தி நகர் நெரிச்சல் கண்டு மலைப்பாக உள்ளது.போக்குவரத்து நெரிச்சலை குறைப்பதற்கு பாலம் கட்டியும் நெரிச்சல் மேலும்,மேலும் அதிகமாகிப்போனதை தவிர வேறு பலன் இல்லை.சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள பாலத்தை கடக்க அரை மணி நேரத்திற்கும் மேல் தேவைப்படுகின்றது.எறும்பு மொய்த்தாற் போல் ஜனத்திரள்.ரங்கநாதன் தெரு வாசிகள் எப்பொழுதோ வீடுகளை காலி செய்து விட்டு புலம் பெயர்ந்தாலும்,பக்கத்து பக்கத்து தெருக்களில் வசிப்போர் நிலை பரிதாபத்துக்குறியது.மேலும் மேலும் புதிது புதிதாக வணிக கடல்கள் உருவாக்குவதை குறித்து யோசித்து செயல் படுத்தினால் நன்றாக இருக்கும்.
ஒரு வலையுலக நட்பு தன் கணவர் புதிதாக ஒரு ரெஸ்டாரெண்ட் இதே பகுதியில் திறந்திருப்பதாக கூறினார்.நீங்கள் அங்கு சென்றால் போன் செய்யுங்கள். ரங்கமணியிடம் கூறி டிஸ்கவுண்ட் தரச்சொல்லுகின்றேன் என்றார்.சரி நட்பின் உணவகத்திற்கு போய்த்தான் பார்க்கலாமே என்று கூட்டத்தில் நீச்சல் அடித்து போய் சேர்ந்தோம் இஃப்தார் நேரத்தில்.உணவகத்தில் அமர்ந்து கொண்டு போன் செய்தால் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது.கடைசி வரை ஆன் செய்யவே இல்லை. சாப்பிட்டு விட்டு டிஸ்கவுண்ட் இல்லாமல் பணம் செலுத்திவிட்டு வந்தோம்.விலை கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் அரேபிய உணவு வகைகள் அற்புதமாக இருந்தது.
ஈத் பர்சேஸுக்காக கடை,கடையாக ஏறி இறங்கும் பொழுது சென்னை ஸில்க்ஸில் ஒரு புடவை கண்களையும்,கருத்தையும் கவர்ந்தது.அலங்காரமான நகைப்பெட்டிக்குள் நகை இருப்பது போல் ஒரு அலங்காரமான பெட்டிக்குள் இருந்த பட்டுப்புடவையின் விலை என்ன தெரியுமா? 2.5லட்ச ரூபாய்.அடுத்த முறை போகும் பொழுது மறக்காமல் கடை நிர்வாகியிடம் அனுமதி பெற்று போட்டோ எடுத்து தனிப்பதிவே போடவேண்டும்.(ரங்கமணிகளே உஷார்.)
சிறிய கடை வைத்திருக்கும் வியாபாரிகள் பாடு படு கஷ்டம்தான்.இப்பகுதியில் துணிக்கடை இருப்பது போல் நகைக்கடைகளும் அதிகமே.ஆனால் இப்போதெல்லாம் பெரிய கடைகளில்தான் வியாபாரம் கன ஜோராக நடந்து வருகின்றது.நகைகடை வைத்து வியாபாரம் செய்தவர்களில் பலர் இப்பொழுது கடுமையான போட்டியை சமாளிக்க முடியாமல் கவரிங் பொருட்கள் விற்பனையகமாக மாற்றிக்கொண்டு வருவதைப்பார்க்கும் பொழுது கஷ்டமாக உள்ளது.
பனகல் பார்க்கை சுற்றி மிகவும் பிரபலமான கடைகள் நிறைந்த பகுதி.மிகவும் பிஸியான பகுதி.இப்பொழுது நல்லி,குமரன் பிரின்ஸ் ஜுவல்லர்ஸ் என்று வரிசைகட்டிக்கொண்டிருக்கும் இருக்கும் பரபரப்பான நாகேஸ்வரா சாலையை மீண்டும் ஒன்வே ஆக மாற்றி விட்டாலும்,வாகன போக்கு வரத்து வேண்டுமானால் சற்று சுலபமாக இருந்தாலும் ஜன நடமாட்டம் மிகவும் நெருக்கடியாக உள்ளது.நடைபாதை வியாபாரிகளுக்குத்தான் இந்த ஒன்வே சிஸ்டம் வசதியாக போய் விட்டது.
