October 12, 2012

சென்று வருகிறேன்...அல்லாஹ்வுக்காக அந்த ஆலயம் சென்று ஹஜ் செய்வது மனிதர்களில் அதன் பால் (சென்றுவர) சக்தி பெற்றவர் மீது கடமையாகும். அல்குர்ஆன் 3 : 97

ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள். அல்குர்ஆன் 2:196 

(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலகமக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.

அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்)பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்திபெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும்.ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப்போவதில்லை; ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாகஇருக்கின்றான். அல்குர்ஆன் 3:96-97 

ஹஜ் செல்லுவது வாழ்நாள் ஆசையாக இருந்தாலும் கடந்த மூன்று வருடங்களாக தீவிரமாக முயற்சித்தும்,ஆவலுடன் காத்திருந்து,முடியாததால் ஏமாற்றம் அடைந்து இவ்வாண்டு அந்த பெரும் பாக்கியம் கிடைத்துள்ளது.உடன் பிறந்தோருடன்,உறவினர்களுடன் செல்லும் வாய்ப்பு கிடைத்தாலும் கணவருடன் தான் செல்ல வேண்டும்,உடல் வலிமையுடன்,முதுமை வரும் முன் ஹஜ் சென்றாகி விடவேண்டும் என்ற ஆசையை என் இறைவன் இவ்வாண்டு நிறைவேற்றிவைக்கப்போகிறான்.அந்த புனிதபூமியை சென்றுஅடையப்போகிறேன் என்று நினைக்கும் ஒவ்வொரு வினாடியும் என்கண்களில் இருந்து கண்ணீர் கர கரவென்று வழிந்தோடுகிறது.ஆம் இஸ்லாம் நிறுவியுள்ள ஐந்து தூண்களில் இறுதியானதும், மிக முக்கியமானதுமான ஹஜ் பயணம் செய்யும் பாக்கியம் இறை அருளால் எங்களுக்கு கிடைத்துள்ளது.வரும் 18ஆம் தேதி என்கணவருடன் புனித பயணம் மேற்கொள்ளப்போகின்றேன்!

ஹஜ்ஜூக்குச் செல்லும் ஹாஜிகளே! நீங்கள் ஹஜ்ஜூக்குச் செல்கிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் ஹஜ் ஏற்பாட்டில் முதலாவதாக தக்வா என்னும் இறையச்சத்தை தயார் படுத்திக் கொள்ளுங்கள் என்ற இறை வாக்குக்குகொப்ப பயணம் முடிவானதில் இருந்து ஹஜ்ஜுக்கு செல்லும் பொழுது எடுத்து செல்லும் பொருட்களை திரட்டுவதை விட இறை அச்சத்தை அதிகம் அதிகம் திரட்டி என்னை தயார் படுத்திகொண்டுள்ளேன்.

செயல்களில் சிறந்தது  அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்வது,அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவது, அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படும் ஹஜ் என்ற திருநபி வாக்குக்கொப்ப ஹஜ் கிரியைகளை நிறைவேற்றப்போகும் தருணத்திற்காக மனம் ஏங்கிதுடித்தவளாகவும்,

மஸ்ஜிதுல் ஹரமில் தொழுவது அது அல்லாததில் (மற்ற பள்ளிகளில்) ஒரு லட்சம் முறை தொழுவதை விடச் சிறந்ததாகும் என்ற நபிமொழிக்கொப்ப அங்கிருக்கும் அத்தனை நாட்களில் ஒரு வேளைக்கூட விடாது ஹரத்தில் தொழுது அழுது படைத்தவனிடம் ஈருலகப்பேறுகளுக்கும் கோரிக்கைகளை வைக்க வேண்டும் என்று உறுதியாக  எடுத்து இருக்கும் தீர்மானத்தை அல்லாஹ் நிறைவேற்றிவைப்பான் என்ற நம்பிக்கையுடனும்,

இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள் என்னும் இறைவாக்குக்கொப்ப இது நாள் வரை கிப்லாவின் பக்கம் முகத்தை வைத்து தொழுது வந்த நான் அந்த கிப்லாவையே நேரில் தரிசனம் செய்யப்போவதை நினைத்து புளங்காகிதப்பட்டவளாக,

புனித கஃபாவை வலம் வருவது ஓரிறை என்னும் ஏக தெய்வ கொள்கையில் இஸ்லாமியர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை மெய்ப்பிப்பதற்கும் ஒரு இறைவனையே வணங்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டவுமே ஆகும். ஒரு பெரும் வட்டம் ஒரே ஒரு மத்திய புள்ளியை மாத்திரம் கொண்டிருப்பது போன்று வணக்கத்திற்குரிய இறைவன் ஒருவனே என்ற உண்மையை ஏற்று புனித கஃபாவை வலம் வரப்போகும் அந்த நொடிக்காக காத்திருப்பவளாகவும்,

யார் கஅபாவை வலம் வந்து இரு ரக்அத்துகள் தொழுகின்றாரோ அவர் ஓர் அடிமையை உரிமை விட்டவர் போலாவார் என்பது நபி மொழிக்கொப்ப அந்த முதல் இறை இல்லத்தை வலம் வரப்போவதை நினைத்தும்,

கியாமத் நாளில் பார்க்கும் இரு கண்கள் கொண்டதாகவும் பேசும் நாவுகள் கொண்டதாகவும் ஹஜருல் அஸ்வதை எழுப்புவான். யார் இதை முத்தமிட்டாரோ அவருக்காக அது சாட்சி கூறும் என்ற நபிமொழிக்கொப்ப அஜ்ருல் அஸ்வத்தை தொடும் பாக்கியம் கிடைக்காதா என்று மனம் ஏங்கியும்,

துஆக்களில் சிறந்தது அரஃபா நாளின் துஆவாகும். என்ற நபிமொழிக்கொப்ப அரபா மைதானத்தில் இரு கையேந்தி படைத்தவனிடம் பேசப்போகிறோம் என்பதை நினைத்து உள்ளமெல்லாம் பூரித்துப்போயும்,

அது (ஜம்ஜம் நீர்) பரக்கத் செய்யப் பட்டதாகும். உண்ணுபவருக்கு உணவாகும் என்ற நபி மொழிக்கொப்ப நான் பல நூறு முறை அந்த புனித நீரை அருந்தி இருந்தாலும் புனித தலத்திற்கே சென்று புனித நீரை வயிறு நிரம்ப மனம் குளிர அருந்தப்போகும் அந்த நேரத்துக்காக மனம் ஆவலாகப்பறந்தும்,

நிச்சயமாக ஸபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்களாகும் என்ற நபி மொழிக்கொப்ப அம்மலைகளில் அதிகம் வலம் வருவதற்கு என் கால்களுக்கு பலத்தை கொடு,மனதிற்கு திடத்தைக்கொடு என்று பிரார்த்தனை புரிந்தவளாக,

என்னிடத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து “இஹ்ராமின் போதும், தல்பியாவின் போதும் என் தோழர்கள் சப்தத்தை உயர்த்த வேண்டும்” என்று கட்டளையிட்டார்கள் என்ற நபிமொழிகொப்ப விமானத்தில் ஏறி அமர்ந்ததில் இருந்து ஜம்ரதுல் அகபாவில் கடைசிக் கல்லை எறியும்வரை என் நாவு தல்பியாவை உச்சரிக்கப்போகும் தருணத்திற்காக காத்திருந்தவளாக,

எனது பள்ளியில் (மஸ்ஜிதுந்நபவீ)தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும் என்று அல்லாஹ்வின் தூதரின் வாக்குக்கொப்ப மதினா சென்று அப்புனித தளத்தில் அதிகம் அதிகம் தொழவேண்டும் என்று மனம் முழுக்க ஆசை மிகுந்தவளாக

யார் தனது வீட்டில் உளூச் செய்து மஸ்ஜிது குபாவுக்கு வந்து அதில் ஒரு தொழுகை தொழுகின்றாரோ அவருக்கு உம்ரா செய்த கூலி உண்டு என்று அல்லாஹ்வின் தூதரின் வாக்குக்கொப்ப அங்கும் சென்று இறை வணக்கத்தில் ஈடு படப்போவதை நினைத்தும் ,இன்னும் இன்னும் இறைவனுக்காக பற்பல கிரியைகளை செய்யப்போகிறோம் என்று மனம் முழுக்க மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்திக்களித்துக்கொண்டுள்ளேன்.

