Showing posts with label கொண்டாட்டம்.. Show all posts
Showing posts with label கொண்டாட்டம்.. Show all posts

August 5, 2011

கிரேண்ட் பேரண்ட்ஸ் டே

டிஸ்கி:காமெடி பதிவிட்டு நாளாச்சு என்பதால் இந்த பதிவில் காமெடி சற்றுஅதிகமாகத்தான் இருக்கும்.”என்ன இது காமெடி தூக்கலாக இருக்கு” என்று புருவம் தூக்குபவர்கள் தயவு கூர்ந்து கோச்சுக்க மாட்டீர்கள் என்று அபார நம்பிக்கை வைத்து எழுத ஆரம்பிக்கின்றேன்.

நேற்று பேரன் படிக்கும் பள்ளியில் இருந்து ஒரு சர்குலர்.வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு பள்ளி ஆடிட்டோரியத்தில் வைத்து கிரேண்ட் பேரண்ட்ஸ் டே கொண்டாட்டம் நடத்தப்படுவதாக.பேரண்ட்ஸ் டே சரி..கிரேண்ட் பேரண்ட்ஸ் டே என்பது இந்த பள்ளியை பொறுத்த வரை புதியதாக உள்ளதே!என் பிள்ளைகளுக்கான பள்ளி அழைப்புகள் அனைத்துக்கும் தவறாது ஆஜர் ஆகி விடும் நான்,மாதம் ஒரு முறை சப்ஜெக்ட் வாரியாக ஒவ்வொரு ஆசிரியர்களையும் போய் சந்தித்து பிள்ளைகளின் பெர்பார்மன்ஸ் பற்றி அறிய விழையும் நான் இதற்கு போகாமல் இருப்பேனா?காலையிலே ரெடியாகி விட்டேன்.

சென்ற மே மாதம் வரை தாயாக அந்த பள்ளி வளாகத்தினுள் நுழைந்து வந்த நான் இன்று ஒரு பாட்டியாக உள்ளே நுழையும் பொழுதே...

எனக்கு மிகவும் பரிச்சயமான ஸ்டாஃப் ஒருவர்,கிட்டத்தட்ட என் வயதுக்காரர்,சாதரணமாக ஒருவருக்கொருவர் மேடம்,ஸிஸ்டர் என்று அழைத்துக்கொள்ளும் நாங்கள் இன்று அவரது அழைப்பை கேட்டு அதிர்ந்து விட்டேன்.

“வெல்கம் ஆண்டி..வெல்கம் ஆண்டி..”வாயாற நமுட்டு சிரிப்போடு வரவேற்று அழைகின்றார்.அடிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்.......

“இரும்மா..இரு..அப்புறம் வச்சிக்கறேன் ஆப்பு”முணு முணுத்தபடி ஆடிட்டோரியத்தினுள் நுழையும் பொழுது கும்பலாக பலர் வெளியேறிக்கொண்டிருந்தனர்.

“என்னடா இது .பத்துமணி அழைப்புக்கு பத்தரை மணிக்கு ஆஜர் ஆனதால் பங்சன் முடிந்து திரும்புகின்றார்களா இல்லை இடம் இல்லாமல் வெளியேறுகின்றனரா”புரியாமல் உள்ளே எட்டிப்பார்த்த பொழுது ஆரம்பிக்கவே இல்லை என்று புரிந்தது.கிரேண்ட் பேரண்ட் அல்லாதவர்களை திருப்பி அனுப்பிக்கொண்டிருக்கின்றார்கள்.

உள்ளே நுழைந்து முதல் வரிசையில் அமர எத்தனிக்கும் பொழுது பக்கத்தில் இருந்த பாட்டி “இங்கே கிராண்ட் பேரண்ட்ஸை மட்டும்தான் அலோவ் பண்ணுவார்கள் “என்றவரை உற்றுப்பார்த்தேன்.

“ஏன் என்னைப்பார்க்க கிரேண்ட் மதரா தெரியலியா”கேட்ட படி அமர்ந்த பொழுது அந்த பாட்டி அசடு வழிய நெளிந்தார்.

அட்றா சக்கை..அந்த பரிச்சயமான டீச்சர் ஆண்டி என்று அழைத்து டஞ்சர் பண்ணியதற்கு இந்த பாட்டி டிஞ்சர் தடவி விட்டது எனக்கு முழு ஜாங்கிரியையும் அப்படியே சாப்பிட்டது போல் தித்திப்பு..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

சுற்றும் முற்றும் பார்த்தேன்.மண்டையில் கொண்டை,குற்றால அருவியோடும் தலை,சோடா புட்டிகண்ணாடி,கலர்ஃபுல் கல்யாணி சாரி,ஆங்காங்கே அசத்தலான மடிசார் சேலை,ரெட்டை வட சங்கிலி,வெற்றிலைபோடும் வாய் இப்படி இமேஜின் பண்ணி வைத்து பாட்டிகளை உற்றுப்பார்த்தால் எனக்கு நிறைய ஏமாற்றம்.

