December 9, 2013

அஞ்சறைப்பெட்டி - 9





1.என் சொந்த ஊரில் நடைபெறும் அநேக திருமணங்கள் மணமகள் வீட்டில்தான் நடை பெறும்.வீட்டு வாசலில் ஷாமியானா போடப்பட்டு பிளாஸ்டிக் சேர்களில் ஆண்களும்,வீட்டுனுள் பெண்களும் அமர்ந்து இருப்பார்கள்.பெண்கள் அனைவரும் தத்தம் செருப்புகளை வாசலிலேயே விட்டு விட்டு வருவது வழக்கம்.அந்நேரங்களில் பலர் செருப்புக்களை தொலைத்ததுண்டு.எனக்கும் நிறைய அனுபவம் உண்டு.ஒரு முறை ஒரு திருமணத்திற்கு சென்ற பொழுது செருப்பு கழற்றும் இடத்தில் ஒரு கேமரா மாட்டப்பட்டு இருந்தது.அட..நல்ல ஐடியாகவா இருக்கே என்று நினைத்துக்கொண்டேன்.செருப்புத்திருடர்கள் இனி பயப்படுவார்கள்தானே?

2.சமீபத்தில் பிரபல ஷோரூம் ஒன்றில் எலெக்ட்ரானிக் பொருள் ஒன்று வாங்கினேன்.பில்லிலேயே டிரான்ஸ்போர்ட்டுக்கு 150 ரூபாய் என்று குறிப்பிட்டு இதனை வண்டிக்காரரிடமே கொடுத்துவிடுங்கள் என்று கூறினர்.பொருள் வீட்டுக்கு வந்ததும் 150 ரூபாயை வண்டிக்காரரிடம் கொடுத்தால் ”எனக்கு ஏதாவது சேர்த்துக்கொடு என்றார்.”வண்டிக்காரர்.”உனக்குதானேப்பா இந்த கூலி”என்று கேட்டால் வெறுமையான சிரிப்புதான் வருகிறது.தொடர்ந்து வேலை தரும் காரணத்தினால் கடைக்கு 100 ரூபாயும்,கூலிக்காரருக்கு 50 ரூபாயுமாக பிரித்துக்கொள்கின்றனராம்.பிச்சை எடுத்ததாம் பெருமாள்.அதை பிடுங்கி தின்னுச்சாம் அனுமார்.

3.இரு சக்கரவாகனத்தில் பெட்ரோல் காலியாகும் நிலை.100 ரூபாய் கொடுத்து பெட்ரொல் போடச்சொல்லி விட்டு கைபேசியில் சுவாரஸ்யமாக பேசியதில் பெட்ரோல் நிரப்புவதை கவனிக்க தவறி விட்டார் என் பையன்.சில அடி தூரம் கூட வண்டியில் சென்று இருந்திருக்க மாட்டார் வண்டி பெட்ரோல் இல்லாமல் நின்று விட்டது.உடனே பைக்கை தள்ளிக்கொண்டே மீண்டும் பெட்ரோல் பங்க் வந்து சப்தம் போட்ட பொழுது உள்ளே இருந்த மேனேஜர் வந்து விசாரித்து இருகின்றார்.பெட்ரோல் போட்ட ஆள் திரு திரு வென விழிக்க ,மிகவும் கடினமாக பெட்ரோல் போடுபவரை கண்டித்து வேலையை விட்டு நிறுத்துவதாகவும் சப்தம் போட்டு விட்டு 100 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பி அனுப்பி இருக்கின்றார்கள்.100 ரூபாய்தானே இதைக்கேட்டுக்கொண்டெல்லாம் திரும்ப வரமாட்டார்கள் என்ற குருட்டு தைரியம்தான் போலும்.அதன் பின்னர் இரண்டு முறை மூன்று முறை அந்த பெட்ரோல் பங்க் சென்றபோதேல்லாம் ஏற்கனவே பெட்ரொல் போடுவதில் தகிடுதத்தம் செய்த ஊழியரை காணவில்லை.

4.ஆஸ்திரேலியாவில் ஒரு நகைக்கடைக்கு சென்ற திருடன் சுமார் முப்பது லட்சம் மதிப்புள்ள இரண்டு வைர மோதிரங்களை திருடும் பொழுது பிடிப்பட்ட தருணத்தில் மோதிரங்களை வாயில் போட்டு விழுங்கி விட்டார்.கடை ஊழியர்கள் துரத்தி சென்று திருடனை பிடித்து போலீஸில் ஒப்படைத்து விட்டனராம்.இப்பொழுது திருடனின் வயிற்றுக்குள் இருக்கும் மோதிரங்களை எடுக்கும் முயற்சியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றர்.இந்த திருடனுக்கு வயிற்றுக்குள் லாக்கர் இருக்கிறது போலும்!

5.சென்னையில் 14 ஆயிரத்து 600 கோடி மதிப்பில் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பணி நடைபெற்று வருகிறது.அயல் நாட்டுக்கு ஈடாக அனைத்து வசதிகளும் அமையப்பெற்று சென்னைவாசிகளுக்கு பயன்தரக்கூடிய வகையில் மக்களின் பெரும் எதிர்பார்ப்புடன் அடுத்த ஆண்டு மெட்ரோ ரெயில் பயன்பாட்டுக்கு வர துரிதமாக பணி நடந்துவருகிறது.ரெயில் பயன்பாட்டுக்கு வந்த பிறகு வெற்றிலை எச்சில்கள்,குப்பைகூளங்கள்,உணவுக்கழிவுகள் என்று அசிங்கப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று இப்பொழுதே மனம் சஞ்சலப்படுகிறது.




December 4, 2013

இரவல் புத்தகம்



சென்ட்ரல் ஸ்டேஷன்..

வழக்கம் போல் அதே ஆர்ப்பாட்டத்துடன்,ஜனத்திரளாக சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது.தூரத்தில் இருக்கும் எலக்ட்ரானிக் போர்டை டஜன் கணக்கு தலைகள் மறைக்க எம்பி எம்பி பார்த்து பெங்களூர் செல்லும் சதாப்தி நான்காவது பிளாட் பாரத்தில் நிற்பதை அறிந்து கொண்டுஅவசரமாக தோளில் மாட்டி இருந்த  பேகை சுமந்து கொண்டு ,டிராலியை இழுத்துக்கொண்டு எதிர் பட்ட கடையில் ஒரு வாட்டர் பாட்டிலுடன் பொழுதை போக்க வேண்டுமே என்பதற்காக வாராந்திரபத்திரிகை ஒன்றினையும் வாங்கிக்கொண்டேன்.பத்திரிகையுடன் இலவசமாக ஒரு பவுச் மூட்டு வலித்தைலத்தையும் மறக்காமல் வாங்கிக்கொண்டு ரயில் ஏறினேன்.

வண்டி கிளம்புவதற்கு தயாராக இருந்தது.ஏஸி சில்லிப்புடன் நிறைய இருக்கைகள் காலியாக இருந்தன.எனக்குறிய இருக்கை எண்ணை கண்டு பிடித்து அருகே சென்ற பொழுது ஜன்னலோர சீட்டில் என் வயதை ஒத்த ஒருவர் செல்போனில் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு இருந்தார்.

கைப்பையையும்,டிராலி பேக்கையும் லக்கேஜ் வைக்கும் பகுதியில் வைத்து விட்டு இருக்கை மீது வைத்து விட்டுப்போன வார இதழை பிரித்தேன்.

பிரித்ததுதான் தாமதம் அருகில் இருந்தவர் என் தோளுடன் ஒட்டி உரசிக்கொண்டு என் கையில் இருந்த பத்திரிகையை பார்வையால் மேய ஆரம்பித்தார்.

எனக்கு யாரும் மிக நெருக்கமாக அமர்ந்து ஒட்டி உரசிக்கொண்டு இருப்பது பிடிக்காத விஷயம்.மிகவும் நெருங்கிய நண்பர்களாயினும் அரை அடி  தள்ளியே அமருவேன்.நண்பர் பட்டாளம் என்னை சூனா மானா என்று நக்கலாக பட்டப்பெயர் சொல்லி அழைப்பார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.அதாகப்பட்டது சுத்த மகாராஜா.அப்படி பட்ட எனக்கு முன் பின் தெரியாத ஒரு நபர் இப்படி நெருக்கமாக அமர்ந்து கொண்டு இம்சை கொடுத்தால் எப்படி சகித்துக்கொண்டு இருக்க முடியும்?

என் தோளில்  இப்படி ஒய்யாரமாக சாய்ந்து கொண்டு பக்கத்தில் இருப்பவரை இப்படி படுத்துகிறோமே என்ற கூச்ச நாச்சமின்றி ஓசிப்பத்திரிகையை வாசிக்கும் பக்கத்துசீட்டுக்காரரை பார்த்த நொடி மனம் பூராகவும் எரிச்சல் மேலோங்கியது.

வில்ஸ் டீ ஷர்ட்டும் லிவிஸ் ஜீனும் போட்டுக்கொண்டு கையில் பிளாக்பெரியுடன் இருப்பவனுக்கு 20 ரூபாய் கொடுத்து ஒரு பத்திரிகை வாங்கிப்படிக்க துப்பில்லையே தூ..”மனதிற்குள் வெறுப்பு  மண்டியது.

தொடர் கதையைப்படிக்க ஆரம்பித்தேன்.பக்கத்து சீட் கரரும் என்னைத்தொடர்ந்து தொடர்கதையை படிக்க ஆரம்பித்தார்.நான் வேண்டுமென்றே இருக்கையில் நிமிர்ந்து உடகார்ந்து படித்தாலும் அந்த மனுஷன் விடாகண்டனாக இருப்பான் போலும்.

நீண்ட நேரம் பக்கத்தைப்புரட்டாமல் வேண்டுமென்றே சும்மா அமர்திருந்தேன்.

“சார்..அடுத்த பக்கத்தைப்புரட்டுங்க சார்”

கோபமாக உறுத்துப்பார்த்து விட்டு “நான் படித்து முடித்தால் தான் புரட்ட முடியும்”சற்று கோபமாகவே குரலை வெளிப்படுத்தினேன்.

பக்கத்து சீட் மகா மனுஷன் அசருவதாக இல்லை.விளம்பரங்களைப்படித்தாலும்,துணுக்குகளை படித்தாலும் கூடவே என்னை ஒட்டிக்கொண்டு  அமர்ந்து எனக்கு எரிச்சலை அதிகமாக்கினார்.

ஒரு கட்டத்தில் சற்று முணு முணுப்பாகவே வாசிக்கும் பொழுது எரிச்சலின் உச்சகட்டத்துக்கே போய் விட்டேன்.