இப்பொழுது ஏழடி கட்டிலும் சொகுசு மெத்தையிலும் படுத்துறங்கினாலும்,என் மரணத்திற்குப்பிறகு  கிடைக்கப்போகும் ஆறடி மண்ணறையை நினைவூட்டும் விதமாக மினாவில்  பயணிகளுக்காக தரப்போகின்ற ஆறுக்கு மூன்றடி இடத்தில் நாள் முழுக்க அமர்ந்து இறைவனை தியானிக்கும் அனுபவத்தினை பெறும் அந்த தருணத்திற்காக காத்திருக்கிறேன்

அடுத்த வேளை என்ன சமையல் செய்வது என்று குழம்பிக்கொள்ளாமல்,காலேஜ் சென்ற பையனுக்கு சரியான நேரத்திற்கு பஸ் கிடைத்து இருக்குமா?இல்லை பஸ்ஸை மிஸ் பண்ணி எம் டி சி பஸ்ஸில் தொங்கிக்கொண்டு செல்வானா?என்று மனம் பதைப்பதும் இல்லாமல்,இன்னிக்கு எழுதப்போகும் எக்‌சாம் சற்று கடினம் என்றானே பையன்.சரியாக எழுதி இருப்பானா?வினாக்கள் சுலபமாக வந்து இருக்குமா என்று மனம் அலைமோதும் அவஸ்தை இல்லாமலும்,புக் பண்ணிய சமையல் கியாஸ் கரெக்டாக வந்து சேருமா இல்லை பழைய அவஸ்தைதானா?என்ற அலைமோதும் மனதில்லாமால்,நேரம் பத்தாகின்றதே இன்னும் வேலைக்காரப்பெண் வரவில்லையே என்ற டென்ஷன் இல்லாமல்,இப்பதானே வாஷிங் மெஷின் பழுதாகி செலவு வைத்தது.இப்பொழுது மைக்ரோவேவ் ஓவனா என்ற எரிச்சல் இல்லாமல்,பேனில் தூசி தெரிகிறதே..சே ..அதற்குள் எப்படித்தான் இப்படி தூசி பிடிக்கிறதோ என்று புலம்பிக்கொண்டே கையில் டஸ்டருடன் பேனை துடைக்க ஏணியில் ஏறும் அவஸ்தை இல்லாமல்,இவ்வளவு ஏன் பதிவு போட்டு நாளாச்சே.புதுசா என்ன பதிவு போடலாம் என்று மூளையை கசக்கிகொள்ளாமல்,ஏதோ ஒரு வழியாக பதிவை தேத்தி டைப் செய்து பப்லிஷ் செய்து விட்டு ,கடையை திறந்து விட்டு வாடிக்கையாளருக்காக காத்திருக்கும் வியாபாரியைப்போல் பதிவுக்கு கமண்ட் வராதா என்று இருக்கும் வேலைகளை எல்லாம் ஒத்திப்போட்டு வைத்து விட்டு டாஷ் போர்டை திறந்து வைத்துக்கொண்டு காத்துக்கொண்டிராமல்,நம் பதிவை படித்து விட்டு பின்னூட்டி இருக்கும் நட்புக்களுக்கு பதில் போட நேரம் இல்லையே என்ற சங்கடம்  இல்லாமல்.முகப்புத்தகத்தில் எதையாவது அப்லோட் செய்து விட்டு எத்தனை லைக்குகள் என்று கிளிக் செய்து பார்த்துக்கொண்டிருக்கும் வேலை இல்லாமல்...

