இவள் புதியவளில் எனது அதிர்ஷ்டக்காரி என்ற சிறுகதை ஆகஸ்ட் இதழில் வந்துள்ளது.படித்து விட்டு தங்கள் கருத்துக்களைப்பகிர்ந்து கொள்ளுங்கள்.
அதிர்ஷ்டக்காரி
கையில் வைத்திருந்த புகைப்படத்தில் இருந்து கண்களை அகற்ற முடியவில்லை அலமேலுவால்.தன் நாத்தனார் விசாலம் பெண் ஜானகிக்கா இந்த வரன் என்று நினைக்கும் பொழுது ஆச்சரியமாக சற்று பொறாமையாக இருந்தது.
ஜானகி மாநிறத்துக்கும் சற்று குறைவான நிறம்.மரப்பாச்சி பொம்மைப்போன்று குச்சி குச்சிகளாக கைகளும் கால்களும்,கூந்தல் கூட இந்த காலத்து இளம் பெண்களுக்கு இருப்பது போன்று புஸு புஸு வென்று காற்றில் அலை அலையாக பறக்கும் படி இல்லாமல் ..மொத்தத்தில் ரசிக்கும் படியான தோற்றம் இல்லை.
உடன் பிறப்புகள் “ஏடி குள்ளப்பட்டா ஜானகி..கருப்பி”என்று சண்டை பிடிக்கும் பொழுது கூறும் வார்த்தைகளைப்பார்த்து தன் நாத்தனார் மகளின் முடியை கோதியபடி ”இவளுக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் கட்டி வைப்பதற்குள் எனக்கு போதும் போதும் என்றாகிவிடும் போலிருக்கு மன்னி”கேலியும் சீரியஸும் கலந்த குரலில் கூறி பெருமூச்சு விடுவதை அலமேலு பல முறை கேட்டு இருக்கின்றாள்.அவளுக்கு அமைந்த வரனை பார்த்து உள்ளத்தில் இருந்து மகிழ்ச்சி பிரவாகம் எடுக்காமல் அதிர்ச்சி கலந்த பொறாமை உணர்வு தலை தூக்கியதை அலமேலுவால் கட்டுப்படுத்த இயலவில்லை.
”எப்படி அண்ணி இந்த வரன் அமைந்தது..?”
“வக்கீல் வீட்டம்மாதான் சொல்லி அனுப்பினா.அவள் பையனுடைய பிரண்டாம்.”
“பையன் இப்ப யு எஸ்ஸில் என்ன பண்ணுறான்.?”
“இங்கே ஐ ஐ டி யில் டிகிரி முடிச்சுட்டு,அங்கே போய் எம் எஸ் பண்ணி அங்கே ஒரு பேங்கில் வேலை பார்க்கிறார்”
“அப்ப..இனி நம்ம ஜானகி யு எஸ் பறந்துடுவா?”
“கொழந்தே..எங்கே இருந்தாலும் சந்தோஷமா இருக்கட்டும்.நல்ல வரனா அமைய வேண்டும் என்று நான் கோயில் கோயிலாக போன முகூர்த்தம் கடவுள் கண்ணை திறந்துட்டார்.”
“அப்ப அடுத்த முகூர்த்தத்திலே கல்யாணம்..ஜானகி கொடுத்து வச்சவதான்.”
அலமேலு மட்டுமல்ல கேட்பவர் அனைவருக்கும் ஆச்சரியமாக விழி விரித்ததென்னவோ உண்மைதான்.
முகூர்த்த மேடையில் புகை மண்டலத்துக்கிடையே முகம் களைப்புடன் ஆனாலும் களைப்புக்கிடையிலும் சந்தோஷம் தாண்டவமாட ஐயர் கூறிய மந்திரங்களை மெல்லிய குரலில் திரும்ப உச்சரித்துக்கொண்டிருந்தான்.
