May 25, 2013

கீழக்கரை ஸ்பெஷல் பதார்த்தங்கள்

தென்மாவட்டத்தில் இருக்கும் கீழக்கரையில் கிடைக்கும் தின்பண்டங்கள் மிகவும் புகழ்பெற்றவை.இதன் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் இந்த இடுகையில் குறிப்பிடப்பட்டு இருக்கும் அநேகப்பொருட்கள் ஒரு மாதத்திற்கும் மேலானாலும் கெடாது.இந்த தின்பண்டத்தின் பெயரை சொல்லி கடை கடையாக ஏறி இறங்கினாலும் பல ஐட்டங்கள் கிடைக்கவும் செய்யாது.குடிசைத்தொழில் போல் பல குடும்பங்கள் குலத்தொழிலாக செய்து வருகின்றனர்.

முன்பெல்லாம் பாத்திரத்தை எடுத்து சென்று பதார்த்தங்கள் தயாரிக்கும் வீட்டிற்கு சென்று வாங்கி வந்தது போக இப்பொழுது  பாலிதின் கவரில் போடப்பட்டு வீட்டு வாசலுக்கே விற்பனைக்கு வந்து விட்டது.இப்பொழுது பாலிதின் கவரின் உபயோகத்தால் ஏற்படும் சுகாதரகேட்டின் விழிப்புணர்வால் அது அலுமினியம் ஃபாயில் பாக்கெட்டுகளுக்கு மாறிக்கொண்டு வருகின்றது.

சுவையும்,தரமும் மிக்க இந்த பதார்த்தங்கள் உலகில் பலபாகங்களில் வாழும் கீழை வாசிகள் மட்டுமல்ல அவர்களுக்கு பழக்கமான மற்ற ஊர்,மற்ற தேச நட்புக்களுக்கும் மிகவும் பிடித்தமான தின்பண்டமாகி விட்டது என்றால் மிகை ஆகாது.

கீழக்கரையை சுற்றி பெரும்பான்மையான தென்னந்தோப்புகள்,அவற்றில் லட்சக்கணக்கான மரங்கள் உள்ளன.முக்கியவிவசாயமாக தென்னை சாகுபடி அங்கு அந்தக்காலம் தொட்டே இருந்து வருகின்றது.கீழக்கரை மக்களின் உணவுகளில் அநேகமாக தேங்காய் கலந்தே இருக்கும்.இங்கு கீழே குறிப்பிடப்போகும் இனிப்புகள் அநேகமாக தேங்காய் சேர்ந்தவைகளே ஆகும்.

1.தொதல்


இதனை சிலர் லொதல் என்றும் கூறுகின்றனர்.எது சரியான பதம் என்று தெரியவில்லை.குழந்தைகள் கருப்பு அல்வா என்றும் செல்லமாக அழைப்பர்.இந்த தொதலில் வரலாறு கொழும்பில் இருந்துதான் ஆரம்பிக்கப்பட்டது.ஆம்.தொதலின் பூர்வீகம் கொழும்புதான்.அங்கிருந்து செல்லக்கனி என்பவர் செய்முறை ரகசியத்தை அறிந்து இங்கு வந்து வியாபாரமாக்கியவர்.இப்பொழுது 40 - 50 குடும்பத்தினர் குடிசைதொழிலாக தயாரித்து வருகின்றனர்.கெட்டியான தேங்காய்ப்பால்,பனங்கருப்பட்டி சேர்த்து அல்வா பதத்திற்கு கிண்டி,வாசனைக்கு ஏலப்பொடியும்,அழகுக்கும்,சுவைக்கும் முந்திரி,உடைத்த பாசி பருப்பும் சேர்த்து சுவையை அள்ளும் ஒரு பதார்த்தம்.வலைப்பூவில் அசத்தும் அம்மணிகள் ஆர்வக்கோளாரால் தொதல் செய்முறைக்கு இறங்கி,அதன் பின் விளைவுகளுக்கு நான் பொருப்பல்ல:)ஏனெனில் என் சிறு வயதில் என் அம்மா இந்த தொதல் தயாரிப்பில் இறங்கி தேங்காய் துருவி பால் எடுத்து அதனை பெரிய வாணலியில் இட்டு காலையில் கிண்ட ஆரம்பித்தால் சட்டியை கீழே இறக்க மாலை ஆகி விட்டது.இதனை பார்த்து எங்கள் வீட்டில் எல்லோருக்கும்  சிறிது நாட்கள் தொதல் என்ற பெயரைக்கேட்டாலே அலர்ஜி ஆகிவிடும்.கீழக்கரை பேமஸ் தொதலை பற்றி அம்மா தொலைக்காட்சியில் வந்த செய்தியாக வந்த ஒலி ஒளி காட்சியை காணுங்கள்.