“சார்..பக்கத்தில் இருப்பவரும் புத்தகத்தை படிக்கிறார் என்பது ஞாபகம் இருக்கு இல்லை..:

“சாரி சார்”

மீண்டும் கண்ணால் மேய ஆரம்பித்தார்.இந்த ஆள் விடவே மாட்டான் போலும்.வந்த ஆத்திரத்தில் புத்தகத்தை மடித்து பையில் வைப்பதற்காக எழுந்தேன்.

“என்ன சார் புத்தகத்தை போய் பையில் வைக்கப்போறீங்க”

“யோவ் ..பையில் வைக்காமல் உங்க கையிலா கொடுப்பாங்க”

“என் புக்கை என் கையில் கொடுக்காமல் உங்க பையில் வைக்கறது எந்த விதத்தில் நியாயம்?”

“உங்க புக்கா”

“பின்னே..நானும் நாகரீகம் கருதி என் புக்கை கொடுங்கன்னு கேட்காமல் உங்க கூடவே சேர்ந்து புக்கை படித்துக்கொண்டு வேறு வழி இல்லாமல் அவஸ்தையை சகித்துக்கொண்டு பொறுமையாக  இருந்தேன் சார்.”

நான் அவசர அவசரமாக பையை எடுத்து பார்த்த பொழுது நான் வாங்கிய வார இதழ் இலவச இணைப்புடன் என்னைப்பார்த்து சிரித்தது.

December 3, 2013

மின்சாரம்




தீபாவளிக்கு ரயில் பட்டாசு விட 
கயிறு தேவை இல்லை

களைக்கூத்தாடிகள் ஏறி நடந்து
வித்தை காட்ட கம்பி கட்ட தேவை இல்லை

தோரணம் கட்ட கட்சிக்காரர்களுக்கு
சணல் செலவு ரொம்பவே மிச்சம்

சிறார்கள் மரத்தை தேடுவதில்லை 
ஊஞ்சல் கட்டி விளையாட

நேற்றுவரை காகங்களும் சிட்டுகளும் 
ஏறி விளையாடிய மின் கம்பிகள்

இன்று மின்சாரம் இல்லாமல் தோரணமாக 
வசதியாக  தொங்குகிறதே வீதிகளில்



November 27, 2013

காலத்தின் கோலம்.



எங்கள் பிளாக் ஸ்ரீராம் சார் சமீபத்தில் எழுதிய இடுகையின் முதல் வரியை படித்த இன்ஸ்பிரேஷன் தான் இந்த பதிவெழுதக்காரணம்

1967
மகன்:ப்பா..பா....பா

அப்பா:என்னடா செல்லம் வேண்டும்?

மகன்:பா..பா..பா

அப்பா:அட..என் தங்கத்துக்கு பலூனா வேண்டும்?ஐயோ..பாக்கெட்டில் சில்லரை இல்லையே..இந்தப்பா பலூன்காரா.சித்த நேரம் பொறு..நாலே எட்டில் வீட்டை திறந்து சில்லரை எடுத்துட்டு வந்துடுறேன்.

அம்மா:ஏங்க,வீட்டை பூட்டிட்டு கோயிலுக்கு கிளம்பியாச்சு.இப்ப எதுக்கு பலூன்?

அப்பா:குழந்தை ஆசைப்படுறாண்டி..அவனுக்கு இல்லாததா?கோவில் எங்கே ஓடிப்போகப்போறது.இதோ..ரெண்டே நிமிஷத்திலே வீட்டை திறந்து சில்லரை எடுத்துட்டு வந்துடுறேன்.

1974
மகன்:எப்ப பாரு தயிர் சாதமும் ஊறுகாயும்தானா?சந்துரு,கோவிந்தன் எல்லோரும் வகை வகையாக சாப்பாடு எடுத்துட்டு வர்ராங்க..

அப்பா:அடியே..வழக்கம் போல் நமக்கு தயிர்சாதம் இருக்கட்டும்..பையனுக்கு பிரிஞ்சி சாதம்,தேங்காய் சாதம் சப்பாத்தி இப்படி இனி நீ வித விதமாக செய்து கொடுத்தாகணும்.வளருகிறபிள்ளை நல்லா சாப்பிடட்டும்.

1982
அம்மா:என்னங்க,அவனவன் ஸ்கூலுக்கு சைக்கிளில் போகிறான்.நம்ம பிள்ளை புஸ்தக மூட்டையை சுமந்துகொண்டு மூச்சிரைக்க நடந்து போவதை பார்க்க மனசு ஆறலே.ஒரு சைக்கிள் வாங்கி கொடுத்துடுங்க.

அப்பா:இப்ப சைக்கிள் வாங்குறதுக்கு பணம் ஏது?பொங்கல் வேற வருது?

அம்மா:பொங்கலுக்கு பசங்களுக்கு மட்டும் புதுசு எடுத்துடுவோம்.தீபாவளிக்கு கட்டியதை இஸ்த்ரி பண்ணி நாம கட்டிக்கலாம்.

அப்பா:இதுவும் நல்ல ஐடியாகவாகத்தான் இருக்கு.நமக்கு என்னத்தை புது துணி வாங்கறது?பிள்ளைங்க சந்தோஷம்தான் நமக்கு சந்தோஷம்.அதுக மனசு நிறைய சிரித்தால் நமக்கு புதுசு கட்டிய மாதிரித்தான்.

1986
மகன்:அப்பா,காலேஜுக்கு போக வர ஒரு பைக் வேண்டும்.

அப்பா:இப்ப தானே கடனை உடனை வாங்கி பற்றும் பற்றாததுக்கு உங்க அம்மாவுடைய செயினை விற்று காலேஜ் சீட் வாங்கினோம்.இப்ப எப்படிப்பா?

மகன்:லோன் வாங்கிக்கலாம் அப்பா.மாசா மாசம் உங்கள் சம்பளத்தில் கட்டிக்கலாம்

அம்மா:யோசிக்காதீங்க..இந்த மாசத்தோட நாம போடும் சீட்டு முடியுது.மறு சீட்டு போடாமல் அதை லோனாக கட்டிடலாம்.

அப்பா:முதல்லே 20 % கட்டியாகணுமே?

அம்மா:கவலையே வேண்டாம்தீபாவளி சமயத்திலே நாம போட்ட எப் டி மெச்சூரிட்டி ஆகுது இல்லே.அந்த பைசாவை எடுத்துக்கலாம்.நமக்கு எதுக்கு இப்ப சேமிப்பு?நம்ம பிள்ளை பெரிய ஆளாக போய் நமக்கு தராமல் யாருக்கு தரப்போறான்..இல்லடா செல்லம்..

1990
மகன்:அப்பா,நான் பர்ஸ்டு கிளாஸில் பாஸ் செய்துட்டேன்.பி.ஜி பண்ண வேண்டும்?

அப்பா:இப்பவே கடன் மூச்சை முட்டுதுப்பா..இதுக்கு வேற எப்படி..

மகன்:ஏம்ப்பா..நான் மேலே மேலே படித்தால் சம்பளமும் ஜாஸ்தியாகுமேப்பா.நான் சம்பாதிக்கும் வரை கொஞ்சம் பல்லை கடித்துட்டு சிரமம் பார்க்காமல் செலவு பண்ணிட்டோம்ன்னா என் காலில் நான் நின்னதுக்கப்புறம் பிரச்சினை இல்லைப்பா.நிம்மதியா காலத்தை ஓட்டலாம்.

அப்பா:எனக்கு ஒரு ஐடியாகவும் தோன்ற மாட்டேன்கிறதே..

மகன்:யோசிக்காதீங்கப்பா..நேற்று கூட நீங்களும் அம்மாவும் நம்ம கிராமத்திலே உள்ள நாலு செண்ட் நிலத்தை பற்றி பேசிட்டு இருந்தீங்களே.பேசாமல் அதை விற்றோம்ன்னா இருக்கற கடனை அடைக்கவும் ஆச்சு என் படிப்பு செலவுக்கும் ஆச்சு.அம்மாவின் மொட்டை கழுத்துக்கு மெல்லிசா ரெண்டு சவரனில் செயின் கூட வாங்கிக்கலாம்.

அப்பா:......

மகன் :யோசிக்கறதுக்கு என்னப்பா இருக்கு?நான் சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டால் இதே போல் எத்தனை இடம் வாங்கப்போறோனோ.

1994
மகன்:அப்பா,நான் கார் வாங்கலாம்ன்னு இருக்கேன்.அதனாலே கொஞ்ச நாளைக்கு என்னிடம் இருந்து என் சம்பளத்தை எதிர் பார்க்காதீங்க..

அப்பா:........

மகன்:ஏம்ப்பா..மவுனமாகிட்டீங்க.நாளைக்கு நான் கார் வாங்கினால் உங்களுக்கு கவுரவம் இல்லையா?என் கூட முன் சீட்டில் ஏஸியை போட்டுட்டு ஜம் என்று உட்கார்ந்துட்டு ஊரையே சுற்றிப்பார்க்கலாம்.அம்மா உனக்கு பின் சீட் தான் ஒகேவா..

1998:
அம்மா:தம்பி அப்பாவுக்கு ரெண்டு நாளா ஜுரம்.சித்த காரில் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயேன்..

மகன்:சாரிம்மா..ஆட்டோ பிடித்து போய்க்குங்க...நானும் மீனாவும் சேர்ந்து அவங்கம்மா வீட்டுக்கு போகப்போறோம்.

2000
அப்பா:....தம்பி..உன் அக்கா புருஷனுக்கு பைல்ஸ் ஆபரேஷன் பண்ணி இருக்கு. உன்னால்தான் போக முடியலே.நாங்களாவது போய் பார்த்துட்டு வந்துடுறோம்.போகாவிட்டால் குறையாகப்போய்டும்அனுப்பி வையப்பா..

மகன்:அச்சச்சோ..அம்மா உனக்குத்தான் தெரியுமே நானும் மீனாவும் குழந்தையும் பங்களூர் மைசூர் டூர் போக பிளான் போட்டு இருக்கோம்.இந்நேரம் பார்த்து அக்காவை பார்க்கணும் ,அத்திம் பேரை பார்க்கணுன்னா எப்படி?போன் போட்டு பேசிட்டே இல்லே.அது போதும்.

2002
அம்மா:ரெண்டு நாளா இருமல் வாட்டி எடுக்குது.உங்கப்பாவை தூங்கவே விடலே.ஆஃபீஸ் விட்டு வர்ரச்சே இருமல் டானிக் வாங்கிட்டு வாப்பா.

மகன்:அம்மா..மாசக்கடைசி.அப்பாவை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கச்சொல்லு.

மருமகள்:ரெண்டு துண்டு சுக்கைத்தட்டிப்போட்டு வெந்நீரை குடித்தால் இருமல் தானா போய்டப்போறது.இதுக்கு போய் எதுக்கு சிரப்புக்கு தண்டமா செலவு செய்யணும்?

மகன்:அதுவும் சரிதான்.