அநேகர் ஹைடெக் பாட்டிகளாக இருந்தனர்.அனார்கலி ,பாட்டியாலா சுடிதாரும்,பேரலல் பாட்டமும்,சைட் ஸ்லிட்,பேக் ஸ்லிட் டாப்புகளுமாக பாட்டிகளே பட்டாம்பூச்சிகளாக தெரிந்தனர்.இன்னொரு பாட்டி என்னை மட்டுமல்ல வந்திருந்தவர்கள் அனைவரையும் அசத்தி விட்டார்.கால்களை இறுக்கி பிடிக்கும் லெக்கின்ஸ்,அதற்கு மேட்சாக டாப்.சில பழைய பாட்டிகள் ”கஷ்ட காலம்..கலி முத்திப்போச்சு” என்பார்கள்.சில ஃபிரெஷ் பாட்டிகள் ”அட செம அட்வான்சா இருக்காங்க”என்பார்கள் என்று நினைத்துக்கொண்டேன்

’தேமே’ என்று அமர்ந்திருந்த (ரங்க மணிகள் மன்னிக்க) தாத்தாக்கள் வரிசையில் அமர்ந்திருக்கும் பேரக்குழந்தைகளுடன் பாட்டிகள் அடிக்கும் லூட்டிகளைப்பார்த்து எட்டிப்பார்க்கும் பொக்கை வாய் திறக்க பார்த்துக்கொண்டிருந்தனர்.
பஞ்சு பொட்டி தலை,தலையில் வாங்கிய அரை முக்கால் கிரவுண்ட் என்று இருந்த தாத்தாக்களை பார்க்கும் பொழுது ஏன் பாட்டிகளுக்குறிய பியூட்டி கான்சியஸ் தாத்தாக்களுக்கு இல்லவே இல்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டிருந்தனர்.(மீண்டும் ரங்க மணிகள் மன்னிக்க)
இந்த சமயம் இந்த மாத இவள் புதியவள் இதழில் “இன்றைய ஹீரோக்கள் மிகவும் சுமார் ரகமாக இருக்க,ஹீரோயின்கள் மட்டும் மிக அழகாக இளமையாக இருக்க வேண்டும் என்று எதிர் பார்கின்றனரே.இது என்ன நியாயம்”என்று நடிகை சுஹாஷினியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு ”அது என்ன சினிமாவில் மட்டுமா?உங்கள் பேட்டையிலேயே பாருங்கள்.கணவர்கள் எல்லோரும் தொப்பை,வழுக்கையுடன் திடகாத்திரமாக இருப்பார்கள்.மனைவிமார்கள் பளிச் என்று இளமையாக இருப்பார்கள்.சினிமாவிலும் கேட்கவேண்டுமா?அந்தப்பிரச்சினை வேண்டாம்.வசீகரமான ஹீரோக்களை எண்ணிப்பார்க்கலாமா?எம்ஜியாருக்கு பிறகு கமல்,கார்த்திக்,அரவிந்த்சாமி,அஜித்,சூர்யா அவ்வளவுதான்...முற்றுப்புள்ளி.இவர்கள் மனைவிகளும் இளமைதான்,அழகுதான்”என்று நடிகை சுஹாஷினி கூறிய பதில் நினைவுக்கு வருகின்றது.

பெண்களுக்குத்தனியாக ஆண்களுக்குதனியாக விளையாட்டுப்போட்டிகள் நடந்தேறின.சுமார் 50,60 பேர் கலந்து கொண்ட லக்கிகார்னரில் வென்ற கடைசி ஆறு பேரில் நானும் ஒருத்தி.கடைசியாக வென்ற ஆறு பேருக்கும் தனியாக மற்றுமொரு போட்டி (குச்சியில் கலர் பேப்பர் சுற்றுதல்) வைத்ததில் வெற்றிகரமாக தோல்வியைதழுவினேன்.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

