February 28, 2010

என்றும் இளமை!!
எங்கள் தெருவில் வசிக்கும் ஒரு தம்பதிகள்.வயது கணவருக்கு 70 பிளஸ்.மனைவிக்கு 60 பிளஸ் இருக்கும்.மாலை ஐந்து மணியானால் இருவரும் ஜோடி போட்டுக்கொண்டு வாக்கிங் செல்வது கண்கொள்ளாகாட்சியாக இருக்கும்.அவர்களின் நடைக்கு நம்மால் ஈடு கொடுக்க முடியுமா என்பது சந்தேகமே.கட்டுப்பாடான உணவு பழக்கம்,நச் என்று டிரஸ் செய்து கொண்டிருக்கும் நேர்த்தி,நேரம் தவறாமை,தங்களை உற்சாகமாக வைத்து இருப்பது,இந்த வயதிலும் தங்கள் அழகில் கவனம் செலுத்துவது,வெள்ளிக்கிழமையானல் பட்டு,வெள்ளி செவ்வாயில் பூக்கூடையுடன் கோவிலுக்கு செல்வது,ரெஸ்டாரெண்ட்,பீச் ,உறவினர் வீடு,நேசமான புன்னகை முகம் எப்பொழுதும்..இத்யாதி..இத்யாதி..அந்த ஆதர்ஷ தம்பதிகளின் inspiration என்னை இந்த பதிவை எழுத தூண்டியது.

பெண்கள் நாற்பது வயதை நெருங்கி விட்டாலே தன்னைப்பற்றிய அலட்சியம்,விட்டேற்றித்தனம்,அசுவாரஷ்யம் போன்றவை கூடவே ஒட்டிக்கொள்கிறது.ஆனால் இந்த வயதில்தான் துணையுடனான நெருக்கம்,புரிதல்,பக்குவம்,சகித்தல்,ஆதரவு,அரவணைப்பு,ஈடுபாடு மேலும் அதிகமாகி,அன்பு மேலும்மேலும் மிளிரக்கூடிய தருணம்.

இந்த அழகிய ,அற்புதமான‌ தருணத்தில் பெண்கள் தங்கள் அகப்புறத்தோற்றங்களை அழகுற,இளமையாக,பிறர் பாராட்டும்படியும்,வியக்கும்படியும் நேர்த்தியாக வைத்துக்கொள்ளுதல்,புத்துணர்ச்சியையும்,தன்னம்பிக்கையும்,உற்சாகத்தையும் தக்கவைத்து வாழ்ந்தால் நோய்நொடிகளற்ற, சந்தோஷமான,ஒரு அருமையான முதுமையை மகிழ்வாக அனுபவிக்கலாம்.

வயதாகிவிட்டதே என்று விசனபடாமல்,மனதிலும்,தோற்றத்திலும் இளமையை வெளிக்கொண்டுவர முயலுங்கள்.பிள்ளைகள் தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டார்களே என்றுலஜ்ஜைப்படாமல் நேர்த்தியாக ஆடை அணிந்து உற்சாமாக வலம் வருவதை வாடிக்கை ஆக்குங்கள்.இது நமக்கே நமக்கான வாழ்க்கை.இந்த அற்புதமான வாழக்கையை சந்தோஷத்துடன்,உற்சாகம் குன்றாமல் வாழ்நாள் முழுவதும் கழிக்கவேண்டும் என்ற எண்ணம் மனதில் உறுதியாக இருக்கவேண்டும்.

ஒரு கோணல் கொண்டை,நைந்து போன வாயில் புடவை அல்லது நைட்டி,எண்ணெய் வழியும் முகம்,சதா சமயலறை வாசம்,உடல் உபாதைகளை வாயால் பந்தல் போட்டு சொல்லிக்காட்டி தோரணம் கட்டிக்கொண்டு தன்னையும்,கேட்பவரையும் உற்சாகம் இழக்கச்செய்யாதீர்கள்.மாறாக நேர்த்தியான ஆடை,உற்சாகம் தெரிக்கும் பேச்சு,அவ்வப்பொழுது நகைச்சுவை உணர்வு.தன்னம்பிக்கையுடனான பளிச் என்ற தோற்றம்.நடையிலும்,உடையிலும் கம்பீரத்தைக்கொண்டுவாருங்கள்.உங்களுக்குள்ளே நிச்சயம் ஒரு உற்சாக மாற்றத்தை உணர்வீர்கள்.

வயதாகிக்கொண்டுள்ளதே என்ற எண்ணம் துளியும் வராமல் உற்சாகத்துடன் வலம் வாருங்கள்.உங்களுக்கிருக்கும் இரத்த அழுத்தம்,சுகர்,கொலஸ்ட்ரால் போன்றவற்றை சதா நினைத்துக்கொண்டிராமல் வேண்டிய அளவு உணவு கட்டுப்பாடு,மருத்துவ ஆலோசனை,தவறாது மருந்து உட்கொள்ளுதல் ஒருபக்கம் இருந்தாலும்,மற்றவரிடம் தனது உடல் உபாதைகளைப்பற்றி சர்வ நேரமும் பிரஸ்தாபித்துக்கொண்டிராமல் சந்தோஷமாக மனதை வைத்திருக்கபழகிக்கொள்ளுங்கள்.