November 26, 2013

மருத்துவர் மகாத்மியம்



வெளி நாட்டில் இருந்து வருடத்திற்கு ஒரு முறை விடுமுறையில் வரும் ஒரு உறவினர் வழக்கம் போல் ரெகுலர் செக் அப் சென்றுள்ளார்.பிரஷர் சுகர் கொலஸ்ட்ரால் என்று எதுவும் இல்லாதவர்.ஸ்டெத்தை வைத்து மட்டும் பரிசோதித்து விட்டு ஆஞ்சியோ கிராம் உடனே பண்ணி ஆக வேண்டும் என்று மருத்துவர் வற்புறுத்தினார்.குழந்தைகளுக்கு பேய்,பூச்சாண்டி என்று பயம் காட்டுவது போல் வாய்க்குள் நுழைய முடியாத பெயர்களைகூறி கதிகலங்க வைத்து விட்டார்.வழமையான செக் அப் சென்றவருக்கோ அதிர்ச்சி.எந்த பிரச்சினையும் இல்லாமல் எந்த வித பரிசோதனையும் முறைப்படி செய்யாமல் எடுத்த எடுப்பில் ஆஞ்சியோ செய்ய வேண்டும் என்றால் அதிர்ச்சி வராமல் என்ன செய்யும்.

ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு  இருதயத்தில் உள்ள தசைகளின் பாதிப்பைப் பொருத்து, மீண்டும் நெஞ்சுவலி வந்தாலும், பாதிக்கப்பட்டவரின் வயதைப்பொருத்தும் ,உடல் நிலையைப்பொருத்தும் ஆஞ்சியோகிராம் செய்து, அதில் அடைப்பு உண்டா என்று கண்டறிந்து சிகிச்சை செய்வார்கள். இ சி ஜி ,டிரட்மில் ,எக்கோ என்று பல்வேறு பரிசோதனைகளுக்கே பின்னரே ஆஞ்சியோ செய்வதை கேள்விப்பட்டுள்ளோம்.

மருத்துவரிடம் இதனை கேட்டபொழுது “நீங்கள் பாரினுக்கு செல்கின்றீர்கள்.இதெல்லாம் தற்காப்புக்குத்தான்.மற்ற ஹாஸ்பிடலை விட 30%குறைவாகவே கட்டணம் பெறுகிறோம்.இந்த சலுகை இன்னும் ஓரிரு வாரங்களுக்கு மட்டுமே.ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பி விடுவோம்.நாளையே அட்மிட் ஆகி விடுங்கள்.” என்று வார்த்தை ஜாலம் செய்துள்ளார்.

எடுத்த எடுப்பிலேயே ஆஞ்சியோ என்பவர் அடுத்து ஆஞ்சியோபிளாஸ்டி (Angioplasty),பைபாஸ் (CABG) லெவலுக்கு இழுத்து சென்று விடுவாரோ என்று பயந்து போய் ”வீட்டில் கன்சல்ட் பண்ணி விட்டு வருகிறேன்”என்று தப்பித்தோம் பிழைத்தோம் என்று என்று ஓடி வந்து விட்டார்.

அதன் பிறகு எப்படி நிம்மதியாக வெளிநாடு செல்ல இயலும்.வேறொரு மருத்துவரை பார்த்து முறையாக பரிசோதனை செய்து பார்த்த பொழுது அந்த மருத்துவர் முதலாம் மருத்துவர் ஆஞ்சியோ பண்ண சொன்னதை கூறி சிரித்தாராம்.

பிறகுதான் கேள்விப்படுகிறோம்.முதலாம் மருத்துவர் சமீபத்தில்தான் புதிதாக நவீன வசதிகளுடன் ஒரு மருத்துவ மனை எகப்பட்ட லோனை வாங்கி கட்டி முடித்து இருக்கிறார் என்று.

இப்படி பட்ட மருத்துவர்கள் எண்ணற்றவர்கள் உண்டு என்பதுதான் உண்மை.வருத்தமூட்டும் இப்படி நிகழ்வுகளுக்குகிடையில் இப்படியும்  ஒரு மருத்துவர்.

சுமார் நான்காண்டுகளுக்கு முன்னர் காய்ச்சல் ஏதும் இல்லாமலேயே குளிர் திடுமென்று எனக்கு ஏற்பட்டு விட்டது.குளிர் என்றால் தாங்க இயலாத குளிர்.உடனே ஒரு மருத்துவரிடம் சென்றோம்.பிரஷர் பார்த்த பொழுது 80/120 இருக்க வேண்டியது 160/250 காண்பித்தது.மருத்துவர் அதிர்ந்து போய் விட்டார்.நம்ப இயலாமல் மீண்டும் மீண்டும் பிரஷர் செக் செய்து பார்த்தவருக்கு முகமே மாறி விட்டது.உடனே இ சி ஜி எடுத்துப்பார்த்ததில் அது நார்மலாகவே இருந்தது.உடனடியாக ஒரு இஞ்செக்‌ஷன் போட்டு ஒரு அரைமணி நேரம் தூங்க வைத்து மீண்டும் பிரசர் செக் செய்த பொழுது சற்றே குறைந்து இருந்தது.

வீட்டில் போய் நன்கு ரெஸ்ட் எடுக்கும் படி கூறி விட்டு என் கணவரை தனியாக அழைத்து இரவு முழுதும் சற்று கண்காணியுங்கள்.ஏதாவது சிறு மாற்றம் ஏற்பட்டாலும் உடனே இசபெல் ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்று விடுங்கள் என்றிருக்கிறாராம்.

மறுநாள் காலையில் மீண்டும் பிரஷர் செக் செய்ததில் நார்மல்.இதனையே ஒரு உறவினரான இன்னொரு மருத்துவரிடன் பிரிதொரு நாள் சொல்லிக்காட்டிய பொழுது “இதையே வேறொரு டாக்டரிடம் சென்றிருந்தால் அந்நேரம் உன்னை ஐ சி யூ வில் படுக்க வைத்து ஆயிரத்தெட்டு பரிசோதனை செய்து ஒப்பன் ஹார்ட் சர்ஜரி வரை போய் இழுத்து விட்டு இருந்திருப்பார்கள் என்று கூறி சிரிக்கின்றார்.

November 23, 2013

பேப்பூர்.

 கோழிக்கோடில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில்  பேப்பூர் (BEYPORE) என்ற அருமையான சுற்றுலா தளம் உள்ளது.அழகிய கடற்கரை,அதனை ஒட்டி பேப்பூர் துறைமுகம்,அருகிலேயே கப்பல் கட்டும் தளம் ,கடலுக்குள் பயணிக்கும் கல் பாலம், மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் கடலுண்டி பறவைகள் சரணாலயம் என்று செல்ல வேண்டிய இடங்கள் எராளமாக உள்ளன.

மாபெரும் இலக்கிய மேதை ,சுதந்திர போராட்ட வீரர் வைக்கம் முஹம்மது பஷீர் வாழ்ந்து மறைந்த ஊர் என்ற பெருமையும் இந்த பேப்பூர் நகருக்கு உணடு.


பேப்பூர் பீச் மிக அழகாக காட்சி அளிக்கிறது.நாங்கள் சென்றது வீக் எண்ட் தினத்தில்.ஆகையால் கூட்டம் மெரினா பீச்சை நினைவூட்டியது.கடல்காற்று வாங்கிய படி குடும்பத்துடன் அமர்ந்து கொள்வதற்கு வசதியாக  பீச் நெடுக கிரானைட் தளம் போட்ட உட்காரும் மேடை பீச் ஓரம் நீளமாக போடப்பட்டுள்ளது.பீச்சுக்கு செல்லும் பொழுது பெட்ஷீட்டோ,ஜமக்காளமோ சுமந்து செல்லும் வேலை மிச்சம்.வழி நெடுகிலும் அழகான விளக்கலரங்காரக்கம்பங்கள் கலை நயத்துடன் கண்களை கவர்ந்தாலும் பாராமரிப்பின்றி இருந்ததுதான் சோகம்.


கட்டணம் செலுத்தி துறைமுகத்துக்குள் நுழைந்தால் ஆங்காங்கே பெரிய பெரிய படகுகள் காணப்பட்டன.பல அடி ஆழமுள்ள கடலுக்கு அருகிலேயே தரைத்தளம் எந்த வித கைப்பிடி சுவரும் இல்லாமல் இருந்தது கிலியை கொடுத்தது.எங்கள் வீட்டு குட்டியின் கையை இறுக பற்றிக்கொண்டேன்..அருகில் போய் கடலை குனிந்து பார்த்தால் பயத்தில் விழி பிதுங்கிப்போனது.கொச்சிக்கு அடுத்த பெரிய துறை முகம் என்ற பெயரை பேப்பூர் துறைமுகம் பெற்றுள்ளது.



பேப்பூர் கப்பல் கட்டுமானத்தொழிலுக்கு புகழ் பெற்ற ஒரு கட்டுத்தளமாகும்.பண்டைய காலத்தில் உருசு என்ற மரக்கலன்கள் தயாரிப்பதில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கியதாக இத்தளத்தை குறிப்பிடுகின்றனர்.சுமார் ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்னரே அனுபவம் நிறைந்த தொழிலாளர்கள் தொழில் நுணுக்கத்துடன் கப்பல் கட்டும் பணியில் ஈடு பட்டு இருந்தனராம்

 வெயில் மழை படாமல் நேர்த்தியாக மறைக்கப்பாட்ட பின்னர்தான் கப்பல் தயாராகின்றன.

உருவாகிக்கொண்டு இருக்கும் கப்பல்.


கப்பலின் அடிப்பாகம்.


கத்தார் மன்னருக்காக தயாராகிக்கொண்டுள்ள சொகுசுக்கப்பல்.இது அங்கிருந்த காவலாளி சொன்ன தகவல்.


கப்பலின் பக்கவாட்டுப்பகுதி..கப்பல் நிர்மாணிக்கப்பட்டு மலேஷியாவுக்கு எடுத்துச்சென்று எஞ்சினும் ஏனைய அலங்காரமும் மேற்கொள்ளப்படுமாம்.


கப்பலின் உயரத்தைப்பார்த்து அங்கிருந்த மர ஏணியில் ஏற நான் தயங்கினாலும் என்னவரும் எங்கள் வீட்டு குட்டி ஆமிரும்  சரசர வென்று அங்கிருந்த மர ஏணியில் ஏறி கப்பலின் உச்சிக்கு சென்று எடுத்து வந்த படங்கள்.

கப்பலின் உள் அலங்காரம்.சொகுசுக்கப்பல் ஆகையால் கப்பலினுள் ஒவ்வொரு மில்லி மீட்டரும் பார்த்து பார்த்து செதுக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றன.

