October 31, 2009

இல்லத்தரசனின் ஓசைகள்



***
என்னங்க..இன்னிக்கு வீட்டைக்கிளீன் பண்ற வேலை இருக்கு.ஹெல்ப் பண்ண முடியுமா?

அட
*****
என்னங்க..இந்த மாதம் கரண்ட் பில் எட்டுநூற்று சொச்சம்தான் வந்திருக்குங்க.

அடடா
**********
இன்னிக்கு மட்டன் பிரியாணியும்,சிக்கன்பிரையும்,தாளிச்சாவும் தான் லன்ச் .கூடவே ரஸமலாயும் பண்ணி இருக்கேன்.வாங்க சாப்பிடலாம்.

அடடடடடா
************
என்னங்க உங்கள் தங்கச்சி வீட்டுக்கு போகலாமா?போகும் பொழுது ரெண்டு கிலோ கிருஷ்ணா ஸ்வீட் வாங்கிட்டு போலாங்க!

அட்றா சக்க
*****************
இந்த மாதம் நான் ரெண்டாயிரம் ரூபாய் வீட்டு செலவில் இருந்து மிச்சம் பிடிச்சுட்டேன்.சந்தோஷம் தானே?

அவ்வ்வ்வ்வ்வ்..
**********************
நேத்திக்கு பக்கத்து வீட்டு பொண்ணு கூட ஜாய் ஆலுகாஸ் போனேன்.வைர நகைக்கு 10பெர்ஸண்ட் ஆஃபர் போட்டு இருக்கான்.போலாமாங்க..?

October 30, 2009

ஆலிவ் ரைலி




நமது சொந்த கற்பனையில் பொங்கும் உணர்வுகளை உலகமே படித்து பாராட்டினால் எப்படி இருக்கும்?நம்மை சுற்றி ரசிகபட்டாளமே இருக்கின்றது என்றால் எப்படி இருக்கும்?தட்டச்சு செய்து முடித்த மறுவினாடியே பிரசுரமாகி,உலகில் எந்த மூலையில் இருப்பவர்களையும் சென்றடையும் என்றால் எப்படி இருக்கும்?அப்படி ஒரு பரவசத்தைதருவதுதான் பிளாக்,அதாவது வலைப்பூ.இணையத்தில் கோடிக்கணக்கான அறைகளைக்கட்டி,இது உனக்கே உனக்குத்தான்.எத்தனை வேண்டுமானாலும் எடுத்துக்கோ.எப்படி வேண்டுமானாலும் அலங்கரித்துக்கொள்,இஷ்டம் போல் கிறுக்கிக்கொள் என்று இணையம் ந்ம் கைகளில் அள்ளிதந்து இருக்கின்றது இந்த பிளாக் என்ற அட்சயபாத்திரத்தை.இளைஞர்கள் மத்தியில் மட்டுமல்ல ,சிறுவர்கள்,நடுத்தர வயதினர்,தாத்தா,பாட்டி மார்கள் அனைவர் மத்தியிலும் பிரபலம்.

இந்த வலைப்பூவில் ஆஸ்திரேலியா நாட்டினை சேர்ந்த ஆலிவ் ரைலி என்பவர்தான் உலகத்திலேயே அதிக வயதான பிளாக்கர்.இரண்டு உலகபோர்களையும்,அதன் விளைவுகளையும் நேரில் பார்த்த முதியவர்.

சுமார் ஒன்றரை வருடத்திற்கு முன் தான் வலைப்பூவில் எழுத ஆரம்பித்தார்.சட்டென உலகமெங்கும் இவரின் வலைப்பூவை மேய்வதற்கு எக்கசக்க ரசிகபட்டாளம் குவிந்தனர்.காரணம் அவரது நூற்றாண்டு கால அனுபவங்களதான்..அந்தக்கால வாழ்க்கை முறைகளையும்,இந்தக்கால வாழ்க்கை முறைகளையும் ஒப்பிட்டு ஆலிவ் பாட்டி சுவைபட எழுதி இருப்பது படிப்பவரை கட்டிப்போட்டது.

