July 10, 2014

நோன்பு நினைவலைகள்சுவரில் மாட்டி இருக்கும் கடிகாரத்தை பார்த்து சஹர் உணவை (அதிகாலை சாப்பாடு) முடிப்பதும் அதே போல் கடிகாரத்தை பார்த்து இஃப்தாரை (நோன்பை முடித்துக்கொள்ளும் தருணம்) ஆரம்பிப்பதும் வழக்கமாகி வாழ்ந்துக்கொண்டு இருக்கும் இந்த ஊரில் இருந்து கொண்டு நோன்பு கடமையை நிறைவேற்றிக்கொண்டு இருக்கும் தருணத்தில் எங்கள் ஊரின் நோன்புகால மகிழ்ச்சி தருணங்களை ஏக்கத்துடன் நினைத்துப்பார்க்க வைக்கின்றது.

நோன்புகாலம் என்றாலே மகிழ்ச்சியும் உற்சாகமும் கரைபுரண்டு ஓடும்.முதல் நோன்பன்று பிறை கண்டுவிட்டால் பேரூராட்சி அலுவலகத்தில் அமைத்து இருக்கும் சைரன் ஒலி வந்து விடும்.வீதி தோறும் உற்சாகம்.புத்தாடை தரித்து உறவினர் வீடுகளுக்கு சென்று மகிழ்ந்து பெண்களும் சிறுமிகளும் ஆண்களும் சிறுவர்களும் அவரவர்களுக்குறிய பள்ளிகளில் சென்று இரவுத்தொழுகையை நிறைவேற்றுவார்கள்.

இரவுத்தொழுகை முடிந்த பின் அங்கே விநியோகம் செய்யும் பேரீச்சம்பழம் சர்பத் பிஸ்கட் பொட்டலம் இவற்றை பெறுவதற்கு சிறார்கள் கூட்டம் அலை மோதும்.

வீதிக்கு வீதி தனியார் தொண்டு நிறுவனங்கள் ஏற்பாடு செய்து இருக்கும் சஹர் நேர அறிவிப்பு ஸ்பீக்கர் வாயிலாக உறங்கும் ஒவ்வொரு இல்லத்து உறுப்பினர்களையும் தட்டி எழுப்பி விடும்.குர் ஆன் வசனங்கள்,இஸ்லாமியப்பாடல்கள் போன்றவற்றை ஒலிபரப்பி இடைக்கிடையே சஹர் முடிய இன்னும் இவ்வளவு நேரம் இருக்கின்றது என்ற அறிவிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கும்.அந்த அறிவிப்பை செவிமடுத்த படி பெற்றோர்கள் பிள்ளைகளை “நேரமாச்சு சீக்கிரம் எழுந்து சஹர் செய்” என்று எழுப்பி விட படாதபாடு பட்டுக்கொண்டு இருப்பார்கள்.

தவிர பள்ளிவாசல்களிலும்,தனியார் தொண்டு நிறுவனங்களும் சஹர் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்து இருப்பார்கள். பள்ளிவாசல்கள் தவிர வீதிக்கு வீதி இலவசமாக சாப்பாடு பறிமாறப்படும்.இதனை செய்து இறை அருளைப்பெற ஓவ்வொருவரும் போட்டிபோடுவார்கள்.

மாலை நேரத்தொழுகைக்கு பின்னர் மசூதிகள் தனியார் தொண்டு நிறுவனங்களில் மிகப் பிரம்மாண்டமான களரி சட்டிகளில் நோன்பு கஞ்சி காய்ச்சப்பட்டு நோன்புக்கஞ்சி மத வேறுபாடின்றி விநியோகம் நடைபெறும்.தமிழ்நாடு முழுதும் அரிசி பருப்பு காய்கறிகளால் செய்யப்பட்ட நோன்புக்கஞ்சி ஒரு முழு உணவாக சத்துநிறைந்ததாக தயாரிக்கப்பட்ட நோன்புக்கஞ்சியை சாப்பிட்டே  பெரும்பாலோர் நோன்பு திறப்பார்கள்.நோன்பினால் ஏற்பட்ட உடல் சூட்டை குறைக்கும் வகையில் பூண்டு வெந்தயம் போனறவற்றால் சமைக்கப்படும் இந்தக்கஞ்சி நோன்பை முடித்து அருந்தும் பொழுது தெம்பும் சக்தியும் அளித்து விடும்.தமிழக நோன்பாளிகள் பிற நாடுகளில் வாழ்ந்தாலும் வீட்டிலேயே இதனை தயாரித்து அருந்துவார்கள்.

ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமாக தயாரிக்கப்படும் நோன்பு கஞ்சிகளின், செய்முறையும் சுவையும் வேறுபட்டாலும்  கீழக்கரைப் பள்ளிவாசல்கள் மற்றும் பொது நல சங்கங்கள் சார்பில் தயாரிக்கப்படும் நோன்பு கஞ்சிகளின் ஒரே விதமான  அபார சுவையால் மவுசு அதிகமாகவே இருக்கும்.

கீழக்கரையில்  இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழ்வதால் ரமலான் நோன்பு மாதம் முழுதும், பெரும்பாலான உணவகங்கள் மற்றும் தேநீர் விடுதிகளில் காலை முதல் மாலை வரை விற்பனையின்றி வெறிச்சோடி இருக்கும் . அதே வேளையில் இந்த உணவு விடுதிகளில் மட்டுமல்லாது நோன்புக்காக ஸ்பெஷலாக கீழக்கரை நகரின் பல்வேறு வீதிகளிலும்  முக்கிய சந்திப்புகளில் பல புதிய கடைகள் திறக்கப்பட்டு இருக்கிறது.

இது போன்ற ஸ்பெஷல் கடைகளில், மாலை 4 மணி முதலே,  களை கட்டத் துவங்கும் விற்பனை நோன்பு திறக்கும் நேரமான மாலை 6.30 மணி வரை தொடர்கிறது. 

இங்கு விற்கப்படும், கறி சமோசா, சிக்கன் ரோல், மட்டன் ரோல், வெஜிடேபிள் கட்லெட், சிக்கன் கட்லெட், மிளகாய் பஜ்ஜி, பருப்பு வடை, உளுந்து வடை,போண்டா வகைகள் பஜ்ஜி வகைகள் போன்ற உணவு பதார்த்தங்களின் விற்பனை விறு விறுப்பாக நடை பெறும்.

நோன்பு 30 நாட்களும் கஞ்சி வழங்குதல், நோன்பாளிகள் பள்ளியில் நோன்பு திறக்க இப்தார் விருந்து ஏற்பாடு செய்தல், ஏழைகளுக்கு இலவச சஹர் உணவினை வீடு தேடி சென்று கொடுத்து உதவுதல் போன்ற சிறப்பான சேவைகள் கண்ணியமான முறையில் தொண்டு நிறுவனங்கள் ஊர்வாசிகளின் ஒத்துழைப்போடு  செய்துவருவது பாராட்டத்தக்கது.

இப்படியாக முப்பது நாட்களும் பசித்திருந்து நோன்பு வைத்து பெருநாள் வரவை ஆவலோடு எதிர்பார்த்து இருந்தாலும் நோன்பு முடியப்போகும் கடைசிநாளன்று அனைத்து நோன்பாளிகளின் மனங்களும் இவ்வருடத்திற்கான  இத்தனை சிறப்பான மாதம் இன்றுடன் முடியப்போகின்றதே என்ற ஏக்கம் மனதின் ஒரு மூலையில் நிறைந்து இருக்கும்.


பெரும் பெரும் களரி சட்டிகளில் நோன்புகஞ்சி காய்ச்சப்படுகிறது.நோன்புக்கஞ்சி விநியோகத்திற்காக காத்திருக்கும் சிறார் கூட்டம்.தினந்தோறும் நோன்பாளிகளுக்கு நடை பெற்று வரும் இஃப்தார் விருந்து நிகழ்ச்சி. 

ஒவ்வொரு பகுதிகளிலும் மசூதிகள் தொண்டு நிறுவங்கள நடத்தும் இஃப்தார் விருந்தில்  நூற்றுக்கணக்கனோர் பங்கேற்று நோன்பு திறந்து வருகின்றனர். இந்த இப்தார் விருந்தில் சுவை மிகு நோன்புக் கஞ்சி, சமோசா, வடை, பழ ஜூஸ் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படுகின்றன. இதற்காக ஜமாஅத்தார்களும், தெருவாசிகளும் பொருளாதார உதவிகள் அளித்து வருகின்றனர். சிறுவர்கள் ஆர்வமுடன் இப்தாரில் கலந்து கொள்ளும் காட்சி.எளியோர்கள் வீடு தேடிசென்று சஹர் சாப்பாட்டை விநியோகம் செய்வதற்காக சாப்பாடு பார்சல் கட்டும் வேலை மும்முரமாக நடை பெற்று வருகிறது.

தொண்டு நிறுவனங்கள் அதிகாலையில் சஹர் விருந்தை ஏற்பாடு செய்து இருக்கும் காட்சிகள்
மாலை வேளைகளில் வடை கடைகளில் வடை மும்முரமாக விற்பனைஆகும் காட்சி.


மத நல்லிணக்கத்தினை வலியுறுத்துவதற்காக இந்து, முஸ்லீம், கிறித்துவ சமூகத்தினர் பங்கேற்ற நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி
படங்கள் உதவி கீழை இளையவன்