இப்படி பல இல்லாமல் இன்றி ,மனஉளைச்சல் இன்றி ,டென்ஷன் இன்றி அங்கிருக்கும் ஒவ்வொரு அற்புதமான வினாடிகளையும்,துளிகூட வீணாக்காமல்  இறைவன் ஒருவனுக்காக மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்ற என் பேராவல் மனம் முழுக்க வியாபித்துள்ளது.

எங்கள் நியாயமான பிரார்த்தனைகள் அனைத்தும் ஈடேறி,எங்கள் மனங்கள் திருப்திக்கொள்ளும் வகையில் ஹஜ் கிரியையைகளை செவ்வன நிறைவேற்றி,இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட ஹஜ்ஜாக,இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக அமைந்து  செவ்வன நிறைவேற்றும் மன,உடல் பலத்தையும் தந்தருள பிரார்த்தனை செய்தவளாக,பிரார்த்தனை செய்ய வேண்டியும்,இம்மாபெரும் பாக்கியத்தை தந்த இறைவனுக்கு நெஞ்சார நன்றி கூறியவளாக  விடை பெறுகிறேன் நட்புக்களே!

October 1, 2012

தயிர் பானைக்குள் பிரியாணி சட்டி.
பல ஆண்டுகளுக்கு முன் நாங்கள் சென்னை வந்த புதிதில் வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வர ஆட்டோ பிடித்து பயணித்தோம்.வீட்டு வாசலில் வந்திறங்கியதும் ஆட்டோக்காரர் தெருவை பார்த்துவிட்டு இப்பதிவுக்கு கொடுத்த தலைப்பை சொல்லி “எப்படி பாய்ம்மா”என்று ஆச்சரியப்பட்டார்.நான் அப்பொழுதே “தயிரும் எங்களுக்கு புளிக்க வில்லை.பிரியாணியின் மணமும் அவர்களுக்கு வெறுக்கவில்லை “என்று கூறினேன்.

மாற்றுமதத்தவர்கள்,குறிப்பாக பிராமணசமூகத்தினர் வாழும் பகுதி இது.”இந்த ஏரியாவுக்குள் எப்படி நீங்கள்??”என்று ஆச்சரியப்பட்டவர்கள் பலர்.ஏனெனில் இஸ்லாமிய குடும்பம் என்று எங்கள் காலனியில் ஓரிரு குடும்பங்களைத்தவிர வேறு யாரும் இல்லை.அதிலும் எங்கள் தெருவில் இதுவரை இஸ்லாமியக்குடும்பம் ஒன்றுகூட இல்லை.

வந்த புதிதிதில் பலரும் பலவாறு கிலியூட்டினார்கள்.ஆனால் அதெல்லாம் பொய்த்துப்போய் இன்று வரை அனைவருமே மிகவும் ஒற்றுமையுடன்,சகோதரத்துவத்துடன் இருப்பதை நினைத்தால் பிரமிப்பாகவும்,சந்தோஷமாகவும் உள்ளது.

“தீபாவளி ,பொங்கல் என்றால் அவர்கள் தரும் பலகாரம்,பொங்கல்  வடை இத்யாதிகளை பறிமாறிக்கொள்வதும்,பெருநாளின் போது நாங்கள் சமைத்துக்கொடுக்கும் பிரியாணியின் பறிமாற்றமும் மகிழ்வுக்குறியன.சிலர் செவ்வாய்,வெள்ளியன்று அசைவம் சாப்பிட மாட்டார்கள்.ஒரு சவுராஸ்ட்ர தோழி திங்கள் அன்று அசைவம்  சாப்பிடமாட்டார்.பொதுவில் ஞாயிறு அன்று அசைவம் சாப்பிடும் அனைவரும் சாப்பிடுவார்கள் என்று இவர்களுக்காகவே பெருநாள் எந்த நாளில் வந்தாலும் சிரமம் பாராது ஞாயிறு அன்று பிரியாணி சமைத்து தருவதும்,அசைவமே சாப்பிடாத நட்புக்களுக்கு ஸ்பெஷலாக வெஜிடபிள் பிரியாணி செய்து தருவதும் உண்மையில் மகிழ்சிக்குறியது.