"எங்கள் காலத்தில் துணிதுவைப்பதென்றால் காலையில் சீக்கிரமே எழுந்து விறகு பொறுக்க வேண்டும்.துணிகளை துவைப்பதற்காக வென்னீர் போடுவதற்காக செம்பினால் உள்ள அடுப்பு இருக்கும்.சின்ன விஷயங்களுக்குக்கு கூட நிறைய உழைப்பு தேவைப்பட்ட காலம்.அந்த கடின உழைப்பும் ஜாலியாகவே இருக்கும்.ஆனால் இப்போதோ ஒரு பட்டனை அழுத்தினால் மெஷினே துணிகளை துவைத்து,உலர்த்தியும் கொடுத்து விடுகின்றது.இன்னும் கொஞ்ச காலத்தில் ஆடைகளை நமக்கு மாட்டி விட மெஷின் வந்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை."இப்படி ருசி பட,காமடியாக இருக்கும் ஆலிவ் பாட்டியின் எழுத்து நடை.

இளம் வயதிலேயே கணவரை இழந்துவிட்ட ஆலிவ்,சமையல் வேலை,பாரில் சப்ளையர் வேலைபார்த்து தன் மூன்று பிள்ளைகளையும் வளர்த்திருக்கின்றார்..அந்த கவலை படிந்த நாட்களைக்கூட சுவைபட தனகே உரிய நகைசுவை உணர்வோடு பிளாக்கில் பதிந்து இருக்கின்றார்.அதுவே பாட்டியின் வெற்றிக்கு பிளஸ் பாயிண்ட்.

சமீபத்தில் உடல் நலக்குறைவால் மருத்துவ மனையில் அனுமதிக்கபட்ட ஆலிவ் ஒரு நாள் இயற்கை அடைந்து விட்டார்.ஆலிவின் வாசகர்களுக்கு அவரின் மறைவு பேரிழப்பாக எண்ணி வருந்துகின்றனர்.

ஆலிவை அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் த்ங்கி இருந்த ஒருவர் இப்படி சொல்லுகின்றார்.
"மரணப்பொழுதுவரை 'ஆலிவ் ரைலி' இந்த மருத்துவமனையை கலகலப்பாக வைத்து இருந்தார்."

.

கவித..கவித..


தூர வானில்
பட்டாசாக ஜொலிக்கின்றது வானம்
"ம்மா" என்று பயத்தில் அழுகிறது மழலை
இடி முழக்கமோ டமாரமாக செவிகளில்
முட்டி முழங்குகிறது

வெளியில் விருட்சத்தில்
பறவை யினங்கள்
இறகுகளை படபடக்கும் ஓசை
பார்க்கயில் பரிதாபம்.
அதிகம் தண்ணிர் பட்டால்
நட்டு வைத்த ரோஜா செடி அழுகிடுமோ என்ன செய்ய?
வினா எழுப்புது மனம்

சிலீர் என்று சாரல் வீசும் சன்னல்களை
சாற்றும் ஓசை
இயந்திர பொருட்கள் பழுதடையுமோ
என்ற பதைபதைப்பில்
போர்கால நடவடிக்கையாக
பிள்க் பாயிண்ட்டுகளை பிடுங்கும்
அவசரகோலம்

உலர வைத்த சீருடை உலரா விட்டால்..?
எங்ங்னம் செல்வான்
என் பிள்ளை பள்ளி?
மனதில் மிளிர்கிறது வினா.

ஓடியாடி விளையாடும் தொட்டில் மீனுக்கும்
குளிரெடுக்கின்றதோ?
இன்று மீன்களின் குத்தாட்டம் சற்று அதிகமே.

தரையில் கால் பட்டால் தாங்காது
என்றெண்ணி தயக்கப்பட்டு நடக்காமல்
காலுறை தேடும் கண்கள்.

குளிருக்கு இதமாக சுக்கு காப்பி
கேட்கிறது நடுங்கும் வாய்
நல்ல மழை நல்ல மழை
இவ்வருடம் பஞ்சமில்லை

குளிர் போக்க மப்ளரும்,கையுறையும் காலுறையும்
சொகுசாக போட்டுக்கொண்டு
கனத்த போர்வையை தலை வரை இழுத்துக்கொண்டு
போர்த்திப்படுக்கையில்
நெஞ்சை நெருடுது கேள்வி
மைய்ய வாடியில் துயில் கொண்டிருக்கும்
என் இனிய வாப்பா இப்போதென்ன செய்வார்?