பனகல் பார்க்கை பஸ் ஸ்டாண்ட் ஆக மாற்றுவதற்கு பலத்த எதிர்ப்பு.அதே ஏரியாவில் ஜீவா பார்க்,நடேசன் பார்க் என்று மேலும் இரண்டு பார்க் இருக்கும் பொழுது இதனை பேருந்து நிலையமாக மாற்றி,தி.நகர் பஸ் ஸ்டாண்டை இங்கு மாற்றினால் போக்கு வரத்து நெரிச்சல் மிகவும் குறைந்து மக்களும் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள்.அரசாங்கம் செயல் படுத்துமா?
தி.நகர் போத்தீஸில் நோன்பு திறக்கும் சமயம் நோன்பாளிகள் எல்லாரும் வந்து நோன்பு திறந்து செல்லும்படி அனவுன்ஸ் செய்கின்றார்கள்.இஃப்தாருக்கென்று தனி இடம் ஒதுக்கி நோன்பாளிகளை நோன்பு திறக்கும் வசதியை ஏற்படுத்தி தருகின்றனர்.மாற்று மதத்தவரின் சேவை நெகிழவைக்கின்றது.
ஜி.என் செட்டி ரோடில் இருக்கும் விருதுநகர் ஹோட்டலில் சஹர் நேரத்தில் நோன்பாளிகளுக்கு இலவசமாக உணவு வழங்கி வருகின்றனர்.இது பல ஆண்டுகளாக தொடர்ந்து நடை பெற்று வருகின்றது.பேச்சிலர்களும்,வசதியற்ற நோன்பாளிகளுக்கும் மிகவும் வசதியாக இருக்கின்றது.அவ்வுணவகத்தின் நிறுவனர்களுக்கு வல்ல அல்லாஹ் நற்கூலியை கொடுப்பானாக.
இதே வீதியில் உள்ள ஒரு சிறிய செருப்புக்கடையில் வீட்டிற்குள் உபயோகப்படுத்தும் ஹெல்த் பிளஸ் செருப்பு 140 ரூபாய்க்கு வாங்கினேன்.அதே செருப்பை என் பக்கத்து வீட்டுத்தோழி பெரிய கடையில் 90 ரூபாய்க்கு வாங்கி இருக்கின்றார்.ஒரு செருப்பிலேயே 50 ரூபாய் அதிகம் வைத்து விற்பனை செய்தால் இது போல் சிறிய கடைகளில் கூட்டம் எப்படி களை கட்டும்?ஒரு நாளில் 50000 ரூபாய்க்கு வியாபாரம் செய்து அடையும் லாபத்தை விட,5000 ரூபாய்க்கு மட்டும் வியாபாரம் செய்து லாபம் பெற்று விடுகின்றனர்.செம வியாபாரிகள்தான்.
பர்ஸை பறி கொடுத்து விட்டு பரிதவிக்கும் மக்கள் ஒருபக்கம்.என்னதான் உயரமான மேடை போட்டு,கண்கொத்திப்பாம்பாக போலீஸார் கண்காணிப்பு நடத்தினாலும் இந்த அவலம் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.இத்தனை அவஸ்தைகளையும் அனுபவித்தும் மகிழ்ச்சியுடன் தி.நகர் ஷாப்பிங் செய்யும் மக்கள் இந்த தி. நகர் மோகத்தை என்று விடுவார்கள்?தி.நகர் வாழ் மக்களுக்கு என்று மோட்சம் கிடைக்கும்?என் வலையுலக நட்பு தி.நகர் வாடிக்கயாளர் கூட்டத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கும் பொழுது"யானைக்கும் அடி சறுக்கும்"என்று சிரித்தார்.
Tweet |