத்திரங்கள் ஒரு காதலனும் ஒரு காதலியுமாக இருந்தா இன்னுமொரு சுவாரஸ்யமாக இருக்குமே அப்படின்னு யோசிச்சு பரத் சுசீலா அப்படி என்ற இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் தங்களுடைய அன்பையும் பாசத்தையும் காதலையும் கொட்டிக்கொண்டே துப்பறியும் கலைகளிலும் ஈடுபடுவார்கள் என்ற அமைப்போடு துவக்கப்பட்ட பாத்திரங்களே பரத் சுசீலா பாத்திரங்கள். ”மேற்கண்டவாறு பி கே பி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

பரத் சுசீலா பாத்திரங்களுக்கும், சுசீலாவின் டி சர்ட் வாசகங்களுக்கும் எக்கசக்க ரசிகர்கள்.இன்னிக்கு சுசீலா என்ன வாசகம் அணிந்த டீ ஷர்ட் அணிந்து வரப்போகின்றாள் என்ற படபடப்புடன் படிக்கும் வாசகர்களின் எதிர்பார்ப்பு பிகேபியின் எழுத்துக்குக்கு கிடைத்த ஒரு அங்கீகாரம்.

சுஜாதாவின் கணேஷ் - வசந்த்

சுஜாதா என்றதும் நினைவு வரும் மறக்க இயலாத கதாபாத்திரங்களான கணேஷ் - வசந்த்.
கணேஷை பொறுப்பான, அதிகம் பேசாத, கண்ணியமான, பெண்கள் பற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்ளாத, கண்டிப்பான அமைதியான கேரக்டராக சித்தரித்திருப்பார் சுஜாதா.

அதே நேரம் அவரது உதவியாளர் வசந்தை கிண்டல், கேலி, விளையாட்டுத்தனம், வாயாடித்தனம், எவ்வளவு சீரியஸான நேரத்திலும் பெண்களை கொஞ்சம் 'சைட்' அடித்தவாறு இருக்கும் ஜாலியான,துடுக்குத்தனமான கேரக்டராக சித்தரித்து இருப்பார்


பாக்கியம் ராமசாமியின் சீதாபாட்டி - அப்புசாமி

தாத்தா பாட்டி என்றதும் நினைவுக்கு வருவது மேற்கண்ட முதிய தம்பதிகள்தான்.கதாசிரியர் கற்பனையில் கண்டு மகிழ்வித்த அப்புசாமி, சீதாபாட்டி தம்பதியை, கண்முன் கொண்டுவந்து நிறுத்திய ஓவியர் ஜெயராஜின் சித்திரங்கள் மனதை அள்ளிச்செல்லும்.

கூடவே
பீமா, ரசம், அரை பிளேடு, முக்கா பிளேடு என்று நண்பர் படை சூழ உட்கார்ந்து யோசித்து, புதுப் புதுத் திட்டங்கள் போடும்அப்புசாமி ,பொடி போடும் அப்புசாமியை அடக்க முயற்சிக்கும் சீதாப்பாட்டி,அடியேய்ய்ய்ய்ய்ய்..என்று நீட்டி முழங்கி மனைவியை அழைக்கும் ஸ்டைல்,எப்பொழுதும் மனைவியிடம் பல்பு வாங்கினாலும் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாத அப்புசாமி..இப்படி எத்தனை எத்தனையோ...

பக்கத்து வீட்டில் வசிப்பவர்களைப் பார்ப்பது போல் உணர்வூட்டும் அருமையான கேரக்டர்கள் நம்ம குலுங்க குலுங்க சிரிக்க வைத்து பரவசப்படுத்துவார்
ராஜேஷ்குமாரின் விவேக் - ரூபலா

பக்கா டீஸண்டாக இந்த கதாபாத்திரங்களை படைத்து படிப்பவர்கள் மனதை அள்ளிவிடுவார் ராஜேஷ்குமார்.துப்பறியும் நாயகன் விவேகானந்தன் என்கிற விவேக், புலனாய்வுதுறை உயரதிகாரி. அவரது மனைவி ரூபலா.ராஜேஷ்குமாரின் பல நாவல்கள் மிகவும் அற்புதமாக இருக்கும்.அதிலும் விவேக்-ரூபலா வரும் நாவல்கள் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.