November 15, 2013

மூடாத பொக்கிஷம்




“வாப்பா..இந்த சம்மை எப்படிப்போடணும்” சமீரின் 10 வயது மகள் திரும்பத்திரும்ப கேட்டும் சமீரின் காதில் வார்த்தைகள் விழுந்தாலும் மூளையில் பதியாமல் போனது.

“வாப்ப்ப்ப்ப்பா”மகள் அழுத்தி சப்தமாக கேட்டதும் சுதாரித்துக்கொண்டான்.

மகளின் சந்தேகத்தை நிவர்த்தி செய்து விட்டு மீண்டும் யோசனையில் ஆழ்ந்தான்.காலையில்  வங்கியில் போட்ட செக் பவுன்ஸ் ஆனதில் இருந்து சமீரின் மனது நிலை கொள்ளாமல் துடித்தது.கடந்த ஆறு மாதம் முன்பு வரை நன்றாக போய்க்கொண்டிருந்த வியாபாரம் எதிரே பிருமாண்டமான ரெடிமேட் ஷாப் திறந்ததும் சமீரின் கடையில் நடக்கும் வியாபாரம் படிப்படியாக குறைந்து போனது.வியாபாரம் ஓஹோ என்றுஇருந்தவனுக்கு இப்போது கஷ்டமான சூழ்நிலை.நன்றாக இருந்த சூழ்நிலையில் வருடா வருடம் முப்பது நாள் நோன்பில் ஒரு நாள் சஹருக்கு பள்ளிவாசலில் இவனது செலவில் சாப்பாடு நடக்கும்.வரும் வெள்ளியன்று சமீரின் செலவில் சாப்பாடு.

சாப்பாட்டுக்குழுவினர் நோன்பு ஆரம்பத்திலேயே “இந்த வருடமும் வழக்கம் போல் ஒருநாள் உங்கள் செலவில் சஹர் உணவு உண்டுதானே லிஸ்டில் சேர்த்துக்கொள்ளட்டுமா உங்கள் பெயரை?”என்று கேட்டபோது மனதார பெயர் கொடுத்து விட்டான்.இப்போது போய் முடியாது என்று எப்படி சொல்ல இயலும் .யா அல்லாஹ் நான் என்ன செய்வேன்?”மனம் கலங்கிப்போனது.

200 பொட்டலம் சாப்பாடு ஆர்டர் செய்வதாக இருந்தால் குறைந்தது 10000 தேவைப்படும்.அந்த பத்தாயிரத்தை புரட்டத்தான் இரண்டு நாட்களாக அலைச்சல்.கஸ்டமர் கொடுத்த  செக்கை நம்பி இருந்தவனுக்கு செக் பவுன்ஸ் ஆனதில் திகைத்துப்போய் விட்டான்.கைமாற்று வாங்கலாம் என்று பார்த்தால் உதவுபவர் யாரும் இல்லை.

“தப்பா நினைச்சுக்காதீங்க பாய்.பெருநாள் நெருங்குது பாருங்க நமக்கு கொஞ்சம் டைட்”

“அல்லாஹ்வே..நேற்றே கேட்டு இருக்கக்கூடாது.”

“மன்னிச்சுக்குங்க பாய்.என்னாலே உதவ முடியாததற்கு”

இப்படியான பதில்களில் நொந்து போனான் சமீர்.

உணவக உரிமையாளர் மதார் போன் செய்துவிட்டார்,”சமீம் பாய்.நீங்கள் ஆர்டர் கொடுத்தால்தானே நான் பொருட்கள் வாங்க முடியும்,இன்னும் ஒரே நாள்தானே உள்ளது?”

இஃப்தாருக்கு தயார் செய்து கொண்டிருந்த சமீரின் மனைவி நிஷா கணவரின் சோகமுகம் கண்டு ”ஏங்க..ஹபீப் காக்காவிடம் கேட்கலாம் என்று போனீர்களே என்ன ஆச்சு “என்றாள்.

“அவர் ஊருக்கு போய்விட்டார்.அவர் இருந்தால் இத்தனை திண்டாட்டம் இல்லை.தாத்தா,வாப்பா காலத்தில் இருந்து வருடாவருடம் தொடர்ந்து செய்து வந்த காரியம்.இந்த வருடம் முடியாமல் போய்விடுமோ என்று அச்சமாக உள்ளது”

”கவலைப்படாதீங்க.அல்லாஹ் நம்மை ஒரு போதும் கைவிடமாட்டான்.இஃப்தாருக்கு நேரம் ஆகுது.கைகால் அலம்பிட்டு வாங்க”

“மனசு ரொம்ப கஷ்டமாக உள்ளதும்மா.என்ன பண்ணுறது என்று புரியவே இல்லை”புலம்பியபடி எழுந்தான்.

மறுநாள்...

வழக்கம் போல் கடையை திறந்து விட்டு கல்லாவில் அமர்ந்த மறு நிமிடமே கேட்டரிங் மதாரிடம் இருந்து போன்.

“பாய்..என்ன சப்தத்தையே காணோம்.நீங்கள் ஆர்டர் கொடுத்தால்தான் நான் சாமான்கள் எல்லாம் வாங்க முடியும்.”

“பாய்..நான் மதியம் போன் செய்கிறேன்.கொஞ்சம் பொறுங்க”இப்படி சொல்லி விட்டானே தவிர மதியம் என்ன செய்யப்போகிறோம் என்ற கேள்வி சமீரை சுற்றி வளைத்தது.

மதியமும் போய் மாலையும் வந்தது.எந்நேரமும் மீண்டும் கேட்டரிங் மதாரிடம் இருந்து போன் வந்து விடுமோ என்ற நினைவு சமீரை சங்கடப்படுத்தியது.

“நிஷா...பேசாமல் மதார் பாயிடம் இந்த வருடம் பண்ணவில்லை என்று சொல்லி விட்டு பள்ளிவாசல் ஆட்களிடமும் சொல்லி விடலாமா?”

“எப்படிங்க..கடைசி நேரத்தில் சொன்னால் அவர்களும் என்ன செய்வார்கள்”

“யா அல்லாஹ் இப்ப நான் என்ன செய்யப்போகிறேன்”அவர் சொல்லிகொண்டு இருக்கும் பொழுதே காலிங் பெல் சப்தம்.

“நிசா,யாரென்று போய் பாரு”

வாசலில் காதர் பாய்.”அஸ்ஸலாமு அலைக்கும்”

“வ அலைக்கும்சலாம் .உள்ளே வாங்கண்ணா”

“சமீர் பாய் இல்லையா”கேட்டுக்கொண்டு இருக்கும் பொழுதே சமீர் வந்து விட்டார்.”வாங்கண்ணா..என்ன அதிசயமாக வீட்டு பக்கம்..”

“உங்களைத்தான் பார்க்க வந்தேன்.”

”சொல்லுங்கண்ணா”

“வழக்கம் போல் எங்கள் வீட்டில்  நண்பர்கள்,உறவினர்கள்,தொழில் நட்புக்கள், என்று 200 பேருக்கு சஹர் சாப்பாடு போடுவோம்.நாளைக்கு ஏற்பாடு நடந்து கொண்டு இருக்கும் பொழுது ஊரில் இருக்கும் என் பாட்டிக்கு சீரியஸ் என்று போன் வந்தது.நாங்கள் ஊருக்கு கிளம்பிக்கொண்டு இருக்கிறோம்.ஏற்பாடெல்லாம் நடந்து விட்டது.நீங்கள்தான் பள்ளி வாசலில் நாளைய சஹருக்கு அரேஞ்ச் பண்ணுவீர்களே.இதனை நீங்கள் எடுத்து செய்யுங்கள் பணவிபரம் எல்லாவற்றையும் மெதுவா செட்டில் பண்ணிக்கலாம்.நான் அவசரமாக கிளம்பணும்.வரட்டுமா”

சமீர் திகைத்துப்போய் நின்று இருந்தான்.வீட்டில் எங்கேயோ “பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை”என்ற பாடல் வரிகள் காற்றில் மெதுவே தவழ்ந்து செவியில் விழுந்து இதயத்தை நிறைத்தது.

September 24, 2013

அல்பம்



இது ரொம்ப அல்பதனம்”
“புத்தி ஏன் இப்படி அல்பதனமா போகிறது”
“சரியான அல்பம்”

சிறுமையாக,சின்னத்தனமாக நடப்பவர்களை இவ்வாறு விளிப்பார்கள்.வடிகட்டின கஞ்சதனத்தைக்கூட இவ்வாறு அழைக்கப்படுகிறது.அல்பம் இழிவு, அற்பம்,சிறுமை,சின்னத்தனம்.கஞ்சத்தனம் அனைத்துக்கு இந்த அல்பம் நாமகரணம் சூட்டப்படுகிறது.ஆங்கிலத்தில் அல்பத்திற்ககான சொற்கள் insignificant, trifle, silly எனப்படும்.

சரி எதை எல்லாம் அல்பம் என்று வசைப்பாடுகின்றனர் என்று சிலஅல்பவகைகளை லிஸ்ட் போடுவோம் .

1.நொறுக்ஸை கொறித்துக்கொண்டு இருக்கும் போது பக்கத்து வீட்டு நட்பு உள்ளே நுழையும் போது நொறுக்ஸ் டப்பாவை மறைத்து வைப்பது.

2.கணவரின் பாக்கெட்டில் இருந்து நூறு இருநூறை எடுத்து விட்டு அதை சொல்லாமல் இருப்பது.

3.டிபன் பாக்சில் லஞ்சை கட்டிக்கொடுத்துவிட்டு பிள்ளையிடம்”டேய்..உனக்காக நிறைய நெய் விட்டு பிரியாணி பண்ணி இருக்கேன்.யாருக்கும் கொடுத்து உன் வயிற்றை காயப்போடாதே,சமர்த்தா நீயே அத்தனையும் சாப்பிட்டுடணும்”பையனுக்கு அட்வைஸ் பண்ணுவது.

4.கெட்டுப்போன உணவுப்பொருட்களை குப்பையில் கொட்டாமல் வாசலுக்கு வரும் பிச்சைக்காரர்களுக்கு கொடுப்பது.

5.காய்ச்சலில் படுத்து மூன்று நாள் லீவு போட்டு விட்டு வரும் வேலைக்காரியிடம் “இந்த மூன்று நாள் சம்பளத்தையும் பிடித்துக்கொண்டுதான் தருவேன்”என்று மல்லுக்கு நிற்பது.

6.வீட்டுக்கு வரும் விருந்தினரை வாயற வாங்க வாங்க என்று அழைத்து விட்டு மனதார “இதுக எதுக்கு வந்து தொலைக்கணும்”என்று நினைப்பது.

7.உறவினர்,நட்பு வீடுகளுக்கு சென்று விட்டு “இவளா..சரியான வடிகட்டின கஞ்சம்.கழுநீர் ரேஞ்சில் ஒரு ஆறிப்போன காபியைத்தர்ரா.தராதரம் தெரியாதவள்”என்று புலம்புவது.