இவ்வளவு ஏன்?நோன்பு காலத்தில் இன்றைய சஹருக்கு ஓய்வெடுங்கள்.நாங்கள் சாப்பாடு தருகிறோம் என்று ஹாட் பாக்ஸில் சூடாக பரோட்டாவும் சிக்கனும் தயாரித்து எடுத்துக்கொண்டு சஹர் நேரம்(அதிகாலை மூன்று மணி)காலிங் பெல் அடிக்கும் நட்புக்களும் உண்டு.அதிலும் “நீங்கள் வாங்கும் அதே சிக்கன் கடையில் வாங்கிய ஹலால் சிக்கன்”என்று கூறி தருவார்கள்.

வீட்டில் தயாரிக்கும் நோன்புக்கஞ்சியை டேஸ்ட் பண்ணியவர்கள் அதேபோல் அவர்களும் செய்து வடை பஜ்ஜி வகையறாக்களுடன் இஃப்தார் நேரத்தில் எடுத்து வந்து தந்த நிகழ்வும் உண்டு.

ரமலான் ஆரம்பிக்க போகிறது என்று அறிந்ததுமே,ரூஃப் ஆப்ஷா சர்பத்பாட்டிகள்,பழங்கள் என்று வாங்கி வந்து வாழ்த்து சொல்லி மகிழ்விப்பவர்களும் உண்டு.

சில ஆண்டுகளுக்கு முன் மரணித்து விட்ட என் மாமியாரின் மரணச்சடங்குகளையும்,எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாத அமைதியான இறுதி ஊர்வலத்தினையும் பார்த்து விட்டு என்ன ஒரு அமைதியான முறையில் நடந்தேறியது என்று வருடங்கள் பல சென்றாலும் இன்றும் சொல்லிக்காட்டி சிலாகிப்பார்கள்.

வெள்ளிக்கிழமை உச்சிவேளையில்,தினம் மஃரிப் இஷாவுக்கு(மாலை இரவுத்தொழுகைக்கு) இடைபட்ட நேரம் நான் குர் ஆன் ஓதிக்கொண்டிருப்பேன் என்று அதன் நிமித்தமாக என்ன அவசர வேலை என்றாலும் போன் செய்வதையோ,வீட்டிற்கு வருவதையோ தவிர்த்து விடுவார்கள்.

அவசரவேலை நிமித்தமாக என் பையன்களை மட்டும் இங்கு விட்டு விட்டு ஊருக்கு செல்லும் சூழ்நிலை.திடுமென்று பெரியவனுக்கு சின்னம்மை.அம்மை என்றால் தொற்று நோய் என்று காததூரம் ஓடும் சமூகத்தில் கைபக்குவமாக மருந்து அரைத்து புண்களில் தடவி,இளநீர் ஜூஸ் என்று வாங்கிக்கொடுத்து ,பக்குவமாக சமைத்துக்கொடுத்து “வேலையை முடித்து விட்டு வாருங்கள்.நான் இருக்கின்றேன்”என்று தைரியம் சொல்லி என் அலுவல்களை முடித்து விட்டே திரும்பவரசெய்த அந்த மனிதநேயத்தினை என்னால் இன்றுவரை மறக்க இயலாது.

இவர்களது வீடுகளில் நடக்கும் சிறிய விழாக்களில் கலந்து கொள்ளும் பொழுது பூ,பழம்,சட்டைத்துணியுடன் மஞ்சள்,குங்குமம் தருவார்கள்.எங்களுக்கென்றே தனியாக இது இல்லாத தாம்பூலப்பை இருக்கும்.