2.கலகலா


பெயரைப்பார்த்ததும் ஏதோ வடநாட்டு பதார்த்தம் என்று எண்ணி விடாதீர்கள்.பக்கா தமிழக பதர்த்தம்தான்.இந்த இனிப்பை சுட்டெடுத்து பாத்திரத்தில் கொட்டினால் கலகல என்று ஒலி வரும் அதான் இப்பெயர் வந்ததோ என்னவோ?மைதா தேங்காய்ப்பால்,முட்டை,ஏலப்பொடி ,சர்க்கரை சேர்த்து செய்யப்படும் சுவையான இனிப்பு இது.சதுரம்,செவ்வகம்,டைமண்ட் நீள்சதுரம் என்று பல ஷேப்புகளில் கிடைக்கும்.இந்த முறை வாங்கி வந்த கலகலாவின் ஷேப் கன்னாபின்னா என்று இருந்தது போலவே சுவையும் கன்னாபின்னா என்று அடி தூள் கிளப்பி விட்டது.வாங்கி வந்து கொடுத்த உறவினரிடம் யார் வீட்டில் வாங்கினீர்கள் என்று கேட்டு வைத்துக்கொண்டேன்.ஊருக்கு சென்றால் உதவுமே:)இதிலே இனிப்பு சேராமல் காரப்பொடி சேர்த்து செய்வது காரக்கலகலா

3.பணியம்



அரிசிமாவு,தேங்காய்ப்பால் கொண்டு செய்யப்படும் முறுக்கு சுவை கொண்ட பதார்த்தம்.கீழக்கரையில் பணியக்காரத்தெரு என்றே ஒன்று உள்ளது.இரண்டு,மூன்று இஞ்ச் நீளத்திற்கு  தயாரித்து விற்கின்றனர்.திருமணச்சீரில் இதே பணியம் முக்கால் அடி நீளமாக உருவெடுத்து விடும்.இதனை சீப்புப்பணியம் என்றும் சொல்வார்கள்.

4.தேங்காய்ப்பால் முறுக்கு



பணியம் மாவில் சற்று மேக்அப் செய்து முறுக்காக சுற்றி விற்பனைசெய்கினறனர்.வாயில் போட்டால் கரைந்து விடும் என்பார்களே.அது இதற்கு பொருந்தும்.பல் இல்லாத பெரியவர்கள் முறுக்கு சாப்பிட விரும்பினால் இந்த முறுக்கை பயமில்லாமல் சுவைக்கலாம்.

5.வறுத்த மொச்சை


மொச்சைக்கொட்டையை ஊற வைத்து அதன் தோலை அகற்றி கரகரப்பாக பொரித்து உப்பு காரம் சேர்த்து வறுத்த கறிவேப்பிலை,முந்திரியால் அலங்கரித்து இருக்கும் சுவையான கறுக்மொறுக்.

6.நவதானியம்



இந்த நவதானியத்தினைப்பற்றி கீழை வாசி சுவைபட முழுபதிவாகவே போட்டு இருக்கின்றார்.மேலும் அறிந்து கொள்ள அங்கே செல்லுங்கள்.