“ஜானகிக்கு வந்த லக்கை பாரேன்”
“பையனோட பர்சனாலிடிக்கும் ஜானகிக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.”
“எப்படி இவளை பண்ணிக்க சம்மதித்தான்”
”சிலருக்கு அழகு பெரிசா தெரியாது.அந்த ரகத்தை சேர்ந்தவனா இருப்பானாக்கும் பையன்.”
“ஐயோ நானெல்லாம் என் பையனாக இருந்தால் இப்படி பொருத்தமில்லாத பெண்ணை எல்லாம் கட்டி வைக்க மாட்டேன்.”
“சரி சரி இப்ப என்ன ஆகிப்போச்சு.மனப்பொருத்தம் தான் முக்கியம்.எப்படியோ அமோகமா வாழட்டும் என்று வாழ்த்துறதை விட்டு விட்டு இதென்ன பேச்சு”இடையில் வந்த ஒரு மடிசார் மாமியின் குரலுக்கு அடிபணிந்து அந்த இடத்தில் பேச்சு நின்றாலும் ஆங்காங்கே இப்படி பேச்சுக்கள் அரங்கேறிய வண்ணம் இருந்ததென்னவோ உண்மை.
ஆயிற்று
மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையம்.
பெரிய டிராலி பேக்குகள் சகிதம் பயணத்துக்கு தயாராக ஜானகி நின்றிருந்தாள்.விசாலம் கலங்கிய கண்களுடன்.
அலமேலுதான் தன் நாத்தனார் பெண்ணிடம் மெதுவான குரலில் அட்வைஸ் மழை பொழிந்து கொண்டிருந்தாள்.
“என்னவோடி ஜானகி,இப்படி வரன் உனக்கு அமையும் என்று நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை.உன் அம்மாகிட்டே உனக்கு திருஷ்டி சுற்றி போடுன்னேன்.போட்டாளா?”
“எதுக்கு அத்தே திருஷ்டி..”
“ஜானகிக்கு வந்த அதிர்ஷ்டத்தை பாருன்னு விழி விரிக்காதவ இல்லை.அத்தனை பேரும் மூக்கில் விரல் வைக்காத குறைதான்”
“ஏன் அத்தே..நீங்கள் எல்லோரும் நான் ரொம்ப அதிர்ஷ்ட காரின்னா நினைச்சுட்டு இருக்கீங்க”
“பின்னே”ஒரு வினாடி மவுனமாக இருந்த ஜானகி பெருமூச்சு விட்டதில் கண்கள் கலங்கியது.
ஏண்டி ஏன் கண்ணெல்லாம் கலங்குது சந்தோஷமாகத்தானே இருக்கே.மாப்பிள்ளை உன்னை நல்லா வச்சிருக்காருதானே”
“அவரு நல்லாத்தான் வச்சி இருக்காரு அத்தே.ஆனால் நீங்கள் எல்லாம் சொல்லுறாப்போல் நான் கொடுத்து வச்சவள் இல்லை”
“என்னடி இப்படி புறப்படும்பொழுது குண்டை தூக்கிப்போடுறே?”
“இல்லே அத்தே.அவரு தங்கமான மனுஷர்தான்.என்னை தங்கமாய் தாங்கறார்தான்.ஆனால் இத்தனைக்கும் நான் தகுதிதானா? அவருக்கு பொருத்தம் இல்லாத அழகில் இருக்கேனே
நாலு பேர் நக்கலா பேசும் பொழுது கூனி குறுகி போய்டுறேனே.அவர் பக்கத்திலே நிக்கறச்சே வர்ற தாழ்வு மனப்பான்மையை கட்டுப்படுத்த முடியலே அத்தே.உண்மையில் நீங்கள்ளாம் நினைக்கறாப்போல் நான் அதிர்ஷ்ட காரி இல்லேத்தே.”
அலமேலு வாயடைத்து நின்றாள்.
இவள் புதியவள் இதழுக்கு இனிய நன்றிகள்
Tweet |