December 5, 2011

சிங்காரச்சென்னையில் சிங்காரிகள்.





மொடமொடப்பாக கஞ்சி போட்டு அழகாக பின் பண்ணி நேர்த்தியாக கட்டப்பட்ட நெகமம் காட்டன் சேலை.அடிக்கடி பியுட்டி பார்லர் போவதை பறைசாற்றும் வில்லாக வளைந்து நெளிந்த தீட்டப்பட்ட புருவங்கள் .சற்று சுமாரான களை என்றாலும் அவ்வப்பொழுது பேசியலும் பிளீசிங்கும் செய்த காரணத்தினால் செயற்கை களையை உண்டாக்கிய முகத்தோற்றம்.கண்களில் காஜல்,நகங்களில் க்யூடெக்ஸ்,தோளில் ஹாண்ட்பேக் ,கையில் மொபைல் சகிதம் பார்த்தபொழுது எதோ ஐடி கம்பெனியில்தான் வேலை செய்கின்றாள் என்று நினைத்து விடாதீர்கள்.வீட்டு வேலைக்கு செல்பவள்தான் அப்படி ஒரு தோற்றம்.

சேரிப்பகுதியில் பத்துக்கு பத்து அளவிலான சிறிய கடைகளில் பியூட்டி பார்லர் போர்ட் தொங்கும் பொழுதும்,ஆங்காங்கே சிறிய அளவில் பெண்களுக்கான ஜிம்மைக்காணும் பொழுதும் எனக்கேற்பட்ட ஆச்சரியம் கலந்த வினாவுக்கு அந்த பெண்ணைக்கண்ட பொழுது விடை கிடைத்தது.

கணவர் கூலி வேலைக்கு சென்று தினமும் 400 - 500 சம்பாதித்தாலும் ஏகபோகமாக வாழ்வதற்கு கணவன் சம்பாதிக்கும் பணம் போதவில்லை என்ற காரணத்தினால் கணவனை வேலைக்கு அனுப்பி விட்டு வெட்டியாக வீட்டில் இருந்து சீரியல் பார்த்துக்கொண்டிருப்பதை விட இப்படி வேலைக்கு வந்து ஒரே மணி நேரத்தில் 1000 - 1500 ரூபாய் சம்பாதிப்பதில் இப்பொழுது அடித்தட்டு மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.வேலை பார்க்கும் வீடுகள் ஒன்றுக்கும் மேற்பட்டதாக இருப்பது அவரவர்கள் திறமையைப்பொறுத்தது.

இழுத்துக்கட்டிய கண்டாங்கிச்சேலை,தூக்கிய கட்டிய கொண்டை,மஞ்சள் தேய்த்த முகம்,அப்பாவியான முகபாவம்,”இன்னா..வக்கீலம்மா..எதுக்கு கஷ்டப்படுறே.போட்டு வை.நான் வந்து செய்றேன்.உடம்புக்கு படுத்தினால் தேமேன்னு வேலையைப்பார்க்காமல் கொஞ்சம் ரெஸ்ட் எட்துக்கோ.நான் நைட்க்கு வீட்டாண்டே வந்து மிச்ச மீதி வேலை அல்லாத்தையும் பார்த்துக்கறேன்”எஜமானிகள் உடம்புக்கு முடியாவிட்டால் பரிவாக தயவாக ஆறுதல் சொல்லும் முனியம்மாக்களும்,தாயம்மாக்களும் இருந்தாலும் இப்பொழுது இந்த ஹைடெக் சிங்காரிகள் பெருகி இல்லத்தரசிகளை மிரட்டிக்கொண்டிருக்கின்ரனர்.

பிரபல நகைக்கடையில் சேல்ஸ் கேர்ளாக மாதம் 8000 சம்பாதிக்கும் பெண் காலையில் 6 - 7 ஒரு வீட்டிலும் 7- 8 இன்னொரு வீட்டிலும் வீட்டு வேலைகள் பார்த்து மாதம் 2500 வரை சுலபமாக சம்பாதித்து விடுகின்றாள்.எட்டாயிரம் என்பது காலை பத்து மணியில் இருந்து இரவு 9 மணி வரை உழைத்தால்தான் கிடைக்கும்.ஆனால் இரண்டே மணி நேரத்தில் 2500 சம்பாதித்து விடுவது சுலபமாக உள்ளது.

இவ்வாறாக ஹைடெக் ஹவுஸ்மெயிட்கள் அதிகரிக்க அதிகரிக்க வேலையாட்களுக்கான டிமாண்டும் அதிகரித்து விடுகின்றது.இரண்டு படுக்கை அறை கொண்ட 800 சதுர அடி கொண்ட கணவன் மனைவி,இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் ஒரு அடுக்கு மாடி குடியிருப்புக்கு வீட்டை பெருக்கி துடைத்து,பாத்திரங்கள் தேய்த்து,துணிகள் அலச சுமார் 1000- 1200 ருபாய் வாங்குகின்றனர்.அறைகள் கூட ஒன்றும்,ஆட்கள் இன்னும் ஓரிருவர் அதிகமாக இருந்தாலோ இன்னும் ரேட் எகிறி விடும்.

புதியதாக வேலையாள் நியமிக்கும் பொழுது வீட்டம்மாக்களுக்கு பொறுமை அதிகமாகவே தேவை இருக்கின்றது.
“வீட்டை பார்க்கணும்”
சரி என்று அனுமதித்தால் உதட்டை உச்சுக்கொட்டி ”வீடு கொஞ்சம் பெரிசூஊஊ தான் ” என்பதோடு நின்று விடாது.
”வீட்டில் எத்தனை ஆட்கள் இருக்கின்றார்கள்? ,அடிக்கடி விருந்தினர்கள் வருவார்களா?அடிஷனல் வேலைகள் எல்லாம் சொல்லக்கூடாது.பக்கத்தில் உள்ள கடைக்கு கூட செல்ல மாட்டேன்,பாத்திரம் அதிகம் போடக்கூடாது,பெருக்கும் பொழுது ஆங்காங்கே இருக்கும் பொருட்களை நீங்கள் தான் எடுத்து வைக்க வேண்டும்,வாரத்திற்கு ஒரு நாள் வரமாட்டேன்.அவ்வப்பொழுது உடம்புக்கு முடியாவிட்டால எடுக்கும் லீவுக்கு சம்பளத்தை பிடிக்க கூடாது..இப்படி அவர்கள் போடும் கண்டிஷனுக்கு வீட்டம்மாக்கள் சற்றே மிரண்டு போனாலும் வேலைக்கு ஆள் வைத்தே ஆகவேண்டும் என்பதில் தீர்மானமாக இருப்பதால் எப்படிபட்டவர்களுக்கும் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் உடனடியாக வழங்கப்பட்டு விடுகின்றது.

பழைய வீடுகள்,டைல்ஸ் தரைப்போடப்படாத வீடுகள் பக்கம் இவர்கள் எட்டியும் பார்ப்பதில்லை.அப்படி எட்டிப்பார்த்தாலும் அதற்கு ரேட்டே தனி.கூட்டுக்குடும்பம் என்றால் சொல்லவே வேண்டாம்.”அந்த சேட்டம்மா வீடா?கச கச என்று ஆட்கள் ரொம்ப இருப்பாங்க.நமக்கு சரிப்பட்டு வராது.”இப்படி கமெண்டுகள் வரும்.

அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வழங்கப்பட்டு வேலைக்கு வர ஆரம்பித்து விட்டார்களா?அப்பொழுது பிடிக்கின்றது வீட்டம்மாக்களுக்கு ஏழரை.முதல் இரண்டு நாள் சொன்ன நேரத்திற்கு வந்தவள் அடுத்த நாள் ஒரு மணி நேரம் லேட்.வர மாட்டாள் போலும் என்று பாதி பாத்திரம் தேய்த்துக்கொண்டிருக்கும் பொழுது உள்ளே நுழைவாள்.மறுநாள் நேற்று லேட்டாகத்தானே வந்தாள் என்று பாத்திரத்தை போட்டு வைத்திருந்தால் வேலைக்கு வரவே இல்லை.கொடுத்து இருக்கும் செல்போனுக்கு அழைத்தால் ஒன்று ஸ்விட்ச் ஆஃப் அல்லது பிசி என்று கீறல் விழுந்த ரெகார்டாய் வெறுப்பேற்றும்.

பதினோரு மணிக்கு வந்தாலும் சூடாக பில்டர் காபி கலந்து கொடுத்தாக வேண்டும்.கலந்து வைத்த காபியை சூடு பண்ணி கொடுக்கக்கூடாது.இது எழுதப்படாத சட்டம்.இதில் சிலர் நான் அதிகமாக காபி டீ சாப்பிடுவதில்லை .பாலாக தந்து விடுங்கள் என்று கூறி வயிற்றில் கடுங்காப்பியை வார்ப்பார்கள்.