எங்கள் வீட்டுக்கருகே கிருத்துவதேவாலயம் ஒன்று உள்ளது.நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றல் ஆகும் பாதிரி மார்களின் ஒவ்வொரு குடும்பமும் இதுவரை எங்களுடன் மிக நட்புடனே பழகுவார்கள். தினமும்  அதிகாலை ஜபத்தில்(மார்னிங் பிரேயர்) பாடல்களும்,இசை உபகரணங்களும் ஒலிக்கும்.சுப்ஹ் தொழுகை(அதிகாலை தொழுகை)யின் பொழுது எங்கள் வீட்டில் விளக்குகள் எரிந்ததுமே சப்தம் குறைந்துவிடும்.அரைமணிநேரம் இது தொடரும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

நாங்கள் வாங்கிய வீடும் ஒரு ஆச்சாரமான பிராமின் குடும்பத்தில் இருந்துதான்.ஒரு முஸ்லிமுக்கு போய் வீட்டை விற்கின்றீர்களே என்று அவர்கள் குடும்பத்தினர் காட்டிய எதிர்ப்பையும் மீறி அந்த வயதான மனிதர் எங்களுக்கே விற்றதுமில்லாமல்,அவர்களது குடும்பமும் இதே வீட்டில் ஒரு போர்ஷனில் வசிப்பதற்கு அனுமதி கொடுத்ததை எண்ணி அவர் மட்டுமல்லாமல் எதிர்ப்பு தெரிவித்த அவர்களது குடும்பத்தினரும்  நெகிழ்ந்த தருணங்களை எண்ணும் பொழுது எங்களுக்கு நெகிழ்ச்சியாக உள்ளது.

நாங்கள் வசிக்கும் வீட்டினை இடித்து கட்ட நினைக்கும் பொழுது அசைவம் சாப்பிடும் எங்களுக்கு இலகுவில் வாடகைக்கு வீடு கிடைக்குமா என்று பயந்த பொழுது  “உங்களைப்போன்ற ஆட்களுக்கு வாடகைக்கு விட நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் “என்று கூறி எங்களுக்கு வீடு வாடகைக்கு தந்தவரும் ஒரு சைவ உணவு உண்ணும் குடும்பத்தினரே.இந்த நேரத்தில் வீடு வாடகைக்கு என்று வரும் விளம்பரத்தில் ”ஒன்லி பிராமின்”என்று வரும் விளம்பரங்கள் நினைவில் வந்து செல்லும்.

நபிகள் நாயகம்(ஸல்)அவர்களின் பிறந்த தினம் அன்று அரசாங்க விடுமுறைதினம்.அன்று காலையில் எழுந்து வெளியில் வந்தபொழுது மஞ்சள் நிற ரோஜாப்பூக்கள் குழுங்கும் ஒரு பூந்தொட்டி.எதிர்வீட்டுத்தோழியின் அன்பளிப்பு அது என்று ஆராய்ந்த பின்னர் தான் அறிய முடிந்தது.நபிகளாருக்கு பிடித்த மஞ்சள் வர்ணம் என்று குறிப்பு வேறு.திரு நபியின் திருப்புகழ் மேலும் பரவட்டும்.அல்லாஹ்வின் அருள் என்றும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் உண்டாகட்டுமாக என்று அந்த நட்பின் வாழ்த்து கிடைக்கும் பொழுது நெகிழ்ந்து போனேன்.

டிபிக்கல் முஸ்லிம் கிராமத்தில் பிறந்து வளர்ந்து அக்கம் பக்கம் முழுதும் மாமி,மாமா,சாச்சி,பெரியம்மா,பாட்டி,தாத்தா,சின்ன பாட்டி பெரியதாத்தா என்று சுற்றி சுற்றி உறவினர்களுடன் வாழ்ந்து விட்டு இங்கு முற்றிலும் புதியவர்கள் சூழ வாழும் பொழுது அவர்கள் காட்டிய அன்பும் ,மரியாதையும் உறவினர்களை பிரிந்து வாழும் சுவட்டினை நிறையவே போக்குகிறது என்பது உண்மை.

இப்படி பட்ட சுற்றமும் நட்பும் கிடைப்பது பேறின்றி வேறென்ன?