8.மொபைல் போனுக்கு ரீசார்ஜ் செய்ய மனதில்லாமல் பிறருக்கு மிஸ்டு கால் கொடுப்பது.அல்லது ஒரு ரிங் அடிக்கக்கூட அவகாசம் கொடுக்காது கட் செய்துவிட்டு மிஸ்டு கால் கொடுத்த எண்ணில் இருந்து இருந்து கால் வரும் வரை காத்திருந்து “காலையில் போன் செய்தேனே.எடுக்கவே இல்லை”என்று புழுகுவது அல்லது கால் செய்து அழைத்துவிட்டு “போனில் பைசா முடியும் தருவாயில் உள்ளது.நீ கால் பண்ணு”என்று உடான்ஸ் விடுவது.

9.வீட்டுக்காரரிடம்”என்னது இந்த சண்டே உங்க பிரண்ட் குருமூர்த்தி வீட்டுக்கு நீங்களும் உங்கள் பிரண்ட்ஸும் டின்னருக்கு போகப்போறீங்களா.பேஷா போய்ட்டு வாங்க.கூடவே நம்ம குட்டி கிரீஷையும் கூட்டிட்டு போய்டுங்க.ஆனால் அதுக்கு அடுத்த வாரம் எல்லாப்படைகளையும் இங்கே அழைசுட்டுப் வந்துடாதீங்க.ஆழாக்கு அரிசி சமைக்கறத்துக்குள் எனக்கு டங்குவார் அறுந்து போறது.அத்தனைக்கும் விருந்து பண்ண நம்மால் முடியாதுப்பா.”

10.மற்றவர்களுக்கு வரும் மெயில்,கடிதம் ,போன்றவற்றை பார்ப்பது.

11.”யாரு..மாலதியா..எப்படிப்பா இருக்கே.என்னது..வீட்டுக்கு வர்ரயா..பிள்ளக்களையும் அழைச்சுட்டு வர்ரியா.வேண்டாம் வேண்டாம்...நானும் பக்கத்துவீட்டு அம்மாவும் ஷாப்பிங் போகணும்ன்னு ஏற்கனவே பிளான் போட்டாச்சு.எதுக்கு நீ கஷ்டப்படணும்.அடுத்த வாரம் நானே வர்ரேன் சரியா”என்று போனில் சொல்வது.

12.”காய்க்காரம்மா..ரெகுலராக உன் கிட்டேதான் காய் வாங்கறேன்.என்ன விலை விற்றாலும் இந்த கருவேப்பிலையும் கொத்துமல்லியும் கொசுறா கொடுத்துத்தான் ஆகணும்.இதுகளை நான் பைசா தந்து வாங்கவே மாட்டேன்.ஆமா சொல்லிட்டேன்.”

இப்படி சின்னத்தனமான காரியங்கள் அல்பத்தனம் என்று கூறப்பட்டால் குட்டியூண்டு சந்தோஷம்,கப்பில் இருந்து ஒரு விள்ளல் ஐஸ் க்ரீமை எடுத்து வாய்க்குள் போட்டுக்கொண்டால் சிலீரென்று தோன்றும் ஒரு இதமான உணர்வைப்போல் குட்டியூண்டான சந்தோஷத்தை அல்ப சந்தோஷம் என்கிறோம்.அல்ப சந்தோஷங்களை கொஞ்சம் அலசலாமா?

1.அரைக்கிலோ ஹார்லிக்ஸ் வாங்கும் போது கூடவே ஃபிரீயாக ஒரு கண்டய்னரை கடைக்காரர் தூக்கித்தரும் போது.

2.தோசை மாவு தீர்ந்து போச்சு.கோதுமை மாவு டப்பாவை கழுகி காயவைத்து ஆச்சு இரண்டுநாள்.வீட்டில் ரவை,நூடுல்ஸ் கூட இல்லையே .இன்னிக்கு டின்னருக்கு என்ன பண்ணலாம். என்று மூளையை கசக்கிக்கொண்டிருக்கும் போது வாக்கிங் போய் திரும்பிய கணவரது கையில் தெரு முனை மெஸ்ஸில் இருந்து  வாங்கி வரும் டிபன் பார்சலை பார்க்கும் பொழுது.

3.முன் பதிவு செய்த பொழுது அப்பர் பெர்த் கிடைத்து பயணம் செய்யும் பொழுது லோவர் பர்த் பயணி தனது சீட்டை தாரளாமாக நீங்க இங்கே இருங்கள் “என்று தாரள மனதுடன் தரும் போது.

4.ஏழு வயது மகனுக்கு டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணிக்கும் போது டிக்கெட் பரிசோதனை செய்பவர் வரும் பொழுது ”ஆறு வயதுதான்  சார்” என்று கூறி டிக்கெட் பரிசோதனை செய்பவரும் சரி என்று போய்விடும் போது.

5.ஆஃபீஸில் இன்னிக்கு பவுண்டர்டே செலிப்ரேஷன் பண்ணினார்கள்.எல்லாம் ஸ்டாஃபுக்கும் கிஃப்ட் கொடுத்தாங்க என்று கணவர் குட்டியாக கிஃப்ட் பார்சல் ஒன்றை நீட்டும் போழுது.

6.”என்னது இந்த முறை அபிலாஷை ரேஸ் பண்ணிட்டியா?வெரிகுட் “என்று குட்டி மகனிடம் சொல்லும் பொழுது.

7.நுங்கம் பாக்கம் டு எக்மோர் சென்ற  தடவை 100 ரூபாய் சார்ஜ் பண்ணிய ஆட்டோ இந்த முறை 80 ரூபாயை சார்ஜாக கேட்டபோது.

8.ஜஸ்ட் இப்ப தான் நாம் செல்லும் வழித்தட பஸ் போனது.இனி பத்து நிமிடம்  கழித்துதான் அடுத்த  பஸ் வரும் என்று நினைத்து காத்திருக்கும் மறு நிமிடமே செல்லப்பொகும் வழித்தட பஸ் வந்துவிடும் பொழுது.

9.நகைக்கடை,துணிக்கடையில் இலவசமாக கொடுக்கும் பை காலண்டர் இன்னும் தரமானதாகவும் பெரியதாகவும் இருந்துவிட்டால்.

10.மேட்சிங் பிளவுஸ்பிட் வாங்கும் பொழுது “இது கடைசி பீஸ்.மீட்டருக்கு பத்து ரூபாய் குறைத்து பில் போடுறேன்”என்று கடைக்காரர் கூறும் பொழுது.

11.என்னது நான் ஒரு ஜாம் பாட்டில்தானே வாங்கினேன்.எதற்கு ரெண்டு ஜாம் பாட்டில் என்று பில்லை ஆராய முற்படும்பொழுது கடைக்காரர் “இன்னொன்றுக்கு பில் போடலே..ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம் “என்று கடைக்காரர் கூறும் வார்த்தைகளில்.

12.”கல்யாணிம்மா..இன்னிக்கு சண்டே தானே.இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு.லேட்டாகவே நான் காஃபி சாப்பிடுக்கறேன்”என்ற கணவரின் இன்சொல்லில்.

13.பால்காரர் போட்டு விட்டு சென்ற பால்கவரைகாணோமே என்று லேட்டாக எழுந்து விட்டு வாசலில் தொங்கும் பையில் பால் கவரை காணாது விழித்துக்கொண்டிருக்கும் பொழுது எதிர் பிளாட் அம்மணி”நீங்க பால் எடுக்க லேட் ஆயிடுச்சு.கெட்டு போய்டுமேன்னு நான் தான் எங்கள் வீட்டு பிரிட்ஜ்ஜில் எடுத்து வைத்து இருந்தேன்:என்று பால் கவரை நீட்டும் பொழுது.

14.என்னது உங்கள் வீட்டுக்கு ஈ பி பில் இந்த மாசம் 2100 தானா?எங்கள் வீட்டுக்கு 2500 வந்துவிட்டதே”பக்கத்து பிளாட் மாமி புலம்பும் பொழுது.

15.”அக்கா.பக்கத்து வீட்டில் முருங்கை மரம் ஒடிந்து விழுந்து விட்டது.ஆளாளுக்கு பறித்துக்கொண்டு போனார்கள்.உங்களுக்குத்தான் முருங்கைக்கீரைன்னா பிடிக்குமே.கொளுந்து கீரையா பறிச்சிட்டு வந்தேன்”வேலைக்காரப்பெண்மணி கீரையை கொடுக்கும் போழுது.

16.விளையாடும் பொழுது குழந்தை தட்டிவிட்டு சென்ற கண்ணாடிப்பொருள் அதிர்ஷடவசமாக உடையாமல் தப்பும் தருணத்தில்...

17.பீரோவை சுத்தம் செய்யும் பொழுது பீரோவில் விரித்து இருக்கும் பேப்பருக்கு அடியில் எப்போதோ வைத்த நூறு ரூபாய்த்தாள் கிடைக்கும் பொழுது..

இதற்கு மேல் லிஸ்ட் போட்டால் யாரவது கொம்பை தூக்கிகொண்டு வந்து விடுவார்களோ என்று எனக்குள் அல்பத்தனமாக பயம் வந்து விட்டது.அதனால் இத்தோடு முடிச்சுக்கறேன்.உங்களுக்கு உதித்த அல்பங்களையும்,அல்பசந்தோஷங்களையும் பின்னூட்டத்தில் நீங்களும்கொஞ்சம் அலசி துவைத்து காயப்போடுங்களேன்.





September 20, 2013

சரவணபவன்


வெங்கட் நாராயணா சாலை பக்கம் சென்ற பொழுது சரவணபவன் வாசலில் குலைவாழைகள் தலை சாய்த்து,தோரணங்கள் காற்றில் ஆட  அந்த பக்கம் செல்பவர்களை எல்லாம் வாங்க  வாங்க என்று அழைத்துக்கொண்டிருந்தன.உட்பகுதியில் போர்வீலர்களும்,வெளிப்பகுதியில் டூவிலர்களும் ஏதோ விழாவோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டது. சரவணபவனில்  மூன்று நாட்களுக்கு புரட்டாசி மாதம் தலைவாழை இலைவிருந்து அறிமுகப்படுத்தி இருந்தார்கள்.சாதரணமாக சரவணபவன் கிளைகளில் அன் லிமிடெட் மீல்ஸ் விற்கும் விலைக்கே அன்று தடபுடல் விருந்து.

விருந்து சாப்பிட்டு வெகு நாளாகிறதே.பணம் கொடுத்தாவது விருந்து சாப்பிடலாம் என்ற எண்ணத்தில் உள்ளே புகுந்தோம்.வாகனநெரிச்சல்களை பார்க்கும் போது கூட்டம் கும்மி அடிக்குமே.சரி பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் மூன்று மாடிகள் கொண்ட உணவகத்துக்குள் நுழையும் போதே வாசலில் உள்ள காவலாளி இரண்டாவது தளம் போங்க என்று கூறினார்.