7.வெள்ளை முறுக்கு


இடியாப்பமாவை குறிப்பிட்ட முறுக்கு அச்சில் போட்டு வட்டமாக பிழிந்து ஆவியில் வேகவைத்து வெயிலில் உலர்த்தி பிறகு எண்ணெயில் பொரித்து சாப்பிடும் முறுக்கு.சென்னைவாசிகள் இதனை வடாம் என்பார்கள்.ஆனால் இதனை எங்களூர் வாசிகள் ஒரு போதும் சாப்பாட்டுடன் சேர்க்கமாட்டார்கள்.தேனீருக்கு முன் சாப்பிடும் ஒரு நொறுக்ஸ்.வெளியூர் வாசிகள் இதனை பொரிக்காமல் வாங்கி வந்து தேவைப்படும் பொழுது பொரித்து சாப்பிடுவார்கள்.உள்ளூரில் பொரித்த வெள்ளை முறுக்கை வாங்கும் பொழுது அதனை பனை நாரில் கோர்த்து தருவது வித்தியாசமாக இருக்கும் இதன் சுவையைப்போலவே.

8.ஓட்டுமா



”பசியை இது ஓட்டுமா” என்றால் ஆம் கண்டிப்பாக ஓட்டும்.இரண்டே டீஸ்பூன் வாயில் அள்ளிப்போட்டுக்கொண்டால் பசி பறந்தோடி விடும் அதிசுவை உள்ள இனிப்பு பதார்த்தம்.அதனாலேயே வெளிநாட்டு வாழ் கீழை வாசிகள் கண்டிப்பாக இதனை வாங்கிச்செல்ல மறக்கமாட்டார்கள்.ஒரு தெலுங்கு நட்புக்கு ஊரில் இருந்து வாங்கி வந்து கொடுத்தேன்.உருவத்தைப்பார்த்ததும் முகத்தை சுளித்து இதனை எப்படி சாப்பிடுவது என்றார்.அப்படியே சாப்பிடலாம் என்று சொன்னாலும் அவருக்கு விரைவில் நம்பிக்கை வரவே இல்லை.ஆற்றுமணல் போல் உள்ளதே என்றார்.ஒரு ஸ்பூன் ஒரே ஸ்பூன்தான் எடுத்து பயத்துடன் வாயில் போட்டார் பாருங்கள்.அன்று ஆரம்பித்தது எனக்கு ”ஊருக்கு போகும் போதெல்லாம் ஓட்டுமா ஓட்டுமா என்று வாட்டி,ஓட்டி எடுத்து விடுவார். கீழக்கரை ஓட்டுமாவைப்பற்றி தினமலர் நாளிதழில் வந்த செய்தியை பார்த்து விடுங்கள்.அப்படியே இந்த கீழை வாசி ஓட்டுமாவை  ருசித்து,ரசித்து கவிதை பாடி இருக்கின்றார் என்பதையும் பார்க்க இந்த பதிவுக்கு செல்லுங்கள்.

இந்த ஊரில் புகழ்பெற்ற கிருஷ்ணாஸ்வீட் மைசூர்பாவுக்கு பற்பல ஆண்டுகளுக்கே முன்னரே பிரபலம் ஆன ராவியத்துகடை மைசூர் பாகு,எள்ளுருண்டை,கடலை உருண்டை,மறவர் முறுக்கு,அல்வா கருப்பட்டி,புல்லுக்கொழுக்கட்டை.ஒடியல் இப்படி எக்கசக்கமாக இருந்தாலும் பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

May 18, 2013

தண்ணீர்..தண்ணீர்..



மண் பானைகள்,,தண்ணீர் நிரப்பி வைக்கும் அண்டா,வாட்டர் பில்டர்கள் இப்படியாகப்பட்ட பொருட்கள் எல்லாம் கண்காட்சியில் வைக்கப்படும் பொருளாக மாறிவிட்டது இந்த மினரல் வாட்டர் வரவால்.கிணற்றடி நீர்,நகராட்சிகள் விநியோகம் செய்யும்குடி நீர்,தெருக்குழாயில் கிடைக்கும் குடிநீர்,லாரிகளில் கிடைக்கும் குடிநீர் இப்படி கஷ்டப்பட்டு குடிநீரைப்பெற்று,அதனை காய்ச்சி,வடிகட்டி தண்ணீர் குடிப்பதற்கு சிரத்தை எடுத்த அம்மணிகள் இன்று சல்லிசாக பணத்தைக்கொடுத்து கேன் வாட்டர் வாங்கி மிக சுலபமாக தண்ணீர் பிரச்சினையை சமாளிக்கின்றனர்.இப்படி காசு கொடுத்து வாங்கும் நீர் தரமானதுதானா?உடலுக்கு கெடுதல் விளைவிக்காது  என்பதில் உறுதி கிடையாது.தமிழ்நாட்டில் ஐம்பது சதவிகித மக்கள் இந்த மினரல் வாட்டரைத்தான் அருந்துகின்றனர்