October 22, 2009

இப்படியும் சில மனிதர்கள்

நோக்கியா ஈ ஸிரீஸ் மொபைல்.வாங்கி சில வாரங்களே ஆனது.திடுமென வீட்டிலேயே வைத்து தொலைந்து போனால் எப்படி இருக்கும்?வீடு முழுக்க அமளி துமளிப்பட்டது.அந்த நம்பருக்கு போன் செய்தால் ரிங் போய்க்கொண்டே உள்ளது.பதில் இல்லை.ரிங் போகிறதே வீட்டில் எங்காவது இருக்கும் என்று மொபைல் நிறுவனத்திற்கு நம்பரை செயல் இழக்க செய்யாமல் இருந்தேன்.

தொடர்ந்து தொலைந்த நம்பருக்கு முயற்சி செய்வதும்,தேடுதல் வேட்டையும் தொடர்ந்தது. நாண்கு நாள் ஓடி விட்டது.இதற்கு மேல் கிடைக்காது என்று தீர்மானம் செய்து ஐம்பது ரூபாய் மொபைல் நிறுவனத்தில் கொடுத்து புது சிம் கார்ட் வாங்கினேன்.மொபைலை தொலைக்கும் பொழுது எவ்வளவு அமௌண்ட் இருந்ததோ அதே அமவுண்ட் சற்றும் குறையாமல் இருந்தது.

இது நடந்து ஒருவாரம் இருக்கும்.லேண்ட் லைன் அழைத்து எடுத்தேன்.
"நான் பாலு பேசறேன்"
"எந்த பாலு?"
"பழைய பேப்பர் விற்கும் பாலு"
"நீ யார் என்று எனக்கு தெரியாது.எதற்கு போன் பண்றே?
"மேடம்,சமீபமா உங்கள் மொபைல் ஏதும் தொலைந்ததா?"
"அட ஆமாப்பா.என்ன விஷயம்"
"அந்த மொபைல் இப்ப என் கிட்டேதான் இருக்கு?"
அடடா,தம்பி நீ எங்கே இருக்கே.இடத்தை சொல்லு.வந்து கலெக்ட் பண்ணிக்கறேன்"
"முதலில் உங்க மொபைல் நம்பரை சொல்லுங்க"
சொன்னது
"கரெக்ட் தான்.எவ்வள்வு பேலன்ஸ் இருந்தது ஞாபகம் இருக்கா?"
அதையும் சொன்னதும்
"சரியாகத்தான் சொல்லுகிறீர்கள் .அட்ரஸ் தாருங்கள்.நானே கொண்டுவந்து தர்ரேன்"
நான் அட்ரஸ்,வீடு இருக்கும் லொகேஷன் சொன்னதும்
"அட..நம்ம பாய் வீட்டம்மாவா?இதோ வந்துடுறேன்மா"
போனை வைத்தவன் அடுத்த சில மணி நேரங்களில் மொபைலும் கையுமாக வந்து விட்டான்.
என்க்கு காணாமல் போன மொபைல் கிடைத்து விட்டதே என்று ஒரே சந்தோஷம்.
பேப்பரை கலெக்ட் செய்து அவன் இடத்திற்கு கொண்டு சென்று தரம் வாரியாக பிரிக்கும் பொழுது இந்த மொபைல் கிடைத்ததாம்.
நான் என் லேண்ட் லைனில் இருந்து அடிக்கடி போன் பண்ணியதும் அந்த நம்பருக்கு டயல் செய்து என்னை கண்டு பிடித்து இருக்கிறான்.
நான் மகா சந்தோஷத்தில் ஒருதொகையை கொடுத்தும் அவன் வாங்கவே இல்லை.
"இவ்வளவு நாள் கழித்து மொபைல் என் கைக்கு கிடைத்ததே.முதலிலேயே கிடைத்து இருந்தால் அப்பவே கொண்டு வந்து இருப்பேனே.உங்கள் டென்ஷனும் குறைந்து இருக்குமே"
என்று சொல்லி விட்டு சென்றவனை வியப்புடன் பார்த்தேன்.