சிறியவர்களுடன் ஒத்துப்போகபழக்கிக்கொள்ளுங்கள்.அவர்களை அனுசரித்து நடக்கவேண்டியது அவசியம்.சிறியவர்களாயினும் விட்டு கொடுத்தல்,மரியாதை கொடுத்தல்,முக்கியத்துவம் கொடுத்தல் பிரச்சினைகளுக்கு வழி வராமல் தடுக்கு அரண்களாகும்.

"சர்மியின் மாமியாரைப்பாரு..இந்த வயதிலும் எப்படி நீட்டாக டிரஸ் செய்து கொள்கிறாள்"

"விக்னேஷ் உன் பாட்டி சூப்பர் பாட்டி.உன் பின்னாலேயே ஓடி ஒடி வந்து உனக்கு எப்படி சாப்பாடு ஊட்டுகிறாள்"

"அட உன் பாட்டி உன் ரெகார்ட் நோட்டில் டிராயிங் போட்டுத்தருகின்றார்களே!!"

"இது உன் அம்மா மாதிரியே தெரியலியே?அக்கான்னே நினைத்தேன்"

இப்படி மற்றவர்கள் பார்த்து உற்சாகப்படும்படி,மற்றவர்களுக்கு ரோல்மாடலாக இருங்கள்.

"இந்த வயதிலும் இதுக்கு இந்த மிணுக்கு தேவையா"என்று பொறாமையில் புகைபவர்களை புறம் தள்ளிவிடுங்கள்.வெகு சீக்கிரமே அவர்கள் உங்களிடம் ஆலோசனைக்கு வருவார்கள்.

இளமையை இனிமையாக அனுபவித்ததைப்போல் முதுமையையும் உற்சாகமாக இன்புற அனுபவிக்கலாம்.
February 14, 2010

இதற்கெல்லாம் ஒரு கொண்டாட்டம்!!

நேற்று மத்தியானப்பொழுது.வீதியில் தங்கத்தை கரைத்து அப்படியே ஊற்றி விட்டாற்போல் பொன்னிற கதிரவனின் செங்கதிர்கள்.மதிய உணவுக்கும் பின் ஓய்வெடுக்கும் அமைதி வீதியின் நிசபத்ததிலேயே தெரிகிறது.வழக்கம் போல் அமைதியாக இருந்து குர் ஆன் ஓதிக்கொண்டிருந்த பொழுது அந்த அழகான அமைதியை கலைக்கும் விதமாக பயங்கரக்கூக்குரல்.

சிறுவர்களின் அட்டகாசம்,சிரிப்பு,ஓ..என்ற சப்தம்.எரிச்சல் அடைந்து அவர்களை விரட்டிவிடும் நிமித்தமாக வெளியே வந்தால் பிளாட் பாரத்தில் அழகானதொரு பிளாக் பாரஸ்ட் கேக்.சுற்றிலும் சிறுவர்கள்.உற்சாகக்கூக்குரலால் கும்மாளம் போட்டுக்கொண்டு இருந்தார்கள்.

சிறுவர்களின் உற்சாகத்துள்ளலை நேரில் பார்த்ததும் என் கோபம் சற்று தணிந்து என்ன செய்கிறார்கள் என்று ஆர்வத்துடன் கவனிக்க ஆரம்பித்தேன்.

பள்ளியில் 11ஆம் வகுப்பு பாடம் முடிந்து 12 ஆம் வகுப்புப்பாடம் ஆரம்பித்து விட்டதாம்.ஆதலால் கேக் வெட்டி கொண்டாடுகிறார்கள் தெருவில் வைத்து.

என்னையும் சுவாரஸ்யம் தொற்றிக்கொண்டது.இதற்கெல்லாமா கேக் கட் செய்து கொண்டாடுவார்கள்?ஆர்வத்துடன் வீட்டினுள் திரும்பி வந்து கேமராவுடன் வந்தேன்.

"பசங்களா..போட்டோ எடுக்கட்டுமா"

"ஒகே ஆண்ட்டி"

"அது மட்டுமல்ல..என் பிளாக்கிலும் போடப்போகிறேன்"

"தாராளமா ஆண்ட்டி"

"ஆனால் ஆண்ட்டி ,உங்கள் பிளாக் அட்ரஸ் கொடுத்துடுங்க"

"கண்டிப்பா"

அப்புறம் என்ன கொண்டாட்டத்தை அப்படியே கிளிக்கிக்கொண்டேன்.என்னையும் அவர்களின் உற்சாகம் தொற்றிக்கொள்ள அந்த உற்சாகம் மாறமலே வீட்டுக்குள் வந்து மீண்டும் குர் ஆன் ஓத ஆரம்பித்து விட்டேன்.

