தங்கை அதிரா அன்புடன் அழைத்த தொடர் பதிவிது.அதீஸ்..புயல் வேகத்தில் பதிவிட்டு விட்டேன்.
என்னுடன் ஆரம்பகாலம் தொட்டே படித்து வந்த இரு தோழிகள் அடுத்தடுத்து
மிக இளம் வயதில் துர்மரணத்தை சந்தித்தது
இன்னும் என் ஆழ் மனதில் மாறாத வடுவாக பதிந்துள்ளது.
மர்ஜா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது)எனக்கு முன்னரே திருமணமாகி திடுமென கேஸ் வெடித்த
விபத்தில் மாண்டு போனவள்.
நீண்ட காலம் குழந்தை இல்லாமல் அந்த ஆசை நிறைவேறாமலே மறைந்தவளை
இப்பொழுது நினைத்தாலும் கண்கள் குளமாகும்.அவள்
கணவர் அவளது சொந்த தங்கையையே திருமணம் செய்து கொண்டு அவளுக்கும் நீண்ட காலமாக
குழந்தை இல்லாமல் இப்பொழுது ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்கின்றாள்.
இஸ்லாமியர்கள்
அதிலும் எங்களூர்க்காரர்கள் ஒரு ஆசிரமத்துக்கு சென்று குழந்தையை தத்தெடுப்பது என்பது
அபூர்வம்.ஆனால் இவள் அந்த முறையில் தத்தெடுத்து வளர்க்கும்
குழந்தையைப்பார்க்கும் பொழுது எனக்கு குழந்தையின் முகம் மர்ஜாவின் ஜாடையில் இருப்பதைப்போன்றே தோன்றும்.
என் தம்பியின் திருமணத்திற்காக இந்த நண்பியின் வீட்டிற்கு சென்று கதவை தட்டினேன்.
(வாசலில் காலிங்க் பெல் ஸ்விட்ச் இல்லை)எந்த ஒரு சப்தத்தையும் காணாது நண்பியின் பெயர் சொல்லி அழைத்து தட்டும் பொழுது
அவளது தாயார் சோகமாக கதவை திறந்து விட்டவர் முகத்தில் மலர்ச்சி இல்லாமல் இருந்ததை
கண்டு எங்கே அவள்”என்று கேட்டதற்கு அழுகை வெடித்துக்கொண்டு வந்தது.
சென்றவாரம்தான் தூக்கு போட்டு இறந்ததை
அவர் விவரித்ததும் எனக்கு உடம்பே வெல வெலத்து விட்டது.
டிராஜடியாக இரண்டு அனுபவங்களை படித்து கனத்துப்போன மனங்களுக்கு
காமெடியான இரண்டு அனுபவங்கள்.
நாண்காவது வகுப்பில் படிக்கும் பொழுது என்று நினைக்கிறேன்.இவளும் நானும் மிகவும்
நெருங்கிய தோழிகள்.நான் மிகவும் கஷ்டப்பட்டு சேமித்து வீட்டிலேயே வைத்திருந்த
ஐம்பது ரூபாயைப்பற்றி இவளிடம் தம்பட்டம் அடிக்கப்போய் வைத்தாளே ஆப்பு.
(அப்போதெல்லாம் 50 ரூபாய் என்பது பெரிய தொகைங்க)கடனாக கொடு .
அப்புறமாக கொடுத்து விடுகின்றேன் என்று சொன்னதை நம்பி கொடுத்து விட்டு
திரும்ப வாங்குவதற்குள் நான் பட்டபாடு.பணத்தை எப்படி எல்லாம் கொடுக்காமல்
டிமிக்கி கொடுக்கலாம்
என்பதில் அவள் கில்லாடியாக இருந்தால் பணத்தை எப்படி வாங்குவது என்பதில் செம கில்லாடியாக
நான் இருந்து இறுதியில் ஹெட்மாஸ்டர் ரூம் வரை எங்கள் பிரச்சினை சென்று கடைசியில்
வசூல் செய்து விட்டுத்தான் ஓய்ந்தேன்.ஆனால் பிரண்ட்ஷிப் அப்போ கட் ஆனதுதான்.
இப்பொழுது கண்டாலும் அவள் முகத்தை திருப்பிக்கொள்கின்றாள்.
நான் படித்த பள்ளிக்கு என் ஒன்றுவிட்ட தாத்தாதான் கரஸ்பாண்டண்ட்.அதனால் பள்ளிக்கே
செல்லமாக ஒரு குரூப் அலையும்.அதில் நானும் ஒருத்தி.முதலாம் வகுப்பு படிக்கும் பொழுது
“பள்ளிக்கூடம் வேண்டாம் ”
என்று அழிச்சாட்டியம் பண்ணியவள் தொடர்ந்து மூன்று வருடங்களாக இதே அலைப்பரைதான்.
என்னை பள்ளியில் சென்று விட்டு வரும் மாமா முறை உள்ளவரை பள்ளியில் வகுப்பறை வாசலிலேயே
இறுத்திக்கொள்வேன்.நான் அசந்த நேரம் அவர் எஸ்கேப் ஆகி விட்டால் அழுது ஆர்ப்பாட்டம்தான்.இதனால்
இரண்டாவது மூன்றாவது பீரியடில் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள்.அப்பொழுது என் தோஸ்த்துகளின்
முகங்களை பார்க்கவேண்டுமே.பொறாமையில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும்.
ஆனால் என்னால் இந்த அழுகுணி ஆட்டத்தை ரொம்ப நாள் தொடர முடிய
வில்லை.மாஸ்டரின் பிரம்புக்கு பயந்து பெட்டிப்பாம்பாய் அடங்கி விட்டேன்.
என்னுடைய இளம் பிராயத்து தோழிகள் பலரும் என்னைத்தொடர்ந்து
சென்னையிலே ஒருவர் பின் ஒருவராக செட்டில் ஆகி விட்டனர்.ஆங்காங்கே தனித்தனியாக
சந்தித்துக்கொண்டாலும் எல்லோரும் ஒன்றாக ஒரு முறை,ஒரே இடத்தில் சந்திக்க வேண்டும்
என்ற எனது ஆவல் எப்பொழுது நிறைவேறப்போகின்றதோ?
அதே போல் எங்கள் சில நண்பிகள் தொடர்பு விடுபட்டு அவர்களை சந்திக்கும் ஆவல் மிகுதியாக
உள்ளது.வழிதான் தெரிய வில்லை.அவர்களை எல்லாம் கண்டுபிடித்து எப்பொழுது சந்தித்து அளாவளவும் வாய்ப்பு
கிடைக்கப்போகின்றதோ?