இப்படியும் சில மனிதர்கள்

October 18, 2009

வெளி நாட்டு அலப்பரை


வெளிநாட்டு அலப்பரை

என்ன செய்வாங்க.. நம்மாளுங்க வெளிநாடுகளுக்கு போயிட்டு வந்தா? அவங்க பண்ற அலப்பரைகளை பத்திதான் ஆராய்ச்சி பண்ணி கீழ எழுதியிருக்கேன். யாரை வைச்சுடா.. இதையெல்லாம் கண்டுபுடிச்சேன்னு நீங்க கேட்டா.. "துபாயில் இருந்து குசும்பன்", "அமெரிக்காவில் இருந்து டேனியல்", "சிங்கபூரில் இருந்து பித்தன்" ன்னு இவங்களை வச்சிதான் கண்டுபுடிச்சேன்னு சொல்ல மாட்டனனனனே!!

இது ஒரு சீரியஸ் பதிவு! (இப்படி சொன்னாதான் சிரிப்பீங்கன்னு தெரியும்...)

8

கையில மினரல் வாட்டரை வச்சிகிட்டே திரியிவாங்க... (அவங்க சுகாதாரமா இருக்காங்களளளாம்!)

வெளி நாட்டிலிருந்து இந்தியாவுக்கு லக்கேஜ் கொண்டு வந்த பேக்கில் உள்ள ஸ்டிக்கரை 4 மாசம் ஆனாலும் கிழிக்க மாட்டாங்க.. (10 லட்ச ரூபாய் லாட்டரி சீட்டு போல, பத்தரமா வச்சிகிட்டு என்ன பண்றாங்களோ?)

கேபின் லக்கேஜ் பேக்கை, நம்ம ஊரு ரோட்டுல உருட்டிகிட்டு அல்லது தள்ளிகிட்டு போறதுக்கு முயற்சி செய்வாங்க.. (நம்ம ஊரு ரோட்ல கார் ஓட்டுரதே, சர்கஸ் சாகசம் மாதிரி.. இதுல இதுவேறையா?)

8 குளிக்கவே தேவையில்லாத மாதிரி சென்ட்டு, டியோட்ரன்ட், பாடி ஸ்பிரே அடிச்சிகிட்டு அலையறது (பக்கத்துல நின்னு பேசறவங்களுக்கே.. மறுநாள்தான் அந்த வாசனையே போகும்னா பாத்துகோங்க!)

8 கையேந்தி பவன்ல கூட கிரிடிட் கார்டை எடுத்து நீட்டுவாங்க... (மப்புல இல்ல, மேகம் தெளிவா இருக்கும்போதே!)

8 சுத்தத்தை பத்தி அடிக்கடி மறக்காம கருப்பு எம்.ஜி.ஆர் போல பேசிகிட்டே இருப்பாங்க. ரோட்டு கடையில டீ சாப்டுட்டு, கப்பை கரைக்டா குப்பதொட்டியிலதான் போடுவேன்னு அடம் பிடிப்பாங்க! (வீட்டுல சாப்பிட்ட தட்டை எடுங்கப்பா முதல்ல..)

8 எதைவாங்கினாலும் திர்கம்ஸ்ல யோசிச்சி "ஹேய்.. சாப்பாடு 2 திர்கம்ஸ்தான்!, வாவ்.. மட்டன் கிலோ 10 திர்கம்ஸ்தான்"னு ராமானுஜர் ரேஞ்சிக்கு கணக்கு பண்ணுவாங்க.. (ஜெர்ரி கிங் கூட, புக் எழுதும்போது இப்டி யோசிச்சிருக்க மாட்டாரு!)

8 தும்மலோ.. கொட்டாவியோ.. வந்தா முடிச்சிட்டு "எக்ஸ்சூஸ்மீ" ன்னு சொல்றது... (அப்படி சொல்லும்போது நாம அவங்கள வடிவேலு ரேஞ்சிலதான் பார்போம்ங்கறது வேற விசயம்!!)