கேக் தயாரக உள்ளது.

கேக் வெட்ட ஆயத்தம்.
அனைவரும் அருகில் வருமாறு அழைப்பு
வெட்டிய கேக்கை முகத்தில் பூசி ஆர்ப்பாட்டம்.
கொண்டாடிய திருப்தியில்
ஆனந்தத்துடன் ஒரு போஸ்

February 9, 2010

யாதும் ஊரே

கார் போர்டிகோவில் நுழைந்ததுமே வாயெல்லாம் பல்லாக சந்தோஷசிரிப்புடன் ஓடி வந்து கார்க்கதவை திறந்து விட்டாள் அந்த கருப்பினப்பெண்.ஒரு ஓரமாக வைத்திருந்த ஆரத்தி தட்டினை எடுத்து வந்து வித்தியாசமாக சுற்றிப்போட்டதைப்பார்க்கும் பொழுது மஹிமாவுக்கு அலுப்பை மீறி லேசாக சிரிப்பு வந்தது.

காரில் இருந்து இறங்கிய சதீஷ் "மஹி இவள் தான் அபாபா.நம்ம வீட்டு ஹவுஸ்மெயிட்.உன்னை நல்லா கவனிச்சுப்பா.புதுசா வர்ரவங்களை எப்படி அழைக்கணும் என்று கேட்டுகேட்டு இந்த ஆரத்தியை ரெடி பண்ணிட்டாள் பார்த்தியா"அபாபாவை அறிமுகப்படுத்தினான்.

"போம் டியா சென்ஹோரா.பென் விண்டோ சென்ஹோரா'வணக்கம் கூறி வரவேற்பு செய்து கைகளைபற்றியவாறு பாசத்துடன் ழைத்துச்செல்பவள் பாஷை புரியாமல் இருந்தாலும் ஆறுதலாகத்தான் இருந்தது.

சதீஷ் அபாபாவுடன் போர்ச்சுகீசில் பேசிக்கொண்டே வீட்டினுள் நுழைந்தனர்.வீடு எதிர் பார்த்ததற்கும் மேலாக அழகாகவும்,பெரியதாகவும் இருந்ததில் மஹிக்கு லேசான திருப்தி.முழுதாக ஒரு நாள் பிரயாணம்.சென்னையில் இருந்து மபுடோ வருவதற்கு.நாண்கு பிளைட் மாறி வந்ததில் உடம்பெல்லாம் அலுப்பாக இருந்தது.


அலுப்பு தீர குளித்துவிட்டு வரும் பொழுதே"சென்ஹோரா பெபர் கஃபே"காப்பி கோப்பைகளை நீட்டிய பாங்கு பிடித்து இருந்தாலும் மஹியின் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது.

புது கணவருக்கு படிப்பும் ,அறிவும்,திறமையும் இருந்தும் எல்லோரையும் போல் உள்ளூரிலே வேலை இருந்தால் எப்படி இருக்கும்?இப்படி கண்டம் விட்டு கண்டம் வந்து இருக்கும்படியாகி விட்டதே.பெற்றோரை,ஊரை நினைக்கும் பொழுது கண்களில் நீர்கட்டிக்கொண்டது.அதே பிளாட்டில் வசிக்கும் இபிசிம் குடும்பத்தினரை அறிமுகபடுத்திவைத்தான் சதீஷ்.அவர்கள் வீட்டிற்கு சென்ற பொழுது சோளமாவில் உப்புமா போல் கிளறிய ஒருபதார்தத்துடன் கொஞ்சம் பிரஞ்ச்பிரைஸும் கொடுத்து உபசரித்தவள் மஹிமாவின் கண்களில் ஒரு அந்நிய தன்மையும்,மிரட்சியையும் உணர்ந்து கொண்டவள்

"நமு டென்ஹா மெடோ.நமு செ ப்ரியோக்யூபே எஸ்டாமஸ் அஃயி"
மிசஸ் இபிசிம் பேசுவது துளியும் புரியாமல் வெறுத்துப்போனாள்.அதே வெறுப்புடன் வீட்டிற்கு வந்து கட்டிலில் குப்புற படுத்து விம்மியவளை எப்படி ஆறுதல் படுத்துவது என்று தெரியாமல் திகைத்தான் சதீஷ்.


ஆயிற்று ஊரை பிரிந்து,பெற்றோரை பிரிந்து,இனத்தைப்பிரிந்து தாலிகட்டியவன ஒருவனை மட்டுமே நம்பி இங்கு வந்த மஹியை இன்னும் சமாதானப்படுத்த முடியவில்லை.சனி ஞாயிறுகளில் வெளியில் அழைத்து செல்வான்.

சிலசமயம் கிராமத்துபகுதிகளுக்கு அழைத்து செல்லும் பொழுது தோளில் தொட்டில் கட்டி குழந்தைகளை சுமந்தவண்ணம் நிற்கும் பெண்களைக்கண்டு ,அவர்கள் சேர்ந்து ஆடும் நடனம் கண்டு,மற்றவர்களை வினோதமாக பார்க்கும் பார்வையைக்கண்டு ஆச்சரிப்பட்டாள்.

தூரத்தே தெரியும் பாதையை காட்டி"மழை நாளில் இது ஆறாகிவிடும் ,ஆச்சரியம் என்ன வென்றால் சீக்கிரமே தண்ணீர் வடிந்து விடும்"கணவர் சொல்வதை வியப்புடன் கேட்டுக்கொள்வாள்.கணவன் ஆஃபீஸ் சென்றதும் வாட்டும் தனிமை அவளை பயமுறுத்தியது.தமிழ் காதில் விழாமல் எதையோ இழந்தவள் போலானாள்.பேசுவதற்கு தமிழ் முகம் காணாமல் ஏக்கம் தலை தூக்கியது.கணவரை அலுவலகம் அனுப்பி வைத்த மறு நிமிடத்தில் இருந்து மாலை அவரது வருகைக்காக தவம்புரிய ஆரம்பித்தாள்.

டிவியை திறந்தால் புரியாத பாஷை ஒலித்து வெறுப்பைத்தான் வளர்த்தது.அபாபா இருந்து என்ன செய்வது?லேசான புன்னகையைத்தான் பறிமாறிக்கொள்ள முடியும்.
அம்மாவிடம் இருந்து போன் வந்த பொழுது பிழிய பிழிய அழுதாள்.ஊர் நினைப்பு வரவர இன்னிக்கு எப்படியாவது ஒரு முடிவு கட்டியாக வேண்டும் என்று மனதினுள் தீர்மானம் செய்து கொண்டாள்.மாலை திரும்பும் சதீஷிடம் எப்படியெல்லாம் பேசி வழிக்கு கொண்டு வரவேண்டும் யோசிக்கலானாள்.


வாசலில் கார் சப்தம்.வழக்கம் போல் எழுந்து செல்லாமல் சோபாவில் அமர்ந்திருந்தாள்.

உள்ளே நுழைந்த சதீஷ் மனைவியின் ருத்ர தோற்றம் கண்டு அமைதியான குரலில்

"எனி ப்ராப்ளம் மஹி?"

"இங்கே இருப்பதுதான் ப்ராப்ளம்.வேண்டாங்க.நாம ஊருக்கே போய்விடலாங்க.எனக்கு பிடிக்கவே இல்லேங்க.எனக்கு பைத்தியம் பிடிச்சுடும் போல் இருக்கு."
கண்களில் கண்ணீர் மடை திறந்த வெள்ளமென கொட்டியது.
அழும் மனைவியை காண சகிக்காமல்கைகளை ஆதரவாக பிடித்து
"கூல்..கூல் மஹி"வழக்கம் போல் முகத்திலும் ,பேச்சிலும் கனிவையும்,பொறுமையையும் குழைத்து மென் குரலில் ஆறுதல் படுத்தினான்."ஊரில் இருந்தால் எப்படி எல்லாம் சுதந்திரமாக இருப்பேன்.இங்கே மனுஷாள் யாரும் இல்லே.தனியே வெளியே செல்ல முடியலே.வேண்டாங்க.ஊருக்கே போய்டுவோம்.அங்கே நல்ல வேலை கிடைக்காமலா போய்விடும்" புலம்பி அழுது முடிக்கும் வரை பொறுமையாக கேட்டவன் கலைந்த கேசத்தை சீர்படுத்தி,கண்களை துடைத்து அபாபா பிளாஸ்கில் போட்டு வைத்து விட்டு சென்ற காபியையும்,உருளை வறுவலையும் எடுத்து மனைவியிடம் நீட்டினான்.

"உன் கஷ்டம் புரியுது மஹி.நான் சொல்வதை பொறுமையா கேட்கிறாயா"
"ம்"

நான் ரெண்டு வருஷத்துக்கு முன்பு வந்த பொழுது எனக்கும் தனிமை இப்படித்தான் இருந்தது மஹி.இப்ப உனக்காவது நான் இருக்கேன் .ஆஃபீஸ் போனால் என்ன?ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை போனில் கூப்பிடுறேனா இல்லையா?ஆஃபீஸும் பக்கத்திலேயே..நினைச்சால் ஓடி வந்துடலாம்.மாறுதலை மனுஷ மனம் உடனே ஒத்துக்காதுதான்,போகப்போக பாரேன்,இந்த மொஸாம்பிக் நாட்டை விட்டு போக பிரியப்படவே மாட்டே"