விருந்தினர் வந்தால் குடிப்பதற்கு நீர் கொடுத்தால் “மினரல் வாட்டர் தானே”என்ற கேள்விக்கு இல்லை என்று பதில் வந்தால் முகசுளிப்புத்தான் பதிலாக கிடைக்கும் பலரிடமிருந்து.”எங்கள் வீட்டில் கார்பரேஷன் வாட்டர் எல்லாம் குடிப்பதில்லை”இந்த வார்த்தைகளில் பெருமிதம் கொள்கின்றனர் தமிழக மக்கள்.


மக்களின் மனோபாவத்தை அறிந்த கில்லாடி வியாபாரிகளுக்கு லாபநோக்கை மட்டுமே கருத்தில் கொண்டு பல்வேறு பன்னாட்டு உள்நாட்டு நிறுவனங்களுக்கும் தண்ணீர் பிசினஸில் கல்லாக்கட்டுங்கள் என்ற உரிமையை தாராளமாக வழங்கி வள்ளல் தனம் புரிந்துகொண்டுள்ளது தமிழக அரசு.

தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட மினரல் வாட்டர் நிறுவனங்கள் 700க்கும் மேல் இருந்தால் போலியான நிறுவங்கள் 2000க்கும் மேல் என்று ஆய்வுகள் கூறுகின்றது.போலி நிறுவனங்களில் அன்றாடம் ரெய்ட் என்ற பெயரில் ஒரு கண் துடைப்பை நடத்தி,இரண்டு நாட்களுக்கு மூடு விழா நடத்தி இரண்டாம் நாளே ஜகஜோராக வழக்கப்படி கல்லாகட்டும் வேலை ஆரம்பித்து விடுவது வாடிக்கை.

பத்திரிகைகளில் வந்த  செய்திகளின் அடிப்படையில் தென்னிந்திய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து வழக்கை பதிவு செய்து அங்கீகாரம் இல்லாத தண்ணீர் நிறுவனங்கள்  மீது நடவடிக்கை எடுக்கும் படி தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது.அதிரடி சோதனை நடத்தியதில் உரிமம் பெறாத 103 மினரல் வாட்டர் நிறுவங்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கைகளினால் மற்ற எல்லா  தண்ணீர் சப்ளை செய்யும் நிறுவனங்களும் மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து
தண்ணீர் சப்ளை செய்வதை நிறுத்தி விட்டது.வரும் 20 ஆம்தேதி முதல் முழு வேலைநிறுத்த போராட்டத்துக்கு தயாராகி வருகிறது.

ஒவ்வொரு இல்லத்தரசியும் இந்நிலை கண்டு அரண்டு போய் இருப்பது என்னவோ உண்மைதான்.சென்னையில் பல இடங்களில் முறையாக குடிநீர் வரி செலுத்தி வந்தாலும்,மாநகராட்சி வழங்கும் மெட்ரோ வாட்டர் வருடக்கணக்காக வருவதில்லை.பல குடியிருப்புகளில் நிலத்தடி நீர் உண்ணத்தகுதியான தரத்தில் இருப்பதில்லை.பன்னாட்டு உள்நாட்டு நிறுவங்கள்,அடுக்குமாடி குடி இருப்பில் வசிப்பவர்கள், மெட்ரோ வாட்டர் வராத மேடான பகுதிகளில் வசிப்பவர்கள் மினரல்  வாட்டரை மட்டும்தான் நம்பி வாழ்கின்றனர்.20 ஆம்தேதிக்கு பிறகுதான் முழு வேலை நிறுத்த போராட்டம் நடை பெறும் என்று அறிவித்தாலும் இப்பொழுதே தண்ணீர் சப்ளை நிறுத்தி வைக்கப்பட்டு விட்டது.அக்கம் பக்கத்து கடைகளில் ஸ்டாக் வைத்திருக்கும் தண்ணீர் கேன்களை அதிக விலை கொடுத்து வாங்கி வரும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுவிட்டனர்.அதுவும் ஸ்டாக் இருக்கும் வரையே.