8 "செளக்கியமா"ன்னு கேக்காம.. "ஹாய்"ன்னு சொல்றது, "லட்ச"த்துக்கு பதிலா.. "மில்லியன்ல" சொல்றது, தயிருக்கு பதிலா.. "யோகர்டு"ன்னு சொல்றது, "ஹய்வே"க்கு பதிலா "ஃப்ரீவே"ன்னு சொல்றதுன்னு பீட்டருக்கே பீஸா குடுக்குற ரேஞ்சிக்கு பிரிப்பாய்ங்க! (இந்த பாயின்ட் பெங்களூர் பீட்டர்களுக்கும் பொருந்தும்!)

8 சாப்பாட்டுல காரம், மசாலா அயிட்டங்களை தவிர்ப்பது. சாப்பிடறப்பவோ.. இல்லனா, சாப்ட்டு முடிச்ச அப்புறமோ.. கண்டிப்பா "கோக்கோ (அ) பெப்சியோ" இருக்கனுமுன்னு அடம்புடிக்கிறது! (சுகாதாரம்..சுகாதாரம்ன்னு சொல்லிட்டு, டாய்லெட் ஆசிட்டை குடிங்கடே!)

8 சாதா ஹோட்டலுக்கு சாப்பிட போயிட்டு.. "தாபா இருக்கா, ஃபப்பே சிஸ்டம் இல்லியா, குபாக்/குணாஃபா உண்டா" ன்னு சப்ளையருக்கு கொலவெறியை கெளப்புறது! (வீட்ல இதெல்லாம் கேட்டா, சுடுதண்ணியை சுட வைப்பாங்கன்னு தெரிஞ்சிதான்.. ஹோட்டல்ல இந்த அலப்பரை!)

8 வந்த ஏர்லைன்ஸ்ச பத்தி... அந்த ஃபிளைட்ல சீட்டு சரியில்ல, ஜன்னல் பக்கதுல உக்காரமுடியல, பணிபெண்னுக்கு முக்கு சப்பை, கஞ்சப்பசங்க.. சாப்பிட ஒன்னும் குடுக்கல, ன்னு வந்து சேர்ந்துட்டு 2 மாசமா கொறை சொல்லிகிட்டு சுத்துறது.. (யப்பா.. சாமீகளா! பணம் டிராவல் பண்றதுக்கு மட்டும்தான், ஃபிளைடையே உங்க பேருக்கு எழுதி வைக்கல!)

8 கடைசியா ஆனா நங்குன்னு ஒன்னு...எதை சொல்ல வந்தாலும்.. "இப்படிதான் துபாய்ல...", "இப்படிதான் நான் சிங்கபூர்ல இருந்தப்ப... " ன்னு ஆரம்பிப்பாங்க!!

நன்றி தமிழ்குடும்பம்.காம்

October 17, 2009

நான் ரசித்தகேரக்டர்கள்

அன்புள்ள அல்லி:
ராணி வார பத்திரிகையில் சிறிய உருவமும்,பெரிய தலையும்.கையில் எழுத்தாணியுடன் அந்த நாள் அன்புள்ள அல்லி.செவ்வாய்க்கிழமை வந்தாலே என் எட்டாவது வயதிலேயே ராணி இதழ் வாங்க கடைக்கு ஓடும் அளவிற்கு என்னை கவர்ந்த அல்லி.

ஆண்டிப்பண்டாரம்:
மொட்டைத்தலையுடன்,ஒவ்வொருநாளும் அழகாக வரையப்பட்டு, சினிமா பாடல்களைப்பாடும் பண்டாரம்.தினதந்தியை பிரித்த உடனேயே இன்னிக்கு ஆண்டிப்பண்டாரம் என்ன பாடுகின்றார் என்று ஆர்வத்தைத்தூண்டும்.இன்றும் ஆண்டியார் ஆக பாடிக்கொண்டுதான் இருக்கின்றார்.

அந்துமணி:
தினமலர் ஞாயிறு மலரில் ஒல்லியான நிஜ உருவத்தில்,தலையை மட்டும் கார்ட்டூனாக்கி அவர் எழுதும் கட்டுரைகள் நிறையவே சிந்திக்க வைக்கும்.

பராசக்தி:கஷ்ட்டமான கேள்விகளுக்கும் பளிச்பளிச் என்று பதில் கொடுக்கும் குங்குமம் பராசக்தி

ரீட்டா:
அவள் விகடனில் டூவீலரில் சென்னையையே சுற்றி சுற்றி சின்னத்திரை செய்திகளை அள்ளித்தரும் ரீட்டா எப்படி இருப்பார்?