"இல்லேங்க..எப்படியாவது நம்ம ஊரிலேயே ஏதாவது வேலை தேடிக்கலாம்.." ஆரம்பித்தவளை ஆசுவசப்படுத்தி
"உனக்கு பாஷை தெரியாது.அப்படித்தானே?மனசு வச்சா ஒரே மாதத்தில் கத்துக்கலாம்.என் கொலீக் வைஃப் போர்ச்சுகீசும்,இங்க்லீஷும் தெரியும்.அவரை உனக்கு அறிமுகபடுத்தறேன்.நெட் கனக்ஷன் இருக்கு அதிலே உட்கார்ந்து பழகினால் பொழுதும் போய்டும்.புக்ஸ் வாங்கித்தர்ரேன்.போர்ச்சுகீஸ் மொழியை கத்துக்கற புக்ஸ் நிறைய இருக்கு.நீ தான் கிராஃப்ட் ஐட்டம் நல்லா பண்ணுவேன்னு சொன்னியே?ஒரு லிஸ்ட் கொடு.இந்தியா போற பிரண்டு கிட்டே வாங்கி வரச்சொல்லுறேன்.அறிவும் விருத்தியாகும்.எல்லாவற்றுக்கு ரெண்டு பக்கம் இருக்கு.நீ ஏன் நெகடிவ் ஆக நினைக்கிறாய்?பாசிடிவ் ஆக நினை."
"......"
"இதை நினைத்தே மனசை போட்டு அலட்டிக்கொள்ளாதே,இது உனக்கே உனக்கு என்று இறைவன் கொடுத்த அற்புத நேரம் என்று நினைத்துக்கோ.இங்கேயும் நிறைய தமிழ் குடும்பம் இருக்கு.அதையெல்லாம் கண்டு பிடித்து சேர்ந்துக்கலாம்.இதெல்லாம் ஒரே நாளில் நடக்காது.பொறுமையா இரு..சரியா?"
"....."
நாம் புதுபுது மனுஷங்களோட பழகினால் புதுபுது அனுபவங்கள் கிடைக்கும்.புது உலகம் அறியலாம்.போகப்போக பாரேன் .உனக்கே அந்த வித்தியாசம் பிடித்துப்போய்விடும்"

"...."

"உனக்கு இந்த அருந்ததி ராய் தெரியுமா?தனிமை கிடைத்ததால்தான் நாவல் எழுதி புக்கர் பரிசையே வாங்கினார்..இப்படி தனிமை காரணத்தாலேயே உலகத்திலே எத்தனையோ பேர் உயர்ந்து இருக்காங்க"

"...."

"உனக்கு எப்பவும் நான் இருக்கேன்மா.கொஞ்சம் பொறுமையா இரு.எனக்காக..ப்ளீஸ்..இன்னும் மூன்றே மாதம்.அப்பவும் உனக்கு இந்த உணர்வுகள் இருக்கும் என்றால் கண்டிப்பா நாம் ஊருக்கு போய்டலாம்.அங்கே போய் நீ சொல்லுவது போல் வேறு வேலை தேடிக்கலாம்..ம்..சரியா..அது வரை கொஞ்சம் பொறுமையா இரேன்.ப்ளீஸ்..ப்ளீஸ்.."

கனவரின் கொஞ்சல் வார்த்தைக்கு கட்டுபட்டாள்.அன்றிரவு முழுக்க கணவன் சொன்னதே காதில் ரீங்காரமிட்டது. புயல் மாதிரி காற்று அடித்த இந்திய நகர வாழ்க்கை இப்பொழுது தென்றல் போல் மெதுவாக வீசும் காற்றினைப்போல் உணர்ந்தாள்.

மறு நாள் மஹிமாவின் முகம் பிரகாசமாக இருந்தது.குரலில் வழக்கத்துக்கு மாறாக உற்சாகம்..ஆஃபீஸ் போகும் ஆடையுடன் டைனிங் டேபிள் முன் அமர்ந்தவன் அடுக்கி வைத்த டிபன் வகைகளைப்பார்த்து அசந்து விட்டான்.

"வாவ்..வாட் சர்ப்ரைஸ்..பொங்கல்,வடை,கேசரி,குலோப்ஜாமூன்..சாதரணமாக பிரட் தானே இருக்கும்"
"இன்னிக்கு என்ன நாள்"

"என்ன நாள்"திருப்பிக்கேட்டான். "மறந்துட்டீங்களா?இன்னியோட நமக்கு கல்யாணம் ஆகி ரெண்டு மாசம் முடிந்து விட்டது"
"வாவ்.."
"என்னங்க..நேற்று என்னை டோட்டலா மாற்றிட்டீங்க.நான் இப்ப ரொம்ப தெளிவா இருக்கேன்"

"வெரி நைஸ்"
சதீஷையும் உற்சாகம் தொற்றிக்கொண்டது.

"மதியம் அபாபாவுக்கு ரெஸ்ட் கொடுத்துடலாங்க.நானும் அபாபாவும் மார்க்கட் போய் கொஞ்சம் மீட் வாங்கிட்டு வர்ரோம்.லன்சுக்கு பிரியாணி செய்து இப்சிம் வீட்டிற்கும் கொடுக்கலாங்க"

"உய்ங்ங்ங்.."உற்சாக மிகுதியால் விசில் அடித்தான்.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்..."மெல்லிய குரலில் பாட ஆரம்பித்தாள் மஹி.

சந்தோஷத்தில் குலோப்ஜாமூனை ஸ்பூனில் எடுத்து சாப்பிட்டவாறே சிறிய ஆட்டத்துடன் எதிர் பாட்டு பாட ஆரம்பித்து விட்டான்,சதீஷ்.
"பொன்னான உலகம்.இந்நேரம் உதயம்

செவ்வானம் மீது சிங்காரக்கோலம்
"

இவர்கள் அடிக்கும் லூட்டியை புரியாமல் பார்த்துக்கொண்டிருந்த அபாபாவும் புரியாமலேயே சிரித்துகொண்டிருந்தாள்.

February 6, 2010

தொ(ல்)லை காட்சி மனிதர்கள்


சி() வீடுகளில் காண்கிறோம்.எப்பொழுது பார்த்தாலும் தொலைக்காட்சியின் ஒலி காது ஜவ்வைக்கிழிக்கும். ஒரு ஷாப்பிங்கோ,கோவிலுக்கோ,மசூதிக்கோ,சர்ச்சுக்கோ சென்றாலும் 'அட,எட்டு மணிக்கு திருமதி செல்வம்' போட்டு விடுவானே என்ற பதைபதைப்புடன் ஓடி வருவார்கள்.விருந்தினர் வருகையில் கூட கண்கள் தொலைக்காட்சியிலேயே லயித்திருக்கும்.வந்திருப்பவர் இவரைப்போலவே ஆளாக இருந்தால் ஒகே.அல்லாவிடில் ஏன் தான் வந்தோமோ என்றாகிவிடுவது இந்த தொலைகாட்சி மனிதர்கள் இதனை புரிந்திருக்க மாட்டார்கள்.எதோ நகமும்,சதையும் போல் இந்த காட்சி பெட்டியுடன் ஒட்டி உறவாடிக்கொண்டிப்பார்கள்.

படுக்கையில் இருந்து எழுந்ததும் பல் தேய்த்து விட்டு நேரே டிவி ஸ்விட்சில் தான் கை நீளும். மனைவி தரும் காபியை மனைவி முகம் பாராமல் வாங்கி தந்திருப்பது காபியா,ஹார்லிக்சா என்பது கூட உணர்ந்திருக்காமல் ஆறவிட்டு பருகி முடித்து குளிக்க செல்பவர்,அலுவலக உடுப்புடன் மீண்டும் சோஃபாவில் உட்கார்ந்து கொண்டு ரிமோட்டில் விளையாட ஆரம்பித்து விடுவார்கள்.இல்லத்தரசி காலை டென்ஷனுடன் பரபர வென்று டிபனை செய்து முடித்து,லஞ்சை பாக்ஸில் அடைத்து,பிள்ளைகளை தயார் செய்யும் வேளையில் இவர் ஹாயாக தமிழகத்திற்கு வணக்கம் போட்டுக்கொண்டிருப்பார்.

'அனு,இன்னிக்கு என்ன டிபன்?"

"பொங்கல்"எங்கோயோ தூரமாக மங்கையின் குரல்.

அப்படியே பொங்கலை ஒருதட்டில் வச்சித்தாயேன்.அப்படியே ஸ்பூனும்.."

மனதில் ஓடுவதை முகத்தில் வாசிக்காமல் அங்ஙனமே செய்வாள் பதிவிரதை.

காமெடிடைமில் வடிவேலு கதைப்பதை வாயெல்லாம் பல்லாக பார்த்துக்கொண்டிருந்தவாறே டிபன் வயிற்றினுள் சென்றுவிடும்.

தொலைகாட்சியே கண்ணாக ஷு லேஸ் வரை முடிந்து "அனு வர்ரேன்"ஐயா கிளம்பியும் டிவி ஓசை இறக்காது.

பிள்ளைகள் ஸ்கூல் சென்று,இல்லாளும் உணவருந்தி அதற்கு பின்னாவது ஓசை போகுமா என்று பார்த்தால்..

ம்ஹும்.."தொட்டால் பூ மலரும்,தொடாமல் நான் மலர்ந்தேன்"எம் ஜி ஆரும் சரோஜா தேவியும் ஆடும் பாடலின் மலர்ந்த பூவின் தேனை (கிண்ணத்தில் எடுத்து)அருந்த உட்கார்ந்து விடுவாள் நம்ம இல்லாள் .