கதை எழுதுவதற்கு எடுக்கும் சிரத்தையை கதைக்கு தலைப்பு வைப்பதிலும் ராஜேஷ்குமார் அக்கரை கொள்வார் என்பதற்கு இந்த தலைப்புகள் சிலதே உதாரணம்.
திருமரண அழைப்பிதழ்
நிலவை களவு செய்
தப்பு தப்பாய் ஒரு தப்பு
இனி மின்மினி
சூடான கொலை
கண்ணிமைக்க நேரமில்லை
நீலநிற மல்லிகை.
சுபாவின் வைஜெயந்தி - நரேன்

ஈகிள் ஐ என்ற துப்பறியும் நிறுவனம் நடத்தும் ராமதாஸ் இவர்களிடம் வேலைபார்க்கும் இந்த ஜோடிகள், அடிக்கும் லூட்டி மறக்க முடியாது.வைஜெயந்தியோட கோன் ஐஸ்க்ரீம் ஆசைகள் - வாசகர்களுக்கு பிரசித்தம்.நரேன் வைஜெயந்தி வரும் கதைகள், அவர்களது ஊடல்,கூடலுடன் படிப்பவர்கள் மனதை பரவசப்படுத்தும்

தமிழ்வாணனின் சங்கர்லால்

சலவை கலையாத முழுக்கை சட்டை,அதை உள்வாங்கி இருக்கும் பேண்ட்,காலில் பளபளக்கும் ஷூ,தலையில் தொப்பி,அவ்வப்பொழுது கழுத்தை இறுகப்பிடிக்கும் ஸ்கார்ஃப்,கண்களில் கூலிங் கிளாஸ்,கைகளில் தேநீர் கோப்பையுடன் நாற்காலியில் அமர்ந்து எதிரே இருக்கும் மேஜையின் மீது காலுக்கு மேல் காலை தூக்கிப்போட்டுக்கொண்டு ராயலாக உட்கார்ந்திருக்கும் உருவம் யார் என்றால் சட்டென நினைவுக்கு வருவது தமிழ்வாணனின் சங்கர்லால்.

துப்பறியும் சங்கர்லாலை உருவாக்கி அப்பொழுது பெரும் பரபரப்பை உருவாக்கிய தமிழ்வாணன் பிறகு துப்பறியும் தமிழ்வாணன் ஆக அவதரித்தார் அதே கெட்டப் உடன்.

எழுத்தாளர் அகஸ்தியன் உருவாக்கிய கதாபாத்திரங்களான மிஸ்டர் & மிஸஸ் பஞ்சு, மற்றும் தொச்சு, அங்கச்சி, கமலா யாவரும் மறக்க இயலாதது.

எழுத்தாளர் ராஜேந்திரக் குமாரின் ராஜா, ஜென்னி ,தேவிபாலாவின் பிரசன்னா - லதா ,புஷ்பா தங்கதுரையின் சிங் கேரக்டர்களும் வாசகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டவை.

இதெல்லாம் அன்றும் இன்றும் பரபரப்பாக பேசப்பட்டு,வாசிக்கப்பட்டு,ரசிக்கப்பட்டு வந்த கேரக்டர்களானாலும் நான் ரசித்து ,பல தடவை வாசித்த ஒரே நாவல் என்றால் அது கோவி.மணிசேகரனின் ”மனோரஞ்சிதம்”

ஒரு சலவைத் தொழிலாளியின் மகள் தன் வீட்டுக்கு வரும் அழுக்குத் துணிகளில், ஒரு பட்டு ஜிப்பாவில் மட்டும் மனோரஞ்சிதம் வாசனை மணப்பதை கவனிப்பாள். அந்த சென்ட் வாசனையை வைத்து, அதை அணிபவன் எத்தகைய அழகான இளைஞனாக இருப்பான் என்று கற்பனை செய்வாள். கற்பனையிலேயே காதல் கொள்வாள். கடைசியில் அவன் ஒரு குஷ்டரோகி என்பதுதான் கிளைமாக்ஸ்.தான் கற்பனை செய்து வைத்திருந்த காதலன் ஒரு குஷ்டரோகி என்ற உண்மை தெரிந்ததும் கலங்கிபோகும் கதாநாயகி படிப்பவர்களையும் கலங்க வைத்து விடுவாள்.சலவைத்தொழிலாளி மகளாக வரும் கிளியாம்பாள் கதா பத்திரம் என்னை பெரிதும் கவர்ந்தவள்.சிறுமி பிராயத்தில் வாசித்த அந்த நாவலின் சுவை இன்னும் என் மனதில் தேங்கி நிற்கின்றது.நான் வாசித்த முதல் நாவலும் இதுதான்.

டிஸ்கி: