
வெளிநாடு,வெளியூர்களின் வசிக்கும் அநேக கீழை வாசிகள் சீஸனுக்கு வேடந்தாங்கல் நோக்கி படை எடுக்கும் பறவைககள் போல் படை எடுப்பார்கள்.ஊரே களைகட்டி விடும்.வருடம் முழுக்க இருண்டிருந்த சாலைகள் வெளிச்சத்தில் மின்னும்.பூட்டப்பட்ட வாசல் கதவுகள் திறந்து ஜெகஜோதியாக இருக்கும்.திசைக்கொன்றாக வாழும் உறவினர்கள் இப்பொழுதான் ஒருவரை ஒருவர் சந்தித்து அன்பை பகிர்ந்து கொள்வார்கள்.
எல்லோரும் ஒன்று கூடும் இம்மாதத்தில்தான் வீட்டு விஷேஷங்களை நடத்துவார்கள்.ஒரே நாளில் ஏழெட்டு திருமணங்களில் கலந்து கொள்ளும் சூழ்நிலையும் வரும்.



தெருக்களில் திருமண ஊர்வலம் நடைபெறுவதால் போக்குவரத்து தடைபட்டும், தெருக்களிலும் வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்துப்போவதும் அடிக்கடி நிகழ்வதுண்டு.
ஒரே தெருவில் பல்வேறு திருமணங்கள் நடைபெறுவதால் திருமணத்திற்கு வெளியூரில் இருந்து வருபவர்கள்திருமண வீட்டைக் கண்டு பிடிக்காமல் திண்டாடும் அவலமும் நடைபெறும்

திருமணத்தைத் தொடர்ந்து விருந்துகளும்,பிக்னிக்குகளும் அமர்க்களப்படும்.பிருமாண்டமான திருமணங்களும்,ஆர்ப்பாட்டங்களும்,ஆடம்பரங்களிலும் திளைக்கும் மக்கள் திணறித்தான் போவார்கள்.கீழைநகரின் ஆடம்பரத்திருமணங்களை கீழை வாசி ஒருவரே விளாசித்தள்ளி இருப்பதைப் பாருங்களேன்.

கீழை நகரின் ஸ்பெஷல் உணவு வகைகளான தொதல்,ஓட்டுமா,பணியம்,கலகலா,நவதானியம் போன்ற திண்பண்டங்கள் செய்து விற்பனை செய்பவர்களுக்கு இம்மாதம் செமத்தியான வியாபரம் கிடைக்கும்.


பள்ளி வாசல் மினாராக்களில் விளக்கு வெளிச்சம் தகதகக்கும்.டிஸம்பர் சீஸனுக்காவே புத்தாடை எடுப்பவர்களும் உண்டு.
பந்தியில் இலையை எடுப்பதற்கும்,ஏனைய சிறுசிறு வேலைகளுக்கும் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட அரவாணிகளை சேவை செய்ய அழைத்து கூலியைக்கொடுக்கும் மனித நேயத்தையும் பல திருமணக்களில் காணமுடியும்..கரன்ஸிகளை கணக்கில்லாமல் கொட்டி பிரமிப்பை ஏற்படுத்தும் திருமணங்களில் கூடவே ஏழை பெண்களுக்கும் சேர்த்து தங்கள் இல்லத்திருமணத்துடன் தங்கள் செலவிலேயே திருமணம் செய்து வைக்கும் நல்ல பண்பினையும் பாராட்டத்தான் வேண்டும்.
என்னதான் வெளிநாடுகளில் வெளியூர்களிலும் வசித்தாலும் தங்களது வீட்டுத் திருமணங்களை சொந்த ஊரான கீழக்கரையில் அதுவும் டிசம்பர் மாதத்தில் நடத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள் கீழைவாசிகள்.பழங்கால நவாப்களின் திருமணங்கள் பண்டைய ராஜபுத்திர வம்சத்து திருமணங்களுக்கு நிகரான ஆடம்பரம், கமகம பிரியாணி,அலங்காரங்கள்,விருந்தோம்பல்,வந்து குவியும் வி.ஐ.பி.க்கள் பட்டாளம்,நட்சத்திரப்பட்டளம் என திருமணங்கள் ராஜகளை கட்டும்.
பெண், மாப்பிள்ளை சமாசாரத்தை எல்லாம் ‘சம்பந்திகள்’ வெளிநாட்டிலோ,வெளியூரிலோ வைத்து சந்தித்துப் பேசி முடித்துவிடுவார்கள். ஆனால், கல்யாணத்தை மட்டும் கட்டாயம் டிசம்பரில் கீழக்கரையில் வைத்துத்தான் நடத்துவார்கள். வெளிநாடுகளில் பெரும்பாலும் டிசம்பர் மாதம்தான் விடுமுறை காலமாகும். அதைப் பயன்படுத்தித்தான், சொந்தவூரை நாடி வந்து விஷேஷங்களை நடத்துகின்றனர்.பிறந்த மண்ணுக்கு நாங்க செய்கின்ற மரியாதைதான் இந்த ‘டிசம்பர் திருமணங்கள்’ என்று பெருமிதப்படுகின்றனர் கீழைவாசிகள்.
டிசம்பர் திருமணங்கள் கீழக்கரையில் ஏழை பணக்காரன் என்ற பாகுபாட்டை அதிகப்படுத்துகிறது,விலை வாசி உயருகின்றது,கோடிகளை கொட்டி இறைத்து அனாச்சாரம் தலை விரித்தாடுகின்றது,ஊரே ஸ்தம்பித்து விடுகின்றது,இது முடியாத எளியவர்கள் ஏங்கிப்போய் விடுகின்றார்கள் ,பெருமைக்காக ஆடம்பரம் செய்து விட்டு பின்னர் அவஸ்த்தைப்படுகின்றனர் என்று பல சர்ச்சைகள் இருந்து வந்தாலும் விஞ்ஞான மாற்றங்களால் உலகம் விரிவடைந்து, பல புதிய புதிய விஷயங்கள் நாளும் அவதரித்து வந்தாலும், கீழக்கரை மக்களின் கலாசார பேணலும், பிறந்த மண்ணுக்கு அவர்கள் காட்டும் மரியாதையும் ‘டிசம்பர் திருமணங்கள்’ ஆயிரம் சர்ச்சைகளை கடந்தும்,எண்ணற்ற விமர்சனங்களைக்கடந்தும் பிரியாணி போல் மணக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்!
Tweet |