ம்ம்..அதற்கப்புறம் என்னத்தை சொல்வது?ராணிமகாராணியின் ஆட்சிதான் ஹாலில்.அலுக்கும் வரை பார்த்து விட்டு பெட்டியை அணைத்தாலும் திரும்ப மதியம் தூக்கம் போட்டால் உடல் பெருத்துவிடும் என்ற காரணத்தால் மீண்டும் இந்தியத்தொலைக்காட்சியிலே முதல்முறையாக வந்த படத்தை வாய் மூடாமல் பார்க்கும் பொழுது உள்ளே எத்தனை கொசு,,பூச்சி நுழைந்ததோ..இறைவனுக்கே வெளிச்சம்.

மணி ஐந்தானால் வரிசைக்கட்டிக்கொண்டு கொண்டவனும்,பெற்றதுகளும் வர அரசனுக்கே முதல் உரிமை. அலுவலக ஆடையுடன் அமர்ந்து விடுவார்.காபி வித் அனுவாக மனைவி முன்னால் காபி டம்ளருடன் நிற்பதை ஒரு நிமிஷகாலம் சென்றுதான் கணித்து கை நீட்டி வாங்குவார்.

"அப்பா..சுட்டி டிவிபார்க்கணும்"

"சிக்ஸ் தேர்ட்டிக்கு எல்லாம் போய்டணும்.மிட்டெர்ம் வருதே சரியா செல்லமே"போனால் போகிறது என்று பெரிய மனதுடன்(வேறொன்றுமில்லை பெற்றமணம் பித்து) ரிமோட்டை மக்கள் கைகளில் வழங்கி விட்டு ஆஃபீஸ் உடையை மாற்ற அப்பொழுதுதான் சோஃபாவைவிட்டே எழுவார்.

இப்படியாக டிவியின் வாய் மூடும் பொழுது கடிகாரத்தின் சின்ன முள்ளும்,பெரிய முள்ளும் ஒன்றிணைந்து நடுவாக நிற்கும்.

அந்த வீட்டு சோஃபாக்களை பார்க்கவேண்டுமே..?உட்கார்ந்து உட்கார்ந்து ஐயோ பாவமாக அழுதுவடிக்கும்.விருந்தினர்கள் வருவதாக் தெரிந்தால் அவசரஅவசரமாக சோஃபா மீது பெட்ஷீட்டை விரித்து மேக் அப் பண்ணும் கூத்தும் நடக்கும்.அந்தளவுக்கு சோஃபாவை தேய்த்து இருப்பார்கள்.

பிள்ளைகள் படிக்கும் நேரம் அறைக்குள் தள்ளி கதவை மூடி விட்டு ஐயாவும்,அம்மாவும் ஜோடி நம்பர் ஒன் ஆக தம்பதி சகிதம் அமர்ந்து கொண்டு சீரியல் பார்க்கும் கொடுமையை என்னவென்று சொல்லுவது?

ஒரு ஓட்டை பிரிஜ்ஜை வைத்து பத்து வருஷமாக ஓட்டிக்கொண்டு புதிதாக வாங்க நூறு முறை யோசிக்கும் இந்த தொலைக்காட்சி மனிதர்கள் டிவி ரிப்பேர் ஆனவுடனேயே ஒரு தடவை கூட யோசிக்காமல் ஆயிரங்களை அள்ளியோ,கிள்ளியோ கொடுத்து பிளாஆஆஆஆஆஆஆட் (அதாங்க பெரீய ஸ்க்ரீன்)வாங்கி பரவசப்படும் கொண்டாட்டம் பார்த்தால் என்னவென்று சொல்லுவது?

போன் பில்லை பற்றி யோசிக்காமல் ஊரில் இருக்கும் அக்காவிடம் "தங்கத்தை" பற்றி பேசி உச் கொட்டுவது.அட..தங்கநகையை சொல்ல வரவில்லை."தங்கம்"சீரியலை சொல்லுகின்றேன்.

தொல்லை காட்சியை பார்த்து பார்த்து அசத்தப்போவது யாரு?அவங்க இல்லேங்க.இப்படிப்பார்க்கிறார்களே என்று பார்ப்பவர்களை அசத்திப்போட்டு விடுவார்கள்.

பசங்களை இப்படி ரூமுக்குள்ளார தள்ளிவிட்டு படிக்கிறாங்களா?இல்லையா?உள்ளே நடந்தது என்ன?பரிட்சையில் நல்ல மார்க் வாங்கனுமே?இப்படி அணு அளவும் பயமில்லை.

அது இதுஎது என்று எந்தக்கவலையும் இல்லாமல் பூதக்கண்ணாடி போடாத குறையாக கண்களில் விளக்கெண்ணை விட்டுக்கொண்டு பார்க்கும் பரவசத்தை என்னவென்று இயம்ப?

