அல்ஸீமர்(Alzheimer’s disease)நினைவிழப்பு நோய்,முதியவர்களை தாக்கும் ஒரு கோரமான வியாதி எனலாம்.இந்நோய் எல்லா முதியவர்களையும் தாக்காது.ஞாபக சக்திதிறன் குறைந்த ஏனைய முதியவர்களுக்கு இந்த நோய் தாக்கி உள்ளது என்றும் கூறி விட இயலாது.
டிமென்ஷியா என்கிற நினைவிழப்பு நோய் ஏன் ஏற்படுகிறது என்பது தொடர்பாக இதுவரை ஆதாரப்பூர்வமான தகவல்கள் இல்லை. எனினும் டிமென்ஷியா உருவாவதற்கான பல காரணிகளில் அல்ஸீமர்(Alzheimer) என்று கூறப்படும் மூளை அழுகல் நோய் முக்கிய காரணம் என்று மருத்துவ உலகம் கூறுகிறது.
ஒரு பொருளைக்காட்டி அதன்பெயருக்கு முற்றிலும் மாறாக அந்த பொருளின் பெயரை சொல்லும் பொழுது மற்றவர் நீங்கள் சொல்வது தவறு என்று விளக்கினால் அதனை ஒத்துக்கொள்ளும் முதியவராயின் சரி.அதனை ஒத்துக்கொள்ளாமல் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதமாக நிற்கும் முதியவர்களை கிட்டத்தட்ட அந்த நோயின் தாக்கம் பீடித்துள்ளது என்பதினை அவரது செய்கைகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.நாளடைவில் இந்நோயாளர் நோயின் தாக்கத்திற்கு படிப்படியாக உள்ளாகுவார்.
நினைவாற்றல் சிந்திக்கும் ஆற்றலையும் ஒழுங்குபடுத்தும் மூளையின் பகுதியில், இந்நோயின் தாக்கம் ஆரம்பிக்கின்றது. பிறகு, மூளையின் பிற பகுதிகளுக்குப் பரவுகிறது.
நோயாளியின் உடலில் சக்தி குறைந்து கொண்டே போவது, மறதி, மனநிலையில் தடுமாற்றம், மெதுவான உடல் இயக்கம் ஆகியவை இருக்கும். குழப்பம் அடைதல், மற்றவர்களின் பேச்சு, புரிந்துகொள்ளும் தன்மையும் குறையும்.இந்நோயால் தாக்கப்பட்டவர்கள் சில தருணங்களில் வசிப்பிடம் மறந்து போய் தொலைந்து போகவும் வாய்ப்புண்டு.
சிலருக்கு பேசிக்கொண்டு இருக்கும் பொழுது என்ன பேசுகிறோம் என்பது மறந்து போய் திணறுவார்கள்.மூளை தன் கட்டுப்பாட்டை இழப்பதால் மனமும் உடலும் சோர்ந்து பதைபதைப்புடன் காணப்படுவார்கள்.பல ஆண்டுகளுக்கு முன்னுள்ள சம்பவங்கள் மட்டும் நினைவில் இருக்கும்.சமீபத்திய சம்பவங்கள் மறந்து போய் இருக்கும்.
மூளை மீதான இந்நோயின் தாக்குதல், உயிருக்கு உலை வைக்கக்கூடியது.எட்டு முதல் பத்து ஆண்டுகள் வரை, இந்நோய் நீடிக்கிறது. சிலர், வெகு விரைவில் மரணம் அடைவதுண்டு, சிலர் 20 ஆண்டு வரை உயிர் வாழ்வார்கள்.
நோயின் உச்சத்தில் இயற்கை உபாதைகளை கட்டுபடுத்த இயலாமலும்,உணவை விழுங்க இயலாமலும்,சரியான உணவு இல்லாமையால் அதனால் உடல் தெம்பு இல்லாமல் இறுதில் மரணத்தை தொடுகின்றார்கள்.
2020- ஆம்ஆண்டில் இந்தியாவில் மட்டுமே இந்நோயால் 37 லட்சம் முதியவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் அச்சுறுத்துகிறது.