அடடா..முதல் தளம் முழுக்க நிரம்பி விட்டது காத்திருந்துதான் சாப்பிட வேண்டும் என்று நினைத்தபடி லிப்டினுள் நுழைந்தோம்.மாடியில் இருந்த கூட்டத்தைப்பார்த்து ஓரமாக இருந்த ஷோபாவில் அமர்ந்த மறு நொடியே உள்ளே வருமாறு  அழைத்து விட்டனர்.மிகுதியான குளிர்ச்சியும் அழகான டெகரெஷனும்,பளிரென்ற விளக்கு அலங்காரமுமாக .சுத்தமும் கண்களை கவர்ந்தது.அதைவிட உபசரிப்பு வழக்கதைவிட அதிகம் தூக்கல்.தலை வாழை இலை விருந்து என்று தலைப்பிட்டதாலோ என்னவோ உணவக நிர்வாகம் கஸ்டமர்களை ஸ்பெஷலாக கவனிக்க சொல்லி விட்டதோ என்னவோ?உண்மையில் விருந்து உபசாரம்தான்.



திக்காக சுவையாக ஜில்லென்று கிர்ணிப்பழ ஜூஸ் குடிக்க இதமாக இருந்தது.கூடவே டிரை ஜாமூன்.அதன் பின் மேஜைக்கு வந்த ஐட்டங்களை பார்க்கும் போது
120 ரூபாய்க்கு காய்கறி விற்கிற விலையில் இத்தனை ஐட்டங்களா என்று ஆச்சரியமாக இருந்தது.வெள்ளை நிற பவுலில் இரண்டு பேர் சாப்பிடக்கூடிய அளவில் பளீரென்ற சாதம்.”இவங்களுக்கு மட்டும் எப்படித்தான் இத்தனை பளிச் என்று சாதம் வருது .?” என்று பக்கத்தில் இருந்த நட்பிடம் கேட்டபொழுது “சுண்ணாம்பை கலப்பார்கள் போலும் ”என்றாள்.இதனை செவி மடுத்த சர்வர் ”இல்லேம்மா இது நயம் பச்சரிசி”சாப்பாட்டோடு சேர்த்து இலவச இணைப்பாக பல்பு கொடுத்தார்.
கிழே லிஸ்டை நன்றாக மூச்சு விட்டுக்கொண்டு படிங்க..மூக்கு பிடிக்க சாப்பிடத்தான் முடியாது..சாதம்,சாம்பார் கூட்டு பொரியல் குழம்பு எவ்வளவு கேட்டாலும் தருகிறார்கள்.ஆனால் மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிடத்தான் முடியாது.லிஸ்டில் இருந்ததைவிட இன்னும் அதிகளவில் ஐட்டங்கள் இருந்தன.
கிர்ணிப்பழஜூஸ்
டிரைஜாமூன்
சேமியா பால்பாயசம்
சாதம்
புதினா சாதம்
பருப்புவடை
பைனாப்பிள் ஸ்வீட் பச்சடி
கேரட் கோஸ் சாலட்
பீன்ஸ்காரக்கறி
கத்தரி கொண்டைக்கடலை கூட்டு
முருங்கைக்காய் சாம்பார்
பருப்பு
நெய்
தக்காளி ரசம்
கருணைகிழங்கு வற்றக்குழம்பு
தயிர்
மோர்
பருப்புத்துவையல்
வடகம் 
அப்பளம் 
நெல்லிக்காய் ஊறுகாய்
மோர்மிளகாய்
வாழைப்பழம்
பீடா
சிக்கூ ஐஸ் க்ரீம்


மல்லிகைப்பூ சாதத்தின் மீது கட்டிப்பருப்பு.

கட்டிப்பருப்பின் மீது மணக்க மணக்க உருக்கு நெய்.

 வடை,மோர்மிளகாய் வடகம் ஊறுகாய் துகையல் வகையறாக்கள்



கடைசியாக பழம் பீடா ஐஸ்கிரீம்



லிஸ்டை பாருங்கள்.இன்னும் இரண்டு நாளைக்கு இந்த ஆஃபர் உள்ளது

உடன் வந்த வாண்டு எனக்கு மீல்ஸ் வேண்டாம் டிபன் தான் வேண்டும் என்றது ஒரு பனீர் தோசை ஆர்டர் செய்தோம்.இரண்டுவித சட்னிசாம்பாருடன் இருந்த பனீர் தோசையின் விலை 140 அடேங்கப்பா சொல்லவைத்தது.

சரி கடைசியாக ஒரு டம்ளர் டிகிரி காஃபி சாப்பிடலாம் என்று ஆர்டர் செய்து காஃபியை சுவைத்து பில்லை பார்த்தால் லைட்டாக மயக்கமே வந்து விட்டது..100 ml காஃபி ஒவ்வொன்றும் தலா 40 ரூபாய்..chennai guys...போய் 120 ரூபாய் கட்டி டோக்கன் வாங்கி சமர்த்தாக  மீல்ஸ் மட்டும் சாப்பிட்டுவிட்டு வாங்க.காஃபிக்கு ஆசைப்பட்டுடாதீங்க.டிப்ஸ் மற்றும் வேலட் பார்க்கிங்  தனி.இன்னும் சிம்பிளாக 95 ரூபாயில் இதே தலை வாழை விருந்து சிக்கனமாக சாப்பிடவேண்டுமென்றால் குளிரூட்டப்படாத கிளைகளுக்கு போகலாம்.



September 14, 2013

தும்பி



அந்த நாளில் மழைகாலம் வந்துவிட்டாலே முட்டைக்காளான்,பொன்னிக்குருவி,வண்ணத்துப்பூச்சி,தும்பி என்று கூத்தடித்த காலம் நினைவுக்கு வருகிறது.மழைகாலம் வந்துவிட்டாலே ஆங்காங்கே தும்பிகள் பறந்து விளையாடுவது மிகவும் ரசனைக்குறியது.

செடிகொடிகள்.மதிற்சுவர்கள் போன்றவற்றில் ஒட்டிக்கொண்டிருக்கும் தும்பியை பிடித்து விளையாடி,இம்சை படுத்தி ரசிப்பது சிறார்களுக்கு வேடிக்கையான வாடிக்கை.தும்பிகளில் பல அளவுகள் பல ரகங்கள் உள்ளன.உலகில் 6000 வகை தும்பிகள் உள்ளனவாம்.முட்டைகண்களுடன்,பலவண்ணங்களை பிரதிபலிக்கும் பெரிய தும்பிகள்,மிகவும் மெலிதாக இருக்கும் ஊசித்தும்பிகள்...இதில் ஊருக்கு இளைத்தவன் இந்த ஊசித்தும்பிகள்தான்.உண்மையில் ஊசித்தும்பிகள் ஐயோ பாவம் போல் இருக்கும்.மிக சுலபமாக பிடித்து விடமுடியும்.முட்டைக்கண்களுடன் கூடிய பெரிய தும்பியை சாமான்யமாக பிடிக்க இயலாது.

தும்பிகளின் வாலில் நூலால் கட்டி அதனை பறக்கவிட்டு மகிழ்ந்து கூக்குரல் இட்டு கும்மாளம் போடுவது அந்நாளைய சிறார்களுக்கு வாடிக்கை.

தும்பி ஒரு பூச்சி குடும்பத்தை சேர்ந்த ஒரு அழகான உயிரினம். தட்டாரப்பூச்சி.தட்டான்,ஊசித்தட்டான்,,தும்பி இப்படி பல நாமகரணங்களால் அழைக்கின்றனர்.ஆங்கிலத்தில் Dragonfly எனப்படும்.மிகச்சிறிய ஜந்துவாயினும் இதன் பார்வைத்திறன் அளப்பறியது.வெகுதூரத்தில் இருக்கும் எதனையும் மிகவும் இலகுவாகவும் கூர்மையாகவும் இனம் கண்டுக்கொள்ளக்கூடிய சக்தி வாய்ந்தது.

சராசரியாக 30 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் தி்றன் கொண்ட தும்பிகள் உணவுத்தேடலின் போது  அதன் வேகம் அபாரமாக அதிகரிக்கின்றது.இந்த தும்பியை சில நாட்டு மக்களின் விருப்ப உணவாகவும் உட்கொள்ளுகிறனர்.

மழை வருவதற்கு முன்னர் தும்பிகள நிறைய பறக்ககண்டால் மழைவருவதற்காண அறிகுறி என்றும் கிராமத்து வாழ் மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

அழகழகு வண்ணங்களில் பட்டுப்போன்ற உடல் அமைப்புக்கொண்ட சிறுவர்களை மட்டுமல்லாது பெரியவர்களையும் மயக்கும் வண்ணத்துப்பூச்சிக்கு அடுத்ததாக மனம் கவரும் ஒரு அபூர்வ உயிரினம் இந்த தும்பிகள்

மதிற்சுவரிலும் செடிகொடிகளிலும் பதுங்கி நிற்கும் தும்பிகளின் பின்னாலேயே போய் ஆட்காட்டி விரலையும் கட்டை விரலையும் இறுக்கமாக இணைத்துக்கொண்டு பம்மி பம்மி அருகில் போய் 


காத்தட்டான் 
தும்பித்தட்டான் 
தம்பி வர்ரான் 
நின்னுக்கோ

 என்று பாடியபடி தும்பி பிடித்து மகிழும் சிறுவர்கள் இதனையே தன் விளையாட்டு சகா தும்பியை பிடிக்கப்போகும் சமயத்தில் 


காத்தட்டான் 
கள்ளத்தட்டான் 
கள்ளன் வர்ரான் 
ஓடிப்போ 

என்று ராகம் போட்டு பாடி கூக்குரல் இடுவார்கள்.அக்காலத்தில் தும்பி பிடித்து விளையாடி மகிழ்ந்த அழகிய சுகமான அனுபவத்தை இக்கால சிறார்கள் இழந்து விட்டார்கள் என்பது நிஜம்.

September 10, 2013

முதல் பதிவின் சந்தோஷம்


எல்லோரும் எழுதி ஓய்ந்த ஒரு தலைப்பை இப்போதுதான் கையில் எடுக்கிறேன்.முதல் காரணம் மற்றும் ஒரே காரணம் ஞாபகமறதிதான்.

பின்னூட்டபுயல்,அன்பின் தோழி மஞ்சுபாஷினி மற்றும் கவிதாயினி வேதா இலங்காதிலகம் இருவரின் அழைப்புக்கும் என் அன்பின் நன்றிகள்.