சீரியல் பார்க்கும் சுவாரஸ்யத்தில் பிள்ளைகளுக்கு ஹார்லிக்ஸ் கலந்து கொடுக்காப்படாமல் பால் ஆடைபடிந்து கிடக்கும்,ஹார்லிக்ஸை கலக்க்ப்போவது யாரு?


இருங்க..மேலே சொல்லிட்டே போனால் எழுந்து போய்டுவீங்க.எனக்குத்தெரிந்ததை அடுத்த பதிவுக்கு வாங்க பேசலாம்.

"என்னடா இவள் தொடரும் போட்டுட்டு ஓடுகிறாளே. டீவியில் ஓடும்
கருத்து யுத்தம் பார்க்கவா?"என்று கேட்கிறீர்களா?

"அட..ஆமாங்க..நிஜம்.கரெக்டா கண்டு பிடிச்சிட்டீங்களே!!"
டிஸ்கி:கடைசியே கடைசி வரி மட்டும் சும்மாஆஆஆஆஆ பொய்
எல்லாமே சிரிப்புதான்.

February 3, 2010

கல்யாண சீர் பலகாரம்


எங்கள் ஊரில் மணமகளுக்கு அவரவர் தகுதிக்கு ஏற்ப வீடுகளை சீர்வரிசையாக கொடுப்பார்கள்.ஒருவருக்கு மூன்று பெண்கள் இருந்தால் மூவருக்கும் தனித்தனியாக வீடு கட்டிகொடுக்கபட்டாக வேண்டும்.திருமணங்களில் மாப்பிள்ளை வீட்டினரால கேட்கபடும் முதல் கேள்வி "வீடு எத்தனை ஸ்கொயர் பீட்?எத்தனை அடுக்கு"

இன்னொரு புதுமையான விஷயம் என்னவென்றால் திருமணமாகி கணவர் வீடுகளுக்கு பெண்கள் செல்லும் முறை கிடையாது.

98 சதவீதம் உள்ளூரில்தான் சம்பந்தம் வைத்துக்கொள்வார்கள்.

பொதுவாக கல்யாணம் என்றால் வந்தவர்களுக்கு எல்லாம் விருந்து படைத்து அனுப்புவார்கள்.ஆனால் எங்கள் ஊரிலோ விருந்து கொடுப்பது மட்டுமல்லாமல் அனைவரது வீடுகளுக்கும் அவரவர் வசதிக்கு ஏற்ற படி பிளாஸ்டிக் வாளி,எவர் சில்வர் பாத்திரங்கள் அல்லது பிளாஸ்டிக் கவர் போன்றவை நூற்றுக்கணக்கில் வாங்கி ,சாப்பாட்டை நிரப்பி வீடு வீடாக விநியோகிப்பார்கள்.இவற்றை விநியோகிப்பதற்கென்றே ஆட்களும் வாகனங்களும் ஏற்பாடு செய்து விடுவார்கள்.இப்படி மற்ற ஊர்களில் இருந்து எங்கள் ஊர் பல விஷயங்களில் வித்தியாசப்படுகிறது.இவற்றைப்பற்றி எல்லாம் வெவ்வேறு இடுகைகளில் பதிக்கிறேன்.

இப்பொழுது திருமணத்திற்கு முன்னர் பெண் வீட்டினர் மாப்பிள்ளை வீட்டிற்கு 'பால் பழம் கொடுத்தல்'என்ற வகையில் 30,40,50 என்ற எண்ணிக்கையில் தட்டுகளில் சீர் அனுப்புவார்கள்.அதனை வாங்கி மாப்பிள்ளை விட்டினர் அனைத்து வீடுகளுக்கு விநியோகம் செய்வார்கள்.அந்த காட்சிகளை இப்பொழுது பாருங்கள்.

பேரீச்சம் பழம்
முட்டைகள்
குடத்தில் காய்ச்சிய பால்.புது வெள்ளைத்துணியால் மூடி குடத்தை அலங்கரித்து இருப்பார்கள்.
பழ வகைகள்
சீப்பு பணியாரம்

அதிரசம்.இதனை வெள்ளாரியாரம் எனவும் சொல்வார்கள்.

அச்சுப்பணியாரம் என்ற அச்சு முறுக்கு

தண்ணீர் பணியாரம்
இந்த மெகா சைஸ் கல்யாணப்பணியாரங்களை முன்பெல்லாம் வீட்டில் வைத்தே நாள் கணக்கில் ஆட்கள் வைத்து தயாரிப்பார்கள்.இப்பொழுது இவை செய்து விறபனை செய்வதற்கென்றே ஆட்கள் இருக்கின்றார்கள்.
பணியாரவகைகள் அவரவர் வசதிக்கு ஏற்ப 1000,2000,3000 என்ற எண்ணிக்கையில் கொடுப்பார்கள்.
திருமணம் இல்லாத நாட்களில் இவ்வகை பணியாரங்களை மினி சைசில் செய்தும் விற்பனைக்கு வரும்.