ஈஞ்சம்பாக்கம் தங்கக்கடற்கரை இதுதான் சென்னையின் முதல் தீம் பார்க் என்று நினைக்கிறேன்.தங்ககடற்கரைஎன்றதும் சிரிக்காது நிற்கும் சிலை மனிதர் தவிர நீநீநீநீநீ..ள தோசைதான் ஞாபகத்திற்கு வரும்.
சென்ற வாரம் அங்கு சென்று இருந்த பொழுது சிலை மனிதரைக்காணவில்லை.ரெஸ்ட் எடுக்கப்போய் இருப்பாரோ?அல்லது அன்று அவருக்கு விடுமுறையோ தெரியவில்லை.
எத்தனையோ முறை அங்கு சென்று இருந்தாலும் ஒரு முறை கூட நீள தோசை சாப்பிட்டதில்லை.
இந்த முறை வலைப்பூவில் எழுத வேண்டும் என்பதற்காக கேண்டீன் பக்கம் சென்றோம்.8 அடி தோசை 1000 ரூபாய்.3 அடி தோசை 200 ரூபாய் என்று போர்டில் எழுதப்பட்டு இருந்தது.
எட்டு அடி தோசை சாப்பிட ஆள் இல்லாததால் மூன்றடி தோசைக்கு ஆர்டர் செய்தோம்.களை கட்டி இருந்த கேண்டீனில் எட்டடி தோசை தென்பட்டால் கேமராவில் கிளிக் செய்யலாம் என்று சுற்று முற்றும் பார்த்தால் ஏமாற்றம்தான்.
ஆர்டர் செய்த அரைமணிநேரத்திற்கு பிறகு தோசை கிடைத்தது.தோசையைப்பார்த்ததுமே சாப்பிடும் ஆசை போய் விட்டது.ஒரு பக்கம் முறுகலாக இன்னொரு பக்கம் வெந்தும் வேகாததுமான ஒரு நீள தோசை அலுமினிய டிரேயில் பட்டர் பேப்பர் விரித்து சுருட்டப்பட்டு இருந்தது.
தோசையில் முறுகலான பகுதியையும்,வெண்மையான பகுதியையும் பார்த்ததும் பிளேக் அண்ட் வைட் தோசை என்று உடனடியாக செல்லப்பெயர் சூட்டி விட்டனர்.
கூடவே ஆறிப்போன சாம்பார்,ஐஸ் போன்று ஜில்லிட்டிருந்த உருளைக்கிழங்கு மசால்,புளித்துப்போன தேங்காய் சட்னி...
எதுவும் சாப்பிடாமல் அலுமினிய டிரேயில் இருந்த தோசையை கொத்து பரோட்டாவாக்கி அதகளப்படுத்தி விட்டு எழுந்தது தான் மிச்சம்.
”நல்ல வேளை ஆட்கள் அதிகம் இருந்து எட்டடி தோசை ஆர்டர் பண்ணாமல் தப்பித்தோம்” பெருமூச்சு விட்ட படி நடையைக்கட்டினோம்.
Tweet |