அரிசி பஞ்சம் வந்த பொழுது மற்ற தானிய பொருட்களை சமைத்து உணவாக்கினர்.பாலுக்கு பஞ்சம் வந்த பொழுது அதிக விலை கொடுத்து பால் வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு பெரியவர்கள் கருப்பு நிற காபியை அருந்தி வந்த காலமும் சரித்திரத்தில் உண்டு.பீன்ஸ் விலை 100 ரூபாயானால் பீன்ஸ் பொரியல் இல்லாமலும்,பீன்ஸ் போடாத வெஜிடபிள் புலாவும் இல்லாமல் மக்களால் வாழ முடியும்.வெங்காயம் விலை ராக்கெட் வேகத்தில் ஏறுமுகம் காட்டிய பொழுது நான்கு வெங்காயம் சேர்த்து செய்யும் சமையலில் பாதி வெங்காயத்தை சேர்த்து சமையலை கச்சிதமாக முடிக்கும் திடம் வாய்ந்தவர்கள் தமிழகத்து அம்மணிகள்.ஏன் தங்கம் விலை உச்சாணிக்கு போன போது பெண் மக்களின் திருமணங்களில் சவரன் எடை கிராமாக மாற்றமாகிப்போனது.ஆனால் குடிநீருக்கே பஞ்சம் ஏற்பட்டால்...?

தண்ணீர் வந்து குற்றால அருவியாக கொட்டும் என்ற அதீத எதிர் பார்ப்பில் 30000 லிட்டருக்கு பெரிய சம்ப் ஒன்று கட்டி வருடங்கள் ஆறை கடந்து விட்டாலும் இதுவரை ஒரு சொட்டு கார்பரேஷன் தண்ணீர் வந்து விழவில்லை.துன்பத்திலும் ஒரு இன்பம் என்பது போல் கார்பரேஷன் நீர்தான் வரவில்லை என்று லாரி தண்ணீரை விலை கொடுத்து வாங்கி சம்பை நிரப்பிக்கொள்ளும் துர்பாக்கிய நிலை இல்லாமல் இறைவன் கிருபையால்  நிலத்தடி நீர் அட்ஷ்ய பாத்திரமாக விளங்கினாலும் குடிப்பதற்கு தகுதி இல்லையே?

பத்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு காலி கேன்களை எடுத்துக்கொண்டு தண்ணீருக்கும் அலையப்போகும் நிலை தண்ணீர் தண்ணீர் சினிமாவை நினைவூட்டி பீதியைக்கிளப்புகிறது.(உறவினர் இருக்கும் ஏரியா பள்ளமான பகுதியாதலால் கார்பரேஷன் நீர் சம்பில் நயாகரா நீர்வீழ்ச்சியாக கொட்டி ஓவர் ஃப்ளோ ஆகி அதனைப்பார்த்துவிட்டு மாநகராட்சி ஆட்கள் ஸ்பாட்பைனை தீட்டிவிட்டு செல்வது தனிக்கதை)

சென்னையை பரபரப்பாக்கிக்கொண்டு இருக்கும் குடி நீர் தட்டுப்பாட்டை போக்க மாநகராட்சி லாரிகளில் நீர் விநியோகம் செய்ய ஆரம்பித்தாலும் உரிமம் பெறாத தண்ணீர் கம்பெனிகள் கன ஜோராக மீண்டும் சைலண்டாக திறக்கப்பட்டு வெகு விரைவில் கல்லா கட்டி,பரபரப்பாக பேசப்பட்டு வரும் தண்ணீர் தட்டுப்பாடு வெகு விரைவில் நீங்கிவிடும்  என்பது அனைவரும் அறிந்த ரகசியம் .