நமது கடந்த காலத்தினை சற்று நினைவு கூர்வோம்.இதில் நாம் இழந்த இனிமைகள் எத்தனை?சந்தோஷக்கேடு எவ்வளவு?கஷ்டங்கள் எவ்வளவு?மனசஞ்சலம் எத்தனை?வேதனை எத்தனை?அதன் காரணிகளை சற்று யோசியுங்கள்.அநேகம் நாமாகவே இருப்போம்.அதேபோல் நமது செய்கையினால் பிற மனங்களை எவ்வளவு நோகடித்து இருக்கின்றோம்.பிறரது சின்ன சின்ன சந்தோஷங்களை சிதறடித்திருக்கின்றோம்.ரசனைகளை கொத்தி இருக்கின்றோம் என்று சற்று நேரம் ஆராயுங்கள் அமைதியாக.உண்மை புரிந்து நாணம் கொள்ளத்தோன்றும்.இப்படி எல்லாம் நடந்து சந்தோஷ தருணங்களை அநியாயமாக இழந்து விட்டோமே என்று மனம் உருகிவிடும்.
நம் வாழ்வில் நடந்த பற்பல நிகழ்வுகளை ஞாபகபடுத்திக்கொள்ளுங்கள்.கணவர் டூரில் இருந்து வரும் பொழுது வாங்கி வந்த காட்டன் சேலையினை பார்த்து விட்டு உதடு பிதுக்கி “உங்கள் செலக்ஷனோ செலக்ஷன்..ஏங்க மனுஷனுக்கு கொஞ்சமாவது ரசனை வேண்டாம்?”இப்படி வாய்களில் இருந்து வந்து விழும் வார்த்தைகளில் கணவரின் சிறிய எதிர்பார்ப்பு அப்படியே கசங்கிப்போய் இருக்கும்.
குடும்பத்துடன் ஒரு பிக்னிக் செல்கின்றோம்.மனதில் உள்ள ஏதோ ஒரு பிரச்சினையால் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டால் மொத்த குடும்பத்தின் சந்தோஷமும் தொலைந்து விடும்.வீட்டில் ஒரு விஷேஷ காரியம் நடக்கும் பொழுது ஒருவர் மட்டும் கோபத்தில் முறுக்கிகொண்டிருந்தால் மொத்த மகிழ்ச்சியும் காணாமல் போய்இருக்கும்.
மாமியார் ஆசை ஆசையாக கேட்ட கைகுத்தல் அரிசி சாப்பாட்டை ஒரு நாளாவது செய்து கொடுத்து இருகின்றோமா?வெளியில் போய் வரும் பொழுது குழந்தைகளுக்கு திண்பண்டங்களும்,பொம்மைகளும் வாங்கி வரும் பொழுது மாமியாருக்கென அவருக்கு பிடித்த லாலாகடை காராசேவ்வை பொட்டலம் கட்டி வாங்கி வந்து இருப்போமா?இப்பொழுது வாங்கிக்கொடுக்க மனம் பூரா ஆசை இருந்தாலும் இப்பொழுது வாங்கி சாப்பிட அவர் உயிரோடு இல்லையே?என்பதினை நினைத்துப்பார்த்தால் உங்கள் கண்களில் கண்ணீர் மளுக் என்று வரும்.வாழ்வில் வரும் நிகழ்வுகள் எது ஒன்றும் திரும்பி வரப்போவதில்லை.அந்த நிகழ்வுகளை நம் மகிழ்சிக்குறியதாகவும்,பிறரை மகிழ்சிக்குட்படுத்துவதாகவும் அமைத்தால் வாழ் நாள் பூராவும் அந்நிகழ்வுகள் நெஞ்சார்ந்த மகிழ்ச்சியுடன் மனதில் நிறைந்து நிற்கும்.
ஒருவர் நம்மை கோபப்படுத்தும் அளவுக்கு நடவடிக்கைகள் இருந்து நம்மை கோபப்படுத்தினால் திருப்பி அதனையே அவருக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட்டொழித்து விட்டு அன்று முழுக்க மனதில் குறு குறுப்புடன் உழன்று,நம் குடும்பத்தினரையும் நம் செய்கையால் உம்மணாமூஞ்சிகளாக்காமல் நமக்கு கோபமூட்டியவர் மீது உள்ள பலிவாங்கும் படலத்தை தவிர்த்து “பாவம் .என்ன கஷ்டமோ?வார்த்தைகளால் கொட்டி விட்டாள்.அவள் புத்தி அவ்வளவுதான்.போனால் போகின்றது”என்று விட்டுக்கொடுத்தோமானால் கிடைப்பது மன நிறைவு.உங்கள் அமைதி பார்த்து கோபப்பட்டவர் உங்களிடம் மன்னிப்பையும் கேட்டு உங்களை சந்தோஷப்படுத்துவார்.
வாழ்க்கை என்பதை நிறைவாக,சந்தோஷமாக,மகிழ்வாக ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பது அனைத்து மனிதர்களின் ஆசை.அதனை இனிமையான தருணங்களாக வைத்துக்கொள்வது நம் கையில்தான் உள்ளது.குடும்பத்தில் ஒரு பிரச்சினை தோன்றி விட்டால் நல்ல முறையில் பேசி தீர்த்து சிக்கல்களை களைந்து,விட்டுக்கொடுத்து சுமுகமாக்க முன் வரவேண்டுமே தவிர கொடூர வார்த்தைகள் பகிர்தல்,மனக்கஷ்டங்கள்,தான் என்ற ஈகோ அனைத்தையும் விட்டொழித்து இனிமையை தக்க வைத்துக்கொள்வதுதான் சிறப்பு.இதை விடுத்து விட்டுக்கொடுக்காமையும்,பிடிவாதமும்,அகம்பாவமும் கஷ்டங்களையும்,நஷ்டங்களையும் பின் விளைவாகத்தரும்.
நடந்தது நடந்ததாக இருக்கட்டும்.இனி வரும் நாளெல்லாம் நாமும் இனிமையாக இருந்து,நம்மை சுற்றி இருப்பவர்களையும் இனிமை நிறைந்தவர்களாக மாற்றி வாழ்வின் நலவுகளை நம் செயல்களால் இனியவைகளாக அமைத்துக்கொள்வோம்.
Tweet |