தங்கை ஜலீலா சாட் பண்ணும் நேரமெல்லாம் தன் பிளாக்கை பற்றித்தான் பேசுவார்.தன் பிளாக் லின்க் தந்து பார்க்கச்செய்தார்.எப்படி பின்னூட்டுவது மற்ற வலைப்பூக்களை எப்படி பார்ப்பது என்பதை சொல்லித்தந்த உடனே நானும் என் மகன் உதவியுடன் ஒரு பிளாக்கை ஆரம்பித்து விட்டேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வைப்புகழ்ந்து தலைப்பு வைத்ததும் முதலில் என் மனதில் தோன்றியது என் பெற்றோர்தான்.உடனே இரண்டு அழகிய அர்த்த முள்ள திருகுர்ஆன் வசனத்தை பதிவாக இட்டு மகிழ்ந்தேன்.

இந்த குர்ஆனில் வரும் குறிப்பிட்ட வசனத்தை எழுத இன்னும் ஒரு காரணம்.அன்றைய தினசரி ஒன்றில் ஒரு மகன் தன் தாயாரை தன்னுடைய பாதுகாப்பில் வைத்துக்கொள்ள விரும்பாமல் மெரீனா பீச்சில் விட்டு விட்டு ஓடி விட்ட செய்தி என் மனதினை மிகவும் பாதித்தது.எவ்வளவு கோர மனதுள்ள மகன் அவன் என்று அந்த முகம் தெரியாத மனிதனை நினைத்து வெறுப்பாக இருந்தது.எனவேதான் அந்த அழகிய அர்த்தமுள்ள இரு இறைவேத வசனங்களையும் பதிவிட்டு மகிழ்ந்தேன்.

டைப் செய்து பதிவை பப்லிஷ் செய்த உடனே  வாசித்து மகிழ்ந்த என் மகனே முதல் பின்னூட்டம் போட்டு அவரே அதை பப்லிஷ் செய்த அந்த தருணத்தின் சந்தோஷம் இன்னும் என் உள்ளம் முழுக்க நிரம்பி வழிகிறது.

இந்த தொடர் பதிவினை எழுத நான் அழைக்கும் இருவர்
தோழி ஆசியா 
தங்கை மேனகா



August 30, 2013

ஆட்டோவும் பரோட்டாவும்.

மேகத்துகள்களுக்கிடையே ஆங்காங்கே கீற்றாக ஊடுறுவும் கதிரவகீற்றுக்களின் இதமான கதகதப்பு.காலை நேரத்திலும் இதம் தரும் சில்லென்ற உணர்வு.ஆராவாரம் அதிகம் இல்லாத கோழிக்கோடு சாலையில் நான் சென்ற ஆம்னி பஸ்ஸை ஓரம் கட்டி விட்டு “இதுதான் லாஸ்ட்.எல்லோரும் இறக்கிக்குங்க” என்று தமிழும் மலையாளமும் கலந்து ஓட்டுனர் கூறவும் பஸ்ஸில் சொற்பமாக இருந்த ஒரு சிலருடன் 'பஸ்ஸில் இப்படி லோல் படும் நிலைமை ஆகிவிட்டதே. டிரைனுக்கு டிக்கெட் கிடைத்து இருந்தால் இத்தனை அவஸ்தை வேண்டியதில்லையே”என்று பயணம் முழுக்க புலம்பி 14 மணி நேரப்பயணத்தையும் வெற்றி கரமாக முடித்த அலுப்பில் நாங்களும்  பஸ்ஸை விட்டு இறங்கினோம்.

பஸ்ஸில் இருந்து இறங்கிக்கொண்டு இருந்த போதே  தூரத்தில் நின்றுகொண்டிருந்த ஆட்டோ எங்களை நோக்கி வந்தது.”ஐ ஜி ரோட் காலிகட் டவர் போகணும்”இது நான்.

“பிஃப்டீன் ருபீஸ்”

’பிஃப்டியா பரவாஇல்லையே.மூட்டை முடிச்சை எல்லாம் பார்த்து ஊருக்கு புதுசு என்று அதிகம் கேட்காமல் நியாமாக கேட்கிறாரே இந்த ஆட்டோ மேன்”என்று நினைத்தேன்.இருந்தாலும் மெட்றாஸ் புத்தி .வழக்கமாக சென்னையில் பேரம் பேசும் வழக்கத்தில் “நாற்பது தர்ரேன்”என்றதும் அந்த ஆட்டோ மேன் பலமாக சிரிக்கிறார்.”தாரளமாக கொடுங்க.வாங்கிக்கறேன்”

அருகில் இருந்த என் மகன் பற்களை கடித்த சப்தம் அந்த ஏரியாவிலே இடி  விழுந்த சப்தத்திற்கு ஈடாகி இருக்கும்.

“ம்ம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆ..அவர் பிஃப்டீன்ன்ன்ன்ன் ருபீஸ் கேட்கிறார்”அடிக்குரலில் இப்படி சொன்னதை என்னால் நம்பவே முடியவில்லை.பஸ்ஸில் டிரைவர் சீட்டுக்கு பின் இருக்கும் சீட்டில் பயணித்தது ,ஓயாமல் பஸ் டிரைவர் ஹார்ன் அடித்த விளைவோ என்னவோ என் காது அடைத்து விட்டது போலும்.ஒரு வழியாக பிரமிப்பு மாறாமலே மூட்டை முடிச்சுகளுடன் ஆட்டோவில் ஏறினோம்.

இந்த ஆட்டோவில் மட்டுமல்ல அங்கு ஓடிக்கொண்டு இருக்கும் எல்லா ஆட்டோக்களும் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டது.ஆட்டோவில் பயணர் இருக்கைக்கும்,ஓட்டுனர் இருக்கைக்கும் இடையில் ஸ்டீலால் அலங்கரித்து அழகு படுத்தியதுமில்லாமல் முகப்பில்,சீலிங்கில் ,பக்கவாட்டில் என்று எல்லா இடங்களிலும் அலங்கரித்து இருக்கின்றனர்.சீலிங்கில் பொருத்தபட்டு இருக்கும் அலங்கார விளக்கு உயரமான ஆட்கள் அமர்ந்தால் தலையை பதம் பார்க்கும்.உள் அலங்காரத்தின் காரணத்தால் சென்னையைப்போல் மூன்றுக்கும் மேற்பட்ட ஆட்கள் பயணிப்பது மிகுந்த சிரமம்.

சென்னையில் ஆட்டோக்கள் பெரிய ஹோட்டலினுள் அனுமதிக்கபடுவதில்லை.அந்த பந்தா ஏதும் இல்லாமல் ஹோட்டலுக்குள்ளேயே சென்று நிறுத்தி பெட்டிகளை ரிஸப்ஷன் கவுண்டர் அருகே வைத்து வைத்து விட்டு பதினைந்து ரூபாயை வாங்கிக்கொண்டு சென்ற ஆட்டோ டிரைவரை ஆச்சரியத்துடன் பார்த்தேன்.வெறும் பதினைந்தே ரூபாய்க்கு எத்தனை உழைப்பு!

சென்னையில் ரெண்டே கிலோ மீட்டர் தூரத்துக்கு பயணித்தாலும் 100 ரூபாயை கூசாமல் வாங்கிசெல்லும்,மெட்றாஸ் பாஷையால் பயணிகளை அர்ச்சிக்கும் ஆட்டோமேன்களுக்கு இடையே இப்படியும் ஒரு ஆட்டோ மேன்.இந்த ஆட்டோ மேன் மட்டுமல்ல நான் அங்கிருந்த நான்கு நாட்களும் பயணித்த ஆட்டோக்கள் அனைத்துமே இந்த ரீதியில்தான் இருந்தது.தங்கி இருந்த இடத்தில் இருந்து சுமார் 25 - 30 கிலோ மீட்டர் தூரத்தில் ஊருக்கு ஒதுக்கு புறமாக  இருந்த என் ஐ டி கேம்பஸுக்கு சென்று காத்திருந்து திரும்ப,வழியில் ஆங்காங்கே நிறுத்தி குட்டி குட்டி ஷாப்பிங் செய்து வர மொத்தமாக 500 ரூபாய்தான் இண்டிகோ காரின் வாடகை எனக்கு ஆச்சரியமூட்டியது.


ஹோட்டலில் உள்ள சாதம் பிரியாணி அனைத்திலும் அரிசி மெகா சைஸில் இருந்ததில் சாப்பிட பிடிக்காமல் பக்கத்தில் இருந்த மால்களுக்கு சென்று சிக்கனும் பர்கருமாக பொழுது கழிந்தது.சில உணவகத்தினுள் நுழைந்து  பிடிக்காமல் திரும்பியதும் உண்டு.தெருவில் நடந்து கொண்டிருந்த போது ஒரு ஹோட்டல் மனதிற்கு பிடித்தமாதிரி இருந்தது.உள்ளே நுழைந்தால் சாப்பிட்டுக்கொண்டிருந்த அத்தனை பேர் தட்டுகளிலும் பரோட்டாதான்.ஒரு க்ரூப் சைட் டிஷ் இல்லாமல் வெறும் பரோட்டாவையே சாப்பிட்டுக்கொண்டு இருந்தது.இங்கு பரோட்டா மட்டும்தான் கிடைக்குமாக இருக்கும் என்று நினைத்து மெனுகார்டு வாங்கி பார்த்தால் ஏகப்பட்ட மெனுக்கள் இருந்தன.

சரி நாமும் பரோட்டாவே ஆர்டர் பண்ணலாம் என்று ஆர்டர் செய்தோம். இலைக்கு வந்த பரோட்டா அப்படியே பரவசப்படுத்தி விட்டது.அத்தனை சாஃப்ட்.லேயர் லேயாராக சுவையாக சூடாக..ஆஹா இதுதான் மலபார் பரோட்டாவா!வெறும் ஏழே ரூபாயில் மெகா சைஸ் பரோட்டா.பிறகென்ன இனி வந்த நாட்களில் சிக்கனையும் பர்கரையும் புறகணித்து விட்டு லன்சும் டின்னரும் பரோட்டாவிலேயே கழித்தோம்.ஊருக்கு திரும்பும் போது கூடவே பெரிய பரோட்டா பார்சல் கூடவே வந்தது என்பதை சொல்லவும் வேண்டுமோ?

July 21, 2013

மாடித்தோட்டம்.

மொட்டை மாடியில் எத்தனையோ வித தோட்டங்களைப்பார்த்து இருக்கிறோம்.ராயபுரம் பாயிஜா சிராஜின் வீட்டு தோட்டமோ முற்றிலும் வித்தியாசமானது.

மூவாயிரம் சதுர அடி மொட்டை மாடியில் முன்னூறுக்கும் மேற்பட்ட மண்ஜாடிகளில் விதவிதமான செடிகள்,மற்றும் ஐநூறுக்கும் மேலான அலங்கார பொருட்களினால் அலங்கரித்து வித்தியாசம் காட்டி அசத்துகின்றார் பாயிஜா சிராஜ்.