ஐடியா அலமேலு:
தோற்றமோ படு முதுமை.அந்த முதிர்ச்சியுடன் அவர் அள்ளிதெளிக்கும் கருத்துக்கள் அபாரம்.தந்தி ஞாயிறுமலரில் வரும் பாட்டி வாழ்க!

அரசு:குமுதத்தில் பல ஆண்டுகளாக சிந்திக்க வைக்கும் பதிலகள் தன் முகம் காட்டாமல் அளித்துவரும் அரசுவின் விஷய ஞானத்திற்கு ஒரு ஜே.

சிந்துபாத்:
தினத்தந்தி கன்னித்தீவில் என் எட்டு வயதில் பார்த்த அதே சிந்துபாத்.ஐயோ..இந்த மனுஷருக்கு அலுப்பு சலிப்பே இருக்காதா?

ஜாலி வாலி:
விகடன் விளம்பரத்திற்கு வரும் குட்டிகுரங்கார்.டீவியில் வந்து வள வள வென்று பேசி விட்டு படிக்கலேன்னா கடிச்சுடுவேன் என்று நம்மை மிரட்டி சிரிக்கவைக்கும் குட்டி ஜாலி வாலி

October 3, 2009

பனி விழும் மலர் வனம்


பனி விழும் மலர் வனம்
**********************************
என் பையன் பிளஸ் டூ படிக்கும் பொழுதே ஜாயிண்ட் எண்டரன்ஸ் எக்ஸாம்,ஏ ஐ ஈ ஈ ஈ.பிட்ஸ்பிலானி,வி ஐ டி இன்னும் தனியார் பல்கலைக்கழங்களில் எல்லாம் எண்டரண்ஸ் எக்ஸாம் எழுத தயாராகி விட்டார்.பொது தேர்வு முடிந்ததும் வரிசையாக அத்தனைஎண்ட்ரண்ஸ் எக்ஸாம்கள் அனைத்தையும் எழுதினார். பொதுதேர்வு முடிவு வெளியாகியது.

தேர்வு முடிவுகளை காலை 10 மணிக்கு இணையத்தில் பார்த்து விட்டு 11 மணிக்கெல்லாம் பிரபலமான ஒரு கல்லூரி வளாகத்தில் நின்றிருந்தேன்.அதில் இருந்து தொடர்ச்சியாக 20 நாட்களும் வேறு பணியில் எதுவும் நாட்டமில்லாமல் சிட்டியில் உள்ள அநேக கல்லூரிகளின் நீள,அகலத்தையும் அளப்பதுதான் தலையாய பணி என்பது போல் அப்பணியை செவ்வனே செய்தேன்.

கல்லூரிகளின் தரம்,எத்தனாவது இடத்தில் உள்ளது,கேம்பஸ் எப்படி,லேப் வசதி எப்படி.,மெஸ் வசதி,பஸ் வசதி,டீச்சிங் எப்படி இப்படி அக்கு வேறு ஆணி வேறாக ஆராய்ந்து இறுதியில் இந்த மலர் வனத்தை தேர்ந்தெடுத்தேன்.

இந்த கல்லூரியில் சேர்த்துள்ளேன் மகனை என்று தெரிந்து ஒருவர் "ஐயோ அந்த காலேஜா?ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆச்சே"என்றுபயமுறுத்தினார்.இன்னொருவரோ "என் நாத்தனார் பையன் பாதியிலேயே ஓடி வந்து விட்டான்"என்று அதிர்ச்சியைக்கொடுத்தார்.கலக்கத்தோடு பொழுதை ஓட்டினேன்.என் மகனோ "பயப்படாதீர்கள்மா.நான் சமாளித்துக் கொள்வேன்.அங்கு படித்து எத்தனை ஆயிரம் பேர் வெளியே வந்து இருக்கின்றார்கள்"என்று எனக்கு தைரியம் ஊட்டினார்.