ஒவ்வொரு செப்டெம்பர் 21 ஆம் தேதி உலக அல்ஸீமர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தை (pittsburgh university) சேர்ந்த நரம்பியல் ஆய்வாளர் (Neurology researcher) கிர்க் எரிக்சன் தன் ஆய்வில் வயதாக, வயதாக மூளையின் அளவு சுருங்குகிறது.இதனால், வயதானவர்களுக்கு நினைவு வைத்துக் கொள்ளும் திறனும் படிப்படியாக குறைகிறது. இதை தடுக்கும் வகையில் முதியவர்களுக்கு உடற்பயிற்சி, நடைபயிற்சி அளிப்பதால் அல்ஸீமர் என்ற மறதி நோய், டிமென்ஷியா என்ற மனநோய் ஆகியவை தடுக்கப்படுகின்றன என்று கூறுகிறார்.
1.முதுமையில் மூளை நல்ல நிலையில் இருப்பதற்கும், நினைவு திறன் பாதிக்காமல் இருப்பதற்கும், நடுத்தர வயதில் மேற்கொள்ளும் முறையான உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி பெருமளவில் உதவுகிறது. எனவே, உடல்நலம் காக்க எல்லா வயதினரும் முறையான உடற்பயிற்சி,நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
2. சிரிப்பு தான் உலகின் சிறந்த மருந்து என்பது நமக்குத் தெரிந்ததுதான். ஆனால் சமீபத்திய ஆய்வு ஒன்று, டிமென்ஷியா பாதிக்கப்பட்ட வயதானோருக்கு சிரிப்பு அருமருந்தாகப் பயன்படுவதாக அறிவித்துள்ளது.
3.வயதாகி விட்டால், இருட்டை தவிர்த்து, வெளிச்சம் உள்ள இடங்களில் இருக்க வேண்டும். சூரிய ஒளி உடலில் படும் வகையில் நடக்க வேண்டும்.இந்த முறையை பின் பற்றினால் வயதான காலத்தில் வரும் டிமென்ஷியா பாதிப்பு குறையும் வாய்ப்பு உண்டு என்று
நிபுணர்கள் கூறுகின்றனர்.
4.அநேக முதியவர்கள் இப்பொழுது தனிமை வாழ்க்கை வாழ்கின்றனர்.வீட்டிலேயே வசித்தாலும் தனி அறையில் தனிமைப்படுத்தபடுகின்றனர்.இந்நிலை மாறி இளையவர்கள் அனுசரணையாகவும்,அன்பாகவும் நான் இருக்கிறேன் உங்களுக்கு என்ற தைரியத்தை எப்பொழுதும் ஊட்டக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும்.
5.இந்நோய்க்கும் அலுமினியத்திற்கும் தொடர்பு உண்டு என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.அலுமினியப் பாத்திரத்தை தொடர்ந்து உபயோகப் படுத்தியதால்தான் இந்நோய் வந்தது என்பதை உறுதியாக கூற முடியாவிட்டாலும் அலுமினிய பாத்திரங்களின் உபயோகத்தினை முற்றிலுமாக தவிர்த்துக்கொள்ளப்படவேண்டும்.
6.அதீத சிந்தனையும் இநோய்க்கு காரணம் என்கின்றனர்.பிரபல எழுத்தாளர் நாவலாசிரியை கோமகளின் இந்நோய்க்கு காரணி அவர் அதிகம் அதிகமாக சிந்தித்ததுதான் என்கின்றார்கள்.
அமெரிக்கா முன்னாள் அதிபர் ரெனால்டு ரீகன்,குத்துச்சண்டை வீரர் முஹம்மது அலி,பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி ஜாக்குஸ் சிராக்,பிரித்தானிய முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர் காமன்வெல்த் ஊழல் வழக்கு சுரேஷ் கல்மாடி,எழுத்தாளர் கோமகள் போன்றோர் நினைவு இழப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போலியோ,அம்மை போன்ற நோய்கள் விரட்டப்பட்டது போல் இந்நோயும் உலகில் இருந்து விரட்டப்பட்டு அல்ஸீமர் இல்லாத உலகமாக திகழ வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பமும்.