“அச்சச்சோ..என்ன மேடம் கடைசி நேரத்தில் இப்படி ஆச்சே”பரிதாபப்பட்ட மிஸ்ஸிடம் “என்ன செய்வது வயசாச்சி இல்லே கையெல்லாம் நடுங்குது”சிரித்து சமாளித்து வைத்தேன்.
ஐயோ..இதென்ன அநியாயமாக இருக்கு?தாத்தா,பாட்டின்னா தும்பைப்பூ தலையும்,காந்திதாத்தா கண்ணாடியும்,தள்ளாடும் நடையும்,நடு நடு நடுங்கும் குரலும் என்று இலக்கணமே வகுத்து விட்டனர்.பார்த்தீர்களா?தாத்தா,பாட்டி வேஷம் போட்ட வாண்டுகளின் கெட்அப்பை?
மேடையில் போட்டிகளில் பங்கு பெற்றுக்கொண்டிருக்கும் கிரேண்ட் மா&கிரேண்ட்பாக்களின் ஒவ்வொரு அசைவுக்கும் குழந்தைகள் கத்தி,கைதட்டி,குதித்து,ஆர்ப்பாட்டம் பண்ணுவதைப்பார்த்து மலைத்தே விட்டேன்.காவலுக்கு நின்ற ஆயாக்களைப்பார்க்க பரிதாபமாக இருந்தது.கேஜி யில் இப்படின்னா நாளைக்கு யுஜி,பிஜி யில் என்ன ஆட்டம் போடப்போகின்றார்களோ இந்த நாளைய மன்னர்கள்.
அத்தனை குட்டீஸுக்கும் நடுவில் எழுந்து போஸ் கொடுக்கும் எங்கள் வீட்டு செல்லக்குட்டி.
நிகழ்ச்சி முடிந்ததும் ஆடிட்டோரியத்தை விட்டு குட்டீஸை வரிசையில் கிளாஸ் ரூமுக்கு போகச்செய்கையில் எங்கள் வீட்டு செல்லக்குட்டி என்னை விட்டு பிரிய மனதில்லாமல் கடைசி வரை என்னுடனே இருந்து கியூவின் கடைசி ஆளாக கண்களை கசக்கிக்கொண்டே ,விம்மியபடி செல்லும் காட்சி.




February 14, 2010

இதற்கெல்லாம் ஒரு கொண்டாட்டம்!!

நேற்று மத்தியானப்பொழுது.வீதியில் தங்கத்தை கரைத்து அப்படியே ஊற்றி விட்டாற்போல் பொன்னிற கதிரவனின் செங்கதிர்கள்.மதிய உணவுக்கும் பின் ஓய்வெடுக்கும் அமைதி வீதியின் நிசபத்ததிலேயே தெரிகிறது.வழக்கம் போல் அமைதியாக இருந்து குர் ஆன் ஓதிக்கொண்டிருந்த பொழுது அந்த அழகான அமைதியை கலைக்கும் விதமாக பயங்கரக்கூக்குரல்.

சிறுவர்களின் அட்டகாசம்,சிரிப்பு,ஓ..என்ற சப்தம்.எரிச்சல் அடைந்து அவர்களை விரட்டிவிடும் நிமித்தமாக வெளியே வந்தால் பிளாட் பாரத்தில் அழகானதொரு பிளாக் பாரஸ்ட் கேக்.சுற்றிலும் சிறுவர்கள்.உற்சாகக்கூக்குரலால் கும்மாளம் போட்டுக்கொண்டு இருந்தார்கள்.

சிறுவர்களின் உற்சாகத்துள்ளலை நேரில் பார்த்ததும் என் கோபம் சற்று தணிந்து என்ன செய்கிறார்கள் என்று ஆர்வத்துடன் கவனிக்க ஆரம்பித்தேன்.

பள்ளியில் 11ஆம் வகுப்பு பாடம் முடிந்து 12 ஆம் வகுப்புப்பாடம் ஆரம்பித்து விட்டதாம்.ஆதலால் கேக் வெட்டி கொண்டாடுகிறார்கள் தெருவில் வைத்து.

என்னையும் சுவாரஸ்யம் தொற்றிக்கொண்டது.இதற்கெல்லாமா கேக் கட் செய்து கொண்டாடுவார்கள்?ஆர்வத்துடன் வீட்டினுள் திரும்பி வந்து கேமராவுடன் வந்தேன்.

"பசங்களா..போட்டோ எடுக்கட்டுமா"

"ஒகே ஆண்ட்டி"

"அது மட்டுமல்ல..என் பிளாக்கிலும் போடப்போகிறேன்"

"தாராளமா ஆண்ட்டி"

"ஆனால் ஆண்ட்டி ,உங்கள் பிளாக் அட்ரஸ் கொடுத்துடுங்க"

"கண்டிப்பா"

அப்புறம் என்ன கொண்டாட்டத்தை அப்படியே கிளிக்கிக்கொண்டேன்.என்னையும் அவர்களின் உற்சாகம் தொற்றிக்கொள்ள அந்த உற்சாகம் மாறமலே வீட்டுக்குள் வந்து மீண்டும் குர் ஆன் ஓத ஆரம்பித்து விட்டேன்.

கேக் தயாரக உள்ளது.

கேக் வெட்ட ஆயத்தம்.
அனைவரும் அருகில் வருமாறு அழைப்பு
வெட்டிய கேக்கை முகத்தில் பூசி ஆர்ப்பாட்டம்.
கொண்டாடிய திருப்தியில்
ஆனந்தத்துடன் ஒரு போஸ்