கல்லூரி திறக்கும் நாளும் வந்தது.என் மகன் என்னவோ சாதாரணமாகத்தான் இருந்தார்.நான் தான் இரவு முழுதும் தூங்கவே இல்லை.பெற்றோர்களும் கண்டிப்பாக வந்தே ஆக வேண்டும் என்பதால ஐந்து மணிக்கே அலாரம் வைத்து எழுந்து குளித்து தொழுது,பிரார்த்தித்து,டென்ஷன் ஆகி..ஒரு வழியாக கல்லூரி சென்று விட்டோம்.அதிகாலை காற்று சில்லென முகத்தில் வீச தலையை கார் ஜன்னலில் வைத்தபடி,"லாயிலாஹ இல்லல்லாஹ் சுப்ஹானக்க இன்னி குந்தும் மினல் ழாலிமீன்" என்று ஓதியவளாக கல்லூரியினுள் நுழைந்தோம்.

கல்லூரியின் சேர்மன் அழகான தன் உரையை கம்பீரமாக ஆரம்பித்தார்.எங்களை நம்பி வந்த உங்கள் அனைவரின் நம்பிக்கைக்கும் பாத்திரமாக நாங்கள் கண்டிப்பாக செயல் படுவோம்.என்று பேச ஆரம்பிக்கையில் உண்ர்ச்சி பூர்வமாக பல தாய் மார்களின் கண்களும் கலங்கியதை என்னால் உணர முடிந்தது.மாணவர்களின் மனதில் பச்சக் என்று ஒட்டிக்கொள்ளும் விதமாக அவரின் நேரிய அறிவுறைகள் அனைவரையும் நெகிழ வைத்து.

ஒரு மாணவன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்,இப்படித்தான் நடந்து கொள்ளவேண்டும்,என்று பணிவையும் பண்பையும் அழகாகான் முறையில் தெளிவாக்கினார்.

நெகிழ்வான நெஞ்சங்களுடன் அந்த ஹாலை விட்டு அனைத்து பெற்றோர்களும் வெளியேறியபொழுது அத்தனை நெஞ்சங்களின் வெளிப்பாடும் புன்னகை என்ற பூவால் மலர்ந்திருந்தது.சரியான ஒரு கலாசாலையை தேர்ந்தெடுத்து மகனை அனுப்பி விட்டோம் என்ற நிறைவு அனைத்து பெற்றோர் முகத்திலும் தெரிந்தது.கலங்கிய மனதுடன் கல்லூரி வளாகத்தினுள் நுழைந்த நாங்கள்,நிறைந்த மனதுடன் திரும்பி வந்தோம்.

ஜீன்ஸ் கூடாது,லெதர் சூ தவிர எதுவும் அணியக்கூடாது,சர்ட்டை தவிர வேற் எதும் அணியக்கூடாது.அதிலும் பிளேக்&பிளேக் உடைகளுக்கு தடா,செல் போன்,ஐபாட்,கேமரா, சிடி,இரண்டு பாக்கட் வைத்த சட்டைகளுக்கு தடா, சுத்தமாக சவரம் செய்த முகத்துடன் வர வேண்டும்,என்று ஒவ்வொன்றுக்கும் நுணுக்கமான கட்டுப்பாடுகள்.

கேண்டீன் கலாட்டாக்கள்,கும்பல்,கும்பலாக நின்று காலாய்ப்பதுகல்லூரியின் முகப்பில் கூட்டம் ,கூட்டமாக நின்று கும்மாளமிடுவது,ராக்கிங்,கேலி இப்படி எதனையுமே நினைத்துப்பார்க்கவே முடியாது.இந்த கட்டுக்கோப்பல் ஒவ்வொரு மாணவ,மாணவியரும் செவ்வன புடம் போடப்படுகின்றனர்.கல்லூரி நிர்வாகத்தினரால் செம்மையாக பின்பற்றப்படும் இந்த கட்டுக்கோப்பான கட்டுப்பாடுகள் அனைத்து மாணவ மாணவியர்களையும் வைரமாக ஜொலிக்க செய்யும்.இங்கு பயிலும் மாணாக்கர்களின் பெற்றோர்களும் நிம்மதியாக,பிள்ளையை நேரிய வழியில் செல்லும் பாதையை காட்டி விட்டோம் என்ற மன நிறைவு பெறுவது திண்ணம்

அதிகாலை காலேஜ் சென்றாலும் பிள்ளை பட்டினியாக செல்கின்றானே என்று கவலைப்படத்தேவை இல்லை.காலை டிபனுடன் காஃபி,உச்சி வேளையில் ஸ்னாக்ஸுடன் காஃபி,மதியம் பலமான லஞ்ச்,வீடு திரும்பும் பொழுது சூடான காஃபி இப்படி நிதமும் விருந்தோம்பல்..மாணவர்களை படிப்பதற்கு மிகவுமே உற்சாகப்படுத்துகின்றது.