இவர் வெளி நாடுகளுக்கோ,வெளியூர்களுக்கோ சென்றால் தனக்கென்று வாங்கும் பொருட்கள் ஏதுவுமே இருக்காது,தன் தோட்டத்திற்கான பொருட்களை வாங்கி தோட்டத்தை இன்னும் விரிவு,அழகுபடுத்தவே விரும்புவார்.

எண்ணிக்கைக்கு அடங்காத வித விதமான அலங்காரபொருட்கள் ஒவ்வொன்றும் எந்தெந்த இடத்தில் வைத்து இருக்கிறோம் என்பது இவருக்கு அத்துப்படி.யாராவது மாற்றி வைத்து விட்டால் உடனே கண்டு பிடித்து விடுவார்.தினமும் காலையிலும் மாலையிலும் தோட்டத்தைப்பராமாரிக்க நேரத்தை செலவிடுவாராம்.

கலைரசனையில் அசாத்திய ஆவல் கொண்டு இருக்கும் பாயிஜாவுக்கு சவால் மழை.அதைவிட பெரும்சவால் புயல்.மழை,புயல் காரணமாக எத்தனையோ பொருட்கள் சேதமாகி இருக்கின்றனவாம்.

மழை பொழிந்து ஓய்ந்ததும் இவருக்கு வேலை அதிகமாகவே இருக்கும்.நாள் முழுக்க தோட்டத்தில் அமர்ந்து சீர் படுத்துவாராம்.உடைந்து போன பொருட்களை அப்புறப்படுத்தி,சாய்ந்து போன,மழைத்தண்ணீரில் இழுத்துக்கொண்டு போன பொருட்களை ஒழுங்கு படுத்துவதுதான் இவருக்கு முதல் வேலை.மழை பெய்ய ஆரம்பித்ததும் எனக்கு அடிவயிறு கலங்கி விடும்.இந்த முறை அதிக சேதாரம் ஏற்பட்டுவிடக்கூடாது என்று பிரார்த்தனையில் ஈடுபட்டுவிடுவேன் என்கிறார்.பொழிவிழந்த ஜாடிகளுக்கு சாயம் பூசுவது,பழசாகிப்போன பொருட்களை அப்புறப்படுதுவது என்று தோட்டவேலை கனக்கச்சிதமாக செய்கின்றார்.

தோட்டத்தில் உதிரும் ஒரு இலையைக்கூட வீணடிப்பதில்லை.அத்தனையும் சேகரித்து உரமாக்கி விடுவேன் என்கிறார்.

பாயிஜா சிராஜின் ரசனை மிக்க மொட்டைமாடி தோட்டத்தின் காட்சிகளைப்பாருங்கள்.



பளிங்கு கற்களுக்குள் லைட்டிங் அமைத்து ஒரு மூலையில் வைத்து அலங்கரித்து இருப்பது கண்களை பறிக்கிறது.
தோட்டத்தின் ஒருகோணம்
சுவரையும் விட்டு வைக்கவில்லை.மண்,களிமண்,பிளாஸ்டிக் சைனா கிளே போன்ற வற்றில் தயாரித்த அலங்காரபொருட்கள் மனதை கொள்ளை கொள்கிறது.
சுற்றிலும் ஜாடிகளில் பூச்செடிகளும்,விதவிதமான க்ரோட்டன்ஸ்களும் இருக்க நடுவே இருக்கும் இடங்கள் முழுக்க இப்படி அலங்கார பொருட்களும்,சிறிய பூச்சாடிகளுமாக பிரமிக்க வைக்கிறது.
 வேறொன்றுமில்லை.தூரத்தில் இருந்து பார்த்தால் பறவைகள் வந்து இந்த சட்டியில் முட்டை இட்டு  நிரப்பி விட்டு சென்று விட்டனவோ என்று நினைக்கத்தோன்றும் ஒரு தோற்றம்.
 தோட்டத்தின் இன்னொரு தோற்றம்
 வெள்ளை மற்றும் ரோஸ் வண்ணத்தில் போகன் வில்லா.
 சேரும் குப்பைகளை சேகரிக்க முயல் குட்டி.மக்கும் குப்பைகளை சேமிக்க மண்ணால் ஆன அலங்காரக்கூஜா.இது ஆங்காங்கே உள்ளது.
 தவளை இருக்கு.ஆனால் தவளை சப்தத்தைத்தான் காணோம்.
இது ஒரு வித்தியாசமான அலங்காரம்.
 இன்னொரு மூலையின் அலங்காரத்தோற்றம்.
இந்த வித்தியாசமான பூஜாடி இவர் வெளிநாட்டுக்கு சென்ற போது வாங்கி வந்தவை.
 மண்ணால் ஆனால் மோடா.கடல் காற்றை சுகமாக அனுபவித்து உட்கார்ந்து தோட்டத்தை ரசிக்க ஆங்காங்கே இப்படி மண்ணால் ஆன மோடா அமைக்கப்பட்டுள்ளது.
 மண்ணால் ஆன குட்டி மீன் தொட்டி.

இவ்வளவு இருந்தும் சிப்பியும்,முத்தும் இல்லாமலா?

July 14, 2013

அது இதுதான்

நான் சுவாரஸ்யமாக அன்றைய நாளிதழில் மூழ்கி இருந்தேன்.எங்கள் வீட்டு குட்டி ஆமிர் ஓடி ஆடி விளையாடிக்கொண்டிருந்தார்.கையில் நீளமாக பிலிம் ரோல்,ரிப்பன் போன்ற வஸ்து.எங்காவது இருந்து எடுத்து வந்திருப்பார் என்று நினைத்துக்கொண்டு தொடர்ந்து நாளிதழில் மும்முரமாகிவிட்டேன்.

அந்த வஸ்துவை வாயில் வைத்ததும்  “தம்பி வாயில் எல்லாம் வைக்கக்கூடாது”என்று சப்தமாக சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை.அதனை கடித்து மெல்லவே ஆரம்பித்துவிட்டதும் பதறிப்போய் பிடிக்க ஓடினால் என் கையில் மாட்டவே இல்லை.டேபிளை சுற்றி ஓடவும்,மாடிப்படி வழியே ஓடவும்..நானும் விடவில்லை.பின்னாலேயே மூச்சிரைக்க ஓடினேன்.வாயெல்லாம் சிரிப்பாக அந்த பிலிம் ரோலை சுவைத்துக்கொண்டே என் கையில் மாட்டாமல் ஆட்டம் காண்பித்து எனக்கு வெறுப்பு ஏற்றியதுதான் மிச்சம்.

எதிரே வந்த என்பையன் என்னம்மா சின்னப்பிள்ளை போல் இவனுடன் ஓடிப்பிடித்து விளையாடுறீங்க”என்று கேட்டார்.

”இவன் பிலிம் ரோலை சாப்பிடுகிறான்ப்பா ”

”பிலிம் ரோலா”பதறிய படி ஆமிரை தாவிப்பிடித்து  கோழியை அமுக்குவது போல் ஒரே அமுக்கு..

“ஐய்யையோ..அவனவன் செங்கலை சாப்பிடுகிறனர்,பல்பை சாப்பிடுகிறானர்,பேப்பரை சாப்பிடுகிறானர் என்று தொலைக்காட்சியிலும்,நாளிதழ்களில் அறிந்து இருக்கிறோமே.அந்த ரேஞ்சில் இவர் பிலிம் ரோலை சாப்பிடுகிறாரா என்று ஒரு நொடி யோசித்து அதிர்ந்து விட்டேன்.”

கையில் இருந்ததை வலுக்கட்டாயமாக வாங்கி பார்த்தது விட்டு”மா..நாளைக்கு நியூஸ் பேப்பரில் பிலிம் ரோலை உணவாக சாப்பிடும் ஆறுவயது சிறுவன் என்று கொட்டை எழுத்துக்களில் செய்தி வரும்,சன் நியூஸுக்கு பேட்டி கொடுக்க ரெடியாக இருங்க”என்று கூறி சிரித்தார் என் மகன்.

அன்றைக்கு செம்ம்ம்ம்மையாக பல்பு வாங்கி விட்டேன்.சும்மா இல்லை.தவுசண்ட்வாட்ஸ் பல்பு.அது வேறு ஒன்றும் இல்லை.சிறுவர்கள் விரும்பி சாப்பிடும் ஜெல்லி மிட்டாய்.சிறுவர்களுக்கு மட்டுமல்ல.எனக்கும்தான் மிகவும் பிடித்த ஜெல்லி மிட்டாய்.

அப்பப்பா..இந்த மிட்டாய் கம்பெனி ஆட்கள் எப்படி எல்லாம் யோசிக்கங்கப்பா!!

இதனை,தங்கை வானதியும்,தோழி இமாவும் கண்டு பிடித்து விட்டனர்.இது வானதி ஊரில் விற்கும் கேண்டி என்பதால் வான்ஸ் மிக சுலபமாக கண்டு பிடித்து விட்டார்.அவர் போட்ட பின்னூட்டத்தை கை தவறி பப்லிஷ் செய்து விட்டேன்.அறிந்த மறு நிமிடமே டெலிட்டும் செய்து விட்டேன்.ஆனால் மயிரிழைக்கேப்பில் இமா அதனை பார்த்து விட்டார்.அன்றிலிருந்து இமா தோழி எப்ப விடை சொல்லப்போறீங்க”என்று கேட்டு கேட்டு இதோ விடையும் சொல்ல வைத்துவிட்டார்.

நோன்புநேரம்,தவிர என் கேமராவுக்குள் ஆமிரை சிக்க வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது:)






July 6, 2013

கண்டுபிடியுங்கள்...



கண்டுபிடியுங்கள்...

ஹி..ஹி..வேறு ஒன்றுமில்லேங்க,பிளாக் எழுதி

நாளாச்சு.மக்கள்ஸ் நம்மை மறந்து விடுவார்களோ

என்று அவசரகதியில் இந்த பகிர்வு.

படத்தில் இருப்பது என்ன?கண்டு பிடித்து

 சொல்லுங்களேன்.முதலில் சொல்பவருக்கு

 முதலாம் பரிசு,இரண்டாவது கண்டு பிடித்து

சொல்பவருக்கு இரண்டாம் பரிசு என்றெல்லாம்

 சொல்லி உங்களை எல்லாம் இம்சை படுத்த 

மாட்டேன்...

எங்கே கண்டுபிடியுங்கள்....

சரியான விடை படங்களுடன் அடுத்த பதிவில்...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...அப்பப்பா..எப்படிஎல்லாம் 

பதிவை தேத்துறாங்க என்ற முனங்கல்ஸ் 

கேட்கத்தான் செய்கிறது...:)