வார்த்த தோசையை வாயிலும் வைக்க மாட்டார்கள்.ரங்ஸ்களே பல தடவை அட்ஜஸ்ட் செய்து ஹாட்பாக்ஸ் திறந்து வார்த்துப்போட்ட தோசையை வாய் திறக்காமல் சாப்பிட்டாலும் இவர்களுக்கோ அவர்கள் கண் முன்னே தவாவைப்போட்டு சுடச்சுட வார்த்து கொடுக்க வேண்டும் என்பது இல்லத்தரசிகளின் தலைவிதி.

தீபாவளி வந்தால் ஒருமாத சம்பளம் போனஸ்.பொங்கலுக்கும் கண்டிப்பாக கொடுத்தாக வேண்டும்.மற்றும் சிறு சிறு பண்டிகைகளுக்கு அவ்வப்பொழுது நூறு இருநூறுமாக கொடுக்காவிட்டால் முகம் ஒரு முழத்துக்கு தூக்கிப்போகும்.வீட்டில் விருந்தினர்கள் வந்துவிட்டால் அவர்களது துணிகளை கண்டிப்பாக தோய்க்க மாட்டேன் என்று ஆரம்பத்திலேயே கண்டிஷன் போட்டு விட்டாலும் அவர்கள் போனதும் ஒரு தொகையை கேட்டு வாங்கிகொள்வதில் முனைப்பு காட்டுவார்கள்.ஏனென்றால் பாத்திரங்கள் சற்று அதிகமாகி விட்டனவாம்.

இத்தனையும் சகித்துக்கொண்டு வேலைக்கு ஆள் வைத்துத்தான் ஆகவேண்டும் என்பதில் முனைப்பாக சென்னை வாழ் இல்லத்தரசிகள் இருப்பதுதான் எனக்கு தவுசண்ட் மில்லியன் டாலர் கேள்வி.

December 2, 2011

தலைமகன்

அப்பாவின் போனஸ் காசோலையாய் வந்தது
அம்மாவின் நகைகளோ கரன்சியாக மாறியது
வீட்டுப்பத்திரமோ வங்கியில் சரணம்
அம்மாவுக்கு தந்த சீதனக் காணி
சடுதியில் கைகள் மாறி
காந்தி தாத்தாபடம் போட்ட
சலவைத்தாளாய் ஆனது

இத்தனையும் போதாதென்று
அக்காவின் திருமணத்திற்கு
சேர்த்துவைத்த பொன்னகை சல்லிசாக
சென்றன சேட்டுக்கடை நோக்கியே
பாட்டி காதில் மினுமினுத்த வைரகம்மலும்
செவிமடலை விட்டு கழன்று போனது

வந்திருந்த தீபாவளி புத்தாடை காணவில்லை
வருடந்தோறும் செய்து வந்த பட்சணங்கள்
சுவைக்கவில்லை
பட்டாசு ஒன்றைக்கூட கையாலே
தொட்டதில்லை
அத்தனையும் விட்டுக்கொடுத்து
குடும்பத்தினர் தலைமகனை
மேல்நாடு அனுப்பிவைத்தர்

மேல்படிப்பு முடித்தமகன்
அத்தனையும் மீட்டிடுவான்
அமோகமாக வாழ்ந்திடுவான்
சென்ற செல்வம் திரும்பி வரும்
செல்லமகள் கரைசேர்வாள்
சோர்ந்த உள்ளம் மலர்ச்சி கொள்ளும்
எண்ணில்லா கனவுகளுடன்
நாளதனை எண்ணிக்கொண்டு
நல் வழியை எதிர்பார்த்து
ஆவலுடன் காத்திருந்தர்

வந்தன்றோ மின்னஞ்சல் ஒன்று
அதுகண்டு குடும்பத்தினர்
கணினி முன்னே தான் அமர்ந்து
மின் திரையை நோக்கினரே
பல்கலைகழகத்தில் உடன்படிக்கும்
கேத்தரீனை மணந்து கொண்டேன்
வாழ்வதற்கு சொந்தமாக
சின்னவீடு வாங்க வேண்டும்
சொகுசாக அங்கு வாழ
பொருளெல்லாம் சேர்க்கவேண்டும்
சுற்றித்திரிந்துவர
சொகுசுக்கார் வாங்க வேண்டும்
தேவை எனக்குங்கள் ஆசிர்வாதம்
மெல்லினமாய் கேட்டிருந்தான்
மேல் நாட்டு தலைமகன்