வகுப்பறையின் வெளியில் நின்று பார்த்தீர்களானால் மணவர்களின் சப்தம் என்பதையே கேட்க முடியாது.இது வகுப்பறையா,தியானக்கூடமா என்று ஆச்சர்யம் ஏற்ப்டுகின்றது.கல்லூரி வளாகத்தினுள் நுழைந்தாலே பசுமையும்,சுத்தமும்,அமைதியும் அங்கே இருந்து அக்ல யாருக்குமே மனம் வராது.

படிப்பில் பின் தங்கிய மாணவர்களுக்கு வகுப்பு முடிந்தது ஸ்பெஷல் கிளாஸ்,அவர்களுக்கு தனியாக பஸ் வசதி,ஒரு மாணவன் அவன் இறங்கும் நிறுத்தத்தை விட்டு முந்திய நிறுத்தத்தில் இறங்கினாலே பஸ் ஓட்டுனார் அனுமதிப்பதில்லை.அந்தளவு பஸ் ஓட்டுனர்களுக்கு டிரைனிங் கொடுத்துள்ளார்கள்.ஆறு மணிக்கு நிறுதததுக்கு வரும் பஸ் என்றால் சரியாக ஆறு மணிக்கு வந்து விடுகின்றது.இந்த பங்க்சுவாலிட்டிக்கு சிட்டி டிராஃபிக்கும் ஒத்துழைப்பு கொடுக்கின்றதா?என வியக்கதோன்றுகின்றது.

ஒரு மாணவன் அன்று கல்லூரி வரவில்லையானால் எவரெல்லாம் வரவில்லையோ அத்தனை மாணவர்களின் வீடுகளுக்கு தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்து விட்டுத்தான் டீச்சர் வீடு திரும்ப வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம்.

கட்டுப்பாடுகளும் ,கட்டுக்கோப்புகளும் எத்தனை இனிமையானவை என்று புரிந்து கொண்ட பொழுது மனமெலாம் மகிழ்ச்சியாக உள்ளது.ஒரு ஞாயிறு வந்தால் கூட எப்போதடா திங்கள் பிறக்கும் காலேஜ் போகலாம் என்று துடிக்கும் நிலைக்கு என் மகன் ஆட்படுத்தப்பட்டு விட்டார்.

நேற்று ஒருவர் போன் பேசும் பொழுது மகனை எந்த கல்லூரியில் சேர்த்து இருக்கின்றீர்கள் என்றார்.பெயரை சொன்னதுமே "சபாஷ்,புடம் போட்டு திருப்பிக்கொடுத்து விடுவார்கள்.பட்டைத்தீட்டிய வைரமாக உங்கள் மகன் வருவார்"
என்று கூறியது என் மன ஓட்டத்தை பிரதிபலிப்பதாக இருந்தது.

இதே போல் ஸ்கூல் அமைந்து இருந்தால் எப்படி இருக்கும் என்று இப்போது யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.இதோ இன்னும் இரண்டு வருடத்தில் கல்லூரி செல்லப்பொகும் என் இரண்டாவது மகனையும் இதே கல்லூரிதான் என்று தீர்மானம் பண்ணி விட்டேன் மட்டுமல்லாம,ங்கா,ங்கா என்று கூறும் என் மகள் வயிற்றுப்பேரனைக்கூட இந்த கல்லூரியில்தான் சேர்க்கவேண்டும் என்ற நோக்கமு ம் ஏற்பட்டு விட்டது.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்
தன் மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்

அந்த நாள் விரைவில் வரும்,எனக்கு மட்டுமல்ல இந்த கலாசாலையில் பயிலும் எல்லா மாணாக்கர்களின் பெற்றோர்களுக்கும் என்றால் அது மிகை ஆகாது.